அறிமுகம்
உலகின் 70% இயற்கைப் பேரழிவுகள் அரசியல், பொருளாதார, சமூக காரணிகளுடன் வானிலை மற்றும் காலநிலையுடனும் ஓரளவு அல்லது முற்றிலும் தொடர்புடையவை என்று உலக வானிலை அமைப்பு குறிப்பிடுகின்றது. இலங்கையின் பொருளாதாரம் இயற்கை அனர்த்தங்கள், குறிப்பாக காலநிலை மாற்றம் காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறது. இலங்கையின் விவசாயம் வெப்பநிலை, மழைவீழ்ச்சி, மண்ணின் ஈரப்பதன் வேறுபாடுகள், வானிலை நிகழ்வுகளின் தீவிரம் மற்றும் அதிர்வெண் அதிகரிப்பு ஆகியவற்றின் மாறுபாடுகளால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. தாமதமான பருவமழை, வறட்சி, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றின் அதிகரிப்பு பொதுவாக நெல் விதைப்பு, அறுவடை மற்றும் பெறப்படும் விளைச்சலின் அளவை கணிசமான அளவில் பாதிக்கிறது. இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் முப்பது வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் அழிந்துள்ளன. யுத்த காலத்தில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. போரைத் தவிர, இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் பொருளாதாரத் துறையில் இயற்கை இடர்பாடுகளும் பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த அத்தியாயம் வட மாகாணத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பை விபரிக்கிறது. வறட்சியுடன் ஒப்பிடும் போது, கடந்த இருபது வருடங்களில் வட பிராந்தியத்தில் வெள்ள அபாயம் மிக அதிகமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. வட மாகாணத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 3 ஆண்டுகளில் மட்டுமே கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது; ஆனால் 06 வெள்ள அனர்த்த நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, வெள்ள அபாயத்துடன் ஒப்பிடும்போது வறட்சி அபாயத்தின் பொருளாதாரப் பாதிப்புக் குறைவாக உள்ளது. ஏனைய பயிர்களை ஒப்பிடும் போது நெற் பயிரின் சேதம் அதிகமாக உள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் தாக்கங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரை வெள்ள அனர்த்தங்களினால் 1350 இற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், 2871 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இவற்றில் 61% வீடுகள் அரை நிரந்தர வீடுகளாகவும், 14% வீடுகள் நிரந்தர வீடுகளாகவும், மற்றவை தற்காலிக வீடுகளாகவும் உள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த இருபது ஆண்டுகளில், மொத்தமாக 47,179 ஹெக்டேயர் நெற்பயிர், 9807 ஹெக்டேயர் உப உணவுப் பயிர், 5785 ஹெக்டேயர் பணப்பயிர் மற்றும் 4281 ஹெக்டேயர் மரக்கறிப் பயிர்கள், கடந்த இருபது வருடங்களில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் சேதமடைந்துள்ளன. மொத்தப் பயிர்ச் சேதங்களில் மாவட்டத்தின் நெற் பயிர்கள் அதிக சதவீத சேதத்தை அடைந்துள்ளன. கிடைக்கக்கூடிய தரவுகளின்படி வடகீழ் பருவக்காற்றின் போது நெற் பயிருக்கு அதிக சேதம் பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு வரையான வடகீழ் பருவக்காற்றின் போது, இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அபாயம் காரணமாக 31021 ஹெக்டேயருக்கும் அதிகமான நெற்செய்கை சேதமடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு வடகீழ் பருவக்காற்றின் போது 4345 ஹெக்டேயர் நெல் வெள்ளத்தினால் சேதமடைந்தது (படம் 14.1). அதன் பிறகு முதலாவது இடைப்பருவ காலத்தின் போதும் மற்றும் இரண்டாவது இடைப்பருவத்தின் போதும் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அனர்த்தங்கள் காரணமாக நெற் பயிருக்கு மிக அதிக அளவு சேதம் பதிவு செய்யப்பட்டது. தென்மேற்கு பருவ காலத்தின் போது நெற் பயிர்ச் சேதம் மிகவும் குறைவாக இருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக் காலப்பகுதியில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக மிகக் குறைந்த அளவிலான நெற்பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ காலத்தில், வடக்குப் பகுதியில் நெற் செய்கை குறைவாக இருப்பதே இதற்கான பிரதான காரணமாகும்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கை பற்றிய விபரம்
வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் உப உணவுப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளன. 2002 முதல் 2022 வரை 4807 ஹெக்டேருக்கு மேல் உப உணவுப் பயிர்ச்செய்கை மேற்கண்ட அனர்த்தங்களால் சேதமடைந்துள்ளது. இரண்டாவது இடைப்பருவத்தின் போது வறட்சி மற்றும் வெள்ள அபாயம் காரணமாக உப உணவுப் பயிர்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டது; 5113 ஹெக்டேயர் உப உணவுப் பயிர்களுக்கு அதிக சேதம் பதிவு செய்யப்பட்டது.
இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக மிளகாய், வெங்காயம் மற்றும் புகையிலை போன்ற பணப் பயிர்களின் இழப்பும் பதிவாகியுள்ளது. 2002 முதல் 2022 வரை கிளிநொச்சியில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக 4787 ஹெக்டேயர் பணப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. முதலாவது இடைப்பருவத்தின் இன் போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களால் அதிக பணப்பயிர் சேதம் ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டில் முதலாவது இடைப்பருவத்தின் போது பணப்பயிர்ச் சேதம் பெருமளவு பதிவு செய்யப்பட்டது. வெங்காயப் பயிர் அதன் குணாதிசயங்கள் காரணமாக, இந்த அனர்த்தங்களால் அதிகளவு சேதத்திற்கு உள்ளாகியது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரை 5281 ஹெக்டேயருக்கும் அதிகமான மரக்கறிப் பயிர்கள் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக சேதமடைந்துள்ளன. வெள்ள அனர்த்தங்கள் காரணமாக காய்கறிப் பயிர்களின் சேதம் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், வறட்சி காரணமாக குறைவான காய்கறிப் பயிர்களே சேதமடைந்துள்ளன. ஏனெனில் வறட்சியின் போது விவசாயிகள் தங்கள் கிணற்று நீரை காய்கறிப் பயிர்களுக்கு பாசனம் செய்யப் பயன்படுத்துகின்றனர். வெள்ள அனர்த்தங்கள் காரணமாக வடகீழ் பருவத்தின் போதும் மற்றும் இரண்டாவது இடைப்பருவத்தின் போதும் அதிக அளவிலான காய்கறிப் பயிர்கள் சேதமடைந்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அபாயம் காரணமாக பழங்கள் மற்றும் ஏனைய பயிர்களும் சேதமடைந்துள்ளன. ஆனால் அவற்றின் அளவு மிகவும் குறைவு. காற்றின் வேகத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வாழைச் செய்கை கடுமையாகச் சேதமடையும். ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான சேதங்களின் அளவு மிகவும் குறைவு.
இம் மாவட்டத்தில், வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அபாயத்தால் மீன்வளத்துக்கு ஏற்பட்ட சேதம் மிகவும் குறைவு. ஆனால், வெள்ளத்தின் போது உள்நாட்டு மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. கடற்றொழில் தொடர்பான நபர்களுடனான நேர்காணலின் படி, ஒவ்வொரு வருடமும் வெள்ள அபாயம் காரணமாக 2,000 இற்கும் அதிகமான உள்நாட்டு மீனவர்களின் நடவடிக்கைகள் சேதமடைந்துள்ளன.
வறட்சி மற்றும் வெள்ள அபாயம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வர்த்தக நடவடிக்கைகளில் வறட்சி அபாய பாதிப்புகள் பற்றிய பதிவுகள் இல்லை. ஆனால் வெள்ள அனர்த்தங்கள் வணிக நடவடிக்கைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினரின் அறிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக சிறிய அளவிலான வர்த்தக நடவடிக்கைகள் அனர்த்தங்களால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக கிட்டத்தட்ட 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான சேதங்கள் வர்த்தகத்துறைக்கு ஏற்பட்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் தாக்கங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இருபது வருட காலப்பகுதியில் காலநிலை சார் அனர்த்தங்களால் 976 வீடுகள் முழுமையாகவும், 1310 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேதங்கள் அனைத்தும் வெள்ளத்தால் ஏற்பட்டவை. முல்லைத்தீவு மாவட்டத்திலும் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அனர்த்தங்கள் கடுமையான பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. வறட்சி மற்றும் வெள்ளத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் இந்த அனர்த்தங்கள் காரணமாக நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 2002 முதல் 2022 வரை 88,960 ஹெக்டேயர் நெற்பயிர் சேதம் பதிவாகியுள்ளது. வடகீழ் பருவக்காற்றுக் காலத்தில் கிடைத்த குறுகிய கால செறிவான மழையினால் 59,054 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்பயிர் சேதம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, வறட்சி மற்றும் வெள்ள அபாயம் காரணமாக, இரண்டாவது இடைப்பருவ காலத்தில் 21,761 ஹெக்டேயர் நெற் சேதம் பதிவாகியுள்ளது (படம் 14.2). இந்த இருபது ஆண்டுகளில், 2011 ஆம் ஆண்டின் வடகீழ் பருவக்காற்று காலத்தின் போது மிக அதிக அளவிலான நெற்பயிர் சேதம் பதிவு செய்யப்பட்டது. இவ்வாண்டு 86% இற்கும் அதிகமான நெல் நிலங்கள் வெள்ள அனர்த்தங்களால் சேதமடைந்தன. கடந்த இருபது ஆண்டுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சி காரணமாக 17,250 ஹெக்டேயர் மட்டுமே சேதமடைந்துள்ளது. நேர்காணல்களின் படி, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 92% விவசாயிகள் வடகீழ் பருவக்காற்று காலம் மற்றும் இரண்டாவது இடைப்பருவ காலத்தின் போது எதிர்பாராத அதிதீவிர மழையால் நெற்பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றனர்.
வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உப உணவுப் பயிர் சேதங்களும் பதிவாகியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான இருபது வருட காலப்பகுதியில் 19,125 ஹெக்டேயருக்கும் அதிகமான உப உணவுப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வடகீழ் பருவக்காற்று காலத்தின் போது, மாவட்டத்தில் 7231 ஹெக்டேயர் அளவுக்கு உப உணவுப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளனதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய உப உணவுப் பயிர்களுடன் ஒப்பிடும் போது, ஒவ்வொரு ஆண்டும் நிலக்கடலை அதிக அளவில் சேதமடைகிறது.
முல்லைத்தீவில் பணப்பயிர்களின் சேதமும் பதிவாகியுள்ளது. அனைத்துப் பருவங்களிலும், இருபது ஆண்டுகளில், சுமார் 7619 ஹெக்டேயர் பணப்பயிர் சேதம் கண்டறியப்பட்டது. 2003 இல் முதலாவது இடைப்பருவத்தில் அடையாளம் காணப்பட்ட பணப்பயிரின் அதிகபட்ச சேதம் 2391 ஹெக்டேயர் ஆகும். முல்லைத்தீவின் 85% விவசாயிகள், உப உணவு மற்றும் பணப் பயிர்ச் செய்கையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே உணவு தவிர்ந்த ஏனைய தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். வெள்ள காலத்தில் பணப்பயிர்ப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிலக்கடலை, வெங்காயம் போன்ற சில பணப் பயிர்களைப் பாதித்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் மரக்கறிப் பயிர்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. 2002 முதல் 2022 வரையிலான இருபது வருட காலப்பகுதியில் 9389 ஹெக்டேயர்களுக்கு மேல் காய்கறிப் பயிர்ச் சேதம் பதிவாகியுள்ளது. நான்கு பருவங்களிலும், இரண்டாவது இடைப்பருவத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அனர்த்தங்கள் காரணமாக காய்கறிப் பயிர்களுக்கு அதிக சேதங்கள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடைப்பருவத்தில் 3841 ஹெக்டேயர் காய்கறிப் பயிர்ச் சேதம் பதிவு செய்யப்பட்டது. தக்காளி, பாகற்காய் போன்ற சில வகையான காய்கறிகள் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழில் நடவடிக்கைகள் அதிவேகமான காற்று மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சி மற்றும் சாதாரண வெள்ளப்பெருக்கு இந்தத் துறையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்நாட்டு மீன்பிடி நடவடிக்கைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வடகீழ்ப் பருவம் மற்றும் இரண்டாவது இடைப்பருவங்களின் போது அதிக வேகமான காற்றுடன் கூடிய கனமழை காரணமாகவும், வறட்சிக் காலத்திலும் உள்நாட்டு மீன்பிடி பாதிக்கப்படுகிறது.
வறட்சி மற்றும் வெள்ள அபாயம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான வெள்ளப்பெருக்கு வணிகத் துறைகளில் ஓரளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 76% சிறிய கடை உரிமையாளர்கள், தங்கள் கடைகளில் கன மழைக் காலங்களில் ஒரு அடி உயரம் வரை மழைநீர் தேங்கி நிற்பதால், தாங்கள் பாதிக்கப்படுவதாக உறுதிப்படுத்துகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2002 முதல் 2022 வரையான இருபது வருடங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2.3 மில்லியன் ரூபா பெறுமதியான பொதுச் சொத்துகள் சேதமடைந்துள்ளன என அறிக்கைகள் கூறுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரப் பகுதிகள் (கரைதுறைப்பற்று), மத்திய பகுதி (புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டுசுட்டான்), மேற்குப் பகுதி (மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய்) என மூன்று புவியியல் பிரிவுகள் உள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மத்திய பகுதி மற்றும் மேற்குப் பகுதிகளில் 81% மக்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் தாக்கங்கள்
யாழ். மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அனர்த்தங்கள் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பதிவேடுகளின் படி 2002 முதல் 2022 வரையான இருபது வருட காலப்பகுதியில் வெள்ளத்தினால் யாழ் மாவட்டத்தில் 357 வீடுகள் முழுமையாகவும், 690 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் நெற் பயிர்ச் சேதம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டம் மரக்கறி மற்றும் பணப்பயிர்ச் செய்கையில் அதிக கவனம் செலுத்துகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தின் புவியியல் நிலையும் நெற் செய்கைக்கு சாதகமாக இல்லை. எனவே இரண்டாவது மற்றும் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதிகளில் சில விவசாயிகள் நெற் செய்கையை சிறிய அளவில் செய்கிறார்கள். இரண்டாவது மற்றும் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதிகளில் ஏற்படும் வறட்சி நெற் சாகுபடியை சிறிய அளவில் பாதிக்கிறது. ஏனெனில் யாழ் மாவட்ட விவசாயிகள் 100% மழையை நம்பியே நெற் செய்கையை மேற்கொள்கின்றனர். ஆனால் ஏனைய மாவட்டங்களில நெற்செய்கை நீர்ப்பாசன நடவடிக்கைகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் தீவிரமான மழையற்ற காலங்களில் சிலர் தங்கள் கிணறுகளைப் பயன்படுத்தி நெற்பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்கிறார்கள். இதனால் வறட்சியால் நெற்பயிர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் வெள்ளப்பெருக்கு, இரண்டாவது மற்றும் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதிகளின் போது நெற்பயிர்ச் சேதத்தை ஏற்படுத்துகின்றது. இந்த வகையில், 2008 இல் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதியில் வெள்ள அனர்த்தங்களால் 314 ஹெக்டேயர் நெற் சேதமும், 2009 இல் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதியில் 2133 ஹெக்டேயர் நெற் சேதமும், 2008 இரண்டாவது இடைப் பருவ காலத்தில் 861 ஹெக்டேயர் நெற் சேதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது (படம் 14.3).
யாழ்ப்பாண மாவட்டத்தில், ஏனைய பயிர்களுடன் ஒப்பிடுகையில், உப உணவுப் பயிர்ச் செய்கையின் சேதம் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. ஏனெனில், உப உணவுப் பயிர்ச் செய்கையில் வருமானம் இல்லாததால், யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஆர்வம் காட்டுவதில்லை. நேர்காணலின் போது அவர்கள் அதை வெளிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாண விவசாயிகள் பணப்பயிர் மற்றும் காய்கறிப் பயிர்ச் சாகுபடியில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். யாழ்ப்பாண விவசாய முறை ஏனைய மாவட்டங்களில் இருந்து மிகவும் வித்தியாசமானது. யாழ்ப்பாண விவசாயிகள் எப்போதும் அதிக இலாபம் பெற, பணப்பயிர் விவசாய நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சிக் காலங்களில் இவ்வகைப் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தன. குறிப்பாக இரண்டாவது இடைப்பருவ மற்றும் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதிகளில் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பணப் பயிர்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இருபது வருடங்களில் 23,125 ஹெக்டேயருக்கும் அதிகமான பணப்பயிர் சேதமாகியுள்ளது.
யாழ். மாவட்டத்தில் கடும் மழை காரணமாக மரக்கறிப் பயிர்ச் சேதங்கள் பதிவாகியுள்ளன. 2002 முதல் 2022 வரை, வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக, 4,580.5 ஹெக்டேயர் காய்கறிப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தின் மரக்கறிப் பயிர்கள் பற்றிய அறிக்கைகளின் படி, 2008 மோசமான ஆண்டாகும்; ஏனெனில் இந்த ஆண்டில் கனமழை காரணமான வெள்ளத்தினால் இரண்டாவது இடைப்பருவம் மற்றும் வடகீழ் பருவக்காற்று காலங்களில் காய்கறிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டன. 2008 இல், 3031 ஹெக்டேயர் காய்கறிகள் வெள்ளத்தால் சேதமடைந்தன. குறிப்பாக 2008 ஆம் ஆண்டு ‘நிஷா’ புயல் காரணமாக இம் மாவட்டத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.
யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்றொழில் துறையும் வெள்ள அபாயம் காரணமாக சில வகையான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. வட பிராந்தியத்தின் ஏனைய மாவட்டங்களைப் போலவே, வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக உள்நாட்டு மீன்பிடியானது பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தின் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோர மீனவர்களில் 79% பேர், வெள்ளப்பெருக்கு அல்லது வறட்சியால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை; ஆனால் சூறாவளி அல்லது புயல் தங்கள் மீன்பிடி நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றனர். வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சிக் காலங்களில் யாழ். மாவட்டத்தின் கடல் நீரேரியில் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களே கடல் நீரேரி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள அபாயம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என அறிக்கையிடப்பட்டுள்ளது. கன மழைக் காலங்களில் மழைநீர் வணிக மையங்களுக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தியதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் 18.9 மில்லியன் ரூபா பெறுமதியான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
வவுனியா மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் தாக்கங்கள்
வவுனியா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 1611 வீடுகள் முழுமையாகவும், 2651 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இவற்றில் 59% வீடுகள் அரை நிரந்தர வீடுகளாகவும், 26% வீடுகள் நிரந்தர வீடுகளாகவும், மற்றவை தற்காலிக வீடுகளாகவும் இருந்தன. வவுனியா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி காரணமாக பல்வேறு பயிர்ச் சேதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இம் மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 743,836 ஹெக்டேயருக்கும் அதிகமான நெற் செய்கை நிலங்கள் சேதமடைந்துள்ளன. வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு நெற் செய்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகீழ் பருவக்காற்றின் போது, வெள்ள அபாயத்தால் 54,547 ஹெக்டேயருக்கு மேல் நெற் செய்கை சேதமடைந்துள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. கடந்த இருபது வருடங்களில் வவுனியா மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக 17,139 ஹெக்டேயர் நெற்செய்கை சேதமடைந்துள்ளது (படம் 14.4).
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது வவுனியா மாவட்டத்தில் பெருமளவிலான உப உணவுப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏனெனில் வவுனியா மாவட்ட விவசாயிகள் உப உணவுப் பயிர்ச்செய்கை செயற்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த இருபது ஆண்டு காலத்தில், வட மாகாணத்தில் 47,201 ஹெக்டேயர் உப உணவுப் பயிர்ச் செய்கை சேதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் பயறு, உளுந்து, நிலக்கடலை, பயிர்களுக்கு மிகவும் பிரபலமானது. வவுனியா மாவட்டத்தில் 1627 ஹெக்டேயரில் பணப் பயிர்களும், 3082 ஹெக்டேயரில் மரக்கறிப் பயிர்களும் சேதமாகியுள்ளன. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது வவுனியா மாவட்டத்தில் பணப்பயிர்ச் செய்கையின் அளவு குறைவாகவே காணப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் உள்நாட்டு மீன்பிடியில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வவுனியா மாவட்ட உள்நாட்டு மீனவர்கள் வறட்சி காரணமாக சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். வெள்ள காலங்களில் வவுனியா மாவட்டத்தில், குறிப்பாக வீதியோரக் கடை உரிமையாளர்களின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் நிலத்தில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கள் கடைகளை வைத்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2.3 பில்லியனுக்கும் அதிகமான பொதுச் சொத்துகள் சேதமடைந்துள்ளன.
மன்னார் மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் தாக்கங்கள்
மன்னார் மாவட்டத்தில் கடந்த இருபது வருடங்களில் வெள்ளத்தினால் 678 வீடுகள் முழுமையாகவும், 890 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, மன்னார் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அனர்த்தங்கள் காரணமாக விவசாயச் சேதங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் 34,712 ஹெக்டேயருக்கு மேல் நெற் பயிர்ச் செய்கை சேதம் காலநிலை மாற்றத்தால் பதிவாகியுள்ளது. மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த இருபது வருடங்களில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக 5673 ஹெக்டேயர் உப பயிர்ச் சேதமும், 4005 ஹெக்டேயர் பணப் பயிர்ச் சேதமும், 2819 ஹெக்டேயர் மரக்கறிப் பயிர்ச் சேதங்களும் பதிவாகியுள்ளன. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது மன்னார் மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் குறைவாகவே காணப்படுகின்றன. கட்டுக்கரைக் குளம், அகத்திமுறிப்புக் குளம், தம்பனைக் குளம், பண்டிவிரிச்சான் குளம் போன்ற சில குளங்களின் கீழ் மாத்திரமே நெற் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தின் மொத்தச் சனத்தொகையில் 32% மக்களே விவசாயத்துடன் நேரடித் தொடர்பு கொண்ட மக்களாக காணப்படுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தின் போது மீனவ மக்கள் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியின் போது உள்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வர்த்தக நடவடிக்கைகள், குறிப்பாக மன்னார் நகரப் பகுதி வர்த்தக நடவடிக்கைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த இருபது வருடங்களில் 9 மில்லியனுக்கும் அதிகமான பொதுச் சொத்துகளின் சேதங்கள் பதிவாகியுள்ளன.
வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் பொருளாதாரத் துறைக்கு, குறிப்பாக விவசாயத் துறைக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. 2002 முதல் 2022 வரையிலான இருபது ஆண்டுகளில், இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நெற்பயிர்களுக்கு கடுமையான சேதம் பதிவாகியுள்ளது (படம் 14.5).