சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் - பகுதி 1
Arts
10 நிமிட வாசிப்பு

சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 1

November 3, 2024 | Ezhuna

இனக் குழுமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்ட பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் (MULTI – CULTURAL SOCIETIES) சமாதான வழிகளில் தீர்க்க முடியாதனவான சிக்கலான அரசியல் பிரச்சினைகள் தீவிரமடைந்து உள்நாட்டுக் குழப்பங்களிற்கும், உள்நாட்டு யுத்தங்களிற்கும் வழிவகுத்துள்ளன. இதனை மூன்றாம் உலக நாடுகளின் சமகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ்வரசியல் பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான வழியில் தீர்த்தல், சம்மந்தப்பட்ட நாடுகளின் அமைதிக்கும், சமூக – பொருளாதார – அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அமைதி வழியான தீர்வை அரசியல் தீர்வாக (POLITICAL SOLUTION) அமைப்பதோடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING), சுயாட்சி (SELF RULE) ஆகியவற்றுக்கான ஆட்சிக் கட்டமைப்புக்களை, அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்குவதும் இன்றியமையாத முன் தேவையாக உள்ளது. அந்த வகையில், ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்’ என்னும் இப்புதிய தொடரில் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் அனுபவங்களை விளக்கியுரைக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம் வெளியிடப்படும். பல்வேறு தீர்வு மாதிரிகள், அத்தீர்வு மாதிரிகளின் பின்னால் உள்ள அரசியல் கோட்பாடுகள் (POLITICAL THEORIES), அரசியல் யாப்புத் தத்துவங்கள் (CONSTITUTIONAL PRINCIPLES) என்பனவும் விளக்கிக் கூறப்படும்.

ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ்

றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் எழுதிய ‘Comparing Federal Systems’ என்னும் நூல் 12 நாடுகளின் சமஷ்டி முறைகளை ஒப்பிட்டு ஆராயும் நூலாகும். இந்நூலை கனடாவின் ‘Queen’s University’ வெளியிட்டுள்ளது. இந்நூலின் 2 ஆவது அத்தியாயம் ஒப்பீட்டு ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சமஷ்டி முறைகளின் சிறப்புக் கூறுகளை ஒப்பீட்டு முறையில் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வத்தியாயத்தில் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் கூறியிருக்கும் கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு  அறிமுகம் செய்வதே இத்தமிழ் கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வுக்காகத் தாம் தெரிவு செய்துள்ள நாடுகளை வாட்ஸ் நான்காக வகைப்படுத்துகின்றார். அந்நான்கு வகைப்பாடுகள் பற்றி முதலில் தெரிந்து கொள்வது பயனுடையது:

  1. வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் நிலைபேறுடைய சமஷ்டிகள் – 06
  • ஐக்கிய அமெரிக்கா (1789)
  • சுவிற்சர்லாந்து (1848)
  • கனடா (1867)
  • அவுஸ்திரேலியா  (1901)
  • ஆஸ்திரியா (1920)
  • ஜேர்மனி (1949)

நீண்டகால வரலாற்றையுடையனவும் நிலைபேறான சமஷ்டி முறையை உடையனவுமான மேற்குறித்த வளர்ச்சியடைந்த நாடுகளில் சமஷ்டிமுறை தோன்றுவதற்கான அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலைகளில் அவற்றிற்கிடையே நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன. மேலும் வாட்ஸ் அவர்களின் நூல் கனடாவின் நோக்குநிலை நின்று சமஷ்டிகளை ஒப்பீடு செய்வதைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டதால், தாம் கனடாவை ஒத்த வளர்ச்சி பெற்ற நாடுகளை ஒப்பீட்டுக்காக தெரிந்துள்ளதையும் குறிப்பிடுகின்றார்.

  1. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பன்மொழிச் சமூகங்களைக் கொண்ட நாடுகள் – 02
  • இந்தியா (1950)
  • மலேசியா (1963)

இந்தியா, மலேசியா என்னும் இரண்டும் பல மொழிகளைப் பேசும் மக்கள் சமூகங்களைக் கொண்ட சமஷ்டிகளாகும் (Multi Lingual Federations). இவையிரண்டும் பொருளாதார வளர்ச்சி என்ற அளவுகோலின் படி சமஷ்டிமுறையை அறிமுகப்படுத்திய போது (இந்தியா – 1950, மலேசியா – 1963) வளர்ச்சி குன்றிய நாடுகளாக இருந்தன.

  1. அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்டனவும், மேற்கிளர்ந்து வருவனவுமான சமஷ்டிகள் – 02
  • பெல்ஜியம் – 1993
  • ஸ்பானியா – 1978

1993 இல் பெல்ஜியம் நாடு சமஷ்டி முறையைத் தழுவிக் கொண்டது. அதற்கு முந்திய இருபதாண்டுகளில் அந்நாடு படிப்படியாக அதிகாரப் பகிர்வை (Devolution) அறிமுகம் செய்து அவ்வாண்டில் தன்னை சமஷ்டி அரசு முறையுள்ள தேசம் என்பதை வெளிப்படையாக அறிவித்தது. ஸ்பானியா 1978 இல் அசமத்துவ அதிகாரப் பகிர்வு (Asymmetrical Devolution) முறையை அறிமுகம் செய்தது. அதன்பின் அந்நாடு பெயரளவில் ஒற்றையாட்சி முறையாகவும் நடைமுறையில் சமஷ்டியாகவும் உள்ளது என றொனால்ட்.எல். வாட்ஸ் குறிப்பிடுகிறார்.

4. சமஷ்டி முறையில் இருந்து விலகிப் பிரிந்து சென்ற தேசங்கள் – 02

  • செக்கோசிலாவாக்கியா – (1920 – 1992)
  • பாகிஸ்தான் (1947 – 1971)

1992 இல் செக்கோசிலாவாக்கியா பிரிவடைந்து செக்குடியரசு, சிலாவாக்கியா குடியரசு என இரு தேசங்கள் தோன்றின. 1971 இல் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்று பங்களாதேஸ் தனிநாடாகியது. இவை சமஷ்டிகளில் சில, நோயுற்றனவாகச் சிதைவடைந்தமைக்கு உதாரணங்களாகும். சமஷ்டிகளின் நோயியல் (Pathology Of Federalism) பற்றிய புரிதலுக்கு உதவக்கூடியனவாய் அமையும் இவ்விரு நாடுகளும் ஒப்பீட்டாய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முதலாவது பிரிவு வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளின் சமஷ்டிகளாகும். இவற்றுள் 6 நாடுகளின் சமஷ்டிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இச் சமஷ்டிகளுள் சுவிற்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளின் சமஷ்டிகளைப் பற்றி மட்டும் இங்கு விபரித்துக் கூறவுள்ளோம். இலங்கை போன்ற பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களின் அரசியல் பிரச்சினைகளின் தீர்வுகளிற்கு கனடா, சுவிற்சர்லாந்து ஆகிய சமஷ்டிகளின் அனுபவங்கள் பயனுடையவை. கனடா, சுவிற்சர்லாந்து ஆகிய இரு சமஷ்டிகளினதும் முக்கிய சிறப்புக் கூறுகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

கனடா (1867)

உலக நாடுகளில் நிலப்பரப்பளவில் மிகப்பெரிய நாடுகளுள் கனடா, ரஷ்யாவிற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் உள்ளது. கனடா ஒரு சமஷ்டி நாடாக 1867 இல் தோற்றம் பெற்றது. அப்போது ஒன்டாரியோ, கியுபெக், நோவா ஸ்கோஷியா (Nova Scotia), நியுபிறன்ஸ்விக் என்னும் நான்கு மாகாணங்கள் ஒன்றிணைவதன் மூலம் இச் சமஷ்டி உருவானது. 1867 இன் பின்னர் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்தில் கனடாவில் புதிய மாநிலங்கள் இணைக்கப்பட்டு 1999 இல் 10 மாநிலங்களையும் (Provinces) 3 பிரதேசங்களையும் (Territories) கொண்ட சமஷ்டியாக கனடா வளர்ச்சி பெற்றுள்ளது.

கனடாவின் சமஷ்டி முறையின் மிக முக்கியமான இயல்புகளில் ஒன்று கியுபெக் என்னும் மாகாணத்தின் மக்களில் 80 வீதத்தினர் பிரஞ்சு மொழி பேசுவோராக இருப்பதாகும். அத்தோடு கனடா முழுமையிலும் வாழும் பிரஞ்சு மொழி பேசுவோரில் 80 வீதத்தினர் கியுபெக் மாகாணத்தின் எல்லைக்குள் வதிபவர்களாகவும் உள்ளனர். ஒன்டாரியோவும் பிற மாகாணங்களும் ஆங்கிலம் பேசுவோர் மாகாணங்கள் என்ற அடையாளத்தை உடையனவாய் உள்ளன. இவ்வாறாக ‘பிரஞ்சு – ஆங்கில’ இருமை நிலையும் (French – English Duality), மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய வாதமும் (Regionalism) கனடாவின் சமஷ்டி முறையின் தனித்துவம் மிக்க இயல்பாகக் காணப்படுகின்றன. மிக அண்மைக் காலத்தில் கனடாவின் சுதேசிய மக்கள் (Aboriginal Peoples) கனடா சமஷ்டியில் முக்கிய பங்காளிகளாக்கப்படும் போக்குக் காணப்படுகிறது.

1867 இல் கனடாவின் சமஷ்டி உருவாக்கப்பட்ட பொழுது, கனடாவின் மத்திய அரசான ‘பெடரல் அரசாங்கம்’ (Federal Government) மாநிலங்களை பல வகையிலும் கட்டுப்படுத்தும் வலிமையுடையதாய் இருந்தது. அதாவது மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருந்தன; கனடா தொடக்கத்தில் ஒரு மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுடைய சமஷ்டியாக (Centralised Federation) விளங்கியது. அரசியல் யாப்பின்படி சட்டவாக்க அதிகாரங்கள் பின்வருமாறு வகுக்கப்பட்டிருந்தன.

அ) சமஷ்டி அரசாங்கத்திற்கு மட்டும் உரிய அதிகாரங்கள் (Exclusively Federal)

ஆ) மாகாணங்களுக்கு மட்டும் உரிய அதிகாரங்கள் (Exclusively Provincial)

இ) ஒருங்கிணை அதிகாரங்கள் (Concurrent)

மேலே குறித்த மூன்று வகைக்குள்ளும் குறித்துரைக்கப்படாத ‘எஞ்சிய அதிகாரங்கள்’ (Residual Powers) மத்திய அரசாங்கத்திற்கு (பெடரல் அரசாங்கம்) உரியவை ஆக்கப்பட்டன. கனடாவின் சமஷ்டி 1867 இல் உருவாக்கப்பட்டதன் பின் ஒரு நூற்றாண்டு காலத்தின் படிப்படியான மாற்றங்கள், கனடாவின் சமஷ்டிக்கு அதிகாரம் பரவலாக்கப்பட்ட சமஷ்டி (Decentralized Federation) என்ற இயல்பைக் கொடுத்துள்ளன. ‘பிரஞ்சு – ஆங்கில’ இருமைநிலை (Duality), பிரதேசவாதம் (Regionalism) என்ற இரு பண்புகளும் அழுத்தம் பெறுவதால் கனடா அதிகாரப் பரவலாக்கல் உடைய சமஷ்டியாக வளர்ச்சி பெற்றுள்ளது.

கனடாவின் சமஷ்டி முறையின் வரலாற்றில் குயுபெக் மாகாணத்தின் தனித்துவத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக அங்கு அசமத்துவப் பண்பு (Asymmetry) ஏற்பட்டுள்ளது. இதனால் கனடாவின் அசமத்துச் சமஷ்டி (Asymmetrical Federalism) இயல்புகள் ஒப்பீட்டாய்வில் முக்கிய கவனம் பெறுகின்றன. மொழி, கல்வி, குடியியல் சட்டம் (Civil Law) ஆகிய விடயங்களில் கனடாவின் ‘அரசியல் யாப்புச் சட்டம் 1867’ (The Constitution Act No 1867) கியுபெக் மாகாணத்திற்குரிய சிறப்புரிமைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவ்விடயத்தில் குயுபெக் அரசாங்கங்கள் காட்டிவரும் தீவிர நிலைப்பாடு அண்மைய பத்தாண்டுகளில் பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

கனடா சமஷ்டியின் மிக முக்கியமான சிறப்பியல்புகளில் ஒன்று அது பாராளுமன்ற முறைச் சமஷ்டி (Parliamentary Federalism) என்னும் அரசுக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதாகும். சுவிற்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் நிர்வாகத்துறைக்கும், சட்ட ஆக்கத்துறைக்கும் இடையே பிரிப்பு (Separation of Executive and Legislature) தெளிவானதாக உள்ளது. ஆயின் பாராளுமன்ற முறையினை உடைய கனடாவில் நிர்வாகத்துறையும், சட்ட ஆக்கத்துறையும் ஒன்றோடொன்று பிணைப்புடையனவாயும், நிர்வாகத்துறை சட்ட ஆக்கத் துறையான பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டியதாகவும் உள்ளது. கனடாவைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் பிறநாடுகள் பலவற்றிலும் பாராளுமன்ற சமஷ்டிமுறை பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற முறை நிறுவனங்களின் பெரும்பான்மைவாதப் பண்பு (Majoritarian Character) கனடாவின் அரசியலின் இயங்கியலில் தாக்கம் செலுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது.

சுவிற்சர்லாந்து

உலகின் சமஷ்டிகள் யாவற்றிலும் மிகப் பழமையானது சுவிற்சர்லாந்து சமஷ்டி ஆகும். இச்சமஷ்டியின் முக்கிய இயல்புகள் சிலவற்றை றொனால்ட்.எல். வாட்ஸ் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறார். அவரது விளக்கவுரையைத் தழுவி எளிமைப்படுத்திய தமிழ் விளக்கவுரை கீழே தரப்படுகிறது.

  1. பழமையான சமஷ்டி

உலகின் சமஷ்டிகளில் மிகவும் பழமையானது சுவிற்சர்லாந்துச் சமஷ்டி என்பதை றொனால்ட்.எல். வாட்ஸ் சுட்டிக் காட்டுகிறார். சிறு சிறு அரசுகளாகச் சிதறிக் கிடந்த சுவிற்சர்லாந்து 1291 இல் கூட்டிணைவு அல்லது ‘கொன்பெடரேஷன்’ (Confederation) என்னும் வடிவில் ஒன்றுபட்ட அமைப்பு ஆகியது. 1847 இல் அந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றது. இந்த யுத்தத்தின் முடிவில் 1848 ஆம் ஆண்டில் சுவிஸ் கொன்பெடரேஷன், சமஷ்டியாக (Federation) ஆகியது.

  1. சமஷ்டிக் கட்டமைப்பு

சமத்துவமுடைய அரசுகளின் கூட்டிணைவாகவே சமஷ்டிகள் உருவாக்கப்படுகின்றன என்பதற்கு சுவிற்சர்லாந்து மிகச் சிறந்த உதாரணமாகும். சமஷ்டி உருவாகும் போது ‘மத்திய அரசு’ அல்லது பெடரல் அரசாங்கம், மாநில அரசுகள் என இரு நிலை அரசாங்கங்கள் தோன்றும். ஐக்கிய அமெரிக்காவில் ‘அரசுகள்’ (States), ஜெர்மனியில் ‘லான்டர்’ (Lander), கனடாவில் மாகாணங்கள் (Provinces) என வெவ்வேறு பெயரில் அழைக்கப்படும் மாநில அரசுகள் சுவிற்சர்லாந்தில் ‘கன்டன்கள்’ எனப்படுகின்றன. 1848 இல் 26 கன்டன்கள் கொண்ட சமஷ்டியாக சுவிற்சர்லாந்து உருவானது. இவற்றுள் 20 கன்டன்கள் எனவும் 6 அரைக் கன்டன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

  1. பண்பாட்டுப் பன்மைத்துவம்

சுவிற்சர்லாந்து சமஷ்டியைப் பற்றிப் பேசும் எவரும் வியப்போடு குறிப்பிடுவது அதன் பண்பாட்டுப் பன்மைத்துவமாகும் (Cultural Diversity). 7 மில்லியன் மக்களைக் கொண்ட அந்நாட்டில்,

  • 64 சதவீதத்தினர் ஜேர்மன் மொழியைப் பேசுகிறார்கள்;
  • 20 சதவீதத்தினர் பிரஞ்சு மொழியைப் பேசுகிறார்கள்;
  • 6.5 சதவீதத்தினர் இத்தாலிய மொழியைப் பேசுகிறார்கள்;
  • 0.5 சதவீதத்தினர் ‘ரோமான்ஸ்’ (Romansh) மொழியைப் பேசுகிறார்கள்.

வெறும் 0.5 வீதத்தினர் மட்டும் பேசும் ரோமான்ஸ் உட்பட நான்கு மொழிகளும் தேசிய மொழிகளாக (National Languages) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஜேர்மன், பிரஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்றும் உத்தியோக மொழிகளாக (Official Languages) உள்ளன. மொழிப் பன்மைத்துவம் சுவிற்சர்லாந்தில் முக்கியம் பெற்றிருப்பதைத் தெரிந்து கொள்வதற்குப் பின்வரும் தகவல்கள் உதவுகின்றன.

  • 17 கன்டன்களில் ஜேர்மன் மொழி பேசப்படுகிறது;
  • 7 கன்டன்களில் பிரஞ்சுமொழி பேசப்படுகிறது;
  • ஒரு கன்டனில் இத்தாலிய மொழி பேசப்படுகிறது;
  • 3 கன்டன்களில் ஜேர்மன், பிரஞ்சு ஆகிய இரு மொழிகள் பேசப்படுகின்றன;
  • ஒரு கன்டனில் ஜேர்மன், இத்தாலியன், ரொமான்ஸ் என்னும் மூன்று மொழிகள் பேசப்படுகின்றன.

மத அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பலை எடுத்து நோக்கின்:

  • 14 கன்டன்களில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்;
  • 12 கன்டன்களில் புரட்டஸ்தாந்தியர் பெரும்பான்மையினராக உள்ளனர்.
  1. கன்டன்களின் சுயாதீனம்

கன்டன்கள் சுயாதீனம் (Autonomy) உடையன. இதற்குக் காரணம் மத்திய அரசாங்கம் (பெடரல் அரசாங்கம்) நாட்டின் இறைமை சார்ந்த முக்கிய விடயங்களின் அதிகாரங்களை வைத்துக் கொண்டு, எஞ்சிய அதிகாரங்களை (Residual Powers) கன்டன்களுக்குப் பகிர்ந்தளித்திருப்பதாகும். கன்டன்கள் வரிகள் மூலம் நிதி வளங்களைத் திரட்டி தமது பகுதியின் அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றும் அதிகாரம் உடையனவாகத் திகழ்கின்றன. நகரங்களின் உள்ளூராட்சி சபைகள், கையளிக்கப்பட்ட அதிகாரங்களை (Delegated Powers) உடையனவாய் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் முறையில் செயற்படுகின்றன.

  1. அதிகாரப் பகுப்பு

சுவிற்சர்லாந்து நாட்டில் சட்டவாக்க அதிகாரம், நிர்வாக அதிகாரம் என்பன வெவ்வேறானவை என்ற தெளிவான பிரிப்பைக் காண முடியாது. சுவிற்சர்லாந்தின் பெடரல் சட்ட சபையால் (Federal Legislature) தெரிவு செய்யப்படும் 7 உறுப்பினர்களைக் கொண்ட சமஷ்டிக் கவுன்சில் (Federal Council) என்னும் அமைப்பு நிர்வாக (Executive) அதிகாரம் உடைய சபையாக விளங்குகிறது. இக் கவுன்சிலின் உறுப்பினர்கள் சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு தடவை ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார். சுவிஸ் சமஷ்டியின் விசேட பண்பு பொதுசன வாக்கெடுப்பு (Referendum) என்னும் நேரடி ஜனநாயக முறையாகும்.

சுவிற்சர்லாந்து சமஷ்டியின் சிறப்பியல்புகளை றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் பக்கம் 22 – 23 இல் சுருக்கமாகக் கூறியுள்ளார். அவரது விளக்கத்தைத் தழுவி மேலே உள்ள பகுதி எழுதப்பட்டுள்ளது. 

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் சமஷ்டிகளை ஒப்பீட்டு முறையில் ஆராய்ந்து சுருக்கமான குறிப்புகளும் றொனால்ட் எல்.வாட்ஸ் அவர்களின் நூலில் 20 – 26 ஆகிய 7 பக்கங்களில் தரப்பட்டுள்ளன. விரிவஞ்சி இவ் விபரங்களை இங்கு தருவதைத் தவிர்த்துள்ளோம்.

அடுத்து பன்மொழிச் சமூகங்களைக் கொண்டனவும், வளர்ச்சியடைந்து வரும் மூன்றாம் உலக நாடுகளுமான இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளை றொனால்ட்.எல். வாட்ஸ் ஒப்பீட்டு ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார். அவ்விரு நாடுகளின் சமஷ்டி முறைகள் பற்றி அடுத்து நோக்குவோம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3328 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (10)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)