இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974 இல் தோன்றி, 1979 இல் ஒரு தனிப் பல்கலைக்கழகமாக உயர்வுபெற்று வளரும் இந்த உயர்கல்வி நிறுவனத்துக்கு ஐம்பது வயது. அவ்வளவு நீண்ட காலமாகத் தோன்றாவிட்டாலும், யாழ்ப்பணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முதலாவது முயற்சி 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதுமட்டுமல்லாது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து யாழ்ப்பாணத்துக் கல்விமான்கள் சிந்தனையில் தங்கள் பிரதேசத்து இளைஞர்களுக்குப் பல்கலைக்கழகப் பட்டம் பெற உதவ வேண்டும் என்ற எண்ணமும் அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளும் காணப்பட்டன.
இவற்றின் பலனாக, 1974 இற்கு முன் யாழ்ப்பாணத்தில் ‘பல்கலைக்கழகம்’ என்ற ஒரு நிறுவனம் இல்லாதபோதிலும், யாழ்ப்பாணத்து இளைஞர்கள் தங்கள் பிரதேசத்தை விட்டு வெளியே செல்லாது பல்கலைக்கழக நிலைக் கல்வியைப் பெறவும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடைய பட்டங்களைப் பெறவும் முடிந்தது. அறிவதற்கு மிகுந்த ஆர்வமூட்டும் இந்த வரலாறு, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணம் அடைந்த முன்னேற்றத்தின் வரலாற்றின் ஒரு முக்கிய அம்சமாகும். இன்றைய அரசியல் பிரச்சினைகளை நன்கு விளங்கிக்கொள்வதற்கு இதனை அறிந்திருப்பது முக்கியமாகும்.
அமெரிக்கர் வருகை
இந்த வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் முதற்காலில் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் பிள்ளைகளுக்குப் பரவலாகக் கல்வி வழங்க எடுக்கப்பட்ட முயற்சிகளுடன் தொடங்குகிறது. முன் ஒருபோதும் இல்லாத வகையில் பல பின் தங்கிய ஊர்களில் இலவசப் பாடசாலைகள் திறக்கப்பட்டு வசதியற்ற சிறுவர்கள் படிப்பதற்கு வழிதிறக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறையிலும் பண்பாட்டிலும் நீண்டகால மாற்றங்களை விளைவிக்கக்கூடிய வலுக்கொண்ட இந்த மேம்பாடு அமெரிக்காவில் இருந்து மதமாற்றத் தொண்டர்களாக வந்த மிஷனரிமாரால் தொடக்கிவைக்கப்பட்டது.
வெளிநாடுகளில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் 1810 இல் அமெரிக்காவில் ஒரு சபை (American Board of Commissioners for Foreign Missions) அமைக்கப்பட்டபோது யாழ்ப்பாணத்துக்கும் ஒரு குழுவை அனுப்பிவைக்கும் நோக்கம் இருக்கவில்லை. ஆசியாவுக்கு மிஷனரிமாரை அனுப்பிவைக்க வகுத்த திட்டத்தில் இந்தியா முதலிடம் பெற்றது. அக் காலத்தில் இலங்கையைப் பற்றி மிஷன் அதிகாரிகள் அதிகம் அறிந்திருக்கவில்லை.
இந்தியாவில் மிஷன் மையம் ஒன்றை அமைப்பதற்குத் தயாராகிக் கொல்கத்தாவுக்கு 1812 இல் சென்ற குழுவினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அப்பொழுது அங்கு ஆட்சி நடத்திய ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு (English East India Company) அரசாங்கம், இந்த அமெரிக்கக் குழுவினருக்கு அங்கு தங்குவதற்கு அனுமதி வழங்க மறுத்துக் கொல்கத்தாவை விட்டு வெளியேறும்படி பணித்தது. இந்த நடவடிக்கையில் வியப்பதற்கு எதுவும் இல்லை. ஏனெனில், இங்கிலாந்தும் அமெரிக்காவும் பகை அரசுகளாக 1812 இல் போர் நடத்திக்கொண்டிருந்தன.
இவ்வாறு அமெரிக்கர் கொல்கத்தாவில் இருந்து வெளியேற்றப்பட்டமை யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க மிஷன் செல்வதற்கு வழிவகுத்த தற்செயல் தொடர் நிகழ்ச்சிகளுள் முதலாவதாகும். கொல்கத்தாவிலிருந்து மோரீஷியஸ் தீவை நோக்கிச் சென்ற ஒரு கப்பலில் சாமுவெல் நியுவெல் (Samuel Newell) என்ற வெளியேற்றப்பட்ட அமெரிக்க மிஷனரியார் தன் மனைவியுடன் புறப்பட்டு, மோரீஷியஸ் தீவில் தங்கியிருந்த காலத்தில், அவரது மனைவியார் இறக்க நேரிட்டது. மனைவியை இழந்து கவலையுற்று இருந்தபோது அவருக்கு ஒரு நற்செய்தி கிடைத்தது. அவருடன் அமெரிக்காவிலிருந்து கூடவந்த பிற மிஷனரிமார் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்குச் சென்று, அங்கு இருந்த ஆங்கில அரசாங்கத்திடம் அங்கு தங்குவதற்கும் தங்கள் மையத்தை அமைப்பதற்கும் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுடன் சேர்வதற்கு நியுவெல் ஒரு போர்த்துக்கீசக் கப்பலில் புறப்பட்டார்.
நியுவெல் ஏறிய கப்பல் இந்தியாவில் போர்த்துக்கீசர் ஆதிக்க மையமாக விளங்கிய கோவாவை (Goa) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இதனால், வழியில் அக் கப்பல் இலங்கைக்குச் சென்று காலித் துறைமுகத்தில் சில நாட்கள் தங்கியபோது நியுவெல் பின்னர் இலங்கையில் இருந்து மும்பைக்குச் செல்லும் எண்ணத்துடன் கொழும்புக்குச் சென்றார். இது யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க மிஷன் செல்ல வழிவகுத்த இரண்டாவது தற்செயல் நிகழ்ச்சி ஆகும்.
இலங்கையில் தங்கியிருந்த நாட்களில், அமெரிக்க மிஷனின் செயற்பாடுகளுக்கு இலங்கை ஓர் உகந்த இடமா என்பதை நியுவெல் மதிப்பிடுவதில் ஈடுபட்டார். இதற்காக யாழ்ப்பாணத்துக்கும் சென்றார். யாழ்ப்பாணத்தைப் பார்வையிடச் சென்ற முதலாவது அமெரிக்கராக, முதலாவது அமெரிக்க மிஷனரியாராக அவரைக் கருதலாம். யாழ்ப்பாணம் அவர் மனதைக் கவர்ந்தது.
அமெரிக்க மிஷனின் மையம் ஒன்றை அமைப்பதற்கு யாழ்ப்பாணம் ஒரு சிறந்த இடம் என்பதை உணர்ந்த நியுவெல், கொழும்பு திரும்பியதும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி, அமெரிக்க மிஷன் குழு ஒன்றை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புமாறு மிஷன் அதிகாரிகளுக்கு 1813 திசெம்பர் 20 இல் எழுதிய கடிதத்தில் பரிந்துரை செய்தார். அவர் காட்டிய காரணங்களுள் ஒன்று முக்கியமானது: “தமிழ்மொழி பேசப்படும் யாழ்ப்பாணத்தில் எங்கள் நிலையத்தை அமைப்போமானால், எங்களுக்கு ஒரு பரந்த பிரதேசம் கிடைக்கும்; ஏனெனில் இதே மொழியைக் கால்வாய்க்கு (Channel) அப்பால் அயல் கண்டத்தில் ஏழு அல்லது எட்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.”(PMM 1815: 516).
முதல் மிஷன் குழு
நியுவெல் அனுப்பிய பரிந்துரையை ஏற்று, ஒக்டோபர் 1815 இல் அமெரிக்க மிஷன் ஒரு மிஷனரிமார் குழுவை இலங்கைக்கு அனுப்பியது. மார்ச் 1816 இல் கொழும்பு வந்து சேர்ந்த இக் குழுவினர், ஆறு மாதங்கள் கொழும்பில் தங்கியிருந்தபோது, மேலும் விசாரித்து, யாழ்ப்பாணமே தங்களுக்கு உகந்த இடம் என உறுதி செய்தனர். குழுவில் இருந்த ஒருவர் மும்பையில் இருந்த அமெரிக்க மிஷனரிமாருடன் சேர்வதற்குச் சென்றுவிட, ஏனைய நால்வரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றனர். இவர்கள் டானியெல் புவர் (Daniel Poor), எட்வேர்ட் உவரென் (Edward Warren), ஜேம்ஸ் ரிச்சட்ஸ் (James Richards), பெஞ்சமின் மெயிக்ஸ் (Benjamin Meigs) ஆகியோர் ஆவர்.
இம் முதல் குழுவினர் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை அமைத்துக் கல்வியை வளர்ப்பதற்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்தனர். இதனால், யாழ்ப்பாணம் சென்று ஒரு சில மாதங்களுள் பல ஊர்களில் சுதேச இலவசப் பாடசாலைகளை அமைத்தனர். இம் முயற்சியைத் தொடங்கி ஆறு ஆண்டுகள் கழிந்தபோது, பாடசாலைகளை விட்டு வெளியேறும் பிள்ளைகளுடைய எதிர்காலம் என்ன, எவ்வாறு பயனுள்ள செயல்களை அவர்கள் செய்வது என்று மிஷனரிக் குழுவினர் ஆழமாகச் சிந்தித்து ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தனர்.
கல்லூரிநிலைப் படிப்பு
ஐரோப்பாவில் நிலவும் கல்விமுறையை ஒத்த வகையில் (‘To keep up with European standards of scholarship’) மாணவர்கள் கற்பதற்கு “ஏதாவது செய்யவேண்டும்” (“Conviction that something must be done” – Chelliah: 8) என்ற திடமனதுடன், ஒரு திட்டத்தை வகுத்தனர். அது என்னவெனில் யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரியை (College) அமைக்கவேண்டும் என்பதாகும்.
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த அமெரிக்க மிஷனரிமார் அனைவரும் (அறுவர்) கூடிக் கலந்துரையாடி, 1823 மார்ச் 4 திகதி இடப்பட்ட ஒரு விரிவான திட்டத்தை (Prospectus) (MH 1825: 129- ; Chelliah: 5-16) மேலதிகாரிகளுக்கும் இலங்கையின் பிரித்தானிய அரசாங்கத்துக்கும் அனுப்பி வைத்தனர்.
மேலைத்தேச முறைபடியான ஒரு நவீன பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு வகுக்கப்பட்ட முதலாவது திட்டம் இதுவேயாகும். கல்லூரி (College) என்பது அக் காலத்தில் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழக நிலையில் செயற்பட்ட கல்வி நிறுவனத்துக்கு இடப்பட்ட பெயராகும். இன்று Harvard University என்று பெயர் பெறும் நிறுவனம் அன்று Harvard College எனப் பெயர் பெற்றிருந்தது.
இத் திட்டம் வகுக்கப்பட்டபோது யாழ்ப்பாணத்தில் எங்கு இந்தக் கல்லூரியை நிறுவுவது என்பது தீர்மானிக்கப்படவில்லை. “யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வசதியான இடத்தில்” இதை அமைக்க விரும்புவதாக மட்டுமே அவர்கள் குறிப்பிட்டனர் (MH 1825: 131).
கல்லூரியை நிறுவுவதன் நோக்கங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டிருந்தன. இரண்டு முக்கிய நோக்கங்கள் இவை: முதலாவது, எதிர்காலத்தில் சிறப்பாகச் செயற்படக்கூடியவர்களாகக் காணப்படும் சுதேச இளைஞர்களுக்கு ஆங்கில மொழியை ஆழமாக அறிந்துகொள்ள உதவுதல்; இரண்டாவது, தமிழ் இலக்கியக் கல்வியை மேம்படுத்தல் (MH 1825: 131).
யாழ்ப்பாணத்துக்கு வந்து ஒரு சில ஆண்டுகளுள் அமெரிக்க மிஷனரிமார் தமிழை நன்கு கற்றதுடன், இம் மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டனர். அவர்கள் தயாரித்த கல்லூரித் திட்டத்தில் தமிழைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுளனர்: ”சமஸ்கிருதம், எபிரேயம் (Hebrew), கிரேக்கம் முதலான மொழிகளைப் போலத் தமிழ் மொழி ஒரு மூலமொழியாகவும் (Original) செம்மையான மொழியாகவும் (Perfect) உள்ளது. இதனைப் பயில்வது மிகவும் பயனளிக்கும்.” (MH 1825: 130).
சைவ சமயத்தவர் மத்தியில் வாழ்ந்த அமெரிக்கர் வெகு விரைவில் சமஸ்கிருத மொழி பெற்றிருந்த முக்கியத்துவத்தையும் அதன் இலக்கியத்தின் செழிப்பினையும் அறிந்துகொண்டனர். இம் மொழி “கீழைத்தேச இலக்கியம், அறிவியல், சமயம் ஆகியவற்றின் கள்ஞ்சியம்” எனத் தங்கள் திட்டத்தில் விளக்கியுள்ளனர் (MH 1825: 130). அதனால், யாழ்ப்பாணத்தில் அவர்கள் அமைக்கத் திட்டமிட்ட உயர்கல்வி நிறுவனத்தில் சமஸ்கிருதத்துக்கும் இடம் அளிக்க விரும்பினர். அதே நேரத்தில், மேலைத்தேசக் கல்லூரிகளில் இருப்பது போல் கிறிஸ்தவத்தில் முக்கியத்துவம் பெறும் கிரேக்க மொழியும் எபிரேய மொழியும் அவர்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
இம் மொழிகளுடன், முடியுமானவரை அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதற்கும் திட்டம் இடப்பட்டது.
கல்லூரி அலுவலர்
அமெரிக்கக் கல்லூரிகளில் இருந்த அமைப்பு முறையைப் பின்பற்றி, ஒரு தலைவரையும் (President), ஐந்து பேராசிரியர்களையும் நியமிப்பதற்குத் திட்டமிடப்பட்டது. மூன்று அமெரிக்கர் அல்லது ஐரோப்பியர் பின்வரும் பதவிகளில்:1) Professor of Mathematics and Natural Philosophy, 2) Professor of the Greek and Hebrew Languages, and 3) a Professor of the Theory and Practice of Physic. இவர்களுடன் இரு சுதேசிகள் சமஸ்கிருதப் பேராசிரியர்ப் பதவிக்கும் தமிழ்ப் பேராசிரியர்ப் பதவிக்கும் நியமிக்கப்படுவர் (MH 1825: 131).
விரிவாக வகுக்கப்பட்ட இத் திட்டம் அமெரிக்காவில் இருந்த மிஷன் சபைக்கும் இலங்கையின் பிரித்தானிய அரசாங்கத்துக்கும் அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்குமுன் தேவையான சில ஆயத்தங்கள் செய்யப்பட்டன. ஒன்று, கல்லூரிக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. இரண்டாவது, கல்லூரிக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களைத் தெரிவு செய்ய ஒரு ‘தயாரிப்புப் பள்ளி’ (Preparatory School) அமைக்கப்பட்டது. நாட்டின் பிரதம நீதியரசர் (Chief Justice), அரசாங்கத்தின் பிரதம செயலாளர் (Chief Secretary to Government), யாழ்ப்பாணத்தின் ‘கலெக்டர்’ (அரசாங்க அதிபர்), நீதிபதிகள் ஆகியோர் பணம் கொடுத்து உதவினர். இந்தியாவிலும் கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் கடமையாற்றிக்கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகளும் பிறரும் பணம் கொடுத்து உதவினர் (MH 1826: 234).
தயாரிப்புப் பள்ளியாக வட்டுக்கோட்டையில் ‘Central Boarding School’ என்ற பெயருடன் ஒரு பாடசாலை தொடக்கப்பட்டது. அங்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் ‘திறமை மட்டுமன்றி, முன்னேற வேண்டும் என்ற பெருவிருப்பையும் கொண்டிருந்தனர்’ என மிஷனரிமார் பதிவு செய்துள்ளனர் (MH 1825: 201).
அனுமதி மறுப்பு
யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரியை அமைப்பதற்கு அமெரிக்க மிஷனரிமார் ஆர்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருந்தபோது அமெரிக்காவில் இருந்த மிஷன் சபை 1825 இல் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் ‘இலங்கையில் ஒரு கல்லூரியை’ (College in Ceylon) அமைக்க அனுமதி வழங்கியது (MH 1825: 395).
ஆனால் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த பதில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. கொழும்பில் அப்பொழுது ஆளுநராக இருந்த எட்வட் பாண்ஸ் (Edward Barnes) அமெரிக்கருக்கு ஆதரவாகக் காணப்படவில்லை. “அமெரிக்க மிஷனரிமாருடைய எண்ணிக்கை மேலும் கூடுவதைப் பிரித்தானிய அரசாங்கம் அனுமதிக்காது” என்றும், “இலங்கை மக்களுக்குப் பிரித்தானிய மக்கள் ஆசிரியர்களை அனுப்பிவைப்பர்” என்றும் பாண்ஸ் அரசாங்கத்தின் பதில் அமைந்திருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் அனுமதி இல்லாது கல்லூரி ஒன்றை நிறுவ முடியாத நிலை ஏற்பட்டபோதிலும், அமெரிக்க மிஷனரிமார் தங்கள் திட்டத்தைக் கைவிட விரும்பவில்லை. கல்லூரி என்ற பெயரையோ செமினரி என்ற பெயரையோ பயன்படுத்தாது, ஓர் உயர்கல்வி நிறுவனத்தைத் தாங்கள் தொடக்கிய Central Boarding School இல் நடத்தத் தீர்மானித்தனர்.
தடை நீக்கம்
ஆளுநர் எட்வட் பாண்ஸ் 1831 இல் ஓய்வுபெற்றுச் சென்றதும், அமெரிக்க மிஷனரிமாருக்குச் சாதகமான ஒரு புதியவர், ரிச்சட் வில்மொற் ஹோட்டன் (Richard Wilmot – Horton), புதிய ஆளுநராகப் பதவியேற்றார். யாழ்ப்பாணத்தில் இருந்து மிஷனரியார் ஒருவர் (மைரன் உவின்ஸ்லோ) ஆளுநரைச் சந்திக்கச் சென்றார். ஆளுநர் முன்னர் விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்குச் சம்மதித்தது மட்டுமன்றி, 1832 இல் தானே வட்டுக்கோட்டைக்குச் சென்று, நிறுவனத்தைப் பார்வையிட்டு, மாணாக்கர்களைச் சந்தித்து மகிழ்ச்சி அடைந்தார்.
ஆளுநர் தடைகளை நீக்கியதும், புதிய மிஷனரிமார் அமெரிக்காவில் இருந்து வருவிக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் வைத்தியர் நேதன் உவாட் (Dr. Nathan Ward). இவர் 1833 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்து வட்டுக்கோட்டையில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தில் (இது 1846 இல் Batticotta Seminary என்ற பெயரைப் பெற்றது.) Professor of Medicine, Chemistry and Geology என்ற பதவியில் கடமையாற்றத் தொடங்கினார். இவருக்குப் பின் எட்வட் கோப் (Edward Cope) என்ற மிஷனரியார் அமெரிக்காவில் இருந்து வந்து Professor of English Literature என்ற பதவியில் கடமையாற்றினார் (Chelliah: 43).
மருத்துவ மாணவர்
சில மாணவர் மருத்துவத் துறையிலும் அறுவை சிகிச்சையிலும் கல்வி பெற்று வைத்தியர்களாகப் பணிபுரியும் தகுதியைப் பெறுவதற்கு நேதன் உவாட் வைத்தியரால் பயிற்றப்பட்டனர். இவ்வாறு பயிற்சி பெற்றவர்களுள் சிலர் அமெரிக்க மிஷன் நிலையங்களில் மருத்துவ உதவியாளராக (Native Medical Assistants) நியமிக்கப்பட்டனர். மானிப்பாயில் 1848 இல் மருத்துவக் கல்வியைத் தொடக்கிய வைத்தியர் சாமுவெல் கிறீன் (Dr. Samuel Green) அமெரிக்காவுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் மானிப்பாயில் தனது சுதேச உதவியாளராக (Native Assistant) Dr. Gould, வட்டுக்கோட்டையில் Dr. S.A. Evarts, உடுவிலில் Dr. Daniel Nicholls, தெல்லிப்பளையில் Dr. S. Ropes ஆகியோர் அப்பொழுது பணி செய்வதாக கூறியுள்ளார்.
செமினரி மூடப்படுதல்
வட்டுக்கோட்டை செமினரி 1840 அளவில் ஓர் அமெரிக்கக் கல்லூரி போன்று இயங்கியது. அங்கு ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம் ஆகிய மொழிகளுடன் சில அறிவியல் பாடங்களும் கற்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்தும் சில மாணவர்கள் அங்கு வந்து படித்தனர். இவர்கள் கொழும்பு, தரங்கம்பாடி (தமிழ்நாடு), நாகபட்டினம் (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் இருந்து வந்தவர்கள் (MH 1847: 310-311). ஒரு குறுகிய காலத்துக்கு லெபனான் நாட்டு பெய்ரூட் (Beirut) நகரில் இருந்து ஓர் இளைஞர் வந்து கல்வி பயின்றார் (MH 1835: 66). கண்டியில் இருந்து ஒரு பௌத்த பிக்குவும் செமினரியில் படிக்க வந்திருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (வேலுப்பிள்ளை: 98).
ஆளுநர் வில்மொற் – ஹோட்டனுக்குப் பின்னரும் கொழும்பில் இருந்து பிரித்தானிய அதிகாரிகள் சிலர் வட்டுக்கோட்டை செமினரியைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தனர். அவர்களுள் ஒருவர் காலனித்துவ செயலாளர் இமெர்ஸன் டெனென்ற் (Colonial Secretary Emerson Tennent) ஆவார். செமினரியில் கல்வி கற்றோரையும் கற்பித்தோரையும் இவர் சந்தித்து, நடைபெற்ற பரீட்சைகளையும் அவதானித்தபின், தனது நூல் ஒன்றில் இவ்வாறு தனது மதிப்பீட்டைத் தெரிவித்தார்: “வட்டுக்கோட்டையில் உள்ள கல்லூரி நிறுவனம் பல ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களுடன் வைத்தெண்ணக்கூடிய உரிமையைப் பெற்றுள்ளது.”
மேலைத்தேச முறைப்படியான பல்கலைக்கழகம் ஒன்று இலங்கையில் மட்டுமல்ல, தென் ஆசியாவிலேயே இல்லாத காலத்தில் வட்டுக்கோட்டை செமினரி ஒரு பல்கலைக்கழகத்தை ஒத்த உயர்கல்வி நிறுவனமாக இயங்கி, யாழ்ப்பாணத்து இளைஞர்கள் ஆங்கிலத்தைக் கற்பதில் பெருவிருப்புக் கொள்ளவும் உயர் கல்வித் தாகத்தைப் பெறவும் ஓர் உந்துசக்தியாக வளர்ச்சி பெற்றது. இவ் வளர்ச்சி ஏற்பட்ட நேரத்தில், அமெரிக்க மிஷன் அதிகாரிகளுடைய ஆதரவு தொடர்ந்து செமினரிக்குக் கிடைக்காத நிலை உருவாகியது.
மும்பையிலும் யாழ்ப்பாணத்திலும் இருந்த மிஷன் நிலையங்களின் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய மிஷன் அதிகாரிகள் ஒரு குழுவை (அமெரிக்க சபையின் தானாபதிகள் எனத் தமிழில் வர்ணிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவக் குழு/ Deputation) அனுப்பி வைத்தனர். இக் குழுவின் மீளாய்வின் விளைவாக யாழ்ப்பாணத்தில் மிஷன் நடத்திய ஆங்கிலப் பாடசாலைகளும் வட்டுக்கோட்டை செமினரியும் மூடப்பட்டன.
உயர்கல்வி வேட்கை
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாணத்தின் முதல்நிலை உயர்கல்வி நிலையமாகச் செயற்பட்டு, ‘சாத்திரசாலை’ என்றும் ‘கலாசாலை’ என்றும் பிரபலம் பெற்று, ஆங்கில மொழியை உயர்நிலையில் புகட்டியதுடன், நவீன மேலைத்தேச அறிவியலையும் மருத்துவத்தையும் யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்திய செமினரி திடீரென மூடப்பட்டமை ஆங்கில அறிவைப் பெற்றிருந்த யாழ்ப்பாண இளைஞர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
மேலைதேசம் சென்று பல்கலைக்கழகப் பட்டத்தை பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வெளியெ செல்லாது, பணச்செலவும் இன்றி, உயர்கல்வியைப் பெறும் வசதியை வட்டுக்கோட்டை செமினரி கொடுத்தது. இந்த நிறுவனம் கொடுத்த கல்வி பல்கலைக்கழகக் கல்வியை ஒத்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், செமினரியில் படித்த இருவர் சென்னைப் பல்கலைக்கழகம் 1857 நடத்திய முதலாவது பரீட்சையை எழுதி, பிறர் எவரும் சித்தியடையாது போக, இவ்விருவரும் மட்டுமே சித்தியடைந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரிகள் என்ற புகழைப் பெற்றனர். இவர்கள் சி.வை. தாமோதரம்பிள்ளையும் கரொல் விஸ்வநாதபிள்ளையும் ஆவர்.
ஆங்கில மொழியும் உயர் கல்வியும் கொடுத்த பலன்களை நன்கு புரிந்துகொண்ட, ஆங்கிலக் கல்வி பெற்ற இளைஞர்கள் பலர் அமெரிக்க மிஷனின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் ஆங்கில மொழி அறிவையும் உயர் கல்வியையும் இளம் பிள்ளைகள் பெறுவதற்கு ஒரு நிறுவனத்தைத் தாமே அமைக்கவேண்டும் எனத் தீர்மானித்து இந்த இளைஞர்கள் ஒன்றுகூடி, அதற்கான நிதியை இலங்கையிலும் அமெரிக்காவிலும் திரட்டி, 1872 இல் வட்டுக்கோட்டையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையைத் தொடங்கினர். இதுவே பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரைப் பெற்றது.
யாழ்ப்பாணக் கல்லூரி
யாழ்ப்பாணக் கல்லூரி அமெரிக்க மிஷன் அமைத்த நிறுவனம் அல்ல. மாறாக, அமெரிக்க மிஷன் செமினரியையும் ஆங்கிலப் பாடசாலைகளையும் மூடியதை ஏற்காத யாழ்ப்பாணத்து இளைஞர்கள் அளித்த பதில்தான் இப் புதிய நிறுவனம். அமெரிக்க மிஷன் கைவிட்ட ஆங்கில மொழியையும் உயர்கல்வியையும் அடுத்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்நிறுவனம் கொடுத்து, ஒரு பல்கலைக்கழகம் தோன்றும் வரை பல பட்டதாரிகளை உருவாக்குவதற்கு உதவியது.
இந்த நிறுவனத்தை அமைக்க அமெரிக்க மிஷன் உதவி செய்யாத போதிலும், ஓர் அமெரிக்க அதிபரை நியமித்து அவருக்கான சம்பளத்தையும் கொடுத்து உதவுமாறு மிஷன் அதிகாரிகளைக் கேட்டபோது அதனைச் செய்யவும் மிஷன் மறுத்தது. புதிய பாடசாலையை அமைத்தோர் அமெரிக்க மிஷனுடன் தொடர்பு வைப்பதையே விரும்பினர். இறுதியில், மூடப்பட்ட செமினரியின் கடைசி அதிபர் (Dr. E.P. Hastings) இப் பாடசாலையின் முதல் அதிபராக நியமிக்கப்படுவதற்கு அமெரிக்க மிஷன் இணங்கியது.
பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு
இந்தியாவில் மேலைத்தேச முறையிலான முதலாவது பல்கலைக்கழகங்கள் 1857 இல் திறக்கப்பட்டன. இவை பம்பாய், கல்கத்தா, சென்னைப் பல்கலைக்கழகங்களாகும். யாழ்ப்பாணக் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அந்த நிறுவனத்தின் பட்டப் படிப்புக்கு வசதிகள் செய்ய வேண்டும் என்ற அழுத்தத்துக்கு அதிபர் ஹேஸ்டிங்ஸ் இலக்காகி இருந்தும், அப் பல்கலைக்கழகத்தின் பரீட்சை முறையை விரும்பாததால் அவர் அதற்கு இணங்கவில்லை.
உயர்கல்வி வேட்கையைத் திருப்திசெய்ய இலங்கையில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவதே சரியான செயல் என ஹேஸ்டிங்ஸ் நம்பினார். இது தொடர்பாக அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்ய ஒரு குழுவை நியமிக்கும் நடவடிக்கையையும் அவர் எடுத்தார். இது மிகவும் கவனிக்கத் தக்க ஒரு விஷயமாகும்.
ஏனெனில், இலங்கையின் தென்பகுதியில், சிறப்பாக ஆங்கிலம் கற்று உயர்வு பெற்றிருந்த சமூகத் தலைவர்கள் தம் நாட்டுக்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று குரல் எழுப்பாத காலத்தில் யாழ்ப்பாணத்தில் அத்தகைய குரல் எழுப்பப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இவ் வேண்டுகோள் பல முறை யாழ்ப்பாணக் கல்லூரியில் இருந்து அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டது.
ஹேஸ்டிங்ஸ் இளைப்பாறிய பின் 1889 இல் அதிபராக யாழ்ப்பாணக் கல்லூரியில் பதவி பெற்ற ஹவுலண்ட் (Dr.S.W. Howland) முந்திய அதிபரைப் போல இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைவதை விரும்பாது, இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தார். இலங்கை ஆளுநர் ஆதர் ஹவ்லொக் (Governor Arthur Havelock) 1890 இல் யாழ்ப்பாணக் கல்லூரிக்குச் சென்றபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புரையில் இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க அவர் உதவ வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. காலனித்துவ அரசாங்கம் எதுவித நடவடிக்கையையும் இது தொடர்பாக எடுக்க விரும்பவில்லை.
ஆனால், பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை யாழ்ப்பாணத்தில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வலுப்பெற்றுச் சென்றது. இது ஆங்கிலம் கற்ற கிறிஸ்தவர்கள் மத்தியில் மட்டுமன்றி சைவர்களிடம் இருந்தும் எழுந்தது. கிறிஸ்தவச் செல்வாக்குப் பரம்பலை விரும்பாத சைவத் தலைவர்களும் சைவ இளைஞர்களுக்கு ஆங்கில மொழி அறிவும் நவீன அறிவியலும் கிடைப்பதற்குச் சைவ நிறுவனங்களை அமைக்கத் தொடங்கினர்.
இப் பின்புலத்திலேதான் 1890 களில் யாழ்ப்பாணக் கல்லூரியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உட்படப் பிற கல்லூரிகளும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடைய பரீட்சைகளுக்கு மாணவர்களைத் தயாராக்கத் தொடங்கின. யாழ்ப்பாணக் கல்லூரி 1891 இல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அந்த நிறுவனத்தின் F.A. (First in Arts) பரீட்சைக்கும் B.A. (Bachelor of Arts) பரீட்சைக்கும் வகுப்புகளைத் தொடங்கியது.
இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம்
இவ்வாறாக யாழ்ப்பாணத்து இளைஞர்கள் குடாநாட்டை விட்டு வெளியே செல்லாது கொல்கத்தாப் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்ட காலத்தில் கொழும்பில் பல்கலைக்கழகம் நாட்டுக்குத் தேவை என்ற குரல் எழத் தொடங்கியது. ஆங்கிலக் கிறிஸ்தவத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு பாதிரியார் இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவவேண்டும் என்று 1884 இல் அரசாங்கத்துக்குக் கருத்துத் தெரிவித்தார் எனக் கூறப்பட்டுள்ளது (Uyangoda). ஆனால் இது பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. பொன்னம்பலம் அருணாசலம் 1890 களில் இவ் விஷயம் தொடர்பாகத் தன் கருத்துகளை வெளியிட்டு, 1900 இல் அரசாங்கத்துக்கும் ஒரு கருத்துரையை (Memorandum) அனுப்பியிருந்தார் (Rutnam: 18).
காலனித்துவ அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அருணாசலம் தன் முயற்சியைக் கைவிடவில்லை. அவர் தலைமையில் 1906 இல் பல பிரமுகர்கள் (ஆனந்த குமாரசுவாமி, டி.பி. ஜயதிலக, மாக்கஸ் பர்னாந்து, ஜேம்ஸ் பீரிஸ் போன்றோர் உட்பட) கொழும்பில் கூடி Ceylon University Association என்ற சங்கத்தை அமைத்தனர். இவர்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாகப் பதினைந்து ஆண்டுகளின் பின்னர், 1921 இல், லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு கல்லூரி (Ceylon University College) கொழும்பில் நிறுவப்பட்டது. தனியான பல்கலைக்கழகம் ஒன்று ஆங்கிலேயர் இலங்கையை விட்டுச்செல்வதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் (1942 இல்) அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் முன்னேற்றம்
சென்னையிலும் கொல்கத்தாவிலும் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டமை யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு உயர்கல்வி பெறப் பெரும் வாய்ப்பினை வழங்கியது. சிலர் நேரடியாகச் சென்னைக்கும் கொல்கத்தாவுக்கும் சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டனர். பிறர் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் இந்துக் கல்லூரி போன்ற பிற நிறுவனங்களிலும் சேர்ந்து படித்தனர்.
யாழ்ப்பாணக் கல்லூரி கொல்கத்தாவுடன் இருந்த இணைப்பை விட்டு 1907 இல் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. இந்த இணைப்பு 1911 வரை நீடித்தது. பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்துப் பரீட்சைகளை எடுக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதும் இப் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவதற்கான வகுப்புகளை யாழ்ப்பாணக் கல்லூரி நடத்தியது.
இவ்வாறு உயர் கல்வியை வளர்த்த யாழ்ப்பாணக் கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய மேம்பாடு 1947 இல் இடம்பெற்றது. இந்த ஆண்டில் அமெரிக்கக் கல்லூரி அமைப்பை ஒத்த வகையில், யாழ்ப்பாணக் கல்லூரியில் ஒரு வேறான உயர்கல்விப் பிரிவு (Collegiate Department) உருவாக்கப்பட்டது. இப் பிரிவுக்கு அமெரிக்கக் கல்லூரிகளில் உள்ளது போல் ஒரு தலைவர் (President), பேராசிரியர்கள் ஆகியோர் வேறாக நியமிக்கப்பட்டனர். முதலாவது தலைவராக யாழ்ப்பாணக் கல்லூரியின் கடைசி அமெரிக்க அதிபராகக் கடமையாற்றிய எஸ்.கே. பங்கர் (S.K. Bunker) நியமிக்கப்பட்டார்.
இப் பிரிவில் லண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டங்களுக்கான வெளிவாரிப் பரீட்சைகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன் ஆசிரியர் குழு ஒரு பல்லினத் தன்மையைக் கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது. இப் பிரிவின் தொடக்க ஆண்டுகளில் தமிழ்த் துறைத் தலைவராகிய கே.ஈ. மதியாபரணம், லத்தீன் மொழி கற்பித்த லைமன் எஸ். குலத்துங்கம் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தவர்; ஏனையோர் வெளியில் இருந்து வந்தவர்கள். இன்றைய கேரளத்தில் இருந்து K.A. George (Mathematics), P.T. John (Physics), K.P. Abraham (Chemistry), T.J. Koshy (Botany); கர்நாடகாவில் இருந்து H.P.C. Shetty (Zoology), தமிழ்நாட்டில் இருந்து S.P. Appasamy (English); ஆந்திராவில் இருந்து M.D. Balasubramaniam (Sanskrit); அமெரிக்காவில் இருந்து E.C. Lockwood (Mathematics), W.R. Holmes (History) ஆகியோர் ஆசிரியர் குழுவில் இணைக்கப்பட்டனர். ஒரு பல்கலைக்கழகத்துக்கு அணியாக விளங்கும் பல்லின ஆசிரியர் குழு இப் புதிய உயர்கல்வி நிறுவனத்தின் தொடக்க ஆண்டுகளில் இருந்தமை கவனிக்கத்தக்கதாகும்.
இவ்வாறு 1947 இல் உருவாக்கப்பட்ட பட்டதாரிப் பிரிவு 1823 இல் யாழ்ப்பாணத்தில் இருந்த அமெரிக்க மிஷனரிமார் கல்லூரி ஒன்றை அமைப்பதற்கு வகுத்த திட்டத்தை 124 ஆண்டுகளின் பின் நிறைவேற்றியது எனலாம். அத் திட்டத்தில் இருந்ததுபோல், President ஒருவர் தலைமையில் வெளிநாட்டு ஆசிரியர்களையும் உள்ளூர் ஆசிரியர்களையும் கொண்ட ஒரு நிறுவனம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. ஒரு வகையில் இது மிஷனரிமாருடைய திட்டத்துக்கு அப்பால் சென்றது. இங்கு வழங்கப்பட்ட கல்வி எந்த ஒரு மதச்சார்பும் இல்லாது இருந்தது. அதுமட்டுமல்லாது, படிப்பின் முடிவில் ஒரு அங்கீகாரமுடைய பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெறும் வாய்ப்பினை இது கொடுத்தது. பல யாழ்ப்பாணத்து இளைஞர்கள் லண்டன் B.A., B.Sc. பட்டங்களை இங்கு படித்துப் பெற்றனர்.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பாகத்தில் யாழ்ப்பாணத்தின் கல்வி வரலாற்றில் யாழ்ப்பாணக் கல்லூரி ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒரு பிள்ளை தொடக்கநிலை வகுப்பில் (Kindergarten) இருந்து (அக் காலத்தில் ‘அரிவரி’ வகுப்பு எனப்பட்டது) பல்கலைக்கழகப் பட்டம் பெறும் வரை ஒரே நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பினை இக் கல்லூரி வழங்கியது.
அப்படியாக முதல் வகுப்பில் இருந்து லண்டன் B.A. வகுப்பு வரை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்று B.A. பட்டம் பெற்ற ஒருவர் கே.ஜே. செல்வராஜன் என்பவர். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் இல்லாதபோதிலும் உயர் கல்வியைப் பெறும் வாய்ப்பு யாழ்ப்பாணத்தில் இருந்தது.
தாய்மொழிக் கல்வியும் மாற்றங்களும்
பிரித்தானியர் ஆட்சி 1948 இல் முற்றுப்பெற, இலங்கையின் உயர்கல்வி நிலையில் பெரு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இலவசக் கல்வியும் தாய்மொழிக் கல்வியும் வளர்ச்சியடைந்து உயர்கல்வித் துறையில் பெரு மாற்றங்களை உண்டு பண்ணின. இந்நிலையில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இருந்த சில தமிழ்ப் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் ஒன்றுகூடி தமிழருக்கென ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காகத் தமிழர் பல்கலைக்கழக இயக்கம் (Tamil University Movement) ஒன்றைத் தொடங்கினர். இந்த நிறுவனத்தை அவர்கள் திருகோணமலையில் நிறுவ நோக்கம் கொண்டிருந்த காரணத்தால் அதனை இங்கு கருத்திற்கொள்ள வேண்டிய தேவையில்லை.
1960 இல் முதல்முறையாகத் தாய்மொழியில் கற்ற மாணவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் இலங்கைப் பல்கலைக்கழகம் வெளிவாரிப் பட்டங்களைப் பெறுவதற்கு வசதிகளைத் தொடக்கியது. 1968 இல் அரசாங்கம் லண்டன் பல்கலைக்கழகத்தின் பரீட்சைகள் இலங்கையில் நடைபெறுவதைத் தடைசெய்தது. யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டதாரி வகுப்புகளும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டங்களுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகுப்புகளாக மாற்றப்பட்டன. இந்த நிலை 1974 வரை நீடித்தது.
யாழ்ப்பாணத்துக்கு ஒரு பல்கலைக்கழகம்
1950 களில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு பல்கலைக்கழகத்தைக் கொடுக்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருப்பது பற்றிய செய்திகள் பரவின. S.W.R.D. பண்டாரநாயக்க 1958 இல் இரு பிரபல பௌத்த பிரிவென நிறுவனங்களை (வித்யோதய மற்றும் வித்யாலங்கார) பல்கலைக்கழகங்களாக உயர்வு செய்ய எடுத்த நடவடிக்கைகள் இச் செய்திகளின் பின்புலத்தில் இருந்தன. இந்நேரத்தில் பண்டாரநாயக்க சில தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து, ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்குத் தான் எண்ணியிருப்பதாகக் கூறினார் என்பது ஒரு செய்தி.
இதே காலத்தில் உயர்கல்வியைச் சீரமைக்கும் நோக்குடன் அரசாங்கம் ஓர் ஆணைக்குழுவை நியமித்தது. இதன் தலைவராகக் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஜோசெப் நீடம் (Prof. Joseph Needham), அழைக்கப்பட்டிருந்தார். 1959 இல் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை கொடுக்கப்பட்டது (Sessional Paper XXIII, 1959). ஆனால் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மீண்டும் 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு பல்கலைக்கழகம் தேவை என்ற குரல் எழத் தொடங்கியது. இதன் பின்புலத்தில் இருந்தவை இரு முக்கிய நிகழ்ச்சிகள். பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குத் தகுதி பெறும் மாணவர் தொகை ஆண்டுதோறும் கூடிக்கொண்டு போக, அவர்களுக்குத் தேவையான பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு அரசிடம் எந்தவிதத் திட்டமும் இருக்கவில்லை. அப்பொழுது இருந்த பல்கலைக்கழகங்களில் போதிய இடங்கள் இருக்கவில்லை. இதே காலத்தில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய ‘தரப்படுத்தல்’ முறை யாழ்ப்பாணத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெற்ற மாணவர்களைப் பெரிதும் தாக்கியது.
மாணவர்களுக்கு இடமில்லாத பிரச்சினை 1974 இல் உச்ச கட்டத்தை அடைந்தது. அந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் கணிதவியல் கற்கத் தெரிவான 130 இற்குக் கிட்டிய மாணவர் குழுவினர் இடமில்லாத காரணத்தால் அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். அடுத்து நிகழ்ந்தவை யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு உடனடிக் காரணமாக இருந்ததால் அவற்றை விரிவாக இங்கு பதிவிடல் விரும்பத்தக்கது.
1974 இல் ஆட்சியில் இருந்த பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கம் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியதால், ஒரு புதிய பல்கலைக்கழக வளாகத்தை அமைக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. மாணவர்களோ அதன் நிலைப்பாட்டை ஏற்கத் தயாராக இருக்கவில்லை.
மாணவர் குழுவில் பெருந்தொகையான சிங்கள மாணவர்கள் இருந்தனர். இவர்களுள் சிலர் ஒன்றுகூடிச் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் ஏனைய மாணவர்களையும் அழைத்து, கொழும்பில் கூட்டங்கள் நடத்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். அப்பொழுது எல்லாப் பல்கலைக்கழகங்களும் தனியொரு பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக மாற்றப்பட்டு ஒரு துணைவேந்தரின் கீழ் இயங்கின. துணைவேந்தராக இருந்த எல்.எச். சுமணதாஸ மாணவர் வேண்டுகோளுக்கு ஆதரவு அளித்தபோதிலும் அரசாங்கம் மறுப்பைத் தெரிவித்தது.
மாணவர்கள் தங்கள் அழுத்தச் செயற்பாட்டைக் கைவிடாது, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட இரு முக்கிய இடதுசாரித் தலைவர்களைத் தம் பக்கம் ஈர்த்துப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். இந்த அரசியல்வாதிகள் நாட்டில் குறிப்பிடத்தக்க செல்வாக்குப் பெற்றிருந்த வாசுதேவ நாணயக்கார, சரத் முத்தெற்றுவேகம ஆகியோராவர் (Bernard Kingsley).
இருவரும் பிரதமர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக அரசாங்கம் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டது. இத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துக்குச் சார்பாக இருந்த யாழ்ப்பாணத்து அரசியல்வாதி ஒருவரும் உதவியிருக்கலாம் எனத் தோன்றுகிறது (இது ஒரு காலத்தில் அரச ஆவணங்கள் மூலம் வெளிப்படலாம்).
அதிக செலவில்லாது நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வாக அரசாங்கம் கண்ட தீர்வு இதுதான்; அதில் இரு பாகங்கள் இருந்தன. ஒன்று, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருந்த, Collegiate Department என்ற பெயரால் பட்டதாரி வகுப்புகளை நடத்திய பிரிவையும் அதற்குரிய கட்டிடங்கள், நூலகம் ஆகியவற்றையும் சுவீகரிப்பது. இரண்டு, பொன்னம்பலம் இராமநாதன் கட்டிய பரமேஸ்வராக் கல்லூரியின் கட்டிடங்களையும் சொத்துகளையும் அரசாங்கம் எடுத்து, அக் கல்லூரியை மூடுவது. இந்த இரண்டையும் இணைத்து இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகமாக யாழ்ப்பாண வளாகத்தை நிறுவச் சம்மதித்து, இடமில்லாது தவித்த மாணவர்கள் அனைவரையும் இவ் வளாகத்துக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்தது.
பரமேஸ்வராக் கல்லூரியை மூடி, அதன் சொத்துகளைப் புதிய வளாகத்துக்கு எடுப்பதில் அரசாங்கத்துக்குப் பிரச்சினை இருக்கவில்லை. இக் கல்லூரியை நிறுவிய போது, ஒரு காலத்தில் அது பல்கலைக்கழகமாக உயர்வு பெறவேண்டும் என இராமநாதன் விரும்பினார் எனப் பொதுவாக நம்பப்பட்டது (Vythilingam: 465). அத்துடன், இராமநாதனின் மருமகனும் கல்லூரியின் முன்னாள் அதிபருமான சு. நடேசன் இராமநாதனின் விருப்பைக் கல்வி அமைச்சர் பதி-உத்தீன் மஹ்மூட் அவர்களுக்குத் தெரிவித்திருந்தார் (Mahmud).
வளாகமும் பல்கலைக்கழகமும்
இப் பின்புலத்தில், கல்வி அமைச்சர் யாழ்ப்பாண வளாகத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை 1974 ஜுலை 15 இல் பிரகடனப்படுத்தினார். அதைத் தொடர்ந்து இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓகஸ்ட் முதலில் கலாநிதி க. கைலாசபதியை யாழ்ப்பாண வளாகத்தின் தலைவராக நியமித்ததுடன் வளாகம் நிறுவப்பட்டது. பின்னர் 1979 ஜனவரி 01 இல் பேராசிரியர் சு. வித்தியானந்தனை முதலாவது துணைவேந்தராகக் கொண்டு யாழ்ப்பாண வளாகம் ஒரு தனிப் பல்கலைக்கழகமாக மாறியது.
தகவல்தேட்ட நூல்கள், கட்டுரைகள்
- Bernard, Kingsley. ‘Jaffna University marks 50 years of resilience, excellence’, Daily Mirror, 27/09/2024, Colombo.
- Chelliah, J.V., A Century of English Education, Tellippalai 1922.
- Rutnam, J.T., Sir Ponnambalam Arunachalam: Scholar and Statesman, Second Ed.,Colombo 1988.
- Uyangoda, Jayadeva, ‘Re-inventing the Idea of University: Some Reflections and Proposals’, Groundviews.org, 23/09/2023.
- Vythilingam, M., The Life of Sir Ponnambalam Ramanathan, Vol. II, 1977.
- வேலுப்பிள்ளை, சி.டி., அமெரிக்க மிஷன் சரித்திரம், இரண்டாம் பதிப்பு, வட்டுக்கோட்டை 1984.
Periodicals
- Missionary Herald, Boston (MH)
- Panoplist and Missionary Magazine (PMM)