நூலியல் - நூலகவியல் துறைகளில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பணி
Arts
14 நிமிட வாசிப்பு

நூலியல் – நூலகவியல் துறைகளில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பணி

November 7, 2024 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகவியல் துறையின் வளர்ச்சிப் போக்கில் முக்கியமானதொரு காலகட்டமாக எழுபதுகளின் நடுப்பகுதி கருதப்படுகின்றது. அக்காலகட்டம் வரையில் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ளூராட்சி சேவையில் நூலக சேவகர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு கல்வித்தரம் அக்கறையுடன் எதிர்பார்க்கப்படவில்லை. பெருமளவில் கிராமசபை, நகரசபை சிற்றூழியர்களாக இருந்தவர்கள் பதவி உயர்வு கண்டு அவர்களது நிரந்தரப் பணிக்கு மேலதிகமாக தத்தமது கிராம நூலகங்களை பராமரிக்கும் நூலக சேவகர்களாக நியமனம் பெற்றார்கள். கிராமசபை நிர்வாக ஊழியர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் நூலகத்தையும் மேற்பார்வை செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். உயர்தரப் பாடசாலைகள் தவிர்ந்த பெருவாரியான தமிழ்ப் பாடசாலைகளில் நூலகச் சிந்தனை அக்கால கட்டங்களில் முகிழ்த்திருக்கவில்லை. நூலகரின் கடமையை நூலகம் பற்றிய எவ்வித அறிவுமற்ற ஆசிரியர்களும், வசதிக் கட்டணத்தில் நியமிக்கப்படும் பழைய மாணவர்களுமே பூர்த்திசெய்து வந்திருந்தார்கள். அவர்களது முக்கிய நோக்கம் நூலகத்திலுள்ள நூல்களைப் பராமரித்துப் பாதுகாப்பதாகவே இருந்தது.

இலங்கை உள்ளூராட்சி சேவைகள் நூலகர் தரம் 3 என்ற பதவியை உருவாக்கிய பின்னர் தான் 1976 களுக்குப் பின்னர் படிப்படியாக உள்ளூராட்சி சேவைகளுக்குட்பட்ட நூலகர் பதவிகளுக்கு நூலகவியல் கல்வி கற்றவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். பாடசாலைகளிலும், பாடத்திட்டங்களின் மாற்றங்களால் பாடநூல்களுக்கு அப்பால் பரந்த வாசிப்பிற்கான அறிவுத்தேடலுக்கு மாணவர்கள் படிப்படியாக ஊக்கமளிக்கப்பட்டார்கள். இத்தகைய மாற்றங்கள் ஈழத்தின் நூலகவியல் துறைக்கு சாதகமானவையாக அமைந்தன.

எழுபதுகளின் நடுப்பகுதிகள் வரையில் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல் கல்விச்சேவை தமிழ்ப் பிரதேசங்களில் பாரிய விஸ்தரிப்பு எதனையும் மேற்கொள்ள முயற்சிக்கவில்லை. 70 களின் நடுப்பகுதியில் உள்ளூராட்சி சேவையின் ஆட்சேர்ப்பில் நூலகக்கல்வி பெற்றவர்களுக்குத் தான் முன்னுரிமை கிட்டியது. அதன் பின்னர் நூலகக்கல்வியில் இளைஞர் யுவதிகளிடையே படிப்படியாக ஆர்வம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் பாரம்பரியக் கல்வியமைப்பில் ஊறியிருந்த இளைஞர்கள் இத்துறையில் படிப்படியாக ஈர்க்கப்பட்டதால் ஆண்டுதோறும் இலங்கை நூலகச் சங்கத்தின் முதலாம் இரண்டாம் வகுப்புகளிற்கான பயிற்சிநெறிகள் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் நூலகரான திரு கா.மாணிக்கவாசகர் இலங்கை நூலகச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவிருந்து இந்தப் பயிற்சிநெறியை சங்கத்தின் சார்பில் நடத்திவந்தார். கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் விரிவுரையாளர்கள் வந்து இந்த வகுப்புகளை நடத்தினார்கள். வடக்கில் மட்டுமல்லாது கிழக்கிலிருந்தும் நூலகத்துறையில் ஆர்வம் மிக்க மாணவர்கள் யாழ்ப்பாணம் வந்து நூலகக் கல்வியைக் கற்றார்கள். எழுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து 80களின் ஆரம்பம் வரை இந்த வளர்ச்சி மிக ஆரோக்கியமாக இருந்தது.

ஆரோக்கியமான வளர்ச்சி கண்ட நூலகவியல்துறையின் போக்கில் சடுதியான பாய்ச்சல் 1981 இல் யாழ்ப்பாண நூலகம் எரியுண்டதையடுத்து ஏற்பட்டது. பொதுப்படையாக அரசியல்ரீதியாக ஈழத்தமிழர்களின் சிந்தனைப்போக்கில் இதுவொரு பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், புத்திஜீவிகளிடம் அறிவியல் ரீதியாக ஆழமானதொரு அபாய அறிவிப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாண நூலகம் மாத்திரமல்லாது, ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தகசாலை என்பனவும் அன்றையதினம் அரசின் திட்டமிடலின் பிரகாரம் கைக்கூலிகளால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. தமிழரின் அறிவூற்றுக்களின் மீது இனவாதம் கைவைத்த அந்தச் செயலானது அதுவரை ஈழப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிப் பார்வையாளர்களாகவிருந்த பல புத்திஜீவிகளை போராட்டப் பாதையை நோக்கித் தள்ளியது. இது வெறும் நூலக எரிப்பு என்ற கருத்தியலிலிருந்து விலகி மிக ஆழமாகத் தமிழரிடம் வேரூன்றியிருந்த கல்விப் பாரம்பரியத்தை அழிக்கும் திட்டமிட்ட முயற்சி என்ற கருத்து மேலோங்கியது.

யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம், மானிப்பாய் மண்ணிலிருந்து தனது இளமைக் காலத்திலேயே வேரோடு பெயர்ந்து கொழும்புக் கறுவாக்காட்டுச் சமூகத்துடன் ஒன்றியிருந்த ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்ததுடன் தன்னுடையதும், நூலக எரிப்பில் அதிர்ந்திருந்த மற்றைய தென்னிலங்கை புத்திஜீவிகளினதும் நூல்களைக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் ஒரு நூலகத்தைக் கட்டியெழுப்பி யாழ்ப்பாண சமூகத்துக்கு அதை மனமுவந்து வழங்க வைத்தது. மேலும், யாழ்ப்பாணப் பொது நூலகம் 1984 இல் மீண்டும் இயங்கத் தொடங்கிய போது யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் மாத்திரம் அங்கத்தவரைத் தேடாது முழு மாவட்டத்திற்கும் தனது அங்கத்துவத்தை விரிவாக்கியது.

அயோத்தி நூலக சேவைகள்

தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு அக்கால கட்டத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பு எதுவும் தமிழர் தாயக மண்ணில் இருந்திருக்கவில்லை. இந்நிலை பற்றி ஈழத்தின் தமிழ் நூலகத்துறையின் முன்னோடிகளாக அந்நாட்களில் இருந்த கலாநிதி வே.இ. பாக்கியநாதன், எஸ்.எம். கமால்தீன், இ. முருகவேள் போன்றோருடன் இக்கட்டுரையாளர் நீண்டகாலமாக கலந்துரையாடித் திட்டமிட்டு வந்திருந்தார். இதன் விளைவாக அறிஞர்களின் ஆசியுடன் 1985 இல் அயோத்தி நூலகசேவைகள் என்ற நிறுவனம் யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டு நிறுவன நூலகராகவிருந்த என். செல்வராஜா அவர்களால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதற்கும், நூலகங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை நிறுவனரீதியில் வழங்குவதுமாகும்.

இத்திட்டத்திற்கு அடிப்படையாக ‘நூலகவியல்’ என்ற காலாண்டு சஞ்சிகை செப்டெம்பர் 1985 இல் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கும் அனைத்து நூலகங்களுக்கும், தமிழ் நூலகர்களுக்கும் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டன. யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனம், யாழ் மாவட்ட உள்ளூராட்சி சேவைகள் அலுவலகம், யாழ் மாவட்ட கல்வி நிறுவனங்கள் என்பன ஆர்வத்துடன் இவற்றை விநியோகிக்க ஒழுங்கு செய்திருந்தன. தமிழ் மூலம் நூலகவியல் கல்வியைக் கற்கும் மாணவர்களுக்கும், சுயம்புவாக நூலகத்துறையில் ஈடுபட்டுவந்த பல தராதரப்பத்திரமற்ற நூலக சேவகர்களுக்கும் தமது துறைசார் அறிவை வளர்த்துக்கொள்ள நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

நூலகவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் திரு சி. முருகவேள், கலாநிதி வே.இ. பாக்கியநாதன், கலாநிதி இ. பாலசுந்தரம், திருமதி ரூபா நடராஜா, திருமதி ரோ. பரராஜசிங்கம், திரு எஸ்.எம். கமால்தீன், திரு செ. கிருஷ்ணராஜா ஆகியோர் பணியாற்றினார்கள். 1991 வரை தடங்கலின்றி வெளிவந்த நூலகவியல் சஞ்சிகை, அதன் ஆசிரியர் புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றதோடு வெளிவராது நின்றுபோயிற்று. தபால் போக்குவரத்து மற்றும் போர்ச்சூழல் காரணமாக நூலகவியல் மீண்டும் வெளிவருவது நீண்டகாலம் தடைப்பட்டிருந்தது.

நூலகவியல் சஞ்சிகை வெளியீட்டுப் பணியையும் இக்காலகட்டத்தில் மேற்கொண்டு வடக்கு, கிழக்கு, மலையகத்திலிருந்து நூலகவியல்துறையிலும், நூலியல் துறையிலும் அக்கறை கொண்ட பலரை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தது. இதனால் அயோத்தி நூலகசேவை, போர்க்காலச் சூழலிலும் சக்திமிக்கதொரு நூலக சேவை அமைப்பாகத் தேசிய ரீதியில் வளர்ச்சிகண்டது.

அயோத்தி நூலகசேவை அக்காலகட்டப் போர்ச்சூழலில் மிக முக்கிய சமூகத் தேவையாகவிருந்த முதல் உதவிச் சிகிச்சைக் கைநூல் ஒன்றுடன் தன் வெளியீட்டுப் பணியை 1985 இல் ஆரம்பித்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூக மருத்துவபீட விரிவுரையாளராகவிருந்த வைத்திய கலாநிதி ந. சிவராஜா அவர்கள் எழுதிய ‘முதல் உதவி’ என்ற நூலே அயோத்தி நூலக சேவையினரின் முதல் வெளியீடாயிற்று. காலக்கிரமத்தில் நூலகத்துறை மற்றும் நூலியல் துறைகளுக்கான வெளியீட்டுப் பணிகளில் அயோத்தி நூலக சேவைகள் நிறுவனம் ஈடுபடலாயிற்று. நூலகவியல் துறையின் அதன் முதலாவது நூல்வெளியீடாக ‘நூற்பகுப்பாக்கம்: நூலகர்களுக்கான கைநூல்’ அமைந்தது. நூலகவியல்துறை விரிவுரையாளராகவிருந்த கலாநிதி வே.இ. பாக்கியநாதன் அவர்களால் எழுதப்பட்டு ஜூலை 1986 இல் இந்நூல் வெளியாயிற்று. நூலகங்களில் நூல்களைப் பகுப்பாக்கம் செய்வதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் டூவி தசாம்சப் பகுப்பு முறையின் (Dewey Decimal Classification) 19 ஆம் பதிப்பின் சுருக்கப் பிரிவினை இந்நூல் தமிழில் கொண்டிருந்தது. டூவி தசாம்சப் பகுப்பு முறையில் பகுப்பாய்வு செய்வதற்குப் பயிற்சி பெற்றிராத தமிழ் நூலக ஊழியர்களுக்கு ஏற்ற வகையில் எளிய உதாரண விளக்கங்களும் இந்நூலில் காணப்பட்டிருந்தது. இந்நூலின் முக்கியத்துவம் கருதி இரண்டாவது பதிப்பு ஆகஸ்ட் 1989 இல் வெளியிடப்பட்டது. இடையில் நூலாசிரியரால் இந்தியாவிலும் காந்தளகம் வெளியீட்டகத்தின் வாயிலாக இந்நூல் மீள்பிரசுரம் கண்டிருந்தது.

‘கல்வி நிறுவன நூலகங்கள்’ என்ற நூல் நூலகத்துறையின் மூன்றாவது வெளியீடாக 1987 இல் மலர்ந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தைச் சேர்ந்த திருமதி விமலாம்பிகை பாலசுந்தரம் அவர்கள் எழுதிய இந்நூலில் ஆரம்பப் பாடசாலைகள், கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்களான தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு ஆய்வகங்கள் ஆகியவற்றில் இயங்கும் நூலகங்களின் நூற்சேகரிப்பு, நூலகங்களின் பயன்பாடு, நூலக சேவைப் பகுதிகள் முதலியன இந்நூலில் தெளிவாக விவரிக்கப்பட்டிருந்தன. இந்நிறுவனங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள், அவற்றை நிவர்த்தி செய்ய நூலகர் கையாளக்கூடிய வழிமுறைகள் என்பனவும் அதில் ஆராயப்பட்டிருந்தன.

1989 இல் விமலாம்பிகை பாலசுந்தரம் தொகுத்த மற்றொரு நூல் ‘கலைச்சொற்றொகுதி: நூலகமும் தகவல் விஞ்ஞானமும்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அயோத்தி வெளியீட்டின் 3 ஆவது நூலாக அமைந்த இது நூலக, தகவல் விஞ்ஞானத்துறையில் பயன்படுத்தப்படும் சுமார் 1500 ஆங்கில கலைச்சொற்களுக்குரிய தமிழ்ப் பதங்களைக் கொண்டிருந்தன. இலங்கையில் இத்துறையில் தமிழில் வெளிவந்துள்ள முதலாவது கலைச்சொற்றொகுதி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1989 இலேயே ‘கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும்’ என்ற பெயரில் நான்காவது நூல் அயோத்தி நூலக சேவைகள் நிறுவனத்தின் இயக்குநரான என். செல்வராஜா அவர்களினால் எழுதி வெளியிடப்பட்டது. இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களை மையப்படுத்தி கிராம நூலக இயக்கம், சிறுவர் நூலகங்கள், பாடசாலை நூலகங்கள், பாலர்களுக்கான  நூல்களைக் கிராமமட்டத்தில் தயாரித்தல், சனசமூக நிலையங்களின் நூலக நடவடிக்கைகள், நூல் கொள்வனவு போன்ற விடயங்களை விளக்கும் கட்டுரைகளைக் கொண்டதே இந்நூலாகும்.

என். செல்வராஜாவின் மற்றொரு நூலான ‘ஆரம்ப நூலகர் கைநூல்’, செப்டெம்பர் 1991 இல் கொழும்பிலிருந்து வெளியிடப்பட்டிருந்தது. சிறு நூலகமொன்றின் செயற்பாடுகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இந்நூலில் நூலகத்துறையைத் தேர்ந்தெடுக்கும் ஒருவருக்கு நூலகமொன்றின் அன்றாட நடவடிக்கைகள், மற்றும் நிர்வாக அறிவுரைகள் என்பன சுருக்கமாக வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் உதவி இயக்குநராகவிருந்த ஜனாப் எஸ்.எம். கமால்தீன் அவர்களது நூலகவியல்துறை சார்ந்த கட்டுரைகளைத் தாங்கிய ‘நூலும் நூலகமும்’ என்ற நூல் செப்டெம்பர் 1992 இல் கொழும்பில் வெளியிடப்பட்டது.

‘யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு’ என்ற நூல் என். செல்வராஜா அவர்களால் ஐக்கிய இராச்சியத்திலிருந்து அயோத்தி நூலக சேவைகளின் வாயிலாக ஜூன் 2001 இல் வெளியிடப்பட்டிருந்தது. இலண்டன், வாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட இந்நூல் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு புகலிடத்திலிருந்து வெளியிட்ட முதலாவது நூலகத்துறை சார்ந்த நூலாக அமைகின்றது. 1981 இல் இலங்கை அரசபடையினரால் எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றைக் கூறக்கூடிய தமிழ் ஆங்கிலக் கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகள், சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகள், நூல்கள், இணையத்தளங்கள் போன்றவற்றில் வெளியான தகவல்களையும், துண்டுப்பிரசுரங்கள், சிறு நூல்கள் போன்றவற்றையும் தொகுத்து ஆண்டுவாரியாக ஒழுங்கு செய்து, யாழ். நூலகத்துடன் தொடர்பு கொண்டவர்களின் கட்டுரைகளுடன் சேர்த்து படங்களுடன் இந்த தமிழ் – ஆங்கில இருமொழி நூல் உருவாக்கப்பட்டது. பின்னர் 2023 இல் மேலும் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களுடன் தமிழ் – ஆங்கில மொழிகளில் தனித்தனியாக மீள்பதிப்புச் செய்யப்பட்டது.

அயோத்தி நூலக சேவையின் மிக முக்கியமான நூலியல் பங்களிப்பாக அமைவது ‘நூல்தேட்டம்’ என்ற பாரிய தொகுப்பு முயற்சியாகும். தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான குறிப்புரையுடனானதொரு நூல் விபரப்பட்டியல் நூல்தேட்டமாகும். ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு டூவி தசாம்சப் பகுப்பு முறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாடவாரியாகப் பதியப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதிவும் தொடரிலக்கமிடப்பட்டுள்ளது. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பன நூலின் சிறப்பம்சமாகக் காணப்படுகின்றது. நூல்தேட்டம் முதலாவது தொகுதி ஜூன் 2002 இலும், 17 ஆவது தொகுதி பெப்ரவரி 2024 இலும் வெளிவந்து ஈழத்தமிழர்களின் 17,000 நூல்களைக் குறிப்புரையுடன் பதிவு செய்துள்ளது. தொடர்ந்தும் இத்தொகுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஈழத்துப் பதிப்புலக வரலாற்றில் ஈழத்தமிழர்களின் வெளியீட்டு முயற்சிகளை பரந்த அளவில் குறிப்புரையுடன் வகுப்புவாரியாகப் பதிவுசெய்து வைக்கும் முதல் முயற்சி இதுவாகும்.

அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட 1985 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வந்த நூலகவியல், நூலியல் முயற்சிகளில் முக்கியமானதாகக் கருதப்படும் மற்றொரு அம்சம் இவ்வமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட கருத்தரங்குகளாகும். யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தில் நூலகர் ஒன்றுகூடல்களைத் தொடர்ந்து நடத்தி, தமிழ்ப் பிரதேச நூலகர்களையும், நூலகப் பொறுப்பாளர்களையும், அப்பிரதேசங்களில் நூலகங்களைத் திட்டமிட்டு வழிநடத்தும் நிர்வாகிகளையும் ஒரே கூரையின் கீழ் சந்திக்கவைத்து, எப்போதுமே கேட்கப்படாதிருந்த நூலகர்களின் குரலைக் உரத்துக் கேட்க வைத்த பெருமை இவ்வமைப்பையே சாரும். அன்றைய காலகட்டத்தில் ஈழநாடு நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தின் வழியாகவும், செய்திகளின் வழியாகவும் இம்முயற்சிக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளின் பாதிப்பினால் பின்னாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஓரிரு நூலகவியல் கருத்தரங்குகளை பின்னாளில் ஏற்பாடு செய்ய நேர்ந்தது.

யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்புடன் 300 இற்கும் அதிகமான சனசமூக நிலையங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கி கிராமிய மட்டத்தில் நூலக – வாசிகசாலை சேவையினை ஆற்றிவந்தன. இச் சமூக அமைப்புகளை பாரிய அளவில் ஒருங்கிணைத்து சனசமூக நிலைய நூலகர்களுக்கான 6 நாள் பயிற்சியும் சான்றிதழ் வழங்கலும், ஐப்பசி 1989 இல் அயோத்தி நூலகசேவை நிறுவனத்தால், சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன், யாழ்ப்பாணத்தில் கொட்டடிப் பகுதியில் அமைந்திருந்த சம்மேளனத்தின் தலைமை அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

தோட்டப் பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகத்தின் அழைப்பின் பேரில் (Coordinating Secretariat for Plantation Areas, Kandy) கண்டி புஷ்பதான மாவத்தையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில், 1990 ஏப்ரல் 6 – 8 ஆம் திகதிகளில் மலையக நூலக அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கொன்று அயோத்தி நூலக சேவைகளினால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இலங்கையின் பிரபல நூலகர்களை இக்கருத்தரங்கில் ஒரே மேடையில் இடம்பெறச் செய்தமை இந்நிகழ்வின் முக்கிய வெற்றியாகும்.

பல்வேறு மாநகர சபைகளின் வேண்டுகோளின் பேரில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினர் பிரதேச ரீதியில் உள்ளூராட்சி சேவை நூலகங்களுக்கான நூலகவியல் கருத்தரங்குகளையும் மேற்கொண்டிருந்தனர். சண்டிலிப்பாய், உடுவில் உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள கிராமிய – நகர நூலகர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு ஜூன் 1986 இல் மானிப்பாய் நூலகத்தில் இடம்பெற்றது. திருகோணமலை நகரசபையின் ஆதரவுடன் திருகோணமலை மாவட்ட நூலகர்களுக்கான கருத்தரங்கும் இருநாள் பயிற்சியும் நவம்பர் 1989 இல் இடம்பெற்றது.

சமூக அமைப்புகளின் நிதிவளத்தை அதிகரிக்கவும், நூலக விழிப்புணர்வினை அப்பிரதேச மக்களிடையே ஏற்படுத்தவும் அயோத்தி நூலக சேவை அமைப்பு தோள் கொடுத்து வந்துள்ளது; நவாலி ‘வை.எம்.சீ.ஏ’ உடன் இணைந்து நூலக வாரத்தை ஏற்பாடு செய்து கிராம விழிப்புணர்வை ஊட்டியதுடன் நவாலியில் ‘வை.எம்.சீ.ஏ’ நூலகத்துக்கு நூல்களும் நிதியும் திரட்டியது.

புங்குடுதீவு சர்வோதய அமைப்பினரின் கிராம நூலகத் திட்டங்களுக்கு ஆலோசனையும் பயிற்சிகளும் வழங்குவதில் அயோத்தி நூலக சேவை இன்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. ஸ்கொட்லாந்தின் Books Abroad நிறுவனத்தின் வாயிலாக தாயகத்தின் நூலக அபிவிருத்திக்கான நூல் உதவித் திட்டங்களை 2004 தொடக்கம் முன்னெடுத்து வரும் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் நூலகவியல் மற்றும் நூலியல் பணிகள், போர்க்காலச் சூழலில், நூலகத்துறையின் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிராத ஒரு வேளையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.


ஒலிவடிவில் கேட்க

2184 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (9)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)