அம்பாறை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் பொத்துவில் நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 18 கி.மீ தூரத்தில் பானமை என்னும் ஊர் காணப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வாழும் கடைசி ஊர் எனும் பெருமை பெற்ற ஊர் பானமையாகும்.
வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவில் ஆரம்பமாகும் கிழக்குக் கரையோர கடற்பாதை கொக்கிளாய், புல்மோட்டை, திருகோணமலை, மூதூர், வாகரை, மட்டக்களப்பு, கல்முனை, திருக்கோயில், பொத்துவில் ஊடாக 380 கி.மீ தூரத்தில் உள்ள பானமையுடன் முடிவடைகிறது. பானமைக்கு அப்பால் அடர்ந்த காடு காணப்படுகிறது. இக்காட்டின் ஊடாக தெற்கு நோக்கி போடப்பட்டுள்ள கிறவல் மண் பாதை சன்னாசி மலை, சலவைக் களப்பு, உகந்தை, குமன சரணாலய வாசல் ஊடாக கும்புக்கன் ஆறு வரை மேலும் 36 கி.மீ தூரம் வரை செல்கிறது. பானமையில் இருந்து பறவைகள் மற்றும் வன விலங்குகள் சரணாலயம் தொடங்குகிறது.
பானமையில் இருந்து செல்லும் இக் கிறவல் மண் பாதையில் 10 கி.மீ தூரத்தில் சலவைக்களப்பு அமைந்துள்ளது. சலவைக் களப்பில் இருந்து மேற்குப் பக்கத்தில் 4 கி.மீ தூரத்தில் குடும்பி மலை அமைந்துள்ளது. சலவைக் களப்பின் இருந்து மேற்குப் பக்கம் பார்க்கும் போது ஓர் மலையையும், அதன்மீது லிங்கம் போன்ற ஓர் வடிவத்தையும் காணலாம். இம்மலையே குடும்பி மலையாகும். இது சிங்கள மொழியில் குடும்பிகல என அழைக்கப்படுகிறது.
பொ.ஆ. 1 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இலங்கையில் உன்னரசுகிரி எனும் இராச்சியம் அமைந்திருந்தமை பற்றி மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இந்த இராச்சியத்தின் தலைநகராக உன்னரசுகிரி எனும் இடம் விளங்கியது. தலைநகரின் பெயரிலேயே இராச்சியமும் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலைநகர் அமைந்திருந்த இடம் குடும்பிமலையே என அறிஞர் சி. கணபதிப்பிள்ளை கூறியுள்ளார். இருப்பினும் மட்டக்களப்பு மான்மியத்தின்படி உன்னரசுகிரியின் தலைநகர் அமைந்திருந்த இடம் கும்புக்கன் ஓயாவிற்கும், மாணிக்க கங்கைக்கும் இடையில் உள்ள ஒரு மலையே எனத் தெரிகிறது. குறிப்பிட்ட இந்த இரு ஆறுகளுக்கும் இடையில் பல மலைகள் அமைந்திருந்தாலும், பாண்டியருடன் தொடர்புடைய மீன் சின்னம் பொறிக்கப்பட்ட 14 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படும் ஒரு மலை காணப்படுகிறது. அதுதான் கொட்டதாமுஹெல எனும் மலையாகும். எனவே கொட்டதாமுஹெல மலையே உன்னரசுகிரியின் தலைநகராக இருந்திருக்க வேண்டும். எனினும் இந்த இராச்சியத்தின் முக்கிய ஓர் இடமாக குடும்பிமலை விளங்கியிருக்கலாம்.
7000 ஆண்டுகளுக்கு முன் திராவிட வேந்தன் இராவணனின் ஆட்சி நிலவிய இலங்காபுரியின் தலைநகரம் தென்கிழக்கிலங்கையில் அமைந்திருந்ததாக சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இராவணனின் தலைநகரையே உன்னரசுகிரி இராச்சியத்தின் தலைநகராகவும் கிழக்கிலங்கை மன்னர்கள் கொண்டிருந்தனர் எனவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
குடும்பிமலையின் தென்மேற்குப் பக்கம் 4 கி.மீ தூரத்தில் நாகபர்வத மலை எனும் பம்பரகஸ்தலாவ மலை அமைந்துள்ளது. பாதை வழியாக இம்மலைக்குச் செல்வதானால் சுமார் 14 கி.மீ தூரம் பயணம் செய்தே இம்மலையை அடைய வேண்டும். இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டொன்று இம்மலையில் காணப்படுகிறது. எனவே நாகபர்வதமலை மலைப்பகுதியே இராவணனின் தலைநகராக இருந்திருக்க வேண்டும் எனவும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும் இராவணனின் தலைநகரம் திரிகூட கிரி எனும் திருக்கோணமலையே என பல அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் இராவணனின் இராச்சியத்தின் முக்கிய இடங்களாக குடும்பிமலை, நாகபர்வதமலை ஆகியவை விளங்கியிருக்கலாம். இராவணன் சிறந்த சிவ பக்தனாவான். எனவே இவன் தனது இராச்சியத்தின் முக்கிய இடங்களில் சிவ வழிபாட்டை மேற்கொண்டிருப்பான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் குடும்பி மலையில் ஓர் சிவலிங்கக் கோயில் இருந்ததாக பானமைப் பகுதியில் உள்ள முதியவர்கள் கூறுகின்றனர். இப்பகுதியிலிருந்தே ஓர் புராதன விநாயகர் சிலையும் கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் பண்டைய காலத்தில் சிவ, நாக வழிபாடுகள் குடும்பி மலையில் காணப்பட்டிருக்கலாம் என்பதற்கு பிராமிக் கல்வெட்டுகள் சான்றுகளாக உள்ளன.
குடும்பி மலைப் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இடிபாடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. இவ் இடிபாடுகளுக்கிடையே புராதன வழிபாட்டுத்தல இடிபாடுகளும் காணப்படுகின்றன. பொது ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலும், பிற்பட்ட காலத்திலும், 1 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டு வரையான காலத்திலும் இங்கு சிவவழிபாடு செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குடும்பிமலையில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் தமிழ் மொழிக்குரிய பிராமிச் சொற்களும், சிவன் சம்பந்தமான பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ‘நதிக’ என்ற சொல் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்றில் நந்தியின் பாதமும் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் உள்ள குறியீடாக நந்தியின் பாதம் காணப்படுவது நந்திக்கும், நதிகவுக்கும் உள்ள தொடர்பினைக் காட்டுவதாக பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நந்தியின் பாதமும், நதிக எனும் பெயரும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு
அத்துடன் இங்குள்ள மலைக் குகைகளில் ஒன்றில் ஆவுடையார் அற்ற மிகப் பழமை வாய்ந்த லிங்கம் ஒன்று காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு சிவலிங்கத்தின் ஒரு பாகமான ஆவுடையார் போன்ற கல் ஒன்றும் காணப்படுகிறது. இங்கு அமைந்துள்ள உயரமான மலையான ‘பெலும் கல’ எனும் மலையின் உச்சியில் சிவலிங்கத்தின் வடிவில் ஓர் செங்கல் தூபி காணப்படுகிறது. இது சிலிண்டர் வடிவமான பெளத்த தூபி எனக் கூறப்படுகிறது. இவ்வடிவத்தில் இலங்கையில் வேறு தூபிகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 10 அடி உயரமும் 15 அடி விட்டமும் கொண்ட இத் தூபி சதுர வடிவமுடைய மேடை மீது அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் மேலும் ஒரு சதுரமேடையில் ஓர் சிறிய தூபியும் காணப்படுகிறது. இவை தவிர மேலும் இரு கட்டிடங்கள் இருந்தமைக்கான எச்சங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இங்கு சிவ லிங்க வடிவில் உள்ள தூபி இருக்கும் இடத்தில் தான் இராவணன் காலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிவாலயம் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதே காலப் பகுதியில் இராவணனால் உகந்தை மலையில் உகந்தகிரி சிவாலயமும் அமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மான்மியத்திலும் உகந்தைகிரியில் இராவணன் சிவாலயம் அமைத்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் குபேரன் முருக வழிபாட்டையும், இராவணன் சிவ வழிபாட்டையும் பேணி வந்ததோடு ஆலயங்களையும் அமைத்ததாக ‘மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பாக நோக்கத்தக்கது. இராவணனின் பின்பு பாண்டிய குலச் சிற்றரசர்களும் ஆட்சி செய்த இராஜதானியான குடும்பி மலையில் பிற்காலத்தில் பெளத்த குருமார்கள் வாழ்ந்துள்ளனர். அப்போது இம்மலை மீது பெளத்த தூபிகளும், வழிபாட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.
குடும்பிமலையில் இந்து தெய்வ வழிபாடு பற்றிய கல்வெட்டுகள்
குடும்பிமலையில் மொத்தமாக 105 இயற்கையான மலைக் குகைகள் காணப்படுகின்றன. சில குகைகளில் மயில், நாகம் போன்றவற்றின் சித்திரங்களும் காணப்படுகின்றன. மலை அடிவாரத்தில் செங்கற்கள், கற் தூண்கள் போன்ற புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன. இம்மலைப் பகுதியில் உள்ள குகைகள் சிலவற்றில் பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 17 கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. இவற்றில் 5 ‘இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகள் – பகுதி 1’ எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 498 ஆம் மற்றும் 500 ஆம் இலக்க கல்வெட்டுகள் சிவ மற்றும் நாகர் தொடர்பானவையாகும். குடும்பிமலையில் மேலும் 12 பிராமிக் கல்வெட்டுகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் ‘வேல’ எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. 500 ஆம் இலக்கக் கல்வெட்டு நாகர் தொடர்பானதாகும். இதில் நாக வழிபாட்டை மேற்கொண்டவர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இக் கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:
“கமிக நாக புத கமிக திச கரபிட இம லென சேனபதி ஜூவய சகச தினே”
இதன் பொருள் ஆங்கிலத்தில் “This cave which the village councilor Tissa, son of village councilor Naga, caused to be made, the general Jhuvaya gave to the sangha” என்பதாகும். இது தமிழில் “கிராம அதிகாரி நாகனின் மகனான கிராம அதிகாரி தீசனின் குகை, படைத்தலைவன் ஜுவாய என்பவனால் அமைக்கப்பட்டு சங்கத்தார்க்கு வழங்கப்பட்டது.” எனப் பொருள்படும். இக் கல்வெட்டின் படி நாக வழிபாடு செய்த கிராம அதிகாரி ஒருவன் குடும்பிமலைப் பகுதியில் வாழ்ந்துள்ளான் என்பது தெரிகிறது.