மழைக் காலமும் கால்நடை வளர்ப்பும்
Arts
10 நிமிட வாசிப்பு

மழைக் காலமும் கால்நடை வளர்ப்பும்

November 23, 2024 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

சில வருடங்களுக்கு முன் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அதிகளவில் பெய்த மழையினால் ஏற்பட்ட குளிருடன் கூடிய காலநிலையில் சிக்கி ஏராளமான கால்நடைகள் இறந்திருந்தன. இந்த நிலையை குளிர் அழுத்தம்/ அயர்ச்சி (Cold Stress) என்பார்கள். அன்றைய நாட்களில் சூழல் வெப்பநிலை 16 பாகை செல்சியஸ் வரை குறைந்திருந்தது. அந்த வருடம் வடக்கின் மேற்படி மாவட்டங்களில் வருடம் முழுவதும் பெரிதாக மழை கிடைத்திருக்கவில்லை என்பதனால் ஒரு வறட்சியான காலநிலையே நிலவியிருந்தது. இதனால் மாடுகள் உண்ணத்தக்க மேய்ச்சல் புற்களும் மிகக் குறைவாகவே கிடைத்திருந்தது. சரியான மேய்ச்சலின்மையால் மாடுகள் மெலிந்திருந்தன. குறிப்பாக அவற்றின் தோலின் கீழான கொழுப்புப் படை முற்று முழுதாக நீங்கிய நிலையிலேயே இருந்தது. குளிர் காலத்தில் இந்த கொழுப்புப் படையே கால்நடைகளின் கவசம். கொழுப்புப் படை குறைந்த நிலையில், ஏற்பட்ட அசாதாரண வெப்பநிலை வீழ்ச்சி பல கால்நடைகளின் இறப்புக்குக் காரணமாக அமைந்துவிட்டது. திறந்த வெளியில் வைத்திருந்த பல கறவை மாடுகள் குளிர் தாங்காமல் இறந்திருந்தன; குறிப்பாக இளம் கால்நடைகள். இந்தக் கட்டுரை மழைக் காலத்தின் போதான கறவை மாடு வளர்ப்பின் முகாமைத்துவ முறைகளை ஆராய்கிறது.

மழைக்காலம், கால்நடை வளர்ப்புக்குச் சவாலான காலமே. இக் காலம் பல உடல் அசௌகரியங்களையும் நோய் நிலைகளையும் உணவுப் பற்றாக்குறையையும் ஏற்படுத்த வல்லது. நேரடியாக நனைவதால் காய்ச்சல், சுவாச மற்றும் உணவுக் கால்வாய்த் தொகுதி தொற்றுகள் உண்டாவதுடன் கால் குளம்புகள் அழுகும் நிலையையும் ஏற்படும். அத்துடன் அதீத குளிர், வெள்ளத்தில் மூழ்குதல், தண்ணீர் நிரம்பிய கிணறு மற்றும் பள்ளங்களில் விழுதல், வழுவழுப்பான தரையில் சறுக்கி விழுந்து காயங்கள்/ அங்கவீனம் ஏற்படுதல், மின்னல் தாக்கம்/ மின்சாரத் தாக்கத்துக்கு உட்படுதல், மழையின் பின் பெருகும் நுளம்புக் கடியால் இரத்தச் சோகை/ நுளம்புக் காய்ச்சல் நோய் ஏற்படுதல், குடற்புழுத்தாக்கம், தீவனம் நஞ்சாதல் என பல பாதிப்புகளை மழைக் காலத்திலும் அதனை அண்டிய காலத்திலும் அவதானிக்க முடிகிறது.

இந்தப் பாதிப்புகளை தவிர்க்கும் வழிகளை ஆராய்வோம்.

1. கொட்டகை முகாமைத்துவம்

மாடுவளர்ப்பில் கொட்டகை மிக அவசியமானது. குறிப்பாக மழைக் காலத்தில் கொட்டகையின் வகிபாகம் அத்தியாவசியமானது. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நான் கூறிய குளிர் அயர்ச்சியின் போது இறந்த கால்நடைகள் பெரும்பாலும் திறந்த வெளியில் நின்றவை. குறைந்தபட்சம் நனையாமல் ‘தறப்பாள்’ கொண்டு காக்கப்பட்ட கால்நடைகள் இறந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்ணையாளர்களுக்கு வருமானம் தரும் கால்நடைகளின் கொட்டகை விடயத்தில் அவர்கள் கட்டாயம் மிகுந்த கரிசனையுடன் இருக்க வேண்டும். சுத்தமாகவும், ஈரலிப்பற்றதாகவும், தண்ணீர் தேங்காததாகவும், காற்றோட்டம் கொண்டதாகவும், வழுக்கும் தன்மையற்றும், தண்ணீர் உடனடியாக ஓடக்கூடிய வடிகால் அமைப்புக் கொண்டதாகவும் கொட்டகை அமைய வேண்டும். இந்தக் காரணிகள் சரியாக இல்லாத போது கால்நடைகள் விபத்துக்கு உள்ளாகின்றன; நோய்த் தொற்றடைகின்றன. கொட்டகையின் சுற்றுப்புறம் மரம், செடிகள், பற்றைகள் அற்றும் தண்ணீர் தேங்காமல் சுத்தமாகவும் அமைய வேண்டும். பற்றைகள் காணப்படும் போது பாம்புகள், பூச்சிகளின் தாக்கம் ஏற்படலாம். தண்ணீர் தேங்கும் போது நுளம்புகளின் பெருக்கம் ஏற்படலாம். மேலும், கால்நடைகளின் எண்ணிக்கைக்கு அமைய கொட்டகை அமைய வேண்டும். அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் காணப்படும் போது நோய்த் தொற்றுகளும் இலகுவில் ஏற்படுகின்றன. காற்றோட்டம் குறையும் போது அமோனியா வாயு தேங்குவதால் சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

பண்ணையாளர்கள், மழைக் காலம் தொடங்க முன்னர் கொட்டகைகளை கால்நடைகளின் எண்ணிக்கைக்கு அமைய அமைக்க வேண்டும் என்பதுடன் பழுதடைந்த கொட்டகைகளை செப்பனிடுவதுடன், சுற்றுச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

2. தீவன முகாமைத்துவம்

மழைக் காலத்தில் தீவனத் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்படுகிறது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் பெரும்பாலான கால்நடைகள் மேய்ச்சலை நம்பியவை. அவற்றின்  மேய்ச்சல் களங்களாக அதிகளவில் குளங்களும் வயல்களுமே உள்ளன. ஆனால் மழைக் காலத்தில் குளங்கள் நிரம்புவதுடன் வயல்கள் பயிர்ச்செய்கை பண்ணப்படுகின்றன. இதனால் கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைப்பதில்லை. எனவே மேற்படி நிலையை தணிக்க மாற்று வழிகளைத் தேட வேண்டும். தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். வைக்கோல் போன்றவற்றைச் சேமித்து மழைக் காலத்தில் வழங்கலாம். தீவன புற் செய்கை, ஊறுகாய்ப் புல் (Silage) செய்வதோடு, நிலமற்ற புல் வளர்ப்பை (Hydroponics) ஊக்குவிக்கலாம். வேலிகளில் தீவன மரங்களை வளர்த்து வழங்கலாம். மேய்ச்சல் தரவைகளை முறையாகப் பெறுவதுடன், முறையாகப் பரிபாலனமும் செய்ய வேண்டும். ஊர்களில் உள்ள பயிர் செய்யாத பகுதிகளை இதற்குப் பாவிக்கலாம். கால்நடைப் பண்ணையாளர்கள் விவசாய செய்கையாளர்களுடன் ஒரு உடன்பாட்டைச் செய்து, சகல பகுதிகளையும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தாமல், கால்நடைகளுக்கும் குறித்த அளவுப் பகுதியை மேய்ச்சலுக்கு விட்டுத் தர வழிசெய்ய வேண்டும். இந்தப் பருவகாலத்தில் கால்நடைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுவதால், அதனைச் சரிசெய்ய வெளியிலிருந்து ஊட்டச்சத்துகளை வழங்க வேண்டும். ஏனெனில், இந்தக் காலத்தில் புற்களில் ஊட்டச்சத்துக் குறைவாகவும் நீர்ச் சத்து அதிகமாகவும் காணப்படும்.

மழைக் காலத்தில் குடிநீரின் முகாமைத்துவம் சரிவர பேணப்பட வேண்டும். தண்ணீரின் சுகாதாரம் சரிவரப் பேணப்படாமல் விடப்பட்டால் பல நோய்கள் ஏற்பட வழியேற்படும். முடிந்தவரை சுத்தமான தண்ணீர் கிடைக்கும் வழியை ஏற்படுத்த வேண்டும். அடர்வுத் தீவனத்தைச் சேமிக்கும் போது ஈரலிப்பற்ற தண்ணீர் தொடுகையுறாத இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அடர்வுத் தீவனத்திலுள்ள மூலப்பொருட்கள் குறிப்பாக சோளம், ஈரலிப்பான காலத்தில் மதுவத் தொற்றுக்கு (Aflatoxin) இலகுவாக உட்படுகிறது. இதனால் நஞ்சாதல் நிலை தோன்றி கால்நடைகள் பாதிக்கப்படலாம். கடைகளில் வாங்கும் போதும் பூஞ்சணம் பிடித்த தீவனங்களை வாங்கக் கூடாது.

சில விலங்குகள் குளிர்காலத்தில் சாப்பிடுவதைக் குறைத்துவிடும் என்பதால் அவற்றை அவதானித்து சிறப்பு உணவுகளை வழங்க வேண்டும். உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யும் அடர் தீவனத்தை பொருத்தமான அளவில் வழங்க வேண்டும். இல்லாது போனால் பாலுற்பத்தி குறைவதுடன் மாடும் நலிவடையும்.

3. நோய் முகாமைத்துவம்

மழைக் காலம் பல நோய் நிலைமைகளுக்கு காரணமாக அமைகிறது. வெப்பநிலைக் குறைவும் ஈரலிப்பும் கால்நடைகளின் நோயெதிர்ப்புச் செயன்முறைகளைப் பாதிக்கச் செய்வதால் இலகுவில் பல நோய்க் காரணிகளை உள்வாங்கவும் வழி ஏற்படுகிறது. சூழலில் பெருகும் நோய்க் காரணிகள் இந்தப் பருவ காலத்திலேயே கால்நடைகளைத் தாக்கவும் செய்கின்றன. சில முக்கிய நோய்களை தடுப்பூசி மூலம் தவிர்க்கலாம். கால்வாய் நோய் (Foot And Mouth Disease), கருங்காலி நோய் (Black Quarter), தொண்டையடைப்பான் (Hemorrhagic Septicemia) போன்ற நோய்களுக்கான தடுப்பூசியை மழைக் காலத்துக்கு முன்னரே கால்நடை வைத்தியரைத் தொடர்பு கொண்டு வழங்க வேண்டும். முறையான குடற்புழு நீக்கம் அவசியம். மழைக் காலத்தின் பின் வடக்கு – கிழக்கு இலங்கையில் ‘Immature Paramphistomiasis’ எனும் இரப்பை தட்டைப் புழுத்தாக்கம் ஏற்பட்டு இளங் கால்நடைகள் இறக்கின்றன. மழைக் காலத்தில் பல பண்ணையாளர்கள் மாடுகளுக்கு முறையான குடற்புழு நீக்கத்தைச் செய்வதில்லை. மழைக் காலத்தில்தான் கட்டாயம் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கால்நடை வைத்தியரின் பரிந்துரையில் பொருத்தமான மருந்தை சரியான கால அளவில் வழங்க வேண்டும். முடிந்தவரை குடற்புழுக்கள் பெரிதும் இருக்க கூடிய குளக்கரைகளில் மழைக்காலம் மற்றும் மழைக் காலத்துக்கு பின்னரான சில மாதங்களுக்கு கால்நடைகளை மேயவிடுவதை தவிர்க்க வேண்டும். இந்தக் காலத்தில் பல குடற்புழுக்களைக் காவும் நத்தைகள் பெருகி தாக்கத்தை அதிகரிக்கின்றன.

சுத்தமான தண்ணீர், சுகாதாரமான சுற்றுப்புறம் மற்றும் கொட்டகை பல நோய்கள் பெருகுவதைத் தவிர்க்கும். சுகாதாரமின்மை காரணமாக, மழைக் காலத்தில் பால் கறத்தலின் போது மடியழற்சி (Mastitis) போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. மாடுகள் சேறான இடங்களில் படுக்கும் போது மடியும் மண்ணுடன் தொடுகையுற்று நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறது. எனவே மாடு படுக்கும் இடத்தை ஈரலிப்பற்று வைத்திருத்தல் அவசியமாவதுடன் பால் கறந்தவுடன் மாடுகளைப் படுக்க விடவும் கூடாது. பால் கறந்ததும் சில நிமிடங்களுக்கு முலையின் துவாரம் திறந்திருப்பதால் நோய்கள் புக வழி ஏற்படுகிறது. பால் கறப்பவர் சுகாதாரமாக இருப்பதுடன் பால் கறக்க முன் கைகளையும் மாட்டின் முலையையும் முறையாகப் சுத்தப்படுத்தியே பால் கறக்கத் தொடங்க வேண்டும்.

மழைக் காலம் நெருங்கும் முன், அதிக கால்நடைகள் இருந்தால் அவற்றைக் குறைக்க வேண்டும். அதிக நெருக்கடி நோய்த் தொற்றை ஏற்படுத்துவதுடன் தீவனச் செலவையும் கூட்டும். இந்தக் காலத்தில் கால்நடைகளை வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கலாம். அப்படியிருந்தும் வாங்க வாய்ப்பு ஏற்பட்டால், சில வாரம் தனிமைப்படுத்தி (Quarantine) தடுப்பூசி, குடற்புழு நீக்கம் செய்த பின்னரே பிற கால்நடைகளுடன் சேர்க்க வேண்டும்.

மழைக் காலத்தில் காற் குளம்பு பராமரிப்பு அவசியம். குளம்பு அழுகுதல் நோய் ஏற்படுவதால் மாடுகள் நடக்கச் சிரமப்படும். கொட்டகையின் நிலம் ஈரலிப்பற்றதாகவும் வழுக்காததாகவும் தண்ணீர் தேங்காததாகவும் அமைய வேண்டும். இக் காலத்தில் இறக்கும் விலங்கு உடல்களை எரித்தோ புதைத்தோ முறையாக அகற்ற வேண்டும். இல்லாது போனால் அதன் மூலம் நோய்த் தொற்றுகள் ஏற்பட வழி தோன்றும். நோய்ப்பட்ட விலங்குகளை தனிமைப்படுத்தியே சிகிச்சை செய்ய வேண்டும். இந்த நாட்களில் ஏனைய விலங்குகளும் நலிவடைவதால் நோய்கள் விரைவாகப் பரவும்.

உண்ணி, தெள்ளுத் தொற்றுகளும் அதிகளவு ஏற்படும் என்பதால் அதற்குரிய சிகிச்சைகளையும் செய்ய வேண்டும். உண்ணித் தொற்றால் இரத்தம் தொடர்பான பல நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்வதோடு கால்நடைகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியும் குறைகிறது. மழைக் காலங்களில் ஏற்படும் ஈக்களின் பெருக்கத்தால் ‘Moraxella Bovis’ போன்ற கண் தொற்றுகள் ஏற்பட்டு கால்நடைகளின் கண்பார்வையும் பாதிக்கப்படுகிறது. எனவே ஈக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது. இதனைத் தடுக்க முறையான எரு மற்றும் சிறுநீர் அகற்றுதலில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, திறந்த வெளியில் மேயும் கால்நடைகள் மழைக் காலத்தில் மின்னல் தாக்கத்துக்கு உட்படுகின்றன. வயல்கள், குளங்களில் மேய்ச்சல் தடைப்படுவதால் வீதியோரங்களில் மாடுகள் உணவைத் தேடத் தொடங்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு உயிரிழப்புகளும் அங்கவீனங்களும் ஏற்படுகின்றன. மாடுகள் மழைக் குளிருக்கு இதமாக தார் வீதிகளில் படுப்பதையும் காணமுடியும். இந்த விடயத்தில் பண்ணையாளர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். போதிய உணவுக் கையிருப்புக்கு வழி செய்வதோடு மேலதிக மாடுகளைக் குறைக்கவும் வேண்டும். வீதிகளில் மாடுகளை நடமாட விடுவதைக் குறைக்க வேண்டும். குளிர் மற்றும் நுளம்புகளைக் குறைக்க புகை போடும், வெப்பம் வழங்கும் செயற்பாடுகளை கொட்டகைகளுக்குள் செய்ய வேண்டும். இயற்கை அனர்த்தங்களில் கால்நடைகள் இறக்கும் போது காப்புறுதி செய்யப்பட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு கிடைக்கும் என்பதால் முடிந்தவரை கால்நடை வைத்திய அலுவலகங்களில்  பண்ணைப்பதிவு, கால்நடைப் பதிவு என்பவற்றைச் செய்வதுடன் காப்புறுதியும் செய்து வைத்திருக்க வேண்டும்.

மழைக் காலத்தில் கறவை மாடு வளர்ப்பாளர்கள் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளையும் சுகாதார மற்றும் ஏனைய முகாமைத்துவ விடயங்களையும் தெளிவுபடுத்தியுள்ளேன். இவற்றை முறையாகச் செய்வதன் மூலம் கால்நடைகளின் இழப்பைத் தவிர்த்து, நட்டமடையாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.


ஒலிவடிவில் கேட்க

1001 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)