நாகர் பற்றிக் குறிப்பிடும் முத்துக்கல் மலைக் கல்வெட்டுகள்
Arts
10 நிமிட வாசிப்பு

நாகர் பற்றிக் குறிப்பிடும் முத்துக்கல் மலைக் கல்வெட்டுகள்

November 28, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

பொலநறுவை மாவட்டத்தில் மொத்தமாக 80 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை 17 இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 52 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 18 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் அடங்குகின்றன. இக்கல்வெட்டுகளில் தமிழரின் சிவ வழிபாடு, நாக வழிபாடு தொடர்பான கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் நாகர் தொடர்பான 15 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை பற்றிய விவரங்களைப் பார்க்கலாம். 

பொலநறுவை நகரில் இருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள மன்னம்பிட்டி சந்திக்கு அடுத்தபடியாக உள்ள செவனபிட்டி சந்தியின் வடக்குப் பக்கத்தில் 6 கி.மீ தூரத்தில் முத்துக்கல் எனும் ஊர் அமைந்துள்ளது. பொலநறுவை மாவட்டத்தில் இன்று தமிழர்கள் அதிகளவில் வாழும் இடங்களிலே இரண்டு இடங்கள் மிகவும் பழமை வாய்ந்தவையாகும். இவற்றில் முதலாவது இடம் முத்துக்கல், இரண்டாவது இடம் மன்னம்பிட்டி.

இதற்குச் சான்றாக முத்துக்கல்லில் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழரின் வழிபாட்டுப் பாரம்பரியம் தொடர்பாக அங்கு பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் விளங்குகின்றன. பொ.ஆ.மு. 237 – 215 காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த சேனனின் காலத்தில் மன்னர்கள் கூடும் 11 இடங்களில் ஒன்றாக ‘மாட்புட்டி’ என்னுமிடம் விளங்கியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. அன்றைய மாட்புட்டி என்னுமிடமே தற்போதைய மன்னம்பிட்டி என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன்படி மன்னம்பிட்டி சுமார் 2237 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊர் எனத் தெரிகிறது.

முத்துக்கல் பற்றிய இன்னுமோர் முக்கிய வரலாற்றுக் குறிப்பும் உள்ளது. இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முன்பு, பொ.ஆ. 4 ஆம் நூற்றாண்டில் முத்துக்கல்லை பிரதானமாகக் கொண்ட பிரதேசத்தை முத்துக்கல் வன்னிச்சி என்றழைக்கப்பட்ட வீரமுத்து வன்னிச்சி என்பவள் பரிபாலனம் செய்து வந்தமை ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

பொ.ஆ. 364 இல் கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்புப் பிரதேசத்தை அமரசேனன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்த காலத்தில் மறவர் குலத்து அரச வம்சத்தைச் சேர்ந்த ஏழு பெண்கள் தம் கணவர் மற்றும் குடிகளுடன் இந்தியாவிலிருந்து இலங்கை வந்து தம் வரலாற்றை அரசனிடம் கூறி வன்னிச்சி பட்டம் பெற்றதாகவும், அரசன் இவர்களுக்கு ஏழு ஊர்களை வழங்கியதாகவும், இவர்களில் வீரமுத்து எனும் பெயர் கொண்ட வன்னிச்சி, தான் பெற்ற ஊருக்கு தனது பெயரை இணைத்து முத்துக்கல் எனப் பெயர் வைத்து அப்பகுதியில் தன் குடிகளுடன் கமம் செய்து வாழ்ந்து வந்ததாகவும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. 

இவ்வன்னிச்சி பரிபாலித்து வந்த பிரதேசம் முத்துக்கல், திருக்கோணமடு, கட்டுவான் வில்லு, கந்தக்காடு, சமன்பிட்டி, கரப்பளை, ஹேவன்பிட்டி, சடவக்கை, குளக்கனாவெளி, உனாவாவி, செவனப்பிட்டி, கல்லூர், அழிஞ்ச பொத்தானை, தம்பன்கடவை, வெலத்தாகடை, மன்னம்பிட்டி, முருகபுரம், மாசிவெளி, மயிலாடுகல், கட்டாமுனை, வேப்பையடி, சொறிவில் ஆகிய இடங்களை உள்ளடக்கியதாகும்.

இப்பிரதேசம் மகாவலி கங்கையின் கிழக்குப்பக்கத்தில் சுமார் 40 கி.மீ நீளமும், 20 கி.மீ அகலமும், 80 சதுர கி.மீ பரப்பளவும் கொண்டதாகும். இவ் வன்னிச்சியின் பரம்பரையைச் சேர்ந்த இன்னுமோர் பெண் முத்துக்கல் இராச்சியத்தின் கிழக்கில் சுமார் 25 கி.மீ தூரத்தில் இருந்த பணிச்சங்கேணி எனுமிடத்தை பிரதானமாகக் கொண்ட பிரதேசத்தை பரிபாலனம் செய்து வந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. 

இத்தனை பண்டைய தொன்மை வரலாற்றைக் கொண்ட முத்துக்கல்லில், அங்குள்ள  குளத்தை அடுத்து உள்ள சதுப்பு நிலத்தின் மத்தியில் மலைப் பாறைகளும், சிறிய குன்றுகளும் நிறைந்த இடம் ஒன்று அமைந்துள்ளது. இதுவே பண்டைய காலம் முதல் முத்துக்கல் என அழைக்கப்பட்டு வந்த மலையாகும். பண்டைய காலத்தில் முத்துக்கல் வன்னிச்சி இம்மலைப் பகுதியில் இருந்து இப்பிரதேசத்தை பரிபாலனம் செய்திருக்க வேண்டும்.

முத்துக்கல்லில் உள்ள மலைக்குகைகளிலும், பாறைகளிலும் மொத்தமாக 21 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் 17 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 4 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் அடங்குகின்றன. பொலநறுவை மாவட்டத்தில் அதிகமான பிராமிக் கல்வெட்டுகள் காணப்படும் இடம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இக் கல்வெட்டுகள் அனைத்தும் முத்துக்கல் எனும் இடத்தில் காணப்படுவதாக குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. இருப்பினும் இக்கல்வெட்டுகள் மூன்று இடங்களில் காணப்படுகின்றன. முத்துக்கல் மலையிலும், இங்கிருந்து தெற்குப் பக்கத்தில் சுமார் 350 மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு தட்டையான பாறைப் பகுதியிலும், வடமேற்கில் 600 மீற்றர் தூரத்தில் உள்ள இன்னுமோர் மலைப்பகுதியிலும் இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  

பாமர பெண் பக்தை நாக பற்றிய கல்வெட்டு

இக்கல்வெட்டுகளில் 2 முற்கால பிராமிக் கல்வெட்டுகளிலும், ஒரு பிற்கால பிராமிக் கல்வெட்டிலும் நாகர் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 2 முற்கால பிராமிக் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு:

“பருமக சுடச ஜய உபசிக நாகய லேனே”

இதன் பொருள் “பெருமகன் சூடவின் மனைவியான பாமர பெண் பக்தை நாகவின் குகை” என்பதாகும். ஆங்கில மொழியில் இது “The cave of the female lay devotee Naga, wife of the chief Cuda” எனப் பொருள்படும்.

பெருமகன் நாக தின்ன பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு

முத்துக்கல்லில் காணப்படும் இரண்டாவது கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:

“பருமக திசரக்கித்த புத பருமக நாகதினச லேனே”

இது “பெருமகன் தீச ரக்கித்தவின் மகனான பெருமகன் நாக தின்னவின் குகை” எனத் தமிழிலும், “The cave of the chief Nagadinna, son of the chief Tissarakkhita” என ஆங்கிலத்திலும் பொருள்படும்.  

தேரர் நாகன் மற்றும் தேரர் நாகசேனன் பற்றிக் குறிப்பிடும் பிற்கால பிராமிக் கல்வெட்டுகள்

முத்துக்கல்லில் காணப்படும் பிற்கால பிராமிக் கல்வெட்டுகள் இரண்டில் நாகர் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“நாக தேரஹ பதே”

இதன் பொருள் “நாக தேரரின் பாதம்” என்பதாகும். ஆங்கிலத் தில் இது “The Foot of Naga thera” எனப் பொருள்படும். இதற்கு அடுத்த பிற்கால பிராமிக் கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு:

“நாக சேனா தேரஹ பதே” 

இதன் பொருள் “நாகசேன தேரரின் பாதம்” என்பதாகும். ஆங்கிலத்தில் இது “The Foot of Nagasena thera” எனப் பொருள்படும். இக்கல்வெட்டுகள் இரண்டினதும் படியெடுக்கப்பட்ட பிரதிகள் கிடைக்கவில்லை. 

பெருமகன் நாகன் பற்றிக் குறிப்பிடும் கந்தகாடு – தோணியாகல்லு கல்வெட்டு

பொலநறுவை நகரில் இருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள வெலிக்கந்தை சந்தியில் இருந்து வடக்குப் பக்கமாக சோமாவதி விகாரைக்குச் செல்லும் வீதியில் 18 கி.மீ தொலைவில் கந்தக்காடு அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் வலது பக்கம் 4 கி.மீ தூரத்தில் இக்கிராமம் உள்ளது.

இன்று கந்தக்காடு என்று அழைக்கப்படும் இவ்விடம் பண்டைய காலத்தில் ஒரு நகரமாக விளங்கியுள்ளது. அன்று இதன் பெயர் சித்தர் நகரம் என்பதாகும். பண்டைய காலத்தில் சித்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். எனவேதான் இது சித்தர் நகரம் எனப் பெயர் பெற்று விளங்கியுள்ளது. இங்குள்ள தோணியாகல்லு எனும் பாறையில்  காணப்படும் இரண்டு பிற்கால கல்வெட்டுகளில் ‘சித்தநகர’ எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளமை இக்கூற்றை உறுதி செய்கிறது.    

இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் அன்றைய பணிப்பாளரான எச்.சி.பி. பெல் 1897 ஆம் ஆண்டு தமன்கடுவ மாவட்டத்தில் 9 வாரங்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இன்றைய பொலநறுவை மாவட்டத்தின் பழைய பெயர் தம்பன்கடவை எனும் தமன்கடுவ ஆகும். அப்போது இங்குள்ள கந்தக்காடு எனும் கிராமத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் இருந்த தோணியாகல்லு என்றழைக்கப்படும் பாறையில் மூன்று கல்வெட்டுகளை கண்டுபிடித்தார். ஒரு கல்வெட்டு பொ.ஆ.மு 3 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட முற்காலப் பிராமிக் கல்வெட்டாகும். ஏனைய இரண்டு கல்வெட்டுகள் பிற்கால பிராமிக் கல்வெட்டுகளாகும். இவற்றில் முதலாவது பிற்கால பிராமிக் கல்வெட்டு 1955 ஆம் ஆண்டு ‘Epigraphia Zeylanica – Vol.5 – Part 1’ எனும் நூலிலும், முதலாவது முற்கால பிராமிக் கல்வெட்டு 1970 ஆம் ஆண்டு ‘Inscriptions of Ceylon – Vol.1’ எனும் நூலிலும், இரண்டாவது பிற்கால பிராமிக் கல்வெட்டு 2001 ஆம் ஆண்டு ‘Inscriptions of Ceylon – Vol.2 – Part 2’ எனும் நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.      

இவற்றில் இரண்டு கல்வெட்டுகளில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் ஒன்று முற்கால பிராமி எழுத்துகளிலும் மற்றும் ஒன்று பிற்கால பிராமி எழுத்துகளிலும் பொறிக்கப்பட்டவையாகும். இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள முற்கால பிராமிக் கல்வெட்டில் உள்ள வாசகங்கள் பின்வருமாறு,

“பருமக மலச புதே பருமக நமரே பருமக நமரச புதே பருமக நாகஹ எட்டச கொமி அகட்ட அனகட்ட சத்து து [ச] சகச நியதே”     

இதன் பொருள், “பெருமகன் மாலனின் மகனான பெருமகன் நாமரன், பெருமகன் நாமரனின் மகனான பெருமகன் நாகன் ஆகியோரின் தொட்டி (கேணி) நாலா திசைகளிலும் இருந்து வரும் சங்கத்தார்க்கு அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்பதாகும்.

ஆங்கிலத்தில் இது “The son of the chief Mala is the chief Namara, of the chief Naga, son of the chief Namara of this (personage) the cistern is dedicated to the sangha of the four quarters, present and absent” எனப் பொருள்படும்.  

நாகர் கல்லு, சித்தர் நகரம் ஆகியவை பற்றிக் கூறும் தோணியாகல்லு பாறைக் கல்வெட்டு

கந்தக்காடு தோணியாகல்லு பாறையில் பொறிக்கப்பட்டுள்ள இரண்டு பிற்கால கல்வெட்டுகள் இரண்டிலும் ‘சித்த நகர’ எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 வரிகளில் எழுதப்பட்டுள்ள அக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:  

  1. டெனுபே ஒபதிஸ்ஸ மகர
  2. ஜக கரவிட மஹா சித்தநக
  3. ரக விஹரஹ சேதய பதட்டவய
  4. சேதயட ம சித்தநகரக ஹப
  5. .. .. .. .. நாககல தன்னஹி ச .. .. .. .. ய
  6. லஹி கலகுபரி நிசிதே .. .. .. ..
  7. தெல மியதே சொலச .. .. .. .. 

இதன் பொருள் ஆங்கிலத்தில் வருமாறு: “Having established the caitya of the Monastery of Maha-Cittanakara, caused to be founded by the great King Denupe Opatissa, the assembly of this Cittanagaraka, for the benefit of the caitya, deposited with the assembly of .. .. .. Nakagala (the field named) Galakubari in .. .. sixteen .. .. for the purpose of providing oil and honey.”    

இது தமிழில் பின்வருமாறு பொருள்படுகிறது: “மகா மன்னன் தேனுகே ஒபதீசவினால் மகா சித்தர் நகரில் அமைக்கப்பட்ட சேதியத்தின் நன்மைக்காக, சித்தர் நகரத்தில் உள்ள நாகர் கல்லு என்னுமிடத்தில் கூடிய கூட்டத்தில், சேதியத்திற்கு எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை வாங்குவதற்காக, பதினாறு .. ..” (காசு அல்லது பணம் வழங்கப்பட்டது).

இப்பகுதியில் ‘நாகம்பூ மலை’ என்றழைக்கப்படும் மலை ஒன்று காணப்படுகிறது. வாகரைப் பகுதியில் வாழும் வேடர் குலத்தவர்களுக்கும் இம்மலைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், பண்டைய காலத்தில் வாழ்ந்த வேடர் இம்மலையில் தமது பாரம்பரிய வழிபாடுகளை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. கந்தக்காடு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாகர்கல்லு என்னுமிடம் இந்த நாகம்பூ மலையாக இருக்க வேண்டும் எனக் கருத இடமுண்டு.    


ஒலிவடிவில் கேட்க

1833 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்