யாழ்ப்பாணத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுதல் : திட்டங்களும் பரிந்துரைகளும்
Arts
14 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுதல் : திட்டங்களும் பரிந்துரைகளும்

December 2, 2024 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

தமிழில் : த. சிவதாசன்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகத்தை நான் விமர்சிப்பதற்கு முன் அதற்கு எனது வாழ்த்தைத் தெரிவிக்க வேண்டும். எனது ‘ஜூன் 2018 லங்கா பிஸினெஸ் ஒன்லைன்’ கட்டுரையில் சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகத்தின் வரைபடத்தில் வடமாகாணம் வெறுமனே வறண்ட பிரதேசமாகவே காட்டப்படுகிறது எனவும், யாழ்ப்பாண விமான நிலையத்தைத் தவிர வேறெந்தச் சுற்றுலாத்தலங்களும் அங்கில்லை என்பது போலக் காட்டப்பட்டிருக்கிறது எனவும் விமர்சித்திருந்தேன். ஆனால் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்ட வரைபடத்தில் வடக்கில் மேலும் பல சுற்றுலாத்தலங்கள் வர்ணப் புள்ளிகளாகக் காட்டப்பட்டுள்ளன. இது முந்தைய படத்தைவிடச் சிறந்தது. ஆனாலும் மிகவும் நுணுக்கமாகப் பார்க்கும்போது அப்படத்தில் நல்லூர்க் கோவிலோ அல்லது யாழ்ப்பாணக் கோட்டையோ சுற்றுலாத் தலங்களாகக் காட்டப்பட்டிருக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது சுற்றுலா நிர்வாகத்தின் கவனக்குறைவினால் ஏற்பட்டதாக இருக்கலாம். வடக்கிலுள்ள மிகவும் பிரபலமான இத் தலங்களை சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகம் ஒருபொழுதாவது தரிசித்திருக்க வாய்ப்பில்லை என்பதையே இச்செய்கை மூலம் யூகிக்க வேண்டி இருக்கிறது.

நல்லூர்க் கோவிலை உதாசீனம் செய்திருப்பது பாரிசின் ஐஃபில் கோபுரத்தையோ அல்லது லண்டனின் ‘பிக் பென்’ மணிக்கோபுரத்தையோ அல்லது சிட்னியின் ஒப்பெறா ஹவுஸையோ அல்லது நியூ யோர்க்கின் எம்பயர் ஸ்ரேற் கட்டிடத்தையோ உதாசீனம் செய்தததற்குச் சமம். சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகத்தின் படத்தில் நெடுந்தீவில் தான் அதிக சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவும்; அவற்றில், அங்குள்ள குதிரைகள், பெரிய மரம் போன்ற ஐந்து இடங்களை விசேடமாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது யாழ்ப்பாணத்திலுள்ள நான்கு பிரதான தலங்களை விட அதிகமானது. யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத்தலங்களைக் கண்டுபிடிக்க கூகிள் தேடலே போதுமானதாக இருக்கும்போது சுற்றுலா நிர்வாகத்தின் இந்த மெத்தனமான முயற்சியை சகிக்கமுடியாதுள்ளது. நீங்கள் இக்கட்டுரையை வாசிக்கும்போது சுற்றுலாத்துறை நிர்வாகம் தமது வரைபடத்தை நிவர்த்தி செய்துகொண்டிருக்குமென நம்புகிறேன். ஆனால் துர்ப்பாக்கியமாக இந்நிர்வாகங்கள், இடித்துரைக்கும்போது மட்டும், யாழ்ப்பாணத்தை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுத் தென்னிலங்கைப் பக்கமே போய்விடுவது வழக்கமாகி விட்டது.

சுற்றுலாத் தலமாகக் காட்சிப்படுத்துமளவுக்கு நெடுந்தீவு இன்னும் தயார் நிலையில் இல்லை என்பதை அறியவேண்டுமானால் சுற்றுலாத்துறை நிர்வாகம் தனது இணையத் தளத்தில் அதை எப்படி விபரித்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே போதும். 

“நெடுந்தீவிற்கு போவதற்கு நாளொன்றுக்கு, காலையிலும் மாலையிலுமாக, இரு தடவைகள் படகுச் சேவைகள் உண்டு. ஆனாலும் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இச்சேவைகளை உறுதிப்படுத்திக்கொண்டு புறப்படுவது நல்லது. காலநிலை மற்றும் படகின் தரம் ஆகியவை இப்பயண ஒழுங்குகளை வெகுவாக மாற்றக்கூடியவை. தீவில் வந்திறங்கியவுடன் நீங்கள் அங்குள்ள ஒரே ஒரு பஸ் வண்டி மூலம், அங்குள்ள ஒரே ஒரு தெருவில் தான் பயணிப்பீர்கள். அதைவிட ஒரு ட்றாக்டரை வாடகைக்கு அமர்த்தி விரும்பிய பாதைகளில் பயணிக்க முடியும்”

நான் இன்னும் பயணிக்காத நெடுந்தீவு ஒரு வசீகரமான இடமாக இருக்குமென்றே நான் நம்புகிறேன். ஆனால் அதை வடக்கின் சுற்றுலாத் தலங்களின் உச்சம் என அழைப்பின் அது இதர தலங்களைக் கொச்சைப்படுத்தும் விடயமாகும். இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகம் என்ன செய்யவேண்டும்? இதைப்பற்றி கொழும்பைத் தளமாகக் கொண்ட தொழில் முகவரான சுரேஷ் முருகேசர் இப்படிக் கூறுகிறார். 

“கடந்த பல தசாப்தங்களாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டவன் என்ற முறையில், வடக்கு, இலங்கை சுற்றுலா வரைபடத்தில் திடமாகப் பொறிக்கப்பட வேண்டிய ஒரு உன்னதமான இடம். இதற்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புத் துறை செய்யவேண்டியது, முதலில், சுற்றுலாக்களை ஒழுங்குசெய்யும் நிறுவனங்களை அழைத்துக்கொண்டு இப்படியான தலங்களுக்குச் சென்று அவற்றின் தராதரங்களை நேரடியாகப் பார்வையிடச் செய்யவேண்டும். இந்த முக்கியமான முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் எதுவுமே செய்யமுடியாது.”

ஊடாடும் வரைபடத்தைத் (Interactive Map) தந்ததன் மூலம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகம் சரியான திசையில் முன்னேற முயற்சிக்கிறது என்பது என்னை ஒரு நம்பிக்கையான அவநம்பிக்கையாளராக, நல்லவற்றை எதிர்பார்க்கும் ஒருவராக மாற்றியிருக்கிறது என்பதே உண்மை. முருகேசர் போன்றோரது ஆலோசனைகளைக் கேட்டு வடக்கின் சுற்றுலா வளங்களை ஆராய சுற்றுலா நிர்வாகம் ஒழுங்குகளை மேற்கொள்ளுமென்றுதான் நம்பவேண்டியுள்ளது. வடக்கின் சுற்றுலா வளங்களை முன்னேற்ற விரும்புவோரின் பரிந்துரைகளையும் உள்வாங்கி வரைபடத்தில் அவற்றைப் பொறித்துக்கொள்வார்கள் எனவும் நம்புவோமாக. இதன் ஆரம்பமாக வடக்கின் சுற்றுலா வளங்கள் பற்றிய எனது முந்தைய கட்டுரை தொடர்பாக எனக்கு வந்த சில மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களை இங்கு பகிர்கிறேன்.

“சுற்றுலாத்துறையால் இதுவரை கண்டுபிடிக்கப்படாத அழகான பல பவளப் பாறைகள் வடக்கிலுண்டு. ஹிக்கடுவ மற்றும் திருகோணமலையில் நான் தரிசித்த பவளப் பாறைகள் கட்டுப்பாடற்ற சுற்றுலாவாசிகளின் நடவடிக்கைகளால் வெளிறிப் போய்விட்டன. இயற்கை விரும்பியான எனக்கு வடக்கிலுள்ள பவளப்பாறைகளை அசுத்தம் செய்வது உடன்பாடற்ற ஒரு விடயமாக இருப்பினும் உகந்த சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இப்பவளப் பாறைகளைக் கையாண்டால் அவற்றை சிறந்த சுற்றுலாத் தலங்களாக மாற்றிக்கொள்ள முடியும். குறிப்பாக, உள்ளூர் மீனவர்களையும் உள்வாங்கி இங்கு தற்போது நிலவும் மிகையான மீன்பிடியால் ஏற்படும் சீரழிவுகளையும் மனதில் கொண்டு அவர்களது அனுபவங்களுடன் கூடிய, வருமானத்தை அதிகரிக்கும் மாற்றுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்”.

“வடக்கிலுள்ள மீன் சந்தைகள் தெற்கிலுள்ளவையைப் போல பிரமாண்டமானவையாக இல்லை. ஆயினும் வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகளுக்கு திருக்கைகளும் கணவாய்களும் ஈட்டிகளால் கொல்லப்பட்டு உலரவைக்கப்படுவது இன்ப அனுபவங்களைத் தரக்கூடியவவை. சுற்றுலாவாசிகளின் மீன் சந்தை வரவின் காரணமாக அதன் அண்மையில் உணவகங்களும் நிறுவப்பட்டு வருவாயீட்டிக்கொள்ள முடியும்.”

“ஒரு நேரடி விமான சேவை அவசியம். திருகோணமலையினூடு வாரத்திற்கு சில தடவைகள் வரும் சேவைகள் மட்டும் போதாது.”

“சுற்றுலாவாசிகளிடம் சற்று அதிக கட்டணத்தை வசூலித்து தூங்கும் வசதிகளுடன் ரயில் சேவையை வழங்கினால் அப்பயணங்கள் அனுபவப் பெறுமதிமிக்கவையாக இருக்கும் (எப்படியாகினும் ஓட்டல் தங்கலுக்கான ஒரு இரவுக் கட்டணத்தைச் சேமித்து நிம்மதியாக சொகுசு ரயில் தூக்கத்தை சுற்றுலாவாசிகள் பெற்றுக்கொள்ள முடியும்).”

“தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மூலம் தீமைகளை விட நன்மைகளே அதிகமென நான் கருதுகிறேன். இது மன்னாரின் தொங்கிப்போயிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வசதி செய்யும். தலைமன்னார் வரும் பயணிகள் மன்னார் – யாழ்ப்பாண ரயில் சேவை (தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது என நினைக்கிறேன்) மூலம் நேரடியாக யாழ்ப்பாணம் செல்ல வசதியாகவிருக்கும்.”

“இலங்கையிலேயே இருக்கக்கூடிய மிகச்சிறந்த கடற்கரையான கசூரினா கடற்கரை ஒரு பிரமாண்டமான குளியல் தடாகம். கரையிலிருந்து 500 மீட்டர்கள் வரை அமைதியான அலைகளினூடு கரைப் பாதுகாவலர்களின் தேவைகளின்றி நடந்து செல்ல முடியும். நீந்துவதற்கு அச்சத்தோடு தெற்குக் கடற்கரைகளில் காலத்தைக் கழிக்கும் சிங்களச் சுற்றுலாவாசிகளுக்கு (இவர்களில் பலருக்கு நீந்தத் தெரியாது) இக்கடற்கரை எப்படியான மகிழ்வைத் தருமென கற்பனை பண்ணிப் பார்க்கலாம்.”

“வழிகாட்டல் நூல்களும் சுற்றுலாக்களை ஒழுங்கு செய்யும் நிறுவனங்களும் ஒருபுறமிருக்க, பெரும்பாலான உயர் ரக சுற்றுலாவாசிகள் பயண முகவர்களின் வழிகாட்டல்களிலேயே தங்கியுள்ளார்கள்.”

“இந்தச் சிறந்த காணொளி ரூபவாஹினியினால் வெளியிடப்பட்டது. அது சிங்களத்தில் இருப்பதனால் எனக்கு எதுவுமே விளங்கவில்லை. ஆங்கிலத்திலும் தமிழிலும் இது கிடைக்குமானால் நல்லது”. Https://Www.Youtube.Com/Watch?V=1nuu5zghwqy

“ஹிக்கடுவ, தெற்கில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பச் சுற்றுலாத்தலங்களில் ஒன்று. திட்டமிடப்படாத சுற்றுலாத் தல நிர்மாணத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இது இலங்கையின் சுற்றுலா வளங்களுக்கு ஒரு கெட்ட உதாரணம். போதைப் பொருட்களுக்கும் பாலியல் தொழிலுக்கும் பெயர் போன ஒன்று. உயர் ரக சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் வகையில் சுத்தமான கடற்கரைகள், சிறந்த உணவு போன்றவற்றுடனான திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்படும் சுற்றுலாத்தலமே யாழ்ப்பாணத்திற்குத் தேவை.”

“ஊர்காவற்றுறைக்குப் போகும் இணைப்புப் பாதையில் பயணம் செய்யும்போது அந்திப் பொழுதில், வானமும் கடலும் தழுவும் இரம்மியமான காட்சி அற்புதமானது – அது தான் யாழ்ப்பாணம் – துலக்கப்படாத இரத்தினக்கல்.”

“நிறுத்தப்பட்ட, யாழ்ப்பாணம் – திருச்சிராப்பள்ளி விமானச் சேவையை மீள ஆரம்பிக்க வேண்டும். கோலாலம்பூருக்கும் திருச்சிராப்பள்ளிக்குமிடையே ‘எயர் ஏசியா’ மற்றும் ‘மலின்டோ’ நாளொன்றுக்கு 3 – 4 தடவைகள் பயணம் மேற்கொள்கின்றன.”

“ஓரிரு சுகக் குளியல்கள் (Spa), நீச்சல், முழுக்கு (Dive), இரவுகளில் ஓரிரு சிறந்த உணவகங்கள், மதுவகங்கள், அங்காடிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு நாள், மூன்று இரவுகள் சுற்றுலாத் திட்டத்தைச் செயற்படுத்தாமல் வடக்கிற்கு சுற்றுலாவாசிகளை ஈர்ப்பது மிகவும் கடினம்.”

மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல்களில் இறுதியாகத் தரப்பட்ட குறிப்பிலுள்ளதைப் போல கடந்த இரண்டு வருட கால எனது அனுபவங்களை வைத்து என்னால் தரக்கூடிய ‘ஜெகனின் நான்குநாள், மூன்றிரவு பயணத் திட்டம்’ இப்படியிருக்கும். கார் அல்லது வாடகை பஸ் வண்டியில் பயணம், நெரிசலற்ற போக்குவரத்து நேரங்கள், உங்கள் சுற்றுலாக்குழுவில் 10 பேருக்கு மேல் இருப்பின் தளர்வான காலங்களில் (வடக்கில் எப்போதுமே தளர்வான காலங்கள் தான்) ஓட்டல்களில் பேரம் பேசிக் கட்டணங்களைக் குறைத்தல் ஆகியன இத்திட்டத்தில் அடங்கும். நான் பயணம் செய்த இடங்களில் சிறந்தவற்றை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன், அதே வேளை நான் போகாத இடங்களைத் தவிர்த்துள்ளேன். வார விடுமுறைகளையும், விடுமுறை நாட்களையும் தவிர்த்தால் இவ்விடங்களில் நெரிசல்களைத் தவிர்க்கலாம். உதாரணத்திற்கு கசூரினா கடற்கரை மற்றும் நயினாதீவு படகுப் பயணம் போன்றவை. கீழே நான் சில இடங்களைச் சிபாரிசு செய்வதற்காக நான் அவர்களுக்கு பரப்புரை செய்வதாகச் சிலர் குற்றம் சாட்டலாம். ஆனால் இப்படிக் குறை கூறுபவர்களுக்காக நான் கவலைப்படப் போவதில்லை. எந்தவித வருமானத்தையும் எதிர்பாராமலே நான் இப்பரிந்துரைகளைச் செய்கிறேன். வேறு சில நல்ல இடங்களும் மிக மோசமான இடங்களும் இருக்கின்றன. சிறந்ததும் மோசமானதுமான பயணத் திட்டங்களும் இருக்கின்றன. எனவே நான் சொல்லிவிட்டேன் என்பதற்காக நீங்கள் எனது திட்டத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதில்லை. ஆனால் வடக்கிற்கு கட்டாயம் வாருங்கள். இதுதான் எனது பயணத்திட்டம்:

நாள் 1: கொழும்பிலிருந்து மன்னார் வழியாக யாழ்ப்பாணம் புறப்படுதல்.

காலை 05:30: கொழும்பில் பயணம் ஆரம்பம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அதிகாலை புறப்படுவது நல்லது.

காலை 10:30: அநுராதபுரத்தில் ‘மாங்கோ மாங்கோ’ உணவகத்தில் காலை உணவு. நான் சென்ற போது நல்ல உணவு பரிமாறப்பட்டதுடன் சுத்தமான கழிப்பறைகளும் கிடைத்தன.

பி.ப. 1:00 – 3:30: மன்னார் வருகை. மடு மாதா தேவாலய தரிசனம்; லூர்ட்ஸ் மாதா தேவாலய தரிசனம். தொடர்ந்து திருகேதீஸ்வரம் கோவில் தரிசனம்.

மாலை 6:00: யாழ்ப்பாணம் வருகை. ஓட்டலில் தங்குதல்.

நாள் 2: தீவகங்களையும் யாழ் நகர காட்சித் தலங்களையும் பார்வையிடல்.

காலை 09:00 – நண்பகல் 12:00: நயினாதீவு/ நாகதீபம் கோவில்கள் தரிசனம். யாழ் நகரிலிருந்து துறைமுகத்திற்கு வாகனத்தில் செல்வதற்கு குறைந்தது 45 நிமிடங்கள் வரை எடுக்கலாம். இம் முழுப்பயணத்திலும் இத் தெருவழிப் பயணமே மிகவும் அரிய காட்சிகளைக் கொண்டதாக அமையும் என்பது எனது அபிப்பிராயம். துறைமுகத்திலிருந்து, படகுக்காக காத்திருக்கும் நேரம் தவிர்த்து, மேலுமொரு 20 நிமிடம் படகுப் பயணம் இருக்கிறது. ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கொரு தடவை படகு புறப்படுகிறது. இப்படகுப் பயணத்தின்போது ஏறி இறங்குவதற்கேற்றவாறு ஆடைகளையும் பாதணிகளையும் அணிவது நல்லது.

பி.ப. 1:00: நயினாதீவிலிருந்து மீளும் வழியில் சாட்டிக் கடற்கரையில் மதிய உணவு. சாட்டியிலுள்ள ரில்கோ ஓட்டல் உணவகத்தில் இது பரிமாறப்படும். இம்மதிய உணவு யாழ் நகரிலுள்ள பிரதான ரில்கோ ஓட்டலில் தயாரிக்கப்பட்டு சாட்டி உணவகத்திற்குக் கொண்டுவரப்படுவதால் ஒரு நாளுக்கு முன்னரே இதற்கான கோரிக்கை முன்பதிவு செய்யப்படவேண்டும். கடைசியாக நான் அங்கு சென்றபோது மதுபானம் விற்பதற்கான அனுமதியை ரில்கோ பெற்றிருக்கவில்லை. எனவே உங்கள் மதுபானங்களை நீங்களே கொண்டு செல்ல வேண்டும்.

பி.ப. 3:00: ஓட்டலுக்குத் திரும்புதல். சாட்டிக் கடற்கரையிலிருந்து யாழ் நகரம் 15 நிமிட வாகனப் பயணத் தூரத்தில் இருக்கிறது.

பி.ப. 4:00: நகரிலுள்ள சில பிரதான சுற்றுலாத்தலங்களைப் பார்வையிடல். நல்லூர்க் கோவில் – இது அதிகாலை திறக்கப்பட்டு மதியம் 12:00 மணிக்கு மூடப்பட்டு, திரும்பவும் 4:00 மணிக்குத் திறக்கப்பட்டு, மாலை 8:00 மணிக்கு மூடப்படுகிறது. யாழ். பொதுசன நூலகம் – இது பிரதி திங்கட் கிழமையும் மூடப்படுகிறது. சுற்றுலாவாசிகள் பி.ப. 4:30 இற்கு முன்னர் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. மாலை 8:00 மணி மட்டும் திறந்திருக்கும். வெளியிலிருந்து எந்த நேரமும் பார்வையிடலாம். யாழ். கோட்டை – குளிரான காலையில் அல்லது பிற்பகலில் இங்கு செல்வது உகந்தது.

மாலை 6:00: ஓட்டலுக்குத் திரும்புதல்.

நாள் 3: குடாநாட்டை வலம் வருதலும் மாலை அங்காடிகள் தரிசனமும்.

காலை 09:00: குடாநாட்டின் வட பகுதியிலுள்ள சங்கிலியன் மந்திரி மனை. கவனிப்பாரற்ற நிலையில் இருக்கும் இப்புராதனக் கட்டிடம் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது. கந்தரோடை புராதன புத்த ஸ்தூபி தரிசனம்.

மதியம் 12:00: யாழ். கோட்டையில் சிவில் உடையில் கடற்படை அதிகாரிகளால் நியாயமான விலையில் சிறப்பான மதிய உணவு பரிமாறப்படும். உணவகத்திலிருந்து கோட்டையின் அழகான தோற்றத்தைக் காணலாம். படகொன்றில் சுற்றிக் காண்பித்தலும் இடம்பெறும். சுமார் 15 பேரை அடக்கக்கூடிய படகுச் சுற்றுலாவுக்கு ரூ. 5,000 அறவிடப்படுகிறது.

பி.ப. 2:00 – 4:00: கசூரினா கடற்கரை. காரைநகரிலுள்ள இந்த அழகான கடற்கரையில் அலாதியான ஓய்வு. வார விடுமுறைகளில் இக்கடற்கரை மிகவும் நெரிசலாக இருப்பதால் வார நாட்களில் இங்கு செல்வது நல்லது. சூரிய வெக்கையைத் தாங்க முடியாதவர்கள் தொப்பிகளைக் கொண்டு போகலாம் அல்லது கடலில் நேரத்தைக் கழிக்கலாம். அல்லது காலை அல்லது பிற்பகல் வேளைகளில் இங்கு செல்லலாம். கரைப்பாதுகாவலர்கள் மாலை 6:00 மணியுடன் கடமைகளை முடித்துக்கொள்வதால் இக்கடற்கரை அத்தோடு உத்தியோக பூர்வமாக மூடப்படுகிறது. யாழ். நகருக்கு வந்தடைய 45 நிமிட வாகன ஓட்டம் தேவை.

மாலை 5:00: யாழ் நகரில் கடைத்தெருவில் நடை.

மாலை 6:00: ஓட்டலுக்குத் திரும்புதல்.

நாள் 4: கொழும்புக்குத் திரும்புதல்.

காலை 9:00: ஆனையிறவு ஊடாக கொழும்பு திரும்புதல்.

காலை 11:00: வவுனியாவில் காலை உணவு. வவுனியா உணவுச்சாவடியிலுள்ள அம்மாச்சி உணவகத்தை நான் பரிந்துரைப்பேன். நல்ல காலை உணவுடன் பழரசமும் சேர்த்து ரூ. 250 இற்கு மேல் செலவழிக்கத் தேவையில்லை. அம்மாச்சி, தெற்கில் விவசாய அமைச்சினால் நடத்தப்படும் ‘ஹேலா பொஜூன்’ உணவுச்சாவடிக்குச் சமமானது. 10 முதல் 20 வரையிலான சாவடிகளைக் கொண்ட இவ்வுணவுச்சாலைகள் இலங்கை முழுவதும் பரவலாக உள்ளன. ஒவ்வொரு சாவடிகளும் தலா 2 – 3 பேரைக் கொண்ட, குறிப்பாக பெண்களைக் கொண்ட, குழுக்களினால் நடத்தப்படுகின்றன. 6 மணித்தியாலங்கள் திறந்திருக்கும் இச்சாவடிகளை நடத்தும் பெண்கள் பொருட்கள் கொள்முதல், எரிவாயு மற்றும் நாள் வாடகையாக சுமார் ரூ. 200 செலவு போக மீதியைத் தமது வருமானமாக எடுக்கிறார்கள். மேட்டுக்குடி ஆலோசகர்கள் மற்றும் யூ-ரியூப் போதகர்களது வழிகாட்டல்களை விட, சாதாரண மக்களை தொழில் முகவர்களாக்குவதற்கு அம்மாச்சியை விட சிறந்ததொரு வழிகளும் இருக்க முடியாது.

மாலை 5:00: கொழும்பை அடைதல்.

யாழ்ப்பாணத்திலுள்ள சிறந்த உணவகங்களாக நான் கருதுபவை: உயர் விலைகளில் – யாழ் ஜெற்விங்ஸ் (Jetwings Jaffna), திண்ணை (The Thinnai); மத்திய விலைகளில் – வலம்புரி (Valampuri), ரில்கோ (Tilco), மாங்கோஸ் (Mangoes), யூஎஸ். ஓட்டல் (US Hotel); குறைந்த விலையில் – நல்லூர் பவன் (Nallur Bavan), அம்மாச்சி (Ammachi). இவற்றை விட புகழ் பெற்ற வேறு உயர் மற்றும் குறைந்த விலை ஓட்டல்களும், விடுதிகளும் உணவகங்களும் யாழ்ப்பாணத்தில் உள்ளன.

குறைந்த செலவில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதற்கு: நாளொன்றுக்கு US $ 10.00 இற்குள் சுத்தமான, சுவையான உணவுடன் அடிப்படையான ஆனால் சுத்தமான படுக்கை வசதிகளையும் பெறவேண்டுமாகில் யாழ் கச்சேரிக்கு அருகாமையில் இருக்கும் வை.எம்.சீ.ஏ. (Y.M.C.A.) இனை முயற்சித்துப் பார்க்கலாம். நகர் மத்தியில் இருந்து அரை மணித்தியால நடைதூரத்திலும், யாழ் ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிட நடை தூரத்திலும் மிகவும் வசதியான இடத்தில் இது அமைந்திருக்கிறது. இங்கு நான் ஒரு போதும் தங்கிய அனுபவம் இல்லையெனினும் இவ்விடத்தை நான் பார்வையிட்டதுமல்லாமல் அங்கு நான் அடிக்கடி காலை உணவை (ரூ.70 இற்கு இரண்டு தோசை/ சம்பலுடன் ரொட்டி ஆகியவற்றுடன் மரக்கறியும் ஒரு கிண்ணம் தேனீரும் கிடைக்கும்) உண்பதுண்டு. வை.எம்.சீ.ஏ. இல் நீங்கள் உணவருந்த நேரிட்டால் முச்சக்கர வண்டிக்காரர், பொலிஸ்காரர், பள்ளிச் சிறுவர்கள், கச்சேரியில் பணிபுரியும் அரசாங்க அலுவலர்கள் என யாழ்ப்பாணச் சமூகத்தின் பன்முக அடையாளத்தை இங்கு காணமுடியும். அது மட்டுமல்லாது அவ்வப்போது எனது தரிசனத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இக்கட்டுரை ஜூலை 21, 2018 அன்று வெளியான லங்கா பிஸினஸ் ஒன்லைன் பதிப்பில் பிரசுரமானது.


ஒலிவடிவில் கேட்க

2379 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்