அறிமுகம்
மனிதர் பேரியற்கை மீது கொண்டிருந்த வியப்பு, அச்சம் மற்றும் மரணம், பிறப்புப் பற்றிய சூக்குமமறியா மனோநிலைகள், துயரம் தந்த வாழ்வு போன்றன இயற்கைக்கதீதமான ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவும், அதை நம்பவும் வழிபடவும் செய்தது. அச்சந்தர்ப்பத்தில் குறித்த துயரத்தில் இருந்து விடுபடல் நிகழும் போது அதனை மேலும் மேலும் வழிபடச் செய்தது. அரூப இயற்கையை – வெறுவெளியை அல்லது நிலம், நீர், காற்று, தீ என்பவற்றை வழிபடுதல் பூரண பிடிப்பைத் தராத சூழலில் கல், மரம் முதலான இயற்கைப் பொருட்களைக் குறியீடாகப் பயன்படுத்தி தெய்வத்தை உருநிலைப்படுத்தி வழிபடத் தொடங்கினர். அது ஆவி, முன்னோர், உயிரியம், மனா எனப் பன்முகத்தளத்தில் அமைந்திருந்ததை மானிடவியலாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.
பிற்காலத்தில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி பல்வேறு படித்தரங்களை மானுட வாழ்விலும் சமய வாழ்விலும் ஏற்படுத்திற்று. பல்வேறு பெருந்தெய்வங்களும் அரச, அதிகார ஆதரவுடனுமான சமயங்கள், தத்துவங்களும் உருவாக்கம் பெற்றன. ஒன்றுடன் ஒன்று மோதித் தம்மையே மெய்மை என நிரூபணம் செய்ய அரும்பாடுபட்டன. வலியது வாழ மீதி மறைந்தன. மறைந்தவற்றுள் சில மீள வலிமை பெற்று எழுந்து நின்று நிலைத்தன. பெருங்கோயில்கள், கலையடையாளங்கள் என மனித குல வரலாற்றில் அவை தனித்துவமான சமூகப் பெறுமானத்தைப் பெற்றன.
ஆனால் சாதாரண சனங்களின் வாழ்வில் இயற்கையோடு இயைந்த தெய்வ வழிபாடுகளே இன்றும் நின்று நிலவுகின்றன. தங்கள் வாழ்வில் ஏற்பட்ட நல்லவைகளுக்குத் துணை நின்ற தெய்வங்களைத் தாம் கவனியாது – ஆதரியாது விடும் போது தமது வாழ்வில் பல்வேறு துன்பங்கள் ஏற்படுவதாக அவர்கள் நம்புகின்றனர். தமது குறைகளை நீக்கவும், நன்மை நடக்கவும் இத்தெய்வங்களை வழிபடுகின்றனர். இவை நிலம், தொழில், சாதி என்ற பல்வேறு அடித்தளங்களில் இருந்து உருவான தெய்வங்களாகக் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் ஈழத்துப் புலத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இன்றும் நின்று நிலவும் கிராமியத் தெய்வங்களுள் ஒன்றாக ‘பெத்தப்பா’ காணப்படுகின்றது.
“சேர் உங்களுக்குப் பெத்தப்பா வழிபாடு பற்றி ஏதும் தெரியுமா?” என்ற வினாவோடு தனது ஆய்வேடு தொடர்பாக என்னுடன் 2019 இல் உரையாட வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறையைச் சேர்ந்த செல்வி ப. கீதாஞ்சலிக்கு, “ஓம், தென்மராட்சியில் இருக்க வேண்டும்” என்று பதில் கூறினேன். “நான் கிட்டத்தான் இருக்கிறன். ஒரு கோயிலை வச்சுக் கொண்டு என்ன செய்கிறது?” என்று அவர் மீண்டும் வினாவினர். கச்சாயைப் பூர்வீகமாகக் கொண்ட, தற்பொழுது திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ் பிராந்தியத்திற்குப் பொறுப்பாக இருக்கும் திரு க. கந்தவேளுடன் அவரைத் தொடர்புபடுத்திவிட்டேன். நண்பரும் புவியியல் ஆசிரியருமான திரு மா. மோகனகிருஷ்ணன், புங்குடுதீவில் இவ்வழிபாடு இருப்பதை அறியத் தந்தார். இந்த முன்னறிவுடன் களஆய்வில் ஈடுபட்ட பின்னர் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
பெத்தப்பா
ஈழத்தின் கடலோடு ஒட்டிய வாழ்வியல் புலம் பல்வேறு வழிபாட்டு முறைகளை எமக்குத் தந்தது. பெத்தப்பா கடலை அண்மித்த யாழ்ப்பாணம், புங்குடுதீவு மற்றும் சாவகச்சேரி, கச்சாய் கடல்நீரேரியை அண்மித்த ஊர்களான பாலாவி, கெற்பேலி போன்ற இடங்களில் நின்று நிலவும் தெய்வமாகக் காணப்படுகின்றார். ‘பெத்தப்பா’ எனும் சொல் அகராதிகளில் இடம்பெறவில்லை. அது பேச்சு வழக்குச் சொல்லாகவே காணப்படுகின்றது.
பெத்தப்பா என்பதை பெற்ற அப்பா என்று பொருள் கொள்ளலாம். சங்க இலக்கியத்தில் பெற்றதாய், வளர்ப்புத்தாய் என்போர் நற்றாய், செவிலித்தாய் என அழைக்கப்பட்டமை போல இது அமைகின்றதெனலாம். பெரியப்பா, சித்தப்பா – குஞ்சியப்பா எனும் வழக்காறுகள் தோன்றிய காலத்தில் பெத்தப்பா என்ற சொல் தோன்றி நிலைத்திருக்கலாம். புங்குடுதீவில், பெத்தப்பா தெய்வம் பெத்தப்பு, பெத்தப்பர் எனக்கூறி வழிபடப்படுகின்றார். தமிழில் “தாயை நல்லம்மா என்றும் பேயைப் பெத்தப்பா என்றும் பேச வேண்டிய காலம்” எனும் பழமொழி ஒன்றுண்டு. இது, பேய் – முன்னோர் வழிபாடாக பெத்தப்பா வழிபாடு உருவாகி இருக்கலாம் எனும் ஊகத்துக்கு இடமளிக்கின்றது. அதேவேளை பெத்தப்பா, பெத்தாச்சி என்பவைகளை தாத்தா, அப்பம்மாவை அல்லது பெரியப்பா, பெரியம்மாவைக் குறிப்பதாகப் பொருள் கொள்வோரும் உளர்.
‘இச்சா’ நாவலில் க்ஷோபசக்தி எழுதிய “அம்பாலை மரக்காலைக்காரர் செய்த ஊழைச் சூனியம், அப்பாவை முடக்கி விசர்க் கோலமாக்கியது. பெத்தப்பா மீது யாரோ மூதேவி அழைப்பை ஏவி விட்டிருந்தனர். பெத்தப்பாவுடன் வீட்டுக்கு வந்த புலுடு என்ற பேய் பெத்தாச்சியின் தூசணத்துக்கு நாணி அகன்றது” எனும் வரிகள் இதனைச் சான்றுபடுத்துகின்றன. ‘மூனா கானா’ தினகரனில் (2013.2.10) எழுதிய ‘குஞ்சார் பெத்தப்பா கதையும் வேறு சில கதைகளும்’ இஸ்லாமிய தமிழ்ச் சமூகத்திடம் இச்சொல் இன்றுவரை பெருவழக்கில் இருப்பதை உறுதி செய்கின்றன.
ஸ்ரீ பெத்தம்மா தாய் கோயில் (Sri Peddamma Thalli Temple) அல்லது பெத்தம்மா தல்லி குடி என்பது தெலுங்கானாவின் ஐதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். பெத்தா மற்றும் அம்மா என்ற இரண்டு தனித்தனி சொற்களைக் கொண்ட ‘பெத்தம்மா’ என்ற வார்த்தையின் அர்த்தம் ‘பெரிய தாய்’ என்பதாகும். ‘பெத்தம்மா’ என்பதை ‘பெரிய அம்மன்’ என்றும் பொருள் கொள்ளலாம். கிராமியத் தெய்வங்களின் 11 வடிவங்களில் ஒன்றான இது, மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தெலுங்கானா மக்களின் காவல் தெய்வம் என்ற சிறப்பைக் கொண்டதாகத் திகழ்கிறார். 200 ஆண்டுகளுக்கு முன்பு, மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக, இந்தத் துர்க்கை அம்மன் ஆலயம் கருதப்படுகிறது. இந்தக் கோவில் தோன்றியதற்கு பல்வேறு விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் துன்பத்தை விளைவித்து வந்த ஒரு அசுரனுடன் துர்க்கா தேவி போரிட்டாள். அந்த அசுரனை வதம் செய்தபிறகு, அந்தக் களைப்பு நீங்க ஒரு கிணற்றின் நீரை அருந்தி துர்க்கை அம்மன் தாகம் தணித்துக் கொண்டாள். அப்போது அந்த வழியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் துர்க்கை அம்மனைக் கண்டார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அன்னையின் திருவுருவம் மறைந்தது. தனக்கு தெய்வத்தின் அருட்காட்சி கிடைத்ததை நினைத்து அவர் மனம் மகிழ்ந்தார். அன்னை காட்சி தந்த அந்த இடத்திலே ஒரு சிலை இருப்பதையும் கண்டு அவ்விடத்தில் இந்த பெத்தம்மா ஆலயத்தைக் கட்டினார் என்று இதன் தல வரலாறு கூறப்படுகின்றது. இவ்வாறான தல வரலாறுகளோ கதையாடல்களோ பெத்தப்பா ஆலயங்களுக்கு இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில் பெத்தப்பா வழிபாடு இல்லை. ஈழத்தில் பெத்தம்மா வழிபாடு இருப்பதாக அறியமுடியவில்லை. ஆயினும் தெலுங்கு தேசத்துடன் மற்றும் தமிழகத்துடனான உறவு வழியே ஆண் தெய்வ வழிபாடாக பெத்தப்பா உருவாகி இருக்க வேண்டும்.
ஈழத்தில் பெத்தப்பா வழிபாடு
ஈழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாலாவி, கெற்பேலி முதலான ஊர்களில் பெத்தப்பா வழிபாடு காணப்படுகின்றது. பாலாவி தெற்கில் ஏழு கோயில்களையும்; பாலாவி வடக்கில் ஒரு கோயிலையும்; கெற்பேலி மேற்கில் நான்கு கோயில்களையும் எம்மால் அடையாளப்படுத்த முடிகின்றது. ஆக தென்மராட்சியில் பன்னிரண்டு கோயில்களையும் அதே போல யாழ்ப்பாணத்துத் தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் மூன்று கோயில்களையும் அறிய முடிந்தது. ஈழத்தின் வேறு பிரதேசங்களிலோ தமிழகத்திலோ இவ்வழிபாடு இருப்பதாக அறிய முடியவில்லை.
புங்குடுதீவு பிரதேசத்தில் உள்ள பெத்தப்பா ஆலயங்கள் சிவாலயங்களாகவே இன்று கருதப்பட்டு வருகின்றன. ஆனால் தென்மராட்சிப் பிரதேச ஆலயங்களில் பெத்தப்பா தனித் தெய்வமாக வழிபடப்பட்டு வருகின்றார். தென்மராட்சிப் பிரதேசத்தில் இத்தெய்வத்தை வழிபடுபவர்கள் சாண்டார் இன மக்களாக – எண்ணெய்ச் செக்கு வைத்துத் தொழில் புரிபவர்களாகக் – காணப்படுகின்றனர். ஆயினும் இவர்கள் தொன்று தொட்டு விவசாயத்திலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புங்குடுதீவில் வேளாளர், பறையர் சமூகத்தினரின் வழிபடு தெய்வமாகவே பெத்தப்பா விளங்குகின்றது.
இதனை முன்னோரால் கையளிக்கப்பட்ட வழிபாடாகவும் நீண்ட பாரம்பரியமுடைய வழிபாடாகவும் இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். பெத்தப்பா தெய்வம் குறித்த தனிக் கதையாடல்கள் எதனையும் இம்மக்களால் எடுத்துரைக்க முடியவில்லை. ‘முன்பிருந்தே வழிபடுகின்றோம், எங்கள் தாத்தா காலத்துக்கு முன்பிருந்தே வழிபடுகின்றோம்’ போன்ற வரிகளையே அவர்கள் உதிர்க்கின்றனர். அதேவேளை இத்தெய்வத்தை ஆதரிக்காது விடுமிடத்து தமக்குப் பல்வேறு குறை குற்றங்களும், துன்பங்களும், நோய் நொடிகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஒழுங்காக ஆதரித்துவரும் பட்சத்தில் தமக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது.
பெத்தப்பா பெரும்பாலும் சிவனாகவே கருதப்படுகின்றார். ஆதலால் திரிசூல வழிபாடு அதிகம் காணப்பட்டாலும் சங்கு, விளக்கு, கல், வேல் போன்றவற்றை வைத்து வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது.
பெரும்பாலும் பெத்தப்பா ஆலயங்கள் ஓலைக்குடிசைகளாலும் மண்ணால் கட்டப்பட்டதாகவுமே காணப்படுகின்றன. பிற்காலத்தில் கற்களால் கட்டப்பட்டன. அதிலும் சில கோயில்கள் கருவறை, முன் மண்டபம், உடையனவாகவும் தனியாட்களின் கோயில்களாகவும் காணப்படுகின்றன. இவற்றுக்குப் பரிவார மூர்த்திகள் இல்லை.
ஆயினும் பிற்காலத்தில் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பெத்தப்பா ஆலயம் ஸ்ரீ முருக மூர்த்தி தேவஸ்தானமாக்கப்பட்டு 1982 இல் மஹா கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டு ஆகமக் கோயில் ஆக்கப்பட்டுள்ளது. தீவின் ஏனைய பெத்தப்பா ஆலயங்களும் இன்று ஆகமமயமாதலுக்கு உள்ளாகி விட்டன. தென்மராட்சிப் பிரதேசக் கோயில்கள் பல ஆகமம் சாராத கிராமிய வழிபாட்டினைக் கொண்டமைந்த மக்கள் தெய்வத்தின் ‘மெய்தீண்டி இன்புறத்தக்க’ வழிபாட்டு முறையுடனே காணப்படுகின்றன. ஆயினும் வசதி படைத்த சில ஆலய உரிமையாளர்கள் குறிப்பிட்ட சில சிறப்புத் தின வழிபாடுகளுக்கு பூசகரை அழைக்கும் வழக்கம் காணப்படுகிறது.
இங்கு பெத்தப்பா மூர்க்கத் தெய்வமாக அமையவில்லை. அருட்தெய்வமாகவே மக்களால் நம்பப்படுகின்றார். இத்தெய்வ ஆதரிப்பு முறை தந்தை வழி, தாய் வழி என இரு மரபும் துய்ய நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
பூசையும் வழிபாடும்
இந்த ஆலயங்களில் தத்தம் வசதிக்கேற்ப விளக்கு வைத்தல் நடைபெறுகின்றது. வாரத்தில் ஒரு நாள், ஒவ்வொரு நாளும் வைத்தல் எனும் முறைகள் காணப்படுகின்றன. சில கோயில்களில் காலை, மாலை பூசையாக இது காணப்படுகின்றது. நாளாந்தப் பூசை முறையில், பூசாரி விளக்கு வைத்து கற்பூரம் ஏற்றுவார். வசதியான ஆலயங்களில் பால், பழம், பொங்கல் வைத்து வழிபடும் முறைமையும் காணப்படுகின்றது. இங்கு பூசாரி என்பவர் பரம்பரை பரம்பரையான உரிமையாளராகவே பெரிதும் காணப்படுகின்றார்.
ஏனைய கிராமியத் தெய்வங்களைப் போலவே வைகாசி மாதம் இத் தெய்வத்திற்குச் சிறப்பு வாய்ந்தது. வைகாசி விசாகப் பொங்கலை அடுத்து வரும் திதிகளில் ஆண்டுப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இது தவிர தைப்பூசம், தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, சிவராத்திரி, நவராத்திரி, திருவம்பா போன்ற தினங்களிலும் விசேட பூசை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான விசேட தினங்களில் அவிசு, பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கும் நடைமுறை எல்லா பெத்தப்பா ஆலயங்களிலும் காணப்படுகின்றது.
ஆண்டுப் பொங்கலில் முதல் நிகழ்வாக அமைவது மடைப்பண்டம் எடுத்தல் ஆகும். இதில் பழங்கள், மரக்கறி வகைகள், வெற்றிலை, பாக்கு, பால், அபிஷேகத் திரவியங்கள், பட்டு, உத்தரியம், கற்பூரம், சாம்பிராணி, மஞ்சள், தேசிக்காய், சிலம்பு, கண்ணாடி, பிரம்பு போன்றவை எடுத்துச் செல்லப்படும். அத்தோடு இத்தெய்வத்திற்குப் பலியிடுவதற்காக ஆடு, கோழி என்பனவும், அவற்றை வெட்டுவதற்கான கத்தி அல்லது வாள் என்பனவும் மடைப்பண்டங்களாகக் கொண்டு செல்லப்படுகின்றன. புங்குடுதீவு பெத்தப்பா ஆலயங்களில் பலியிடல் ஆரம்ப காலம் தொட்டே நடைபெறுவதில்லை என எஸ்.கே. சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர்), ஆறுமுகம் யோகநாதன் (வர்த்தகர்) போன்றோர் குறிப்பிடுகின்றனர். மடைப்பண்டத்தை உரிமையாளர் வீட்டிலிருந்து அல்லது அருகில் உள்ள சந்தியில், மரத்தடியில் இருந்து எடுக்கும் வழக்கம் காணப்படுகிறது. பெரும்பாலும் பண்டத்தை நடைப்பயணமாகவே கொண்டு செல்லும் வழக்காறும் இருந்துள்ளது.
இந்நடைப்பயணத்தின் போது கிராமிய வழிபாட்டின் வாத்தியங்களான பறை, உடுக்கு, மத்தளம், சங்கு, சேமக்கலம் சகிதம் ஊர்வலமாகச் செல்லுதலே வழக்கமாக உள்ளது. கொண்டு செல்லப்பட்ட மடைப்பண்டத்தில் பொங்கல் வளந்தை பூசாரி, வாத்தியங்களின் இசைகேற்ப மேலே எறிந்தெறிந்து ஏந்துவார். இது ‘தூளி பிடித்தல்’ எனப்படும். இது எல்லாத் திக்குகளையும் நோக்கி எறிந்து ஏந்தப்படும். இது பக்தியுணர்வைத் தரும் சடங்காகக் கூறப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் நடைபெறும் இப்பொங்கலுக்கு ஏனைய தெய்வங்களால் இடையூறு நிகழாமல் இருக்கும் வண்ணம் பூசாரியால் மேற்கொள்ளப்படும் சடங்கு ‘பரிகலம் அழைத்தல்’ ஆகும். மந்திர உச்சாடனத்துடன் கூடிய சடங்காக இது நிகழ்த்தப்படுகிறது.
பூசாரி வளந்துப் பானை வைத்து பொங்கலிட, ஏனைய மக்களும் பொங்கலிட்டு பூசையில் மடை பரவுவர். இம்மடை பரவுதல் பெரும்பாலான கோயில்களில் உள்மடை, வெளிமடை எனப் பரவப்படுகிறது. உள்மடை பூசாரி மற்றும் கோயில் உரித்துடையவர்களாலும் வெளிமடை ஏனையவர்களாலும் வைக்கப்படும். உள்மடையில் காய்மடை, பூமடை, பழமடை என்பன அடுக்காக வைக்கப்பட்டிருக்கும். உள்மடை, பிரசாதத்துடன் கோயில் உரித்துடையவர்களுக்கு வழங்கப்படும். வெளிமடையில் பொங்கல், பலகாரங்கள், அவிசு, அன்னதானக் கறி, சோறு உள்ளிட்டவை படைக்கப்படும். இவை ஆலயத் தொண்டர்கள், அடியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த உள்மடை, வெளிமடைச் செயற்பாட்டை வர்க்க வேறுபாடாகவே எண்ணத் தோன்றுகிறது.
பூசாரி கலையாடி குறி சொல்லுகின்ற – கட்டுச் சொல்லுகின்ற நடைமுறையும் காணப்படுகிறது. அதேவேளை கோயில் உரித்தாளரும் கலையாடும் முறைமையும் சில ஆலயங்களில் காணப்படுகின்றது. குறித்த தாள கதியில் வாத்தியங்கள் இசைக்கப்பட அதற்கேற்ற கலையாடல் நிகழும். ஒருவர் மீது பல தெய்வங்கள் மாறி மாறி உருப்பெறுதலும் உண்டு. இது ‘கலை மாற்றி ஆடுதல்’ எனப்படுகிறது. கட்டுக்கேட்போருக்குக் கட்டுச்சொல்லி திருநீறு இடப்படும். கட்டுக்கேட்போர் அவர் உரைத்ததற்கு ஏற்ப பரிகாரங்களை தம் பெத்தப்பா தெய்வத்துக்குச் செய்துவரும் வழக்கமும் காணப்படுகிறது. காவடி, கற்பூரச்சட்டி, பாற்செம்பு முதலானவை எடுத்தல், விரதமிருந்து மடை பரவுதல், நேர்த்திப் பொருட்களை வாங்கி வழங்குதல் போன்றன அவற்றுட் சில.
பெரும்பாலான தென்மராட்சிக் கோயில்களில் பலியிடும்முறை தொன்றுதொட்டுக் காணப்பட்டு வந்துள்ளதெனினும், இன்று அது அருகி வருகிறது. ஆடு, கோழி முதலானவற்றை வாங்கி காதறுத்து விடுதல், சிறு கீறு கீறி இரத்தம் காணல் அல்லது ஆலயத்துக்கு நேர்ந்துவிடுதல் முதலியனவே இன்று பெரிதும் காணப்படுகின்றன.
இறுதியாக நடைபெறும் சடங்கு ‘வழிவெட்டுதல்’ ஆகும். பொங்கல் முடிந்தவுடன் மடைப்பண்டங்களான இளநீர், தேசிக்காய் போன்றவற்றோடு ஏனைய பொருட்களையும் எடுத்துக்கொண்டு பூசாரியும் ஆலய உரித்துடையோரும் சிறிது தூரம் சென்று அவற்றைப் படைப்பர். செல்லும் வழியில் இளநீர், தேசிக்காய் என்பவற்றை வெட்டிச் சென்று படையலிட்ட பின் தெய்வத்துக்கு நன்றி சொல்லி, ஆண்டுப் பொங்கலை நிறைவு செய்வதாகவும், அடுத்த ஆண்டுப் பொங்கல் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டியும் தடை வெட்டி வருவார்.
தென்மராட்சிப் பாலாவி பிரதேச பெத்தப்பா கோயில் ஒன்றில் பெண் பூசாரி பூசை நிகழ்த்துவதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் வழக்கில் இருக்கும் கிராமியத் தெய்வக்கோயில்களில் விளக்கு வைத்தல் முதலியன பெண்களால் செய்யப்பட்டு வரும்போதும், பூசாரிகளாக ஆண்களே காணப்படும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. தனது கணவனின் பரம்பரைக் கோயிலில் பூசாரியாக இருக்கும் திருமதி அருந்தவமலர் தர்மலிங்கம், கணவன் இல்லாததால் தானே பூசை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சில அவதானிப்புகள்
- பெத்தப்பா என்னும் சொல் சமயத்துக்கு அப்பாலான நாட்டார் வழக்காற்றுச் சொல்லாக விளங்குகின்றது.
- பெத்தப்பா சுவாமி கோவில்கள் தென்மராட்சி பாலாவி, கெற்பேலி கிராமங்களிலும் புங்குடுதீவிலும் மட்டுமே காணப்படுகின்றன.
- இத் தெய்வம் பற்றிய தொல் மரபுக் கதைகள் எதையும் அறிய முடியவில்லை.
- பெத்தப்பா எனும் இத் தெய்வம் சிவனாகவே பெரிதும் சித்தரிக்கப்படுகின்றது. ஆயினும் புங்குடுதீவின் ஊரதீவில் உள்ள பெத்தப்பா, தொன்று தொட்டு முருகனாக வழிபடப்பட்டு வருகின்றது. முருகன் – தகப்பன்சுவாமி; ஆகவே பெத்தப்பா எனும் தெய்வம் முருகனாகவே இருக்கலாம் அல்லது இது சிவ – முருக இணைவு வழிபாடாகவும் உருவாகி இருக்கலாம்.
- தென்மராட்சியில் சாண்டார் சமூகத்தின் குலதெய்வமாக காணப்படும் இத்தெய்வம் புங்குடுதீவில் வேளாளர், பறையர் சமூகத்தினரால் வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. இம்மூன்று சமூகத்தினரும் நிலத்தோடும் விவசாயத்தோடும் தொடர்புபட்டவர்களாக இருப்பது கவனத்தை கோரும் விடயமாகும்.
- புங்குடுதீவு பெத்தப்பா கோயில்கள் ஆகமமயமாதலுக்கு உள்ளாகிவிட்டன. தம் அடையாளத்தைத் துறந்து வருகின்றன. தென்மராட்சி ஆலயங்களில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பினும் அவை முழுமையான ஆகமமயமாதலுக்கு இன்னும் உள்ளாகவில்லை.
- பெத்தம்மா வழிபாடும் சொல் வழக்கும் தெலுங்கில் முதன்மை பெற்றவை. அதன் வழி வந்த சொல்லாக பெத்தப்பா எனும் சொல் வழக்கும் தெய்வமும் ஈழத்தவர்களிடம் செல்வாக்குப்பெற்று இருக்கலாம். முகமது ரியாஸின் ‘சிகிரி மார்க்கம்’ சிறுகதைத் தொகுப்பில் வரும் பெத்தம்மா எனும் சொல் தெலுங்கு பரப்பில் இருந்து (வணிகம் மற்றும் குடியேற்றம் என்பனவற்றின் ஊடாக) வந்தமையை உறுதி செய்கின்றது. ஆக பெத்தப்பா, பண்பாட்டு ஆய்வை கோரி நிற்கும் ஒரு வழிபாடாக – சொல்லாகத் திகழ்கின்றது.
முடிவுரை
தமிழகம், தெலுங்கானா போன்ற பிரதேசங்களில் பெத்தம்மா வழிபாடு காணப்பட்ட போதும் ஈழத்தில் இவ்வழிபாடு இல்லை. ஆயினும் பெத்தப்பா வழிபாடு ஈழத்திலேயே காணப்படுகின்றது. ஆண் வழிச் சமூக அமைப்பின் தொடர்ச்சியாக இவ்வழிபாடு விளங்குகிறது எனலாம். தென்மராட்சி, புங்குடுதீவுப் பிரதேசங்களில் காணப்படும் இவ்வழிபாடு சாண்டார், பறையர், வேளாளர் சமூகங்களில் குலதெய்வ வழிபாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சாதியப் போராட்டம் நிகழ்ந்த புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் சூழலில் பறையர் சமூகத்தவராலும் வேளாளராலும் குலதெய்வமாக பெத்தப்பா வழிபடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கண்ணகி கோயில் திருவிழா பற்றிய அறிவித்தலில் பறையர் சமூகத்தை இக்கால நிர்வாகத்தினர், ‘காராம் பசு வாகனத் திருவிழா (மூன்றாம் திருவிழா) உபயகாரர்கள் பெத்தப்பா சிவாலயம்’ எனக் குறிப்பிடுதல் சாதியம் தாண்டிய குலவழிபாடாக பெத்தப்பா வழிபாடு இருத்தலை உணர்த்துகின்றது. அதற்கு தெய்வத்தின் மீது மக்கள் கொண்டிருந்த அதீத நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் இத்தெய்வம் பற்றிய கதைகள், அற்புதங்கள் பற்றிய உரையாடல்கள் பேணப்படாதது வருத்தத்துக்கும் ஆச்சரியத்துக்கும் உரியதாகும். இன்று கலையாடுதல், மடைப் பண்டம் எடுத்தல், உள்ளிட்ட பல பாரம்பரியங்கள் அருகிவருகின்றன. கற்கோயில்களாகப் பெரும்பாலான கோயில்கள் மாறி வருகின்றன. முன்மண்டபமுடையதான ஆலயங்கள் சிலவற்றில் சாதாரண தினங்களில் பூசாரியும்; விசேட தினங்களில் பிராமணர் அல்லது சைவக்குருக்களும் பூசை செய்யும் முறைமையை அவதானிக்க முடிகிறது. மேனிலையாக்கச் சிந்தனை வழி ஆகம மரபுக்கு உட்பட்டு வரும் இவ்வழிபாடு, அதன் கதைகள் போலவே சிறிது காலத்தில் காணாமல் போவதற்கும், இதனூடாக சமூக வரலாற்றின் ஒரு பகுதி இழக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. இது தமிழர் அல்லது தமிழ் பேசும் மக்களின் அடையாளச் சிதைவுக்கும் வழிவகுக்கும் எனலாம்.