வடக்கு - கிழக்கு அபிவிருத்தியில் வீதிகளின் வகிபாகம் - வளங்களும் வாய்ப்புகளும்
Arts
10 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு அபிவிருத்தியில் வீதிகளின் வகிபாகம் – வளங்களும் வாய்ப்புகளும்

December 14, 2024 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

சகல துறைகளின் ஆக்க மூலங்களையும் இணைப்புச்செய்து செயற்பட வைப்பதன் மூலம்  பொருளாதார அபிவிருத்தியினை தூண்டுகின்ற கட்டமைப்பாக வீதிகள் செயற்படுகின்றன. வீதிகளின் இணைப்பின் மூலம் உற்பத்தி வளங்கள் பரிமாற்றப்படுகின்றன. மனிதர்கள் இடமாற்றப்படுகின்றனர். விளைச்சல்கள் சந்தைகளை நோக்கி எடுத்து வரப்படுகின்றன. உற்பத்தியாளர்கள் நல்ல வருமானத்தைப் பெறுகின்றனர். நுகர்வாளர்கள் தரமும் மலிவுமான பொருள்களை நுகரக்கூடியதாக இருக்கிறது. கொண்டுவரப்படும் உள்ளீட்டுப் பொருட்கள் தொழிற்சாலைகளை இயங்கச் செய்கிறது. சுற்றுலாவின் கவர்ச்சிகரமான இடங்களைச்சென்று பார்வையிட்டு மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள முடிகிறது. போட்டித் தொழில்நுட்பத்தின் மூலம் சந்தை நிர்ணயிக்கும் விலை காரணமாக புதிய உற்பத்திகள் தொடர்ந்தும் சந்தையில் நிலைத்திருக்க கூடியதாகவிருக்கிறது. கேள்வியும் நிரம்பலும் தூய போட்டிக்குட்பட்டு பொருள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நாட்டுக்கு வெளியிலிருந்து கொண்டு வரப்படும் மூலப்பொருள்களும் முடிவுப்பொருட்களும் துறைமுகத்திலிருந்து தொழில் முனைவோருக்குச் சென்று சேர்கிறது. இதனால் தான் அரச முதலீட்டில் வீதித்துறை, பொருளாதார உட்கட்டமைப்புத் துறையாக முக்கியத்துவப்படுகிறது. உள்நாட்டு யுத்தத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் நோக்கில் இடம்பெற்ற சண்டைகளே அதிகமாக இருந்திருந்தன. பின் பதவிக்கு வந்த அரசு வீதிகளின் அபிவிருத்தியில் காட்டிய அதீத கரிசனை நாட்டின் தார் வீதிகளை ‘கார்ப்பெற்’ வீதிகளாகத் தரமுயர்த்தியது. அதிவேக நெடுஞ்சாலை முறை, முதல் முதலாக நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு தென் மாகாணம் கொழும்புடன் இணைப்புச் செய்யப்பட்டது. கட்டுநாயக்கா விமானத்தளம் கொழும்புடன் தொடர்புபடுத்தப்பட்டது. நேரமும் போக்குவரத்துச் செலவும் குறைக்கப்பட்ட பயணங்கள் நடைபெறத் தொடங்கின. இந்த வளர்ச்சியின் பயனாக வடக்கும் கிழக்கும் மத்திய அரசுடன் நெருக்கமாக்கப்பட்டன. செயலிழந்திருந்த புகையிரத மார்க்கங்களும் மீள புனரமைப்புச் செய்யப்பட்டன. கொழும்பிலிருந்து தம்புள்ளை வரையிலுமான அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்தி முற்றுப் பெற்றதும், வடக்கையும் கிழக்கையும் இவ் நெடுஞ்சாலையுடன் இணைப்புச் செய்யும் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அமுலாக்கப்படும் போது இலங்கையின் முழு நீளப் போக்குவரத்துத் தூரமும் சுமார் ஐந்து மணித்தியாலத்தில் நிறைவு செய்யக்கூடியதாக மாற்றம் பெற்றுவிடும் என்பது தான் யதார்த்தமாகும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வீதிக் கட்டமைப்பு 

வீதிகளின் நிர்வாகத்தின் அவற்றின் தரத்தினை அடிப்படையாகக் கொண்டு வகுப்பு அடிப்படையில் வீதிகளை வகைப்படுத்தும் முறைமை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வகையினது அடிப்படையில் அவற்றினை முகாமை செய்யும் அதிகார அமைப்பும் நிர்ணயம் செய்யப்படுகின்றது. பிரதான வீதிகள் A வகை வீதிகள், B வகை வீதிகள், AB வகை வீதிகள் என மூன்று வகையாகப் பிரிக்கப்படுவதுடன், ‘A’ தர வீதிகள் நாடு முழுவதும் நிர்வகிப்பதற்கு ஏற்றவகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆளுகையின் கீழேயே கொண்டுவரப்பட்டுள்ளன. B தர வீதிகளை நிர்வகிப்பதற்கான பொறுப்பு வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது. C,D தர வீதிகளின் நிர்வகிப்பு உள்ளூர் அதிகார சபைகளான மாநகர சபைகள், நகரசபைகள் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் 15 அடிக்கு மேற்பட்ட அகலத்தை கொண்ட அனைத்து உள்ளுர் வீதிகளும் இவ்வகைப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது. 15 அடிக்கு குறைந்த வீதிகள் நடைபாதைகள் என்ற வகையின் கீழ் கொள்ளப்படுகின்றன. இத்துடன் கடற்கரைகளிலுள்ள வீதிகள் மீன்பிடித் திணைக்களத்தின் பொறுப்பிலும், நீர் விநியோகப் பகுதிகளிலுள்ள விவசாய வீதிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறுப்பிலும் விடப்பட்டுள்ளது. 

இந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் வீதிகளைப் பற்றி ஆராயும் போது, வகைப்பாட்டின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் A4 தரமுடைய தேசிய வீதிகள் 13 காணப்படுவதுடன், இவை 561.67 கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதிகளாக இருக்கின்றன. வடக்கு மாகாணத்தில் 730.49 கிலோமீற்றர் தூரம் கொண்ட 11 வீதிகள் A4 தர வீதிகளாகக் காணப்படுகின்றன. மாவட்ட ரீதியாக இதனை பாகுபடுத்தின் 251.25 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் அம்பாறையிலும், 282.59 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் யாழ்ப்பாணத்திலும், 165.09 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் மட்டக்களப்பிலும், 145.33 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் திருகோணமலையிலும், 128.91 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் வவுனியாவிலும், 113.03 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் மன்னாரிலும், 106.04 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் கிளிநொச்சியிலும், 99.92 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் முல்லைத்தீவிலும் காணப்படுகின்றன. இவ்வீதிகள் முழுவதுமாக கார்ப்பெற் வீதிகளாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள வீதிகளாகும். இதே போல B தர வீதிகளை நோக்கும் போது, வட மாகாணத்தில் 511.91 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் இத்தர வீதிகளாகவுள்ளன. மாவட்ட அடிப்படையில் நோக்கும் போது யாழ்ப்பாணத்தில் 210.33 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகளும், முல்லைத்தீவில் 101.83 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகளும், மன்னாரில் 91.58 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகளும், வவுனியாவில் 58.56 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகளும், கிளிநொச்சியில் 49.61 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகளும் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் 58 B தர வீதிகள் 582 கிலோமீற்றர் தூரமுடையதாகக் காணப்படுகின்றன. மாவட்ட அடிப்படையில் நோக்கும் போது அம்பாறையில் 292.8 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகளும், மட்டக்களப்பில் 60.6 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகளும், திருகோணமலையில் 228.5 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகளும் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் 04 AB தர வீதிகள், 57.4 கிலோமீற்றர் தூர அளவில் காணப்படுகின்றன. இவ்வகையில் மொத்தமாக 1201.6 கிலோமீற்றர் AB தரங்களுடைய வீதிகள் இம்மாகாணத்தில் காணப்படுகின்றன. இந்த வீதிகளில் 807.3 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் நன்கு புனரமைக்கப்பட்ட வீதிகளாக இருப்பதுடன், புனரமைப்பு தேவைப்படும் வீதிகளாக 256.6 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் காணப்படுகின்றன.

மாகாண நிர்வாகத்துக்குத் பொறுப்பளிக்கப்பட்டு வீதி அபிவிருத்தி திணைக்களத்தாலும் ஏனைய திணைக்களங்களாலும் முகாமை செய்யப்பட்டு வரும் C,D தர வீதிகளாக கிழக்கு மாகாணத்தில் 1228 கிலோமீற்றர் தூரமுடைய வீதிகள் காணப்படுகின்றன. இதில் அம்பாறை மாவட்டத்தில் 323.4 கிலோமீற்றர் தூரமுடைய 120 C தர வீதிகளும், 153.4 கிலோமீற்றர் தூரமுடைய 35 D தர வீதிகளும் உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 380.4 கிலோமீற்றர் தூரமுடைய 88 C தர வீதிகளும், 42.5 கிலோமீற்றர் தூரமுடைய 12 D தர வீதிகளும் காணப்படுகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் 225.8 கிலோமீற்றர் நீளமான 44 C தர வீதிகளும், 102 கிலோமீற்றர் நீளமான 66 D தர வீதிகளும் காணப்படுகின்றன. இதில் மொத்தமாக C தரம் கொண்ட 929.7 கிலோமீற்றர் நீளம் கொண்ட 252 வீதிகளும், D தரம் கொண்ட 298.2 கிலோமீற்றர் நீளமான 116  வீதிகளும் காணப்படுகின்றன. 

உள்ளூர் அதிகார சபைகளின் நிர்வகிப்பிலுள்ள C,D வீதிகளை நோக்கும் போது கிழக்கு மாகாணத்தில் 18,698 வீதிகளை உள்ளடக்கிய 12,747 கிலோமீற்றர் நீளமான வீதிகள் காணப்படுகின்றன. இதில் அம்பாறை மாவட்டத்தில் 7,492 வீதிகளை உள்ளடக்கிய 6,233 கிலோமீற்றர் நீளமான வீதிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 6,475 வீதிகளை உள்ளடக்கிய 3,872 கிலோமீற்றர் நீளமான வீதிகளும், திருகோணமலை மாவட்டத்தில் 4,731 வீதிகளை உள்ளடக்கிய 2,641 கிலோமீற்றர் நீளமான வீதிகளும் காணப்படுகின்றன. இந்த வீதிகளின் செயற்பாட்டு தரத்தை நோக்கும் போது, 597 கிலோமீற்றர் நீளமான 634 வீதிகள் தார் வீதிகளாகவும், 2,322 கிலோமீற்றர் நீளமான 4,702 வீதிகள் கொங்கிறீற் வகை சார்ந்த சீமெந்து வீதிகளாகவும், 7,925 கிலோமீற்றர் நீளமான 7,545 வீதிகள் கிறவல் வீதிகளாகவும், 2,482 கிலோமீற்றர் நீளமான 4,336 வீதிகள் மண்வீதிகளாகவும் காணப்படுகின்றன. இந்தவகையில் வீதிகளின் அபிவிருத்தி அடிப்படையில் நோக்கும் போது, கிழக்கு மாகாணத்தில் 7,519 கிலோமீற்றர் நீளமான 7,462 வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகளாகவும், 1,394 கிலோமீற்றர் நீளமான 2,147 வீதிகள் ஓரளவு புனரமைப்புச் செய்யப்பட்ட வீதிகளாகவும், 6,479 கிலோமீற்றர் நீளமான 8,950 வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகளாகவும் காணப்படுகின்றன. இந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் மொத்த வீதிகளில் 50% உட்பட்ட வீதிகளே புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், புனரமைப்புச் செய்யப்பட்ட வேண்டிய வீதிகளாக கிராமிய வீதிகளே அதிகளவு காணப்படுவதனால், கிராமத்தின் உற்பத்தியை நகரச் சந்தைக்கு இணைப்புச் செய்யும் வலையமைப்பு போதிய செயற்திறனுடன் செயற்படாதேயுள்ளது.   

உள்ளூர் அதிகார சபைகளின் நிர்வகிப்பின் கீழ் உள்ள வடக்கு மாகாண வீதிகளை நோக்கும் போது, மொத்தமாக 10,864.5 கிலோமீற்றர் நீளமான 21,172 வீதிகள் காணப்படுவதுடன், இதில் மாநகர சபையின் கீழ் 178 கிலோமீற்றர் நீளமான 482 வீதிகளும் காணப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,730 கிலோமீற்றர் நீளமான 10,263 வீதிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2,047 கிலோமீற்றர் நீளமான 2,425 வீதிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,475 கிலோமீற்றர் நீளமான 2,898 வீதிகளும், மன்னார் மாவட்டத்தில் 1,495 கிலோமீற்றர் நீளமான 2,774 வீதிகளும், வவுனியா மாவட்டத்தில் 1,938 கிலோமீற்றர் நீளமான 2,330 வீதிகளும் காணப்படுகின்றன.

வீதிகளின் அபிவிருத்தி என்பது பொருளாதார ரீதியில் பார்க்கும் போது முக்கியத்துவம் வாய்ந்தது. வீதி அபிவிருத்திக்காகச் செலவிடப்படும் செலவீனத்தை ஒப்பீட்டுச் செலவு நலன் அடிப்படையில் நோக்கும் போது, இதுவரை முதலிடப்பட்ட தொகையளவிற்கு அது போதிய நன்மை தரவில்லை என்றே கருதப்படுகிறது. கிராமியப் பொருளாதாரத்திற்காக செலவிடப்படும் நிதியினூடாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய உற்பத்தியளவின் நன்மைகளுடன் ஒப்பிடும் போது, பொது முதலீட்டுத் நிகழ்ச்சித்திட்டமான வீதிகளின் அபிவிருத்தியின் மீதான முதலீடு அதிகமாகிவிட்டது என்ற விமர்சனமே முன்வைக்கப்படுகிறது. வளர்ந்து வரும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் வீதி அபிவிருத்தியின் சவால் மிகப் பலமானது. ஆங்காங்கே பரந்து விரிந்துள்ள நிலப்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குடியிருக்கும் மக்களுக்காக பொதுச்சேவைகளை உறுதிப்படுத்தும் போது, செய்யப்படும் செலவுக்கேற்ப பொருளாதார நன்மைகளை ஈட்டிக்கொள்ள முடியாதிருக்கின்றது. சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் குடியிருப்புகள் தொகுதிகளாக்கப்பட்டு சகலருக்கும் வீட்டு வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் தொடர்மாடி வீடுகளின் முகாமைத்துவ முறையில், வீதி அபிவிருத்தி, மின்சாரம், நீர் வழங்கல், பொதுவசதிகள் என்பன மிகக் குறைந்த செலவில் மிக அதிகளவான மக்களுக்கு பயனளிக்கும் வகையில் முதலீடு செய்யப்படுகின்றன. அதனால் முதலீட்டின் விளைபயனும் உயர்வாக இருக்கிறது. ஆனால் எமது நாட்டில் வீதி அபிவிருத்திக்கான தேவைப்பாடு உயர்வாக காணப்படும் அதேநேரம், பரவல் குடியிருப்பு முறைமை காரணமாக, இதன்மூலம் பயன்பெறுவோரின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இத்தேவையைப் புறந் தள்ளும் போது, கவனிக்கப்படாத கிராமங்களின் வளர்ச்சியின்மை, நாட்டின் மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்துகிறது. இந்த முரண்நிலை காரணமாகவே புதிய பல அபிவிருத்தி முன்மொழிவுகளில், வீதி அபிவிருத்தித் துறையானது முதன்மைபெற்று வருகிறது. நாட்டின் மிகப்பெரிய நிலப்பரப்பை உள்ளடக்கிய பரந்த பரப்பளவினைக் கொண்ட பகுதிகள் என்ற வகையில், 8 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு – கிழக்கு மாகாணங்களில், வீதிகளின் இணைப்பும் புனரமைப்பும் தவிர்க்க முடியாத அபிவிருத்தி வேலைத்திட்டமாகவே இருந்து வருகிறது.

பின்வருவனவற்றை வீதிகளின் அபிவிருத்தியால் பெறப்படும் நன்மைகள் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்: 

  1. வீதிகளின் பங்களிப்பின் மூலம் உற்பத்தி விளைபொருட்கள் விரைவாகச் சந்தைக்குச் சென்று சேர்கின்றன.
  2. உற்பத்தி முயற்சிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் செலவு குறைவதுடன், அதிகளவான உள்ளீடுகள் எடுத்தும் வரப்படுகின்றன.
  3. உள்ளீட்டு, வெளியீட்டு விளைபொருட்களின் உற்பத்திச் செலவு குறைந்த விலையில் தரமாக நுகர்வோரைச் சென்றடைதல்.
  4. வீதி இணைப்புகளும் வீதி மேம்பாடும் காரணமாக பழுதடையக்கூடிய உற்பத்தி பொருள்களுக்கான விரைவுச் சந்தை உறுதிப்படுத்தப்படல்.
  5. சுற்றுலாத்துறையின் வளர்ச்சியையும், அதனுடன் தொடர்புபட்ட துணைத் துறைகளின் வருமான வளர்ச்சியையும் நிர்ணயிக்கும் சுற்றுலாக்களின் நுகர்வு அதிகரித்தல்.
  6. தேவையற்ற உயிரிழப்புகள் குறைக்கப்படல்.
  7. சமூக ஊடாட்டம் அதிகரிக்கப்படுவதனூடாக, பாரம்பரியச் சமூகங்களின் பிற்போக்குப் பழக்கங்கள் மாற்றப்படுவதுடன், பன்முக வளர்ச்சி தூண்டப்படுகிறது.
  8. நேரவிரயம், பணவிரயம் என்பன தவிர்க்கப்பட்டு தரமும் செலவுச் சுருக்கமுமான பயணங்கள் உறுதிப்படுத்தப்படல்.
  9. உள்ளூர் வளங்களின் உத்தமப் பயன்பாட்டை தூண்டுவதன் மூலம் பேண்தகு பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.
  10. உலகளாவிய பொருள் உற்பத்திக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் ஊக்கமளிக்கும் சுயசார்பு பொருளாதார தொழில்முனைவுகள் உருவாகுவதற்கான அடிப்படை ஊக்குவிப்பை வீதிகளின் அபிவிருத்தி தூண்டுகிறது.

அந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வீதிகளின் அபிவிருத்தியில் A,B தர வீதிகளின் புனரமைப்பு மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளதனால் இவ்விரு மாகாணங்களின் போக்குவரத்தும் பயண இணைப்புகளும் சிறப்பானதாக இருக்கின்றன. அதேநேரத்தில் C,D தர வீதிகளின் புனரமைப்பு சுமாராக 50% மட்டுமே நிறைவடைந்துள்ளது. இவ்வீதிகளே கிராமிய மட்டத்தில் உள்ளூர் கிராமங்களையும் பயிர்செய்யும் நிலங்கள், மீன்பிடித் துறைகள் போன்றவற்றையும் இணைப்புச் செய்யும் வீதிகளாகக் காணப்படுவதால், பிரதான நன்மைகள் பல வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று சேர்வது மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சந்தைப்படுத்தல், உள்ளீட்டு நிரம்பல் ஆகிய முக்கிய விடயங்களை நெருக்கடிக்குரியதாக மாற்றியுள்ள பிரதான காரணிகளில் ஒன்றாக இவ்வீதிகளின் அபிவிருத்தியின்மை காணப்படுகிறது. இதனைவிட உள்ளூர் அதிகாரசபைகளினால் முகாமை செய்யப்படும் உள்ளூர் வீதிகள், அதன் பொறுப்புக்களில் மூன்றில் ஒன்றைத் தானும் தரமாக நிர்வகிக்கும் நிலையை எட்டாதிருக்கின்றது. உள்ளூர் அதிகாரசபைகள் தம்மால் திரட்டப்படும் வருமானத்திலிருந்தே இந்த நிதிச்செலவை ஈடுசெய்தே இவ் வீதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளதால், வருமானம் குறைந்த கிராமிய மட்டப் பிரதேசசபைகள், உள்ளூர் வீதிகளுக்காக வருடம் முழுவதுமே எதனையுமே ஒதுக்கீடு செய்யாதவையாக இருந்து வருகின்றன. வருமானங்களைத் திரட்டுவதில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளும் ஆளணியின் வினைத்திறனின்மையும் உள்ளூர் அதிகார சபைகளின் வருமானத்தை உறுதி செய்யாத நிலையில், கிராமிய உள்ளூர் வீதிகளுக்குத் தேவைப்படும் பெருந்தொகை நிதியும் பெறப்படமுடியாமலேயுள்ளது. மேலைநாடுகளில், வீட்டு உரிமையாளர்கள் பிரதேச சபைகளுக்கு மட்டுமே வீடுகளை வாடகைக்கு வழங்குகின்றனர். பிரதேச சபைகளே வாடகைக் குடியிருப்பாளர்களை இனங்கண்டு இவ்வீடுகளை வாடகைக்கு வழங்குகிறது. இதனால் பிரதேச சபைகளுக்கு வீட்டு வாடகை மூலம் பெருமளவு வருமானம் கிடைக்கிறது. பிரதேச சபைகளினது வருமானத்திலிருந்தே ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுவதால், நிர்வாகச் செலவீனங்களும் திட்டமிடப்பட்டவையாகவே காணப்படுகிறது. அத்துடன் வருடாந்தம் வீதி அபிவிருத்திக்காக கணிசமான நிதி பெறப்பட்டு, உள்ளூர் வீதிகளின் பராமரிப்பு உயர்ந்த தரத்தில் பேணப்படுகிறது. இவை எமது நாட்டில் அமுலாக்க முடியாதவையல்ல. சட்டவாக்கப் பலமுள்ள உள்ளூர் அதிகார சபைகள், வருமானத்தைத் திரட்டும் புதிய பணிகளை முன்னெடுத்துச் செல்வது அவசியமாகும். 


ஒலிவடிவில் கேட்க

3588 பார்வைகள்

About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஷ்ட வளவாளராகவும், பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகின்ற அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் 2012ஆம் ஆண்டு ‘திட்டமிடல் மூல தத்துவங்கள்’ என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்