இலங்கையில் இந்தியத் தொழிலாளர்கள் : இருண்ட வாழ்வின் நேரடிச் சாட்சியம்
Arts
24 நிமிட வாசிப்பு

இலங்கையில் இந்தியத் தொழிலாளர்கள் : இருண்ட வாழ்வின் நேரடிச் சாட்சியம்

December 17, 2024 | Ezhuna

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.  நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூலங்களைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றுள் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில், ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள நூல்களையும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நூல்களையும் மதிப்பிடுவதன் மூலம் நடேசய்யரின் பங்களிப்புகளையும், அவர் காலத்து சமூக, அரசியல் அசைவையும் கண்டுகொள்ளவும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் நிலவும் இடைவெளியை நிரப்பவும் எதிர்கால ஆய்வுகளுக்கான திசைகாட்டல்களை வழங்கவும் ‘கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை’ எனும் இத் தொடர் எழுதப்படுகிறது.

இலங்கைப் பெருந்தோட்டங்களில் தொடக்ககாலத்தில் குடியேறிய தொழிலாளர்களின் வாழ்க்கைநிலைமையை முழுமையாக அறிந்துகொள்வதற்குப் போதுமான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. காலனிய அறிக்கைகள், காலனிய அதிகாரிகளின் பதிவுகள் முதலானவற்றில் இடம்பெறுகின்ற தகவல்களையும் வாய்மொழி வழக்காறுகளில் ஆவணம் பெற்றுள்ள செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு அக்கால வாழ்க்கை நிலைமையை ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது. அத்தகவல்கள் விவரிக்கின்ற தோட்டத் தொழிலாளரின் வாழ்வு, மிகவும் துயர் நிறைந்ததாகும். “ ‘அருவருப்புத்தரும் அநீதி’, ‘கொடுமை’, ‘நீக்ரோ அடிமைகளைவிடக் கேவலம்’ ” (மேற்கோள்: குமாரி ஜயவர்தன, 2009, இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்: 74) எனக் காலனிய அதிகாரிகளே குறிப்பிடுமளவுக்கு மோசமானதாக அவ்வாழ்க்கை நிலைமை இருந்துள்ளது.

பெருந்தோட்டங்களின் மூடுண்ட கட்டமைப்புக்குள் சுதந்திரமான அசைவற்று, கட்டுண்ட ஊழியர்களாக வாழ்ந்துவந்த தொழிலாளர்கள், அதிதீவிர சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகி வந்துள்ளனர். எவ்வித வாழ்க்கைத்தர மேம்பாடுமற்று நிர்ப்பந்திக்கப்பட்ட இருள்வெளியில் உழைப்பதற்கு மட்டும் பிறந்த வெறும் கூலிகளாகவே அவர்கள் நீண்டகாலமாக நடத்தப்பட்டுள்ளனர். இறுக்கமான கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் பெருந்தோட்டங்களில் மிகுந்திருந்துள்ளன. போதிய உட்கட்டமைப்பு வசதிகளோ சுகாதார – வைத்திய வசதிகளோ கல்வி வசதிகளோ தொழிலாளர்களுக்கென ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. தொழிலாளர்களின் தேவைகளையோ முறைப்பாடுகளையோ முன்வைப்பதற்கான எவ்வித ஒழுங்கமைப்பும் காணப்படவில்லை. தோட்ட உடைமையாளர்களின் தனி இராச்சியங்களாகவே பெருந்தோட்டங்கள் விளங்கிவந்துள்ளன. வேலைகள், வேலை நேரம், ஊதியம் முதலிய நடைமுறைகளும் குற்றம், விசாரணை, தண்டனை முதலிய நீதிபரிபாலனமும் தோட்ட உடைமையாளர்களின் ஏகபோக முடிவுகளாகவே நீண்டகாலம் விளங்கிவந்துள்ளன.

ஓய்வற்ற பணிச்சுமைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த தினக்கூலியே வழங்கப்பட்டுள்ளது. பணிச்சுமை காரணமாக யாரும் தொழிலைவிட்டு விலகிச் செல்லவோ மாற்றுத் தொழில்களைப் பெற்றுக்கொள்ளவோ வாய்ப்புகள் இருக்கவில்லை. தோட்டத்திலிருந்து வெளியேற முயல்பவர்களைச் சிறையிலடைக்கவும் சட்டமிருந்துள்ளது. காலனிய அரசு பெருந்தோட்ட விவகாரத்தில் நீண்டகாலமாகத் தலையிடாக் கொள்கையினையே பின்பற்றி வந்துள்ளது.

பல தசாப்தங்களாக வெளியுலகிற்குத் தெரியாமல் அமுக்கப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளரின் நெருக்கடி மிகுந்த வாழ்வு, பிந்திய காலத்திலேயே பரவலாக வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியது. அதன் பிரதிபலிப்புகள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் எதிரொலித்தன. இலங்கை முதலிய குடியேற்ற நாடுகளில் வாழும் இந்தியர்மீதான அடக்குமுறைகளைக் களைந்து, அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்புகள் அரசியல் தளத்தில் அழுத்தம் பெற்றன. இந்தியக் காங்கிரஸ் மாநாடுகளில் குடியேற்ற நாடுகளில் வாழும் இந்தியர் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன; தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன. எடுத்துக்காட்டாக, 1895ஆம் ஆண்டு புனா காங்கிரஸில்,

“தென் ஆபிரிக்காவில் பாரதக் குடியேற்றத்தார்மீது சுமத்த இருக்கும் கஷ்டங்களைக் கருதி, இந்த ஜனசபை மிகவும் பலமான ஆட்சேபம் தெரிவிப்பதுடன், பிரிட்டிஷ் பிரஜைகளின் அனுகூலங்களுக்கு இடையூறு நேரத்தக்க இடங்களில் எல்லாம் இந்தியா கவர்ன்மெண்டாரும் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டாரும் செய்திருப்பதுபோலவே, இந்தியக் குடியேற்றத்தாருக்குச் சார்பாகப் பரிந்து பேசி, நம்மவரை அவ்விரண்டு ராஜாங்கத்தாரும் காப்பாற்றுவார்கள் என்று இந்த ஜனசபை நம்புகிறது” (மேற்கோள்: விசுவநாதன், 2016, பாரில் அதிசயம் பாரதி:  231)

என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையைக் குறிப்பிடலாம். இந்தியா ஏற்படுத்திய அழுத்தத்தினால் இலங்கையின் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றகரமான மாற்றங்கள் இடம்பெறத் தொடங்கின.

இலங்கைத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கையின் யதார்த்தநிலைமையை வெளியுலகத்துக்கு வெளிச்சமிட்டுக்காட்டும் முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் முதலே பரவலாக மேற்கொள்ளப்படத் தொடங்கியுள்ளன. அம்முயற்சிகளை முன்னெடுத்தவர்களுள் சேர்.பொன். அருணாசலம், கருமுத்து தியாகராஜ செட்டியார், கோ. நடேசய்யர் முதலானோர் முதன்மையானவர்களாவர். சேர்.பொன். அருணாசலம் தோட்டத் தொழிலாளரின் பிற்படுத்தப்பட்ட வாழ்க்கை நிலைமையை எடுத்துக்காட்டி, அவர்களுக்குக் குறைந்தபட்ச வேதனம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளார்.

கருமுத்து தியாகராஜ செட்டியார், தோட்டத் தொழிலாளரின் மோசமான வாழ்க்கைச் சூழலை ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக்காட்டியுள்ளார். Indian Emigrants on Ceylon Estates (1917) என்ற தலைப்பில் அவர் தொடராக வெளியிட்டுள்ள மூன்று பிரசுரங்கள், இலங்கைத் தோட்டங்களின் உள் இயக்கத்தையும் அங்கு சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலைமையையும் துலாம்பரமாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன. அப்பிரசுரங்களில் உள்ளடங்கியுள்ள கட்டுரைகள் இலங்கையிலும் இந்தியாவிலும் வெளிவந்த முக்கியமான பத்திரிகைகளில் 1916 மற்றும் 1917 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தவையாகும்.

கருமுத்து தியாகராஜரின் பிரசுரங்களுள் ஒன்று (தொடர் 02) ‘உண்மையான அடிமைகள்’ (Veritable Slavery) என்ற தலைப்பில் தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைநிலைமையை வீட்டுவசதி மற்றும் சுகாதார வசதிகள், சுகாதாரம் மற்றும் வைத்திய உதவி, உணவு, வேலைகள் – வேலைநேரம் மற்றும் வேதனம், வாழ்க்கைச் செலவு, முற்பணம் மற்றும் கடன்கள், தொழிலாளர்களின் சுதந்திரம், தண்டனை, தொழிலாளர்களை நடத்தும் முறை, நீதித்துறை நிர்வாகம், ஆட்சேர்ப்பு மற்றும் ஆட்சேர்ப்பு செய்பவர்கள், தொழிலாளர்களின் ஒழுக்கம், கல்வி, தாயகம் திரும்புதல் ஆகிய பதின்நான்கு உபதலைப்புகளின்கீழ் விரிவாக ஆராய்ந்துள்ளது. அப்பிரசுரத்தின் இறுதியில் தொழிலாளர் ஒருவருக்கு எதிராகத் துரையொருவர் பொலிசில் மேற்கொண்ட முறைப்பாடு, அதற்கான தீர்ப்பு, மாவட்ட நீதிபதி ஒருவர் தான் கண்ட தோட்டத் தொழிலாளரின் பிற்படுத்தப்பட்ட வாழ்க்கைநிலைமையை அரசாங்க முகவருக்கு அறிவித்த குறிப்பு முதலியவை உள்ளடங்கலாக இன்னும் பல ஆவணங்கள் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. அவை தோட்டத் தொழிலாளர் துயர வாழ்வினதும் பெருந்தோட்ட நிர்வாகத்தின் அராஜகமிக்கத் தொழிற்பாட்டினதும் சாட்சியங்களாக விளங்குகின்றன.

களப்பயணம் மேற்கொண்ட தோட்டங்களில் எல்லாம் தொழிலாளர்களின் உடல்நிலை ஆரோக்கியமானதாக இருக்கவில்லை என்பதைத் “தான் சென்ற எல்லாத் தோட்டங்களிலும் – எல்லா லயங்களிலும் நோயுற்ற தொழிலாளர்களைச் சந்தித்தேன்” என உருக்கமாகப் பதிவுசெய்துள்ளார், கருமுத்து தியாகராஜ செட்டியார். மரண வீதம் தோட்டங்களில் அதிகரித்த நிலையிலிருந்துள்ளதையும் அவர் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளார். பிரசுரத்தில் இடம்பெறும் தகவல்களின்படி, 1913ஆம் ஆண்டு நிவித்திகல தோட்டத்திலிருந்த 950 தொழிலாளர்களுள் 227 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். டிக்கோயாவிலிருந்த தோட்டமொன்றில் 1916ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகள் அறுபதில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர். இவை தோட்டங்களின் சுகாதாரநிலைமை, தொழிலாளர்கள் – குழந்தைகள் முதலானோரின் ஆரோக்கியம் என்பன மிகப் பின்தங்கிய நிலையிலிருந்துள்ளன என்பதை மறுக்கமுடியாத வகையில் நிரூபித்துள்ளன.

தோட்டங்களில் கடனற்ற ஒரு தொழிலாளியேனும் இல்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ள கருமுத்து தியாகராஜ செட்டியார், தொழிலாளர்கள் 50 ரூபா முதல் 200 ரூபா வரை அல்லது அதற்கும் அதிகமாகக் கடனுடையவர்களாக இருப்பதையும் அக்கடன்களுக்கான காரணங்களையும் விரிவாக விளக்கியுரைத்துள்ளார். இறந்தவரின் கடனும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் உயிருடன் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்குச் சுமத்தப்படும் அநீதியையும் அவர் சாடியுள்ளார். அப்பிரசுரம் முழுதும் அவர் எடுத்துரைத்துள்ள விடயங்கள் தோட்டங்களின் இருண்டநிலையை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி, தொழிலாளர் நலன்தொடர்பில் தார்மீகமாகச் செயற்பட வேண்டிய தேவையை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளன.

இந்தியா தோட்டத்தொழிலாளர் நலன் தொடர்பில் இலங்கைமீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குக் கருமுத்து தியாகராஜரின் மேற்படி அம்பலப்படுத்தல்கள் முதன்மையான தாக்கம் செலுத்தியுள்ளன. இந்தியாவின் அழுத்தத்தினால் தோட்டத் தொழிலாளர் நலனைக் கருத்தில்கொண்டு புதிய சட்டமசோதா ஒன்றைக் கொண்டுவருவதற்கான முன்னெடுப்புகள் 1919ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டபோது கருமுத்து தியாகராஜ செட்டியாரிடமும் சட்டமசோதா குழுவினர் சாட்சியம் பெற்றுள்ளனர். அதன்போது அவர் தொழிலாளரின் உண்மைநிலையை விளக்கியுரைத்ததாக நடேசய்யர் பதிவுசெய்துள்ளார். இருப்பினும் அம்மசோதா சட்டமாக நடைமுறைக்கு வரவில்லை.

சேர்.பொன். அருணாசலம், கருமுத்து தியாகாராஜ செட்டியார் ஆகியோரைத் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர் வாழ்வின் யதார்த்த நிலைமையை மிக விரிவாக அம்பலப்படுத்தியவராக நடேசய்யர் விளங்குகிறார். தொழிலாளர் வாழ்வின் துயரநிலையை வெளிப்படுத்தியதோடு மட்டும் நிற்காமல் அத்துயரத்தை – அப்பிரச்சினைகளை நீக்குவதற்கான முயற்சிகளையும் அவர் முன்நின்று மேற்கொண்டுள்ளார். அதனால் சேர்.பொன். அருணாசலம், கருமுத்து தியாகாராஜ செட்டியார் ஆகியோரைவிட நடேசய்யரின் பங்களிப்புகள் பலதளங்களில் விரிவுபெற்றனவாகவும் அத்தொழிலாளர் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்துவனவாகவும் அமைந்தன.

நடேசய்யர் தன் காலத்துச் சமூக அரசியல் தேவைகளை மனங்கொண்டு அவ்வப்போது வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரங்களுள் ‘இலங்கையில் இந்தியத் தொழிலாளர்கள்’, ‘இலங்கை இந்தியத் தொழிலாளர் நிலைமை’, ‘தோட்டத்துரைமார் இராச்சியத்தின்கீழ்’ முதலானவை மிகுந்த கவனத்தைக் கோருவனவாக அமைந்துள்ளன. அக்காலத்து அரசியல் – சமூக நிகழ்வுகள்மீதான வலிமையான எதிர்வினையாக அமைந்துள்ள அப்பிரசுரங்கள், நூறு ஆண்டுகளுக்கு முந்திய தோட்டத் தொழிலாளரின் வாழ்வியல் நிலைமையை அறிய உதவும் அரிய ஆவணங்களாக விளங்குகின்றன.

தஞ்சையிலிருந்து இலங்கைக்கு முதன்முதல் வந்தபோதே (1919) தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கை நிலைமையை நேரில் ஆராய்ந்து துண்டுப்பிரசுரமாக வெளியிட்டுள்ள நடேசய்யர், இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறியதும் தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கை நிலைமையை மேலும் விரிவாக ஆராயத் தொடங்கியுள்ளார். தோட்ட மக்களின் வாழ்க்கை நிலைமை, அவர்களின் பொருளாதாரம், சம்பள விகிதம், சம்பள விகிதத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம், தோட்டத் தொழிலாளர் தொடர்பான சட்ட ஆக்கங்கள், அச்சட்ட ஆக்கங்களின் போதாமைகள், இலங்கை – இந்திய உறவின் ஏற்ற இறக்கங்கள் முதலானவற்றைக் கள ஆய்வு அனுபவங்களின் துணையுடன் அவர் விரிவாக ஆராய்ந்துள்ளதைக் கண்டுகொள்ள முடிகிறது. ‘எனது வாழ்க்கையின் நோக்கம்’ என்ற அவரின் தன்வரலாற்றுப் பதிவில் இடம்பெறும் பின்வரும் குறிப்புகள், தோட்டத் தொழிலாளர் வாழ்வியல் நிலைமையை ஆராய்வதில் அவருக்கிருந்த ஈடுபாட்டை நன்கு வெளிப்படுத்தியுள்ளன:

“தொழிலாளர் விஷயமாய் ஆராய்ச்சி செய்ய நான் சுமார் 600 தோட்டங்களுக்குமேல் நேரில் சுற்றிப்பார்த்து வந்திருக்கிறேன். தொழிலாளர் நிலைமையை நான் நேரில் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். எனது ஆராய்ச்சியின் பலனாய் இதுவரையில் சனங்களுக்குத் தெரியாத விஷயங்கள் வெளிவந்திருக்கின்றன. என் ஆராய்ச்சிக்குட்பட்ட விஷயங்களை இன்னமும் ஆராய்ந்து திடப்படுத்தி வெளியிட வேண்டுமென்ற எண்ணத்துடன் தொழிலாளர் விஷயமாய் ஆராய்ச்சிகளை உத்தியோகமுறையில் செய்துவருவோரிடமும் கலந்து வந்திருக்கிறேன்”.

மேற்படி ஈடுபாட்டுக்குச் சிறந்ததொரு சான்றாக அவரின் ‘இலங்கையில் இந்தியத் தொழிலாளர்கள்’ என்ற துண்டுப்பிரசுரம் விளங்குகிறது. ஆங்கில மொழியில் பத்துப் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள அப்பிரசுரத்தின் நகலொன்று பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதான நூலகத்தின் அரிய சேகரிப்புப் பகுதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அப்பிரசுரம் வெளிவந்த காலம் பிரசுரத்தில் இடம்பெறவில்லை. ஆனால், பிரசுரத்தின் மேற்பகுதியில் ஆகஸ்ட் 1922 என ஆங்கிலத்தில் பேனையால் எழுதப்பட்டுள்ளது. துண்டுமுறை ஒழிப்புச் சட்டத்தை (இல 43 – 1921) விமர்சனபூர்வமாக அணுகுவதாக அமைந்துள்ள அப்பிரசுரத்தினுள்ளே அச்சட்டம் கொண்டுவரப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகிவிட்டது என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. துண்டுமுறை ஒழிப்புச் சட்டமானது 21.10.1921 அன்று சட்டசபையில் முதலாவதாக வாசிக்கப்பட்டு 17.12.1921 அன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதனால் பேனையால் எழுதப்பட்டுள்ள காலத்தில் அல்லது அதற்குச் சற்று முன்பாக அப்பிரசுரம் வெளிவந்துள்ளது எனலாம்.

துண்டுமுறையை ஒழிக்கும் சட்ட மசோதா கொண்டுவரப்பட்ட காலத்திலேயே அதன் சாதக – பாதகங்களைத் தேசநேசன் பத்திரிகையில் விமர்சனபூர்வமாக அணுகியுள்ள நடேசய்யர், அம்மசோதா சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தபின்னர் நடைமுறை அனுபவங்களையும் கொண்டு அவற்றை மேலும் விரிவாக இத்துண்டுப் பிரசுரத்தில் ஆராய்ந்துள்ளார்.

புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தச் சட்டம் யாருக்கு, எந்தளவிற்குப் பயனளித்துள்ளது என்பதை ஆராயும் இத்துண்டுப்பிரசுரம், மூன்று பாகங்களைக் கொண்டுள்ளது. முதற்பாகத்தில் அறிமுகப் பகுதி நீங்கலாக, புதிய சட்டம், கங்காணிகளின் கடன்கள் ஆகிய இரு உபதலைப்புகள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் புதிய திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னணி, அதன் அனுகூலங்கள், போதாமைகள் முதலியன விபரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாகத்தில் ஊதியங்கள், வீட்டுவசதி மற்றும் சுகாதாரம் ஆகிய உபதலைப்புகளின்கீழ் தோட்டத் தொழிலாளரின் நடைமுறை வாழ்க்கை நிலைமை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘என்ன செய்ய வேண்டும்’ என்ற தலைப்பில் அமைந்துள்ள மூன்றாம் பாகத்தில் தொழிலாளரின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகள் குறைந்த பட்ச ஊதியங்கள், தொழிலாளரின் வேலை நேரம், திருப்பி அனுப்புதல், முதியோர் நிதி ஆகிய உபதலைப்புகளின்கீழ் முன்வைக்கப்பட்டுள்ளன.

காலனிய அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் தோட்ட உடைமையாளர்கள் மேலாதிக்க நிலையிலும் தோட்டத் தொழிலாளர்கள் கீழ்நிலையில் முற்றிலும் ஒழுங்கற்றுச் சீர்குலைந்த நிலையிலும் வாழ்வதை ஒப்பிட்டுக் காட்டியுள்ள நடேசய்யர், காலனிய நிர்வாகம் தோட்ட உடைமையாளர்களின் நலனுக்காக மட்டும் இயங்குவதை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிலாளர் நலன் சார்ந்து இயற்றப்பட்ட சட்டமசோதா கிடப்பில் போடப்பட்டமை (1919ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மசோதா), தற்போது இயற்றப்பட்டுள்ள திருத்தச் சட்டம் பல வருடங்களுக்கு முன்னரே நிறைவேற்றப்படவேண்டிய தேவை இருந்தும் அதனை மேற்கொள்ளாமை முதலானவற்றைத் தோட்ட உடைமையாளர்களின் செல்வாக்குக்கும் காலனிய அரசின் பக்கச்சார்புக்கும் சான்றாகக் காட்டியுள்ள அவர், இலங்கையின் அடர்ந்த காடுகளைப் பசுமையான தோட்டங்களாக மாற்றிய இந்திய ஏழைத் தொழிலாளி பெயருக்கேற்ற கல்வியற்று, தமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையற்று, தன் நிலையை மேம்படுத்த வேண்டுமென்ற விருப்பற்று வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும், அம்மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கமும் தோட்ட உடைமையாளர்களும் அக்கறையற்று இருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

புதிய திருத்தச் சட்டத்தில் பழைய சட்டத்தின் சில விதிகள் நீக்கப்பட்டுள்ளதுடன் துண்டு முறை, தண்டனை விதிகள், வெளியேற்றத் துண்டுகள் முதலானவை நீக்கப்பட்டுள்ளன. சில விடயங்களில் இச்சட்ட விதிகள் முன்னேற்றகரமானதாக இருந்தாலும் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு அவை மட்டும் போதுமானவையல்ல என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ள நடேசய்யர், இச்சட்டத்தின் சாதகமான பக்கங்களையும் எடுத்துக்காட்டியுள்ளார். இரக்கமற்ற தோட்ட உடைமையாளரின் ஆபத்தான ஆயுதமாக விளங்கிய தண்டனை விதிகளை நீக்கியமையை மிகமுக்கிய நல்ல அம்சமாகக் குறிப்பிடும் அவர், அச்சட்டத்தைக் கொண்டு உண்மையான அல்லது கற்பனையான குற்றங்களுக்காகத் தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டமையையும், தண்டனைப் பெறுதல் என்பது தொழிலாளர்களது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக நிலவியமையையும் சுட்டிக்காட்டி, அவ்விதிகள் நீக்கப்பட்டமை தொழிலாளர்களுக்குக் கிடைத்த உண்மையான வரப்பிரசாதமெனப் பாராட்டியுள்ளார்.

இத்திருத்தச் சட்டத்தின் இரண்டாவது நன்மையாகக் கடன்களை நீக்கியமை விளங்குகிறது எனக்கூறும் நடேசய்யர், கடன்கள் எவ்வாறு அகற்றப்பட்டன, உண்மையில் கடன்கள் அகற்றப்பட்டனவா? ஆகிய வினாக்களை எழுப்பி உண்மை நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளார். துண்டுமுறையினால் தொழிலாளர்கள் கடனிலிருந்து விடுபடமுடியாமல் அடிமைநிலையில் வாழ்ந்துவந்ததால் இந்திய அரசு துண்டுமுறையை நீக்கியது. அதன் மூலம் தொழிலாளர்கள் கடனிலிருந்து விடுபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அது முழுமையாக நிறைவேறவில்லை என்பதை நடேசய்யர் சான்றுகளுடன் விளக்கிக்காட்டியுள்ளார். தோட்டங்கள் கூலித் தொழிலாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்தாலும் கங்காணிகள் வழங்கிய கடனுக்கு எவ்விதமான முறையான ஒழுங்கும் செய்யப்படவில்லை. அதனால் கங்காணிகள் தொழிலாளர்களிடமிருந்து கடனை வசூலிக்க வெவ்வேறு முறைகளில் முயற்சி செய்வதாகக் குறிப்பிடும் அவர், கங்காணிகள் இந்தியாவில் தொழிலாளர்களின் உள்ளும் புறமும் நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் அவர்கள்மீது அழுத்தத்தைப் பிரயோகித்து கடனை வசூலிக்கக் கூடியதாக இருப்பதையும், தொழிலாளர்கள் அங்கு விட்டுவந்த சிறிய சொத்தைக்கூட இழக்க நேரிடும் அபாயம் நிலவுவதையும் சுட்டிக்காட்டி, கங்காணிகளின் கடன் அடைக்கப்படும் வரை தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை மேம்பட வாய்ப்பில்லாமையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கங்காணிமார்களுக்கு வழங்கவேண்டிய கடன் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ள நடேசய்யர், கங்காணிகளின் கடனைத் தோட்ட உடைமையாளர்களே வழங்க வேண்டும் என்பதை நியாயப்படுத்தியுள்ளதுடன் கங்காணிகளின் கடனை வழங்காமல் இருப்பதற்காகத் தோட்ட உடைமையாளர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகரமான செயற்பாடுகளையும் அம்பலப்படுத்தியுள்ளார். பெரிய கங்காணிகள் சங்கத்தினர் நடேசய்யரை அணுகி, தமது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவிபுரியும்படி கேட்டமையால் தொடக்க காலத்தில் அவர்களுடன் இணைந்து இயங்கிய அவர், தேசநேசன் பத்திரிகையிலும், தனியான துண்டுப்பிரசுரங்களிலும் கங்காணிகளின் கடன்களைத் தோட்ட நிர்வாகமே வழங்க வேண்டும் என்பதைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளதைக் காணமுடிகிறது. சான்றாக, தேசநேசன் பத்திரிகையில் இடம்பெறும்,

“துண்டு வழக்கம் தோட்டக்காரர்களாகச் சேர்ந்து செய்துகொண்டதாகும். அந்தத் துண்டு வழக்கம் சட்டமாய் ஏற்படாவிட்டாலும் சட்டம்போல வழக்கத்திற்கு வந்துவிட்டது. அதன் ஆதாரத்தின்பேரில் அநேக கங்காணிகள் தொழிலாளர்களுக்கு கடன் கொடு்த்திருக்கிறார்கள். இவ்வாறு கொடுத்ததும் தோட்டக்காரர்களுடைய நன்மைக்கெனவே யென்பதையும் மறுக்க முடியாது. கங்காணிகள் கூலிகளுக்குக் கொடுக்கும் முன்பணத்தால் நாள் 1-க்கு, 1- முதல் 6- சதம் வரையில் தலைக்காக வாங்குகின்றனர். ஆனால், அந்தக் கூலியாள் செய்யும் வேலையின் பலனாக சாதாரணத் தேயிலைத் தோட்டங்களில் 30- முதல் 40- சதம் வரையில் தோட்டக்காரருக்கு லாபம் கிடைக்கும். இவ்விதம் அந்த லாபம் பெறும் தோட்டக்காரர்களே இக்கடனை ஏற்றுக்கொண்டு கங்காணிகளுக்குத் தொகை கொடுத்துவிட வேண்டும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால், சண்டையின் காரணமாக தோட்டத்து முதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்றும், அந்த நஷ்ட காலத்தில் இந்தத் தொகை கொடுக்க வேண்டிய அவசியத்தையும் கொண்டுசேர்க்கக் கூடாது என்றும், அந்த மசோதாவை நிறுத்தி வைத்தார்கள். அவ்வாறு நிறுத்தி வைத்ததற்குப் பிறகு பல மாறுதல்கள் ஏற்பட்டுபோய்விட்டன. அநேக தொழிலாளர் ஓடிவிட்டனர். அநேகர் இறந்தனர். இந்நஷ்டங்கள் யாரைப் பொறுத்துவிட்டது. தோட்டக்கார்களுக்கு லாபந்தானே?” (தேசநேசன் – 21.10.1921)

என்ற விபரிப்பைக் குறிப்பிடலாம். ‘இலங்கை இந்தியத் தொழிலாளர் நிலைமை’ என்ற துண்டுப்பிரசுரத்தில் துண்டுமுறை ஒழிப்புக்குப் பின்னர் கங்காணிகளுக்கு நேர்ந்த இழப்பைப் பின்வருமாறு விபரித்துள்ளார், நடேசய்யர்:

“துண்டு என்பது அகற்றப்படவே, தோட்டக்காரர்கள் பெரிய கங்காணிகளுக்கும் கூலிகளுக்கும் தாங்கள் கொடுத்திருந்த பணத்தை, வட்டச் செலவெழுதித் தீர்த்தார்கள். ஆனால், பெரிய கங்காணிகளால் தொழிலாளர்களுக்கு முன்பணமாகவும் பல சில்லறைகளாகவும் கொடுக்கப்பட்டிருந்த பணம், அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கும்படிசெய்ய எவ்வித முறையும் இல்லாமற் போயிற்று. நியாயத்தைப் பார்த்தால், கங்காணிமார்களுக்குத் தொழிலாளரிடமிருந்து வரவேண்டிய தொகை பூராவையும் தோட்டக்காரர்களே கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில், நம் கங்காணி சகோதரர், தோட்டக்காரர்களின் நன்மையைக் கருதியே ஏராளமான திரவியத்தைத் தொழிலாளிகளுக்குக் கொடுத்தனர்… தோட்டக்காரர்கள் பணத்தைக் கொடாமலிருப்பதற்கு முன்னெச்சரிக்கையாகவே கொடிய காரியங்களைத் துணிகரமாகச் செய்கிறார்கள். முன்னறிவிப்பில்லாமலே கங்காணிகளைத் தோட்டத்தினின்றும் வெளியேற்றிவிடுகிறார்கள். பிறர் நலத்திற்காகப் பிரயாசைப்பட்டுழைத்த நமது கங்காணிகளின் நிலைமை பரிதாபகரமாகயிருக்கிறது”. 

புதிய திருத்தச் சட்டத்தினால் கூலி உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுவதன் போலிமையை நடேசய்யர் அம்பலப்படுத்தியுள்ளார். இச்சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் தொழிலாளர்களுள் பலர் மீண்டும் இந்தியாவுக்குச் செல்வதையும் வேறு தோட்டங்களை நோக்கிப் பெயர்வதையும் சுட்டிக்காட்டி, சம்பள உயர்வற்றநிலையே இதற்குக் காரணமெனக்கூறும் அவர், இந்நிலையால் தொழிலாளர்கள் கங்காணிகளிடமும் கடைக்காரர்களிடமும் கடன்பெற்று வாழ வேண்டிய அவல நிலையிலுள்ளமையையும், துண்டுமுறை ஒழிக்கப்பட்டாலும் தொழிலாளர்கள் கடனிலிருந்து விடுபட முடியாதுள்ளமையையும் சுருக்கமாக விளக்கியுள்ளார். இக்கடனால் கட்டுண்ட நிலையில் தொடர்ந்து வாழும் அவர்கள், சுதந்திரமாக வேறு தோட்டங்களுக்கு அகன்று செல்ல முடியாதுள்ளமையும், வேறு தோட்டங்களுக்குச் செல்பவர்களைப் பொலிசார், கங்காணி முதலானோருக்குப் பதிலாக அல்லது அவர்களுக்கு முன்பாகக் கடைக்காரர் பின்தொடர்வதையும் எடுத்துக்காட்டி, துண்டுமுறை நீக்கம் – வெளியேற்றத் துண்டு நீக்கம் முதலானவற்றால் தொழிலாளர்கள் முழுமையான பயனை அடையவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

புதிய திருத்தச் சட்டத்திற்குப் பின்னர் தொழிலாளரின் பொருளாதார நிலைமை பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட மோசமான நிலைக்குச் சென்றுள்ளதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ள நடேசய்யர், தண்டனை விதிகள் நீக்கப்பட்டமை தவிர வேறு எந்த நன்மைகளையும் தராத இச்சட்டத்தைக் கொண்டுவந்தவர்களைத் தன்னால் பாராட்ட முடியாது என்பதை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

துண்டுப்பிரசுரத்தின் இரண்டாம் பகுதியில் தொழிலாளர்களின் பிற்படுத்தப்பட்ட வாழ்வியல் நிலைமையின் சில பக்கங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் வேதனம் குறித்தும் புதிய சட்டங்களால் அவ்வேதனத்தில் ஏற்பட்டுவந்துள்ள மாற்றங்கள் குறித்தும் விரிவான ஆதாரங்களைத் தந்துள்ள நடேசய்யர், கணவன் – மனைவி ஆகிய இருவரைக் கொண்ட குடும்பமொன்றின் வருடாந்த வருமானம் மற்றும் செலவுகளை, 26 வேலை நாட்களை அடிப்படையாகக் கொண்டு, 1882ஆம் ஆண்டிலிருந்து 1922ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு பத்தாண்டிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களோடு புள்ளிவிபரங்களுடன் தந்துள்ளார். எடுத்துக்காட்டாக, 1882ஆம் ஆண்டின் வரவும் செலவும் பின்வருமாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

1882 ஆம் ஆண்டின் வரவு

ஆண் 26 நாட்கள் + 35 சதம் =  8.58

பெண் 26 நாட்கள + 25 சதம் = 6.50

                 மொத்தம்        = 15.08

வருடாந்த வருமானம்

15.08 + 12 = 180.96

சுகவீனமான நாட்களாக 12 ஐ கழித்தல் = 5.96

                           மொத்தம் = 175.00

1882 ஆம் ஆண்டின் செலவு

சுத்திகரிப்பாளர் மற்றும் முடி திருத்துபவருக்காகத்

தோட்டத்தில் கழிக்கப்படுபவை              : 5.30

அரிசி                                                        : 63.00

மிளகாய் மற்றும் ஏனையவை                   : 24.00

ஆடைகள்                                                : 18.00

மொத்தம்                                                 : 110.80

நிகர சேமிப்பு                                          : 64.20

இவ்வாறு 1892, 1902, 1912, 1922 ஆகிய ஆண்டுகளின் வரவையும் செலவையும் திரட்டித் தந்துள்ள நடேசய்யர், இந்த வரவு செலவில் சேமிப்பானது காலத்துக்குக் காலம் குறைந்துசென்று ஈற்றில் பற்றாக்குறை நிலைக்குச் சென்றுள்ளதை நிரூபித்துள்ளார். 1882ஆம் ஆண்டின் சேமிப்பு ரூபா 64.20 ஆக இருந்தது, 1892இல் ரூபா 40.10 ஆகவும் 1902இல் 19.87 ஆகவும் 1912இல் 58 சதமாகவும் குறைந்து, 1922இல் 12 ரூபா பற்றாக்குறையாகியுள்ளது. இவை தொழிலாளரின் ஊதிய முறையில் மாற்றங்கள் தேவை என்பதை மறுக்கமுடியாத வகையில் நியாயப்படுத்தியுள்ளன.

தொழிலாளர்களுக்கான வீட்டு வசதியும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது என்பதை உருக்கமாகப் பதிவுசெய்துள்ள நடேசய்யர், சிறிய கருந்துளைக்குள் நான்கு அல்லது ஐந்து ஆன்மாக்கள் உறங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையையும், அது ஒரு சிறைக் கைதிக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தைவிடக் குறைவானதாக இருக்கும் அவலத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார். தொழிலாளரின் வீட்டுவசதி குறித்து அவர் தரும் சித்திரத்தைப் பின்வருமாறு தொகுத்துக்கொள்ளலாம்:

“தொழிலாளரின் வீடு 10 சதுர அடி அல்லது 10க்கு 12 அடியில் சிறிய அறையும் நான்கு அல்லது ஐந்து அடி கொண்ட முன் பகுதியையும் (திண்ணை) கொண்டதாகும். வீடுகள் உயரம் குறைந்த கதவுகளைக் கொண்டுள்ளதுடன் ஜன்னல்கள் எவையும் அற்றுள்ளன. 10 இலிருந்து 20 வரையான வீடுகள் தொடராக அமைக்கப்பட்டுள்ளன. சட்டமானது புகைக்கூடு (புகைப்போக்கி) அமைத்துக்கொடுத்தல் அவசியமெனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், தோட்ட உடைமையாளர்கள் அதைக் கருத்திற் கொள்வதில்லை. கூரைகளானவை பெரிதும் நெளிந்த இரும்புத் தகரங்களால் உட்பகுதி மறைக்கப்படாமல் 12 அடி அல்லது 14 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மிக அரிதாகச் சில வீடுகளுக்கு ஓடுகள் அல்லது ஓலைகள் வேயப்பட்ட கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கதவுகள் மிகவும் தாழ்வாக இருப்பதால் உள்ளே போகும்போதும் வெளியே வரும்போதும் தலையைக் குனிந்து முதுகை வளைத்துக் கொள்ளவேண்டும். இச்சிறிய அறைக்குள் நான்கு ஐந்து ஆன்மாக்கள் வாழ வைக்கப்படுகின்றனர். கணவன், மனைவி ஆகிய இருவரை மட்டும் கொண்ட குடும்பமாக இருந்தால் அவர்களைப் போல் இன்னொரு குடும்பத்துக்கு அச்சிறிய அறை பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. அவ்வாறு பகிர்ந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்படுபவர்கள், வீட்டின் நடுவில் மூங்கிலால் திரையிட்டுக்கொள்கின்றனர். தமக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் மூங்கில், ஓலை முதலியவற்றைக்கொண்டு சிறிய பரணை அமைத்து அதில் தமது பொருட்களை வைத்துக்கொள்கின்றனர். ஏற்கனவே ஜன்னல் இல்லாமல் இருளாக இருக்கும் அறையை இவை இன்னும் இருளாக்குகின்றன. அதனால் புகை எளிதில் வெளியேறுவது தடுக்கப்படுகிறது”.

மலையக வாய்மொழிப் பாடல்களில் வீட்டு வசதி போதாமையின் வெளிப்பாடுகளைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக,

“காம்பறா பத்தாதுடா கங்காணி வடுவா இங்க

காலு நீட்ட எடமில்லையே கங்காணி வடுவா அப்படி

கையை நீட்ட எடமில்லையே கங்காணி வடுவா”

என்ற பாடலடிகளைச் சுட்டிக்காட்டலாம். தோட்டத் தொழிலாளரின் வீட்டுப்பிரச்சினைக்கு – அவர்கள் இலங்கையில் குடியேறி இரு நூற்றாண்டுகள் கடந்த பின்பும் – ஆரோக்கியமான தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும். அவ்வேதனைக் குரல் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே நடேசய்யரிடமிருந்து ஒலித்துள்ளது. லயம் – லயத்து வாழ்வு குறித்து இத்துண்டுப்பிரசுரத்தில் இடம்பெறும் தகவல்கள் அதற்குச் சான்றுபகர்கின்றன.

தோட்டங்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதை எண்ணி வருத்தப்பட்டுள்ள நடேசய்யர், மனிதாபிமானமற்ற அம்முறையை எவ்வாறேனும் தடுத்தாக வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன் சிறுவர்களின் கல்வியைக் கட்டாயப்படுத்தும் மசோதாவைத் தோட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் கொண்டுவரவேண்டிய தேவையையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

தொழிலாளர்மீது உண்மையான அக்கறையற்று, இந்திய அரசைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டும் கொண்டுவரப்பட்ட இப்புதிய திருத்தச் சட்டம்,  தோட்டத் தொழிலாளரை எவ்விதத்தும் முன்னேற்றாது என்பதை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ள நடேசய்யர், இறுதியாக அத்தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு உடனடியாக மேற்கொள்ளவேண்டிய மாற்றங்களை முன்வைத்துள்ளார்.

பெருந்தோட்டங்களுக்கு வேலைக்கு வரும் கணவனும் மனைவியும் குறைந்தது வருடமொன்றுக்கு 350 ரூபாவை ஈட்டக்கூடியதாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும் நடேசய்யர், தனது கணிப்பின்படி, தோட்டம் 35 சதத்தைத் தொழிலாளிக்கு வேதனமாக வழங்கும்போது, அந்தத் தொழிலாளியின் உழைப்பிலிருந்து 35 சதத்தை இலாபமாகப் பெறுவதாகக் கூறி, அந்த லாபத்திலிருந்து தோட்டங்கள் ஏன் வேதனம் வழங்குவதில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இக்கேள்வி மார்க்சியம் பேசும் உபரி உற்பத்தி, அந்நியமாதல் முதலியவற்றுடன் தொடர்புபட்டிருப்பதைக் காணலாம்.

வேலை நேரம் குறித்து நடைமுறையில் எந்த வரம்பும் இல்லாமல், காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரை வேலை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையைக் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ள அவர், தொழிலாளர்களுடைய ஒரு நாள் எவ்வாறு கழிகிறது என்பதைப் பின்வருமாறு விவரித்துள்ளார்:

“காலை 4.30 மணிக்கு அடிக்கப்படும் முதற் தப்பொலிக்குப் படுக்கையிலிருந்து எழுந்து 5.30 இற்கு அடிக்கப்படும் இரண்டாவது தப்பொலிக்குப் பிரட்டுக்கு அணிவகுத்து நின்று 06 மணிக்கு வேலைக்குச் செல்கிறார்கள். சில தோட்டங்களில் பிரட்டுக் களத்துக்கே நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டும். அத்துடன் பிரட்டுக் களத்திலிருந்து வேலை செய்யும் இடங்களுக்கும் அதிக தூரம் நடந்துசெல்ல வேண்டும். அதனால் நடைப்பயணத்தில் இழந்த நேரத்தை ஈடுகட்ட இடைவேளை இன்றி உழைக்க வேண்டியுள்ளது. காலையில் உண்ட கஞ்சி அல்லது நீராகாரத்துடன் வேலைக்குச் சென்றவர்கள் 12 மணித்தியாலங்கள் தொடர்ந்து வேலை செய்கின்றனர். மாலை 6.30 அளவில் வேலையிலிருந்து வெளியேறும் அவர்கள், இரவு 07 மணிக்குப் பிறகே குளித்து, உணவு சமைத்து தமது இரவுணவைச் சாப்பிடுகின்றனர்”.

மனிதாபிமானமற்ற இச்சூழலைக் கண்டிக்கும் நடேசய்யர், இந்நிலையை மாற்றவேண்டிய தேவையை உணர்வுபூர்வமாக வலியுறுத்தியுள்ளார். 

தோட்டங்களில் வேலை செய்ய முடியாதவர்கள், முதுமையடைந்தவர்கள் போன்றோர் எதிர்கொள்ளும் சிரமங்கள் எண்ணிலடங்காதவையெனக் கூறும் நடேசய்யர், அவ்வாறானவர்கள் பிச்சையெடுத்து உண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள துயரத்தைச் சுட்டிக்காட்டி, அத்தகையோரைக் குறைந்த பட்சம் இந்தியாவுக்கு அனுப்பும் செயற்பாட்டையாவது தோட்ட உடைமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

முதுமைக்கால நிதி குறித்த நடேசய்யரின் பதிவும் மிகுந்த கவனிப்புக்கு உரியதாக விளங்குகிறது. தோட்டக்காரர்களதும் இலங்கையினதும் செழிப்புக்கு முதுகெலும்பாக விளங்கும் தொழிலாளர்கள், தமது முதிய பருவத்தில் பசியில் வாடுவதற்கோ நண்பர்கள், உறவினர்கள் அற்று மடிவதற்கோ இடமற்றதாக்கும் வகையில் பொது நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அந்நிதியத்துக்குத் தோட்டமும் கட்டாயம் ஒரு தொகையை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி வருவதை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியுள்ள நடேசய்யர், தொழிலாளர்கள் தமது கடமைகள் மற்றும் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வுடனிருக்க வேண்டிய தேவையை எடுத்துக்காட்டியுள்ளதுடன், தோட்ட உடைமையாளர்களும் இலங்கை அரசாங்கமும் தொழிலாளர்களுக்கான தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, சிறப்பாகவும் தாராளமாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்பதைப் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக வெளிப்படுத்தியுள்ளார்.

குறைந்தபட்ச ஊதியம், மட்டுப்படுத்தப்பட்ட வேலைநேரம், சுகாதாரமான வீடமைப்பு, கட்டாயக் கல்வி, மீண்டும் இந்தியாவுக்குச் செல்ல விரும்புபவர்களை இலவசமாக அனுப்பி வைத்தல், ஊழியர் சேமலாப நிதி முதலானவை குறித்துப் பிற்பட்ட காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட வரைபுகள், மாற்றங்கள் ஆகியனவற்றுக்கு முன்னோடியாக இத்துண்டுப்பிரசுரத்தில் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் விளங்குவதைக் காணலாம். நடேசய்யர் சட்டமன்ற உறுப்பினரான பின்னர் இவற்றைச் சட்டமன்றத்திலும் முன்வைத்துள்ளதுடன் அவை தொடர்பான சட்ட ஆக்கங்கள் உருவாகுவதற்கும் தூண்டுகோலாக இருந்துள்ளார்.

பத்துப் பக்கங்களுக்குள் மிகச் செறிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ள இத்துண்டுப்பிரசுரம், அதன் நோக்கத்துக்கு அமைய துண்டுமுறை ஒழிப்புச் சட்டத்தின் சாதக – பாதகங்களைக் கள யதார்த்தத் தளத்தில்நின்று விரிவாக ஆராய்ந்து, அச்சட்டத்தின் போதாமைகளைச் சிறப்புற எடுத்தியம்பியுள்ளது; தொழிலாளர் நல்வாழ்வுக்குத் தேவையான பரிந்துரைகளை நியாயபூர்வமாக முன்வைத்துள்ளது. இவற்றுக்காக நடேசய்யர் திரட்டியுள்ள தகவல்களில் தோட்டத் தொழிலாளரின் உண்மையான வாழ்க்கை நிலைமையைக் கண்டுகொள்ள முடிகிறது. அவ்வகையில் ஆதிக்கச் சார்புகொண்ட காலனிய ஆவணங்களுக்கு அப்பால் தோட்டத் தொழிலாளரின் வாழ்வியல் நிலைமையை அறிந்துகொள்ளப் பயன்படும் அரிய ஆவணம் என்ற தளத்திலும் கவனிப்புக்குரியதாக இத்துண்டுப்பிரசுரம் விளங்குகிறது.


ஒலிவடிவில் கேட்க

3432 பார்வைகள்

About the Author

எம். எம். ஜெயசீலன்

எம்.எம். ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியப் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (தஞ்சாவூர்) கலாநிதிப் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார். கல்வெட்டியல், பண்பாட்டு வரலாறு, இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுள்ள இவர், அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து வருவதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்