ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார
பின்காலனித்துவ இலங்கையில் அரசைக் கட்டி வளர்க்கும் திட்டம் பற்றிய விவாதங்கள்
நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று இலங்கையின் பழமைவாத உயர்குழுக்கள் (Conservative Elites) ஒன்று சேர்ந்து கூட்டணியொன்றை அமைத்து தேசிய ஐக்கிய அரசாங்கம் (National Unity Government) ஒன்றை உருவாக்கின. இந்தக் கூட்டணிக்குள் விரைவிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டன. சிங்கள உயர்குழாம் தலைவர்களிடையே எதிர்காலத்தில் தலைமைப் பதவிகளை யார் யார் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் போட்டி ஏற்பட்டது. தமிழ்த் தேசியத் தலைவர்களை ஓரங்கட்டி சிங்களத் தலைமையைப் பலப்படுத்தும் போட்டியும் தொடர்ந்தது.
1948 இல் அரசாங்கம் குடியுரிமைச் சட்டம் (Citizenship Act) ஒன்றைச் சட்டமாகக் கொண்டு வந்தது. அச்சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழர்களின் தேர்தல் பிரதிநிதித்துவ பலத்தைக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டது. 1948 இலும் 1949 இலும் குடியுரிமை தொடர்பாக மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டன. இச் சட்டங்கள் இலங்கையில் குடியுரிமையையும் அதனோடு இணைந்த வாக்களிக்கும் உரிமையையும் பெறுவதற்குரிய தகைமைகள் எவையென விதித்தன. இச்சட்டங்கள் ஒன்பது இலட்சத்து எழுபத்து நாலாயிரத்துத் தொண்ணூற்றியெட்டு (9,74,098) இந்தியத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிப்பதாக அமைந்தன. இவர்களுக்கு இலங்கைப் பிரஜா உரிமை மறுக்கப்பட்டது. வாக்காளர் அட்டவணையில் இருந்து இவர்களின் பதிவு நீக்கப்பட இது ஏதுவாயிற்று (Kearney 1967:7). இவ்வாறு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்தியத் தமிழர்கள் 1931 இற்கும் 1947 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற மூன்று தேர்தல்களில் வாக்களித்திருந்தனர் என்பது கவனத்தில் கொள்ளப்படாமல் அவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது. அக்காலத்தில் இந்தியாவின் பிரதமராகவிருந்த ஜவகர்லால் நேரு, இவ்வாக்குரிமைப் பறிப்பு சிங்களவர்களின் தேர்தல் பிரதிநிதித்துவப் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கான தந்திரோபாய நடவடிக்கை எனக் குறிப்பிட்டார் (வில்சன் 1994:39). இச்சட்டங்கள் இயற்றப்பட்ட போது அகில இலங்கைத் தமிழ் காங்கிரசில் இருந்து (செல்வநாயகம், வன்னியசிங்கம் என்போர்) வெளியேறிய குழுவினர், அரசாங்கத்தின் இச்செயல் சிங்கள மேலாண்மையை நிறுவுவதற்கான பெரும் திட்டத்தின் ஒரு அம்சம் எனவும், இலங்கையில் தமிழர்களை இரண்டாம் நிலைப் பிரஜைகள் ஆக்கும் திட்டத்தின் தொடக்கம் எனவும் குற்றம் சாட்டினர் (வில்சன் 1994:34).
குடியுரிமை, வாக்குரிமை பற்றிய மேற்குறித்த சட்டங்கள் சிங்களத் தலைவர்களின் இனத்துவ தேசியவாத நோக்குமுறையை (Ethno – Nationalist Perceptions) வெளிப்படுத்திய கொள்கை வகுத்தலுக்கு முதலாவது உதாரணமாக அமைந்தது. அரசின் புவி இடப்பரப்பு (Territoriality) என்பதையும் ஒருவரின் பிறப்பு வழி மரபையும் தொடர்பையும் (Genealogical Relationship) இணைப்பதே மேற்குறித்த குடியுரிமை வாக்குரிமைச் சட்டங்களின் நோக்கமாக இருந்தது. குடியுரிமைக்கும், வாக்குரிமைக்கும் இத்தகையதொரு நிபந்தனை விதிப்பதான சிந்தனையின் மூலத்தை சிங்கள – பௌத்த தேசியவாதத்தில் கண்டு கொள்ளலாம். இலங்கையை ‘சிங்கள தீப’ (சிங்கள மக்களின் தீவு) எனவும், ‘தம்மதீப’ (புத்த தம்மத்தின் தீவு) எனவும் அதன் பண்டைய வரலாற்றுத் தொடர்ச்சியை வலியுறுத்தும் கருத்தியல் இலங்கையில் நவீன காலத்தில் வரலாற்று எழுத்தியல் ஊடாகக் கட்டமைக்கப்பட்டது. இலங்கையின் தேசியக் கொடியாகச் சிங்கக் கொடி இருத்தல் வேண்டும் என்ற பிரச்சினை கிளம்பிய போது மேற்குறித்த சிங்கள – பௌத்தக் கருத்தியல் இலங்கை அரசியலில் வெளிப்பட்டதைக் காணலாம். இவ்விடயம் பாராளுமன்றத்திலும் விவாதத்திற்குரியதாயிற்று. இவ்விடயம் பற்றி முடிவு செய்வதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இத்தெரிவுக்குழுவின் முடிவு சிங்கக் கொடியைத் தேசியக்கொடியாக ஏற்பதெனவும், அக்கொடியின் ஓரத்தில் உள்ள இரண்டு செவ்வகக் கோடுகள் தமிழ், முஸ்லிம் சமூகங்களை அடையாளப்படுத்துவதாக இருக்கும் எனவும் சமரசம் செய்வதாக இருந்தது.
சிங்கள உயர்குழாத்தின் கொள்கைத் திட்டங்கள் ஆரம்பம் முதல் சிங்களப் பெரும்பான்மையினரின் தேசிய அடையாளத்தை இலங்கை முழுமையினதும் தேசிய அடையாளமாக (National Identity) மாற்றும் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டமைந்தன.
1950 களில் வடமத்திய மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் குடியேற்றத் திட்டங்களைத் தொடக்கிய போது சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்களுக்கு ஒரு கோஷத்தை முன்வைத்தனர். இக் கோஷம் சிங்கள மன்னர்களின் (ரஜ) தேசத்தை (ரட்ட) – (Land of the Sinhalese Kings) மீட்டெடுத்தல் என்பதாகப் பொருள் கொள்ளப்பட்டது. தென்னிந்தியப் படையெடுப்பாளர்களால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டதால் கைவிடப்பட்ட நிலத்தை மீட்போம் என்பதாக இக்குரல் ஒலித்தது (Roberts – 1978 : 364). தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்ற தமிழர்களின் வாழ்விடமான மரபுவழித் தமிழர் தாயகத்தை (Traditional Tamil Homeland) சிங்களக் குடியேற்றங்கள் மூலம் கையகப்படுத்தும் நடவடிக்கை இதுவெனத் தமிழ்த் தலைவர்கள் குற்றம் சாட்டினர். மரபுவழித் தமிழர்களின் வாழ்விடத்தில் சிங்களவர்களைக் குடியேற்றும் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனத் தமிழ்த் தலைவர்கள் 1950 களில் கோரிக்கை விடுத்தனர். 1948 முதல் 1956 வரை சிங்கள உயர்குழாம் பின்வரும் விடயங்களில், கொள்கை வகுத்தலில் (Policy Making) தமது இனத்துவ தேசியவாத நோக்கை (Ethno – Nationalist Approach) வெளிப்படுத்தியது.
- குடியுரிமை
- வாக்குரிமை
- தேசியக் கொடி
- தேசிய கீதம்
- உத்தியோக மொழி
மேற்கூறியவை யாவும் நவீன காலத்து தேசிய அரசுகளின் (Nation States) ஆளுமையைத் தீர்மானிக்கும் முக்கிய விடயங்களாக அமைந்தன என்பதை நாம் கவனித்தல் வேண்டும். இவ்வாறாகத் தேசிய அரசின் ஆளுமையை (Personality of the State) உருவாக்கும் செயல்முறை தொடர்ந்த போது சிங்கள உயர்குழுக்களிற்கும், தமிழ் உயர்குழுக்களிற்குமிடையே கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தோன்றின. காலனித்துவத்திற்கு பிந்திய காலத்து இலங்கை அரசு கடைப்பிடித்த இனத்துவ தேசியவாதத்தின் இயல்பு, அதன் போக்கு, அது முன்வைத்த குறியீடுகள் (Symbols) என்பன தமிழ்த் தலைவர்களிடம் அச்ச உணர்வைத் தூண்டியது. அத்தலைவர்கள் வெளியிட்ட கருத்துகளைச் சிங்களத் தலைவர்கள் செவிமடுக்கத் தயாராக இருக்கவில்லை. இலங்கையின் சிறுபான்மை இனங்கள் சட்டம், அரசியல், குறியீட்டியல் என்னும் நிலைகளில் கீழ்ப்பட்ட நிலைக்கு (Inferior Status Legally, Politically and Symbolically) தரமிறக்கப்பட்டன. சிங்களத் தலைவர்களின் இந்த நோக்கத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டவராக எஸ்.ஜே.வி. செல்வநாயகம் விளங்கினார் (பக். 292). சிங்கள மொழியை உத்தியோக மொழியாகப் பிரகடனம் செய்து தமிழ் மொழியை ஒரு உள்ளூர் மட்ட மொழியாக (Local Language) தரம் தாழ்த்தி அதனை அழிப்பதற்குச் சிங்களத் தலைவர்கள் திட்டமிடுவதாக அவர் வாதிட்டார் (Wilson 1994 : 18).
குடியுரிமை, வாக்குரிமை என்பன பற்றிய சட்டங்களை இயற்றி, எழுந்தமானமான முறையில் இந்தியத் தமிழர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தபோது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமைப்பீடம் செயலற்று மௌனம் காத்தது. இதனால் வெறுப்படைந்த ஒரு பிரிவினர் பிரிந்து சென்று சமஷ்டிக் கட்சியை (F.P) 1951 இல் நிறுவினர். அக்கட்சியின் முதலாவது தேசிய மாநாடு 1951 இல் நடைபெற்றபோது அக்கட்சி இலங்கையின் பின்காலனித்துவ அரசு (Post Colonial State in Sri Lanka) எவ்வாறு அமைய வேண்டும் என்பதை எடுத்துக் கூறியது. அ. சிவராஜா பின்வருமாறு குறிப்பிடுகிறார் (Sivarajah 2007-19).
”An autonomous Tamil state on the linguistic basis within the framework of a federal union of Ceylon”
இக்கூற்றின் பொருள், மொழியடிப்படையிலான சுயாதீனமான தமிழ் அரசு ஒன்றை இலங்கையின் சமஷ்டி ஒன்றியம் என்ற கட்டமைப்புக்குள் உருவாக்குதல் என்பதாகும்.
கெர்ணி (Kerney) என்ற அமெரிக்க அரசியல் பேராசிரியர் சமஷ்டிக் கட்சியின் கோரிக்கை இலங்கையின் தமிழ் பேசும் மக்கள், சிங்கள மக்களில் இருந்து வேறுபட்ட தனித்துவமான தேசிய இனம் (Nation) என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்தது எனக் குறிப்பிட்டார். அவரின் கூற்று வருமாறு :
“F.P claimed that Tamil speaking people in Sri Lanka constitute a nation distinct from that of the Sinhalese” (Kerney 1987 : 568)
அத்தோடு வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகம் (Home Land) எனவும் சமஷ்டிக் கட்சி உரிமை கோரியது எனச் சிவராஜா குறிப்பிடுகிறார் (Sivarajah 2007:19).
சமஷ்டிக் கட்சி தமிழ் பேசும் மக்கள் (Tamil Speaking People) என்ற கருதுகோளை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு முன்வைத்தது என்பது கவனிக்கத்தக்கது. கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம்களையும் தமிழ் பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்தில் உள்ளடக்கி ஒன்றிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தை ஒரு அலகாகக் கொண்ட சமஷ்டி ஒன்றியத்தை அமைக்கும் திட்டத்தை இது வெளிப்படுத்தியது. சிங்களம் – தமிழ் என்னும் இருமொழிகளின் அடிப்படையிலான இரண்டு இனத்துவ தேசியங்கள் (Two Ethnic Nations) கொண்ட இலங்கைச் சமஷ்டி ஒன்றியம் என இத்திட்டத்தை வரையறை செய்யலாம். இந்தியாவின் தலைவர்கள் இந்திய அரசை நிறுவியதை தமிழ்த் தலைவர்கள் மாதிரியாகக் கொண்டனர் எனவும் கருதலாம். சமஷ்டிக் கட்சி இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்த போது தமிழர்களின் அரசியலின் பிரதான தளப் பிரதேசமாக (Heartland) வடக்கு மாறியது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் கொழும்பை மையமாகக் கொண்ட தலைமைக்குப் பதிலாக ‘புதிய அரசியல் உயர்குழு’ (New Political Elite) வடபகுதியை மையம் கொண்டு உருவாக்கம் பெற்றது.
மேற்குறித்த அரசியல் போக்குகள் இலங்கையில் 1950 களில் வெளிப்பட்டமை ஒரு உண்மையைத் தெளிவாக்கியது. இலங்கையின் சமூகம் பல்லினச்சமூகம் (Ethnically Plural Society); பின்காலனித்துவ கட்டத்தில் அதன் அரசியல் தேவைகள் பல்லினச் சமூகத்தின் அரசியல் தேவைகளாகவே பார்க்கப்பட வேண்டும். ஆயினும் இலங்கையின் ஆளும் குழுக்களிடம் இது குறித்த அக்கறை காணப்படவில்லை. இலங்கையின் ஆளும் குழுக்கள் எல்லாச் சமூகங்களையும் உள்ளீர்க்கும் அரசியல் தொலைநோக்கை (A Socially Inclusive Political Vision) வெளிப்படுத்துவதற்குத் தவறின என்றே கூற வேண்டும்.
பல்லினங்களைக் கொண்ட இலங்கையில் சிங்களவர் என்ற ஒரு இனத்தினை முதன்மைப்படுத்தும் அரசு (Mono – Ethnic State) உருவாக்கம் பெற்றது. இந்த அரசை இயக்கிய ஆளும்குழு ஆங்கிலமயப்பட்ட கலாசாரப் பின்னணியையும் நகரம்சார் வாழ்க்கையையும் கொண்ட உயர்குழுவாக இருந்தது.
1956 இல் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன (MEP) என்னும் கூட்டமைப்பு அரசாங்கம் கிராமப்புறத்து வர்த்தகர்கள், சிறுவியாபாரிகள், ஆயுள்வேத வைத்தியர்கள், பௌத்த பிக்குகள், சிங்களம் கற்ற புத்திஜீவிகள் ஆகியோரின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதுவரைகாலமும் கொள்கை வகுத்தலில் கவனத்தில் கொள்ளப்படாத மேற்படி சமூகப் பிரிவினரின் நலன் நோக்கிய கொள்கைகளை மகாஜன எக்சத் பெரமுன அரசாங்கம் நடைமுறைப்படுத்த முன்வந்தது. 1950 களில் எழுச்சி பெற்ற சிங்கள – பௌத்த இயக்கத்தின் கோரிக்கைகளான சிங்களத்தை மட்டும் உத்தியோக மொழியாக ஏற்றல், பௌத்தத்தை அரச மதமாக்குதல் ஆகியவற்றை புதிய அரசாங்கம் ஏற்று நடைமுறைப்படுத்தலாயிற்று. சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டது. பௌத்தத்தை வளர்ப்பதற்காக பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் உருவாக்கப்பட்டது. இலங்கையைக் குடியரசு ஆக்க வேண்டும், இலங்கை சுயாதீனமான அயல்நாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் போன்ற கொள்கைகளும் புதிய அரசால் ஏற்கப்பட்டன. பொருளாதாரத்தில் அந்நியர் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும், இலங்கையில் மூலதனத் திரட்சிக்கு (Capital Accumulation) ஊக்கமளித்து கைத்தொழில் வளர்ச்சி மூலம் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்பன போன்ற திட்டங்களும் செயற்படுத்தப்பட்டன.
மகாஜன எக்சத் பெரமுன அரசாங்கம் பெரும்பான்மையினரான சிங்கள மக்களின் சிங்கள பௌத்த தேசியவாதத்தை ஏற்று அதற்குச் செயல்வடிவம் கொடுக்க ஆரம்பித்தது. நவீனத்துக்கு முற்பட்ட காலத்து இலங்கையில் தீவு முழுவதையும் தழுவியதாக நிறுவப்பட்டிருந்ததென நம்பப்பட்ட சிங்கள – பௌத்த அரசை (Sinhala Buddhist State) மீள நிறுவுதல் என்ற செயல் திட்டத்தை அரசு ஆரம்பித்தது. இவ்வகையில் இலங்கையின் புவி இடப்பரப்பும் (Territoriality), இனத்துவமும் (Ethnicity) ஒன்றிணைக்கப்பட்ட அரசு என்னும் இலக்கு அரசின் கொள்கையாயிற்று. சிங்களப் பெரும்பான்மைச் சமூகத்தின் தேசியவாதம் தேசிய அரசு (Nation State) ஒன்றை ஒரு இனத்தின் மேலாண்மை அடிப்படையில் கட்டி வளர்த்தல் (State – Building) எனும் திட்டத்தை முன்வைத்தது. இவ்விரு முரண்பட்ட தேசியவாதங்களிடையேயான போட்டியாக இலங்கையின் அரசியல் 1950 களில் உருமாற்றம் பெற்றது. இக்காலப் பகுதியில் இலங்கையின் முஸ்லிம் இனக்குழுமமும் மலையகத் தமிழர்களும் மேற்குறித்த இரு தேசியவாதங்களில் எதனையும் சாராது தவிர்த்துக் கொண்டன. 1956 க்குப் பின்னர் சிங்கள, தமிழ் தேசியவாதங்களின் போட்டியாலும், அரசியல் அணிதிரட்டலாலும், இனத்துவம் அரசியலில் மேலோங்கி தாராண்மைவாத இலட்சியங்கள் கைவிடப்பட்டன. இதனால் இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புதல் (Democracy Building) சவாலுக்குரியதாயிற்று.
இலங்கையின் இனக்குழுமங்கள் அரசியல்மயப்படுதல்
1956 இன் அரசியல் மாற்றத்தின் பயனாகப் பதவியேற்ற புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சிங்கள சமூகத்தின் இனத்துவ – சமய அபிலாசைகளையும், தமிழ் சமுதாயத்தின் அபிலாசைகளையும் தூண்டிவிட்டதோடு அரசியல் அரங்கில் தேசியவாதங்களின் மோதலுக்கு இடமளித்தது. இந்த மோதலும் போட்டியும் இலங்கையின் இனக்குழுமங்களை அரசியல்மயப்படுத்தும் (Politicising the Ethnic Communities) செயல்முறையை வேகப்படுத்தியது. இனத்துவம், மொழி, சமயம் என்பன சார்ந்த செயற்பாட்டுக்குழுக்கள் (Activist Groups) அரசியல் அணிதிரட்டலில் பிரதான வகிபாகத்தைப் பெற்றுக்கொண்டன. இனத்துவ அடையாள அரசியல் (Ethnic Identity Politics) இலங்கையின் அரசியலில் முதன்மையிடத்தைப் பிடித்துக் கொண்டது. ஜனநாயக அரசியலில் இனத்துவம் இன்றியமையாதகூறாகவும், முக்கியத்துவம் உடையதாகவும் மாறியது. வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காக அரசியல் கட்சிகள் இனத்துவத்தை முதன்மைப்படுத்தின. இனத்துவ அரசியலுக்கும் ஜனநாயக அரசியலுக்குமிடையிலான முரண்பாட்டின் புதிரான நிலை இதுவெனலாம்.
காலனியாட்சிக் காலத்தில் சிங்கள ஆளும்குழு, சிங்கள பௌத்தர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டமைக்கு நிவாரணம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. காலப்போக்கில் சிங்கள ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தமிழ் உயர்குழுவின் நலன்களுக்கு எதிரானதாக அமைந்தது. சிங்கள உயர்குழாமின் அரசைக் கட்டி வளர்க்கும் திட்டத்தால் (State Building Project) எதிர்காலத்தில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை எடுத்துக்கூறும் பிரசாரத்தை மேற்கொண்ட தமிழ்த் தலைமை தமிழ் மக்களை அணி திரட்டியது. இதன் விளைவாக கும்பல் வன்முறைச் சம்பவங்கள், சத்தியாக்கிரகம், பகிஷ்கரிப்பு, எதிர்ப்புகள், எதிர்ப்பு ஊர்வலங்கள் ஆகியன இடம்பெற்றன. இனத்துவப் போட்டியும் முறுகல் நிலையும் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் இருந்தது. சிறிலங்கா சுதந்திரக்கட்சி, சமஷ்டிக் கட்சி என்ற இரு கட்சிகளும் தமது அரசியல் ஆதரவுத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இனத்துவ தேசியவாதத்தில் தீவிர கவனம் செலுத்தின. இதன் விளைவாக இரு பகுதியினரதும் உயர்குழுக்களிடையிலான முரண்பாடாக (Inter – Elite Conflict) இருந்துவந்த மோதல்நிலை வெகுஜனங்களை உள்ளடக்கிய இனத்துவ முரண்பாடாக வளர்ச்சி பெற்றது.
பெரும்பான்மை இனத்தை தமது அரசைக் கட்டி வளர்க்கும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அணி திரட்டிய சிங்கள ஆளும் குழு, தமிழர்களின் உரிமைகள் தொடர்பாக சமரசமான தீர்வுகளை வழங்க முன்வந்த சந்தர்ப்பங்களும் இருந்தன. பிராந்திய அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு (Regional Power Sharing) முன்மொழிவுகளின்படியான உடன்படிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. அவ்வாறான தீர்வு முயற்சிகளை சிங்களத் தீவிரவாதிகளும், பௌத்த சிங்கள தேசியவாத புத்திஜீவிகளும், பௌத்த பிக்குகளும் தீவிரமாக எதிர்த்த காரணத்தால் அம்முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.
தமிழ்த்தலைவர்கள் தமிழினத்தின் தேசிய அடையாளத்தை அழிக்கும் வேலையில் அரசாங்கம் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினர். ‘தேசத்தைக் கட்டி வளர்த்தல்’ (Nation Building) திட்டம் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் (Nation Destroying) திட்டமாக இருப்பதாகத் தமிழ்த்தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்த விவாதங்கள் இரு சமூகங்களிற்கிடையிலான பிளவுகளை அதிகரித்தன. உத்தியோக மொழி, சமயம், பண்பாடு, கல்வி ஆகிய துறைகளில் இனமையவாதக் கொள்கைகள் (Ethno – Centric Policy Measures) நடைமுறைப்படுத்தப்பட்டன. இலங்கை சுதந்திரம் பெற்ற முதற் பத்தாண்டு காலத்தில் பாராளுமன்ற ஜனநாயகமும், தேர்தல் ஜனநாயகமும் தாராண்மை ஜனநாயக அடித்தளத்தில் இருந்து விலகி இனவாதப்பாதையில் பயணிக்கத் தொடங்கின.
1956 தேர்தலில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாக எழுச்சி பெற்ற சமஷ்டிக் கட்சி காந்தி வழியிலான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தது. சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து காலி முகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழ்ச் சத்தியாக்கிரகிகள் சிங்கள வன்முறைக்கும்பலால் தாக்கப்பட்டனர். இத்தாக்குதல், அரசாங்கக் கட்சி அரசியல்வாதிகளின் ஆதரவோடு இடம்பெற்றது. காலிமுகத்திடல் சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பிறபகுதிகளிலும் வன்முறைகள் வெடித்ததைக் குறிப்பிடும் நவரட்ண பண்டார, கிழக்கு மாகாணத்தில் கல்லோய குடியேற்றப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், இறுதியில் 1958 ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையாகவும், 150 பேரைப் பலிகொண்ட அழிவாக முடிந்ததாகவும் குறிப்பிடுகிறார். தமிழர்களின் உடைமைகள் சொத்துகள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். 1958 முதல் 1970 வரையான நிகழ்வுகளை மூன்று பக்கங்களில் (பக். 280-300) அவர் விபரித்திருப்பதைக் கீழே சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளோம்.
அ) 1960 மார்ச் பொதுத் தேர்தல் முடிவுகளின்படி, சிங்களப் பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இரு பிரதான கட்சிகளில் எந்தவொரு கட்சியாலும் ஆட்சியமைக்க முடியவில்லை. சமஷ்டிக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசாங்கம் அமைக்கும் சந்தர்ப்பம் உருவானது.
ஆ) அவ்வேளை சமஷ்டிக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி (SLFP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகிய இரு கட்சிகளுக்கும் நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து ஒத்துழைப்பு வழங்க முன்வந்தது. சமஷ்டிக் கட்சியின் நான்கு அம்சக் கோரிக்கைகள் பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் எட்டப்பட்ட உடன்பாடுகளை வலியுறுத்துவனவாக அமைந்தன.
- பிராந்திய சபைகள் (Regional Councils) ஊடாக வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி (Autonomy).
- வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக (Administrative Language) தமிழை ஏற்று நடைமுறைப்படுத்தல்.
- தோட்டத்துறை தமிழர்களிற்கு (Plantation Tamils) பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் இருவரை பாராளுமன்றத்திற்கு நியமன உறுப்பினர்களாக நியமித்தல்.
- தமிழர்களின் மரபுவழி வாழிடப் பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதை நிறுத்துதல்.
ஆகிய நான்கு அம்சங்கள் சமஷ்டிக் கட்சியின் கோரிக்கைகளாக அமைந்தன.
இ) சிறிமாவோ பண்டாரநாயக்க 1960 யூலை மாதப் பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்தார். அவரது அரசாங்கம் சமஷ்டிக் கட்சியின் கோரிக்கைகள் எதனையும் பரிசீலிக்கத் தயாராக இருக்கவில்லை.
ஈ) சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் உத்தியோக மொழிச் சட்டத்தை 1960 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பதாக நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தது. அவ்வேளை, சிறிமாவோ அவர்களின் கணவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தலமையிலான அரசாங்கம் தமிழ்மொழி உபயோகம் தொடர்பாகக் கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதாகச் சமஷ்டிக் கட்சி குற்றம் சாட்டியது.
உ) 1961 மார்ச்/ ஏப்ரல் மாதங்களில் சமஷ்டிக்கட்சி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழை உத்தியோக மொழியாக நடைமுறைப்படுத்தக் கோரி சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தியது. இச்சத்தியாக்கிரகம் வன்முறைகொண்டு முறியடிக்கப்பட்டது. நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.
ஊ) 1965 இல் சமஷ்டிக் கட்சிக்கு தனது குறைந்தபட்ச கோரிக்கைகளை (Minimum Demands) முன்வைத்து ஐக்கிய தேசிய கட்சியுடன் சமரச உடன்பாட்டுக்கு வருவதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. 1965 இல் ஏழு கட்சிகளுடன் கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டது. சமஷ்டிக் கட்சி, அரசாங்கத்தின் ஒரு அங்கமாகப் பங்கேற்றது. அப்போது உருவான டட்லி – செல்வா ஒப்பந்தம் நிறைவேறாது போகவே சமஷ்டிக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது.
எ) 1960-1970 வரையான பத்தாண்டு காலம் சிங்கள – தமிழ் உறவுகள் விரிசலடைந்து சென்ற காலமாகும். இக்காலத்தில் லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு இடதுசாரிக் கட்சிகளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து அக்கட்சியின் சிங்கள – பௌத்த தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு வழங்கின.
இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு பாரபட்சம் காட்டுதலை எதிர்த்து இன ஒற்றுமைக்காக உழைத்து வந்த இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் 1960 களின் நடுப்பகுதி முதலாக சிங்கள – பௌத்த தேசியவாத நிகழ்ச்சி நிரலின்படி செயற்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, தமது முன்னைய நிலைப்பாட்டுக்கு மாறாகச் செயற்பட்டன. 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் (United Front Government) மேற்குறிப்பிட்ட மூன்று பிரதான கட்சிகளின் கூட்டணியாக அமைந்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் முஸ்லிம் தலைவர்களும் தமது இனக்குழுமத்திற்கு பொருளாதார நலன்களையும், உயர் கல்வி வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் இணைந்து கொண்டனர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை 1972 இல் நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில், அரசியலைமைப்பு விவகார அமைச்சராகப் பதவி வகித்த கொல்வின் ஆர்.டி. சில்வா 1972 அரசியல் யாப்பை வரைவதில் பெரும் பங்காற்றினார். அவரின் தலைமையிலும் நெறிப்படுத்தலிலும் வரையப்பட்ட 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு அரசியல் யாப்பு இலங்கையை ஒற்றையாட்சி அரசு எனவும், சிங்களம் மட்டுமே இலங்கையின் உத்தியோக மொழி எனவும் பிரகடனப்படுத்தியது. இவ்வரசியல் யாப்பு இலங்கையில் சிங்கள – பௌத்த ஒற்றையாட்சித் தேசிய அரசு (Sinhala Unitary Nation State) ஒன்றை உருவாக்கி, இலங்கையில் சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் வெற்றியை வெளிப்படுத்தியது.
1972 அரசியல் யாப்பு, இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் சிங்கள – பௌத்த தேசியவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அரசியல் யாப்பு அங்கீகாரத்தை வழங்கியது. 1972 அரசியல் யாப்பு இலங்கையில் இனத்துவ மேலாண்மை முறையை (Ethnic Dominance System) உருவாக்கியது என நவரட்ண பண்டார அவர்கள் குறிப்பிடுகிறார். இனத்துவ மேலாண்மை முறையின் இயல்புகளை அவர் பின்வருமாறு விளக்கிக் கூறுகிறார்.
1972 அரசியல் யாப்பு ஒரு சர்வாதிகார அரசுமுறையை உருவாக்கியது. சட்டவாக்கத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்னும் அரசின் மூன்று அங்கங்களிற்கிடையே இருக்க வேண்டிய அதிகாரச் சமநிலையைக் குலைத்து நிருவாகத்துறையிடம் அதிகாரங்களைக் குவிக்கும் ஏற்பாட்டைச் செய்தது. அரசாங்கத்தின் அரசியல் தலைவரான பிரதமர் சர்வ அதிகாரங்களையும் உடைய நிருவாகத் தலைவராக ஆக்கப்பட்டார். பெயரளவில் தேசிய அரசுப் பேரவை (National State Assembly) அதிஉயர் அதிகாரமுடைய அவையாகக் குறிப்பிடப்பட்ட போதும், பிரதமரே உண்மையான அதிகாரம் உடையவராக விளங்கினார். பிரித்தானியாவின் பிரதமர் ஆட்சி அரசாங்கத்தை (Prime Ministerial Government) மாதிரியாகக் கொண்டு இலங்கையின் அரசுமுறை அமைந்ததெனக் கூறப்பட்டபோதும், 1972 அரசியல் யாப்பு திட்டமிட்ட முறையில் சில புதிய கூறுகளைப் புகுத்தி அம்முறையைத் திரிபுபடுத்தியுள்ளது.
- தேசிய அரசுப் பேரவையை அரசியல் யாப்பு அதிஉயர் அதிகார நிறுவனம் (Supreme Institution) என அந்தஸ்தில் உயர வைத்துள்ளது.
- அரசின் சட்டவாக்க அதிகாரங்கள், நிருவாக அதிகாரங்கள், நீதித்துறை அதிகாரங்கள் என்னும் மூன்றுவகை அதிகாரங்களையும் இத்தேசிய அரசுப் பேரவையிடம் குவித்தது.
- பிரதமரை அரசின் அதிஉயர் தலைவராக (Supreme Leader) ஆக்கியுள்ளது. தேசிய அரசுப் பேரவையல்ல, பிரதமரே உண்மையான அரசுத் தலைவர் (de – facto Supreme Leader) என்ற நிலையில் உள்ளார். ஜனாதிபதியை நியமனம் செய்தல், அவரைப் பதவியில் இருந்து நீக்குதல் ஆகிய அதிகாரங்கள் அவரிடம் உள்ளது. இவ்வாறே அமைச்சரவை உறுப்பினர்களின் நியமனம், பதவி நீக்கம், பாராளுமன்றத்தைக் கலைத்தல் ஆகிய அதிகாரங்களும் பிரதமரிடமே உள்ளது.
- 1972 அரசியல் யாப்பு சுதந்திரமான நிறுவனமான பொதுச் சேவை ஆணைக்குழுவை ஒழித்தது. இதன் பயனாக பொதுச் சேவையை நிர்வாகத்துறை கட்டுப்படுத்துவதற்கும், அச்சேவையை அரசியல்மயப்படுத்துவதற்கும் வழியமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
- பிரதமருக்கு அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வதற்கான கட்டுப்பாடற்ற அதிகாரத்தை (Unchecked Authority) வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட எல்லாச் சட்டங்களினையும் மேவும் வகையிலான அவசரகால விதிகளை ஆக்கி அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1972 அரசியல் யாப்பு இலங்கையில் அரசியல் யாப்பின்படியான அரசாங்கம் (Constitutional Government) ஒன்றை ஏற்படுத்தியிருப்பதான போர்வையில் சர்வாதிகார அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த அரசாங்கத்தை சர்வாதிகார அரசியல் யாப்புவாத அரசாங்கம் (Authoritarian Constitutional Government) என அழைக்கலாம் என நவரட்ண பண்டார அவர்கள் குறிப்பிடுகிறார். பாராளுமன்றமுறை ஒரு ஜனநாயக அரசியல் முறையாகும். ஆனால் இலங்கையில் அது பாராளுமன்ற – மந்திரி சபை சர்வாதிகாரம் (Parliamentary Cabinet Authoritarianism) என்ற மறுஅவதாரத்தை எடுத்துள்ளது என நவரட்ண பண்டார விளக்கம் தருகிறார் (பக். 303). 6 ஆண்டுகள் கழிந்தபின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு, ஜனாதிபதிமுறையைக் கொண்டு வந்தது. 1972 அரசியல் யாப்பில் சில மாற்றங்களை மட்டுமே செய்து, சிரமம் எதுவும் இல்லாமல் நிறைவேற்றுத்துறையின் சர்வாதிகாரத்தை (Executive Authoritarianism) அவ்வரசியல் யாப்பினால் நிறுவ முடிந்தது. 1972 இன் அரசியல் யாப்பு பிரதமரைச் சர்வாதிகாரியாக அரியணையில் அமர்த்தியது. 1978 அரசியல் யாப்பு பிரதமரின் இடத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினை அமர வைத்து, அந்நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்சிக்கு வித்திட்டது. இவ்விடத்தில் ஒரு விடயத்தை அழுத்திக் கூற வேண்டியுள்ளது. சிறுபான்மை இனக்குழுச் சமூகங்களை அதிகாரமற்றவர்களாக ஆக்கி வைப்பதற்கான இனத்துவ மேலாதிக்க முறையின் அரசியல் வெளிப்பாடே இலங்கையின் சிங்கள அரசியல் உயர்குழாத்தினரால் 1970 களில் இலங்கையில் உருவாக்கப்பட்ட நிறைவேற்று சர்வாதிகார முறையாகும்.
The point that needs emphasis here is that the emergence and consolidation of the system of executive authoritarianism in Sri Lanka during 1970s have been a political expression of the ethnic dominance system that was created and sustained by the political elite to keep the minority ethnic communities disempowered (பக். 304)
தொடரும்.