கால்நடை வளர்ப்பில் அரச கால்நடை வைத்தியர்களும், அரச கால்நடை வைத்தியர் அலுவலகங்களும்
Arts
10 நிமிட வாசிப்பு

கால்நடை வளர்ப்பில் அரச கால்நடை வைத்தியர்களும், அரச கால்நடை வைத்தியர் அலுவலகங்களும்

December 21, 2024 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

அண்மையில் இலங்கையின் அரச கால்நடை வைத்தியர் அலுவலகங்களில் பணியாற்ற 146 கால்நடை வைத்தியர்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. சில வருடங்களாக அரச கால்நடை வைத்தியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் மேற்படி ஆட்சேர்ப்பு இடம்பெற்றிருந்த போதும், இறுதியில் 27 கால்நடை வைத்தியர்களே அரச சேவைக்கு வந்திருந்தனர். பல கால்நடை வைத்தியர்கள் அரச பணியை விரும்பாமல் தனியார் சிகிச்சை நிலையங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றுவதை விரும்புவதே இதற்குரிய முக்கிய காரணமாகும். மேற்குறித்த பிற இடங்களில் அரசாங்கச் சம்பளத்தை விட பல மடங்கு சம்பளம் கிடைப்பதும், அரச கால்நடை வைத்திய அலுவலகங்களில் பணியாற்றுவதிலுள்ள இடர்பாடுகளும் இந்த நிலைமைக்கு காரணமாக அமைகின்றன (பல அரச கால்நடை வைத்தியர்கள் நாட்டின் பொருளாதார நிலை காரணமாக நியூசிலாந்து, கனடா என அதிக வாய்ப்புள்ள நாடுகளுக்கு அண்மைக் காலத்தில் இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் அவர்கள் பணியாற்றிய அலுவலகங்களில் பாரிய வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளது). கால்நடை வைத்தியர்கள் மாத்திரமன்றி கால்நடைப் போதனாசிரியர் உள்ளிட்ட ஏனைய பணிகளுக்கும் பணியாளர்கள் வருவது குறைந்துள்ளது. இந்த நிலைமையின் பாரதூரத்தையும், அண்மைக்கால கால்நடை வைத்திய அலுவலகங்களின் நிலைமைகளையும்,  இதனால்  இலங்கையின்  கால்நடைத் துறைக்கு ஏற்படத்தக்க பாதிப்புகளையும் ஒரு அரச கால்நடை வைத்தியராக இங்கு பதிவிடுகிறேன்.

இலங்கையின் அரச கால்நடை வைத்திய அலுவலகக் கட்டமைப்பு பிரிக்கப்பட்டுள்ள விதம்

கால்நடை உற்பத்தித் திணைக்களம் (Department of Animal Production and Health) கால்நடைகளுக்குரிய சேவைகளை வழங்கும் அரச திணைக்களமாகும். இதற்கு மேலதிகமாக வன ஜீவராசிகள் திணைக்களமும் (Department of Wildlife), மாநகர சபைகள் (Municipal Councils) போன்றனவும், இராணுவம் – பொலீஸ் மற்றும் விமானப்படையும் கால்நடை வைத்தியர்களை உள்ளீர்த்துள்ளன. எனினும் அரச சேவைக்கு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமே விவசாய அமைச்சின் மூலம் கால்நடை வைத்தியர்களை நியமிக்கிறது. அதன் பின் குறித்தளவு கால்நடை வைத்தியர்கள் மேற்படி திணைக்களங்களுக்கு இணைக்கப்படுகின்றனர் (முப்படைகள் நேரடியாக இணைத்துக் கொள்கின்றன). கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் விவசாய அமைச்சின் கீழ் வருகிறது. சிலகாலம் தோட்டக் உட்கட்டமைப்பு அமைச்சுடனும், சிலகாலம் கிராமிய பொருளாதார அமைச்சுடனும் கால்நடை வள அமைச்சு ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. குறித்தளவு வைத்தியர்கள் மத்திய அரசுக்கு கீழான வைத்தியர்களாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள தலைமைச் செயலகம், விலங்கு ஆராய்ச்சி நிலையம் (Veterinary Research Institute – VRI), மாவட்டம் தோறும் உள்ள விலங்கு புலனாய்வு அமைப்புகள் (Veterinary Investigation Centers – VIC), விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் பணிபுரிகின்றனர். தேசிய கால்நடை சபை (National Livestock Board – NLB), அவற்றின் பண்ணைகள் போன்றவற்றிலும் கால்நடை வைத்தியர்கள் பணிபுரிகின்றனர்.

அடுத்ததாக மாகாண திணைக்களத்தில் இணைக்கப்பட்டுள்ள கால்நடை வைத்தியர்கள் பற்றி நோக்கலாம். ஒரு மாகாணப் பணிப்பாளரின் (Provincial Director) கீழ், மாவட்டம் தோறும் ஒரு பிரதிப் பணிப்பாளரின் (Deputy Director) கீழ் உள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் (Veterinary Surgeons Office) ஒன்று அல்லது இரண்டு கால்நடை வைத்தியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கால்நடை வைத்தியர் அலுவலகங்கள் ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் ஒன்று என்ற விகிதத்தில் அமைகின்றன. கால்நடைப் பண்ணைகள், பயிற்சி நிலையங்கள், சினைப்படுத்தல் நிலையங்கள், கால்நடை வைத்தியசாலைகளிலும் மேலதிகமாக கால்நடை வைத்தியர்கள் பணிபுரிகின்றனர். அதுபோன்று மாகாண அலுவலகங்களிலும் கால்நடை வைத்தியர்கள் பணிபுரிகின்றனர் (Subject Matter Specialists, Additional Provincial Directors, Deputy Provincial Directors). கால்நடை வைத்திய அலுவலகங்களில் கால்நடை வைத்தியருக்கு மேலதிகமாக கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் (Livestock Development Officers – LDO) பணிபுரிகின்றனர். பண்ணைகளில் அவர்கள் பண்ணை முகாமையாளர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக சிற்றூழியர்கள், சாரதிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பணிபுரிகின்றனர். சில அலுவலகங்களில் தனியார் செயற்கைமுறைச் சினைப்படுத்துநர்கள் (Private AI Technicians) பணிபுரிகின்றனர். அவர்களுக்கு அரச நியமனம் கிடையாது. பண்ணைகளில் தற்காலிக ஊழியர்களாக உள்ளனர்.

அரச கால்நடை வைத்தியர்கள் கால்நடைகளுக்குரிய சிகிச்சைகள், செல்லப் பிராணிகளுக்குரிய சிகிச்சைகள், பண்ணை ஆலோசனைகள், கால்நடை இனப்பெருக்க மேம்பாடு, தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் மேற்பார்வை செய்தல், சுகாதார சான்றிதழ் வழங்கல், மாதாந்த கால்நடைப் புள்ளிவிபரங்களை மாவட்ட – மாகாண திணைக்களமூடாக மத்திய திணைக்களத்துக்கு அறிக்கையிடல், கால்நடை உற்பத்தி சுகாதார  திணைக்களத்தின் மூலம் வரும் செயற்திட்டங்களை (மத்திய, மாகாண) நடைமுறைப்படுத்தல், பிரதேச செயலகம் – சமுர்த்தித் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் பல செயற்திட்டங்களுக்குரிய தொழில்நுட்ப ஆலோசனையை வழங்குதல், பயிற்சி வகுப்புகளை நடத்துதல், விலங்குகளைத் தேர்வு செய்தல் போன்ற பணிகளையும்; வங்கிகள் கடன் உதவி வழங்கத்தக்க பண்ணையாளரைப் பரிந்துரைத்தல், மொத்த அலுவலக நிர்வாகம் போன்ற பணிகளைச் செய்கின்றனர்.

செயற்கைமுறைச் சினைப்படுத்தல், கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்கல், காதடையாளமிட்டு கால்நடைகளை மற்றும் பண்ணைகளைப் பதிவு செய்தல், பயிற்சி வகுப்புகளை நடத்துதல், பண்ணைகளை முகாமை செய்தல், அலுவலகத்தின் சாதாரண வேலைகள் போன்ற பல பணிகளை கால்நடைப் போதனாசிரியர்கள் செய்கின்றனர்.

கால்நடை வைத்திய அலுவலகங்களில் நிலவும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளும் தீர்வுகளும்

தனியாருடன் ஒப்பிடும் போது இலங்கையின் கால்நடை வைத்தியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மிக மிகக் குறைவானது. இவர்கள் SL1 சேவை வரிசையில் உள்ளதால், நிர்வாக நிறைவேற்று அதிகாரிகளாகவே கணிக்கப்படுகின்றனர். நடைமுறையில் மேலதிகமாக விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களாகவும் இருக்கவேண்டி ஏற்படுகிறது. ஆயினும், அந்தச் செயன்முறைகளுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் பெரியளவில் கிடைப்பதில்லை. வைத்தியர்கள், பல் வைத்தியர்கள் என்போர் அடங்கும் SL2 சேவை வகைக்குள் செல்ல, கால்நடை வைத்தியர்கள் நீண்டகாலமாகப் போராடுகிறார்கள். இந்தச் சம்பள முரணால் பல கால்நடை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கும், தனியார் துறைகளுக்கும் செல்கின்றனர். இதனால் வைத்தியர் பற்றாக்குறை ஏற்பட்டு பல இடங்களில் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நாட்டின் பல இடங்களில் பல அலுவலகங்களை ஒரு வைத்தியரே பார்க்கும் நிலை உள்ளது. இதனால் வைத்தியர்கள் களைப்படைவதோடு பண்ணையாளர்களின் விலங்குகளுக்கு முறையான ஆலோசனை மற்றும் சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால் நாட்டின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனைத் தடுக்க பொருத்தமான சம்பளம் மற்றும் வசதிகளைக் கொண்ட கால்நடை வைத்தியர் சேவை ஸ்தாபிக்கப்பட வேண்டும். பண்ணைகளின் எண்ணிக்கைகளுக்கு அமைய அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட வேண்டும். முக்கியமான கொடுப்பனவுகள் கால்நடை வைத்தியர்களுக்கு கிடைப்பதில்லை. உதாரணமாக, உயிராபத்துகளை ஏற்படுத்தவல்ல விலங்குகளைக் கையாளுகின்ற, விலங்கு நோய்கள் பரவத்தக்க வேலைகளைச் செய்கின்ற முதல் அலுவலர்களாக உள்ள கால்நடை வைத்தியர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவுகள் (Risk Allowance) கிடைப்பதில்லை. இவ்வாறான கொடுப்பனவுகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டியவை. மேலும் கால்நடை வைத்தியர்களின் சிரேஷ்ட தன்மைக்கு அமைய பதவிப் பிரிப்புகளும் நடைமுறையில் இல்லை. தரம் 1 இற்குரிய பல சிரேஷ்ட கால்நடை வைத்தியர்கள் கடைசிவரை முக்கிய பதவிகளை வகிக்காது ஓய்வுபெறும் நிலையே உள்ளது. அவர்களுக்குரிய தகுந்த சம்பளமும் கிடைப்பதில்லை. முக்கிய சிரேஷ்ட பதவிகளும், விசேட தரப் பதவிகளும் உருவாக்கப்பட்டால், சேவையின் தரம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்நடை வைத்திய அலுவலகங்களில் சிகிச்சைக்கு வரும் விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதில் பல இடர்பாடுகள் உள்ளதால், பணிபுரியும் கால்நடை வைத்தியர்கள் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கத்தக்க மருந்துகள் பெரும்பாலான காலங்களில் இருப்பதில்லை. மக்களே தனியார்  மருந்தகங்களில் வாங்கிவர வேண்டிய நிலை உள்ளது. மனித மருத்துவமனைகளைப் போல, கால்நடை வைத்திய அலுவகங்கள் சிகிச்சையளிப்பதை மையமாகக் கொண்டவை கிடையாது. நோய்கள் வராமல் தடுக்கும் கடமைகளை அடிப்படையாகக் கொண்டவை. மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாது முரண்படுகின்றனர். எனினும், கால்நடை வைத்தியர்கள் முடிந்தவரை, கிடைக்கும் வசதிகளைக் கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கின்றனர். சில காலங்களில் விசேட ஒதுக்கீடுகளினூடாக குறித்தளவு மருந்துகள் கிடைத்தாலும் அவை இருக்கும் தேவைக்கு போதாமலேயே உள்ளது. இலங்கையில் கால்நடைகளுக்கு சிகிச்சை தரக்கூடிய முறையான சிகிச்சை நிலையங்கள் இல்லாத நிலையில், அரச கால்நடை வைத்திய அலுவலகங்கள் மேம்படுத்தப்படுவது அவசியமாகிறது. நவீன சிகிச்சைமுறைகள் மற்றும் ஆய்வுகூட முறைகளை உள்ளடக்கி, உபகரண வசதிகள் – ஆளணிகள் வழங்கப்பட்டு, கால்நடை வைத்திய அலுவலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்; அலுவலகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

கால்நடை வைத்தியர்களின் பணி பெரும்பாலும் பண்ணை விலங்குகள் இருக்கும் இடங்களை மையமாகக் கொண்டது. அவற்றை அணுக தினமும் களப் பயணங்களைச் (Field Visits) செய்ய வேண்டும். இதற்குப் பொருத்தமான வாகன வசதிகள் அவசியம். இலங்கையில் பல கால்நடை வைத்திய அலுவலகங்கள் வாகனங்கள் இன்றியே இயங்குகின்றன. இருக்கும் பல வாகனங்களோ 30 – 40 வருடங்கள் பழமையானவை. அடிக்கடி பழுதடையக்கூடியன. பல அலுவலகங்களில் சாரதிகள் இருப்பதில்லை. வருடாந்த இடமாற்றங்களில் சுகாதாரத் திணைக்களம் போன்றவற்றுக்கு சாரதிகள் விடுவிக்கப்பட்டால், மாற்றாக அங்கிருந்து இங்கு வருவதில்லை. இதனால் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகின்றன; முக்கியமான களப்பணிகள் நடைபெறாமல் பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். பெண் கால்நடை வைத்தியர்கள் வாகனங்கள் இல்லாமல் அதிகளவான அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர். மிகப்பெரிய பிரிவுகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவும் மிக மிகக் குறைவானதே. இதனால் மாதத்தில் பல நாட்கள் வாகனங்களைப் பாவிக்க முடியாத நிலையே உள்ளது. இதனைத் தீர்க்க, சகல கால்நடை வைத்திய அலுவலகங்களுக்கும் பொருத்தமான வாகனங்களையும் சாரதிகளையும், போதிய எரிபொருளுடன் வழங்கி, பணிகள் இடையறாது நிகழ வழிசெய்ய வேண்டும்.

ஏனைய மருத்துவத் துறைகளைப் போல் அரச கால்நடை வைத்தியர்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சிகள் மிகமிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் நவீன நுட்பங்கள் தொடர்பான அறிவு இலங்கை கால்நடை வைத்தியர்களுக்கு மிகக் குறைவாகவே உள்ளது.

கால்நடைப் போதனாசிரியர்கள் உயர்தர விஞ்ஞானப் பிரிவுகளிலிருந்தே தேர்வு செய்யப்படுகின்றனர். உயர்தர விஞ்ஞானப் பிரிவுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏனைய பல தொழில்களில் நல்ல கேள்வி இருப்பதுடன், அதிக சம்பளமும் வழங்கப்படுவதால், கால்நடைப் போதனாசிரியர் பணிக்கு ஆட்கள் வருவது குறைவாக உள்ளது. இவர்களுக்கு பதவி உயர்வுகளும் பெரிதளவில் கிடைப்பதில்லை. பதவிக்குவரும் கால்நடைப் போதனாசிரியர் ஒருவர் ஓய்வுபெறும் வரையில் அதே பதவியைத்தான் வகிக்க வேண்டியுள்ளது.  

கால்நடைகளின் சினைப்படுத்தல் செயன்முறை கால்நடைப் போதனாசிரியர்களுக்கே வழங்கப்பட வேண்டும். தனியார் சினைப்படுத்துநர்களுக்கு கால்நடைச் சினைப்படுத்தல் செயன்முறை வழங்கப்படும் போது, முறைகேடுகளும் கேள்வி கேட்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. கால்நடைப் போதனாசிரியர்களுக்கான பயணக் கொடுப்பனவுகளும் மிக மிகக் குறைவே. அலுவலகங்களில் நிலவும் போதனாசிரியர்களின் பற்றாக்குறை கால்நடைப் பண்ணைகளின் இனப்பெருக்கச் செயற்பாடுகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. இவர்களின் தொழில்நுட்ப மேம்படுத்தல்களுக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயிற்சிகளும் அரிதாகவே உள்ளன. கால்நடை வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புத் தேவைப்படுவது போல், போதனாசிரியர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்புத் தேவைப்படுகிறது.

இலங்கையின் கால்நடை வளர்ப்பின் அடிப்படை அரச கட்டமைப்பும், அதன் ஊழியர் படையும் மேம்படுத்தப்படுவது அது சார்ந்த கால்நடை வளர்ப்புக்கு அவசியமாகிறது. கால்நடை வைத்தியர்கள் இடை விலகுவது தடுக்கப்பட வேண்டும். புதிதாக கால்நடை வைத்தியர்களும், கால்நடைப் போதனாசிரியர்களும் துறைக்கு வருவதற்குரிய சூழலை உருவாக்க வேண்டும். பண்ணையாளர்களுக்கு உச்ச பயனைத் தரத்தக்கதாக கால்நடை வைத்திய அலுவலகங்கள் சகல வசதிகளுடனும் உருவாக்கப்பட வேண்டும். புதிய பல அலுவலகக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். இந்த நிலைமைகள் சீர் செய்யப்படாமல் நாட்டின் பாலுற்பத்தியையோ, இறைச்சி உற்பத்தியையோ அதிகரிப்பது சாத்தியமில்லை.


ஒலிவடிவில் கேட்க

3224 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்