சூழலியல் சுற்றுலா: நல்லெண்ணத்தைக் காசாக்கல்
Arts
23 நிமிட வாசிப்பு

சூழலியல் சுற்றுலா: நல்லெண்ணத்தைக் காசாக்கல்

December 24, 2024 | Ezhuna

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இன்று அனைவருமே அனுபவிக்கின்ற நிலையில் பசுமை நோக்கிய நகர்வு குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் பரந்துபட்டளவில் மக்களைச் சென்றடைந்துள்ளது. பசுமையின் பெயரால் வளச்சுரண்டல்கள், உரிமை மறுப்புகள், மோசடியான வர்த்தகம், போலியான திட்டங்கள் என அனைத்தும் அரங்கேறுகின்றன. குறிப்பாக மூன்றாமுலக நாடுகள் இதற்குப் பலியாகின்றன. இலங்கையும் இதற்கு விலக்கல்ல. இலங்கை உயிரினங்களின் செறிவு அடிப்படையில் ஆசியப் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக கருதப்படுகிறது. ஆனால் இலங்கையின் உயிர்ப்பல்வகைமை மிகப்பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் காலநிலை மாற்றத்தின் கொடும் விளைவுகளையும் இலங்கை சந்தித்துள்ளது. இவை குறிப்பாக விவசாயத் துறையை சீரழித்துள்ளது. உயரும் கடல்மட்டம் இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் உண்டு. இத்தகைய பின்புலத்தில் இலங்கைச் சூழலில் பசுமை எனும் பெயரால் நடைபெறுகின்ற விடயங்களைத் தத்துவார்த்த ரீதியிலும் வரலாற்று நோக்கிலும் சமகால நிகழ்வுகளுடனும் நோக்க இத்தொடர் விழைகிறது. பசுமையின் பெயரால் நடந்தேறுபவை ஏற்படுத்தும் சமூகப் பொருளாதார மாற்றங்களையும் அதன் அரசியல் சிக்கல்களையும் சேர்த்தே ‘பசுமை எனும் பேரபாயம்‘ எனும் இத்தொடர் கவனம் செலுத்துகிறது.

தொடக்கக் குறிப்புகள்

சிறிது காலத்திற்கு முன்னர் உயிரியற்துறைப் பேராசிரியர் ஒருவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது இலங்கை ஏன் மிகப்பிரபலமான சுற்றுலா நாடாக இருக்கிறது என்ற வினாவை அவர் எழுப்பினார். இயற்கையின் எழில், தேசியப் பூங்காங்கள், யானைகள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்தும் நிரம்பிய பூமியது என்று பதிலளித்தேன். அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்:

“நீங்கள் அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறீர்கள். உங்களது வீட்டின் வாசலில் ஒரு சிங்கக் கூட்டம் படுத்திருக்கிறது. அவை தமது உணவை உண்டுவிட்டு உண்ட களைப்பில் ஒய்யாரமாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன. சிங்கங்களுக்கு உங்களைத் தெரியாது. உங்கள் வீட்டின் முன்னால் தான் தாம் படுத்திருக்கிறோம் என்பதையும் அவை அறியா. நீங்கள் என்ன செய்வீர்கள்? பாதுகாப்பான ஒரு இடத்தில் ஒளிந்து கொள்வீர்களா? அல்லது அச்சமின்றி வீட்டை நோக்கிச் செல்வீர்களா? ஒருவேளை உங்கள் குழந்தை வீட்டில் தனியாக இருந்தால்? அப்போது ஒருவேளை சோம்பல் முறிப்பதற்காய் ஒரு சிங்கம் மெதுவாக எழுந்தால்?”

இன்று பிரபலமாயிருக்கின்ற சூழலியல் சுற்றுலா (Ecotourism) தொடர்பிலான முக்கியமான ஒரு சவாலை அவர் இக்கேள்வியின் வழி முன்வைத்தார். உண்மை என்னவெனில், அந்த முன்வாசலில் உள்ள சிங்கங்களை நம்புவதற்கு நீங்கள் போராடுவதைப் போலவே, பல விலங்குகள் நம்மை நம்புவதற்கும் போராடுகின்றன. வனவிலங்குகள் பொதுவாக மனிதர்களை வேட்டையாடுபவர்களாகக் கருதுகின்றன. ஆச்சரியப்படுவதற்கில்லை, உண்மையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவுக்காகவும் அவற்றின் தயாரிப்புகளுக்காகவும் விலங்குகளை வேட்டையாடி வருகிறோம். இன்று, நவீன உணவு உற்பத்தி தொழில்நுட்பங்களால் நன்கு ஊட்டம் பெறுவதால், நாம் இப்போது இந்த விலங்குகளில் சிலவற்றை இன்பத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் எந்தத் தீங்கும் செய்யமாட்டோம் என்று அவைக்கு எப்படித் தெரியும்? நாங்கள் இன்னும் வேட்டையாடுபவர்களைப் போல வாசனை வீசுகிறோம். நாம் அடிக்கடி ஆரவாரமாகவும் விநோதமாகவும் நடந்து கொள்கிறோம். சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதற்காக, ஒரு புகைப்படத்திற்காக விலங்குகளைத் துரத்திச் சென்று கேமராக்களுடன் வேட்டையாடுகிறோம்.

சூழலியல் சுற்றுலா என்பது இலங்கையின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றான சுற்றுலாத்துறையின் வளர்ந்துவரும் முக்கியமான பிரிவாகும். இலங்கை மிகவும் பிரபலமான உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். சுற்றுலாப் பயணிகள் எளிதில் அணுகக்கூடிய பல்வேறு வகையான சுற்றுச்சூழல் அமைப்புகளையும் அதிக வனவிலங்குகளையும் குறுகிய காலத்திற்குள் சிறிய நிலப்பரப்பினுள் இங்கு காணலாம். சூழலியல் சுற்றுலா இலங்கையில் சுற்றுலாத் துறையில் எப்போதும் வளர்ந்து வரும் துறையாக மாறி வருகிறது. குறிப்பாக உலகளவில் உள்ள 25 க்கும் குறைவான பல்லுயிர் வெப்ப இடங்களில் ஒன்றாக இலங்கை இருப்பதும், பசுமைப் பகுதியாக முழு நாடும் இருப்பதும்  உலகளாவிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. உலகில் உள்ள 377 தாவர குடும்பங்களில் 189 தாவர குடும்பங்கள் இலங்கையில் உண்டு. 120 வகையான பாலூட்டிகள், 171 வகையான ஊர்வன, 106 வகையான நீர்வீழ்ச்சிகள் மற்றும் 227 வகையான பறவைகள், நம்பமுடியாத எண்ணிக்கையிலான அழிவுறும் நிலையில் உள்ள உயிரினங்களோடு பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட தீவு நாடாக இலங்கை திகழ்கிறது. எட்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் மற்றும் ஐந்து ராம்சார் சதுப்பு நிலங்கள் உட்பட ஆசியாவின் இரண்டாவது மிக உயர்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளை இலங்கை உள்ளடக்கியது. இது தவிர்க்கவியலாமல் சூழலியல் சுற்றுலாவின் முக்கியமான நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றியுள்ளது.

இப்போது தேசிய பூங்காக்கள், வனவிலங்குச் சரணாலயங்கள், காடுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சூழலியல் சுற்றுலா மையப்படுத்தப்பட்டுள்ளது. இது விரிவடையும் போது இன்னும் பல பகுதிகள் சூழலியல் சுற்றுலாவிற்குள் ஈர்க்கப்படும். இந்தத் துறையானது பல்வேறு சுற்றுலா நடவடிக்கைகளுக்காக பல்லுயிர் பெருக்கத்தின் அழகிய இயற்கை சொத்துகளை ஈர்க்கிறது. பல்லுயிர் பெருக்கம், தேசிய பூங்காக்கள் மற்றும் பிற வனவிலங்கு இருப்புகள் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் வகையில், சூழலியல் சுற்றுலா குறிப்பிடத்தக்க வருமானம் ஈட்டக்கூடிய துறையாக உள்ளது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அரைவாசிக்கு மேற்பட்டோர் ஏதோவொருவகையில் சூழலியல் சுற்றுலாவை தமது நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாதுகாக்கப்பட்ட பல பல்லுயிர் வாழ் பிரதேசங்கள் தொடர்ச்சியாக சூழலியல் சுற்றுலாத் தலங்களாக மாறுகின்றன. இது நீண்டகால சூழலியல் சவால்களைக் கொண்டது. பொருளாதார அபிவிருத்தி இலக்குகள், சூழலியல் பாதுகாப்பும் நிலைபேண் தன்மையும் ஆகிய இரண்டையும் கவனத்தில் எடுக்க வேண்டியதாக சூழலியல் சுற்றுலா இருக்கிறது. ஆனால் இலங்கை அனுபவம் சொல்கிற கதை கொஞ்சம் வித்தியாசமானது.

சூழலியல் சுற்றுலாத் தோற்றத்தின் கதை

ஒரு நீண்ட வரலாற்று சூழலில், சுற்றுலா என்பது மனிதப் பொருளாதாரம், சமூகம், பண்பாடு, புவியியல், வரலாறு மற்றும் சட்டம் போன்ற தொடர்புடைய சமூகத் துறைகளின் செயற்பாடுகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான இயக்கவியல் செயல்முறையாகும். சுற்றுலா என்பது மனித நாகரிகத்தின் வரலாற்றைப் போலவே பழமையானது. மனித மூதாதையர்கள் பகிர்ந்துகொண்ட கூட்டுப் பயண நினைவுகள் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அந்த நேரத்தில், காலநிலை மாற்றங்களால், வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்ந்த சில மனித மூதாதையர்கள் தங்கள் இரையுடன் ஆபிரிக்காவை விட்டு வெளியேறி புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், மனிதர்கள் 45,000 ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். ஆசிய இனங்களின் மூதாதையர்கள் கிழக்கு ஆசியாவில் குடியேற 35,000 ஆண்டுகளுக்கு முன்பு, யூரேசிய கண்டம் வழியாக கிழக்கு ஆசியாவில் குடியேறினர். இந்த இனக்குழுக்கள் முதலில் இந்தியக் கண்டத்திற்கு இடம்பெயர்ந்து, பின்னர் கடற்கரையோரமாக தெற்காசியாவை அடைந்து, பின்னர் தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வந்து, தெற்காசிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளை உருவாக்கினர். உலகெங்கிலும் சிதறிக் கிடக்கும் இந்தச் சந்ததியினர் அனைவரும் ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள். பின்னர் தற்போதைய உலகளாவிய மனித சமுதாயமாகப் பரிணமித்தனர். பனி யுகத்தின் போது, 30,000 ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பின் கரையோரத் தீவுகளுக்கும் நிலத்திற்கும் இடையிலான தொடர்பு காரணமாக, சில ஆசிய இனங்கள் ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியாவிற்கு குடிபெயர்ந்தன. உண்மையில், கப்பல் கட்டும் கண்டுபிடிப்பு காரணமாக, சில ஆசிய இனங்கள் புதிய கற்காலத்திலிருந்து (கி.மு. 6000 – 5000) சீனாவில் இருந்து தைவானுக்கு இடம்பெயர்ந்தன; பிலிப்பைன்ஸில் குடியேறின; நியூசிலாந்தில் கூட குடியேறின.

மனித நாகரிகத்தின் வரலாற்றில், பொருள் மற்றும் ஆன்மீக நாகரிகம் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு வளர்ந்தபோது, பயண மற்றும் இடம்பெயர்வு நடவடிக்கைகள் தோன்றின. முன்னோர்கள் சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது இதுவே முதல் முறை. இருப்பினும், உலகமயமாக்கல் மற்றும் பண்பாட்டுப் பன்முகத்தன்மையுடன், சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மனித உடல் செயற்பாடுகள், உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு சமூகம் மற்றும் நாட்டில் உள்ள சமூக மற்றும் பொருளாதார நிலையின் ஒப்பீட்டு இழப்பு எதிர்மறையான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிச் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பழமையான சமூகங்களில், மக்கள் வேட்டையாடுதல் மற்றும் சேகரிப்பதன் காரணமாக இடம்பெயர்வு நடத்தைகளை உருவாக்கினர். அடிமை – நிலப்பிரபுத்துவச் சமூகங்களாக மாறினர். சமுதாயத்தில் வேலைப் பிரிவினை காரணமாக, விவசாயம், கைத்தொழில், வணிகம் போன்ற வகுப்புகள் பிறந்தன. ஆரம்பகால பிரபுக்களும் வணிகர்களும் வணிக அல்லது மத நோக்கங்களுக்காக சுற்றுப்பயணம் செய்தனர். நவீன சகாப்தத்தில், தொழில்துறை புரட்சியின் தாக்கம் காரணமாக, தேசிய வருமானம் கணிசமாக அதிகரித்தது மற்றும் வேலை நேரம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. மேலும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் வேகமாக மாறின; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா நடவடிக்கைகள் தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி புதிய சுற்றுலாவை உருவாக்கின.

1950 இல் மனிதர்கள் வெறும் 25 மில்லியன் மக்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். 2019 ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 1.5 பில்லியனை எட்டியது. ஆனால், கொவிட் – 19 தொற்றுநோயின் போது இவ் எண்ணிக்கை சரிவைச் சந்தித்திருந்தது. சுற்றுலாத் துறையானது உலகப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலகிற்கு 320 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை இது வழங்குகிறது. 150 க்கும் மேற்பட்ட நாடுகளில், பொருளாதார ரீதியாக மிகவும் இலாபகரமான தொழில்களில் முதல் ஐந்து இடங்களில் சுற்றுலாத்துறை இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் சுற்றுலாத்துறையில் பெருமளவில் தங்கியுள்ளன.

சூழலியல் சுற்றுலாவின் வரலாறு மிகவும் குறுகியது. இதன் கதை 70 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்குகிறது. 1950 களிலேயே இந்தச் சொல்லாடல் குறித்த விவாதங்களும் வரையறைகளும் தொடங்கின. அப்போது பெரும்பாலான அறிஞர்கள் சூழலியல் சுற்றுலாவை சுற்றுச்சூழலுக்கு நட்பான செயலாகக் கருதினர். சுற்றுலாப் பயணிகளின் பயணத்தின் போது அவர்களின் நடத்தையை சுற்றுச்சூழல் சுற்றுலா ஒழுங்குபடுத்துவதோடு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய நுகர்வுத் திசையைப் பரிந்துரைக்கிறது என்றும் அவர்கள் வாதிட்டனர். 

1960 மற்றும் 1970 க்கு இடையில், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, தேசிய பூங்காக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் சுற்றுச்சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் இயக்கத்தின் வளர்ச்சியுடன், சுற்றுச்சூழலிலும் சமூகத்திலும் சுற்றுலாவின் தாக்கத்தை மக்கள் ஆராயத் தொடங்கினர். மேலும் இயற்கையை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது மற்றும் சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு இடையில் சமநிலையை எவ்வாறு அடைவது என்று விவாதித்தனர். இந்தக் காலகட்டத்தில், சில தொழில்முறை சுற்றுலாப் பயணிகள் ஈக்வடாரின் கலாபகோஸ் தீவுகளில் சூழலியல் சுற்றுலாச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இது முக்கிய கவனம் பெற்றது. சார்ள்ஸ் டார்வினின் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற புகழ்பெற்ற நூலோடு கலாபகோஸ் தீவுகள் நெருக்கமாகப் பிணைந்துள்ளன. எனவே இந்தப் பகுதி சூழலியல் சுற்றுலாத் தலமானது. ஆனால் ஒழுங்குபடுத்தப்படாத, முறையற்ற சுற்றுலாச் செயற்பாடுகள் சூழலியலாளர்கள், இயற்பியலாளர்கள், உயிரியலாளர்கள் ஆகியோரின் கண்டனத்தைப் பெற்றது. சூழலியல் சுற்றுலா இயற்கைகையையும் உயிரினங்களையும் அழிக்க அனுமதிக்கக்கூடாது என்ற கவனம் அப்போதுதான் தொடங்கியது.

1980 களின் முற்பகுதியில், சுற்றுலாத் துறையானது சூழலியல் சுற்றுலாவில் சாத்தியமான லாபத்தைக் கண்டறிந்தது, எனவே அவர்கள் தொலைதூரப் பகுதிகளில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தனர் அல்லது வாங்கினார்கள். சூழலியலை நிறுவினர் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சுற்றுலா வழிகாட்டி சேவைகளைத் தொடங்கினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசிய வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான வழிமுறையாக பல நாடுகள் சூழலியல் சுற்றுலாவை அங்கீகரிக்கின்றன. இருப்பினும், சூழலியல் சார்ந்த சுற்றுலா உள்ளூர் சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கவில்லை. அல்லது சுற்றுலா வருமானம் சமூக வளங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை வழங்கவில்லை.

மெக்சிகோ நாட்டின் கட்டிடக் கலைஞர் ஹெக்டர் செபாலோஸ் – லாஸ்குரைன் (Héctor Ceballos-Lascuráin) “சூழலியல்; சுற்றுலா” என்ற வார்த்தையை முதன்முதலில் உருவாக்கினார். 1981 ஆம் ஆண்டில், அவர் சூழலியல்; சுற்றுலாவை வெளிப்படுத்த “டுரிசிமோ எக்கோலாஜிகோ” (Turismo Ecologico) என்ற ஸ்பானிஷ் வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கினார். 1983 ஆம் ஆண்டு, அவர் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (Nature Conservation Association –PRONATURA) தலைவராக இருந்தபோது “Ecoturismo” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இது ஐரோப்பிய மொழியில் ஒற்றைச் சொல்லாக சூழலியல் சுற்றுலாவின் தொடக்கமாக இருந்தது. பின்னர், அவர் 1984 ஆம் ஆண்டு “சுற்றுச்சூழலின் எதிர்காலம்” என்ற அவரது கட்டுரை வெளியிடப்படும் வரை குறித்தசொல் கவனம் பெறவில்லை. இந்தக் காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சுற்றுலா படிப்படியாக புதுமையான மேலாண்மை மற்றும் சாகச சுற்றுலா, மாற்று சுற்றுலா, சூழலியல் சுற்றுலா, சுற்றுச்சூழல் நட்பு பயணம், நெறிமுறை சுற்றுலா, பசுமை சுற்றுலா, இயற்கை சுற்றுலா, இயற்கை சார்ந்த சுற்றுலா, பொறுப்பு சுற்றுலா, மென்மையான சுற்றுலா, நிலைபேண் சுற்றுலா ஆகியவனவாக விரிந்தது.

சூழலியல் சுற்றுலா என்பது இயற்கை சூழலியலைப் பாதுகாப்பதையும், இயற்கையின் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிப்பதையும், இயற்கையை ஒரு சுதந்திரமான வாழ்க்கையாகக் கருதுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் சுற்றுலாவில் பங்கேற்கும் பயணிகள், இயற்கை அழகை அனுபவிக்கும் போது உயிரினங்களின் வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு மிருகத்தைப் பார்க்கும்போது, அதைத் தொந்தரவு செய்யாதீர்கள். புகைப்படம் எடுத்தல், ஓவியம் வரைதல், பறவைகள் கண்காணிப்பு, சக்தியற்ற படகு சவாரி மற்றும் இயற்கை ஆராய்ச்சி போன்ற குறைந்த குறுக்கீடு நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே கவனிக்கவும் தியானிக்கவும், இயற்கையான ஒலிகளைக் கேட்கவும், இயற்கையின் அழகை அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள என்பதே இதன் அடிப்படையாகும்.

சூழலியல் சுற்றுலா, சுற்றுச்சூழலை அழிக்காது என்பதை செயலற்ற முறையில் உறுதி செய்வதோடு, சுற்றுச்சூழலின் மூன்று அம்சங்களை –  வளம்பேணல், கல்வி மற்றும் இயல்புமீட்டல் (conservation, education, and rehabilitation) –  சுற்றுலாப் பயணிகள் கவனத்தில் கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் ஊக்குவிக்கிறது. சிந்தனையிலிருந்து நடத்தை வரையிலான இந்த முன்னேற்றம், சுற்றுச்சூழலியல் பாதுகாப்பு மூலம் சுற்றுலா வளங்களின் தரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகும். இதனால் சுற்றுலா நடவடிக்கைகள் நீண்ட காலம் நீடிக்கவும் சுற்றுச்சூழல், சமூகப் பண்பாடு, உள்ளூர் பொருளாதாரம் ஆகியவற்றைப் பராமரிப்பதில் சீரான வளர்ச்சி அடையவும் முடியும். இதன்மூலமே நிலைபேறான சூழலியல் சுற்றுலாவைச் சாத்தியமாக்கலாம்.

சூழலியல் குறித்த அக்கறை உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ள நிலையில் பொதுவாக சுற்றுலாப் பயணிகள் சூழலுக்கு பாதிப்பற்ற வகையில் தமது சுற்றுலாக்களைச் செய்ய விரும்புகிறார்கள். இது ஒரு வகையான குற்றவுணர்வின் வெளிப்பாடு. தம்மால் இயற்கை பாதிப்படையக் கூடாது என்ற நல்லெண்ணம் இதற்கு முக்கிய காரணமாகும். இதை நன்கறிந்த சுற்றுலாத்துறை, சூழலியல் சுற்றுலாவை சந்தைப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்துகிறது. சூழலியல் சுற்றுலா நேர்மையற்ற சுற்றுலாத் தொழில்களுக்கு ஒரு மறைப்பாகவும் வழிமுறையாகவும் மாறியுள்ளது. “சூழலியல்” என்ற முழக்கத்தின் கீழ் இருந்தாலும் அவை  சூழலியல் சுற்றுலாவின் கொள்கைகளைப் பின்பற்றவில்லை. இந்த நடத்தை “பசுமைப்புரட்டு” (Greenwashing) என்ற செயலுக்கு நிகரானது. இலங்கையின் சூழலியல் சுற்றுலாவின் முக்கிய சவால்களில் இது பிரதானமானது. சுற்றுலாப் பயணிகளின் நல்லெண்ணத்தை எப்படியாவது காசாக்க வேண்டும் என்ற நோக்கமே இதனடிப்படையாகும்.

சூழலியல் சுற்றுலாவின் சவால்கள்

இலங்கையில் சரணாலயங்கள், தேசிய பூங்காங்கள் போன்றன அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. குறிப்பாக யால, உடவளவை, வில்பத்து என்பன குறிப்பிடத்தக்கன. இப்பகுதிகளில் நடைபெறும் சுற்றுலாப் பயணங்கள் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டவை. இந்தப் பொருளாதார அணுகுமுறையின் குறிப்பிடத்தக்க சிக்கல் என்னவென்றால், விலங்குகள் ஆபத்தான அல்லது தொந்தரவு செய்யப்பட்ட பகுதியைவிட்டு வெளியேறும் என்று நாம் வெறுமனே கருத முடியாது. விலங்குகள் தொந்தரவுகளால் எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஏனெனில் அவற்றுக்கு வேறு வழிகள் இல்லை. இதன் பொருள், ஒரு விலங்கு அச்சுறுத்தலைப் பொறுத்துக்கொள்வதாகத் தோன்றலாம், ஏனெனில் அதற்குப் பதிலளிப்பது சாத்தியமில்லை. இருப்பினும், மனிதரது அச்சுறுத்தல் அதன் உயிர்வாழும் அல்லது இனப்பெருக்கம் செய்யும் திறனைப் பாதிக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டியுள்ளன. விலங்குகள் பெரும்பாலும் மனிதர்களை வேட்டையாடுபவர்களாகக் கருதுவதால், சூழலியல் சுற்றுலாவின் தாக்கங்கள் பற்றிய கேள்விகளை நாம் புறந்தள்ளவியலாது.

ஒரு சுற்றுலாப் பயணியின் எண்ணம் யாதெனில் தான் மிகக்குறைவான நேரமே குறித்த காட்டிலோ, பூங்காவிலோ செலவிடுகிறேன். எனவே இதனால் விலங்குகளுக்கும் சூழலுக்கும் பாதிப்பு இல்லை என்பதே. ஆனால் இந்த எண்ணம் தவறானது. இந்த வருகைகளின் தற்காலிகத் தன்மை, பல இயற்கைப் பகுதிகளில் உயிரினங்கள் தென்படாமை, வெளிப்படையான அழகிய சூழல் ஆகியவை சுற்றுலா மட்டுமே வனவிலங்குகளின் மீது தெளிவான தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்வதைக் கடினமாக்குகிறது. குறிப்பாக இந்தத் தாக்கங்கள் வாழ்விடம்  துண்டாடப்படுதல், காலநிலை மாற்றம், சட்டவிரோத வேட்டையாடுதல் போன்ற அழுத்தமான அச்சுறுத்தல்களுடன் ஒப்பிடும்போது தாக்கம் குறைவானதே. 

இன்னொருபுறம், சூழலியல் சுற்றுலா என்பது சுற்றுலாப்பயணிகள் இயற்கை உலகத்தை ஆராய்வதற்கும், பல்வேறு வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக உயிரினங்களைப் பற்றிய  புரிதலைப் பெறுவதற்கும், அதை மெச்சுவதற்கும், அவற்றின் தொடர்ச்சியான பாதுகாப்பிற்கு நிதி மற்றும் அரசியல் ஆதரவை வழங்குவதற்கும் வாய்ப்பளிக்கிறது. எனவே சூழலியல் சுற்றுலா பொதுவாக பாதுகாப்பு நோக்கங்களுடன் மிகவும் இணக்கமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இது வருவாய் உருவாக்கம், குறித்த சூழலியலின் பாதுகாப்பிற்கான ஆதரவு மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கான வாய்ப்புகள் உட்பட பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது.

ஆயினும்கூட, இயற்கைப் பகுதிகளுக்கு மனிதர்கள் செல்வது சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வருகையின் அளவைக் கருத்தில் கொள்ளும்போது, அது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மான் மேய்ச்சல் நிலத்திலிருந்து மலையேறுபவர்கள் காரணமாக இடம்பெயர்கிறது. தொந்தரவு முடிந்தவுடன் விலங்கு அதன் இயல்பான நடத்தைக்குத் திரும்பும் என்று கருதுவது, குறைந்தபட்சத் தாக்கமாகத் தோன்றலாம். எவ்வாறாயினும், இந்தச் சுருக்கமான இடையூறு அடிக்கடி நிகழும் பட்சத்தில் அது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். இது ஊட்டச்சத்து வளங்களுக்காக விலங்கு செலவழிக்கும் நேரத்தைக் குறைக்கிறது. விலங்கு அந்தப் பகுதியைத் தவிர்த்துவிட்டால், மான்களின் வாழ்விடத்தின் அளவு குறையும். உண்மையில், தனிப்பட்ட விலங்குகளின் இனப்பெருக்க வெற்றி மற்றும் உயிர்வாழ்வைக் கட்டளையிடும் பல ஊடாடும் காரணிகள் காரணமாக, நீண்ட காலங்கள் மற்றும் பரந்த அளவுகளில் இந்தத் தாக்கங்களை ஆராய்வது சவாலானது. எவ்வாறாயினும், வனவிலங்குகளில் சூழலியல் சுற்றுலாவின் விளைவுகள் பற்றிய அறிவியல் ஆய்வுகள் வளர்ந்து வருகின்றன. இவை, நடத்தை மாற்றங்கள் காலப்போக்கில் குவிந்து நீண்ட காலத்திற்கு விலங்குகளின் எண்ணிக்கையை மோசமாகப் பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன.

திமிங்கிலம், டொல்பின் ஆகியவற்றைப் பார்வையிடுதல் இலங்கையில் மிகவும் பிரபலமான இன்னொரு சூழலியல் சுற்றுலா நடவடிக்கை ஆகும். இது குறிப்பாக மிரிஸ்ச, கல்பிட்டி, திருகோணமலை ஆகிய பகுதிகளில் இடம்பெறுகிறது. கடல் பாலூட்டிகளை பார்வையிடுவது தொடர்பான சட்டங்கள் இலங்கையில் நடைமுறையில் இருக்கும்போதும் அவை பின்பற்றப்படுவதில்லை என்பதை ஆய்வுகள் தெளிவாகக் காட்டியுள்ளன.

திமிங்கிலத்தைப் பார்க்கும் படகுப் போக்குவரத்தானது திமிங்கிலங்களின் நடத்தையில் மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. திமிங்கிலங்கள் இந்தப் படகுகளை உணர்ந்தவுடன் மேற்பரப்புக்கு வருவதைக் குறைக்கின்றன. தமது உள்ளும் புறமும் நீந்தும் தன்மையை மாற்றுகின்றன, நீச்சல் வேகம், திசை என்பவற்றை மாற்றுகின்றன. பிரதானமான இது அவற்றின் உணவு மற்றும் ஓய்வு நேரத்தை மாற்றுகிறது. திமிங்கிலத்தைப் பார்க்கும் செயற்பாட்டின் விளைவாக அவை தங்களுக்குத் தெரிந்த விருப்பமான கடலோர வாழ்விடத்திலிருந்து மேலும் கடலுக்கு இடம்பெயர்ந்து நீந்துகின்றன. இது பலவகைகளில் சிக்கல்களை உருவாக்குகிறது.

திமிங்கலம் மற்றும் டொல்பின் சுற்றுலாத்துறை இதன் காரணமாக சவால்களுக்கு உட்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் திருப்தியைக் கருத்தில் கொள்ளும் போது, இவ்வகைப் பயணங்கள் மிகவும் கடினமானதாக அமைகிறது. ஏனெனில், குறிப்பிட்ட கவர்ச்சியான இனங்களைப் பார்வையிடுவதற்கான இந்தச் சுற்றுலாப் பயணிகளின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு சில சமயங்களில் உத்தரவாதம் அளிக்க இயலாது. இதன் காரணமாக, சட்டங்களை மதிக்காது எப்படியாவது சுற்றுலாப் பயணிகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இலங்கை தீவாக இருப்பதால் கடல்சார் சுற்றுலாச் செயற்பாடுகள் பிரதானமானவை. ‘டைவிங்’ மற்றும் ‘ஸ்நோர்கெலிங்’ ஆகியவை மாயாஜால அனுபவங்களைத் தரக்கூடியவை. இதனால், ஸ்நோர்கெலிங் மற்றும் டைவிங் பயணங்களுக்கான இயற்கை சார்ந்த சுற்றுலா சந்தை வளர்ந்து வருகிறது. உண்மையில், நீர்வாழ் வளங்களைப் பாதுகாப்பதன் மூலம், மீன்பிடித்தலைவிட டைவிங் சுற்றுலாத்துறை கணிசமாக அதிக இலாபம் தருவதாகக் காட்டப்பட்டுள்ளது. வள நுகர்வு, கழிவுகளை உருவாக்குதல், உட்கட்டமைப்பை இன்மை, மற்றும் அதன் இயல்பிலேயே சுற்றுலா அதிக மக்களை இயற்கைப் பகுதிகளுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் இந்த டைவிங் சுற்றுலாத்துறையால் ஏற்படுகின்றன.

கடற் சுற்றுலா, மீன்களில் மன அழுத்த ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. நீரில் மூழ்குவோர் (டைவேர்ஸ்) மற்றும் படகுச் சத்தம் ஆகிய இரண்டும் மீன்களில் மன அழுத்த ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது. அதே போல் வளர்சிதைவின் அதிகரிப்பு மன அழுத்தத்தின் மற்றொரு குறிகாட்டியாகும். சுற்றுலாப் பயணிகளின் சந்திப்புகளால் சுறாக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டாலும், இவை மட்டும் உடலியல் எதிர்வினைகள் அல்ல. ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் சமநிலையின் பல்வேறு நடவடிக்கைகள் கடற் சுற்றுலாவால் எதிர்மறையாகப் பாதிக்கப்படுகின்றன.

இவை குறிப்பிட்ட சில சவால்கள் மட்டுமே. இவை இலங்கையின் சூழலியல் சுற்றுலா பற்றிய அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன. இத்துறையை ஒழுங்குபடுத்துவது, சட்டங்களை உருவாக்குவது, அதனிலும் மேலாக அதைச் சரிவர நடைமுறைப்படுத்துவது என்பன முக்கியமானவை. இலங்கையின் சவால் யாதெனில் சுற்றுலாத்துறை முழுமையாகத் தனியாரின் கைகளிலேயே இருக்கின்றது. இதைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாகவுள்ளது. இலங்கையின் அந்நியச் செலாவணியில் குறிப்பிடத்தக்க பங்கை சுற்றுலாத்துறை வழங்குவதால் அத்துறை சார்ந்த பாராமுகம் நிலவுகிறது. இதை சுற்றுலாத்துறையில் உள்ளோர் லாவகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

சூழலியல் சுற்றுலாவும் பசுமைப்புரட்டும்

சுற்றுலாப் பயணிகள் தங்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தைப் பற்றி அதிகம் அறிந்து கொண்டு, மனச்சாட்சியுடன் கூடிய பயண விருப்பங்களைத் தேடுவதால், சுற்றுலாத் துறையானது இதற்குப் பதிலாக சூழலியல் சுற்றுலாவை முன்னிறுத்துகிறது. ஆனால் நடைமுறையில் இவ்வாறு முன்னிறுத்தப்படும் அனைத்தும் உண்மையானவை அல்ல. பசுமைப்புரட்டு எனப்படும் இந்த நடைமுறை சூழலியல் சுற்றுலாத் துறையில் பெருமளவில் பரவியுள்ளது. ஏனெனில் வணிகம் சூழலியலின் வளர்ந்து வரும் தேவையைப் பயன்படுத்த முயற்சிக்கின்றது.

தெளிவற்ற மொழி, சலசலப்பு முதல் நிலைபேண் முயற்சிகளைப் பற்றி மிகைப்படுத்துதல் அல்லது வெளிப்படையாகப் பொய் கூறுதல் வரையாக பசுமைப்புரட்டு பல வடிவங்களை எடுக்கலாம். இது நுகர்வோரை தவறாக வழிநடத்துகிறது. இதற்கு ஏராளமான உதாரணங்களை இலங்கையில் காணவியலும். நீங்கள் ஒரு சூழலியல் சுற்றுலாவை இலங்கையில் மேற்கொள்ளும் போதோ அல்லது பசுமைசார் தங்குமிடம் ஒன்றிற்கு செல்லும்போதோ அவதானிக்கக்கூடிய பொதுவான பசுமைப்புரட்டு விடயங்களைப் பார்க்கலாம்.

ஹோட்டல்கள் அல்லது தங்ககங்கள் ‘சுற்றுச்சூழலுக்கு உகந்தவை”’அல்லது ‘நிலைபேண் தன்மையானவை’ என்று கூறினாலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளில் ஈடுபடுவது, பசுமைப்புரட்டு செய்வதற்கான பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். குறித்த இடத்தின் பண்புகள் பழமையான மற்றும் இயற்கையான அழகியலைக் கொண்டிருக்கலாம். இது சூழலியல் உணர்வுடன் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் திரைக்குப் பின்னால், அவை அதிலிருந்து வெகு தொலைவில் உள்ளன.

சில விடுதிகள், அவற்றின் கட்டுமானத்தில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தியிருக்கும். அதாவது மரம் அல்லது கல் போன்றவை. இது, குறித்த கட்டுமானம் பற்றிய சுற்றுச்சூழல் மைய சூழ்நிலையை உருவாக்குகின்றன. இந்தப் பொருட்களைப் பிரித்தெடுப்பது, பொறுப்புடன் நிர்வகிக்கப்படாவிட்டால், காடழிப்பு மற்றும் பல்லுயிர் இழப்புக்கு வழிவகுக்கும். மேலும், இடையூறு இல்லாத இயற்கை வாழ்விடங்களின் மேல் கட்டிடங்கள் கட்டுவது, முக்கிய வனவிலங்கு சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சீர்குலைத்து அழிக்கும். அதேபோல், சுற்றுலாவுக்காக செயற்கைத் தடாகங்கள் மற்றும் தீவுகளை உருவாக்குவது உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் வனவிலங்குகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பல சுற்றுலாப் பயணிகள் விலங்கு அனுபவங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இருப்பினும், இந்த அனுபவங்கள் அனைத்தும் நெறிமுறை அல்லது வனவிலங்கு பாதுகாப்புக்குப் பங்களிக்கவில்லை. ‘சரணாலயங்கள்’ மற்றும் ‘சூழலியல் சுற்றுலாக்கள்’ என்று அழைக்கப்படுபவை, விலங்குகளுக்கு கட்டாய இனப்பெருக்கம், தாய்மார்களிடமிருந்து பிரித்தல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்ற செயல்களால் தீங்கு விளைவிக்கின்றன. ஒழுங்குமுறையான அறஞ்சார் சூழலியல் சுற்றுலாக்கள் விலங்குகளை வளர்ப்பது அல்லது உணவளிப்பது போன்ற வனவிலங்குகளுடன் நேரடித் தொடர்புகொள்ள அனுமதிக்காது. ஏனெனில் அவற்றின் முதன்மைக் கவனம் விலங்குகளின் நலன்; மனிதப் பொழுதுபோக்கு அல்ல. விலங்குகளை சங்கிலிகள், சிறிய கூண்டுகளில் அடைத்தல் மற்றும் வித்தைகள் செய்யப் பண்ணுதல் போன்றன முறையான சுற்றுலாச் செயற்பாடுகள் அல்ல. நெறிமுறையற்ற விலங்கு அனுபவங்களிற்கு நல்ல எடுத்துக்காட்டுகள்: யானைச் சவாரி, யானையைக் குளிப்பாட்டல், உணவளித்தல், டொல்பின்களுடன் நீந்துதல்.

பல வணிக நடவடிக்கைகள் கழிவுகளைக் குறைக்கும் உத்தியாக மக்கும் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றன. இருப்பினும், சில இடங்களுக்கு முறையான மறுசுழற்சி வசதிகள் அல்லது கழிவுகளைச் செயலாக்க தொழிற்சாலை உரமாக்கல் திறன்கள் இருப்பதில்லை. இன்னும் சில, நிலைத்தன்மையை விட வசதிக்கே முன்னுரிமை அளிக்கும் வணிக நடவடிக்கைகளாக உள்ளன; கழிவுகளைக் குறைப்பதில் இந்தத் தயாரிப்புகளின் தாக்கத்தை மிகைப்படுத்தி, அவை பசுமைப்புரட்டுக்கு வழிவகுக்கின்றன.

சுற்றுப்பயணங்களில் பாரம்பரிய கலாசாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை உள்ளிருந்து பார்ப்பதற்கான வாய்ப்பு என சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வாக்குறுதியளிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த அனுபவங்கள் பெரும்பாலும் வணிகமயமாக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது ‘உண்மையான’ கலாசார அனுபவங்கள் என்று அழைக்கப்படுவது, வெறும் பொழுதுபோக்கிற்கான ஒரு முகப்பாகும்.

எடுத்துக்காட்டாக, கிராம வாழ்வு என்று வழங்கப்படும் சுற்றுலா அனுபவங்கள், சிங்களப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கருப்பொருள் ஹோட்டல்கள், நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் மூலம் சிங்கள கலாசாரத்துடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பைச் சந்தைப்படுத்துகின்றன. உண்மையில், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் பணத்தையும் ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட கலாசார வெளிப்பாட்டின் பண்டமாக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட மற்றும் துல்லியமற்ற பிரதிநிதித்துவத்தை அனுபவிக்கும் போது, உண்மையான பண்டைய சிங்களக் கிராமியச் சூழலில் மூழ்கியிருப்பதைப் போல சுற்றுலாப் பயணிகள் உணர்கிறார்கள்.

நிறைவுக் குறிப்புகள்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையின் கீழ் சுற்றுலாத்துறை சார்ந்த சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது கடினமானது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வரவேண்டும், வந்தவர்கள் திருப்தியுடன் செல்ல வேண்டும், மீண்டும் வரவேண்டும், தமது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து அவர்களும் இலங்கைக்கு வர வழிசெய்ய வேண்டும் என்பதே இலங்கையின் இன்றைய எதிர்பார்ப்பு. நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடி தந்திருக்கின்ற யதார்த்தம் இது. இந்த வாய்ப்பை மிகவும் சிரத்தையுடன் நீண்டகால நோக்கில் திட்டமிட்டு தெளிவான முறையில் சூழலியல் சுற்றுலாவை ஒழுங்கமைக்க முடியும். அதற்கு பேராசை குறுக்கே நிற்கிறது.

சமூகப் பங்கேற்பு என்பது சூழலியல் சுற்றுலாப் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சமூகங்களின் வளர்ச்சியின் மூலக்கல்லாகும். ஆனால் சுற்றுச்சூழல் சுற்றுலாவில் பொருளாதார நன்மைகள் மட்டுமே வலியுறுத்தப்படுகின்றன. சூழலியல் சுற்றுலாவின் சமூகத் தாக்கம் புறக்கணிக்கப்படுகிறது. தற்போது, பல சமூகங்கள் சூழலியல் சுற்றுலாவில் பங்கேற்பதற்கான முடிவெடுக்கும் செயற்பாட்டில் வெளிப்படையாக ஈடுபடுவதில்லை. அவர்களின் வாழிடத்தில் பெரும்பாலும் வெளியாட்களே முதலீடு செய்கிறார்கள். அவை உள்ளூர் சமூக முயற்சிகளைப் புறக்கணிக்கின்றன. இதன் விளைவாக சமூக வளங்கள் வீணடிக்கப்படுகின்றன. அதேவேளை உள்ளூர் சமூகங்களுக்கு பயனுள்ள பொருளாதார நன்மைகளும் கிடைப்பதில்லை.

இயற்கையின் மீது மனிதர்களின் தாக்கத்தைத் தணிக்க, அனைத்து உயிர்களுக்கும் கூட்டுவாழ்வு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வாழ்விட சூழலை உருவாக்க, இயற்கை சுற்றுச்சூழல் திட்டங்களை உருவாக்க, மீட்டெடுக்க, உருவகப்படுத்த சூழலியல் அறிவை ஒருங்கிணைக்க வேண்டும். மாறும் சமூக சூழலைப் புரிந்துகொண்டு  ஒரு சுற்றுலாத் தலமானது படிப்படியாக வளர்ச்சியடைகிறதா அல்லது குறைந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். சூழலியல் சுற்றுலாவை மையங்கொண்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்புச் செயற்பாட்டில், பல்வேறு இடஞ்சார்ந்த, நேர அளவிலான சூழல்களை உருவாக்குவதன் மூலம், மனிதநேயம், பொருளாதாரம், சூழலியல், சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு ஆகியவை ஒன்றையொன்று பிரதிபலிக்கும் பொறிமுறையை வடிவமைக்க முடியும். இதற்குக் காலமெடுக்கும், ஆனால் அதுவரை இயற்கையும் இலங்கைவாழ் உயிரினங்களும் தப்பிப்பிழைக்குமா?


ஒலிவடிவில் கேட்க

2834 பார்வைகள்

About the Author

மீநிலங்கோ தெய்வேந்திரன்

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்