மகாவம்சத்தின் மறுகண்டுபிடிப்பும் அதன் புனைவுகளின் தாக்கமும்
Arts
15 நிமிட வாசிப்பு

மகாவம்சத்தின் மறுகண்டுபிடிப்பும் அதன் புனைவுகளின் தாக்கமும்

December 30, 2024 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

இலங்கையில் மாத்திரமல்லாது காலனித்துவ நாடுகள் பலவற்றிலும் அரும்புநிலை தேசியஎழுச்சி மதங்களின் மீளாக்க எழுச்சியுடன் இணைந்ததாகவே காணப்பட்டது. இவற்றிடையே பொதுவான சில இலட்சியங்கள் இருந்தன. மன்னர் ஆட்சி நிலவிய நிலவுடமைக் காலகட்டத்தில் மன்னர்களும் அரசுப் பிரதானிகளும் தளபதிகளும் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் மதபோதகர்கள் இருந்தனர். தொழிற்சங்கமோ அரசியல் கட்சிகளோ அத்தகைய வேறு நிறுவன அமைப்புகளோ இல்லாத அன்றைய சமுதாய அமைப்பில் நாடுபூராகவும் பரந்து கிடந்த ஒரே நிறுவனமாக மதவழிபாட்டுத் தலங்களே திகழ்ந்தன. இதனால் மத குருமார்கள் சமூகத்தில் மதிக்கப்பட்டனர். மதகுருமார்கள் அரசர்களிலும் அரச பிரதானிகளிலும் தங்கியிருந்தாலும், இவர்கள் அரசுக்கு நெருக்கமானவர்களாக இருந்தமை இவர்களுக்கு சமூகத்தில் இருந்த மரியாதையை உயர்த்தியது. கிறிஸ்தவர்களிடையே பாப்பரசருக்கு இருந்த அளவற்ற அதிகாரம் ஏனைய மதத்தலைவர்களுக்கு இருக்கவில்லை. எனினும் சமூகத்தில் செல்வாக்குமிக்க சக்திகளாக இவர்கள் திகழ்ந்தனர். அதற்கு மற்றுமொரு காரணம், மக்களின் வாழ்வில் இன்றியமையாத பிரமுகர்களாக இவர்கள் திகழ்ந்தமையாகும். மருத்துவம், மாந்திரீகம், கல்வி, சோதிடம், ஆகியவற்றை இவர்களிமிருந்தே பெறவேண்டியிருந்தது. அத்துடன் வீட்டிலும் நாட்டிலும் நடைபெறுகின்ற அனைத்து விசேட காரியங்களிலும் இவர்களுக்கு விசேட இடம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் காலனித்துவத்தின் கீழ் காலனித்துவமும் கிறிஸ்தவ மதமும் கைகோர்த்து சென்றமையும், புதிய கல்விமுறை, நவீன மருத்துவம் போன்றன அறிமுகப்படுத்தப்பட்டமையும் இவர்களது செல்வாக்கிற்கு பலத்த சவால்களாக மாறின. அத்துடன் மன்னர் காலத்தில் வழங்கப்பட்டத்தைப் போன்ற ஆதரவும் மரியாதையும் இவர்களுக்கு காலனித்துவ ஆட்சியின் கீழ் கிடைக்கவில்லை. அதுமாத்திரமல்ல, கிறிஸ்தவ மதமும் மேற்கத்திய கலாசாரமும் உயர்ந்தது எனவும், மூடநம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடக்கும் கீழைத்தேசத்தை மதங்களிடமிருந்தும் அதனைப் போதிக்கும் மதபோதகர்களிடம் இருந்தும் மீட்கின்ற உயரிய பணியில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறிய காலனித்துவ சித்தாந்தம் அப்போது மேலோங்கியிருந்தது.

அதுவரை சமூகக் கட்டமைப்பின் உச்சியிலிருந்த அரசர்களும் அரசுப் பிரதானிகளும் தளபதிகளும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் தமது நிலையை தக்கவைத்துக்கொள்வதற்காக மதகுருமார் தாமே தலைவர்களாக மாறி, காலனித்துவத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டனர். இவ்வாறு தான் மதத் தலைவர் முகமது அப்துல்லா ஹாசன் தலைமையில் சோமாலி பழங்குடியினர் 1899 முதல் 1920 வரை ஆயுதமேந்தி நடத்திய டெர்விஷ் இயக்கம் (Dervish Movement) பிரிட்டிஷ், இத்தாலிய, எத்தியோப்பிய ஆக்கிரமிப்புகளை தோற்கடித்தது. சூடானில் 1897 இல் முல்லா சியாதுல்லா தலைமையில் பழங்குடியின இயக்கங்கள் மலாக்கண்ட் முற்றுகையின் போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக காலனித்துவ எதிர்ப்புக் கிளர்ச்சிகளை முன்னெடுத்தன.

ஆனால் இத்தகைய அணிதிரட்டல்கள் விஞ்ஞானக் காரணகாரியங்களில் ஆதாரப்பட்டிருக்கவில்லை. மாற்றாக, மூடநம்பிக்கைகளுக்கு புதுவிளக்கம் கொடுத்து வீரியம் சேர்ப்பதாகவே இருந்தன. உதாரணமாக, ஜெர்மனியின் காலனியாக இருந்த கிழக்கு ஆப்ரிக்காவில் 1905-1907 காலப்பகுதியில் வெடித்த மாஜி மாஜி (Maji Maji) கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கிஞ்செகெட்டிலே ந்வாலே (Kinjeketile Ngwale), தன்னை தெய்வீக அருள் பெற்ற தீர்க்கதரிசியாக முன்நிறுத்தி ‘ஹொங்கோ’ (“Hongo”) என்ற மந்திரிக்கப்பட்ட நீரை விநியோகித்தார். அவரால் மந்திரிக்கப்பட்ட நீரை உடலில் தடவிக்கொண்டால் ஐரோப்பியர்களின் தோட்டாக்கள் தண்ணீராக மாறிவிடும் என்ற நம்பிக்கை போராளிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது.

சமூகங்கள் தேசியங்களாக உருவாகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், தேசிய தலைவர்களோ அல்லது தேசிய இயக்கங்களோ தோன்றியிராத நேரத்தில், காலனித்துவத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த முற்போக்கு வரலாற்றுப் பாத்திரமாக இத்தகைய மதவாத இயக்கங்கள் செயற்பட்டுள்ளன. அவை காலனித்துவத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் அவை, ஆன்மீகம் என்ற பெயரில் விஞ்ஞானத்துக்கு முரணான பொய்மைகளுக்கு புத்துயிர் அளித்து, சமூகத்தில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தி புதிய அரசியல், சமூக, கலாசார பிரச்சினைகளின் ஊற்றுமூலமாக அமைந்துவிட்டன.

இதற்கு இலங்கையின் மதமறுமலர்ச்சி இயக்கங்கள் மற்றுமொரு உதாரணமாகும். ஒரு வித்தியாசம் என்னவென்றால், இலங்கையின் மதமறுமலர்ச்சி இயக்கங்கள் காலனித்துவத்துக்கு எதிரான வலுவான போராட்டமாக அல்லாமல், கிறிஸ்தவ மதத் திணிப்புக்கும் காலனித்துவ கலாசார ஆக்கிரமிக்கும் எதிரான வெளிப்பாடாகவே அமைந்தன. அதற்காக வரலாற்றுத் திரிபுகள் புதுப்பிக்க முயற்சிக்கப்பட்டன. மகாவம்சத்தின் மறுகண்டுபிடிபையும் அந்தப் புனைவுகளை வரலாற்று உண்மைகளாக நம்பவைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் இவ்வாறுதான் பார்க்கமுடியும்.

மகாவம்சத்தின் மறுகண்டுபிடிப்பும் அதன் தாக்கமும்

மகாவம்சம் என்பது பாளி மொழியில் பௌத்த பிக்குகளால் பல நூற்றாண்டுகளாக கற்பனைகள் கலந்து எழுதப்பட்ட சிங்கள பௌத்த புராண வரலாற்றுத் தொகுப்பாகும். கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பௌத்த துறவி மகாநாமா இதனை முதலில் எழுதினார் என நம்பப்படுகிறது. அச்சகமும் கடதாசியும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், மகாவம்சம் பொதுமக்களுக்கு அறியப்படவில்லை; அது அரண்மனைகளிலும் உயர் பௌத்த பீடங்களிலும் மட்டுமே வாசிக்கப்பட்ட ஒரு ஓலைச்சுவடியாக இருந்தது. பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்காலத்தில் தான் இது பிரபல்யம் பெற்றது.

பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாக அதிகாரியும் வரலாற்றுத்துறை ஆர்வலருமான ஜார்ஜ் டர்னர் (George Turnour Jr. 1799–1843) என்பவரால் மகாவம்சம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அரசாங்க முகவராக, உதவி காலனித்துவ செயலாளராக மற்றும் காலனியின் பொருளாளராகப் பணியாற்றினார். மகாவம்சத்தின் ஒரு பகுதி அவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 1837 இல் அச்சிடப்பட்டது. 1877 இல், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் இதன் சிங்கள மொழிபெயர்ப்பு நடைபெற்றது. மகாவம்சத்தின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு 1912 இல் வில்ஹெலம் ஜேகர் (Wilhelm Geiger) அவர்களால் செய்யப்பட்டது. பின்னர், இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு மாபெல் ஹெய்ன்ஸ் போட் (Mabel Haynes Bode) அவர்களால் செய்யப்பட்டு, வில்ஹெலம் ஜேகரால் திருத்தப்பட்டது.

மகாவம்சம் மீள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி சேர் பொன். அருணாசலம் ஒரு கூட்டத்தில் பேசும்போது, தனது ஆய்வறிவுக்கு எட்டியவகையில், “…ஒருவேளை உலகில் வேறு எந்த நாடும் இவ்வளவு நீண்ட தொடர்ச்சியான வரலாறையும் நாகரிகத்தையும் கொண்டிருக்காது.” என பெருமையுடன் கூறினார். ஒவ்வொரு இலங்கையரும் மகாவம்சம் பற்றிப் பெருமைப்படுவதற்கு காரணம் இருக்கிறது. இந்நூல் விலைமதிப்பற்ற பல வரலாற்றுத் தகவல்களை வழங்குகிறது. அவ்வகையில் அது தனித்துவம் பெறுகிறது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், அந்த தகவல்கள் புனைக்கதைகளுடன் கலக்கப்பட்டுள்ளன. சிங்கள பௌத்த மன்னர்களை துதிபாடி மகிழ்விக்கும் நோக்குடன் எழுதப்பட்ட இந்நூலில் கூறப்பட்டுள்ள கட்டுக்கதைகள் பௌத்த நம்பிக்கையின் இன்றியமையாத பகுதியாக பிரித்தானியர் காலத்தில் இருந்து முன்வைக்கப்படுகிறது. இந்தக் கதைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இனவாதச் சிந்தனையாக மாற்றப்பட்டது. ஆன்மீக பௌத்த மதத்தை அரசியல் மதமாக மாற்றுவதற்கு அநகாரிக தர்மபாலவுக்கு பிற்காலத்தில் மகாவம்சப் புனைக்கதைகள் தேவைப்பட்டன.

இலங்கையின் இனப்பிளவுக்கான காரணிகளைப் புரிந்துகொள்ள முயன்ற பல நவீன வரலாற்றாசிரியர்கள் சிங்களம் அல்லாத அனைத்து மக்களுக்கும் (குறிப்பாக தமிழர்களுக்கு) சம உரிமையை மறுக்கும் வகையில் சிங்கள தீவிர தேசியவாதத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க காரணியாக மகாவம்ச மைய ஜாதிக சிந்தனை இருப்பதாக திட்டவட்டமாகக் கூறுகின்றனர். மகாவம்ச மைய ஜாதிக சிந்தனை நான்கு புனைக்கதைகளால் உருவாக்கப்பட்டது:

1. புத்தரின் மூன்று வருகை பற்றியது

மகாவம்சம் இலங்கைக்கு புத்தர் மூன்று முறை விஜயம் செய்ததாகக் கூறுகிறது. புத்தரின் இம் மூன்று தனித்தனி விஜயங்களை விரிவாக விவரித்து, இலங்கையை அவர் பௌத்த மதத்தின் புனித பூமியாகத் தேர்ந்தெடுத்தார் எனக் கூறுகிறது. இதன்படி பௌத்த மதத்தினைப் பின்பற்றும் சிங்களவர்களே இலங்கைத் தீவின் அசல் குடிமக்கள் எனவும், இலங்கைக்கு வந்து குடியேறிய வங்காள இளவரசன் விஜயனதும் அவனது நண்பர்களதும் வழித்தோன்றல்களான ஆரிய வம்சாவளியினரே சிங்களவர்கள் எனவும், அவர்களே இந்நாட்டின் சொந்தக்காரர்கள், ஏனைய இனத்தவர்வர்களைவிட உயர்ந்தவர்கள் எனவும் அது கூறுகிறது.

2. சிங்கள இனத்தின் முதன்மையையும் மேன்மையினையும் நிறுவுகின்ற கோட்பாடு (the doctrine of primacy and superiority of the Sinhala “race”) 

இக் கட்டுக்கதை ஓர் இந்திய இளவரசிக்கும் (வங்காள மன்னரின் மகள்) சிங்கத்திற்கும் இடையேயான பாலியல் உறவிலிருந்து தொடங்குகிறது. ஒரு சிங்கம் அவ் இளவரசியை கடத்திக்கொண்டுபோய் 16 வருடம் இல்லற வாழ்க்கை நடத்துகிறது. அவ்விருவருக்கும் சிங்கபாகு (சிங்கத்தின் கரம் கொண்டவன் என்று பொருள்) என்ற மகனும் சிங்கசீவலி என்ற மகளும் இரட்டையர்களாகப் பிறக்கின்றனர். இவ்வாறு விலங்கும் மனிதர்களும் ஒரே குடும்பமாக ஒரு குகையில் வசித்துவருகிறார்கள். சிங்கம் வெளியே வேட்டைக்குச் செல்லும் போது, தன் மனைவியும் மக்களும் தப்பி ஓடிவிடாமல் இருப்பதற்காக, ஒரு பெரிய பாறாங்கல்லைப் புரட்டி குகை வாசலை மூடிவிட்டுத்தான் செல்லும். இவ்வாறு அச்சிங்கத்தினால் அவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

மகன் சிங்கபாகு வாலிபனானதும் ஒரு நாள், தனது தந்தையான சிங்கம் வேட்டைக்காக வெளியே சென்றதும், பாறாங்கல்லை அகற்றிவிட்டு தன் தாயையும் தங்கையையும் சுமந்து கொண்டு வங்க நாட்டின் எல்லைக்குச் செல்கிறான். தனது குடும்பத்தை இழந்த சிங்கம் தனது குடும்பத்தைத் தேடி அலைகிறது. வெறிகொண்டு பல கிராமங்களைச் சிதைக்கிறது. பீதிகொண்ட மக்கள் நாட்டு மன்னனிடம் முறையிடுகின்றனர். சிங்கத்தை விரட்டியடிப்பவருக்கு வெகுமதி வழங்குவதாக வங்க நாட்டு அரசன் அறிவிக்கிறான். இதனை அறிந்த சிங்கபாகுவின் தாய் தனது மகனிடம் அவனது தாத்தாவான வங்க மன்னனின் கட்டளையை நிறைவேற்றுமாறு கூறுகிறாள். தாயின் வேண்டுகோளை ஏற்று தனது தந்தையைக் கொல்ல அவன் ஒப்புக்கொள்கிறான். சிங்கம், தன் மகனின் மீது கொண்டிருந்த மிகுந்த அன்பின் காரணமாக அவனது நோக்கத்தை அறியாமல் அவனை நோக்கிச் சந்தேகமில்லாமல் வருகிறது. சிங்கபாகு சிங்கத்தின் தலையை வெட்டி தன் தாத்தாவிடம் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றான். பதிலுக்கு, சிங்கபாகுவிற்கு வங்க இராஜ்யம் சன்மானமாக வழங்கப்படுகிறது.

சிங்கபாகு இந்தச் சன்மானத்தை ஏற்க மறுத்து தனது சிங்கத் தந்தையின் நிலத்திற்குத் திரும்புகிறான். தனது சகோதரியான் சிங்கசீவலியை மணம் முடித்து சிஹபுர என்ற ஒரு நகரத்தை உருவாக்கி அதை சீராக ஆட்சி செய்துவருகிறான். இம் முறையற்ற உறவில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் மூத்தவனின் பெயர் விஜயா. விஜயா வன்முறைக் குணம் கொண்டவன். அவனும் அவனுடைய எழுநூறு சீடர்களும் மக்களைத் துன்புறுத்தத் தொடங்கியபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் விஜயாவுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என மன்னன் சிங்கபாகுவிடம் கோருகிறார்கள். அதற்குப் பதிலாக, அரசன் (சிங்கபாகு) தன் மகன் விஜயாவையும் அவனது தீய நண்பர்கள் எழுநூறு பேரையும் தோணிகளில் ஏற்றி நாடு கடத்துகிறான்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்ட விஜயாவும் அவனது எழுநூறு நண்பர்களும் இலங்கைத் தீவை வந்தடைகின்றனர். குவேனி என்று அழைக்கப்படும் உள்ளூர்க் குழுக்களின் தலைவியை விஜயா திருமணம் செய்து, அவளுடைய உதவியுடன் யக்காக்களை படுகொலை செய்கிறான். பின்னர் நாட்டின் அரசனாகி குவேனியை காட்டுக்குத் துரத்திவிட்டு அவனும் அவனது பரிவாரங்களும் அண்டை இந்திய இராச்சியமான மதுரையிலிருந்து மனைவிகளை வரவழைத்து மணந்து கொள்கிறார்கள். விஜயாவும் அவனது நண்பர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் சிங்கத்தின் அல்லது சிங்கத்தைக் கொன்றவர்களின் வழித்தோன்றல்கள் என்பதால், அவர்களை சிங்கள (சின்ஹ என்றால் சிங்கம்) என மகாவம்சம் வரையறுக்கிறது. இதனால் சிங்களவர்கள் இப்போது தம்மை விஜயாவின் வாரிசுகள் எனக் கற்பிதம் செய்துகொள்கிறார்கள்.

3. சிங்கள இனம் புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் (Chosen People) 

மகாவம்சத்தின் படி, இன்றைய சிங்கள சமூகத்தின் மூதாதையர்களான விஜயாவும் அவனது நண்பர்களும், சரியாக புத்தர் பரிநிர்வாணம் (அவரது மறைவு) அடையும் நாளில்தான் உறுதியளிக்கப்பட்ட நிலமான (Promised Land), இலங்கை தீவில் வந்திறங்கினர். விஜயாவினதும் அவனது நண்பர்களினதும் பாதுகாப்பை மரணத்தறுவாயில் இருந்த புத்தர் ஏற்பாடு செய்தார். அவர் தெய்வீகத் தலையீட்டிற்காக முதலில் இந்திரனை (Sakka) நாடுகிறார். இந்திரன் விஷ்ணுவின் (உப்புல்வன்) உதவியை நாடுகிறார். இவர்கள் மூலம் புத்தர் விஜயாவினதும் அவனது நண்பர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ததுடன் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களான (Chosen People) சிங்கள இனத்தையும் (Sinhala Jathiya), அவர்களின் உறுதியளிக்கப்பட்ட நிலமான (Promised land – Dhammadeepa) தம்மதீபவையும் (இலங்கை), அவரது போதனையான பௌத்த மதத்தையும் முழு 5000 ஆண்டுகளுக்கு பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

4. சிங்கள மன்னன் துட்டுகெமுனுவுக்கும் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் இடையிலான சமர்

மகாவம்சத்தில் காக்கவண்ண திஸ்ஸ மன்னன், ராணி விஹாரமஹாதேவி ஆகியோரின் மகனாக துட்டுகெமுனு (துட்டகைமுனு) அறிமுகப்படுத்தப்படுகிறான். தமிழர்களுடன் சண்டையிட வேண்டாம் என்று தந்தை அறிவுரை கூறி அவனை வளர்த்தார். காக்கவண்ண திஸ்ஸவின் நாட்டு எல்லைக்கு வடக்கே ஒரு இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள் என்று மகாவம்சத்தால் சித்தரிக்கப்படுகிறது. பன்னிரண்டாவது வயதில் கெமுனு தனது படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தபோது அனது தாயான இராணி விஹாரமஹாதேவி “ஏன் இப்படிப் படுக்கிறாய், காலை நீட்டிப் படுக்கலாமே?” எனக்கேட்டதற்கு, “ஆற்றுக்கு அப்பால் அங்கே தமிழர்கள் இருக்கிறார்கள். இங்கே இந்தப் பக்கம் கடல் இருக்கிறது. நான் எப்படி கைகால்களை நீட்டிக்கொண்டு படுக்க முடியும்?” எனப் பதில் சொன்னான் என மஹாவம்சம் கூறுகிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில், அவனது தந்தை, தமிழ் மன்னர்களோடு போருக்குப் போகாதே எனக் கூறியபோது ஆத்திரமடைந்த கெமுனு, தனது தந்தையைக் கோழை எனச் சித்தரிக்கும் விதத்தில், அவருக்கு ஒரு பெண் ஆபரணத்தை பரிசாக அனுப்பியதாக மேலும் அது கூறுகிறது.

கோபமடைந்த மன்னன் தன் மகனை தங்கச் சங்கிலியால் பிணைப்பதாக மிரட்டவே, துட்டுகெமுனு அங்கிருந்து தப்பி ஓடித் தலைமறைவாக வாழ்கிறான். அவனது தந்தை காலமானபின்னர் துட்டுகெமுனு மன்னனாக முடிசூட்டப்பட்டு, தமிழ் மன்னன் எல்லாளனுடன் போருக்குச் செல்கிறான். எல்லாளனை எதிர்கொள்வதற்காக படையெடுத்துச் செல்லும் போது முப்பத்து இரண்டு தமிழ்ச் சிற்றரசர்கள் கொல்லப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது.

வாலிபனான துட்டுகெமுனு வயோதிப எல்லாள மன்னனை நேருக்கு நேர் மோதவருமாறு சவால் விட்டபோது அச்சவாலை ஏற்றுக்கொண்டு திறமையாகப் போரிட்ட எல்லாளனை எதிர்கொள்ள முடியாமல் துட்டுகெமுனு பண்டைய போர் விதிகளை மீறி, எல்லாளனின் போர் யானையைக் குறிவைக்கிறான். எல்லாள மன்னன் தனது போர் யானையிலிருந்து கீழே விழுந்தபோது, துட்டுகெமுனு மரபை மீறி அம்பை அவர் மீது எறிந்து, போரில் வெற்றி பெறுகிறான். எல்லாளனைக் கொன்றதன் மூலம் முழு இலங்கையையும் ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்தான் என அது கூறுகிறது.

ஆயினும் அவனது மனம் அவனை உறுத்தியது. தனது வெற்றிப் பயணத்தில் பலரைக் கொன்றதற்காக கெமுனு வருந்தினான். அப்போது எட்டு அர்ஹன்கள் (அறிவொளி பெற்ற துறவிகள்) அவனுக்கு அவன் செய்த கொலைகளை நியாயப்படுத்தி ஆறுதல் கூறினார். அவர்கள் வழங்கிய ஆறுதல் அறிவுரையின்படி துட்டுகெமுனு ‘அரை மனிதர்களை’ மாத்திரமே கொன்றான். ஏனெனில் புத்த மதத்தைத் தழுவி பௌத்தத்தின் ஐந்து அடிப்படைக் கட்டளைகளை பின்பற்றுவோர் மாத்திரமே முழுமையான மனிதர்கள்; ஏனையோர் ‘அவிசுவாசிகள்’; அவர்கள் மனிதர்களாகக் கூடக் கருதப்படுவதற்குத் தகுதியற்றவர்கள்; எனவே ஆயிரக்கணக்கான தமிழர்களையும் பௌத்தர்கள் அல்லாதவர்களையும் கொன்றது குற்றமில்லை.

மகாவம்சத்தின் ஆசிரியர் ‘இந்த அத்தியாயம் பக்தர்களின் மகிழ்ச்சிக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும்’ தொகுக்கப்பட்டதாகக் கூறுகிறார். எவ்வாறாயினும், இந்தக் கட்டுக்கதைகள் 20 ஆம் நூற்றாண்டின் சூழலுக்கு ஏற்ப இனவாத சித்தாந்தத்தை வடிவமைத்து அதற்கு உத்வேகம் கொடுப்பதற்காக பிற்காலச் சிங்களத் தேசியவாதிகளால் பயன்படுத்தப்பட்டன. அநகாரிக தர்மபால அதற்குத் தலைமை கொடுத்தார்.

மகாவம்சத்தைப் படிக்கும் எவரும், பல்வேறு நம்பத்தகாத வரலாற்றுத் தகவல்களையும் இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட பல்வேறு அற்புதங்களையும் கொண்டு அது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உணரலாம். இதன்படி விஜயாவின் தாத்தா ஒரு காட்டுச் சிங்கம்; பாட்டி வங்க நட்டு இளவரசி; அவர்கள் ஒரே குகையில் பதினாறு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தார்கள். இவை மகாவம்சம் கூறும் நம்பமுடியாத கற்பனையின் ஒரு பகுதி. விஜயா பௌத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எந்த ஆதாரமும் கிடையாது. இக் கதையை ஒப்புக்காக ஏற்றுக்கொண்டாலும்கூட, உண்மையாக விஜயா சிங்களவன் என்பதற்கோ பௌத்தன் என்பதற்கோ ஆதாரம் கிடையாது. ஏனெனில் இலங்கையில் கி.மு 247 இல் (கி.மு. 483 இல் அல்ல) தான் புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 – 7 ஆம் நூற்றாண்டுகளில்தான் சிங்கள மொழி அதன் முழு வடிவத்தில் வளர்ந்தது. 

விஜயாவின் வருகை பற்றியும் புத்தரின் இலங்கை விஜயம் பற்றியும் மகாவம்சம் கூறும் கதையில் பல முரண்பாடுகள் உள்ளன. புத்தரின் முதல் வருகையின் போது தீவில் வாழ்ந்த யக்காக்களை கிரிதீபாவிற்கு (Giridipa Island) அவர் விரட்டியடித்தாகக் கூறப்படுகிறது, ஆனால் விஜயாவும் அவரது நண்பர்களும் தீவுக்கு வரும்போது அங்கு யக்காக்கள் இருந்ததாக கதை முரணாகக் கூறப்படுகிறது. புத்தர் கி.மு 543 இல் இறந்ததாகவும் விஜயா அதே தினம் இலங்கைக்கு வந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. ஆனால் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் புத்தரின் மரணம் கி.மு 486 இற்கும் 483 இற்கும் இடையில் நடந்ததாக நிறுவுகின்றனர். கி.மு ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த துட்டுகெமுனுவிற்கும் எல்லாளனுக்கும் நடைபெற்றதாகக் கூறப்படும் சமர் பற்றி விபரிக்கிறது.

மகாவம்சத்தின் வரலாற்றாசிரியர் கூறிய இந்த நான்கு உணர்ச்சிமிக்க புனைக்கதைகள் (Jathika Chinthanaya) இனவாத தேசிய சித்தாந்தத்தின் அடிக்கற்களாக அமைகின்றன. சிங்கள பௌத்த மக்கள் மட்டுமே இலங்கையின் ‘மண்ணின் மைந்தர்கள்’ (பூமி புத்ரா) எனவும் இங்குவாழும் ஏனைய தேசிய இனங்கள் ‘அந்நியர்கள்’, ‘எதிரிகள்’ எனவும் சித்திரிக்கப்படுகிறது. சிறுவயதிலிருந்தே, அப்பாவி சிங்கள பௌத்த சிறார்கள், அவர்களின் பெற்றோர், தாத்தா, பாட்டி, ஆசிரியர்கள், பௌத்த மதகுருமார்கள் (சிலர் மகா சங்கத்தினர்), ஊடகவியலாளர்கள், பாடநூல் எழுதுபவர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தஹம் பாசேல (பௌத்த பள்ளி) ஆசிரியர்கள் போன்றோரால் மகாவம்சப் புனைவுகள் மூலம் மூளைச் சலவை செய்யப்பட்டு வருகின்றனர். இது மகாவம்ச மனோபாவத்தை (Mahavamsa Mindset) ஏற்படுத்துகிறது. சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் இலங்கைக்குச் சொந்தமில்லாத ஆக்கிரமிப்பாளர்கள் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. துட்டுகெமுனு செய்ததைப் போன்று, “சிங்களவர் அல்லாதோரை நாட்டைவிட்டு விரட்டி அடிக்கவேண்டும்” என்ற அளவுக்கு தீவிர இனவெறியை ஊட்டும் சித்தாந்தங்களை மகாவம்சப் புனைவுகள் உருவாக்கியுள்ளன. அவற்றை இனவாத அரசியல்வாதிகள் பயன்படுத்துவதையும் காணமுடிகிறது. சிங்கள பௌத்தர்களில் பெரும்பாலோர் மகாவம்சத்தைப் படித்தவர்கள் அல்லர்; ஆனால் அவர்களின் கூட்டுச் சிந்தனையில் மகாவம்ச சித்தாந்தம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அவர்களில் பலர் அதை புனிதமான மற்றும் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றாகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உசாத்துணை

  1. Allen, William. (2014). “Sufism in Asymmetric Warfare: Human Networks of the Somali Qadiriyya tariqa.” Small Wars Journal. Retrieved from https://smallwarsjournal.com/jrnl/art/sufism-asymmetric-warfare
  2. Blackburn, M. (2015). “Buddhist Connections in the Indian Ocean: Changes in Monastic Mobility, 1000-1500.” Journal of the Economic and Social History of the Orient, 58(3): 237–266. doi:10.1163/15685209-12341374.
  3. Derrick, Jonathan. (2008). Africa’s ‘Agitators’, Militant Anti-Colonialism in Africa and the West, 1918-1939. London: Hurst & Company Publishers.
  4. Fanon, Frantz. (2001). The Wretched of the Earth. London: Penguin Publishing Ltd.
  5. Greaves, R. A. (1996). “India 1857: A Mutiny or a War of Independence? The Muslim Perspective.” Islamic Studies, 35(1).
  6. Gunewardena, R.A.LH. (1985). The People of the Lion: Sinhala Consciousness in History and Historiography. Social Scientists Association.
  7. Halliday, Fred. (1993). “Orientalism and Its Critics.” British Journal of Middle Eastern Studies, 20(2).
  8. Hopkins, Benjamin. (2014). “Islam and Resistance in the British Empire.” In David Motadel (ed.) Islam, and the European Empires. Oxford: Oxford University Press.
  9. Kosuta, Matthews. (2019). “King Naresuan’s Victory in Elephant Duel.” Sojourn: Journal of Social Issues in Southeast Asia, 34(3). ISEAS – Yusof Ishak Institute: 578–606. doi:10.1355/sj34-3d. JSTOR 26798885.
  10. MacLaughlin, Raul. “Ancient Contacts: The Roman Emperor and the Sinhalese King.” Classics Ireland.
  11. Malalasekera, Gunapala Piyasena. (2003). Dictionary of Pali Proper Names. Asian Educational Services. ISBN 978-81-206-1823-7.
  12. Matthews, Bruce. (1979). “The Problem of Communalism in Contemporary Burma and Sri Lanka.” International Journal, 34(3): 430–456. JSTOR 40201791.
  13. Mukherjee, Rudrangshu. (1990). “‘Satan Let Loose Upon Earth’: The Kanpur Massacres in India in the Revolt of 1857.” Past & Present, 128.
  14. Murphey, Rhodes. (February 1957). “The Ruin of Ancient Ceylon.” The Journal of Asian Studies, 16(2). Association for Asian Studies: 181–200. doi:10.2307/2941377. JSTOR 2941377. S2CID 162729027.
  15. Oldenberg, Hermann. (1879). Dipavamsa. Asian Educational Services. ISBN 978-81-206-0217-5.
  16. Ranjith Daluwatta. (28.12.2011). Panadura Wadaya. Retrieved from https://panadurawadaya.wordpress.com/
  17. Said, Edward. (2014). Orientalism. New York: Knopf Doubleday Publishing.
  18. Shtrathern, Alan. (2014). “Vijaya and Romulus: Interpreting the Origin Myths of Sri Lanka and Rome.” Journal of the Royal Asiatic Society, 24(1): 51–73. JSTOR 43307281.
  19. Skocpol, Theda. (1981). “Review of Prophets of Rebellion: Millenarian Protest Movements against the European Colonial Order by Michael Adas.” Journal of Social History, 14(4).
  20. Sperling, David. (1995). “The Frontiers of Prophecy: Healing, the Cosmos and Islam on the East African Coast in the Nineteenth Century.” In David Anderson and Douglas Johnson (eds.), Revealing Prophets. London: James Currey Ltd. & Ohio University Press.
  21. Steven Kemper. (1992). The Presence of the Past: Chronicles, Politics, and Culture in Sinhala Life.
  22. Sunseri, Thaddeus. (1999). “Majimaji and the Millennium: Abrahamic Sources and the Creation of a Tanzanian Resistance Tradition.” History in Africa, 26.
  23. Tripathi, Sridhara. (2008). Encyclopaedia of Pali Literature. Vol. 1.
  24. von Hinüber, Oskar. (1997). A Handbook of Pali Literature. India: Munshiram Manoharlal Publishers. ISBN 81-215-0778-2.
  25. Yang, Anand. (1987). “A Conversation of Rumours: The Language of Popular ‘Mentalities’ in Late Nineteenth-Century Colonial India.” Journal of Social History, 20(3).

ஒலிவடிவில் கேட்க

3198 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்