விக்டர் டி மங்க் (Victor de Munck) மற்றும் கிறிஸ்தோபர் மனோகரன் (Christopher Manoharan) ஆகிய ஆய்வாளர்கள் குடாலிக் கிராமத்தில் மேற்கொண்ட தங்களது களப்பணி மூலமான ஆய்வான “Accessing the Interiority of Others: Sufism in Sri Lanka“ இல், மேலும் பல விடயங்களை இலங்கையில் சூஃபித்துவம் சார்ந்து பகிர்ந்துகொள்கின்றனர். குடாலியில் உள்ள வயது வந்த ஆண்களில் கிட்டதட்ட முந்நூறு பேர் காதரி வரிசையுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்த சூஃபித்துவ ஒழுங்குக்கு தலைவர் இல்லை. தவிர ஒரு சில கிராமவாசிகள் மட்டுமே சூஃபிகள் என்று தங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொண்டனர் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் விக்டர் மங்கின் கூற்றுப்படி, இந்தக் கிராமத்தில் தங்களை சுயமாக சூஃபிகள் என்று அறிவித்துக் கொண்டவர்கள் கூட, முஸ்லிம் கலாசார மற்றும் இஸ்லாமிய மத நடைமுறைகளுக்குள் மட்டுமே தங்களை வடிவமைத்துக்கொண்டவர்கள்.
பொதுவாக சூஃபி வாழ்வு பற்றிப் பார்க்கும்போது, சூஃபி மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் அன்றாட வாழ்வின் இடையூறாகவும், அதேநேரம் ஒரு பகுதியாகவும் அமைந்திருக்கின்றன. சூஃபி கருத்தியல் இறுக்கமான மதச்சட்டங்கள், மத அரசியல் போன்றவற்றில் கூடுதல் கவனம் எடுப்பதில்லை என்றவகையில், ஊர் மக்களுக்கிடையில் அது மத உட்பிரிவுகளைத் (Sect) தோற்றுவிப்பதில்லை. விக்டர் மங்கின் குடாலி அனுபவம் இதனையே நிரூபிக்கின்றது. கிராமவாசிகள் பெரும்பாலும் இஸ்லாம் பற்றிய தங்கள் சொந்த கருத்துகளை வீரியத்துடனும் ஆர்வத்துடனும் பொதுவெளியில் விவாதித்தார்கள். ஆனால் இத்தகைய விவாதங்கள் அரிதாகவே வெறுப்பை வெளிப்படுத்தின அல்லது கிராம மக்களைக் கருத்தியல் முகாம்களாகப் பிரித்தன [i].
சூஃபிக் கருத்தியல் பிற கருத்தியல் முகாம்களுடன் ஒரு நட்பார்ந்த தொடர்பையே பேண விரும்பியது. இதனால் சிலர் அதனை, முஸ்லிம்களை அரசியல் தனித்துவங்களை இழக்கச் செய்து ஏனைய பண்பாடுகளோடும், இனங்களோடும் எந்த விலகலும் விவாதமுமற்று கரைத்துக் கொள்ளச் செய்வதாகக் குற்றம்சாட்டுகின்றனர். உண்மையில் இந்தக் கருத்து அபத்தமானது. சூஃபித்துவம் பிற பண்பாடுகளோடு முரணை அன்றி, அதன் இருப்பையும் அங்கீகரிக்கும் ஒரு விரிந்த பண்பையே வெளிப்படுத்துகிறது. சூஃபித்துவம் அது புழங்கும் சமூகத்தின் அரசியல், பண்பாட்டு உரிமைகளை, இனத்தனித்துவத்தை விட்டுக்கொடுப்பது அல்ல; அல்லது அதற்கு எதிரான ஒரு அரசியல் அல்லது ஆன்மீகக் கருத்துநிலையும் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் மொகலாய ஆட்சிக் காலத்தின் இறுதிக்காலப்பகுதியில் சிந்துசமவெளியில் சமூக சமத்துவத்துக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடி உயிர்நீத்த சூஃபி ஷாஹ் இனாயத்தின் போராட்ட வாழ்வு இத்தகைய சமரசங்களைக் கடந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால் பிற கருத்து முகாம்கள் சூஃபித்துவத்தை இஸ்லாமிய வட்டத்துக்குள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு அமைப்பாகக் கருதவில்லை. இதற்கு நவீன அரபு மைய இஸ்லாமிய இயக்கங்களே முக்கிய காரணமாக அமைந்தன. இத்தகைய இயக்கங்கள் சூஃபி பக்தர்களின் சில எல்லை மீறிய வணக்கச் செயற்பாடுகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன.
குடாலியில் விக்டர் டி மங்க் இந்த ஆய்வில், “ஒரு தடவை நெல் மற்றும் பிற பயிர்களை விதைக்கும் காலத்தில், கிராமத்தவர்கள் நிலங்களை தயார் செய்யும் பணியில் மும்முரமாக இருந்தபோது, நான் மட்டுமே பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்திருந்தேன். என்னுடன் முஅத்தினார் (பள்ளிவாசலின் பராமரிப்பு மற்றும் தினசரி ஐந்து நேர அழைப்பிற்கு பொறுப்பானவர்) மட்டுமே அங்கு இருந்தார். மாலைத் தொழுகையின் போது, மதிய தொழுகைக்கு வந்த ஒரே மனிதர் வெளிநாட்டு வெள்ளை யூதர் (விக்டர் டி மங்க்) என்பதாக சில நகைச்சுவைகள் பேசப்பட்டன. மதியத் தொழுகையில் குறைந்தபட்ச மக்கள் கலந்து கொள்வது பொதுவான விஷயமாக இருந்தது. அங்கு இருந்தவர்களில் (சுமார் முப்பது பேர்) சிலர் இந்தக் காலப்பகுதியில் பள்ளிவாசலுக்கு வருவது அறுவடையில் வெற்றியைக் கொடுக்குமா என்று விவாதிக்கத் தொடங்கினர்: அதாவது, தொழுகை மற்றும் பக்தி வழிபாடுகளுக்காக தினமும் பள்ளிவாசலுக்கு வருபவர்களுக்கு அறுவடை வெற்றியளிக்க அல்லாஹ் உதவியாக இருக்கிறாரா என்று. பெரும்பாலானவர்கள் பள்ளிவாசலுக்கு வருபவர்களுக்கே அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்ற எண்ணத்துக்கு உடன்பட்டது போல இருந்தனர். அங்கு ஒரேயொரு எதிர்மறையான குரல் மட்டுமே இருந்தது. அவர் சொன்னார், “நான் இங்கே பிரார்த்தனை செய்ய இருக்கிறேன் என்றால், அல்லாஹ் வந்து என் விதைகளை விதைப்பாரா? என் அறுவடையை கவனிக்கிறாரா? இல்லை, அல்லாஹ் நமக்குக் கற்றுக்கொடுக்கிறான். நாமே அந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும். நான் ஒரேநேரத்தில் பயிர் விதைப்பைக் கவனித்துக்கொண்டு, பள்ளிக்கும் வர முடியாது.”
மேலே கூறப்பட்ட அல்லாஹ்வின் உதவி குறித்த வெவ்வேறு கருத்தாக்கங்கள், தனித்துவமான சூழல்கள் மற்றும் காலங்களின் அடிப்படையில் உருவாகும் வெவ்வேறு விளக்கமுறைகளைக் காட்டுகின்றன. மாறாக, இவை சமூகத்தை எதிர் எதிர் குழுக்களாக பிளவுபடுத்தும் கொள்கை மோதல்களை வெளிப்படுத்துவதல்ல. இஸ்லாமைப் பற்றிய மேலதிக விவாதத்தை ‘ஒப்புக்கொண்டு விவாதிக்காமல் இரு’ என்ற அணுகுமுறையாக பார்க்கும்போது, இது மேலும் ஆழ்ந்த அடித்தளத்தில் ஒருவரை ஒருவர் ஒரே மாதிரியானவர்களாக உணர்வதைக் காட்டுகிறது; கிராமவாசிகளாக, முஸ்லிம்களாக, அல்லது வயலுக்குப் பணி செய்தவராக, ஒருவரின் சகோதரியை மணந்தவராக, அல்லது அதனைப்போல இதர உறவுகளின் அடிப்படையில் தொடர்புடையவர்களாக இம் மக்களை அது பிணைக்கும் பணியையே செய்கிறது. விக்டர் மங் குடாலி மக்களின் இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் (சூஃபி) நடத்தையை இப்படி விபரிக்கும் போது, சூஃபித்துவம் ஒரு ஆன்மீக நிலையாகவன்றி வெறும் மதச்சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்கும் ஒரு மதவடிவமாக உருவகமாகவில்லை. தவிர, பிற நம்பிக்கையாளர்களோடும், பிற பண்பாடுகளோடும் சகவாழ்வுக்கான சாதகமான சமிக்ஞையைக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டும். சூஃபித்துவம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மீது கவனம் செலுத்தாது அதிகாரத் தரப்பாரின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களுக்கும் அடிபணிவதையே விரும்புகிறது என ஒரு தரப்பார் வாதிக்கின்றனர். இந்தப் புரிதல் மிகத் தவறானது. முதலில் சூஃபித்துவம் ஆன்மீகம் சார்ந்தது. மனிதனை மானுடமயப்படுத்தும் உட்பொருள் கொண்டது. அதாவது சமூகத்தில் மதத்தை முன்னிறுத்தி உட்பிளவுகளை உண்டு பண்ணி அரசியல் ஆதாயம் தேடும் மலின அரசியலுக்கு அது எதிராகச் சிந்திக்கிறது. சமூக நல்லிணக்கம் என்பது ஒரு சமூகத்தின் தனித்துவத்தையும், அதன் உரிமைகளையும் விட்டுக் கொடுப்பது என்று இந்தத் தரப்பு பிழையாகச் சித்திரிக்க முற்படுகிறது. ஆனால் வரலாற்றில் சூஃபிகள் ஒருபோதும் தனது சமூக, அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுத்ததாகச் சான்றுகள் இல்லை. இன்னொருபுறம் பார்த்தால் ஆன்மீகத்துக்குள் எதற்கு அரசியலைக் கலக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
சூஃபித்துவம் பெரும்பாலும் ஆன்மீக சிந்தனைகளின் மீதும் சடங்குகளின் மீதும் கூடுதல் கவனம் செலுத்துகிறது. விக்டர் மங்கின் குடாலிக் கிராம ஆய்வுகளும் இதனையே கூறுகின்றன. குடாலியில் நடைமுறையில் உள்ள சூஃபித்துவத்தின் முக்கிய அம்சங்கள் என்று அவர் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்.
சிக்கலான காலங்களில் புனிதர்களிடம் (முகைதீன் மிக முக்கியமானவர்) வேண்டுதல் செய்தல்; முக்கிய புனிதர்களுக்கும் இறைத்தூதர் முஹம்மதுக்குமான வருடாந்திர நினைவஞ்சலிகள் அல்லது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் (மவ்லூத்கள்) நடாத்துதல்; மாய-மதப் பண்புகளைக் கொண்டுள்ளதெனக் கருதப்படும் இறைத்தூதரின் வாரிசுகளால் நடத்தப்படும் வருடாந்திரக் கிராமத் திருவிழாவை (இதை ‘புர்தா கந்தூரி’ என்று அழைக்கின்றனர்) நடாத்துதல்; மற்றும் வியாழக்கிழமை இரவு திக்ர் விழாக்களைச் செய்தல் போன்றவை.
இத்தகைய சூஃபி நடவடிக்கைககள் மூலம் குடாலி கிராம மக்கள் நாள்தோறும் புனிதர்களுக்கு அன்பு செலுத்துவதாக எண்ணுகின்றனர். இதன் மூலம் தங்கள் வாழ்க்கையை புனிதர்கள் இலகுவாக்குவார்கள் என்றும் தங்களுக்கு மறைமுகமான உதவியாளர்களாகவும், மத-நீதி வழிகாட்டிகளாகவும் செயற்படுவார்கள் என்றும் அந்த மக்கள் நம்புகின்றனர். இந்தக் கிராமவாசிகள் புனிதர்களிடம் செய்யும் முறைப்பாடுகள், அவர்களுக்காக எடுக்கும் கொண்டாட்டங்கள், மற்றும் விழாக்கள் ஒவ்வொன்றும் கிராமவாசிகளின் உள்மனதை ஆற்றுப்படுத்துகின்றன. ஆனால் நடைமுறையில் இதன் உண்மைத் தன்மையைப் பற்றி எல்லாம் அவர்கள் ஆழமாகச் சிந்திப்பதில்லை.
[i] Victor de Munck and Christopher Manoharan: Accessing the Interiority of Others: Sufism in Sri Lanka, P. 05