இலங்கையில் நூலகவியற் கல்வி - பகுதி 2
Arts
13 நிமிட வாசிப்பு

இலங்கையில் நூலகவியற் கல்வி – பகுதி 2

January 1, 2025 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் பங்கு

1970 ஆம் ஆண்டின் மார்ச் 24 ஆம் திகதி உருவாக்கப்பட்ட 17 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டப்படி 1970 ஆம் ஆண்டு ஜுன் மாதம் உருவாக்கப்பட்ட ‘இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின்’ முக்கிய குறிக்கோளும் பொறுப்பும் இலங்கையில் தேசிய நூலகமொன்றை உருவாக்குவதும் அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதுமாகும். மேலும் அதன் மற்றொரு முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது, இலங்கையின் நூலகசேவையை நவீனமயப்படுத்தும் வகையில் நூலகர்களைப் பயிற்றுவிப்பதாகும். இதற்கென ஒரு முழுநேர உதவி நெறியாளராக திரு எஸ்.எம். கமால்தீன் அவர்களை அச்சபை நியமித்திருந்தது. இச் சபை நூலகப் பரீட்சைகளுக்கென சேவைக்காலப் பயிற்சிகளையும் பாடசாலை ஆசிரியர்களுக்கென சேவைக்காலப் பயிற்சிகளையும், அறிவூட்டும் பயிற்சி வகுப்புகளையும் வெற்றிகரமாக நடாத்திவந்தது. 

யாழ்ப்பாணத்திலும் பலமுறை இச்சபை இத்தகைய நூலகவியல் பயிற்சி வகுப்புகளை நடாத்தியிருக்கின்றது. உதாரணமாக, 1976 ஆம் ஆண்டு இச்சபை சுமார் எழுபது ஆசிரிய நூலகர்களுக்கென பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஐந்து நாட்களுக்கு முழு நேர அறிவூட்டற் பயிற்சி வகுப்பொன்றை நடாத்தியது. நூலகச் சேவைகள் சபையின் உதவி நெறியாளரும், யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான நூலகர்கள் மூவரும் நடாத்திய இப் பயிற்சி வகுப்பில் பாடசாலை நூலக அமைப்பில், பகுப்பாக்கம், பட்டியலாக்கம், நூற் தேர்வு, உசாத்துணை நூல்களும் தேவைகளும், வாசகர் சேவை, பருவ ஏடுகளும் புதினப் பத்திரிகைகளும், நூலக விரிவாக்கச் சேவைகள் முதலிய பாடங்கள் தேவையானவிடத்து செய்முறைப் பயிற்சிகளுடன் போதிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் பணியாளரினது நலன் கருதி அந்நூலகத்தின் பிரதம நூலகரின் வேண்டுகோளுக்கு இணங்க 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருக்கும் அநுபவமிக்க நூலகர்கள் சிலரின் உதவியுடன் மூன்று நாள் சேவைக்காலப் பயிற்சி வகுப்பொன்றையும் நடத்தியிருந்தது. 

1981 இல் யாழ்ப்பாண நூலக எரிப்பும், 1983 ஜுலை இனவன்முறையின் தாக்கமும் இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் வடக்கு – கிழக்கிற்கான கல்விசார் ஒழுங்கமைப்பு சீர்குலைந்தமைக்குக் காரணமாயமைந்தது. இருப்பினும் இலங்கை நூலக சேவைகள் சபை இலங்கையில் வேறு பிரதேசங்களில் நூலக ஊழியர்களுக்கான சேவைக்காலப் பயிற்சி நெறிகளை தொடர்ந்து நடாத்தி வந்தது. 

1990 ஏப்ரல் 27 அன்று சம்பிரதாய பூர்வமாக இலங்கை தேசிய நூலகம் கொழும்பில் சுதந்திரச் சதுக்கத்துக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டதுடன் இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை செயலிழந்தது. 1998 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க புதிய திருத்தியமைக்கப்பட்ட சட்டத்தின் கீழ், இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையானது, இலங்கைத் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இலங்கைத் தேசிய நூலகம் என்ற பெயரும் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் மத்திய நிலையம் (National Library and Documentation Services Centre) எனப் பெயரிடப்பட்டது. 

பாடசாலை நூலகர்களுக்கான கல்வி

ஆசிரிய நூலகர்களுக்குப் பல வருடங்களாகக் கல்வி அமைச்சு மாவட்டரீதியில் பலவிதமான நூலகப் பயிற்சி வகுப்புகளை நடாத்தி வந்திருக்கின்றது. எனினும் முதன் முறையாக ஒரு திட்டமிடப்பட்ட முழுநேர நூலகவியற் பாடநெறியை கல்வி அமைச்சு 1968 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கனிஷ்ட பல்கலைக்கழகக் கல்லூரிகள் திட்டத்தின் கீழ் தான் அறிமுகப்படுத்தியது. க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்தும் (சிரேஷ்ட) பல்கலைக்கழங்களுக்கு அனுமதி பெறத் தவறிய மாணவர்களின் நன்மை கருதி, கல்வி அமைச்சு 1968 ஆம் ஆண்டு ஆறு கனிஷ்ட பல்கலைக்கழகங்களை நிறுவியது. நாட்டின் மனித சக்தித் தேவைக்கேற்ப தொழில் வாய்ப்புகளுக்கான டிப்ளோமா பாட நெறிகளே இந்நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் நூலகவியலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

தெகிவளை கனிஷ்ட பல்கலைக்கழகத்திலும் தமிழ் மாணவர்களுக்கென பலாலியில் அமைக்கப்பட்ட கனிஷ்ட பல்கலைக்கழகத்திலும் மாத்திரமே நூலகவியலுக்கென இரு வருட முழுநேர டிப்ளோமா வகுப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டது (நூலகக் கல்வியை அரசாங்கம் நேரடியாக மேற்கொண்டது இதுவே முதற்தடவையாகும்). அப்பாட நெறிக்கான பாடத்திட்டம் நாட்டின் தேவைக்கேற்ப விசேடமாக அமையவேண்டுமென்ற காரணத்திற்காக இலங்கையிலுள்ள அனுபவமிக்க நூலகர்களின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது. இந் நூலகங்களில், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற நூலகர் காலம் சென்ற திரு எஸ்.சி. புளொக், வித்தியோதயா பல்கலைக்கழக நூலகர் திரு டபிள்யூ.பி. தொரக்கும்புற, வித்தியாலங்கார பல்கலைக்கழக நூலகர் திரு ரி.ஜி.பியதாச, கொழும்பு பொதுசன நூலகத்தின் பிரதம நூலகர் திருமதி ஈஸ்வரி கொறயா, கல்வி அமைச்சில் அச்சமயம் ஆலோசகராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த யுனெஸ்கோ நூலகவியல் நிபுணர் செல்வி ஈ.ஜே. எவன்ஸ் ஆகியோர் மேற்படி ஆலோசனைக் குழுவில் இருந்தவர்களாவர். 

நாட்டின் தேவைக்கேற்ப விசேடமாக அமைக்கப்பட்ட இரு வருட  முழுநேர டிப்ளோமா வகுப்பில் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. 

  1. நூலகங்களும் நூலகவியலும்.
  2. பகுப்பாக்கம் செய்தல்.
  3. பட்டியலாக்கம் செய்தல்.
  4. செயல்முறை பகுப்பாக்கமும் பட்டியலாக்கமும்.
  5. நூலகங்களின் ஒழுங்கமைப்பும் நிர்வாகமும் பகுதி 1.
  6. நூலகங்களின் ஒழுங்கமைப்பும் நிர்வாகமும் பகுதி 2.
  7. நூலியல் – நூல் விபரப் பட்டியல் முறை பகுதி 1.
  8. நூலியல் – நூல் விபரப் பட்டியல் முறை  பகுதி 2.
  9. நூலியல் கட்டுப்பாடும் சேவைகளும்.

இவற்றோடு ஆங்கிலம், சமூகக் கல்வி, உடற்கல்வி முதலிய பொதுப் பாடங்களும் கற்பிக்கப்பட்டன. இறுதிப் பரீட்சையில் நூலகவியல் மாணவர் ஒவ்வொருவரும் ஒரு பொருள்வாரி நூல் விபரப் பட்டியலையும் தயாரித்துச் சமர்ப்பிக்கும்படி பணிக்கப்பட்டிருந்தனர்.

பலாலி கனிஷ்ட பல்கலைக்கழகத்தில் 1969 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய இந் நூலகவியல் டிப்ளோமா பாடநெறிக்கு திரு வே.இ. பாக்கியநாதன் அவர்கள் முழுநேர விரிவுரையாளராகவும், திரு ஆர்.எஸ். தம்பையா அவர்கள் பகுதி நேர விரிவுரையாளராகவும் நியமிக்கப்பட்டார்கள். முதலாம் வருடத்தில் 3 மாணவர்களும் இரண்டாம் வருடத்தில் 3 மாணவர்களும் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

1971 ஆம் ஆண்டு ஜுன் மாதம் புதிதாக ஆட்சிக்கு வந்த அரசினால் கனிஷ்ட பல்கலைக்கழகங்கள் மூடப்படவே, பலாலி பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட நூலகவியல் மாணவர்கள் யாழ். பல்தொழில்நுட்ப நிறுவனத்துக்கு மாற்றப்பட்டனர். தொழில்நுட்ப நிறுவனத்தில் இம்மாணவர்களின் பயிற்சிநெறி முடிவுற்றதும் இந்த டிப்ளோமா பாடநெறி கல்வி அமைச்சினால் நிறுத்தப்பட்டது. இப்படியாக யாழ்ப்பாணத்தில் ஆறு முழுமையான நூலகர்கள் முதல் தடவையாக உருவாக்கப்பட்டார்கள். இப்பாடநெறியைத் தொடர்ந்து தொழில்நுட்ப நிறுவனத்தில் நடத்துவதற்காக வேண்டுகோள்கள் சமர்ப்பிக்கப்பட்டும் அதனை ஒரு பகுதி நேரப் போதனையாகவாவது தொடர்ந்து நடாத்த கல்வி அமைச்சு இணங்காமல் விட்டது கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் நூலகக் கல்வி முயற்சிகள்

இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியானது 1921 இல் தொடங்கப்பட்டது. முன்னதாக, பல்கலைக்கழக மட்ட உயர்கல்வியை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நோக்குடன் இலங்கை பல்கலைக்கழகச் சங்கம் (Ceylon University Association) என்ற ஒரு அமைப்பு 1906 இல் உருவாக்கப்பட்டிருந்தது. சேர். ஜேம்ஸ பீரிஸ், சேர். பொன் அருணாசலம், சேர். மார்க்கஸ் பெர்ணாண்டோ ஆகிய அறிஞர்களால் இச்சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1912 இல் கவர்னர் மக்கலம் அவர்களால் அமைக்கப்பட்ட மக்லியோட் கொமிட்டி, முதலாவது பல்கலைக்கழகத்தை கொழும்பில் அமைப்பதற்கான அழுத்தத்தை வழங்கியது. அதன்படி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முதலாம் உலக யுத்தம் இம்முயற்சியை பின்தள்ளிவிட்டது. 

யுத்தம் முடிந்ததும் 1920 இல் ‘ரெஜினா வளவு’ (Regina Walauwa) என்ற கட்டிடத்தையும் காணியையும் 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் பெரும் செல்வந்தராக இருந்த ஆர்தர் டீ சொய்சா என்பவரிடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்தது. இக்கட்டிடம் உடனடியாகவே கல்லூரி இல்லம் (College House) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ‘இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி’ (Ceylon University College) 21.01.1921 அன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வராக பேராசிரியர் ரொபர்ட் மார் அவர்கள் நியமிக்கப்பட்டார். 19 ஆண்டுகள் இப்பதவியில் இருந்த இவர் 1939 இல் ஓய்வுபெற்றார். இவரது பொறுப்பினை ஏற்ற சேர். ஐவர் ஜென்னிங்ஸ் இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியை முழுமையான ‘இலங்கைப் பல்கலைக்கழகம்’ என்ற நிலைக்கு 1942 இல் கொண்டுவந்தார். 

இலங்கையில் 1921 இல் பல்கலைக்கழகக் கல்வி தொடங்கப்பட்ட போதிலும், பல்கலைக்கழகங்களினூடாக நூலகக் கல்வியை வழங்கும் நடவடிக்கைகள் 40 ஆண்டுகளின் பின்னர், 1961 இல் தான் ஆரம்பமாகின்றன. அக்காலத்தில் விரிவான நூலகவியல் கல்வித்திட்டத்தை போதிக்கும் அளவுக்கு இலங்கையில் விரிவுரையாளர்கள் இருக்கவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் திருப்திகரமாக ஒதுக்கப்படவில்லை. அதனால் அவ்வப்போது சிறிய அளவிலான முன்னெடுப்புகளே பல்கலைக்கழக நூலக ஊழியர்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்பட்டு வந்தன. 

ஏறக்குறைய இதே காலப்பகுதியில் தான் இலங்கை நூலகச் சங்கமும் நூலகவியல் கல்வியைப் போதிக்க ஆரம்பித்திருந்தது. 1960 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை நூலகச் சங்கம் அதில் அங்கத்தவராக இணைந்துகொண்ட அறுபது அங்கத்தவர்களுக்கும் நூலகக் கல்வியை பயிற்றுவிக்கும் முகமாக 1961 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கொழும்பில் ஆங்கிலமொழி மூலம் ஆறுமாத பகுதிநேர வகுப்பொன்றை ஆரம்பித்திருந்தது. 

பல்கலைக்கழகங்களில் நூலகக் கல்வியினை வழங்கும் முயற்சியானது முதன் முதலாக இலங்கைப் பல்கலைக்கழகத்தினால் (பேராதனை வளாகம்) 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் உரிய போதனாசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக இம்முயற்சி 1965 இல் கைவிடப்பட்டமை பல்கலைக்கழக மட்டத்தில் இக்கல்வியின் வளர்ச்சியில் தடை ஏற்படக் காரணமாயிற்று. பல்கலைக்கழகங்களில் முழுமையான நூலகக் கல்வி வழங்கப்பட்ட வரலாற்றை நாம் ஆராய முனைவோமானால் அதனை 1961 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழக பேராதனை வளாகத்தில் இருந்து தான் தொடங்கவேண்டியிருக்கும். 1961 ஆம் ஆண்டு தொடக்கம் 1965 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பேராதனை வளாகம் பட்டதாரிகளுக்கென ஒரு டிப்ளோமா வகுப்பை நடத்தியது.

இலங்கை நூலகக் கல்வி வரலாற்றில் தெகிவளை கனிஷ்ட பல்கலைக்கழகக் கல்லூரியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும். 1968 ஆம் ஆண்டு இக்கல்லூரியினால் ஆரம்பிக்கப்பட்ட நூலகப் பயிற்சி நெறியும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இரண்டு ஆண்டுகளில் நிறுத்தப்படுவதாயிற்று. 

1961 ஆம் ஆண்டில் நூலகக் கல்விக்குப் பல்கலைக்கழக மட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்டாலும், மீண்டும் 1972 இல் இலங்கைப் பல்கலைக்கழக களனி வளாகத் துணை வேந்தரினால் பல்கலைக்கழகங்களில் நூலகக் கல்வி போதிப்பது பற்றி ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையின்படி பின்வரும் அம்சங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. 

  1. நூலகவியல் ஒரு பாடமாகப் பட்டப்படிப்பு, பட்டப் பின்படிப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதாயின் முழுநேர விரிவுரையாளர்களைக் கொண்ட தனித்துறையினால் நடாத்தப்படவேண்டும்.
  2. பட்டப்பின் படிப்புப் பயிற்சி நெறி ‘Post Graduate Diploma in Library and Information Studies’ எனப் பெயரிடப்படுவதுடன் நூலக சேவையிலுள்ளோருக்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும். இது ஓராண்டு முழுமை வாய்ந்ததாகவும், எட்டு வினாப்பத்திரங்களைக் கொண்டதாகவும் அமைதல் வேண்டும். 
  3. நூலகவியலை ஒரு பாடமாகக் கற்க விரும்பும் கலைமாணி, விஞ்ஞானமாணி பட்டதாரி மாணவர்களுக்கு இரண்டாம் வருடத்திலிருந்து நூலகக் கல்வி போதிக்கப்படல் வேண்டும். 

இப்பரிந்துரைகளுக்கமைய 1973 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் களனி வளாகத்தில் பட்டதாரி மாணவர்களுக்குரிய வகுப்புகள் சிங்கள மொழிமூலம் தொடங்கப்பட்டன. 1975 இல் இப்பயிற்சி நெறியில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. நூலகவியலைப் பட்டப்படிப்பிற்குரிய ஒரு பாடமாகக் கற்பதிலும் பார்க்க, அதனை ஒரு சிறப்புப் பாடமாகக் கற்பதன்மூலம் தொழில் வாய்ப்பும் கிடைக்கும் சந்தர்ப்பம் உண்டென்ற கருத்து மாணவர்கள் மத்தியில் நிலவியது. இந்த விடயம் ஆராயப்பட்டு 1975 ஆம் ஆண்டு முதல் நூலகவியலைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. பட்டப்பின் படிப்புப் பாடநெறி 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் இளநிலைப் பட்டப்படிப்பிற்குரிய பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ‘நூலகவியல் கற்கைநெறி’ சேர்த்துக்கொள்ளப்பட்டது. இப்பயிற்சி நெறியில் இணைந்து இருபது பட்டதாரிகள் பயனடைந்தார்கள். அதனத் தொடர்ந்து 1974 இல் நூலகவியலில் பட்ட (Graduate), பின்பட்ட (Post Graduate) மாணவர்களுக்கான பாடநெறிகள் இரண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

முன்னைய ஆண்டின் வெற்றிகரமான பயிற்சிநெறியைத் தொடர்ந்து 1975 இல் களனிப் பல்கலைக்கழகத்தில் நூலகவியலில் இரண்டாண்டு கால இளநிலைப் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக 1975 – 1978 காலகட்டத்தில் 45 மாணவர்கள் இப்பட்டப் படிப்பை நிறைவுசெய்யும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார்கள். 

அத்தோடு 1976 ஆம் ஆண்டு தொடக்கம் இப்பல்கலைக்கழகத்தின் நூலகத் துறையினரால் நூலகவியல் பயிற்சி பெற விரும்புவோருக்கென சான்றிதழ்ப் பயிற்சிநெறி ஒன்று தொடங்கப்பட்டது. சேவையில் அமர்ந்திருக்கும் பட்டதாரிகளல்லாத நூலகர்களுக்கென இரண்டுவித தராதரப் பத்திர வகுப்புகளையும் இப்பல்கலைக்கழகம் நடாத்தி வந்தது.

1982 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் நூலகவியல்துறைக்கான பகுதிநேர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்பரீட்சையில் சித்தியடைவோருக்கு டிப்ளோமா பட்டம் வழங்கப்பட்டதோடு, இதில் சித்தியடையும் பட்டதாரி மாணவர்கள் மேலும் ஓராண்டு பயின்று நூலகவியல் பட்டப் பின்படிப்பைத் தொடரும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

1999 இன் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஒரு அமைப்பாக ‘தேசிய நூலக தகவலியல் நிறுவகம்’ (NILIS) வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளுடன் உருவாக்கப்பட்டது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் நூலகவியல் பட்டப்பின் டிப்ளோமா பாடநெறி ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

மற்றைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைவிட இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் நூலகவியல்துறை சார்ந்த முழுநேர விரிவுரையாளர்களின் பற்றாக்குறை காரணமாக நூலகக் கல்விமுறையில் மந்தகதியிலான வளர்ச்சியே காணப்பட்டு வந்துள்ளது. நூலகத்துறை விரிவுரையாளர்கள் ‘பகுதிநேர’ விரிவுரையாளர்களாகவே காணப்படுகின்றனர். இப்பற்றாக்குறை இலங்கையின் பல்கலைக்கழகங்களிலும், இலங்கை நூலகச் சங்கத்திலும் ஒரே மாதிரியாகவே காணப்படுகின்றது.

மேலும் இன்று இலங்கை நூலகச்சங்கம் (SLLA), தேசியக் கல்வி நிறுவகம் (NIE), தேசிய நூலக ஆவணவாக்க சேவைகள் சபை (NLDSB) போன்ற கல்வி நிறுவனங்கள் நூலகவியல் துறைக்கான கல்வியை முன்னெடுத்து வருகின்ற போதிலும் தத்தம் வசதிக்கும் நிதிக்கும் ஏற்ப சுதந்திரமான வகையில் தாங்களே பாடவிதானங்களை வடிவமைத்துக் கொள்கின்றன. இவற்றின் தரத்தை கண்காணித்து அவற்றை ஒருங்கிணைத்துச் செயற்படுத்தும் சக்தியும் அதிகாரமும் கொண்ட தர நிர்ணய அமைப்பு (Accreditation Body) எதுவும் எம்மிடையே இல்லாதது பெருங்குறையாகவும், இத்துறையின் வளர்ச்சியை அதிகம் பாதிப்பதாகவும் உள்ளது. 


ஒலிவடிவில் கேட்க

2626 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்