சென்ற கட்டுரையில் உடுவில் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் நிலப்படம் காட்டும் விடயங்களைப் பற்றிப் பார்த்தோம். இனி மானிப்பாய்க் கோவிற்பற்றுத் தொடர்பான தகவல்களை ஆராயலாம். இக்கோவிற்பற்றில் மானிப்பாய், சுதுமலை, ஆனைக்கோட்டை, நவாலி, சண்டிலிப்பாய் ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன (படம்-1). ஒல்லாந்தர்கால மானிப்பாய்க் கோவிற்பற்று முழுவதும் இன்றைய வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் பகுதியாக அமைந்துள்ளது.
எல்லைகள்
மானிப்பாய்க் கோவிற்பற்றின் தெற்கெல்லையில் கடலேரியும்; கிழக்கு எல்லையில் வண்ணார்பண்ணை, நல்லூர், உடுவில் ஆகிய கோவிற்பற்றுகளும்; வடக்கில் மல்லாகம் கோவிற்பற்றும்; மேற்கில் சங்கானைக் கோவிற்பற்று, கடலேரி என்பனவும் காணப்படுகின்றன. மானிப்பாய்க் கோவிற்பற்றின் தென்மேற்குப் பகுதியில் நவாலித் துணைப் பிரிவும்; தென்கிழக்குப் பகுதியில் ஆனைக்கோட்டையும் உள்ளன. வடக்கு எல்லையில் சண்டிலிப்பாய் உள்ளது. இவற்றுக்கு இடையே மேற்குப் பக்க எல்லையில் சுதுமலைத் துணைப் பிரிவும் மேற்குறித்த எல்லாத் துணைப்பிரிவுகளையும் எல்லைகளாகக் கொண்டு நடுப்பகுதியில் மானிப்பாயும் அமைந்துள்ளன (படம்-2).
வீதிகள்
மானிப்பாய்க் கோவிற்பற்றுக்குள் பல வீதிகள் இருப்பதை நிலப்படம் காட்டுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வடமேற்கு நோக்கிச் செல்லும் ஒரு முக்கிய வீதி மானிப்பாய்க் கோவிற்பற்றின் துணைப் பிரிவுகளான ஆனைக்கோட்டை, சுதுமலை ஆகியவற்றை ஊடறுத்து மானிப்பாய்த் துணைப்பிரிவில் உள்ள மானிப்பாய் நகரம்வரை செல்கிறது. இது இன்றைய மானிப்பாய் வீதித் தடத்தில் அமைந்துள்ளது. வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றிலுள்ள ஓட்டுமடப் பகுதியில் இந்த வீதியிலிருந்து தொடங்கும் இன்னொரு வீதி நாவாந்துறையூடாக மானிப்பாய்க் கோவிற்பற்றுக்குள் நுழைந்து ஆனைக்கோட்டை, நவாலி ஆகிய துணைப்பிரிவுகளை ஊடறுத்து வட்டுக்கோட்டை நோக்கிச் செல்கிறது. இவை தவிர, மானிப்பாயிலிருந்து வட்டுக்கோட்டைக்கு ஒரு வீதியும், பண்டத்தரிப்புக்கு இன்னொரு வீதியும் செல்கின்றன. மானிப்பாய்ச் சந்தியிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் இன்னொரு வீதி மருதனார்மடம் சந்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து தெல்லிப்பழைக்குச் செல்லும் வீதியில் இணைகிறது.
நிலப்படத்திலுள்ள வீதி வலையமைப்பை நோக்கும்போது இக்கோவிற்பற்றில் உள்ள மானிப்பாய் நகரம், வலிகாமத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் முக்கியமான வீதிகள் குவியும் ஒரு இடமாக உள்ளதைக் காணமுடிகிறது. இது, ஒல்லாந்தர் காலத்தில் மானிப்பாய் பெற்றிருந்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இவ்விடத்தில் தமிழரசர் காலத்திலேயே ஒரு கோவில் இருந்ததால் (விவரம் கீழே) இவ்விடம் அக்காலத்திலிருந்தே அமைவிட முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கக்கூடும். அயலிலுள்ள நகரங்களை மானிப்பாயுடன் இணைக்கும் வீதிகள் தமிழரசர் காலத்திலேயே இருந்தனவா தெரியவில்லை. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மானிப்பாய் முக்கியத்துவம் பெற்றிருந்ததற்கு நிலப்படம் சான்றாக உள்ளது. இதுவே பிற்காலத்தில், குறிப்பாக, பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் மானிப்பாயில் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்படக் காரணமாகியது. மானிப்பாயில் அழிவடைந்த நிலையில் இருந்த ஒல்லாந்தத் தேவாலயத்தை அரசாங்கம் அமெரிக்க மிசனுக்கு வழங்கியிருந்தது.1 அவர்கள் அதைத் திருத்திப் பயன்படுத்தியதுடன், காலப்போக்கில் அங்கே மருத்துவமனை, யாழ்ப்பாணத்தின் முதல் மேலைத்தேச மருத்துவப் பாடசாலை ஆகியவற்றையும் நிறுவினர்.
கட்டடங்கள்
கட்டடங்கள் என்ற வகையில் இக்கோவிற்பற்றுக்குள் மூன்று கட்டடங்களை நிலப்படம் காட்டுகிறது. ஒன்று, கோவிற்பற்றுத் தேவாலயமும் அதைச் சார்ந்த குருமனையும் ஆகும். இது மானிப்பாய்ப் பிரிவுக்குள் அமைந்துள்ளது. அடுத்தது, ஒரு யானைப்பந்தி. இது ஆனைக்கோட்டைப் பிரிவில் சுதுமலை எல்லைக்கு அருகில் காணப்படுகிறது. மூன்றாவது, ஒரு அம்பலம். இது நவாலிப் பிரிவில் இருக்கிறது.
தேவாலயமும் குருமனையும்
மானிப்பாய்த் தேவாலயம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த ஏனைய கோவிற்பற்றுத் தேவாலயங்களைப் போலவே முதலில் போர்த்துக்கேயரால் கத்தோலிக்கத் தேவாலயமாகக் கட்டப்பட்டது. இதையே ஒல்லாந்தர் தமது தேவாலயமாகப் பயன்படுத்தினர். ஒல்லாந்தர் காலத் தொடக்கத்தில் மானிப்பாய்த் தேவாலயம் 2000 பேரைக் கொள்ளக்கூடிய மிகவும் பெரிய தேவாலயமாக இருந்ததாக போல்தேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.2 அருகிலேயே தேவாலய இல்லம் இருந்தது. நிலப்படம் தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையும் வீதிக்கு இரண்டு பக்கங்களிலும் காட்டுகிறது. உண்மையில் அவ்வாறே இருந்ததா, இக்கட்டடங்களினது அமைவிடங்ளை நிலப்படம் அண்ணளவாகக் காட்டுகிறதா தெரியவில்லை. தேவாலய இல்லம் அக்காலத்தில் மண்ணால் கட்டப்பட்டு, கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது.3 தேவாலயம் எத்தகைய கட்டடப் பொருட்களால் ஆனது எனப் பாதிரியார் குறிப்பிடவில்லை. ஆனாலும், நூலில் காணப்படும் படத்தில் அது மண் சுவர்களையும் ஓலையால் வேயப்பட்ட கூரையையும் கொண்ட கட்டடமாகவே தெரிகிறது.4 தேவாலயத்துக்கு முன்னால் ஒரு குளம் இருந்ததாகவும் அதற்கு அருகில் முன்னர் ஒரு இந்துக் கோவில் இருந்ததாகவும் போல்தேயஸ் பாதிரியார் தகவல் தந்துள்ளார்.5 இதுவே தமிழரசர் காலத்தில் இங்கே இருந்து பின்னர் போர்த்துக்கேயரால் இடித்து அழிக்கப்பட்டதாகக் கருதப்படும் கோவிலாக இருக்கக்கூடும்.6
மேற்படி கோவில் இருந்த இடத்திலேயே போர்த்துக்கேயர் தமது தேவாலயத்தைக் கட்டினர் என்றும்,7 அந்த இடத்திலேயே இன்றைய அமெரிக்க மிசன் தேவாலயம் இருப்பதாகவும் கருத்து உள்ளது. இவ்வாறு பழைய கோவில் இருந்த இடத்தில் தேவாலயம் இருந்ததால், பிற்காலத்தில் புதிய கோவிலை அமைத்தபோது அதைத் தேவாலயத்துக்கு எதிர்ப் பக்கத்தில் அமைத்ததாகவும் கூறுவர். ஆனால், கோவில் தேவாலயத்துக்கு முன்னால் இருந்த குளத்துக்கு அருகில் இருந்ததாக போல்தேயஸ் பாதிரியார் கூறுகிறார்.8 நிலப்படத்தில் குளம் தேவாலயத்துக்கு எதிரில் வீதிக்கு அடுத்த பக்கத்திலேயே உள்ளது. எனவே, பாதிரியாரின் கூற்று உண்மையானால் பழைய இந்துக் கோவில் இன்று மருதடிப் பிள்ளையார் கோவில் இருக்கும் இடத்தில் அல்லது அதற்கு அருகில் அதே பக்கத்திலேயே இருந்திருக்க வேண்டும். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் என்ற நூல், பழைய கோவிலை இடித்துவிட்டு அவ்விடத்தை சவக்காலை ஆக்கினர் என்று கூறுவதும்9 கவனத்துக்கு உரியது.
யானைப்பந்தி
நிலப்படம், ஆனைக்கோட்டைப் பிரிவில் உள்ள யாவில் குளத்துக்குக் கிழக்கே ஒரு யானைப்பந்தியைக் காட்டுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட பல யானைப்பந்திகளில் இதுவும் ஒன்று. இதன் தோற்றக் காலம் குறித்துத் தகவல் கிடைக்கவில்லை. இது ஒல்லாந்தர் காலத்துக்கு முன்பே, போர்த்துக்கேயர் காலத்திலோ அதற்கு முன்னரோ தோற்றம் பெற்றிருக்கக்கூடும். இது ஏற்றுமதிக்காக வன்னியிலிருந்தும் தென்பகுதியிலிருந்தும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரப்பட்ட யானைகளை வைத்துப் பராமரிக்கும் இடமாக இருந்ததா அல்லது கடினமான வேலைகளில் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்துக்குச் சொந்தமான யானைகளைப் பராமரிக்கும் இடமா தெரியவில்லை. யாவில் குளம் இப்போதும் இருப்பதால் அதற்கு அண்மையில் இந்த யானைப்பந்தி இருந்ததற்குக் குறிச்சிப் பெயர், காணிப்பெயர் முதலிய இடப்பெயர்ச் சான்றுகள் ஏதாவது உண்டா என ஆராய வேண்டும்.
ஆனைக்கோட்டை என்ற ஊர்ப் பெயரே இந்த யானைப்பந்தியின் இருப்புக் காரணமாகவே ஏற்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பும் உண்டு. பொதுவாகப் பலமான பாதுகாப்பு வேலிகளுக்கு உள்ளேயே பழக்கப்படாத யானைகளை அடைத்து வைத்துப் பராமரிப்பர். இதைக் கோட்டை என அழைத்திருக்கக்கூடும். இதுவும் ஆய்வுக்குரியது. போர்த்துக்கேயர் காலத்தில் வரி வசூலிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட பட்டியலில் ஆனைக்கோட்டை என்ற பெயர் உள்ளதால்10 இப்பெயர் ஒல்லாந்தர் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு. இது, குடியேற்றவாதக் காலத்துக்கு முன்பே புழக்கத்திலிருந்ததைக் காட்டும் சமகாலத் தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
அம்பலம்
ஒல்லாந்தர் காலத்தில் அம்பலம் அல்லது மடம் என்று அறியப்பட்ட கட்டடங்கள் வடபகுதியில் பல இடங்களில் முக்கியமான வீதிகளை அண்டி இருந்ததுபற்றி ஏற்கெனவே குறிப்பிட்டோம். யாழ்ப்பாணப் பகுதியிலிருந்த இவ்வாறான அம்பலங்களில் ஒன்று மானிப்பாய்க் கோவிற்பற்றுக்குள் இருப்பதை நிலப்படம் காட்டுகிறது. இது ஓட்டுமடத்திலிருந்து வட்டுக்கோட்டைக்குச் செல்லும் வீதியோரமாக அமைந்துள்ளது. நவாலிக்கும் ஆனைக்கோட்டைக்கும் இடையிலான எல்லையை அண்டி நவாலிப் பிரிவுக்குள் இது காணப்படுகிறது. சிறப்புப் பெயர் எதையும் தராமல், வெறுமனே பொதுப் பெயராலேயே இதைக் குறித்துள்ளனர். அக்காலத்து முக்கிய வீதியொன்றை அண்டி இருப்பதால், இது பயணிகள் களைப்பாறிச் செல்வதற்கான ஒரு வீதியோர மடமாகவே இருந்திருக்கக்கூடும். அம்பலத்தின் குறியீட்டுக்கு அருகில் மரத்தின் குறியீடும் காணப்படுவதால், இது பெரிய நிழல் மரத்தோடு இணைந்த அம்பலமாக இருந்திருக்கும்.
குளங்கள்
மானிப்பாய்க் கோவிற்பற்றுக்குள் நிலப்படம் காட்டும் குளங்களின் எண்ணிக்கை 15. இவற்றுள் மானிப்பாய்ப் பிரிவுக்குள் ஆறு குளங்களும் சுதுமலையில் இரண்டு குளங்களும் ஆனைக்கோட்டையில் நான்கு குளங்களும் நவாலியில் மூன்று குளங்களும் இருக்கின்றன. சண்டிலிப்பாய்ப் பிரிவுக்குள் குளங்கள் இல்லை. தற்காலப் பதிவுகளின்படி மானிப்பாயில் மூன்று குளங்கள் மட்டுமே உள்ளன. சுதுமலையில் ஒரு குளம் உள்ளது. ஆனைக்கோட்டையில் நான்கும் நவாலியில் எட்டும் சண்டிலிப்பாயில் ஒரு குளமும் உள்ளன.11
நிலப்படத்தில் உள்ளபடி மானிப்பாய்ப் பிரிவுக் குளங்கள், கேளங்காமம் குளம், குருடிக் கிராய், பெரிய கிராய்க் குளம், குளம், விலுவில் குளம், பரவைக் குளம் என்பனவாம். கிராய் என்னும் சொல் புற்கரடு அல்லது கருநிறச் சேற்று நிலத்தைக் குறிப்பது.12 எனவே, குருடிக் கிராய், பெரிய கிராய்க் குளம் என்பன அத்தகைய நிலப்பகுதியில் அமைந்த குளங்களைக் குறிக்கக்கூடும். சுதுமலையில் ஒரு குளமும் ஒரு கேணியும் உள்ளன. ஆனைக்கோட்டையில் யாவில் குளம், குளம், முத்தான் குளம், மண்ணிண்டதாழ்வு ஆகிய குளங்கள் காணப்படுகின்றன. நவாலியில் உலயில் குளம், தேவன் கட்டு, நங்கன் குளம் ஆகிய குளங்களைக் காணமுடிகிறது.
இவற்றுள், கேளங்காமம் குளம், யாவில் குளம், நங்கன் குளம் ஆகிய பெயர்கள் இன்றுவரை மாற்றமின்றிப் புழக்கத்தில் உள்ளன. ஓரளவு பெயர் ஒற்றுமையையும் அமைவிடத்தையும் கருதும்போது குருடிக் கிராய், பெரிய கிராய்க் குளம் ஆகியவற்றுள் ஒன்றே இன்று கிராய்க் குளம் என்று பெயர் பெற்றுள்ளது எனலாம். பெரும்பாலும் இது பெரிய கிராய்க் குளமாக இருக்க வாய்ப்பு உள்ளது. மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காகவே நிலப்படத்திலுள்ள உலயில் குளமும் தற்காலப் பதிவில் உள்ள உலகிக் குளமும் ஒரு குளத்தையே குறிப்பதாகத் தோன்றுகிறது. அமைவிடத்தை வைத்துப் பார்க்கும்போது இன்று மருதடிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகிலும் கிறித்தவத் தேவாலயத்துக்கு எதிர்ப் பக்கத்திலும் உள்ள மருதடிக் குளத்தையே நிலப்படத்தில் பரவைக் குளம் எனக் குறித்துள்ளனர் எனலாம். தமிழரசர் காலத்தில் இப்பகுதியில் பிள்ளையார் கோவில் இருந்ததால், இக்குளத்துக்குப் பிள்ளையார் குளம் என்ற பெயர் வழங்கிவந்ததாகவும் தெரிகிறது.13 தேவாலயத்துக்கு எதிர்ப் பக்கத்தில் இருந்த ஒரு குளத்தைப் பற்றி போல்தேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டோம். அது நிலப்படத்திலுள்ள பரவைக் குளமே என்பதில் ஐயமில்லை. அதேபோல, நிலப்படத்தில் மானிப்பாய்ப் பிரிவுக்குள் நவாலி எல்லையோரம் விலுவில் குளம் எனக் குறிக்கப்பட்டுள்ள குளம் தற்காலத்தில் அட்டகிரிக் குளம் என அழைக்கப்படும் குளமாக இருக்கக்கூடும். இன்று சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகில் இருப்பதும் சுதுமலைக் குளம் எனப் பெயர் பெற்றுள்ளதுமான குளத்தையே நிலப்படத்தில் வெறுமனே குளம் எனக் குறித்துள்ளனர் எனவும் ஊகிக்கலாம்.
குறிப்புகள்
- Miron Winslow, Memoirs of Mrs. Harriet L. Winslow (New York: American Tract Society, 1840), 192.
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 323.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 323.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 313.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 323.
- க. வேலுப்பிள்ளை, யாழ்ப்பாண வைபவ கௌமுதி (புது டில்லி: ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ், 2004), 87; தா. சுவாமிநாதன், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் (மானிப்பாய்: சுவாமிநாதன் தர்மசீலன், 1995), 18.
- வேலுப்பிள்ளை, யாழ்ப்பாண வைபவ கௌமுதி, 87.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 323.
- சுவாமிநாதன், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம், 18.
- P. E. Pieris, The Kingdom of Jafanapatam 1645 (New Delhi: Asian Educational Services, 1995), 48.
- விவசாய அபிவிருத்தித் திணைக்களப் பதிவுகளின்படி.
- University of Madras Tamil Lexicon, 927. https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?page=927.
- சுவாமிநாதன், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம், 17.