அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் - பகுதி 1
Arts
17 நிமிட வாசிப்பு

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் – பகுதி 1

January 6, 2025 | Ezhuna

இனக் குழுமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்ட பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் (MULTI – CULTURAL SOCIETIES) சமாதான வழிகளில் தீர்க்க முடியாதனவான சிக்கலான அரசியல் பிரச்சினைகள் தீவிரமடைந்து உள்நாட்டுக் குழப்பங்களிற்கும், உள்நாட்டு யுத்தங்களிற்கும் வழிவகுத்துள்ளன. இதனை மூன்றாம் உலக நாடுகளின் சமகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ்வரசியல் பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான வழியில் தீர்த்தல், சம்மந்தப்பட்ட நாடுகளின் அமைதிக்கும், சமூக – பொருளாதார – அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அமைதி வழியான தீர்வை அரசியல் தீர்வாக (POLITICAL SOLUTION) அமைப்பதோடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING), சுயாட்சி (SELF RULE) ஆகியவற்றுக்கான ஆட்சிக் கட்டமைப்புக்களை, அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்குவதும் இன்றியமையாத முன் தேவையாக உள்ளது. அந்த வகையில், ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்’ என்னும் இப்புதிய தொடரில் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் அனுபவங்களை விளக்கியுரைக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம் வெளியிடப்படும். பல்வேறு தீர்வு மாதிரிகள், அத்தீர்வு மாதிரிகளின் பின்னால் உள்ள அரசியல் கோட்பாடுகள் (POLITICAL THEORIES), அரசியல் யாப்புத் தத்துவங்கள் (CONSTITUTIONAL PRINCIPLES) என்பனவும் விளக்கிக் கூறப்படும்.

ஆங்கில மூலம்  : லக்ஸ்மன் மாறசிங்க (Lakshman Marasinghe)

பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க ‘A Survey of Structures for Power Devolution’ என்னும் தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரை ‘Institute for Constitutional Studies’ என்னும் ஆய்வு நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘Power Sharing : The International Experience’ என்னும் நூலின் இரண்டாவது அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்வதேச அனுபவங்கள் குறித்த பல ஆய்வாளர்களின் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்த இந்நூலில் இடம்பெற்ற இக்கட்டுரையை, புதிய அரசியல் யாப்பு ஒன்றினை வரைதல் பற்றி இலங்கையர்களான நாம் சிந்திக்கும் இவ்வேளையில் மீள்பார்வை செய்தல் மிகவும் பொருத்தமுடையது. இக்கட்டுரையில் பொதிந்துள்ள கருத்துகளைச் சுருக்கியும் தழுவியும் தமிழில் தருவதே இத்தமிழ்க் கட்டுரையின் நோக்கமாகும்.

ஆங்கிலக் கட்டுரையைப் பேராசிரியர் இரு பகுதிகளாகப் பிரித்துள்ளார். கட்டுரையின் முதற்பகுதி, அதிகாரப் பகிர்வு (Devolution) என்னும் எண்ணக்கருவை விளக்குவதாகவும், அதிகாரப் பகிர்வுச் செயல்முறையைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டபின் அரசுகள் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி விளக்கிக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. இம்முதற்பகுதிக்கு ‘அறிமுகக் குறிப்புகள் சில’ எனத் தலைப்பிட்டுள்ளார். கட்டுரையின் இரண்டாவது பகுதி ‘அதிகாரப் பகிர்வு மாதிரிகள் (‘The Paradigms for Devolution’) என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.

பெல்ஜியம், அவுஸ்திரேலியா, கனடா, நைஜீரியா, சூடான், இலங்கை, தென்னாபிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் அதிகாரப் பகிர்வு அனுபவங்களை இக்கட்டுரை விளக்கிக் கூறுகிறது.

அறிமுகக் குறிப்புகள் சில

அறிமுகக் குறிப்புகள் சில என்னும் முதற்பகுதியில் கூறியிருக்கும் கருத்துகளை முதலில் நோக்குவோம். ‘Devolution of Power’ (அதிகாரப் பகிர்வு) என்னும் ஆங்கிலத்தொடர் எதனைக் குறிப்பிடுகிறது? ‘அரசின் அதிகாரத்தை’ (State Power) பகிர்ந்து அளிப்பதே அதிகாரப் பகிர்வு ஆகும். இந்த வினாவிற்கான பதிலை நாம் தெரிந்து கொள்ளும் போதுதான் அரசு ஏன், என்ன நோக்கத்திற்காகத் தன்னிடம் உள்ள அதிகாரங்களைப் பகிர வேண்டும், யாருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ள முடியும். அரசுகள் அதிகாரப் பகிர்வைச் செய்வதன் நோக்கங்கள் இரண்டாக இருப்பதுண்டு.

1. இனத்துவ (Ethnic) குழுக்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்த்து இணக்கம் செய்தல் அல்லது சமயக்குழுக்களிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்த்து இணக்கம் செய்தல். ஆங்கிலத்தில் ‘Reconciliation’ என்ற சொல்லால் இதனைக் குறிப்பிடுவர்.

2. பொருளாதார வளர்ச்சியை நோக்கிய மேம்பாடு கருதியதாகவும் அதிகாரப் பகிர்வு இருக்கலாம்.

பேராசிரியர் மாறசிங்க அவர்களின் கருத்தை விளக்குவதற்கு உதாரணங்கள் இரண்டை எம்மால் குறிப்பிட முடியும். வட அயர்லாந்தில் அதிகாரப்பகிர்வு ‘மத நல்லிணக்கத்தை’ (Religious Reconciliation) நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் ‘தெலுங்கானா’ என்ற பகுதி தனியாக்கப்பட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டதன் பிரதான நோக்கம் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டதெனலாம். அடுத்து யாருக்கு அரச அதிகாரத்தைப் பகிர வேண்டும் என்ற  வினாவிற்கான விடையைப் பார்ப்போம். அதிகாரத்தைப் பகிர்வதற்காக, அதிகாரத்தைப் பகிரும் அரசு, அதிகாரத்தை பெறக்கூடிய அலகுகளை உருவாக்க வேண்டும் (The state must establish bodies or entities) என்பது முக்கியமானது. அவ்வாறு உருவாக்கப்படும் அலகுகள் பகிர்ந்தளிக்கும் அதிகாரங்களை ஏற்கும் தகைமையும், திறனும் (Capacity and Ability) உடையனவாக இருக்க வேண்டும் என்பதோடு அவ்வதிகாரங்களைப் பெறுவதற்கான விருப்பையும் (Willingness) உடையனவாகவும் இருத்தல் வேண்டும். மத்தியில் உள்ள அரசின் அதிகாரம் பிராந்தியங்களில் உருவாக்கப்பட்ட அலகுகளிற்கு பகிர்ந்தளிக்கப்படும் போது ஒரு இடத்தில் உள்ள அரச அதிகாரங்களை இன்னொரு இடத்தில் குவித்தல் (De-concentration) என்னும் செயல்முறை இடம்பெறுகிறது என்றும் கூறலாம்.

அதிகாரப் பகிர்வுச் செயல்முறையை ஆரம்பிக்க இருக்கும் அரசு நான்கு காரணிகளை (Factors) கவனத்தில் கொள்ள வேண்டும் எனப் பேராசிரியர் மாறசிங்க அவர்கள் குறிப்பிடுகிறார். அவையாவன:

  1. அதிகாரப் பகிர்விற்கான கொள்கையை அரசு வகுத்துக் கொள்ள வேண்டும். (The state must formulate a policy for power devolution)
  2. அதிகாரங்களை ஏற்பதற்குத் தகுதியுடைய அலகுகளிற்கான அளவு கோல்களை அதிகாரத்தை வழங்கப்போகும் அரசு தீர்மானித்தல் வேண்டும் (The state must determine a set of criteria for establishing units suitable to be the recipients of the devolved powers)
  3. அதிகாரங்களை ஏற்பவர்களை (Recipients) அவரவர் தேவைகளினது இலக்குகளை அடையக்கூடிய தகைமையின் அடிப்படையில் தெரிவு செய்தல். இவ்விடத்து ‘Recipients’ என்ற சொல் அதிகாரங்களை ஏற்கவிருக்கும் அலகுகளின் மக்கள் சமூகங்களைக் குறிப்பிடுகிறது எனக் கொள்ளலாம்.
  4. மத்தியில் உள்ள அதிகாரங்களில் எவற்றைப் பகிர்ந்தளிப்பது எவற்றைக் கொடுப்பது என்ற தெரிவைச் செய்தல்.

மேற்படி நான்கு காரணிகள் பற்றியும் பேராசிரியர் தரும் விளக்கங்களை அடுத்துச் சுருக்கமாக எடுத்துக் கூறுவோம்.

அதிகாரப் பகிர்வுக்கான கொள்கையை வகுத்து கொள்ளுதல்

அரசாங்கம், அதிகாரப் பகிர்வு மூலம் அடையவிருக்கும் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாக வரையறை செய்து கொண்டு, அந்த நோக்கம் அல்லது நோக்கங்களை அடைவதற்குப் பகிரப்பட வேண்டிய அதிகாரங்கள் எவை என்பதைத் தீர்மானித்தல் வேண்டும். அதிகாரப் பகிர்வால் அடைய இருக்கும் இலக்குகளை அடைவதற்கு உதவாத அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என்றே கூறலாம்.

அதிகாரப் பகிர்வுக் கொள்கையை வகுத்துக் கொண்டமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக 1993 ஆம் ஆண்டின் பெல்ஜியம் தேசம் நடைமுறைப்படுத்திய அரசியல் யாப்பை பேராசிரியர் மாறசிங்க குறிப்பிடுகிறார். 1993 அரசியல் யாப்பு பெல்ஜியம் நாட்டை ஒற்றையாட்சி முடியாட்சி நாடு என்ற நிலையில் இருந்து சமஷ்டி ஆட்சி முடியாட்சி நாடு என்ற நிலைக்கு மாற்றியது. 1831 இல் பெல்ஜியம் ஒற்றையாட்சி நாடாக இருந்தது. அதன்பின் ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டு காலத்தில் அந்நாடு பல சமுதாயங்களையும் (Communities) பிராந்தியங்களையும் கொண்ட நாடாகப் பரிணாமம் பெற்றிருந்தது. இதற்கமைய 1993 அரசியல் யாப்பு அதன் உறுப்புரை 1 இல் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது : “பெல்ஜியம் சமுதாயங்களையும், பிராந்தியங்களையும் உள்ளடக்கிய ஒரு சமஷ்டி அரசு ஆகும்“ (Belgium is a federal state composed of communities and regions)

அரசியல் யாப்பின் முதலாவது உறுப்புரை மேற்கண்டவாறு அதிகாரப் பகிர்வுக் கொள்கையைப் பிரகடனம் செய்தது. பெல்ஜியம் ஒற்றையாட்சி அரசு என்ற நிலையில் இருந்து சமஷ்டியாக மாறிய போதும் அது முடியாட்சி அரசாகவே (Monarchy) இருக்கும் என்பதை அரசியல் யாப்பின் 3 ஆம் அதிகாரம் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. உறுப்புரை 85 பெல்ஜியத்தின் அரச/ முடி, பரம்பரை உரிமையாகப் பெறப்படுவதை (Hereditary Nature of the Belgium Monarchy) வெளிப்படுத்தியது. 1993 பெல்ஜிய அரசியல் யாப்பு பெல்ஜியத்தின் சமூக யதார்த்தத்தை (Ground Reality) கவனத்தில் எடுத்துக் கொண்டு, பெல்ஜியத்தில் பிளமிஷ் (Flemish), பிரஞ்சு, ஜேர்மன் என்னும் மூன்று சமுதாயங்கள் (Communities) வாழ்ந்து வருவதாக உறுப்புரை 2 பிரகடனம் செய்கிறது.

”Belgium comprises three communities : The Flemish community, The French community, and The German community”

மேற்கண்டவாறு அரசியல் யாப்பு பெல்ஜியத்தின் மூன்று சமுதாயங்களுக்கு அங்கீகாரம் (Recognition) வழங்கி அச்சமூகங்களின் தேவைகளை இணக்கமான முறையில் தீர்வு செய்தலும் திருப்திப்படுத்தலும் அரசின் இலக்கு என்பதை உறுதி செய்தது. உறுப்புரை 2 இல் குறிப்பிட்டதை உறுதி செய்யும் வகையில் உறுப்புரை 4 பின்வருமாறு மொழிப்பிராந்தியங்களை அடையாளப்படுத்துகிறது.

“டச்சு மொழி பேசுவோர் பிராந்தியம், பிரஞ்சு மொழி பேசுவோர் பிராந்தியம் இருமொழிகளைப் பேசுவோரை (Bilingual) கொண்ட பிரஸ்ஸல்ஸ் (Brussels) தலைநகர்ப் பிராந்தியம், ஜேர்மன் மொழி பேசுவோர் பிராந்தியம் ஆகிய பிராந்தியங்களையும்…” என உறுப்புரை 4 மொழிவழிப் பிராந்தியங்களை அடையாளப்படுத்துகிறது. பெல்ஜியம் அரசியல் யாப்பு மொழிப் பிராந்தியங்களை (Linguistic Regions) அரசியல் பிராந்தியங்களில் (Political Regions) இருந்து வேறுபடுத்திக் காட்டுவதாக அமைந்தது. மொழிக் குழுக்களையும், சமுதாயக் குழுக்களையும் ஒன்றாகக் கலப்புச் செய்வது அரசின் கொள்கைத் திட்டமாகும். சமுதாய அடிப்படையிலோ அன்றி மொழியடைப்படையிலோ சமூகத் துருவமயப்படுதல் (Social Polarisation) இடம்பெறுவதைத் தவிர்ப்பதே அரசின் கொள்கையாகவிருந்தது. உறுப்புரை 3, பெல்ஜியம் மூன்று பிராந்தியங்களைக் கொண்டது என வரையறை செய்கிறது.

  1. பிளமிஷ் பிராந்தியம்,
  2. வலூன் பிராந்தியம் (Walloon Region),
  3. பிரஸ்ஸல்ஸ் பிராந்தியம்,

என்பனவே அப்பிராந்தியங்களாகும். நிர்வாக ஒழுங்கமைப்புகளையும் சர்வதேச உறவுகளையும் இலகுபடுத்துவதற்காக தலைநகரான பிரஸ்ஸல்ஸ் தனிப்பிராந்தியமாக ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்தினதும் பிரதேச எல்லைகள் (Territorial Limits) உறுப்புரை 5 இல் வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணம் : The Flemish region comprises the following : Antwerp, Flemish brabant, West flanders, East flanders and limburg என பிளமிஷ் பிராந்திய எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

பெல்ஜியத்தில் சட்டவாக்கசபை, பிரதிநிதிகள் சபை (House of Representatives), செனேற் என இரு சபைகளைக் கொண்டதாக விளங்குகிறது (அத்தியாயம் 4 பிரிவு 1).

அதிகாரப்பகிர்வு நடைபெறும்போது நான்கு முக்கிய காரணிகளை (Four important factors) அரசாங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்; அவற்றுள் முதலாவது விடயம், அதிகாரப் பகிர்வு பற்றிய கொள்கையை வகுத்தல் ஆகும். கொள்கை வகுத்தலுக்குச் சிறந்த வரலாற்று உதாரணமாகப் பேராசிரியர் மாறசிங்க அவர்கள், 1993 இன் பெல்ஜியம் அரசியல் யாப்பை உதாரணங்காட்டி விளக்கியுள்ளார் (பக் 13 – 16). அவரது விரிவான விளக்கத்தை மிகச்சுருக்கமாக மேலே எடுத்துக் கூறினோம். அதிகாரத்தைப் பெறும் அலகுகளை என்ன அடிப்படை அளவு கோல்களின்படி தீர்மானிக்க வேண்டும் என்ற விடயத்தை அரசாங்கம் தொடக்கத்திலேயே வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாறசிங்க குறிப்பிடுகிறார். இவ்விடயத்தை அடுத்து நோக்குவோம்.

அதிகாரத்தைப் பெறும் அலகுகளைத் தீர்மானித்தல்

பிரித்தானிய அரசாங்கம் தனது காலனி நாடுகளான கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிகாரப் பகிர்வைச் செயற்படுத்தியது. பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் 1867 (British North America Act 1867), இன்றைய கனடாவின் அரசியலமைப்புக்கு அடித்தளமாக அமைந்த அரசியல் யாப்புச் சட்டமாகும். இதே போன்று பிரித்தானியாவின் காலனியான அவுஸ்திரேலியாவிற்கு பொதுநலவாய அவுஸ்திரேலியாச் சட்டம் 1900 (Commonwealth of Australia Act 1900) என்னும் அரசியல் யாப்புச் சட்டம் அதிகாரப் பகிர்வை வழங்கியது.

பொதுவாக ஆட்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முன்வருவதில்லை. ஆனால் பிரித்தானிய அரசாங்கம் கனடா, அவுஸ்திரேலியா ஆகிய காலனிகளுக்குச் சுதந்திரத்தை வழங்கிய போது அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் (Devolving Power) என்னும் முடிவை ஏன் செய்தது என்ற வினாவை எழுப்பும் மாறசிங்க, கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும் ஆள்புலத்தின் பிரதேச விஸ்தீரணம் (Largeness of the Territorial Extent) அந்நாடுகளின் ஆளுகை (Governance) சீரானதாக அமைவதற்குத் தடையாக அமையும் என்பதைப் பிரித்தானியா உணர்ந்தது என்ற பதிலைத் தருகிறார். கனடாவின் ஒட்டாவா நகரின் மத்திய அரசு அந்நாட்டின் பரந்த நிலப்பரப்பின் மூலை முடுக்குகளில் எல்லாம் அதிகாரத்தைச் செலுத்த முடியாது. இவ்வாறே அவுஸ்திரேலியா என்னும் ஒரு கண்டத்தை கன்பரா என்னும் நகரில் அமைந்துள்ள அரசாங்கத்தால் ஆள முடியுமா என்பது நியாயமான ஐயமே ஆகும். இதனைவிட இவ்விரு நாடுகளிலும் காலனிய காலகட்டத்தில் பிராந்தியங்களைச் சார்ந்த இனத்துவ, பண்பாட்டுச் சமயக்குழுக்கள் உருவாக்கம் பெற்றிருந்தன. ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் பிராந்திய ரீதியான பண்பாட்டு ஒருமைத்தன்மையையுடைய சமுதாயங்களாக உருவாக்கம் பெற்றிருந்தனர். இதனால் அவுஸ்திரேலியாவில் அதிகாரப் பகிர்வுக்குரிய அரசுகளை (States) வரையறை செய்வதிலும், கனடாவில் மாநிலங்களை (Provinces) வரையறை செய்வதிலும் பண்பாடு, இனத்துவம் அல்லது சமயம் ஆகியவற்றால் ஓரினத்தன்மையுடைய அலகுகளை வரையறை செய்ய வேண்டிய தேவை எழுந்தது. இவ்வாறு சமூக, அரசியல் நோக்கில் பிரதேசங்களை அடையாளப்படுத்துவதை ‘Bracket Theory’ எனக் குறிப்பிடுவர் என்று மாறசிங்க குறிப்பிடுகிறார். “In socio – political Terms, the state utilized the ‘Bracket Theory’ by placing them within territorial brackets wherever it seems possible for considerations of cultural, ethnic or religious homogeneity (பக். 17)”

1867 இல் கனடா டொமினியன் அந்தஸ்துடைய சுதந்திர நாடாக ஆகிய போது அதிகாரப் பகிர்வைப் பெறும் (Recipients of Devolved Power) அலகுகளாக ஒன்டாரியோ, கியுபெக், நோவா ஸ்கோஷியா (Nova Scotia), நியு பிறவுன்ஸ்விக் ஆகிய நான்கு மாநிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. கனடாவின் அரசியல் யாப்பு வளர்ச்சியின் பெறுபேறாக 1999 இல் கனடா 10 மாநிலங்களையும், மூன்று பிரதேசங்களையும் கொண்ட சமஷ்டியாக உருவாகியது. கனடாவின் நிலப்பரப்பின் விஸ்தீரணம், கியுபெக் மாநிலத்திற்கும் ஏனைய ஆங்கிலமொழி பேசுவோர் மாநிலங்களிற்கும் இடையிலான வேற்றுமைகள், கனடாவின் முதல் தேசியங்கள் (First Nations) ஆகிய காரணிகள் அதிகாரப் பகிர்வுக்கான அலகுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றியதை அந்நாட்டின் அரசியல் வரலாறு உணர்த்தியுள்ளது.

அவுஸ்திரேலிய அரசியல் யாப்பு பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்த சுயாட்சியுடைய பல குடியேற்றங்களை (Self Governing British Colonies) ஒன்றிணைத்தது. அப்போது உருவான அவுஸ்திரேலியா, இன்று 6 அரசுகளையும் (States), 1 தலைநகர் பிரதேசத்தையும் (Capital Territory), வடக்குப் பிரதேசம் (Northern Territory), 7 நிர்வாகப் பிரதேசங்கள் (Administered Territories) என்பனவற்றை அதிகாரப் பகிர்வுக்குரிய அலகுகளாகக் கொண்டுள்ளது.

அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் உதாரணங்களை எடுத்துக் காட்டிய பின்னர் பேராசிரியர் மாறசிங்க நைஜீரியா, சூடான் ஆகிய இரு மூன்றாம் உலக உதாரணங்களை எடுத்துக்காட்டி விளக்கம் தந்துள்ளார்.

நைஜீரியா

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானியக் காலனியவாதிகள் நைஜீரியாவிற்கு வந்தபோது, அப்பிராந்தியம் வெவ்வேறு இனக்குழுமங்களைக் (Tribal Groups) கொண்ட பல தலையாரிச் சமூகங்களை (Chieftaincies) உள்ளடக்கியதாக இருந்ததைக் கண்டனர். இச்சமூகங்கள் யாவற்றையும் தமது இராணுவ பலத்தாலும் பல தந்திரங்களாலும் அடக்கியும், பணிய வைத்தும் நைஜீரியா என்ற ஒற்றைத் தன்மையுடைய அரசுக் கட்டமைப்பை உருவாக்கி அதற்கு நைஜீரியா எனப் பெயரிட்டனர். ஆகையால் நைஜீரியா சுதந்திரமடைந்த பின்னர் உள்ளக முரண்பாடுகள் அதிகரித்து, அரசுகளை இனக்  குழுமங்களின் அடிப்படையில் (States Along Tribal Lines) அமைக்க வேண்டிய தேவை எழுந்தது. நைஜீரியாவின் இன்றைய அரசியல் யாப்பு 1999 இல் உருவாக்கப்பட்ட போது, இனக்குழுமங்கள் அல்லது சமயக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அலகுகள் உருவாக்கப்பட்டன. நைஜீரியாவில் இன்று 36 அரசுகள் (States) கொண்ட சமஷ்டிமுறை நடைமுறையில் உள்ளது. இவ் அரசு அலகுகளை உருவாக்கிய போது நைஜீரியா அரசு எல்லைகளை இனக்குழு எல்லைகளுடன் (Tribal Boundaries) ஒருங்கிணைக்கும் முறையில் உருவாக்கியது. அதிகாரப் பகிர்வுக்கான இந்த அலகுகள் ‘Bracket Theory’ இன்படி உருவாக்கப்பட்டன எனக் கருதலாம் (பக். 17).

நைஜீரியாவின் அரசியல் யாப்பின் அத்தியாயம் 4 பகுதி 2 இல் ஒவ்வொரு 36 அரசுகளுக்கும் ‘அசெம்பிளி’ (House of Assembly) எனப்படும் சட்ட ஆக்கச் சபை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகையான அரசுக்கட்டமைப்பு நைஜீரியாவிற்குள் பிரித்தானிய காலனித்துவம் காலடி எடுத்து வைத்த போது இருந்த அரசுக் கட்டமைப்பை ஒத்ததாக இருந்தது என்று கூறலாம். புதிய யாப்பின்படியான அரசுகளின் எல்லைகள், பழைய இனக்குழுச் சமுதாயங்களின் எல்லைகளுடன் (Tribal Boundaries) ஏறக்குறைய ஒருங்கிணைவனவாய் இருந்தன. இத்தகைய அரசுக்கட்டமைப்பு மாதிரி (Paradigm) நைஜீரிய மக்கள் சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் ஏற்படுத்துவதற்கு உளத்தூண்டலை வழங்குவதாக அமைந்தது. அதிகாரப் பகிர்வுக்கான அலகுகளாக 36 அரசுகள் அமைந்தன.

சூடான் குடியரசு

2005 ஆம் ஆண்டின் சூடான் அரசியல் யாப்பு சூடான் குடியரசை (Republic of Sudan) 24 அரசுகளைக் கொண்ட சமஷ்டியாக உருவாக்கியுள்ளது. சூடானின் சமஷ்டிமுறை மூன்று நோக்கங்களை அடைவதை இலக்காகக் கொண்டது.

  1. சூடானின் வடபகுதியில் பருத்திச் செய்கை, தென் சூடானில் சோளப் பயிர்ச்செய்கையும் கைத்தொழில்களின் வளர்ச்சியும் ஆகியன சூடானை பொருளாதார சமூக ஏற்றுத்தாழ்வுகள் உடைய நாடாக ஆக்கியிருந்தன. இவ் ஏற்றத் தாழ்வுகளை  சமப்படுத்தும் சமத்துவப் பங்கீட்டு முறையை ஏற்படுத்தல் முதலாவது நோக்கமாகும். இந்த நோக்கத்தினை அடைவதில் சூடான் வெற்றி கண்டதா என்பது வேறு விடயம். அரசுக் கட்டமைப்பை உருவாக்கும் போது பொருளாதார நன்மைகளைச் சமனாகப் பகிர்தல் ஒரு நோக்கமாகக் கருதப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
  2. தென்சூடான் அராபியர் அல்லாத இஸ்லாமியர் அல்லாத இனக்குழுமச் சமூகங்களின் (Non – Arab, Non-Islamic, Tribal Groups) பாரம்பரிய தாயகப் பிரதேசங்களாக (Traditional Homelands) இருந்தன. ஆகையால் தென்சூடான் இஸ்லாமிய அராபிய வடக்குடன் (Islamic Arab North) தொடர்பற்ற தனித்துவமான பகுதியாக இருந்தது. தென்பகுதி அரசுகளை உருவாக்கியதன் மூலம், பின்தங்கிய தென்சூடான் பகுதிகளின் பொருளாதார முன்னேற்றத்தை அடைவது நோக்கமாக இருந்தது.
  3. சமய அடிப்படையிலும் இன அடிப்படையிலும் தெற்கு சூடானுக்கும்,  வட சூடானுக்கும் இடையே முரண்பாடுகள் கூர்மையடைந்திருந்தன. இவ்விரு பகுதிகளுக்குமிடையே ஐக்கியத்தை வளர்த்தல் மூன்றாவது நோக்கமாக இருந்தது. அதிகாரப் பகிர்வு, தென்பகுதி மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கும் என நம்பப்பட்டது.

சூடானில் 24 அரசுகளை எல்லையிட்டு பிரித்து அமைத்ததன் நோக்கம் சுய ஆட்சி (Self Government) ஊடாக பேண்தகு அபிவிருத்தியை (Sustained Development) எல்லாப் பகுதிகளிலும் ஏற்படுத்துவதேயாகும். சூடானின் தென்பகுதி வடபகுதியில் இருந்து பிரிந்து போவதற்காக நடத்தி வந்த நீண்டகாலப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியையும் பொருளாதார விருத்தியையும் ஏற்படுத்தும் நோக்குடனேயே அதிகாரப் பகிர்வுக்கான அரச அலகுகள் உருவாக்கப்பட்டன. வடபகுதி, இனத்தால் அராபியர்களாகவும் மதத்தால் இஸ்லாமியர்களுமான மக்களைக் கொண்டது. சூடானின் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் சன்னி (Sunni) முஸ்லிம் பிரிவினர். வடபகுதியினர் பொருளாதார வளம்மிக்க செல்வந்தர்கள். தென்பகுதி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தையுடையதாயினும் வறிய மக்களைக் கொண்ட பகுதியாகும். தென்பகுதி மக்கள் பன்டு (Bantu) இனத்தவர்களாகவும், பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். தென்பகுதியில் சிறுபான்மையினரானோர் ஆவி வழிபாட்டு நம்பிக்கை (Animism) உடையவர்களாகவும் உள்ளனர். சூடானின் அரசுக் கட்டமைப்பு சமூக, பொருளாதார, பண்பாட்டு வேறுபாடுகளை இணக்கம் செய்து நாட்டை ஐக்கியப்படுத்தும் நோக்கம் உடையது என்பது தெளிவாகிறது.

சூடானின் 2005 அரசியல் யாப்பின் மூன்று உறுப்புரைகள் மூன்று முக்கியமான அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளைக் குறிப்பிடுகின்றன.

  1. உறுப்புரை 110 : இவ்வுறுப்புரையில் சமஷ்டி அரசாங்கத்தின் அதிகாரங்கள் (Federal Powers) குறித்துரைக்கப்பட்டுள்ளன.
  2. உறுப்புரை 111 : இவ்வுறுப்புரை அரசுகளின் சட்ட சபைகளின் (State Assemblies) அதிகாரங்களை வகுத்துரைத்துள்ளது.
  3. உறுப்புரை 112 : இவ்வுறுப்புரையில் அரசுகளின் சட்ட சபைகளுக்கும், மத்திய பாராளுமன்றத்திற்கும் (Federal Parliament) பொதுவான ஒருங்கிணை அதிகாரங்கள் (Concurrent Powers) வகுத்துரைக்கப்பட்டுள்ளன.

சூடானின் அரசியல் யாப்பின் அத்தியாயம் 4 பிரிவு 24 நான்கு நிலைகளில் அதிகாரப் பரவலாக்கலை (Four Levels of Decentralisation) நடைமுறைப்படுத்தும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதனால் சூடானில் நான்கு நிலைகளில் அரசாங்கம் செயற்பட வழிவகுக்கப்பட்டுள்ளது.

முதலாவது நிலை அரசாங்கமாக (First Level of Government) தேசிய மட்டத்தில் இயங்கும் மத்திய அரசாங்கம் உள்ளது. இம்மத்திய அரசாங்கம் “நாட்டின் தேசிய இறைமையையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதோடு, சூடான் மக்களின் நலன்களைப் பேணுவதாகவும் செயற்படுவதற்குரிய அதிகாரங்களை உடையதாகவும் இருக்கும்“

தென்சூடான் நிலை அரசாங்கம் (South Sudan Level Government) என்பது இரண்டாம் நிலை அரசாங்கமாகும். இந்த அரசாங்கம் சூடானின் தென்பகுதி மக்களினதும், தென்பகுதி அரசுகளினதும் (People and States of Southern Sudan) விவகாரங்கள் தொடர்பான அதிகாரம் உடைய அரசாங்கமாகும்.

மூன்றாவது நிலையில் அரசுகளின் அரசாங்கம் (State Level Government) உள்ளது. 24 அரசுகளின் அரசாங்கத்தை இது குறிப்பிடுகிறது. இவ்வரசுகள் தத்தம் பகுதிகளின் பொதுச் சேவைகளை மக்களிற்கு வழங்கும் மக்களிற்கு அருகில் உள்ளனவான (Closest to the People) அரசாங்கங்களாக உள்ளன. நான்காவதான அரசாங்கமாக முனிசிப்பல் சபைகள், கிராம மட்ட சபைகள் என்பனவற்றை உள்ளடக்கிய உள்ளூராட்சி அரசாங்கம் (Local Government) அமைந்துள்ளது.

உறுப்புரை 26, நான்கு நிலைகளில் உள்ள அரசாங்கங்களிடையே இருக்க வேண்டிய தொடர்புகளைப் (Inter Governmental Linkages) பற்றிக் குறிப்பிடுகிறது. இதனையடுத்துள்ள பந்தியொன்றில் அரசின் அங்கங்களான அரச நிறுவனங்கள் செய்யக் கூடாதன எவை எனவும், செய்ய வேண்டியன எவையெனவும் கூறும் 10 வழிகாட்டிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சில வருமாறு:

  1. இன்னொரு நிலை அரசாங்கத்தின் அதிகாரங்களிலும், பணிகளிலும் தலையிடுதல் ஆகாது (Not to encroach on the powers and functions of other levels).
  2. எல்லா நிலை அரசாங்கங்களிடையிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் (To promote cooperation between all levels of government).
  3. வழக்காடுதலுக்குச் செல்வதற்கு முன்னர் பிணக்குகளை இணக்கமான முறையில் நடுத்தீர்ப்பு முறைமூலம் தீர்வு செய்யவதற்கு முனைதல் வேண்டும் (To promote amicable settlement of disputes before attempting litigation).

இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை (Devolved Powers) செயற்படுத்துவதற்கு உதவ வேண்டும் எனவும், அவ்வதிகாரங்கள் செயற்படுத்தப்படுவதற்குத் தடைகளை விதிக்கக் கூடாதெனவும்  எச்சரிக்கைக் குறிப்புகளைக் கூறும் அரசியல் யாப்பு ஏற்பாடு தனித்துவமானது; பிற யாப்புகளில் காணப்படாத ஒரு விடயம் எனப் பேராசிரியர் மாறசிங்க குறிப்பிடுகிறார் (பக். 21).

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

2964 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்