புராதன தமிழ்க் கூத்தில் புராணம் புகுந்த கதை
Arts
20 நிமிட வாசிப்பு

புராதன தமிழ்க் கூத்தில் புராணம் புகுந்த கதை

January 7, 2025 | Ezhuna

ஈழத்து மரபுவழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி, வடமோடி, சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி என அது பன்முகப்பட்டது. இவற்றுள் சில அருகிவிட்டன; சில கால ஓட்டத்துடன் நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும், அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூக காரணங்களும் இம்மாற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் தத்தமக்கென அழகியலையும், அமைப்பையும், வெளிப்பாட்டுத் திறனையும் கொண்டுள்ளன; ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும் வளர்ந்துள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வதும், அவை மாற்றம் பெற்றபோது அது சம்பந்தமாக நடந்த விவாதங்களை அறிவதும், இதன் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவருக்கும், அதனை மேலும் வளர்த்துச் செல்ல விரும்புவோருக்கும் உதவியாக இருக்கும். இப் பல்வேறு ஆற்றுகை வடிவங்கள் பற்றியும் அவை கல்வி உலகில் ஏற்கப்பட்ட பின்னணிகள் பற்றியும், அதனால் இந்த ஆற்றுகைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அறிமுகம் செய்வதாக ‘ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமைந்திருக்கும்.

பண்டைத் தமிழகமும் தமிழினமும்

தமிழர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே, ஒரு இனக்குழுவாக வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அண்மைக் காலத்தில் இது பற்றி நிறைய ஆய்வுகளும் வந்துவிட்டன. ஒரு இனக்குழுவாக இருக்க வேண்டுமானால், அவ் இனக்குழு பின்வரும் பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்:

  1. பொது வாழ்விடம்
  2. பொது முன்னோர்கள்
  3. பொதுப் பண்பாடு அல்லது பழக்க வழக்கங்கள்
  4. பொது நம்பிக்கை அல்லது சமயம்
  5. தன்னை வேறாக அடையளாம் காணல்
  6. குழுவின் தோற்றத்தை விளக்கும் தொன்மக்கதைகள்

தமிழரின் பொது வாழ்விடமாக வடவேங்கடம் தொடக்கம் தென்குமரி வரையான நிலப்பரப்பு இருந்துள்ளது. அவர்களின் பொது முன்னோர்களாக பாரி, காரி, ஆய், ஓரி, நன்னன், அதியமான், குமணன் போன்றோர் கூறப்படுகின்றனர்.

பண்டைய தமிழர்கள் மத்தியில் அவர்கள் வாழ்ந்த நிலத்திற்கு ஏற்ப பழக்க வழக்கங்கள் இருந்திருக்கின்றன.

  • குறிஞ்சி: வேட்டையும் அதனோடு ஒத்த பண்பாடும்.
  • முல்லை: மந்தை மேய்த்தலும் அதனோடு ஒத்த பண்பாடும்.
  • மருதம்: வேளாண்மையும் அதனோடு ஒத்த பண்பாடும்.
  • நெய்தல்: மீன் பிடித்தலும், கடல் கடந்து நாவாய் ஓட்டலும் அதனோடு ஒத்த பண்பாடும்.
  • பாலை: களவு செய்தலும் அதனோடு ஒத்த பண்பாடும்.

அவர்களது பொது மதமாக இயற்கை வணக்கம் இருந்திருக்கிறது. பிற்கால இலக்கியங்களில் கூறப்படும் பெரும்தொகைத் தெய்வங்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. காடுகிழாள் என்றும் கானமர் செல்வி என்றும் கூறப்படும் தெய்வம், காட்டைத்தெய்வமாக வணங்கியமைக்கு உதாரணமாகும். அது ஓர் இயற்கை வணக்கம். பின்னர் இயற்கைச் சக்தியை அவர்கள் கொற்றவையாக வணங்கியுள்ளனர். பண்டைய தமிழ் இனத்தை தமிடே என்றே வேற்றுநாட்டார் அடையாளம் கண்டனர் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குமரி நாட்டைக் கடல் கொண்ட கதையும், இனக்குழுக்கள் அரசாக வளர்ந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் பற்றிய பூர்வ கதைகளும் அவர்களிடம் இருந்தன.

பழந் தமிழர் ஆடல்கள்

குறிஞ்சி நிலத்திலே வேலனாடினான். பாலை நிலத்திலே கொற்றவை ஆடினாள். ஏர்க்களத்திலே உழவர்கள் ஆடினர். போர்க்களத்திலே வீரர்கள் ஆடினர். நெய்தல் நிலத்திலே சுறாமீனை நட்டு, அதனை வணங்கி மீனவர் ஆடினர். இந்த ஆடல்களுக்கான வாத்தியங்களாக பறையும் முழவும் யாழும் இருந்திருக்கின்றன. இவ்வண்ணம் தனித்தனி ஆடல்களையும் பாடல்களையும், யாழ்களையும், இசைகளையும் கொண்டதாகத் தனித்தனிப் பண்பாட்டுப் பிரதேசங்களாக தீவுகளாக வாழ்ந்த இந்த இனக்கூட்டத்தை இணைத்தது அவர்கள் பேசிய தமிழ் மொழியே ஆகும். சிறந்த தமிழ் மொழி செந்தமிழ் எனவும், சிறப்பில்லாத தமிழ் மொழி கொடுந்தமிழ் எனவும் அழைக்கப்பட்டது. பாண்டிய நாட்டிலேதான் செந்தமிழ் வழக்கிலிருந்தது என்ற தொன்மமும், அங்குதான் சிவனை முதன்மையாகக் கொண்ட தமிழ்ச் சங்கம் இருந்தது என்ற தொன்மும் பின்னால் எழலாயிற்று.

மொழியால் இணைந்த இந்த இனக்கூட்டத்தினர் மேலும் அருகருகே இணையும் வாய்ப்பும் கிடைத்தது. அது பொருளியல் வளர்ச்சியால் ஏற்பட்டது. பொருளியல் வளர்ச்சி காரணமாக பரிவர்த்தனைகள் ஏற்பட, இந்த நிலங்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல் நிலவ, திணைக் கலப்பு ஏற்பட்டது. இதனையே தொல்காப்பியர் திணை மயக்கம் என்கிறார். இப்படியான பொதுப்பண்புகளுடனும் திணைக்கலப்புடனும், தனி இனமாகவும் பிற பண்பாட்டுக் கலப்பு இன்றியும் தமிழர் எனும் ஓர் இனம் வாழ்ந்தமைக்குச் சங்க நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற நூல்களில் சான்றுகள் உண்டு.

சங்க இலக்கியங்களில் சில இலக்கியங்கள் தோன்றிய காலத்திலே இப்பண்பாட்டுக் கலப்பு ஏற்படலாயிற்று. தமிழர் சால்பு எனும் தனது நூலில் பேராசிரியர் வித்தியானந்தன் இதனை நன்கு விளக்கியுள்ளார். அந்நூலிலே தமிழரின் தனித்துவமான பண்பாட்டு அம்சங்களை, முக்கியமாக ஒவ்வொரு நிலத்திலும் இருந்த ஆடல் பாடல்களை சங்க நூற் சான்றுகள் கொண்டு அவர் தருகிறார். இன்னும் பலரும் இதனை நிறுவியுள்ளனர். அண்மைக்காலப் புதைபொருள் ஆய்வுகளும் இதனை மேலும் வெளிப்படுத்தியுள்ளன. ஓர் இனக்குழு தனியாகவும் அதே தனித்துவத்துடனும் வாழ்வதென்பது மிக சிரமமான காரியம் ஆகும். சிரமம் என்பதனை விட அது இயற்கைக்கு எதிரான காரியமும் ஆகும். மனிதர் இணைவதும், அதனால் பண்பாடுகள் கலப்பதும், இருந்த பண்பு மாறிச்செல்வதும் இயற்கையின் இயங்கியல் ஆகும்.

பண்டைத் தமிழர் கூத்துகளின் பாடு பொருள்

அப்படியாயின் அக்காலக் கூத்தரின் பாடுபொருள்கள் வடநாட்டு ஆரிய புராண இதிகாசக் கதைகளுமல்ல; அவர்களின் தெய்வங்களுமல்ல என்பது தெளிவாகிறது அல்லவா? இந்த வகையில் ஆரியர் தொடர்பும் பிற நாட்டார் தொடர்பும் ஏற்படுமுன், தனித்துவமான பண்பாடுகளுடன் வாழ்ந்த ஒரு இனக்குழுமத்தின் பண்பாடு, பழக்கவழக்கம், வழிபாடு, வாழ்முறை என்பன வரலாற்றுக் காலத்திலேயே மாறத் தொடங்கியது என்பதனையும், அதே இலக்கியச் சான்றுகள் கொண்டும் கல்வெட்டுச் சான்றுகள் கொண்டும் அறிந்து கொள்கிறோம். இதற்குப் பல உதாரணங்கள் கூறலாம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நில அமைப்புக் காரணமாக பிரிந்து வாழ்ந்த இவ்வினக்குழு ஒவ்வோர் நிலத்துக்குமான ஆடல் பாடல்களையும், அதற்கான இசைக்கருவிகளையும் கொண்டிருந்தன என்பதனை சங்க இலக்கியங்களும், அதனை விளக்க எழுந்த தொல்காப்பியமும் கூறுகின்றன.

குறிஞ்சி நிலத்திலே தொண்டகப் பறையும் குறிஞ்சி யாழும்,
முல்லை நிலத்திலே ஏறுகோட் பறையும் முல்லை யாழும்,
மருத நிலத்திலே மணமுழவும் மருத யாழும்,
நெய்தல் நிலத்திலே மீன் கோட் பறையும் நெய்தல் யாழும்,
பாலை நிலத்திலே குறை கோட்பறையும் நிரைகோட்பறையும் பாலையாழும்,

இசைக்கருவிகளாக இருந்தன என நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்திற்கு எழுதிய உரையிலே கூறுகிறார். வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் இருந்த ஆடல்கள் பற்றிய செய்தியினை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கூத்தரும், பொருநரும், பாணரும், விறலியும் தமிழர் வாழ்ந்த நால்வகை நிலங்களிடையே பயணம் செய்து பண்பாட்டு இணைப்பை ஏற்படுத்தினர். இவர்கள் சங்ககால மன்னர் வாழ்வையும், சங்ககால மக்கள் வாழ்வையும் பாடினர், நிகழ்த்தினர். சங்கப் பாடல்கள் பல இவ்வண்ணம் பாணர்களால் பாடப்பட்ட பாடல்கள் என்பர். பத்துப்பாட்டில் வரும் ஐந்து ஆற்றுப்படை நூல்களில் பாணர் ஊர் ஊராகச் சென்று ஆடல், பாடல் நிகழ்த்திய இச்செய்திகள் உண்டு. அந்த ஆடல் கலைகளில் ஒன்றுதான் கூத்து ஆகும். கூத்தை ஆடியோர் கூத்தர் என அழைக்கப்படுகின்றனர். கூத்தர் பற்றிய பல செய்திகளைச் சங்க இலக்கியங்களிலே காணுகிறோம். இப்படிக் கூத்தருடன் சென்ற கூத்தர் குழாத்தில் ஒருத்தியே சங்க இலக்கியப் பாடல்களைப் பாடிய ஔவையார் ஆவார்.

ஏற்றுக உலையே ஆக்குக சோறே
கள்ளும் குறைபட ஓம்புமின்

என்று பாடிய ஔவையார் சங்க கால ஔவையார்; ஆரியக் கலப்பு அற்ற ஔவையார். ஆரம்பத்தில் தமிழர் ஆடிய ஆடல்களில் ஆரியக் கலப்போ, வடநாட்டுக் கலப்போ இருக்கவில்லை. இதற்கு உதாரணம், அவர்கள் ஏர்க்களத்திலும் போர்க்களத்திலும் ஆடிய குரவைக் கூத்துகளும், பேய்மகளிர் சுடலையில் ஆடிய துணங்கைக் கூத்தும், வேலன் குறி கூற ஆடிய வேலனாட்டமும் ஆகும். அங்கெல்லாம் உள்ளூர்க்கதைகளும், உள்ளூர்ச் செய்திகளுமே ஆடு பொருளாகவும் பாடு பொருளாகவும் இருந்தன.  

சிலப்பதிகாரத்தில் கூத்துச் செய்திகள்

இந்தக் கூத்துகளின் எச்ச சொச்சங்களை நாம் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். அங்கே முல்லை நிலத்திலே வாழ்ந்த இடையர் குல ஆய்ச்சியர் குரவைக் கூத்து ஆடுகின்றனர். இது ஆய்ச்சியர் குரவை என அழைக்கப்படுகிறது. ஆடும் கூத்து பழைய கூத்தாயினும் அங்கு பாடுபொருள் கண்ணன் ஆகிவிடுகிறார். கண்ணன் ஒரு ஆரியக் கடவுள். தமிழ்க் கூத்துக்குள் இடையர் மத்தியிலே, இடையர் சேரியில் வளர்ந்ததாகப் புராணம் கூறிய ஒரு வடமொழிக் கடவுள் வந்து விடுகிறார். அந்தக் கூத்திலே கூறப்படுகின்ற கதைகள் யாவும் பாகவத புராணம் கூறும் கதைகள். மாட்டுக் கன்றை மரத்தில் எறிந்து கனிகள் உதிர்த்த கண்ணன் கதை, பாம்பைக் கயிறாக்கி அமுதம் பெறக் பாற்கடல் கடைந்த கதை, குருந்த மாத்தை வீழ்த்திய குழந்தைக் கண்ணன் கதை, மஹாபாரத யுத்தத்தில் சூரியனைத் தன் சக்கர ஆயுதத்தால் மறைத்த கதை எனப் பல கதைகள் கூறி ஆடப்படுகின்றன.

அதே நேரம், வேடரும் குரவைக் கூத்து ஆடுகின்றனர். ஆனால் அவர்களால் ஆடிப்பாடும் தெய்வம் வட நாட்டு ஆரியத் தெய்வம் அல்ல என்பதும் மனம் கொள்ளத்தக்கது. எற்கனவே அவர்கள் வணங்கிய கொற்றவையின் வளர்ச்சி பெற்ற வடிவம் அது. ஆனால் காவிரிபூம் பட்டினத்திலே மாதவி அரசவையில் ஆடிய 11 வகை ஆடல்களில் இரண்டு ஆடல்கள் மாத்திரமே தமிழ் மரபில் வந்த முருகனையும் கொற்றவையையும் கொண்டுள்ளன. ஏனைய ஒன்பது தெய்வங்களும் வடநாட்டுத் தெய்வங்களே. இதனை இவ்வாறு பார்க்கலாம்.

ஒரு வெளிப்பண்பாடு முதலில் மேல் வர்க்கத்தையே பாதிக்கும். அதுவும் நகரப் புறத்தையே பாதிக்கும். காரணம், அங்கு அனைவரும் கலக்க வாய்ப்பு உண்டு. கிராமங்களுக்குள் அந்நியப் பண்பாடு புக மிகத் தாமதமாகும். இதே நிலைதான் தமிழ் நாட்டிலும் நிகழ்ந்தது என்பதைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. மிகக் கீழ் நிலையில் இருந்த வேடர் குல மக்களிடம் பண்டைய வழிபாட்டுமுறையில் அமைந்த கொற்றவையைப் போற்றும் குன்றக்குரவைக் கூத்தே இருந்தது. வேடர் குல மக்களைவிடச் சற்றுப் பொருளாதாரத்திலும் வாழ்முறைகளிலும் வளர்ச்சியடைந்த இடையர் குல மக்களிடம் பழைய கூத்தான குரவைக் கூத்து இருந்ததாயினும், அவர்கள் அந்தக் கூத்திலே பாடி ஆடுவது பஞ்சவர்க்குத் தூது போன கண்ணனைத்தான். வடமொழி புராணக்கதை அங்கு புகுந்துவிட்டமைக்கு இது ஒரு உதாரணமாகும்.

ஆனால் இவ்விரு இனக் கூட்டத்தையும் விட நகரப் புறத்திலிருந்த மாதவியோ, அதுவும் அரசவை பெண்ணான அவளோ, நாட்டிய நூல் நன்கு கற்று நாட்டியம் ஆடுபவளாகக் காட்டப்படுகிறாள். அந்த நாட்டிய நூல் வடமொழிப் பண்பை உள்வாங்கியதாகவும் இருக்கலாம். தனது 11 ஆடல்களில் ஒன்பது ஆடல்களை ஆரியத் தெய்வ ஆட்டமாகவே நடத்துகிறாள். அவள் ஆடிய 11 ஆடல்களின் பெயர்களும் அவ்வாடல்களில் பிரதான இடம் பெற்ற தெய்வங்களும் இவைதான்:

“பாண்டரங்கம், கொடுகொட்டி என்னும் இரண்டு கூத்தும் சிவனால் ஆடப்பட்டன. அல்லியம், மல், குடம் எனும் மூன்று கூத்தும் திருமாலால் ஆடப்பட்டன. குடை, துடி என்னும் இரண்டு கூத்தும் முருகனால் ஆடப்பட்டன. பேடிக் கூத்து காமனால் ஆடப்பட்டது. பாவைக் கூத்து இலக்குமியால் ஆடப்பட்டது. மரக்கால் கூத்து துர்க்கையால் ஆடப்பட்டது. கடையக் கூத்து அயிராணியால் ஆடப்பட்டது” எனப் பஞ்சமரபு கூறுகிறது.

ஆனால் மாதவி ஆடியது நடனம் எனும் பெயரால் அழைக்கப்படவில்லை. தமிழரிடம் தொன்று தொட்டு பயின்று வந்த ஆடல் வடிவமான கூத்து எனும் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இதிலே மாதவி ஆடும் பாத்திரங்களைக் கவனியுங்கள்: சிவன், திருமால், முருகன், காமன், இலக்குமி, துர்க்கை, அயிராணி; ‘அயிராணி’ என்றால் இந்திரனுடைய மனைவி என்று அர்த்தம். எல்லாக் கடவுளருமே ஆரியக் கடவுளர்தான். எமது பண்டைய வேலனும் கொற்றவையும் வேறு பெயரில் முருகன், துர்க்கை என கூறப்படுகிறார்கள். ஆடும் கூத்துகளின் உட் பொருள்களும் தமிழர் மத்தியில் வளராத, வந்துசேர்ந்த வடமொழி புராண இதிகாசக் கதைகள் ஆகும். கீழ்வரும் தகவல்களைப் பாருங்கள்:

கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது அது நெருப்பு மூண்டு எரிவதைக் கண்டுகொண்டு மகிழ்ச்சியினால் கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. கொட்டிசேதம் என்றும் இதற்குப் பெயர் உண்டு.

பாண்டரங்கம்: சிவபெருமான் திரி புரத்தை எரித்துச் சாம்பலாக்கிய பின்னர் தேர்ப் பாகனாக இருந்த பிரம்மா காணும்படி ஆடிய கூத்து.

அல்லியம்: கண்ணன் யானையின் மருப்பை ஒடித்து கம்சனுக்கு எதிராக ஆடிய ஆட்டம்.

மல்லாடல்: கண்ணன், வாணன் எனும் அவுணனுடன் மற்போர் செய்து அவனைக் கொன்றதைக் காட்டும் கூத்து.

துடிக் கூத்து: கடலில் ஒளிந்த சூரபத்மனை முருகன் வென்ற பிறகு அக்கடலையே அரங்கமாகக் கொண்டு துடி எனப்படும் உடுக்கைகொட்டி ஆடிய கூத்து.

குடைக் கூத்து: முருகன் அவுணரை வென்று ஆடிய ஆடல். அவுணர் தாம் போர் செய்வதற்கு ஆற்றாது வருத்தமுற்றளவில், முருகன் தன் குடையை முன்னே சாய்க்க, அதுவே ஒரு முக எழினியாக நின்றாடிய கூத்து.

குடக் கூத்து: தன் பேரனாகிய அனுருத்திரனை வாணன் எனும் அவுணன் சிறை வைத்தபோது அவனைச் சிறை மீட்பதற்காக கண்ணன் ஆடிய ஆடல். மண்ணால் அல்லது பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட குடத்தைக் கொண்டு ஆடப்படுவது இது.

பேடி ஆடல்: காமன் தன் மகனான அனுருத்திரனை சிறை வைப்பதற்காக வாணனுடைய சோ எனும் நகரில் தங்கியிருந்து பெண்வேடம் பூண்டு ஆடிய நடனம் இது.

மரக்கால் ஆடல்: மாயோள் ஆகிய கொற்றவை முன் நேராக எதிர்த்துப் போர் செய்ய முடியாது வஞ்சனையால் வெல்லக் கருதி பாம்பு, தேள் முதலியவற்றைப் புகவிட அவற்றைக் கொற்றவை மரக் காலினால் உழக்கி ஆடிய கூத்து இது.

பாவைக்கூத்து: போர் செய்வதற்குப் போர்க்கோலம் கொண்டு வந்த அவுணர், மோகித்து விழுந்து இறக்கும் படி டிருமகள் ஆடிய கூத்து இது.

கடையக் கூத்து: வாணனுடைய சோ எனும் நகரத்தில் வடக்குப் புறத்தில் இருந்த வயலில் இந்திரனுடைய மனைவியான அயிராணி உழத்தி உருவத்தோடு ஆடிய உழத்திக் கூத்து இது.

இக்கூத்துகளின் உட்பொருட்கள் யாவும் தமிழ் மரபு சார்ந்தன அல்ல. சங்க இலக்கியங்களிலே இவை காணப்படவில்லை. அங்கு மக்கள் வாழ்வே கூறப்படுகின்றன. இங்கோ கற்பனையான வடமொழிப் புராண இதிகாசக் கதைகள் வந்துவிட்டன. நுணுகிக் கவனித்தால் இங்கும் எல்லாம் போர் ஆட்டங்கள் தான். ஆனால் போர் புரிவன வடநாட்டுத் தெய்வங்கள்; கொற்றவை, முருகன் எனத் தமிழ்ச் சாயல் பொருந்திய இரண்டு தெய்வங்களைத்தான் இங்கு காணுகிறோம்.

அவுணருக்கு எதிரான போர்

யார் இந்த அவுணர்? அவுணர் என்போர் அரக்கர். அரக்கர் திராவிட இனத்தின் ஒருபிரிவினர் என்ற ஒரு கதையும் உண்டு. அப்படியாயின் வென்ற ஆரியர் தமது வெற்றி புனைய ஆடிய கூத்துகளா இவை என்ற ஐயமும் எழுகிறது. ஆனால் ஆட்டம் தமிழ் மரபில் அமைகிறது. ஒன்று: இது கூத்து என்ற தமிழ்ப்பெயரில் இருக்கிறது. இரண்டு: இவை தமிழர் பண்டைய மரபில் ஆடிய முன் தேர்க் குரவை, பின் தேர்க் குரவைக் கூத்துப் பாணியில் அமைந்துள்ளன; ஆனால் பேர்கள் வேறு. அங்கு மன்னனை மன்னன் வென்று தேர் மீது நின்று ஆடுகிறான். இங்கோ அவுணனை வடநாட்டுத் தெய்வம் வென்று, தேரில் நின்று ஆடுகிறது. தமிழ் ஆடல் மரபில் ஆரியப்பண்பாடு கலந்து விடுவதனை இங்கு காணுகிறோம். கூத்துக்குப் பாவிக்கப்படும் வாத்தியங்களும் கொட்டி எனப்படும் கொட்டும், உடுக்கும் தமிழ்மரபு வாத்தியங்களே. மாதவி ஆடிய நடனத்தில் வரும் வாத்தியக்காரர்கள் வேறு வாத்தியங்கள் பாவிக்கிறார்கள்.

மெல்ல மெல்ல கருவிலும், உருவிலும், இசையிலும் ஆரிய மயத் தாக்கம் கூத்துகளில் புகுந்து விட்டதனையே இச்செய்திகள் காட்டுகின்றன. இந்த தமிழ்-ஆரியக் கலப்பினை சங்ககாலத்தின் பிற்பகுதியில் எழுந்த சங்க இலக்கியங்களிலே காணுகிறோம். ஆரிய முருகனும் தமிழ் வேலனும் இணைந்த கலவைதான் சுப்பிரமணியன் என்ற ஒரு ஆய்வும் உண்டு. திருமுருகாற்றுபடையில் இந்த இணைப்பைக் காணலாம் என்பர். கொற்றவை துர்க்கையாகவும், பின்னர் சக்தியாகவும் மாற்றப்படுகிறாள். ஆரிய – தமிழ் பண்பாட்டுக் கலப்பில் எழுந்த மாற்றங்கள் இவை. நிலங்களுக்குரிய தெய்வங்களைக் கூறும் போது தொல்காப்பியர்,

மாயோன் மேய காடுறை உலகும்
சேயோன் மேய மைவரை உலகும்
வேந்தன் மேய தீம்புனல் உலகும்
வருணன் மேய பெருமணல் உலகும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

என்கிறார்.

வைகுண்டத்தில் வதியும் மாயோனாகிய விஸ்ணுவும், இந்தரலோக அரசானகிய வேந்தனாகிய இந்திரனும், மழைக் கடவுளான வருணனும், இந்த நிலங்களோடு தொடர்புபடுத்தப்படுகிறார்கள். இச்செய்திகளை நாம் சங்க இலக்கியத்தில் காணவில்லை. இவை யாவும் வடநாட்டுக் கலப்பும் ஆரியச் செல்வாக்கும் மெல்ல மெல்ல தமிழகத்தைப் பீடித்த வரலாற்றையே காட்டுகின்றன.

பண்டைத் தமிழ்நாட்டு வேடர் நடத்திய சடங்கு

சிலப்பதிகாரத்தில் வேடர்கள் கொற்றவை போல் தம் பெண்தெய்வத்தை அலங்கரிக்கின்றனர். அந்த அலங்காரம் எமக்கு வியப்பை மாத்திரமல்ல, ஒரு மானிடவியல் உண்மையையும் கூறுகிறது. அந்தக் கொற்றவைக்கு அவர்கள் சிரசில் சந்திரனை அணிவித்திருக்கிறார்கள். அவளது நெற்றியிலே இமைக்காத நெற்றிக் கண்ணை வைத்திருக்கிறார்கள். அவளது கண்டம் கறுத்து இருக்கிறது. அவளுக்கு யானைத் தோலைப் போர்த்தியிருக்கிறார்கள். சிங்கத்தோலை அவளது இடுப்பிலே கட்டியிருக்கிறார்கள். சிலம்பு காலிலே அணிவித்திருக்கிறார்கள். அவள் கையிலே சூலம் கொடுத்திருக்கிறார்கள். அவளை அவர்கள் எருதின் மீது ஏற்றி இருக்கிறார்கள். அவளை அவர்கள் அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி என அழைக்கிறார்கள்.

மதியின் வெண்தோடு சூடும் சென்னி
நுதல் கிழித்துவிழித்த இமையா நாட்டத்து
பவள வாய்ச்சி தவள வாழ் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத் தோழ்
துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி
வளை உடைக் கையில் சூலம் ஏந்தி
அரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய
அரியின் உருவை மேகலையாட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி
வலம் படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை

என அந்த அலங்கரிக்கப்பட பெண் வர்ணிக்கப்படுகிறாள்.

இங்கே நாம் சூலம் தாங்கி நெற்றிக்கண்ணுடன் கரி, உரி போர்த்தி, பாம்பைக் கச்சையாக அணிந்து பிறைச்சந்திரனை உச்சியில் சூடிய ஒரு இளங் குமரியைக் காண்கிறோம். இந்தப் பெண்தெய்வம்தான் அன்றைய தமிழ் மூதாதையரின் தெய்வம் போலும். சிவனுக்குரிய அத்தனை அம்சங்களையும் அவளிடம் காணுகிறோம். ஒருவகையில் அவள் சிவப் பெண் எனலாம். சிவன் பின்னாளில் தமிழரிடையே செல்வாக்கு பெற்ற ஆரியத் தெய்வம் என்பது சிலர் கருத்து. அப்படியாயின் இந்தப் பெண்ணிடம் இருந்த அத்தனை அம்சங்களும் சிவரூபத்தில் இணைக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுவது இயல்பு. இதற்கு முன்னர் சுடலையில் ஆடிய கொற்றவை பற்றிய குறிப்புகள் பல, சங்க இலக்கியத்திலே வருகின்றன. பிணத் தீ வெளிச்சத்தில் சுடலையில் ஆடும் சிவன் பற்றி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்காலம்மையார் பாடுகிறார். பின்னாளில் இந்தச் சிவனே சக்தியைச் சரிபாதி ஆக்கி ஆனந்த நடனம் இடும் சிவனாக மாறி விடுவதனையும் காண்கிறோம். காரைக்காலம்மையார் கண்ட சிவனிலிருந்து, அப்பர் சுவாமிகள் கண்ட சிவன் பெரிதும் மாற்றமுற்று விடுகின்றார்.

குனித்த புருவமும் கொவ்வைசெவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமுமாக, சிவன் மாறிவிடுவதனையும் அதற்குப்பின்னால் ஏராளமான புராணக் கதைகள் இருப்பதனையும் காண்கிறோம். பல்லவர் காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்களுக்கு செழுமைதர எண்ணற்ற வடமொழி புராண இதிகாசக் கதைகள் வந்து விடுகின்றன.

தமிழ்க் கூத்தன் நடராஜரானார்

பழந் தமிழ் மரபுடன் ஆரிய மரபும், வடமொழி புராண இதிகாசக் கதைகளும் கலந்து புதியதோர் தமிழ் மரபு பல்லவர் காலத்தில் உருவாகிவிடுவதனையும் காண்கிறோம். வடமொழி இதிகாச புராணங்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நடராஜன் எனப் புதியதோர் பெயரை, சிவன் ஆடும் நடனம் காரணமாக அவன் பெற்றாலும், கூத்தன் என்ற பெயர் அவனை விட்டுப் போய்விடவில்லை. சிவன் ஆடிய ஆடல்களும் ஆனந்தக் கூத்து, அற்புதக் கூத்து, தில்லைக் கூத்து எனவே அழைக்கப்பட்டன.

மஹாபாரத, இராமாயணக் கதைகள்

மஹாபாரதம் மற்றும் இராமாயணம் இந்துமத நூல்களாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, கண்ணன் பற்றிய கதைகள் மேலெழுந்தன. அவை கூத்துகளுக்குப் கருப்பொருளாயின. பாண்டவர், தேவர்கள், கௌரவர் ஆகியோர் சார்ந்தோர் கூத்துகளின் நாயகர்களாயினர். தமிழர் ஆடலும், நடனம், கூத்து என இரு கிளைப்பட்டு வளர்வதாயிற்று. ஒன்று கோவிலுக்கு உள்ளே நடந்த செந்நெறி ஆடல்; மற்றது கோவிலுக்கு வெளியே நடந்த கூத்து ஆடல். ஒரு சுவையான அவதானம் யாதெனில், கோவிலுக்கு உள்ளே நடந்த ஆடல்களில் சைவம் சார்ந்த கதைகள் முன்னிலை பெற, கோவிலுக்கு வெளியே நடந்த ஆடல்களில் வைஸ்ணவம் சார்ந்த மஹாபாரதம் மற்றும் இராமாயணக் கதைகள் முன்னிலை பெற்றன போலத் தோன்றுகின்றன.

தொடர்ந்து செல்வாக்குப் பெற்ற வடமொழி புராண இதிகாசக் கதைகள்

புராண இதிகாசக் கதைகளை வெகுஜன மயமாக்கும் முயற்சியில் கூத்துகள் முதலில் இடம் பெற்றன போலவும் தெரிகின்றன. இன்றும் மட்டடக்களப்பில் ஆடப்படும் வடமொழி கூத்துகளில் தொண்ணூறு வீதமானவை இராமாயாண, மஹாபாரதக் கதைகளும் அவற்றின் கிளைக் கதைகளுமே. கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து மெல்ல மெல்ல தமிழர் பண்பாட்டுக்குள் புகத் தொடங்கிய ஆரிய அல்லது சமஸ்கிருத தாக்கங்கள், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் அதிகமாக உள்வந்து, கி.பி. 10 ஆம் 11 ஆம் நூற்றாண்டுகளில் சோழர் காலத்தில் நிறுவனமயம் பெற்றது எனலாம். இந்த நிறுவன மயமே மேலும் இறுகி, வடமொழி பண்பாடே தமிழ்ப் பண்பாடு என மயங்கும் நிலயையும் உருவாக்கியது. நாயக்கர் காலத்தில் வடமொழி அரசில் பெரும் இடத்தையும் பெறலாயிற்று.

தமிழ்நாட்டை ஆண்ட மராத்திய மன்னரும் தெலுங்கு மன்னரும் சமஸ்கிருத மொழியையும் பண்பாட்டையுமே முன்னெடுத்தனர். கேரளாவிலிருந்த கதகளியும், கர்நாடக யக்சகானாவும், ஆந்திராவிலிருந்த பாகவத மேளமும், தமிழ் நாட்டுக் கூத்து மரபோடு இணைந்த போது, அது தெருக்கூத்தாக இன்னொரு வடிவம் பெற்றது. அக்கூத்துகளின் உட்பொருள்கள் வடமொழி புராண இதிகாசக் கதைகளேயாகும். தமிழிசை கர்னாடக இசையாகப் பெயர் கொண்டது, தமிழ்ப் பாடல்களின் இடத்தை தெலுங்குப் பாடல்கள் பிடித்துக்கொண்ட காலமும் இதுவே. பின்னாளில் இந்த பண்பாட்டுப் பிடிப்பிலிருந்து தமிழ்ப் பண்பாடும் கலைகளும் விடுபடும் காலமும் உருவாயிற்று. எனினும், இன்றுவரை தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வடமொழிப் புராண இதிகாசக் கதைகளிலிருந்து இன்னும் கூத்து மீளவேயில்லைப் போலத்தான் தெரிகிறது.

அந்த மீளாமரபே ஈழம் வரை போகின்றது. ஈழம் வந்த அக்கூத்து மரபு, தமிழ் நாட்டுத் தெருக்கூத்திலிருந்து மாறி ஈழக்கூத்தாக மாறியமையும், வளர்ந்தமையும் இன்னொரு கதையாகும். தமிழ்நாட்டிலிருந்து ஈழம் வந்த இந்த வடமொழிப் புராண இதிகாசக் கதைகளை உள்ளடக்கமாக கொண்ட கூத்து மரபு, ஈழத்திலிருந்து ஏனைய ஆடல் மரபுகளையும் உள்வாங்கி, ஈழக்கூத்தாக மலர்ந்த விதத்தினை அடுத்துப் பார்ப்போம்.


ஒலிவடிவில் கேட்க

3354 பார்வைகள்

About the Author

சின்னையா மௌனகுரு

சின்னையா மௌனகுரு அவர்கள் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த பேராசிரியர்; அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குநர், நடிகர், கூத்துக் கலைஞர் என்று பல தளங்களில் இன்றும் இயங்கிவருபவர்.ஈழத்து அரங்கத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிலரில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய புகழ்பெற்ற கூத்து நாடகங்கள் மௌனகுருவுக்கு தனியான அடையாளத்தை வழங்கின.

இவர், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் – 1984, சடங்கில் இருந்து நாடகம் வரை – 1985, மௌனகுருவின் மூன்று நாடகங்கள் – 1985, தப்பி வந்த தாடி ஆடு – 1987, பழையதும் புதியதும் நாடகம் அரங்கியல் – 1992, சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் – 1992, சங்காரம் – ஆற்றுகையும் தாக்கமும் (நாடகம்) – 1993, ஈழத்து தமிழ் நாடக அரங்கு – 1993, கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் – நீலாவணன் – 1994, கலை இலக்கிய கட்டுரைகள் – 1997, சக்தி பிறக்குது – நாடகம் – 1997, பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும் – 1997, ஈழத்து நாடக அரங்கு – 2 ஆம் திருத்திய பதிப்பு – 2004, தமிழ்க் கூத்துக்கலை – வடமோடி ஆட்டப் பயிற்சிக்கான கைந்நூல் – 2010, கூத்து யாத்திரை – 2021, கூத்தே உன் பன்மை அழகு – 2021 போன்ற பலநூல்களை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்