யாழ்ப்பாணத்தின் ‘3AxisLabs’ முன்னெடுக்கும் செயற்கை விவேக (Artificial Intelligence) முன்னோடிப் பயணம் 
Arts
10 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தின் ‘3AxisLabs’ முன்னெடுக்கும் செயற்கை விவேக (Artificial Intelligence) முன்னோடிப் பயணம் 

January 8, 2025 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

தமிழில் : த. சிவதாசன்

Source : Jekhan Aruliah, Jaffna’s 3AxisLabs’ journey into Artificial Intelligence, lankabusinessonline.com, Dec.03.2024

“உங்களைக் கொல்லாதுவிடுவது எதுவோ, அதுவே உங்களை மேலும் பலமாக்குகிறது”. செயற்கை விவேகம் இச்சுலோகத்தை எளிதாக உருவாக்கித் தந்திருக்க முடியும். உண்மையில் இச்சுலோகத்தை முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியது 19 ஆம் நூற்றாண்டில் ஜேர்மனியில் வாழ்ந்த தத்துவஞானி நீட்சே. விஞ்ஞானப் புனைவுகளில் மட்டுமே எந்திர மனிதர்கள் அசத்திக்கொண்டிருந்த அபத்தமான கற்பனைக் காலங்களில் புனையப்பட்ட சுலோகம் அது.

இன்று செயற்கை விவேகத்தின் பாய்ச்சல்கள் அசாத்திய நம்பிக்கையையைத் தரும் அதேவேளை அதிதீவிர அச்சத்தையும் தருவதாக இருக்கிறது. ரோபோ இராணுவத்தின் வேகத்தை மீற முடியாதவர்கள், அவற்றின் காலடிகளில் நசுங்கிப்போகவும், அவற்றை தோள்களில் சுமக்கவும் வேண்டி ஏற்படலாம். மாறாக, செயற்கை விவேகத்தின் தோள்களில் நாம் ஏறும்போது நீண்ட தூரம் பார்க்கக்கூடியதாகவும் வேகமாக நடைபோடக்கூடியதாகவும் இருக்கலாம்.

யாழ்ப்பாணத்தின் சாதுரியமான மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான 3AxisLabs, செயற்கை விவேக ‘ரயிலின்’ வருகையை அது புறப்படும்போதே கண்டுகொண்டுவிட்டது. அதனால் அதன் சக்கரங்களின் கீழ் நசிபட்டுப் போகாமல் வண்டியின் மேலேயே ஏறிப் பயணம் செய்யக்கூடியதாக அமைந்துவிட்டது.

பிற முதலீட்டாளர்களின் முதலீடுகள் இல்லாமல் தனது சொந்தப்பணத்தில் இயங்கிய 3AxisLabs நிறுவனம் ஈட்டும் இலாபமே அதன் இயக்கத்துக்கும் அவசியமாகவிருந்த நிலை. தமது செலவுகளைச் சமாளிக்க எந்த வேலைகளையும் எடுத்துச் செய்ய அது தயாராகவிருந்தது. ஒரு நிறுவனத்தை இயக்கப் பணம் தேவை: சம்பளம்; வாடகை; மின்சாரக் கட்டணம்; கருவிகள் எனப் பல. வருமானத்தைத் தேடி ஓடுவதே இயக்குனர்களின் முழுநேர வேலையாகவிருந்தது: வேலைகளைத் தேடிக் கண்டுபிடித்தல்; அவ்வேலைகளைப் பயன்பெறச் செய்தல்; மேலும் வேலைகளைக் கண்டுபிடித்தல் என அவர்களது நாட்கள் தொடர்ந்தன. இச் சுற்றோட்டம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. 3AxisLabs இன் செயற்பாடுகளால் கவரப்பட்ட அமெரிக்காவிலுள்ள ஒரு தமிழர் வட்டி ஏதும் இல்லாது அதற்கு பணத்தைக் கடனாகக் கொடுத்தார். இப்பணத்தைக் கொண்டு அது தனக்கேயுரிய தனித்துவமான ஒரு மென்பொருள் பண்டத்தைத் தயாரித்தது. 3AxisLabs இன் சொத்துரிமையுடன் (Proprietary) இப்பண்டம் உலகெங்கும் விற்பனையாகியது. பணமும் தேடி ஓடிவந்தது.

இணையத்தளங்களை உருவாக்குவதற்குப் பயன்படும் 3AxisLabs இன் இம் மென்பொருள் இத்துறையில் உலக முன்னோடியான ‘WordPress’ இனை விடச் சிறந்தது. ஆனாலும் செயற்கை விவேகம் இத்துறையைத் தகர்த்தெறியப் போகிறது என்பதை உணர்ந்த 3AxisLabs இன் மூன்று இயக்குநர்களும், ஜனவரி 2023 இல் இம்மென்பொருளைக் கைவிட்டுவிட்டு செயற்கை விவேக ரயிலில் ஏறிக்கொண்டார்கள். பலவித சாத்தியங்கள் முன்னுள்ளபோது எத்திசையில் பயணிக்க வேண்டுமென்பதை, பிரசாந்த் சுபேந்திரன், ஜெஸ்ரன் நிரோஜன், சாஹித்யன் விக்னேஸ்வரன் ஆகிய மூன்று இயக்குநர்களும் விரைவில் தீர்மானிக்கத் தள்ளப்பட்டார்கள். இறுதியில் நிரோஜனின் நிபுணத்துமான Mind Maps நோக்கி நகர்வதாக மூவரும் முடிவெடுத்தார்கள். டிசம்பர் 2023 இல் நிரோஜன் அப்பயணத்தை ஆரம்பித்தார்.

நிரோஜன், பல வருடங்களாகவே Mind-Mapping செயற்பாடுகளில் ஈடுபாடுடையவர். பிரித்தானியாவில் பிறந்த கல்வியாளரும் எழுத்தாளருமான ரோணி புசான் என்பவரால் 1970 களில் பிரபலமாக்கப்பட்டதே Mind-Mapping என்னும் செயற்பாடு. எண்ணங்களையும், கேள்விகளையும், அறிவையும் சித்திர வரைபடங்களாக்குவதே இக்கோட்பாடு. மூளை அலசல், திட்டமிடல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடுதல், வடிவமைத்தல், ஆவணப்படுத்தல் போன்றவற்றிற்கு இச்செயற்பாடு பிரயோகிக்கப்படுகிறது. 1970 களுக்கு முன்னர் இவ்வரைபடங்கள் பெரும்பாலும் பென்சிலும் பேப்பரும் கொண்டு கைகளினாலேயே வரையப்பட்டன. தற்போது பல மென்பொருள் செயலிகள் இத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் செயற்கை விவேகத்தை இதில் பயன்படுத்த விளைகின்றனர். 3AxisLabs உம் செயற்கை விவேகத்தைப் பாவித்து தனித்துவமான ஒரு புதிய மென்பொருள் பண்டத்தை உருவாக்குவதில் ஈடுபட்டது. அதன் பயனால் எழுந்ததே Mind Map AI.

இந்த நவீன, இணைக்கப்பட்ட உலகில் சமூக வலைத்தளங்கள் மற்றும் வலைச்சமூகங்கள் என்பன தமக்குள் பரஸ்பர கூட்டுறவுகளை ஏற்படுத்தி வருகின்றன. 2024 ஜனவரியில் நிரோஜன் ஒரு சிறிய முன்மாதிரியை உருவாக்கினார். தொழில்நுட்ப ஆர்வலர் கலந்துரையாடும் REDDIT எனும் இணைய அரட்டை அரங்கத்தில் தனது படைப்பை உயிரோவியங்களாக (Animated GIFS) காட்சிப்படுத்தினார். ஒரு குறிப்பிட்ட விடயத்தில் ஆர்வம் கொண்டவர்களைக் குழுமங்களாகக் கலந்துரையாடவைக்கும் இணையவழிச் செயற்பாடுகளை REDDIT செய்துவருகிறது. பகிடிகளுக்கான குழு (65 மில்லியன் அங்கத்தவர்கள்); கேக் தயாரிப்பு (500 ஆயிரம் அங்கத்தவர்கள்) மற்றும் சில்லறைத் தேவைகளுக்கென சிறு குழுக்கள் என இவ்விணைய மன்றம் வசதிகளைச் செய்து கொடுக்கிறது. இம்மன்றத்தில் கிடைத்த உற்சாகம் மற்றும் ஆலோசனைகளின் காரணமாக நான்கே மாதங்களில் நிரோஜன் தனது இயங்கு மாதிரியை (Working Model) உருவாக்கி விட்டார். ZULIP எனப்படும் இன்னுமொரு கட்டமைக்கப்பட்ட இணைய அரட்டை அரங்கத்தில் நிரோஜன் தனக்கென விசேடமாக அரட்டைக்குழுவொன்றை உருவாக்கினார். ZULIP சற்று தீவிரமானது. “குழுக்கள் தமக்குள் திறம்பட ஒத்துழைப்பதன் மூலம் பல பிரமிக்கத்தக்க சாதனைகளைச் செய்துகொள்ளமுடியும் என்பதற்காகவே நாம் ZULIP இனை உருவாக்கினோம்” என்கிறது அந்நிறுவனம். நிரோஜன் தனது வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ZULIP மூலமாகவே நிறைவேற்றிக்கொள்கிறார். இதன் மூலம் அவர் சமூகம் சார்ந்த அணுகுமுறைகளைக் கையாள முடிகிறது.

அடுத்த மூன்றரை மாதங்களுக்கு நிரோஜன் தனது, அரங்கத் தோழர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி, செயலியை மேலும் மேலும் மெருகூட்டி புதிய ‘பதிப்புகளை’ (Versions) வெளியிடுகிறார். பின்னர், ஏப்ரல் 2024 இல் அவரது படைப்பின் MVP (Minimum Viable Product) வெளியிடப்படுகிறது. இதன் மூலம் அது தேர்ந்தெடுக்கப்பட்ட பாவனையாளரின் கவனத்தை ஈர்க்கும் அதேவேளை அவர்களது கருத்துகளையும் ஈர்த்துக்கொள்ளும். அதில் இருக்கக்கூடிய சிறு தவறுகளை இப்பாவனையாளர்கள் சுட்டிக் காட்டுவார்கள். புதிய உத்திகளும் ஆலோசனைகளும் பரிந்துரைக்கப்படும்.

MVP வெளியீட்டைத் தொடர்ந்து அடுத்த ஒன்றரை மாதங்களில் SEO தரவுகளின்படி மாதமொன்றுக்கு 100 பேர்கள் மட்டுமே இணையத்தளத்திற்கு வந்து போயிருந்தார்கள். திருப்தியற்ற நிரோஜனுக்கு அப்போதுதான் உறைத்தது. செயற்கை விவேகத்தைப் பாவித்து SEO செயற்பாடுகளை முன்னேற்றினார். ஒரு கட்டுரையை எழுதி செயற்கை விவேகத்தின் மூலம் அதைப் பரீட்சித்து அதன் ஆலோசனைகளைக் கணக்கிலெடுத்து அக்கட்டுரையிலுள்ள தலைப்புகளையும், முக்கிய பதங்களையும் மாற்றித் திருத்தி எழுதி மீண்டும் வெளியிட்டார். மீண்டும் மீண்டும் செயற்கை விவேகத்தைப் பாவித்து இத் திருத்தங்களைச் செய்தார். மாதமொன்றுக்கு 1,000 என்றிருந்த பாவனையாளர் வருகை நவம்பர் 2024 இல் நாளொன்றுக்கு 1,000 என முன்னேறியிருந்தது. இவர்களில் 30% ஆனோர் மீள்வருகையினர். நவம்பர் 2024 இல் நான் இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது, ஏப்ரல் 2024 இல் நிரோஜன் இப்படைப்பை வெளியிட்டதிலிருந்து, சுமார் 30,000 பாவனையாளர்கள் அங்கத்தவர்களாகப் பதிவுசெய்திருந்தனர். ஒரு வாரத்தில் 5,000 ஆக உயர்ந்த இந்த எண்ணிக்கை, இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும் தருணத்தில் மேலும் பல மடங்குகளால் உயர்ந்திருக்கலாம்.

Mind Maps பல தேவைகளுக்கும் உகந்தது. இக்கட்டுரைக்காக நான் ஒன்றை முக்கியமானதாக எடுத்தேன்: அது ஒரு வியாபார நிறுவனத்தை ஸ்தாபித்தல்.

ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தலே ஆபத்தானதொரு வியாபாரம். புதிய வியாபாரத்தையோ அல்லது தெரியாதவொரு விடயத்தையோ ஆரம்பிக்கும் பெரும்பாலான தொழில் முனைவோருக்கு மறுமொழிகள் மட்டுமல்ல கேள்விகளும் தெரியாது. மறுமொழிகளை அறிவதற்கு முன் கேள்விகளைத் தெரிந்திருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் என்னிடம் ஆலோசனைகளுக்காக வரும் பலர் கொண்டுவந்த கேள்விகளுக்குக் கிடைக்கும் பதில்களை விட மேலதிகமான கேள்விகளுடன்தான் திரும்புவார்கள். இவற்றில் பல, அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதைவையாக இருக்கும். நான் தேவையற்று பதில்களைப் புகுத்துபவனல்ல. சரியான பதில்களை அவர்களே எட்டாவிட்டால் அவர்கள் எடுத்துக்கொண்ட தொழிலுக்கு அவர்கள் பொருத்தமானவர்களல்ல.

என்னுடைய புதிரான கனவுகளிலொன்று யாழ்ப்பாணத்தில் ஒரு நகைச்சுவை மன்றத்தை (Comedy Club) ஆரம்பிப்பது. இதை எப்படி ஆரம்பிக்கலாம் என நான் Mind Map உடன் ஆலோசித்தேன். இதுதான் அதன் பெறுபேறு:

Mind Map இனை ஒரு தடவை பரீட்சித்துப் பாருங்கள் (https://mindmapai.app/). நான் இதைப் பாவித்தபோது செயற்கை விவேகத்தின் பெறுபேறாக அது வழங்கிய ஆலோசனைகள் என்னை அதிர வைத்தன. நகைச்சுவை மன்றம் பற்றி நான் ChatGPT யிடமும் ஆலோசனை கேட்டிருந்தேன். 431 சொற்களில் அது ஒரு பதிலைத் தந்தது. ஆனால் அதை வாசித்துக் கிரகித்தறிவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. Mind Map தனது ஆலோசனைகளை வரைபடமாகத் தருகிறது. “ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்” என்பார்கள்.

உலகம் மாறி வருகிறது. எண்ணக்கருவிலிருந்து ஒரு செயற்பாடு பூர்த்தியடைவதற்கிடையில் பாதை மிகவும் கரடுமுரடானதாகவே இருக்கவே வாய்ப்பு அதிகம். செயற்கை விவேகம் இப்பாதையை ஓரளவுக்கு சீராக்கி வருகிறது. சில வேளைகளில் அது புதிய பாதைகளையே உருவாக்கித் தருகிறது. கடந்த 100 வருடங்களாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், இயல்பான மனித உடலுழைப்பையும் வழக்கமான நடைமுறைகளையும் தேவையற்றவையாக்கி வருகின்றது. செயற்கை விவேகம் தற்போது பல படிகள் மேலே போய் உயரடுக்கில் உட்கார்ந்திருக்கும் மூளைசாலிகளையே துரத்த ஆரம்பித்துவிட்டது. அது நாடாள்மையாக இருந்தாலும் சரி, பெருவணிகங்களாக இருந்தாலும் சரி, கூடல் முகாம்களாக இருந்தாலும் சரி அல்லது சாதாரண குசினிச் செயற்பாடாக இருந்தாலும் சரி செயற்கை விவேகம் அனைத்திலும் நுழைந்துவிட்டது. அனுபவமே இல்லாத ஒரு வியாபர நிறைவேற்று பணிப்பாளர் தனது முக்கியமான கேள்விகளுக்கான பதில்களை செயற்கை விவேகத்திடமே கேட்டு அறிந்துகொள்ள முடியும். ஒவ்வொருவருடைய அனுபவங்களும் அவரவர் கற்றல், படிப்பினை, சுற்றிவர இருப்பவர்கள் மற்றும் அவரவர் விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தே தான் இருக்கும். ஒவ்வொரு செயற்கை விவேக எந்திரமும் அதனதன் (LLM (Large Language Model), “Black Swan Event” மற்றும் “Human Stupidity Factor”) கட்டமைப்பைப் பொறுத்தே பயன்பாடுடையதாகவிருக்கும். புரிதல் குறைந்தவர்களுடன் அதனால் சம்பாஷிக்க முடியாது. பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கூறியது போல் ”அவரவர் முகங்களில் குத்து வாங்கும்வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டங்களுடன் வந்திருப்பர்”. டைசனின் இந்த வார்த்தைகள் செயற்கை விவேகத்திற்கும் பொருந்தும் என்பதோடு அதுவும் கூட ஒரு நாள் முகத்தில் குத்து வாங்கவும் நேரிடலாம்.

செயற்கை விவேகத்தின் தோள்களில் ஏறவல்ல ஒரு மனிதன் அதற்கு அப்பாலும் விவேகம் இருப்பதை உணரக்கூடும். தற்போது பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டிருக்கும் செயற்கை விவேகத்தின் எல்லைகள் (பென்ரகனும் இலான் மஸ்க்கும் இதைவிடத் துல்லியமானவற்றை வைத்திருக்கவும் கூடும்) வெகுதூரம் செல்லக்கூடியதல்ல. உதாரணத்திற்கு ChatGPT இனைக் கேட்டால் அது தனது பதிவுகளுக்கான மூலத்தரவுகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதைத் தருகின்றது. எனது பரிசோதனைகளின்போது இம்மூலங்கள் ஒன்றோ அல்லது இரண்டோவாக இருந்ததுண்டு. ஒரு ஊடகவியலாளருக்கோ அல்லது ஆய்வாளருக்கோ இத் தரவுகள் திருப்தியாக அமையமாட்டாது.

ஒரு ரோபோவின் தலைக்குமேல் எப்போதும் ஒரு மனிதத் தலை இருக்கவேண்டுமென்ற நிலையில் தான் செயற்கை விவேகம் இருக்கிறது. எதிர்காலம் செழிப்பாக இருக்கவேண்டுமென விரும்புபவர்கள் செயற்கை விவேகப் பாவனையைக் கற்றேயாக வேண்டும். செயற்கை விவேகத்தை உங்கள் கருவிகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தோளில் ஏறி அதன் தலையாக மாறிக்கொள்ளுங்கள்.

இக்கட்டுரை டிசம்பர் 03, 2024 இல் வெளிவந்த லங்கா பிஸினெஸ் ஒன்லைன் பதிப்பில் பிரசுரமானது


ஒலிவடிவில் கேட்க

2860 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்