அறிமுகம்
மக்களின் வாழ்வியல் புலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் நிலத்துக்கே உண்டு. நிலமே பண்பாட்டை, பொருளாதாரத்தை, அரசியலை, கலையை, தத்துவத்தை, சமயத்தை என எல்லாவற்றையும் ஆதியிலிருந்து தீர்மானித்து வந்திருக்கிறது. திணைமரபு எனும் தமிழ் அடையாளம் நிலத்தின் அடையாளமே. நிலத்தோடு ஒட்டிய வாழ்வு பேரியற்கையோடு இயைந்து வாழ்தலாக அமைந்துள்ளது. நிலத்தின் வழியமைந்த தொழில், தொழிலின் தாற்பரியம், இயற்கையை எதிர்கொள்ளல் என்பன இயற்கை அதீதத்தை உணரச் செய்தன. தமக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூரச் செய்தன. இதன் ஊடாக நீத்தார் பெருமை, முன்னோர் வழிபாடு, தெய்வ வழிபாடு போன்றன உருவாயின. தொழில்சார் வாழ்வில் தமக்குதவும் இயற்கையை இயற்கைப் பொருளை முன்னிறுத்திய வழிபாடுகளும் அவற்றின் வழி அதனைத் தெய்வநிலைப்படுத்தலும் தவிர்க்க முடியாத வாழ்வியல் அம்சங்களாயின. குறிப்பன் எனும் தெய்வமும் தொழில்சார் நிலையில் வைத்து நோக்கத்தக்க ஒன்றாகவே காணப்படுகிறது.
குறிப்பன் : பெயர் பற்றிய உரையாடல்கள்
தமிழ் மரபில் குறிப்பன் என்ற சொல்லின் வரலாறு குறித்த எந்தப் பதிவையும் அறியமுடியவில்லை. குறிப்பன் ஈழத்தில் குறிப்பாக பூநகரிப் பிராந்தியத்தில் நிகழ்கின்ற தனித்த சொல் வழக்காக, தெய்வமாகக் காணப்படுகிறது.
(அ) சங்ககால அகநானூறில் “ஓம்பினார் கவர்ந்து கூழ் கெழு குறிம்பில்” (113), “கல்லுடைக் குறும்பின் வயவர்” (31) என்றும்; சீவக சிந்தாமணியில் “கொண்டேரு குறும்பர் வெம்போர்” என்றும் கூறப்பட்டுள்ளது.
(ஆ) குடி என்பது குலம், கோத்திரம் குடும்பம் என்றும், குடியானவன் என்பது மண்ணின் மைந்தன், வேளாண்மை செய்பவன் என்றும் பொருள் சுட்டப்படும். இது குடியானவன், குடியாட்சி, குடியிறை என விரியும். குடும்பு எனும் சொல் குறித்த பிரதேசத்தை – கிராமத்தைக் குறிக்கும். அகரமுதலி குடும்பர் என்பதற்கு ஊர்த்தலைவர் என்பதோடு பள்ளரின் தலைவர் என்றும் பொருள் சுட்டுகிறது. ஆரம்பத்தில் அது ஒரு பதவிப் பெயராகவும் பின்பு சாதிப் பெயராகவும் சாதியின் தலைவரைச் சுட்டும் சொல்லாகவும் மாறியிருக்கலாம் (சரோஜினி குப்புராசு, கி. ஆ., 2001, மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் குலப் பிரிவுகளும் கூட்ட முறைகளும், ப.34).
இவற்றோடு இணைத்தும் தனித்தும் ஆராயத்தக்க சொல் ‘குறிப்பன்’ எனலாம். ஒன்றைச் சுட்டுவது ‘குறிப்பான்’. அது சுருங்கிக் குறிப்பன் என்றாகியிருக்கலாம். குறி எனும் சொல் பெயராகவும் வினையாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. தமிழகராதி அடையாளம், எண்ணம், ஒருவகை சாத்திரம் சொல்லுதல், குணம், குறிப்பு, தோற்றம், நன்னடத்தை, நிமித்தம், பயில், புடைவை, மாடு, முறை எனப் பொருள் சுட்டுகிறது (கதிரைவேற்பிள்ளை, நா., 2003). குறிப்பு – அடையாளம், ஒருமை, கருத்து, பிறந்தநாள் எழுதி வைக்கும் ஓலை, விருப்பம் என்றும்; குறிப்பானவன் – கணிசவான், மதிக்கத்தக்கவன் எனவும்; குறியர் – குள்ளர், குறியானவன் – நிதார்த்தன் என்றும் பொருள் சுட்டப்படுகிறது. ‘குறிப்பன்’ என்பது கிராமிய மொழி வழக்காறாக இருக்கலாம். குறிப்பன் என்பது குறிப்பால் உணர்த்துபவன், அடையாளப்படுத்துபவன், குறித்துச் சொல்பவன் எனும் பொருளை உணர்த்தும் சொல்லாக அமைந்துள்ளது.
குறிப்பன் வழிபாடு
ஈழத்தில் கிளிநொச்சிப் பிராந்தியத்தில் பூநகரி பிரதேசத்தில் காணப்படுகின்ற கிராமியத் தெய்வமாக குறிப்பன் அமைந்துள்ளது. தமிழ்ச்சூழலில் வேறெங்கும் இவ்வழிபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. இந்தத் தெய்வம் பற்றிய அறிமுகத்தை பரமன் கிராய் வில்லடி ஐயனார் கோயில் பூசாரியும், வெட்டுக்காடு பெரும்படை பூசாரியும் ஏற்படுத்தியிருந்தாலும் அதனை ஆய்வு நிலைப்படுத்த உதவியவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் சிரஞ்சன். அவரின் துணையோடும் ஆய்வு ஆர்வலர்கள் கோ. விஜிகரன், சு. தாரங்கன் ஆகியோருடனும் இவ்வாய்வினை மேற்கொண்டோம்.
கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது ஆடு, மாடு தொலைந்தால் துவரந்தடியை வெட்டிவைத்து வழிபடுவர் அல்லது கிடைக்கும் வைரமான தடியை வெட்டிவைத்து வழிபடுவர். அத்தெய்வம் கருணை கொண்டு தொலைந்த ஆடு, மாட்டைக் கூட்டி வரும் அல்லது அவை நிற்கும் இடத்தைக் குறிப்பால் உணர்த்தும் என்றும் நம்பப்படுகிறது. இதன்வழி அந்தத் தடியை (பொல்லை) குறிப்பன் எனும் தெய்வமாகக் கருதி பூசை செய்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர் அல்லது கால்நடையை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்பவர் கையில் தடி, குறிப்பாக துவரந்தடி வைத்திருப்பதுண்டு. அதனைக் கொண்டே பட்டியை அல்லது மந்தையை வழிப்படுத்திச் செல்வதும், விலகிச் செல்லும் கால்நடையை வழிப்படுத்துவதும், துரத்தி அழைத்து வருவதும், பகை விலங்குகளை விரட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடகப் பிரதேசத்திலிருந்து கால்நடைக்கான புல்வெளிகளைத் தேடித் தேடி தமிழகத்தையும் ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களையும் வந்தடைந்த பழங்குடிகளாக ‘குறுமன்ஸ்’ இனக்குழுவினர் கருதப்படுகின்றனர். இவர்கள் குறுமன் (தமிழ்நாடு), குருபர் (கர்நாடகா), குருபா (ஆந்திரா), குருமா (தெலுங்கானா) எனப் பலவாறு சுட்டப்படுகின்றனர். இவர்கள் கால்நடை மேய்ச்சல் தொழிலை அடிப்படையாகக் கொண்ட இனக்குழுவினராவார் (சந்திரசேகர், சி. 2021, அரண் ஆய்விதழ்). இயற்கை நெறிக்காலத்தில் – அதியமான் காலத்தில் குறும்பு எனும் கால்நடை அரண்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை ‘ஸ்டுவர்ட்’ எனும் ஆய்வாளர் “இந்த இனக்குழுவினர் ‘குறி’ எனும் ஆடுகளை மேய்த்ததால் குறும்பர் எனப்பட்டனர்” எனச் சுட்டுகின்றமை இணைத்து நோக்கத்தக்கது. ஆடுகளின் மேய்ப்பை அல்லது கால்நடை வளர்ப்பவர்களின் தலைவன் – முன்னோர் வழிபாட்டின் வழி ‘குறிப்பன்’ எனும் தெய்வமாகியிருக்கலாம். இதனை இன்னும் வலுப்படுத்துவது குறும்பர் இனக்குழுவின் வாழ்க்கை முறை என்பதோடு கால்நடை வளர்ப்பு, மேட்டுநில விவசாயம் என்பன குறிப்பனை வழிபடும் மக்களிடமும் காணப்படுகிறது.
நிலவுற்பத்திச் சமுதாயத்தின் வழி உருவான நிலவுடமை அல்லது நிலப்பிரபுத்துவம் விவசாய உற்பத்தி உறவுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. பெருநிலத்தை உடையவர் நிலக்கிழாராக, அதிகாரமுடையவராக, உழுவித்து உண்பவராக உயர்ந்தார். சிறு நிலமுடையவர் அல்லது நிலமற்ற விவசாயக் குடிகள் உழுது உண்போராக மாறினர். வர்க்க முரண் இதன் வழி உருவாயிற்று. அது சாதியாக, உயர்வு தாழ்வாக மாறிற்று. உழுவித்து உண்பவர் பெருங்குடி வேளாளராகவும் உழுது உண்பவர், கூலிகள் என்போர் சிறுகுடி வேளாளராகவும் மாறினர். அவர்கள் ஆரம்பத்தில் மள்ளர் என்றும் பின்பு பள்ளர் என்றும் சுட்டப்பட்டனர். இவர்கள் வேளாளரின் நிலங்களை உழுது விதைப்பவர்களாகவும் கால்நடைகளை மேய்ப்பவர்களாகவும் மாறினர்.
பூநகரியின் எல்லைக்கிராமங்களில் மேட்டுநில மேய்ச்சல் நிலங்கள் இருப்பதும்; கால்நடை வளர்ப்பும், வயல்களை விளைவிப்பதும் குறிப்பனை வழிபடும் மக்களின் தொழில்துறைகளாக இருப்பதும் குறும்பர் (குறுமன்ஸ்) இனக்குழுவினரை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தினர் தம்மை தேவேந்திர குலம் என்று சுட்டுவர். அவர்களுள் பல்வேறு உட்பிரிவுகள் (குலங்கள்) காணப்படுகின்றன. தமிழக அரசு வெளியிட்ட அட்டவணைச் சாதியினர் பட்டியலில் இவர்கள் பள்ளன், தேவேந்திர குலத்தார், கடைஞன், களவாடி, குடும்பன், பண்ணாடி எனும் ஆறு பிரிவினராகச் சுட்டப்படுகின்றனர் (பரமேஸ்வரி, சி., 2000, தேவேந்திர குல வேளாளர் வரலாறும் சமூக அரசியல் எழுச்சியும், 40 – 52). இவை மேலும் ஏறத்தாழ நூற்றிமுப்பது பிரிவுகளை உடையன.
இதில் குடும்பன் எனும் சொல் சிறுகுடி வேளாளரின் தலைவனைக் குறிப்பதாகவே சொல்லப்படுகிறது. குடும்பத்துக்குத் தலைவன் தகப்பன் என்பதன் வழி இச்சொல் உருவாகி இருக்கலாம் எனச் சில ஆய்வாளர் சுட்டுவர் (சரோஜினி, குப்புராசு, கி. ஆ., 2001, மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் குலப் பிரிவுகளும் கூட்ட முறைகளும், ப. 34). குடும்பம் என்பது மருதநில மக்களின் வழி உருவான பண்பாட்டு அடையாளம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆக, குறும்பர், குடும்பர் எனும் இரு இனங்களும் விவசாயக் குடிகள். கர்நாடக ‘குறி’ மேய்ப்பவர்கள் தமிழ்நாடு, கேரளா ஊடாகக் கடல்நீரேரி வழி பூநகரியில் குடியேறி இருக்கலாம் என்பதும், பெருங்கற்காலப் பண்பாட்டை உடைய தொல்நகரம் பூநகரி என்பதும் இங்கு கவனத்திற்குரியதாகும். ஆயினும் குறிப்பன் எனும் தெய்வம் ஈழத்துக்கே – பூநகரிக்கே உரிய தனித்த பண்பாட்டு வெளிப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் குறிப்பன் கோயில்கள்
ஈழத்துப் புலத்தில் பூநகரியில் மட்டுமே குறிப்பன் கோயில்கள் காணப்படுகின்றன. பூநகரியில் குறிப்பனுக்கான தனித்த கோயில், பரமன்கிராய் வில்லடி கிழக்கில் வயலின் நடுவே காணப்படுகிறது. குறிப்பனுக்கான தனித்த வேறு கோயில்கள் இருப்பதாக அறிய முடியவில்லை. இந்தக் கோயிலின் உரிமையாளராகவும் பூசாரியாகவும் விளங்குபவர் திரு. இராமலிங்கம் குணரத்தினம் ஆவார்.
இதனை விட பரமன் கிராமம் வில்லடி மேற்கு ஐயனார், வண்ணக்கம் வெளி வீரபத்திரர், காவாக்குளம் நரசிம்ம வைரவர், தம்பிராய் ஊத்தக்குடியன் வைரவர், வில்லடி தெற்கு வைரவர், உப்பிளவான் வைரவர், செல்லையாத்தீவுக்கு அண்மையிலுள்ள ஐயனார், சங்குப்பிட்டி ஐயனார் முதலான கோயில்களில் பரிக்கலமாக – பரிவார தெய்வமாக குறிப்பன் காணப்படுகிறது. இக்கோயில்களில் காணப்பட்ட பொது அம்சங்கள் சிலவற்றை அவதானிக்க முடிந்தது.
- குறிப்பனின் தனிக்கோயிலாயினும், குறிப்பன் பரிவாரமாக அமர்ந்திருக்கும் கோயிலாயினும் அவை இயற்கையான வயல்வெளிச் சூழலில் மேட்டு நிலத்தில் அமைந்துள்ளன.
- இவை யாவும் பூசாரிகளால் பூஜை செய்யப்படுகின்றன.
- பரம்பரை பரம்பரையாக வழிபடுகின்றோம் என்ற உரையாடலுக்கு மேல், இக்கோயில்கள் பற்றிய தெய்வம் பற்றிய கதையாடல் வேறு எதனையும் அறிய முடியவில்லை.
- குறிப்பனுக்கான தனித்த புராணக்கதைகளையோ, இலக்கிய, தொல்லியல் சான்றுகளையோ அறியமுடியவில்லை.
- சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தின் வழிபடு தெய்வமாகவே இது அறியப்படுகின்றது.
- குறிப்பனுக்கு உருவமில்லை. குறி வழிபாடே காணப்படுகிறது.
கோயில் அமைப்பும் குறிப்பன் குறி வழிபாடும்
வீரை, கூழா மரங்களின் கீழ் பிரம்பு (தடி) வைத்து வழிபடும் மரபே தொன்மை முறையாகக் காணப்பட்டுள்ளது. மரத்தாலான தடியானது மழை, வெயில், காற்று என்பவற்றால் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதடைவதனால் வெள்ளைக் கல் (சுண்ணாக்கல்) வைத்து குறிப்பனை வழிபடும் மரபு வளர்ச்சி பெற்றது. தற்போது சூலமும் அருகே வைக்கப்படுகின்றது.
இன்றும் பெரும்பாலான கோயில்கள் மரத்தடிக் கோயில்களாகவே காணப்படுகின்றன. சில கோயில்களில் மரத்தடியில் சீமெந்துத் தளம் இடப்பட்டு தடியும், கல்லும் வைத்து திறந்த வெளி வழிபாடே நடத்தப்படுகின்றன. ஓரிரு கோயில்களில் பரிவாரமாக மூன்றுக்கு மூன்று அளவில் சீமெந்துக் கட்டடம் கட்டப்பட்டு கூரையிடப்பட்டுள்ளது. பரமன் கிராய் வில்லடி கிழக்கு குறிப்பன் கோயில் கருவறை, முன் மண்டபம் என்பன உடையதாகவும், அண்ணளவாக பதினைந்துக்கு பத்து அளவு கொண்டதாகவும் சீமெந்துக் கட்டடமும், ஓட்டுக்கூரையும் உடையதாகவும் உள்ளது. விசேட தினங்களில் தென்னை ஓலைகளில் சிறு முன் மண்டபம் ஒன்று இணைத்து உருவாக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் பரிவார தெய்வமாக ஐயனார் வீற்றிருக்கின்றார்.
குறிப்பனை பரிவார தெய்வமாக உடைய பெரும்பாலான கோயில்கள் பெருங்குடி வேளாளருடையது என்பதும், ஐயனார் அவர்களின் தெய்வமாக பூநகரியில் கருதப்படுவதும், சிறுகுடி வேளாளரின் குறிப்பன் கோயிலில் ஐயனாருக்குத் தனி இடம் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சாதியம் கருதாத, சமதையான, ஒருவரை ஒருவர் மதித்து மரியாதை செய்யும் செயற்பாடாக இதனைக் கருதலாம்.
வழிபாட்டு முறைகள்
குறிப்பன் தெய்வத்திற்கு வாரமொருமுறை விளக்கு வைக்கும் முறைமை காணப்படுகின்றது. பரமன்கிராய் வில்லடி குறிப்பன் கோயில் தனக்கான தனித்துவமான முறைமைகளை பின்பற்றி வருவதை உரிமையாளரும், பூசாரியுமான இ. குணரத்தினம் உறுதிப்படுத்தினார். வைகாசி விசாகத்துக்கு பின்பு இங்கு பொங்கல் நிகழ்த்தப்படுகிறது. இதை விட கார்த்திகை தீபம், சித்திரை வருடப் பிறப்பு போன்ற சில விசேட தினங்களிலும் மடை வைக்கும் மரபு காணப்படுகின்றது. பழைய காலத்தில் தடியும் பின்பு வெள்ளைக்கல்லும் வைத்து கூழா மரத்தடியில் வழிபடப்பட்டது. இன்று கூழா மரமில்லை. 2017 இல் ஆலயம் இன்றைய நிலைக்குரியதாக்கப்பட்டு கருங்கல் விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு முதல் நாள் வெற்றிலை மடை வைக்கப்படும். அதில் குறிப்பன் தெய்வம் பூசாரி மீது வந்திறங்கி கலையாடிக் குறி சொல்லும். பூசைமுறை உள்ளிட்ட விடயங்களை அது கூறும் என்றும் அதன்படியே பூஜை நிகழ்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது. பூசைக் காலத்தில் பூசாரி மீது தெய்வமிறங்காத விடத்து,
“மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ,
மறைநான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ,
மண்டலமிரண்டேழு நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ,
பிறவும் நீ, யொருவ நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ,
பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ,
போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ,
இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்..?
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!”
எனும் ‘நடராஜர் பத்து’ பாடலைப் பாடி உருவேற்றுதல் முறை காணப்படுகின்றது. இது ஒரு வகையில் மேனிலையாக்கமாகின்றது.
வெற்றிலை மடை வைத்த அடுத்த நாள் தண்டல் நடைபெறும். பொருள், காசு பெறல் என அத்தண்டல் அமையும். இதில் சாதியமற்ற நிலை காணப்படுகின்றது. மதியம் அன்னதானம் நடைபெறும். இரவே பொங்கல் நிகழ்வு இடம்பெறும். ஆலயத்தில் இருந்து அண்ணளவாக முப்பதடி தூரத்தில் உள்ள பாலை மரத்தின் கீழ் வைத்தே வளுந்து எடுக்கப்படும். வளுந்து எடுக்கும் போது பாலை மரத்தைச் சுற்றி ஐந்தடியளவில் விட்டு பனையோலையில் மறைப்புக் கட்டப்பட்டிருக்கும். அங்கிருந்து வளுந்து எடுக்கப்பட்டு பொங்கல் நிகழ்த்தப்படும். பின் மடை போடப்படும். மடையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள் பொங்கலோடு வடை, மோதகம், முறுக்கு, பால்ரொட்டி போன்ற பலகாரங்கள் பலவும் படைக்கப்படும். பூசாரி மந்திரம் இன்றி பூசை நிகழ்த்துவார். பூஜை நிறைவில் தெய்வமாடிக் குறி சொல்லுவார். இக்கோயில்களில் பலியிடல் இடம்பெறுவதில்லை.
வன்னி இடப்பெயர்வுக்கு முற்பட்ட காலத்தில் பூசாரிக்கு அணிகலன்கள் இருந்துள்ளது. ‘கவுண்’ போன்ற ஆடையை உடுத்து, கை கால்களில் அவற்றோடு ஒட்டிய வெள்ளிச் சதங்கைகள் அணிந்து, நெற்றியில் வெள்ளிப் பட்டமும், மார்பில் வெள்ளியாபரணமும் போட்டிருப்பார். இவ்வழக்கம் இன்று இவ்வாலயத்தில் அற்றுப் போய்விட்டது. பெருங்காடு பெரும்படைக் கோயில்களில் இன்றும் இதனை ஒத்த அணிகலன்கள் உண்டு.
குறிப்பன் ஆலய மடை பரவலில் உள்ள விசேடம் ‘அபின்’ படைத்தல் ஆகும். அதனை பூசாரி மட்டுமே தன் பங்காகப் பெற முடியும். இது மட்டக்களப்புத் தேசத்தில் வைரவருக்கு அபின் ரொட்டி படைக்கும் மரபோடு ஒப்பிடத்தக்கதாகும். பொங்கல் பூசை முடிவடைந்து மறுநாள் காலையில் வழி வெட்டப்பட்டு பூசை நிறைவுறும். எட்டாம் நாள் (எட்டாம்மடை) காய்மடை, பூமடை என்பன படைக்கப்பட்டு பூசை நிகழ்த்தப்படுவதோடு பொங்கல் விழா நிறைவுபெறும்.
இப்போது பூசாரியாக உள்ள குணரத்தினத்தின் தந்தை இராமலிங்கமே முன்பு பூசாரியாக இருந்தவர். அவரின் இறப்பின் பின்பு கிராஞ்சி இளந்தாரி கோயில் பூசாரி செல்வரத்தினம் பூசாரியாக இருந்து வந்துள்ளார். அவர் ஆலய வழக்காறுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டதும், வெற்றிலை மடைக்கு வர முடியாமற் போனதும், அவரது மரணமும் குறிப்பன் வழிபாட்டின் வீரியத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகின்றது.
எண்பதுகளின் பிற்பகுதி வரை பெண்கள் இந்த ஆலயத்திற்கு வருவதில்லை. இங்கு பொங்கல் விழா நிறைவுற்றதன் பின் அடுத்த நாள் பூநகரி மட்டுவிலில் உள்ள நாச்சிமார் கோயிலில் குடும்பமாகச் சென்று பொங்கலும் பலகாரமும் மடையிடும் வழக்கமே இருந்துள்ளது. இம்மரபை அக்கோயில் பூசாரி மாற்றியதும், நாச்சிமாருக்கு பொங்கிய பின் குறிப்பனுக்கு பொங்க வேண்டும் என்றதும் இரு பிராந்தியத்தவர்களிடமும் முரணை ஏற்படுத்தியது. அதனால் அன்றிலிருந்து குறிப்பன் ஆலயத்தவர் நாச்சிமாருக்கோ, அவர்கள் குறிப்பன் கோயிலுக்கோ வருவதில்லை. இது புதிய மரபொன்றை உருவாக்கியது.
1990 இல் குறிப்பன் கனவில் உணர்த்தியதன் படி ஆலயத்திற்கு கடா ஆடு ஒன்று நேர்ந்து விடப்படும். அதன் பின் பெண்கள், ஆலயத்துக்கு வருபவர் ஆகியோர் பொங்கல் விழாவில் ஈடுபடுவர். அதேவேளை நேர்ந்து விடப்பட்ட ஆடு ஒரு வருடத்துள் இறந்து விடுவதாக இ. குணரத்தினம் பூசாரி குறிப்பிடுகின்றார். குறிப்பன் கோயில் பூசாரிக்கே குறிப்பன், ஐயனார் கலைகள் வருகின்றன. அதேவேளை ‘கந்தசாமி பெஞ்சாதி’ என்கின்ற பெண்மணியே நாச்சிமார் கலையாடியாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. பூசாரி கட்டுச் சொல்லுதலும், செய்வினை எடுத்தல் முதலானவையும் நடைபெற்று வருகின்றன.
பூசாரி கலையாடும் போது கையில் தேவையின் பொருட்டு பொல்லு (முன்பு தடி இப்போது இரும்பு) ஏந்தி நின்று கலையாடுவார். இது குறிப்பன் தெய்வத்தின் அடையாளமாகும். அதேவேளை இதே சிறுகுடி வேளாளரின் இன்னொரு குல தெய்வமான அண்ணமாரின் குறியீடாகவும் பிரம்பு எனும் பொருளே விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பன் வழிபாடு, அண்ணமார் வழிபாடு என்பன ஒத்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
அண்ணமார் தெய்வம், பொல்லுக்கிழவன், சிவகுடும்பன் என அழைக்கப்படுவதும் (சண்முகலிங்கன், 2014, இலங்கை – இந்திய மானிடவியல்: 27), பூநகரியில் அண்ணமார் உள்ள இடத்தில் குறிப்பன் இல்லாதிருப்பதும் குறிப்பன் உள்ளவிடத்தில் அண்ணமார் இல்லாதிருப்பதும் சுட்டத்தக்கது. இது சாதிய உட்பிரிவு சார்ந்த விடயமாகவும் இருக்கலாம்.
நெல் விதைப்பில் இருந்து வெட்டுக் காலம் வரையும் நேர்த்தி வைக்கப்பட்டு நெல்லில் ஒரு பங்கு வழங்குதலோ, அல்லது புது நெல்லில் பொங்குதலோ குறிப்பன் வழிபாட்டில் இன்றும் காணப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். மேலும் கால்நடைகள் நோயுற்றாலோ, தொலைந்தாலோ, பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டாலோ அதனை நிவர்த்திக்குமாறு வேண்டி நேர்த்தி வைத்துப் பொங்குதல், காணிக்கை செலுத்துதல் போன்ற பல முறைகளும் காணப்படுகின்றன.
குறிப்பன் பரிவாரமாக இருக்கும் ஆலயங்களில், பொங்கல் காலங்களில் அவ்வாலய முறைப்படி வளுந்து எடுக்கப்படும் போது குறிப்பனுக்குரிய வளுந்து எடுக்கும் உரிமை இச்சிறுகுடி வேளாளருக்கே வழங்கப்பட்டு வந்துள்ளமை குடிமை முறையின் உரிமை சார் பண்பாக நோக்குதற்குரியதாகும்.
முடிவுரை
குறிப்பன் வழிபாடு இன்றுவரை காணப்பட்டு வரினும், அது குறித்த சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு குறித்த பூநகரிப் பிராந்தியத்தில் மட்டும் குறுகிப் போயுள்ளதாயினும், அது இத்தொல்நகரின் பாரம்பரியத்தின் வெளிப்பாடாக உள்ளது என்பது நோக்கற்பாலது. கால்நடையோடு தொடர்புடைய இவ்வழிபாடு விவசாய உழுதுண்ணும் சமூகத்தின் தொழில்சார் வழிபாட்டு முறைமையாக இருக்கலாம். வேளாண்குடி சமூகத்தவர் யாவரும் வணங்கும் தெய்வமாக, நம்பிக்கைக்குரிய வழிபாடாக இது காணப்படுகின்றது. பெருங்குடி வேளாளர் தமது வழிபாட்டு நிலத்தில் குறிப்பனுக்கு தனியிடம் வழங்கியதோடு அதற்கான வளந்துரிமையை சிறுகுடி வேளாளருக்கே வழங்கி உள்ளமை இதனை உறுதிப்படுத்துகின்றது. இத்தெய்வம் கால்நடை மேய்ப்பாளரின் தடியை, ஆட்டைக் குறிப்பால் உணர்த்துகின்ற (மலையக ரோதை முனி போல) தொழிற் கருவி சார்ந்த வழிபாட்டை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழினும் இன்று உயர் குடியினர் தத்தம் ஆலயங்களில் தாமே வளந்தெடுத்துப் பொங்கும்முறை காணப்படுகின்றது. சில ஆலயங்களில் வளந்துப் பொருட்களையோ, காசையோ பெற்றுத் தாமே பொங்கிப் படைத்துவிட்டு சிறுகுடி வேளாளரிடம் வழங்கும் முறைமை காணப்படுகின்றது. சாதிய ஒடுக்குமுறை மற்றும் சாதிய நீக்கத்தின் வழி இன்று குறிப்பன் செல்வாக்கிழந்து வரும் தெய்வமாகவே உள்ளது. அது நிலப் பண்பாட்டோடு இணைந்த பொருளாதார வாழ்வின் அடையாளம் என்பதை நாம் மறந்து போகக்கூடாது. இன்றும் மேனிலையாக்கத்துக்கு பெரிதும் உள்ளாகாத நிலவியலோடு இணைந்த இயற்கைசார் தெய்வ வழிபாடாக இது திகழ்கின்றது.