இலங்கை : இனத்துவ ஆட்சிக்குத் திரும்புதல் - பகுதி 2
Arts
18 நிமிட வாசிப்பு

இலங்கை : இனத்துவ ஆட்சிக்குத் திரும்புதல் – பகுதி 2

January 10, 2025 | Ezhuna

ஈழத்தில் ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்த போர், அதன் இறுதி இனப்படுகொலையுடன் மட்டுமே முடிந்துவிடவில்லை; மாறாக, போரின் பின்னரான ஈழச் சூழலில், அதன் பின்னடைவுகளும் அடிப்படைச் சிக்கல்களும் இன்னும் பல கோணங்களில் மேற்கிளம்பவே செய்கின்றன. இந்தப் பின்னணியில், போரின் பின்னரான ஈழத்து நிலவரம் குறித்து அலசுவதற்கு புதிய வெளிகள் தேவைப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகள், கள ஆய்வுகள் ஊடான தரவுகளுடன் போருக்குப் பிந்தைய ஈழச் சூழல் குறித்த விவரங்களையும் அதன் நீண்டகால விளைவுகளையும் விவாதிக்க கூடிய சிறந்த தளமாக இருக்கின்றன. ஆனால், அவை துரதிஷ்டவசமாக வெகுஜனத் தளத்தில் அதிகமாகக் கவனம் பெறவில்லை. அந்த வகையில், ஈழத்தின் பின் – போர்க்காலச் சூழல் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளிவருவதாக ‘பின் – போர்க்கால ஆய்வுகள்’ எனும் இத் தொடர் அமைகிறது.

ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta)

Source – Sri Lanka : The Return to Ethnocracy, Journal of Democracy, Vol. 32, No. 1, January 2021, pp. 96–110.

இனத்துவ ஆட்சியை ஒன்றுதிரட்டுதல்

இனத்துவ ஆட்சி என்பது தாரளமற்றதுதான். உள்ளாழத்தில் அது பன்முகத்தன்மை என்பதை நீக்கிவிடுகிறது. ஆனால் இனத்துவ ஆட்சி கொடுங்கோன்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை (An ethnocracy is illiberal because at base it eschews pluralism, but an ethnocracy need not be despotic). நீண்ட காலமாக இருந்து கொண்டிருக்கும் சிங்கள பௌத்தர்களின் அதி உன்னத நிலையும் சிறுபான்மையினரின் ஒடுக்கப்பட்ட நிலையும் இலங்கையில் இருந்துகொண்டேதான் இருந்தது. இவ்வளவு தேர்தலும் போட்டிகளும் கட்சி மாறல்களும் நடந்தும்கூட இந்தநிலை தொடர்ந்தது. இந்தத் தீவில் நடந்த கடந்த இண்டு தேர்தல்களும் இராணுவ மயமாக்கப்பட்ட இனத்துவ கொடுங்கோன்மை ஆட்சியை நோக்கி நகர்ந்ததாகவுமே தோன்றுகிறது. 

மதச்சார்பின்மையும் பன்முகத்தன்மையும் மேற்கத்திய கருத்தாக்கங்கள் என்பதும் அவை இந்த நாட்டின் பௌத்த மேலாண்மையை மலினப்படுத்திவிடும் என்பதும் சிங்கள பௌத்த தேசியவாதிகளின் கருத்தியலாக இருக்கிறது. இலங்கையில் இருக்கும் சிறுபான்மையினர் சிங்கள பௌத்த பெரும்பான்மையினருக்கு துன்பநிலை ஏற்படக் காரணமாகிறார்கள் என்பதாகவும் அந்தக் கருத்தியல் தொடர்கிறது. தேசியவாதிகள், நாடு சிங்கள பக்தர்களால் ஒரே நாடாக ஆளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். கோத்தபாய ராஜபக்ச புது அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு நாடு ஒரே சட்டம் என்ற வகையில், அவர்கள் கருத்தியலுக்கு பலம் சேர்க்கும் வகையில் உருவாக்கி அறிமுகப்படுத்தினார். அப்படி அறிமுகப்படுத்தப்பட்ட அந்த அரசியல் அமைப்பு, நிறைவேற்று அதிகாரங்களை மேலும் அதிகமாக்கி அதன் வழியாக ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் பரம்பரைத் தன்மையை நிலைநிறுத்தச் செய்வதாகவும் இருக்கிறது.

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற முழக்கம் சிறுபான்மைகளைக் குறி வைத்ததாகவே இருந்தது. குறிப்பாக முஸ்லிம்களின் திருமண, மணமுறிவுச் சட்டங்களில் அது கை வைக்க எண்ணியது. கால்நடைகளை மத நோக்கத்துக்காகப் பலியிடுவதிலும் அது கை வைத்தது. பௌத்த கடும்போக்குவாதிகள் மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்தார்கள். இந்த விடயம், இந்துக்கள் பௌத்தர்களுடன் ஒன்று சேர்ந்து ஒருமித்த கருத்து உடையவர்களாக இருக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியது. இந்தத் தடை முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியாகவும் பாதித்தது. அவர்களில் பெரும்பாலோர் மாட்டுக்கறி வணிகத்தோடு தொடர்புடையவர்கள். மாட்டுக்கறி மீதான தடை என்பது, பெரும்போக்கான வகையில் இந்திய- இந்துத்துவ தேசியவாதிகளின் தற்போதைய அரசியலின் வெளிப்பாடு ஆகவும் இருக்கிறது. அப்படியானால் மாட்டுக்கறி மீதான தடை, இந்தியாவின் டெல்லியில் இருக்கும் அரசியல் தலைகளிடம் இலங்கையை நோக்கி நல்லெண்ணத்தை உருவாக்கிவிடுமா என்ன? அப்படி ஒருவேளை நடந்து விடுமாயின் அதை வைத்துக்கொண்டு தேசியவாதிகளின் இலக்கான நீண்டகால இலக்கு ஒன்றை நிறைவேற்றிவிடலாம் என நினைத்தனர்.  1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஒன்பது மாகாண சபைகளையும் கலைப்பது என்ற கனவை ராஜபக்சவுக்கு அது எளிதாக்கலாம்.

வடக்கு – கிழக்கில் பௌத்தர்கள் குடிப்பரம்பலில் சிறுபான்மையாக இருக்கும் நிலையைத் தேசியவாதிகள் விரும்பவில்லை. அதை மாற்றுவதற்கு ஒரு வழியாகவே அவர்கள் மாகாண சபைகளைக் களையெடுத்து அதிகாரங்களை இல்லாமல் செய்து வேறு வகையான அரசுக் கட்டமைப்புகளை உருவாக்க முனைகின்றனர். அவற்றின் வழியாக சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்குமாறு பிரதேசங்கள் மாற்றி வகுக்கப்பட வேண்டும் என்பதும் அவர்கள் அவா. 6 விழுக்காடு தமிழ் மக்களைக் கொண்ட இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் அரசுகளை, மாகாண சபைகளைச் செயற்படுத்த வேண்டும்; அதன் வழியாக, அதிகாரப் பகிர்வுகளைச் செய்து, இலங்கைத் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லிவருகிறது. மாகாண சபைகள் குறிப்பிட்ட அளவிலாவது சிறுபான்மையினரின் பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கிறது. அதை பௌத்த தேசியவாதிகள் விரும்பவில்லை. தேசியவாதிகள் சீனாவின் ஈடுபாடு இலங்கையில் அதிகரிப்பதைக் கருத்தில் கொள்கிறார்கள். அதனால் புதுடெல்லி இலங்கையை தனது பக்கத்தில் வைக்க விரும்பும் என்பதால், நாடு முழுவதும் மாகாண சபைகளைக் கலைத்துவிட்டு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த இந்தத் தீவில் உரிய சூழல் உருவாக வேண்டும் எனக் கருதுகிறார்கள்.

இராணுவத்தினர் போர்க் கதாநாயகர்களாகப் பார்க்கப்படுகின்றனர். பெரும்பான்மையான சிங்களவர்கள் வேலைக்கான வழியாக இராணுவத்தில் சேர்வதில் ஆர்வங்காட்டுகின்றனர். இந்நிலையில், இலங்கை இராணுவ மயமாகிறது என்பதும் மிக மென்நோக்குடனேயே அணுகப்படுகிறது. பெரிய அளவிலான படையணிகளைத் தேசியவாதிகள் விரும்புகிறார்கள்; படையினரும் அவர்களுடைய குடும்பங்களும் அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் வடக்கு – கிழக்கிலேயே படைமுகாம்களை அண்டியுள்ள பகுதிகளில் தங்கி, அங்கேயே சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி விடலாம். கனவுச் சிங்களக் குடியேற்றங்கள்தான் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில், தமிழ்த் தனிநாட்டுக் கோரிக்கைக்கு வித்திட்டது. ஜனாதிபதியானதன் பிறகு கோத்தபாய ஏற்படுத்திய கொள்கைகள், அமைப்புகளினால், இந்தப் பகுதிகளில் (வடக்கு – கிழக்கில்) இருக்கும் தமிழர்களும் முஸ்லிம்களும் கவலையுடன் கருத்தில்கொள்ளப்பட வேண்டியவர்கள் என்ற நிலையை உருவாக்கினார்.

சிறிசேன – விக்கிரமசிங்க அரசாட்சிக் காலத்தில், பரவியிருந்த வெளிப்படையான படைநிலைகளைக் குறைப்பதற்கு வடக்கு – கிழக்கில் பெரிய முனைப்புகள் செய்யப்பட்டிருந்தன. கோத்தபாய ஆட்சிக்கு வந்தவுடன் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் முளைக்கத் தொடங்கின. பௌத்த வழிபாட்டுத் தலங்களும் உருவாகத் தொடங்கின. தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்றது. இராணுவத்தின் ஊடாக புலனாய்வுப் பிரிவினால் அவர்கள் கண்காணிக்கப்பட்டார்கள்; நிதிப்போக்குவரத்துகள் கண்காணிக்கப்பட்டன; மக்கள் குடியமைப்புகளும் கண்காணிக்கபட்டன. இப்படிப்பட்ட செயற்பாடுகள் ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பரவலாக இருந்திருந்தது. ஆட்சிக்கு வந்தவுடனே கோத்தபாய அரசு இந்த வகையான நடவடிக்கைகளை முன்னெடுத்தது நல்லதொரு அறிகுறியாக இல்லை. ஏனென்றால் தொண்டு நிறுவனங்களும் (NGO), மக்கள் குடி அமைப்புகளும்தான் (Civil Societies) மகிந்த 2015 இல் தோற்றுப் போவதற்கு காரணமாய் இருந்தார்கள். 

தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பாலும் கோத்தபாயவுக்கு எதிராகவே வாக்களித்து இருந்தார்கள். நாட்டுக்கே தலைவராயிருப்பேன் என்று கோத்தபாய சொன்னது அனைத்துக் குடிமக்களையும் சமமாக நடத்துவார் என்ற பொருளில் அல்ல. பிப்ரவரி 4 2020, சுதந்திர தின நாளில், தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை கோத்தபாய தடுத்தார். இது பலகாலமாக இருந்துவரும் நடைமுறை. இவர்கள் ஆட்சிமுறையில் எவ்வாறு சிறுபான்மையினரையும் அவர்களுடைய உணர்வுகளையும் மதித்தார்கள் என்பதற்கு இது ஒன்றே சாட்சி. 

சிறிசேன – விக்ரமசிங்க அரசு, ஐக்கிய நாடு மனித உரிமை சபையோடு இணைந்து 2015 இல் செயற்படத் துவங்கியது. இது பொறுப்புக் கூறலையும், போர்க்காலத்தில் நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்கள் அனைத்தையும் குறித்து முன்னெடுக்கப்பட்டது. அந்த நிர்வாகம் மிக மெதுவாகவே நிகழ்ந்தது. அதன் பொறிமுறைகள் சரியாக அமையவில்லை. காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்தைக் கையாள்வதில் மிக மெத்தனம் காட்டப்பட்டது. உண்மைக்கும் பொறுப்புக் கூறலுக்குமான ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. போர்க் குற்றம் தொடர்பான விசாரணை அமைப்பும் முழுமையாக செயற்பட முடியவில்லை. அதிலே உள்ளூர், வெளிநாட்டு ஆய்வாளர்களும் சட்டவாளர்களும் நீதிபதிகளும் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. ராஜபக்ச ஆதரவாளர்கள் அவற்றை எதிர்த்தார்கள். அதனால் அது கடைசி வரையும் செயற்படுத்தப்படவில்லை. கோத்தபாய நிர்வாகம் ஐ.நா மனித உரிமை சபையோடு இணைந்து செயற்படுவது என்ற நிலையில் இருந்து பிப்ரவரி 2020இல் விலகிக் கொண்டது. கோத்தபாயவும் அவரோடு சேர்ந்த பல இராணுவ, படை உயர் அதிகாரிகளும் ஊழியர்களுமே இந்தப் போர்க் குற்றச்சாட்டுகளுக்குள் வருவார்கள் என்ற அடிப்படையில், இது நடந்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. 

ஐ.நா அமைப்பில் இருந்து விலகிய அதே நேரம், புதிய நிர்வாகம் இலங்கையின் சட்டத்துக்கு ஊடாக தாங்கள் பொறுப்புக்கூறலைச் செய்வார்கள் என்று சொல்லப்பட்டது. தொடர்ந்த மாதங்களில் அந்த வாக்குறுதி எவ்வளவு பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டது. மூன்று சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களைக்  கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அதிகாரியை மன்னிப்புக் கொடுத்து கோத்தபாய ராஜபக்ச விடுதலை செய்தார். 2015 இல் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தினால் திரும்பவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இலங்கை அரசு மட்டத்தில் உள்ளவர்கள், சட்டத்தின் வழியில் நாங்கள் ஒழுங்காகத்தான் செயற்படுகிறோம்; ஆகவே இந்த நாட்டில் நடந்த சம்பவங்களுக்கான நீதி விசாரணைகளை மேற்கொள்ள எங்களாலேயே முடியும் என்று சொல்லிக் கொண்டார்கள். ஆனால் இந்த மன்னிப்பானது அந்தப் பரப்புரையை ஆட்டம்காண வைத்துவிட்டது. மன்னிப்புப் பெற்று வெளியே வந்தவரைப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவரும் போர்க்குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜெனரலும் வரவேற்று வாழ்த்தினார்கள். இந்த வகையான நடவடிக்கை, இலங்கையின் சட்டத்தின் மீதான ஆளுமையைக் கேள்விக்கு உள்ளாக்கியது. 

கண்மூடித்தனமான இனத்துவ ஆட்சி நடக்கப் போகிறது என்பதைக் குறி காட்டுவதாக அடுத்த நடவடிக்கைகள் அமைந்தன. ஜனாதிபதியின் தனிப்பட்ட ‘செயற் பிரிவு'(Presidential Task Force) ஒன்று ஜூன் 2020இல் உருவாக்கப்பட்டது. ‘பாதுகாப்பான, கட்டுப்பாடுள்ள, நல்லொழுக்கமுள்ள சட்டத்துக்கு அமைவான சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்கான ஜனாதிபதியின் செயற்குழு’ என்பது இதன் பெயர். எதேச்சதிகார ஓர்வெலியன்(Orwellian) பெயரைக் கொண்ட பதின்மூன்று பேர் கொண்ட இந்தக் குழுவில் உளவுப் பிரிவினர், இராணுவத்தினர், காவல்துறையினர் இருந்தனர். அவர்களுடைய முதன்மைப் பணிகளாவன: ‘போதை அச்சுறுத்தலைத் தடுப்பது’,’சுதந்திரமான, அமைதியான சமூகத்தின் இருத்தலுக்குப் பாதகம்  தரக்கூடிய எண்ணமுடைய சமூக்குழுக்களின் சட்டத்துக்குப் புறம்பான செயல்களை ஒடுக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பது’,’சமூகத்துக்கு மாறாக, சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளிலிருந்து செயற்படும் தனியாட்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது’ போன்றவை. இது அவர்களது ஆட்சியை விரும்பாத எவர் மேலும் கைவைக்கும் நிலையை ஏற்படுத்தியது.

இரண்டாவது செயற்பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டது. ‘கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் மரபுசார் மேலாண்மைக்கு’ என இது அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் இதில் இரண்டு பிக்குகள் உட்படப் 11 பேர் இருந்தார்கள். கோத்தபாய ஒவ்வொரு மாதமும் நாட்டின் தலையாய பௌத்த மதகுருக்களைச் சந்தித்துக்கொண்டார் (இவர்கள் அவரது பௌத்த ஆலோசனைக் குழுவிலிருந்த உறுப்பினர்கள்). பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இன்னும் 4 பௌத்த பிக்குகள் இந்த ‘மரபுசார்’ செயற்குழுவில் இணைக்கப்பட்டார்கள். ‘கிழக்கின் தொல்லியல் மரபு என்பது பௌத்தத்தினால் தாக்கம் செய்யப்பட்டிருக்கிறது’ என்ற காரணத்தை வர்த்தமானியில் நியாயப்படுத்தினார்கள். மரபினை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு ‘பெருமதிப்பிற்குரிய பௌத்த மகா சங்கத்தின் வழிகாட்டுதலும் அரவணைப்பும் இன்னும் தேவையாயிருக்கிறது’ எனக் கூறப்பட்டது. இந்தச் செயற்குழுவில் இருந்த 6 பேரில் ஒருவர்கூட தொல்லியல் பற்றி எதையும் அறிந்திருக்கவில்லை. கிழக்கின் 77 விழுக்காடு குடித்தொகையைக்கொண்ட தமிழ் அல்லது முஸ்லிம் உறுப்பினரில் ஒருவர்கூட இந்தக் குழுவில் இடம்பெறவில்லை.

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரைக்கும் வடக்கு – கிழக்கில் இருந்த, குறிப்பாக வடக்கில் இருந்த தமிழர்களுக்கு, இந்தியாவின் தென்முனையில் இருக்கும் தமிழ்நாட்டுடன் இருந்த தொடர்பு வழியாக பௌத்த சமயம் பயன்பாட்டில் இருந்து வந்தது என்பது பரந்தளவில் பலருக்கும் தெரியாத விடயம். ஆகவே வடக்கு – கிழக்கில் காணப்படும் தொல்லியல், பௌத்தம்சார் சான்றுகள் சிங்களவர்களினால் பாதுகாக்கப்பட்டவை அல்ல. இந்தச் செயற்குழுவின் உண்மையான நோக்கம் தொல்லியலை ஆயுதமாகக் கொண்டு தங்களுடைய சிங்கள – பௌத்த தேசியவாதத்தை விரிவாக்குவதுதான்; இதன் வழியாக வடக்கு – கிழக்குக்கு அதிகம் சிங்களவர்களை நகர்த்துவதுதான். 

கோத்தபாய ராஜபக்சவுக்குத் தேர்தல் பரப்புரை செய்தவர்கள், முன்னணியில் நின்றவர்கள், முக்கியமான இராணுவ ஆளுமைகள்தான். இராணுவ ஆளுமைகளில் பலர் குடிமக்களுக்கான அரசுப் பணியிடங்களை நிரப்பியிருக்கிறார்கள். அரசுப் பணிகளை நிரப்பியுள்ள இராணுவத்தினர் தொகை எண்ணிலடங்காதது.  இலங்கைத் துறைமுக அதிகார சபை, இலங்கைச் சுங்கவரித் திணைக்களம், இலங்கைத் தொலைத் தொடர்புப் பிரிவு, இலங்கை நுகர்வோர் பாதுகாப்புப் பிரிவு, இலங்கை தேசியப் பேரிடர் ஆணையர் நிலையம் ஆகிய அனைத்துமே இராணுவத்தினரால் கையாளப்பட்டது. 77,000 எண்ணிக்கையுள்ள இலங்கையின் காவல்துறை, இலங்கை உள்ளூர் உளவுத்துறை போன்ற அனைத்தும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கியது.

இலங்கையின் கோவிட் நிர்வாகக் கட்டமைப்பு இராணுவத்தினரால் நிரம்பி இருந்தது. முன்னாள் ஜெனரல் சவேந்திர டி சில்வா இந்தப் பணியை முன்நின்று நடத்தியிருக்கிறார். 2020 இலிருந்து அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டு இருக்கிறது. சட்டத்துக்கு புறம்பான வகையில் 2009 இல் உள்நாட்டுப் போரில் மக்களைக் கொன்றார்கள் என்ற வகையில் இந்தத் தடை அவர்கள் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது. அப்படியிருப்பினும் கோத்தபாய அதைப் புறக்கணித்து சவேந்திர டி சில்வாவை அரசின் உயர் பதவிகளில் அமர வைத்திருக்கிறார். இது போகவும், படையினருக்கு தாங்கள் விரும்பினால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஊரடங்கை அறிவிக்கவும், அதை மேற்பார்வை செய்யவும் அதிகாரம் இருந்தது. அதிபரும் அவருடைய சுற்றமும் இராணுவத்தினரைத் திறமையானவர்களாகவும் மக்கள் கட்டமைப்பில் உள்ள நிர்வாக அதிகாரிகளைத் திறமை அற்றவர்களாகவும் பார்த்தனர். 50,000 புதிய பட்டதாரிகள் அரசாங்கப் பணிகளுக்கு என தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுடைய பயிற்சி, படை முகாம்களில்தான் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பதவியில் உள்ளவர்களுக்கும் மீள்பயிற்சி அளிப்பது என்ற பெயரில் இராணுவ முகாம்களுக்குள் அழைக்கப்பட்டார்கள். இதன் வழியாக இராணுவத் தரப்பினரின் பாதிப்பையும் தாக்குறவையும் மக்கள் சமூகத்தின் (Civil Society) மீது நேரடியாக ஏற்படுத்தினார்கள். 

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் இரண்டாவது பகுதியில் அவர்களுடைய குடும்பம் 70% வரவு செலவைக் கையாண்டது. கோத்தபாய சான்றோர்களைக் கொண்ட அறிவுடைய அரசாங்கத்தை அமைப்பதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவருடைய நண்பர்கள், குடும்பத்தினர் அதிகாரத்துக்கு வந்தனர் (சிலர் கலிபோர்னியாவில் இருந்தும் வந்தனர்). முக்கியமான பதவிகள் அவர்களாலேயே நிர்வகிக்கப்பட்டன. ராஜபக்ச குடும்பத்தின் கைக்குள் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் அனைத்தும் சுழன்றது. 

2020 பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஆயினும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் சில காலம் வரவு – செலவு அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்துவந்தது. இங்கே பாராளுமன்றமோ அல்லது பாராளுமன்றத்தில் குழுவினர்கள் மேற்பார்வையோ இல்லாமல் அனைத்தும் நடந்தது. ஏனெனில் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி அமைச்சுப் பொறுப்புகளை வகிப்பதைத் தடுக்கிறது. ஒரு நிலையில், பாதுகாப்பு அமைச்சரை நியமிப்பதைத் தவிர்த்துவிட்டு பாதுகாப்புச் செயலாளரின் அலுவலகத்தைப் பாவித்து, அதன் வழியாகப் பாதுகாப்பு அமைச்சைத் தானே செயற்படுத்தினார். அமைச்சரவை பொறுப்பேற்கும்போது, இந்தச் சுற்றிவளைப்பு அனைத்தையும் கைவிட்டு தன்னைத்தானே பாதுகாப்பு அமைச்சராக அறிவித்துக்கொண்டார். இந்த விவகாரங்களில் அரசியல் அமைப்பில் உள்ள சில பிரிவுகள் பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்திலிருந்து வேறுபடுகிறது என்று ராஜபக்ச ஆதரவாளர்கள் சட்டத்திற்கு புறம்பானவற்றைச் சமாளிப்பதற்கு சப்பைக்கட்டுக் கட்டினார்கள்.

ஒரு இராணுவ அதிகாரியாக, லெப்டினன் கேணலாக மட்டுமே இருந்த, எந்தப் பாராளுமன்ற முன்அனுபவமும் இல்லாமல் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட முதலாவது ஜனாதிபதியாக கோத்தபாய இருந்தார். இவரை அவருடைய குடும்பத்தினர் ‘டெர்மினேட்டர்’ (Terminator) என்று அழைத்துக் கொண்டார்கள். இது சட்டத்துக்கு புறம்பாகவும் அரசியலிலும் எடுக்கும் கடும் நடவடிக்கைகளைக் குறித்துச் சொல்லப்பட்ட பெயர். ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில்தான் இராணுவக் குழுக்கள் அரசியல் விமர்சகர்களை, பத்திரிகையாளர்களைக் கடத்திக் காணாமல் போகச்செய்தது. தேசியவாதிகாளாலும் கடும்போக்கு இராணுவத்தினராலும் சூழப்பட்டிருந்த கோத்தபாயவை, இதுவரை இலங்கை அறியாத எதேச்சதிகார ஜனாதிபதியாக உருவாக்கியது.

இருபதாவது திருத்தச் சட்டம் 2020 அக்டோபரில் கொண்டுவரப்பட்டது. பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தையே இல்லாமல் செய்வோம் என்று வாக்களித்த ராஜபக்சவும் அவருடைய கூட்டாளிகளும் இந்த இருபதாவது திருத்தச் சட்டத்தின் ஊடாகப் பதினெட்டாவது திருத்தச் சட்டத்தில் இருந்த மோசமான விடயங்களை, அதைவிட அதிகமாக அறிமுகப்படுத்தினர். பாராளுமன்றம், நீதிமன்றம், அதிகார கட்டமைப்புகள் அனைத்தையும் ஜனாதிபதியின் விளையாட்டுப் பொருளாக இந்தத் திருத்தச் சட்டம் மாற்றிவிட்டது. 

பாராளுமன்றத்திலே ஒப்புதல் வழங்கப்படும் முன் இருபதாவது திருத்தச் சட்டம் சரிபார்க்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அரசாங்கத்துக்கு எடுத்துரைத்தது. இந்த ஆட்சி, குடிசார் பணிகளை அரசியல் மயமாவதிலிருந்து காபந்து செய்யும் அரசமைப்பு ஆணைக்குழுவை, அதிகாரம் ஏதுமற்ற பல்லுப்போன பாராளுமன்ற ஆணைக்குழு ஒன்றினால் இடம்பெயர்க்கும் முனைப்பில் இருந்தது. நாட்டின் ஜனாதிபதி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்யவும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றார். அமைப்புகளாக இருக்கக்கூடிய தேர்தல் ஆணையம், காவல்துறை, மனித உரிமைகள், நீதித்துறை, பொது நிதித்துறை, ஊழல் தடுப்பு ஆணையம் என்று சுயாட்சியுடன் இயங்கவேண்டிய அனைத்துக்குரியவைகளையும் நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கைப்பற்றினார். அத்தோடு இந்த இருபதாவது திருத்தச் சட்டம் தணிக்கை உயர் அதிகாரி, அட்டர்னி ஜெனரல், நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அனைவரையும் நியமிக்கும் அதிகாரத்தையும் கொடுத்தது. ஒன்பது நீதிபதிகளின் எண்ணிக்கை உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அதிகரிக்கப்பட்டது. ராஜபக்ச தனக்குரியவர்களால் அதை நிரப்பி வைத்தார். மேலும் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களும் பாராளுமன்றத்தில் பங்கெடுக்கலாம், பிரதமராக, ஜனாதிபதியாக வரலாம் என்றும் அது சொன்னது. இன்னும் அமெரிக்கக் குடியுரிமையை விட்டுக்கொடுக்காத பசில் ராஜபக்ச அடுத்து ஆட்சிக்கு வருவதற்கு உதவியாக இது ஏற்படுத்தப்பட்டது. 

இலங்கை நடைபெறுவது தேர்தல் வழியாக அமையும் இனத்துவ ஆட்சியாகும். கோத்தபாயவின் 66 பேரைக்கொண்ட அமைச்சரவையில் மூன்று தமிழர்களும் ஒரே ஒரு முஸ்லிமும் இருந்தனர். ஆனால் இந்த இரண்டு இனக் குழுமங்களும் சேர்ந்து ஐந்து பங்கிற்கு மேலான மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றன. தேர்தலின் வழியாக அமையும் இனத்துவ ஆட்சி எதேச்சதிகார இனத்துவ ஆட்சியாக மாறுமா? இந்தத் தீவின் சிங்களப் பெரும்பான்மையினர் முன்பைவிட நல்ல நன்மைகளை பெற்றிருக்கின்றனர். ஆனால் பிந்தைய முறை அவர்களுக்கு அதே நன்மைகளை கொடுக்குமா? இலங்கையர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை முதன்மையானதாகக் கருதுகிறார்கள். அதனால்தான் அடிக்கடி பொது ஊர்வலங்கள் நடக்கின்றன. கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்த பௌத்த பிக்குகள் உட்பட இருபதாவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஊர்வலம் போனார்கள். அத்தோடு மிக குறிப்பிடத்தக்க சிங்கள பௌத்த பகுதிகளிலும் SLPP கட்சியின் வாக்குகள் பாராளுமன்றத் தேர்தலில் குறைந்திருப்பதைப் பார்க்க முடிந்திருந்தது. சிங்களப் பெரும்பான்மையைத் தங்கள் பக்கம் வைத்திருக்கும் அரசு, இனத்துவ மதம்சார் ஒருமைப்பாட்டினூடாக மட்டும் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஆரோக்கியமாக வளருகின்ற பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தர உயர்வையும் அரசு மேற்கொள்ள வேண்டும். 

ஆடைத் தொழில், சுற்றுலா, வெளிநாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்பு, அதன் வழிவரும் வெளிநாட்டுச் செலாவணி ஆகியவற்றில் இலங்கைப் பொருளாதாரம் தங்கியுள்ளது. கோவிட்-19 பெருமளவு இந்த வெளிநாட்டு நிதி வருவாய்களைப் பாதித்திருந்தது. பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்த வைரஸின் பரம்பலும் அதன் தாக்கமும் அரசாங்கத்திற்கான ஆதரவு நிலையை வெகுவாகக் குறைத்துவிட்டது. மகிந்த ராஜபக்ச காலத்தில் அதிக செலவினங்களோடு ஆடம்பரமாக உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள், அதற்குரிய கொடுப்பினைகளைச் செலுத்த முடியாமையினால் சிக்கலில் மாட்டிக் கொண்டன. மகிந்த கட்டிய விளையாட்டு மைதானத்தில் பசுக்கள் மேய்வதும், மத்தள விமான நிலையம் விமானங்களை விட அதிக எண்ணிக்கையிலான பாம்புகளாலும் யானைகளாலும் நிறைந்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. அம்பாந்தோட்டையில் உள்ள ஆழப்படுத்தப்பட்ட துறைமுகம் மிகப்பெரிய பண இழப்பை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. 99 வருடக் குத்தகைக்கு சீனா அதைக் கட்டிக் கொடுத்திருந்தது. 2024 இற்கு இடையில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 4 பில்லியன் டொலர்களாக உயர்ந்தது.

இனத்துவ அரசியல் செய்யும் பிறரைப் போலவே ராஜபக்சக்களும் இன மையவாத பாதுகாப்பின்மையைத் தூண்டிவிட்டனர். அவர்களுக்குப் பெருளாதார ரீதியாக இடுக்கண் நிலை ஏற்பட்டு சமாளிக்க முடியாமலாகும் போது தேசியவாதிகளை சிறுபான்மையினர் மீது கோபம் கொள்ள வைத்து குளிர் காய்ந்தார்கள். இன மைய முறுகலானது, சுற்றுலாவுக்கும் ஏற்றுமதிக்கும் வெளிநாட்டு முதலீட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய தீவிர நிலைப்பாடுகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதும் தெரியும். ராஜபக்சேக்கள் தங்களுடைய குடும்ப ஆட்சியைத் தொடர்வதற்காக, இன்னொரு ஆட்சி மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் கடினமானதாக மாற்றி வைத்திருந்தார்கள். இருபதாவது திருத்தச் சட்டம் இதைத் தெளிவாக்கியது. அவர்கள் செயலாக்குவதற்குத் துடித்த புதிய அரசியல் அமைப்பு மாற்றமும் மிகத் தெளிவாக அதைச் சுட்டிக் காட்டியது. இந்த குறிப்பிட்ட அரசியல் சாசன மாற்றம் மக்களின் வாக்குகளின் ஊடாக ஒப்புதலைப் பெறவேண்டும். குடிச் சமூகங்களின் ஊடாக வழிநடத்தப்படும் அந்தத் தீவில் இருக்கும் குடிமக்கள், எதிர்க்கட்சிகள் ராஜபக்சக்களை முறியடிப்பார்களா? அதுதான் இலங்கையின் அரசியல் பாதையைத் தீர்மானிக்கும்.

நீல் டி வோட்டா

நீல் டி வோட்டா, வேக் ஃபோரஸ்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறையின் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தென் ஆசியாவின் பாதுகாப்பும் அரசியலும், இனமும் தேசியவாதமும், இன மோதல் தீர்வுகள் மற்றும் ஜனநாயக மாற்றமும் உறுதிப்படுத்தலும் போன்ற விடயங்களில் தனது ஆய்வுக் கவனத்தைச் செலுத்தி வருகிறார். இவர் ‘Blowback: Linguistic Nationalism, Institutional Decay, and Ethnic Conflict in Sri Lanka (Stanford: Stanford University Press, 2004)’ என்ற நூலின் ஆசிரியராவார். பல சர்வதேச ஆய்விதழ்களில் தனது பங்களிப்பைச் செலுத்தி வரும் இவர், தென் ஆசியாவில் தேசியவாதக் கருத்தியல்களுக்கும் சமூக வன்முறைகளுக்கும் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்து வருகிறார்.


ஒலிவடிவில் கேட்க

2821 பார்வைகள்

About the Author

வின்சென்ட் போல் சந்தியாப்பிள்ளை

வின்சென்ட் போல் சந்தியாப்பிள்ளை (B.Sc., M.A, M.Phil) அவர்கள், 1966 இல், யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள ஊறணி எனும் இடத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை இளவாலை என்றியரசர் கல்லூரியில் பயின்றார். உயர்கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கற்றார். கனடாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்திய தமிழியல் பட்டப்படிப்பில், 5 - 6 ஆண்டுகள் தமிழர் மெய்யியல், நாட்டார் வழக்காற்றியல், இலக்கியத் திறனாய்வு போன்ற பாடங்களைக் கற்பித்திருக்கிறார். கல்லூரிக் காலத்தில் நாத்திகம், மார்க்ஸிசம் போன்ற கருத்தியல்களில் ஈடுபாடு காட்டிவந்தார். பின்னர் கற்கைப் புலத்தினூடாக மெய்யியல், தத்துவம் என்பவற்றில் ஆர்வம் செலுத்தினார். தற்போது சோதிடம், ஹோமியோபதி, தமிழ்மொழி போன்றன தொடர்பாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்