ஒச்சாப்பு கல்லு எனும் பண்டைய நாகர் குடியிருப்பு
Arts
12 நிமிட வாசிப்பு

ஒச்சாப்பு கல்லு எனும் பண்டைய நாகர் குடியிருப்பு

January 11, 2025 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒச்சாப்பு கல்லு எனும் இடம் அமைந்துள்ளது. வில்பத்து எனும் அடர்ந்த காட்டின் மத்தியில் ஒச்சாப்பு கல்லு அமைந்துள்ளது. வில்பத்து காட்டின் மத்தியில் ஓடும் மோதரகம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிலாமடு தேக்கம் எனும் சிறிய அணைக் கட்டின் தெற்குப்பக்கத்தில் சுமார் 3 கி.மீ தூரத்தில் இவ்விடம் காணப்படுகிறது.

வில்பத்து இலங்கையின் முதலாவது மிகப்பெரிய வனவிலங்குகள் சரணாலயமாகும். இது 1317 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட அடர்ந்த வனமாகும். இலங்கையில் அதிகளவில் சிறுத்தைப் புலிகள் இங்குதான் வாழ்கின்றன. பல புராதன வழிபாட்டிடங்கள் அமைந்துள்ள இவ்வனம் 1905 ஆண்டு ஆங்கிலேயரால் வனவிலங்குகள் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வனம் 1938 ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது பெருங்கற்கால மையம் என அழைக்கப்படும் பொம்பரிப்பு என்னுமிடம் இவ்வனத்தில் தான் அமைந்துள்ளது. இவ்வனத்தில் மொத்தமாக பண்டைய வழிபாட்டுப் பாரம்பரியமிக்க 32 இடங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று தான் ஒச்சாப்பு கல்லு என்னுமிடமாகும். இங்கு மொத்தமாக 106 வில்லுக் குளங்கள் அமைந்துள்ளன. இதனால் தான் இப்பிரதேசம் வில்பற்று அல்லது வில்பத்து எனப் பெயர் பெற்றது. இவற்றில் பிரதான வில்லுக் குளங்கள் மற்றும் இடங்கள் ஆகியன தூய தமிழ்ப் பெயர்களைக் கொண்டவையாகும்.

அவையாவன: இலவன் குளம், மாக்கிளான் மடு, நடு நாவல், மூலைக் கண்டல் வெளி, பொன்பரப்பி, கருவாட்டுக் குடா, இலந்தை மோட்டை, தலை வில்லு, கொம்பன் சாய்ந்த வில்லு, உடும்பு வில்லு, செங்கட்படு வில்லு, பணிக்கர் வில்லு, ஆலம் வில்லு, வீரக்குட்டி வில்லு, ஆத்தாள் வில்லு, மறிக்கரம் வில்லு, காஞ்சுரம் வில்லு, கட்டெறும்பு வில்லு, கொக்காரி வில்லு, நல்ல தண்ணி வில்லு, சின்ன உப்பு வில்லு, பெரிய உப்பு வில்லு, பெரிய நாகவில்லு, சின்ன நாகவில்லு, வண்ணாத்தி வில்லு, மகிழம் வில்லு, இரணை வில்லு, தம்மனா வில்லு, நமதா வில்லு, குமுட்டு வில்லு, குருத்துப் பாண்டி வில்லு, பெரிய வில்லு, காளி வில்லு, மரை வில்லு, மண வில்லு, மயில் வில்லு, காய மோட்டை வில்லு, அமுதவல்லி வில்லு, தங்க வில்லு, குமிழ வில்லு, கார வில்லு, பொருப்பன் வில்லு, நாவலடி ஊற்று, மாணிக்கப்பளை ஊற்று, பட்சி ஓடை, மதுர ஓடை, பலகைத் துறை, மட்டி மடு, மாவலங்கை மோட்டை, கொக்கு மோட்டை, கட்டக் கண்டல் குளம், பட்டி வெளிக் குளம், குதிரை மலை, குதிரை மலை முனை, ஒரு சாய்ப்புக் கல் ஆகிய இடங்களாகும். 

இவற்றைத் தவிர நெலும் வில்லு, தெமட்ட வில்லு, லுமா வில்லு, திம்பிரி வில்லு, கும்புக் வில்லு, குடா பெதஸ்ஸ வில்லு, மஹா பெதஸ்ஸ வில்லு ஆகிய வில்லுக் குளங்களும் இங்கு உள்ளன. இப்பெயர்களில் பொன்பரப்பி என்பது பொம்பரிப்பு எனவும், ஒரு சாய்ப்புக் கல்லு ஒச்சாப்பு கல்லு எனவும் திரிபடைந்துள்ளன. இங்குள்ள கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள முக்கியமான பாறை ஒரு பக்கமாகச் சாய்ந்து காணப்படுவதால் இப்பெயர் உருவாகியிருக்கலாம். ஒச்சாப்பு கல்லு வில்பத்து காட்டின் மத்தியில் அமைந்துள்ளதால் இங்கு செல்வதற்கு குறிப்பிட்ட நிரந்தரமான, சீரான பாதை எதுவும் கிடையாது. ஆனால் ஐந்து வழிகளின் ஊடாக இவ்விடத்திற்குச் செல்லலாம்.

புத்தளம் நகரில் இருந்து வடக்கு நோக்கி வில்பத்து காட்டின் ஊடாக மன்னாருக்குச் செல்லும் வீதியில், கலா ஓயா, பொம்பரிப்பு ஆறு, பொம்பரிப்பு, பெரிய உப்பு வில்லு, பெரிய வில்லு, பெரிய நாக வில்லு, மலை வில்லு ஆகியவற்றைக் கடந்து வில்பத்து காட்டின் வட எல்லையில் ஓடும் உப்பாறு எனும் மோதரகம் ஆற்றையும் கடந்து, சிறிது தூரம் சென்றதும் வலது பக்கமாகச் செல்லும் காட்டுப் பாதையில் வேப்பம் வில்லுக்குச் செல்லும் பாதை வழியாக சுமார் 8 கி.மீ பயணம் செய்து, கொக்குமோட்டை என்னுமிடத்தில் மோதரகம் ஆற்றைக் கடந்து தெற்குப் பக்கமாக 3 கி.மீ தூரம் சென்றால், ஒச்சாப்பு கல்லை அடையலாம்.

இரண்டாவது பாதை : மன்னாரில் இருந்து தெற்கு நோக்கி நானாட்டான், அரிப்பு, சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஊடாக மறிச்சுக்கட்டி பழைய பள்ளிவாசலைக் கடந்ததும் இடது பக்கமாகச் செல்லும் காட்டுப் பாதை வழியாக மேலே குறிப்பிட்ட வேப்பம் வில்லு ஊடாக 8 கி.மீ பயணம் செய்து கொக்குமோட்டையில் மோதரகம் ஆற்றைக் கடந்து தெற்குப் பக்கமாக 3 கி.மீ தூரம் சென்றால் ஒச்சாப்பு கல்லை அடையலாம்.

மூன்றாவது பாதை : புத்தளத்தில் இருந்து அனுராதபுரத்துக்குச் செல்லும் வீதியில் உள்ள பஹல மஹரகஹ வெவ என்னுமிடத்தில் உள்ள வில்பத்து சந்தியில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் உள்ள ஹுனுவிலகம என்னுமிடத்தை அடைந்து, அங்கிருந்து வில்பத்து காட்டுக்குள் நுழைந்து, வீரன் சோலை, மரதன் மடு, உப்பு வில்லு ஆகிய இடங்களைக் கடந்து, அங்கிருந்து வடக்கு நோக்கி சுமார் 6 கி.மீ பயணம் செய்து ஒச்சாப்பு கல்லை அடையலாம்.

நான்காவது பாதை : அனுராதபுரத்தில் இருந்து வடமேற்கு நோக்கி அரிப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள ஒயா மடு, பேய் மடு, மகாவிலச்சி ஆகிய இடங்களைக் கடந்து வில்பத்து காட்டுக்குள் புகுந்து சின்னடியா வில்லு ஊடாக மகாவெவ ஆறு, மொறகொல்ல ஆறு ஆகியவற்றைக் கடந்து ஒச்சாப்பு கல்லை அடையலாம்.

ஐந்தாவது பாதை : மேலே குறிப்பிட்டுள்ள அரிப்பு பாதை வழியாக பேய் மடுவைக் கடந்து மகா விலச்சி வாயில் ஊடாக வில்பத்து காட்டுக்குள் புகுந்து, அரிப்பு வீதியில் 21 ஆவது மைல் கல் அருகில் மேற்குப் பக்கமாகச் செல்லும் காட்டுப் பாதை வழியாக தேக்கம் அணைக்கட்டை அடைந்து அங்கிருந்து மோதரகம் ஆற்றைக் கடந்து தெற்குப் பக்கமாக சுமார் 2 கி.மீ பயணம் செய்து ஒச்சாப்பு கல்லை அடையலாம்.

இத்தனை பாதைகள் இருந்தாலும் இவை அனைத்தும் சீரான, இலகுவான பாதைகள் அல்ல. மிகவும் கடினமாக, ஒரு வழிகாட்டியின் துணையுடனேயே இப்பாதைகள் ஊடாக பயணம் செய்து ஒச்சாப்பு கல்லை அடைய முடியும்.

ஒச்சாப்பு கல்லு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகர் குடியிருப்புகளில் ஒன்றாகும். இதே காலப்பகுதியில் இங்கு பொறிக்கப்பட்டுள்ள நாகர் தொடர்பான பிராமிக் கல்வெட்டுகள் இதற்குச் சான்றுகளாக அமைகின்றன. இலங்கையின் மேற்குக் கரையில் தான் பண்டைய நாக இராச்சியங்களான மாந்தை, குதிரை மலை, கல்யாணி ஆகியவை அமைந்திருந்தன. இவற்றில் குதிரைமலை இராச்சியத்திற்குட்பட்ட பகுதியில் ஒச்சாப்பு கல்லு காணப்படுகிறது.

ஒச்சாப்பு கல்லு தட்டையான பாறைகள் நிறைந்த காட்டுப் பகுதியாகும். இங்குள்ள மூன்று தட்டையான பாறைகளின் மீது வழிபாட்டுத் தலங்கள் இருந்தமைக்கான கட்டடச் சிதைவுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள பிரதான கற்குகையின் பின்பக்கம் செவ்வக வடிவில் இருந்த ஒரு கட்டடத்தின் கருங்கல் அத்திவாரமும், அதில் சில கற்தூண்களும், இதன் அருகில் குழிக்கற்கள் சிலவும் காணப்படுகின்றன. புராதன கால செங்கட்டிகள் பரவலாகச் சிதறிக் கிடக்கின்றன.

ஒச்சாப்பு கல்லு பகுதியில் சுமார் 15 இற்கும் மேற்பட்ட இயற்கையான கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் பல குகைகளில் கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ளன. கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ள கற்குகைகளில் பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட 6 முற்கால பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேலும் இங்கு பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டில் பாறையில் எழுதப்பட்ட பிற்கால பிராமிக் கல்வெட்டு ஒன்றுமாக மொத்தம் 7 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் இரு பிராமிக் கல்வெட்டுகளில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னன் மற்றும் இளவரசன் கண்ணன் அல்லது கணேசன் பற்றிக் கூறும் கல்வெட்டு

ஒச்சாப்பு கல்லில் காணப்படும் முற்கால பிராமிக் கல்வெட்டு ஒன்றில் மிக முக்கியமான விடயம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கண்ணன் அல்லது கணேசன் பற்றியதாகும்.

இக்கல்வெட்டில் “ரஜ கணச புத ரஜபுத கணச லேனே அகட்ட அனகட சட்டுதிச சகச” என எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள கணச எனும் சொல்லை ‘கண்ண’ என பேராசிரியர் எஸ். பரணவிதான கூறியுள்ளார். அதேசமயம் இதை ‘கணேச’ எனவும் பொருள் கொள்ளலாம். இதன்படி இவ்வாக்கியத்தின் பொருள் “அரசன் கண்ணன் அல்லது கணேசனின், அரச புதல்வன் கண்ணன் அல்லது அரச புதல்வன் கணேசனின் குகை” என்பதாகும். இக்கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட பிரதி கிடைக்கவில்லை.

கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விபரத்தின்படி கண்ணன் அல்லது கணேசன் எனும் பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்துள்ளான் என்பதும், அவனுக்கு கண்ணன் அல்லது கணேசன் என இதே பெயரைக் கொண்ட மகனும் இருந்துள்ளான் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மகாவம்சம் கூறும் இலங்கை மன்னர்களின் பட்டியலில் கண்ணன் அல்லது கணேசன் எனும் பெயரில் மன்னர்கள் யாரும் குறிப்பிடப்படவில்லை. எனவே கல்வெட்டுக் குறிப்பிடும் கண்ணன் அல்லது கணேசன் என்பவன் இப்பிரதேசத்தின் சிற்றரசனாக இருக்கவேண்டும். எனவே, வில்பத்து எனும் காடுகள் நிறைந்த வடமேற்கு இலங்கைப் பிரதேசத்தை  2300 ஆண்டுகளுக்கு முன் கண்ணன் அல்லது கணேசன் எனும் பெயர் கொண்ட தமிழ்ச் சிற்றரசன் ஆட்சி செய்துள்ளான் என்பதே இக்கல்வெட்டுக் கூறும் செய்தி மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மையாகும்.

நாகனின் குகை பற்றிய கல்வெட்டு  

ஒச்சாப்பு கல்லு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகளில் இரண்டு நாகர் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகளாகும். இவ்விரண்டில் ஒன்று மட்டுமே முற்கால பிராமிக் கல்வெட்டாகும். அக்கல்வெட்டில் மொத்தமாக 5 எழுத்துகள் மட்டுமே காணப்படுகின்றன. அதன் விவரங்கள் பின்வருமாறு:

“நாகஹ லேனே”

இதன் பொருள், “நாகனின் குகை” என்பதாகும். ஆங்கிலத்தில் இது “The cave of Naga” எனப் பொருள்படும். இக்கல்வெட்டுக் காணப்படும் கற்குகை சங்கத்தார்க்கு தானமாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட பிரதியும் கிடைக்கவில்லை. 

நாக மகாராஜன் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு

ஒச்சாப்புகல்லில் நாகர் பற்றிக் குறிப்பிடும் இரண்டாவது கல்வெட்டு பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பிற்கால பிராமிக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு பொ.ஆ. 167 முதல் 186 வரையான காலப்பகுதியில் அநுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆட்சி செய்த கனிட்ட தீசன் எனும் மன்னன் காலத்தில் பொறிக்கப்பட்டதாகும்.

எட்வர்ட் முல்லர் 1883 இல் இக்கல்வெட்டுப் பற்றி முதன்முதலாக தனது நூலில் குறிப்பிட்டார். அவருக்குப்பின் ஹென்றி பார்க்கர் 1909 ஆம் ஆண்டு இக்கல்வெட்டு பற்றிய விவரங்களையும், கல்வெட்டின் பிரதியையும் தனது நூலில் பதிவு செய்தார். அதன் பின்பு கொட்ரிங்டன் இக்கல்வெட்டுப் பற்றி தனது ஆய்வுக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். 1941 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் இக்கல்வெட்டைப் படி எடுத்து பதிவு செய்தது. 

இக்கல்வெட்டு பிரதான கற்குகையின் பின்பக்கம் உள்ள கற்பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. பாறையில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ள பகுதி 7 அடி 8 அங்குல நீளமும், 2 அடி 6 அங்குல அகலமும் கொண்டதாகும். 5 வரிகளில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு:

  1. சித்தம் நாக மஹாரஜஹ புத மலி திச ம
  2. ஹாரஜக மகன-நகரயஹி வவளவி மிதயஹ சுடதக வாவிய க  
  3. ஜபோ அவியிக மதக அவியிக தலவன அவியிக மே எதக வவியி
  4. போஜியபதி கர கடய குப விஹரகெஹி ப[க] செடஹிதெல ஹுட முல கட[முத] வெடி
  5. ய ஜின படி சதரிய கொடு தினி

கல்வெட்டில் உள்ள வாசகங்களின் பொருள், “மகாராஜா நாகனின் மகனான மகாராஜா கனிட்ட தீசன், மகன நகரத்தில் வாழும் வவளவி மித்தயனின் குடதக்க வாவி, ஜபோ வாவி, மதக்க வாவி, தலவன வாவி ஆகிய குளங்களின் மூலம் கிடைக்கும் மேலதிகமான வருமானத்தில் செலுத்தவேண்டிய தொகையை, குபே விகாரையில் உள்ள ஐந்து தூபிகளுக்கும் தேவையான எண்ணெய் மற்றும் ஏனைய செலவீனங்களுக்காகவும், தூபிகளின் உச்சியில் உள்ள சத்ர கல்லுக்கு கம்பளம் வாங்கி விரிப்பதற்காகவும் வழங்க வேண்டும் என்பதாகும். 


ஒலிவடிவில் கேட்க

3354 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்