படுவானை நோக்கி
Arts
12 நிமிட வாசிப்பு

படுவானை நோக்கி

January 19, 2025 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம் : இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்’ எனும் இத் தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்ட, கேட்ட, கேள்விப்பட்ட, வாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. ஒருவரது வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள் எனும் தொனியில் இவை எழுதப்படுகின்றன. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று, இத்தகைய நினைவுப்பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை தொடராக எழுநாவில் வெளியாகின்றன.”

– கார்த்திகேசு இந்திரபாலா –

பொ.ஆ. 1937 இனை உலக நிலையைப் பெரும் அளவில் குலுக்கும் நிகழ்வு எதுவும் நடைபெற்ற ஆண்டாகக் கணிப்பதற்கு இல்லை. உலகம் காணாத மிகப்பரந்த வல்லரசாகிய பிரித்தானியப் பேரரசும், அதனுடன் இரு நூற்றாண்டுகளுக்கு மேலாகப் போட்டியிட்ட ஐரோப்பிய வல்லரசுகளாகிய பிரெஞ்சுப் பேரரசும், ஒல்லாந்துப் பேரரசும் ஒற்றுமையாக ஐரோப்பிய ஏகாதிபத்திய வலைக்குள் தாம் கைப்பற்றிய ஆசிய, ஆபிரிக்க, ஓசியானிய நிலங்களை அடக்கி வைத்திருந்தன. உலகில் ‘பிரித்தானியாவின் அமைதிநிலை’ (Pax Britannica) மலர்ந்திருப்பதாகத் தோன்றியது.

இறுக்கமான வலைபோல் அப்பொழுது கண்ணுக்குப்பட்டது வெறும் அதிகாலைப் பனியே. வெகுவிரைவில், ஐந்தே ஆண்டுகளுள், ஐரோப்பிய ஏகாதிபத்தியம் ஆட்டம் காணத் தொடங்கியது. வரலாற்றில் ஒரு கணம் தோன்றும் உன்னதநிலை மறுகணம் தலைகீழாகிவிடும்.

இந்தியாவின் கடைசிப் பேரரசன்

உலக வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி 1937 மே 12 இல் இலண்டனில் நடைபெற்றது. இங்கிலாந்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னன் அன்று மிகவும் ஆடம்பரமாக முடிசூட்டப் பெற்று, இங்கிலாந்தின் மன்னனாக மட்டுமல்ல, இங்கிலாந்துடன் ஸ்கொத்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாகவும், இந்தியாவின் பேரரசனாகவும் (Emperor of India), ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆபிரிக்கா ஆகிய பெரும் பிரித்தானிய டொமினியன்களின் மன்னனாகவும், இலங்கை, சிங்கப்பூர் போன்ற பல பிரித்தானியக் காலனிகளின் மன்னனாகவும், பிரித்தானியக் காப்பரசுகளாக (protectorates) அல்லது வேறு வகைகளில் பிரித்தானியர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்த மலாயா, போர்ணியோ, பீஜி போன்ற பல்வேறு இடங்களின் மன்னனாகவும் ஆட்சியுரிமை பெற்றார். மேற்கு ஆசியாவிலே கூட, ஈராக், ஜோர்தன், பாலஸ்தீனம் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு இவர் பொறுப்பேற்றிருந்தார். உலக வரலாற்றில் இது ஒரு ஒப்பற்ற நிகழ்ச்சியாகும்.

கிழக்கு ஆசியாவில் குமுறல்கள்

சீனாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தன்மை உடைய சில முக்கியமான நிகழ்வுகள் 1937 இல் கிழக்கு ஆசியாவில் இடம்பெற்றன. ஏற்கெனவே சீனாவின் பல பாகங்களைத் தாக்கி, ஆக்கிரமிப்புச் செய்து, கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த ஜப்பானியப் பேரரசு, 1937 இல் சீனத் தேசியவாதக் குஓ-மிந்-தாங் (Kuomintang) அரசாங்கத்தின் தலைநகராகிய நான்ஜிங் (Nanjing) நகரைக் கைப்பற்றிக் கொடூரச் செயல்களில் ஈடுபட்டது. இந்த நிகழ்ச்சி நான்ஜிங் வதை (Nanjing Massacre) என்று பெயர்பெறுகிறது. 

சியாங்-காய்-ஷெக் (Chiang-kai Shek) தலைமையில் சீனக் குடியரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த குஓ-மிந்-தாங் அரசாங்கம் ஒரு புறம் ஜப்பானியர் ஆக்கிரமிப்பையும் மறுபுறம் மாஓ சேதுங் (Mao Zedong) தலைமையில் வளர்ந்துவரும் பொதுவுடைமைக் கட்சியின் வலிமையான எதிர்ப்பையும் சமாளிக்க முடியாது வலுவிழக்கத் தொடங்கியது.

தென் ஆசியாவில் சுயாட்சி முழக்கம்

பிரித்தானியர் ஏகாதிபத்தியம் 1937 இல் உச்சகட்டத்தை அடைந்திருந்தும், தென் ஆசியாவில் அதன் அமைப்பு ஆட்டம் காணத் தொடங்கியது. இந்தியத் தேசியக் காங்கிரசின் விடுதலைப் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி தலைமை ஏற்றுக் கடைப்பிடித்த அகிம்சைப் பொறிமுறைகளிடம், ஆட்சியாளருடைய ஆயுதபலம் பலனற்றதாகியது. முழுமையான சுயாட்சி (பூர்ண ஸ்வராஜ்) என்ற முழக்கம் அடங்கவில்லை.

இந்தியர்களுக்கு ஓரளவு ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்கும் நோக்குடன் 1937 இல் மாகாண சபைகள் அமைக்கப்பட்டுத் தேர்தல்கள் நடந்தன. எனினும் வயதுவந்த எல்லோருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை.

மேலும், 1937 இல் இந்தியத் தேசியக் காங்கிரசில் ஒரு முக்கியமான பிளவு ஏற்பட்டது. காந்தியின் மிதவாதப் போக்கை ஏற்காத இளம் தேசியவாதியாகிய சுபாஸ் சந்திர போஸ் பிரித்தானியருக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கும் தீவிரப் போக்கைக் கடைப்பிடித்துக் காங்கிரசில் இருந்து விலகிச் சென்றார்.

இலங்கையில் அரசியல் முன்னேற்றங்கள்

இந்தியாவில் ஏற்பட்டதைக் காட்டிலும் கூடுதலான அரசியல் முன்னேற்றம் 1937 அளவில் இலங்கையில் காணப்பட்டது. எதிர்பாராத வகையில் 1931 இல், பெண்கள் உட்பட, வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இலங்கையில் அப்பொழுது முக்கிய அரசியல் தலைவர்களாக இருந்தவர்கள் எவருமே இதை விரும்பவில்லை. சிலர் வன்மையாக எதிர்த்தனர்.

இந்திய மக்களுக்கோ அல்லது வேறெந்த ஆசிய நாட்டு மக்களுக்கோ கிடைக்காத வாக்குரிமை இலங்கை மக்களுக்குக் கிடைத்தது. இதில் சிறப்பாகப் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் பல ஆண்டுகளாகப் பெண்கள் இந்த உரிமையைப் பெறுவதற்காகப் போராடி, 1928 இல் தான் வாக்குரிமையைப் பெற்றனர். அதன் பின் மூன்று ஆண்டுகளுக்குள் போராட்டமே இல்லாது இலங்கைப் பெண்கள் வாக்குரிமையைப் பெற்றனர் (ஜப்பானில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது 1946 இல் ஆகும்).

யாழ்ப்பாணத்தில் தடுமாற்றம்

புதிய அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக 1931 இல் இலங்கையில் அரச சபைக்கான (State Council) முதல் தேர்தல்கள் நடந்தன. ஆனால் யாழ்ப்பாணத்தில் தோன்றிய புதிய அரசியல் எழுச்சியின் காரணமாகத் தேர்தல்கள் புறக்கணிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்து அரசியல் தலைவர்களுடைய ‘சம்மதியாமை அரசியல்’ (politics of dissent) என்று வர்ணிக்கப்படக்கூடிய அரசியல் போக்கின் ஓர் எடுத்துக்காட்டாக இதனைக் கருதலாம்.

அரச சபைத் தேர்தல்கள் 1930 களில் நடைபெற்றபோது யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகள் இருக்கவில்லை. கொழும்பில் இலங்கைத் தேசியக் காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பு ஒன்று இருந்தது. ஆனால் அது ஒரு அரசியல் கட்சிபோல் இருக்கவில்லை. 

இலங்கையில் 1930 களில் எழுந்த அரசியல் கருத்து வேறுபாடுகளையும் அவற்றின் அடிப்படையில் பின்பு தோன்றுகிற அரசியல் கட்சிகளையும் விளங்கிக்கொள்ள 1920 களில் தோன்றிய சூழ்நிலையைப் பின்புலமாக வைத்துப் பார்க்கவேண்டும்.

ஆங்கிலம் கற்றிருந்த சிறிய மத்திய வகுப்பினரிடையே 1920 களில் அரசியல் விழிப்புணர்வு எழத் தொடங்கியது எனலாம். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டில் வளர்ந்த ஆங்கிலக் கல்வி, மேலைத் தேசத்தில் மெதுவாக வளர்ந்து உலகை மாற்றிக்கொண்டிருந்த நவீன அறிவியலை இலங்கை இளைஞர்கள் பெற்றுக்கொள்ள உதவியது. இதைவிட மேலாக, மேலைத் தேசத்தில் வளரத் தொடங்கிய தாராண்மைவாதக் கருத்துகள், மக்களாட்சி முறைகள், தேசியவாதச் சிந்தனைகள் ஆகியவற்றையும் ஆங்கில அறிவின் மூலம் இவ் இளைஞர்கள் பெறத் தொடங்கினர். இவை இந்திய இளைஞர்களை விடுதலை இயக்க வழியில் செலுத்தும் உந்துசக்தியாக அமைந்தன.

இந்தியாவில் போல் அல்லாது, இலங்கையில் ஆங்கிலக் கல்வி ஓர் அடக்கமான, அமைதியான, விசுவாசமுள்ள மத்திய வகுப்பை உருவாக்கியது. இந்த வகுப்பினர் ஆங்கிலேயர் ஆட்சியை மனதார விரும்பியவர்கள். ‘அந்நியர் ஆட்சி எமக்கு வேண்டாம்’ என்று வாய்திறந்து கூறாதவர்கள். பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய பட்டங்களையும் சலுகைகளையும் எதிர்பார்த்தவர்கள். பிரித்தானியர் ஆட்சி அமைப்பைக் குலுக்காது, அதற்குள் தமக்கும் ஒரு பங்கினைப் பெற விழைந்தவர்கள். வேந்தர் இல்லாத, மரபுவழி முதலியார்கள் மறைந்துபோன, மக்களின் அரசியல் தலைவர்கள் தோன்றாத வெற்றிடத்தில் இவ் வகுப்பில் முன்னிலையில் நின்றோர் தம்மைத் தலைவர்களாகக் கருதினர்.

இவ்வாறு ‘பிரித்தானியாவின் அமைதிநிலை’ இலங்கையில் ஒரு சஞ்சலமற்ற சமூக-அரசியல் சூழ்நிலையை உருவாக்கியிருந்தபோது, 1920 களில் அமைதியைக் கலைக்கும் நிகழ்வுகள் இடம்பெறத் தொடங்கின. 

நீண்ட காலமாக முன்னேற்றம் இல்லாது போய்க்கொண்டிருந்த அரசியல் அமைப்பில் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. இவற்றைப் பயன்படுத்தி மேலெழுவதற்கு வாய்ப்புகளைக் கண்டதும், ஒரு செல்வாக்கு மிகுந்த அரசியல் குழு முன்வந்தது. இக் குழுவில் இருந்தோர் பல ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்துக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்.

இவர்களுள் முதலாவதாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் பொன்னம்பலம் அருணாசலம். இவரைப் போன்று முக்கியத்துவம் பெறும் இன்னொருவர் இவருடைய தமையன் பொன்னம்பலம் இராமநாதன். இவர்களுடன் குறிப்பிடத்தகவர்களாக இருந்தோர் டொன் பாரன் ஜயதிலக, ஜேம்ஸ் பீரிஸ், மார்க்கஸ் பர்ணாந்து ஆகியோராவர். இன்று பாடசாலைகளில் மாணவர் படிக்கும் வரலாற்றுப் பாடநூல்களில் இவர்கள் இலங்கையின் சுதந்திரத்துக்குப் போராடியோராக வர்ணிக்கப்படுவர். இவர்கள் அனைவரும் மாட்சிமை தங்கிய பிரித்தானிய மகாராஜா வழங்கிய ‘சேர்’ பட்டத்தை பெற்ற விசுவாசமுடைய பிரஜைகள் என்பதை மனதில் வைத்திருக்கவேண்டும்.

அருணாசலம் அரசியலுக்குப் புதியவர் அல்லர். ஆங்கிலேயர் 1834 இல் இலங்கைக்கு ஒரு சட்டசபையை அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்து அவருடைய குடும்பம் அரசியலில் ஈடுபாடுகொண்டிருந்தது. அருணாசலத்தின் பேரனார் (தாயின் தந்தையார்) முதலாவது சட்டசபையில் தமிழ்ப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர். பின்னர், அருணாசலத்தின் தாயாரின் சகோதரன் முத்துக்குமாரசுவாமி சட்டசபையில் தமிழ்ப் பிரதிநிதியாகக் கடமையாற்றியவர். அருணாசலம் 1870 களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் இருந்தே அரசியலில் அக்கறை காட்டி வந்தவர்.

அரசாங்கத்தில் ஓர் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின் அருணாசலம் கூடுதலாக அரசியல் விஷயங்களில் கவனம் செலுத்தினார். இலங்கை சுயாட்சியை (self-government) பெறுவதற்குத் தகுதி உடையது என்பது அவருடைய நம்பிக்கை. சுயாட்சியைக் குறிக்கோளாக வைத்து இயக்கம் நடத்துவதற்கு 1917 இல் Ceylon Reform League என்ற கழகத்தை நிறுவினார். அதைத் தொடர்ந்து, 1919 இல் முக்கியத்துவம் கூடிய Ceylon National Congress என்ற அரசியல் கழகத்தை அமைத்துச் சீர்திருத்தம் விரும்பிய மத்திய வகுப்புப் பிரமுகர் பலரை ஒன்று கூட்டினார். இவர்கள் அருணாசலத்தையே இக் காங்கிரசின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். 

இக் குழுவில் இணைந்தவர்கள் பெரும்பாலும் பழமைபோற்றும் மரபுவாதிகள் எனலாம். ஆங்கிலக் கல்வி கற்றவர்கள்; வசதிபடைத்த மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள். அரசியல் சீர்திருத்தம் தேவை என்ற ஓர் ஒற்றுமைப்பட்ட கருத்தை விட வேறு அரசியல் விவகாரங்கள் தொடர்பாகக் கருத்தொற்றுமை உடையவர்களாக இருந்தனர் என்று கூறுவதற்கில்லை. அது மட்டுமன்றி, இன அடிப்படையிலான முரண்பாடுகளும் உறுப்பினரிடையே தலைதூக்கத் தொடங்கின. இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்த அருணாசலம், ‘நம் அருமை அன்னைநாடான இலங்கை’ (“our dear Motherland of Lanka”) என்ற நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும், இறுதியில் எதுவிதப் பயனும் கிடைக்கவில்லை.

பிற குழுக்கள்

மேற்கு உலகில் தொழிலாளர் உரிமைகளுக்குப் போராடும் இயக்கங்கள் வலுப்பெறத் தொடங்கிய காலமாக இருந்தபடியால் 1920 களில் இலங்கையிலும் தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கம் ஒன்றும் தோன்றியது. A.E. குணஸிங்ஹ என்ற ஓர் இளைஞர், தொழிலாளர் உரிமைகளின்பால் கவனத்தை ஈர்த்து, 1922 இல் இலங்கையின் முதலாவது தொழிற்சங்கத்தையும் 1928 இல் இலங்கைத் தொழில் கட்சியையும் (Ceylon Labour Party) அமைத்தார். பிற அரசியல் தலைவர்கள் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதை எதிர்த்தபோது, குணஸிங்ஹ அந்த உரிமைக்காகக் குரல் கொடுத்தார்.

ஆனால், இவற்றை விடப் பின்னர் முக்கியத்துவம் பெறும் ஓர் அரசியல் சக்தி 1920 களில் வலுப்பெறத் தொடங்கியது. அது வெளிப்படையாக அப்பொழுது கவனத்தை ஈர்க்கவில்லை. மெதுவாக அது வளர்ந்து, 1950 களில் உச்சகட்டத்தை அடைந்து இலங்கையின் அரசியலை முற்றாகத் திசை திருப்பியது. அதுதான் இன்று நன்கு அறியப்பட்டுள்ள சிங்கள – பௌத்த தேசியவாதம். அதன் எழுச்சிக்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அநகாரிக தர்மபால என்ற பௌத்த சீர்திருத்தவாதி வித்திட்டிருந்தார்.  

கொழும்பில் அரசியல் அரங்கில் காணப்பட்ட நிலைக்கு முற்றிலும் மாறான ஒரு நிலை யாழ்ப்பாணத்தில் 1930 களில் உருவாகி இருந்தது. இந்த நிலையும் 1920 களில் எழுந்த அரசியல் விழிப்பின் விளைவே.

இந்தியாவில் 1920 களில் துரிதமாக முன்னேறத் தொடங்கிய இந்திய விடுதலை இயக்கமும் மகாத்மா காந்தியின் தலைமையில் பிரித்தானியர் ஆட்சிக்கு எதிராக நடந்த சத்தியாக்கிரக நடவடிக்கைகளும் கொழும்பில் இருந்த ‘அரசியல் தலைவர்கள்’ மீது எந்தவிதச் செல்வாக்கினையும் ஏற்படுத்தத் தவறின. ஆனால், அதிசயம் ஊட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில், பழமைபோற்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கு விசுவாசத்துடன் கீழ்ப்படிந்து அமைதியாக வாழ்ந்த சமூகத்தில், இந்திய விடுதலை இயக்கத்தின் தாக்கம் பலமாக வீழ்ந்தது. 

யாழ்ப்பாணத்தில் 1920 களில் ஆங்கிலக் கல்விபெற்ற பல இளைஞர்கள் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் தலைமையில் இந்தியாவில் துரிதமாக வளர்ச்சிபெற்று வந்த விடுதலை இயக்கத்தால் பெரிதும் கவரப்பட்டனர். இலங்கைக்குப் பிரித்தானியர் சுயாட்சி வழங்கவேண்டும் எனத் திடமாக நம்பினர். அதற்காக காந்தியின் வழியில் போராட ஓர் இளைஞர் கழகத்தை நிறுவினர். 1924 இல் அமைக்கப்பட்ட இக் கழகம் Students’ Congress என்றும், பின்னர் Jaffna Youth Congress என்றும் பெயர் பெற்றது. இக் கழகம் 1927 இல் காந்தியை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்தது. அவருடன் கூடவே சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியரும் வந்தார். பின்னர், இக் கழகத்தின் அழைப்பின் விளைவாக 1932 இல் நேருவும் யாழ்ப்பாணம் வந்தார்.

1931 தேர்தல் புறக்கணிப்பு

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தோன்றிய புதிய அரசியல் சூழ்நிலையில் முதல் தடவையாக 1931 இல் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு, அரச சபைக்குத் தேர்தல் நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டன. இந்திய விடுதலை இயக்கத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட யாழ்ப்பாணத்து இளைஞர் காங்கிரசைச் சேர்ந்தோர் மிகுந்த உற்சாகத்துடன் தேர்தலை எதிர்த்து, அதில் எவரும் பங்குபற்றக்கூடாது எனப் புறக்கணிப்புச் செயற்பாட்டில் இறங்கினர். இலங்கைக்குத் தேவைப்படுவது ஒரு சீர்திருத்தப்பட்ட அரச சபை அல்ல; முழுமையான சுயாட்சியே (பூர்ண ஸ்வராஜ்) தேவை எனக் குரல் எழுப்பினர். யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடைபெறவில்லை. யாழ்ப்பாணத்துப் பிரதிநிதிகள் இல்லாது முதலாவது அரச சபை அமைக்கப்பட்டது. 1930 களில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சிகள் அடுத்து வந்த தசாப்தங்களின் அரசியல் போக்கை நிர்ணயிப்பவையாக அமைந்தன.

இறுதிக் கட்டம்

ஆறாம் ஜோர்ஜ் மன்னருடைய முடிசூட்டு விழா 1937 இல் நடந்தபோது ஐரோப்பிய ஏகாதிபத்தியம் என்னும் சூரியன் படுவானை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. 1937 இல் தொடங்கிய தசாப்தம் பிரித்தானியப் பேரரசின் இறுதிக் கட்டமாக அமைந்தது. 1947 இல் பிரித்தானியர் அமைத்த இந்தியப் பேரரசு கைநழுவிச் சென்றது. சில மாதங்களின் பின் இலங்கையும் சுயாட்சியைப் பெற்றது. யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நிலவிய ‘பிரித்தானியாவின் அமைதிநிலை’ மெல்ல மெல்ல நீங்கத் தொடங்கியது. 

தென் ஆசியாவின் எல்லாப் பாகங்களிலும் 1930 கள் ஒரு வரலாற்றுத் திருப்பம் ஏற்பட்ட காலகட்டம் ஆகும். இக் காலகட்டத்தில், 1937 ஒக்டோபர் 22 இல் இணுவில் மகப்பேற்று மருத்துவமனையில் (McLeod Hospital) நான் பிறந்தேன்.


ஒலிவடிவில் கேட்க

1950 பார்வைகள்

About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் மற்றும் நெடுங்கால தொல்லியல் அனுபவம் உடையவரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான வரலாற்று நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்