ஏகாதிபத்திய - பேரினவாதத் தகர்ப்பும் விடுதலைத் தேசிய மார்க்சியமும்
Arts
23 நிமிட வாசிப்பு

ஏகாதிபத்திய – பேரினவாதத் தகர்ப்பும் விடுதலைத் தேசிய மார்க்சியமும்

January 18, 2025 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம், மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல. சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

புலப்பெயர்வடைந்த ஈழத் தமிழர்களின் இதயப்பகுதி எனக் கருதப்படும் கனடாவில் எம்மவர்க்குப் பேரதிர்ச்சி தரும் நிகழ்வொன்று நடந்தேறி வருகிறது. தமது புதிய தாயகமான கனடாவில் மிகக் கடின உழைப்பைச் செலுத்தி உளச் சோர்வுக்கு ஆட்பட நேர்ந்தாலும், அதற்கு ஈடாக வள வாழ்வு கிட்டுவதில் உழைக்கும் ஈழத்தமிழ் மக்களுக்குத் திருப்தி உள்ளது. அதைவிடவும் தமது சுயநிர்ணய உரிமையைக் கனடா அனுமதிப்பதில் அவர்கள் திருப்தி கொள்கின்றனர். ஜனநாயகப் பண்பை விரும்பும் அத்தகைய உழைக்கும் ஈழத் தமிழ் மக்களிடம் கனடா மீதான நியாயமான பெருமதிப்பு நிலவுகிறது. மேலாதிக்கத் தமிழ்த் தேசியப் பிரதிநிதிகளாக ஏகாதிபத்திய நலநாட்டத்தை வெளிப்படுத்துகிறவர்களுக்கு இரண்டக நெருக்குவாரமாக இந்தத் தேசியச் சிக்கல் உணரப்பட வாய்ப்புள்ளது; இந்தச் சிறுபான்மைக் குழுவினரே தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கிகள் என்ற வகையில் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை நாசப்படுத்திக் கொண்டிருப்பவர்கள்; இன்னமும் ‘அடைந்தால் தமிழீழம்’ என்ற முழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு மாறாக உழைக்கும் – ஜனநாயகக் கனடியத் தமிழர்கள் இலங்கை மண்ணில் தமிழினத் தேசியத்துக்கான நீதியான தீர்வை நாடும் எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்பவர்கள். 

மேலாதிக்கத் தமிழ்த் தேசியர்கள் உலகச் சண்டியனாக ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து கோலோச்ச வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருப்பவர்கள். ஆகையால் அவர்கள், சீன வெறுப்பைக் கொண்டுள்ளனர். சீனாவோ சந்தைச் சோசலிச நடைமுறையை முன்னெடுத்து, தேசங்கள் இடையே சமத்துவம் ஏற்படும் வகையில் இரு தரப்பும் ஆதாயம் பெறும் வர்த்தக நடைமுறையைப் பின்பற்றுகிறது. இந்த நிலைப்பாட்டைச் சிங்களத் தேசியம் ஏற்றுக்கொள்கிறது. தனது இறைமையைப் பாதுகாப்பதற்கு, சமத்துவ ஊடாட்டம் உடைய சீனத்துடனான உறவு சாதகமாக அமையும் எனச் சிங்களத் தேசியம் கணித்து இயங்குகிறது. இப்போது அதிகாரத்துக்கு வந்துள்ள புதிய அரசின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பயணத்தை அடுத்த வெளிநாட்டுப் பயணமாக மக்கள் சீனத்தைச் சென்றடைந்துள்ளார். அணிசேராக் கொள்கையை நாசப்படுத்தியவாறு ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியச் சார்புடன் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையைத் தடம்புரளச் செய்து 1977 ஆம் ஆண்டு முதல் யுத்த களேபரத்தில் நாட்டைக் கொண்டு நடாத்திய ஐ.தே.க. அரசாங்கம் கூட மக்கள் சீனாவுடன் நட்புறவைப் பேணத் தவறியதில்லை. ஏகாதிபத்திய அடிவருடிகளைக் கூடத் தேச நலனைச் சிறிதேனும் கவனங்கொண்டு மக்கள் விடுதலை நாட்டமுள்ள தேச அணியுடன் பகைகொள்ளாத செயலொழுங்கைப் பேணும்படி நடந்துகொள்ள நிர்ப்பந்திக்கும் மனப்பாங்கு சிங்களத் தேசியத்தால் ஏற்படுத்தப்பட்டு இருந்தது!

இன்று எதிர்கொள்ளப்படும் உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வழிமுறையைத் தேடுவதை விட, எம்மவரிடம் தனது ‘வாக்கு வங்கியை’ வளர்க்க முற்பட்டது போல சீக்கியர் உள்ளிட்ட ஏனைய சமூக சக்திகளுடனான கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் ஊடாட்டம், கனடா எதிர்நோக்கிய தேசிய நெருக்கடிகளை வளர்க்கவே வழிகோலின. மக்கள் நல அரசுச் செயலொழுங்கினை அதிகம் கொண்டிருந்த முதலாளித்துவ நாடான கனடா எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து அந்த நாட்டின் முதலாளிகளைக் காவாந்து பண்ணுவதிலேயே ட்ரூடோவின் கவனமும் இருந்தது. முதலாளித்துவம் பேணிக் காக்கப்பட்ட பின்னர் ஏனையவை தாமாக வருத்தி அடையும் என்ற அனைத்து முதலாளித்துவ நாடுகளின் நடைமுறையையே ட்ரூடோவும் கடைப்பிடித்தார். அதன்பொருட்டு மக்கள் மீது வரிச் சுமைகளை அதிகப்படுத்தி உழைப்போரை வாட்டிவதைத்த நடைமுறை அவரைப் பதவித் துறப்புக்கு ஆட்படுத்தி இருந்தது.

அதைவிடவும் பிரதானமாக, அறிவிக்கப்படாத ஒரு மாநிலமாகக் கனடாவை இயங்க அனுமதிக்கும் (இயக்கும்) ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய ஜனாதிபதி “கனடாவை ஐக்கிய அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இணைத்துவிடுங்கள்” என்று வெளிப்படையாகச் சொல்வதற்கு வழிவகுத்துள்ளார் என்பது அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அரசியல் பலவீனம் எனக் கருத இடமுள்ளது. சிரியாவுக்கு ‘விடுதலை’ பெற்றுக் கொடுத்து இஸ்ரேலிய இராணுவத்தை அந்த மண்ணுக்கும் உரியதாக விரிவுபடுத்திய இஸ்ரேல், தொடர்ந்தும் பலஸ்தீனத்தை அழித்து மத்திய கிழக்கின் பெரு நிலப்பரப்பில் ‘அகண்ட இஸ்ரேல்’ உருப்பெற ஏற்ற ‘யுத்த முனைப்பில்’ ஈடுபட்டவாறுள்ளது; கார்ப்பிரேட் ஏகாதிபத்திய ஊடக ஊதுகுழல்கள் அத்தகைய யுத்தக் கொடூரங்களை ‘விடுதலையின் பக்கங்கள்’ என நேரடியாகவோ மறைமுகமாகவோ சித்திரித்தபடி உள்ளன. இஸ்ரேலின் மிருகத்தனமான செயல்களை மூடி மறைக்கின்றன, உண்மையைத் திரிபுபடுத்துவதுடன் யுத்தக் குற்றச் செயல்களை ‘முஸ்லிம் பயங்கரவாதிகளே’ மேற்கொள்கின்றனர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றன. அதேவேளை நேட்டோவின் விஸ்தரிப்பு நடவடிக்கையை முறியடிப்பதற்கு அவசியப்பட்ட சூழலில் உக்ரேன் மீது ருஷ்யா தொடுத்த யுத்தத்தை ‘ஆக்கிரமிப்பு’ எனப் பரப்புரை செய்கின்றன; இந்த ‘ஆக்கிரமிப்பு யுத்தம்’ வாயிலாக உக்ரேனை ருஷ்யா விழுங்கிவிடும் வாய்ப்பு உள்ளதாக அங்கலாய்ப்போர் உள்ளனர்.

எமது தமிழ்த் தேசிய அரசியல் அவதானிகள் இந்தப் போக்கினை ‘ஒரே உலக உருவாக்கம்’ ஏற்படுகிற அடையாளம் எனக்கொள்ள ஆசைப்படுவர். இவ்வாறு பிராந்தியங்களில் காணப்படும் பெரிய, பலமான நாட்டுடன் சிறிய அல்லது பலவீனமான தேசங்கள் ஒன்றிணைவதன் பகுதியாக மக்கள் சீனம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தைவானை ‘ஆக்கிரமித்துவிடுவதற்கு’ இடமுள்ளது எனத் தமது அச்சத்தையும் வெளிப்படுத்துவர். ‘தேசிய சீனா’ என்று சிறு தீவான தைவானை அறிவித்து ஐ.நா. சபை உதயமான காலத்தில் அங்கு இடம்பெறச் செய்த ஐக்கிய அமெரிக்கா எழுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இருந்து இன்றைய நிலைப்பாட்டுக்கு மாறியிருந்தது; “மக்கள் சீனத்தின் பிரிக்க இயலாத ஒரு பகுதிதான் தைவான், அந்த மக்கள் சீனா தவிர இரண்டாவதாகிய தேசிய சீனா என்ற இன்னொரு தேசம் கிடையாது, ஐ.நா. சபையில் இனிமேல் மக்கள் சீனத்துக்கே அங்கத்துவம்” என ஏற்றுக்கொண்டு, “தனியொரு நாடாக அங்கீகரிக்கப்படாத தைவானுடன் வரையறுக்கப்பட்ட உறவுகளை மட்டும்” பேணி வருவோம் என்ற வாக்குறுதியை ஐக்கிய அமெரிக்கா மீறுகிற போது ‘சீனா தைவானை ஆக்கிரமித்துவிடும்’ என்ற அச்சத்தை ஊடக ஊதுகுழல்கள் முடுக்கிவிடும். எழுபதுகளில் எட்டப்பட்ட ஏற்பாட்டை பின்னர் அதிகாரத்துக்கு வந்த எந்தவொரு ஐக்கிய அமெரிக்க அரசாங்கங்களும் நிராகரிக்காமலே தான் உடன்பாட்டு மீறல்களை மேற்கொள்கின்றனர். தனது ஏகாதிபத்திய நலனுக்காகத் தனிமைப்பட்டு இருக்கும் சிறிய தீவான தைவானைத் தொடர்ந்தும் கையாளும் அந்த ஐக்கிய அமெரிக்க மேலாதிக்க வல்லரசே ஏற்றுகொள்வதாக உள்ள தனக்கான ஒரு பகுதியை மக்கள் சீனம் தன்னுடன் மீண்டும் இணைப்பதனை ‘ஆக்கிரமிப்பு’ எனக் காட்டுகிறவர்கள் மிகப் பெரும் நாடொன்றைத் தனது மாநிலமாக மாற்றக் கோருவதனை ‘ஒரே உலக உருவாக்கத்துக்கான அடையாளம்’ எனப் புளகாங்கிதம் கொள்வர்.

இவ்வாறு ஆக்கிரமிக்கப்படுதலோ இணைக்கப்படுதலோ இடம்பெறும்போது மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு வலுசேர்க்க இடமளிக்காது இருப்பதென்பது, அவ்வாறு சேர்ந்து இயங்க நிர்ப்பந்திக்கப்படுகிற ஒவ்வொரு தேசத்தின் கைகளில் தான் தங்கியுள்ளது. மக்கள் சீனா தனது ஆளுகைக்கு உட்பட்ட இனத் தேசியங்கள் ஒவ்வொன்றினதும் ‘பிரிந்து செல்ல இடமற்றதான சுயநிர்ணய உரிமையை’ அங்கீகரித்து இயங்குவதானாலேயே இன்று மிகப் பெரும் பொருளாதார சக்தியாக மேற்கிளம்பி வர இயலுமாக ஆகியுள்ளது. பெருந்தேசிய ஹான் இனத்தவர்களைக் கொண்டுள்ள ஹொங்கொங்கை இணைக்கும்போது விசேடித்த வரலாற்றுக் காரணங்களை மனங்கொண்டு ‘ஒரு நாட்டினுள் இரு அமைப்புகள்’ என ஹொங்கொங்கின் முதலாளித்துவ முறைமை அவ்வாறே தொடர்வதற்கு இடமளித்துள்ளது மக்கள் சீனம். தைவான் கூட இணைப்பின் பின்னர் அத்தகைய சுயநிர்ணய உரிமை உடைய பிரதேசமாக இயங்க அனுமதிக்கப்படும் என்ற உறுதிமொழியை மக்கள் சீனம் வழங்கி உள்ளது.

நிலப்பிரபுத்துவ – காலனித்துவக் களங்களில் வரலாற்று நிர்ணயிப்பும் புரட்சியின் கோரிக்கையும்

நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பைத் தகர்த்தவாறு தத்தமக்கான தேசங்களைக் கட்டமைக்கும் சுயநிர்ணய ஆற்றல் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இருந்தது. அந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளாலும் ஜாரிஸ ருஷ்யாவாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வள அபகரிப்புக்கு ஆட்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் முதலாளித்துவ எழுச்சி தமக்கான தேசத்தைக் கட்டமைக்க இயலாமல் பலவீனப்பட்டு இருந்த போதே அந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கொம்யூனிஸ்ட் கட்சிகள் கூரிய வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் வரலாறு இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களிலேயே தோற்றம் பெற்றிருந்தது.

அதன் போது போல்ஷ்விக் (ருஷ்யக் கொம்யூனிஸ்ட் கட்சி) அமைப்பின் தலைவர் லெனின், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை முன்வைத்தார். தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிக்கொண்டு இருந்த போலந்து, ஹங்கேரி போன்ற கிழக்கு ஐரோப்பியத் தேசங்கள் மற்றும் ருஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த மேற்கு ஆசிய நாடுகள் என்பன பெரிய வல்லரசாக உள்ள ஒரு நாட்டுடன் இணைந்து இருப்பதா, தனித்துப் பிரிந்து செல்வதா என்பதனை ஒடுக்கப்பட்ட தேசங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதை லெனினது சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு முன்னிறுத்தி இருந்தது. சோவியத் யூனியனை வென்றெடுப்பதில் இந்தக் கோட்பாடு வகித்த பாத்திரம் குறித்துப் பேசி வந்துள்ளோம். சோவியத் உருவாக்கத்தின் உத்வேகம் ஏனைய ஆசிய – ஆபிரிக்க நாடுகள் எழுச்சி பெற்று விடுதலைப் போராட்டங்கள் வாயிலாக இறைமையும் சுயாதிபத்தியமும் உடைய தேசங்களாக உருவாகிய வரலாறு பற்றி அறிவோம்; சென்ற நூற்றாண்டின் பின்னரைப் பகுதி அத்தகைய புதிய தேசங்கள் நிலைபெற முன்னெடுத்த எத்தனங்களுக்கு உரியதாக அமைந்தது!

இவ்வகையில் உருவான ஆசிய – ஆபிரிக்கக் கண்டங்களுக்கு உரிய பல தேசங்கள் தாமே வடிவமைத்த வண்ணம் உருவாகியவை அல்ல. மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் காலனிகளாக ஒடுக்கி ஆளும்போது வடிவப்படுத்திய ஒவ்வொரு நாடுகளும் அதே வடிவத்தில் தேசிய விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்ததன் வாயிலாக அந்தத் தேசங்கள் உருப்பெற்றன. அப்போதும் கூட, எதிர்காலத்திலும் தமது கட்டுப்பாட்டுக்குள் ‘விடுதலை பெற்ற’ தேசங்கள் நவ காலனித்துவச் செயலொழுங்குப் பிரகாரம் இயங்க ஏற்றதான ‘தேச எல்லை’ நிர்ணயிப்புகளை ஏகாதிபத்தியங்கள் நிறைவேற்றின. ஒரே மொழி, பண்பாடு என்பவற்றுடன் இணைந்த வரலாற்றுத் தொடர்ச்சியையும் கொண்டு இயங்கிய அரபுப் பிரதேசத்தைப் பல தேசங்களாகச் சிதறடித்தனர். பல மொழிகளும் வேறுபட்ட வரலாற்றுத் தொடர்ச்சிகளையும் கொண்டு இயங்கிய இந்திய உப கண்டத்துக்கு உரிய பல்வேறு தேசங்களை ஒன்றிணைத்து ‘இந்தியத் தேசம்’ என ஒன்றாகக் கட்டமைத்தனர். அங்கேயும் சுதந்திரத்தை வழங்க வேண்டி வந்தபோது, நீண்ட பகையுடன் மோதலைத் தொடர ஏற்ற எல்லைப் பகுப்புடன் பாகிஷ்தானைப் பிரித்துத் தனித்தேசமாக உருவாக்கினர்.

இதனை வைத்து “இந்தியா என்பதனை ஒரு நாடு என்றோ ‘இந்தியத் தேசம்’ என்றோ கூறுவது பொருந்தாத விவகாரம் – பல தேசங்களுள்ள உப கண்டமே இந்தியா என்று அழைக்கப்படுகிறது” எனச் சொல்லும் ஆய்வுகள் இன்று மேலோங்கி உள்ளன. விடுதலை நாட்டமுள்ளோரை அவ்வாறு சோர்வுபடுத்துவதாக ‘இந்தியத் தேசக்’ கனவு பொய்யாய், பழங்கதையாய் போயிருப்பது மெய். அதற்காக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் உக்கிரத்தில் பெரும் உத்வேகத்துடன் விடுதலை வேட்கை கனன்றெரியப் பலரையும் தியாக நெருப்பில் ஆகுதியாய் – தம்மைத் தாமே அர்ப்பணம் செய்து – களமாடத் தூண்டிய ‘இந்தியத் தேசிய உணர்வு’ வெறும் மாயை என ஆகிவிடாது. எழுபதாம் ஆண்டுகள் வரை ‘இந்தியத் தேசிய உணர்வு முதல் நிலை’ பெற்றும், அடுத்தபடியாகவே தத்தமது இன அடையாளத்துக்குரிய தமிழர், மலையாளி, மராட்டியர் என்ற புரிதலுடன் வாழ்வியல் அமைந்திருந்தது. வெகுஜனத் தளத்தில் அந்த மொழி வேறுபாடு என்பதை இனத்தேசிய இருப்பாக உணர்ந்ததுமில்லை. அப்போது ‘இந்தியத் தேசத்தினுள்’ இனத் தேசியங்களின் இருப்புப் பலராலும் புரிந்துகொள்ளப்படவில்லை; இன்று இனத் தேசியங்களே ‘உண்மைத் தேசங்களாக இயலும்’ என உணரும்போது இவற்றை உள்ளடக்கிய ‘இந்தியத் தேச’ நிதர்சனத்தைக் கண்டுகொள்ள மறுக்கின்றனர்; முழுமையைக் காணும்போது பகுதிகளும், பகுதிகளை மட்டுமே பார்க்கும்போது முழுமையும் கவனத்தில் எடுக்கப்படாத தவறு  பலரிடமும் ஏற்படுகிற ஒன்றுதான். “நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்ற கதையும் தான்!

நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் உச்சநிலையில் அதிகாரம் பெற்றிருந்த தரப்புகளுக்குப் புதிய தேடல்களை நோக்கிப் பயணிக்க அவசியமற்ற வளப் பெருக்கம் எங்கள் மத்தியில் அப்போது இருந்தது. ஐரோப்பாவில் புதிய எழுச்சியாக வணிக நாட்டத்தின் உந்துதல் நாடுகாண் வீரர்களைத் தூண்டி அவற்றை மேன்மைப்படுத்தும் சமூக – அரசியல் மாற்றத்தின் அவசியம் உணரப்பட்ட போது தோற்றம்பெற்று வளர்ந்த முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ – முடியாட்சியைத் தகர்த்து “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற இலட்சிய தாகமுடைய தேசங்களைக் கட்டமைக்கத் தூண்டியது. அவர்களால் காலனித்துவ நாடுகளாக கட்டமைத்து நிர்வகிக்கப்பட்ட எமக்கான வரலாறு நிலப்பிரபுத்துவத்தைத் தகர்ப்பதாக மட்டுமன்றிக் காலனித்துவ நுகத்தடியையும் தூக்கியெறிய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருந்தது. பழைய பாணிகள் அனைத்தையும் துடைத்தெறிந்து புதிய வாழ்வியல் உருவாக்கங்களை மேற்கில் தோன்றிய முதலாளி வர்க்கம் வெளிப்படுத்தியாக வேண்டியிருந்தது; அதன் பேரில் தத்தமது சொந்தத் தேசங்களில் மத்திய காலக் கிறிஸ்தவ மதப் பிடிப்பு ‘இருண்ட யுக அறியாமையில்’ மக்களை ஆட்படுத்தி இருந்த காரணத்தால் தமது தேச எல்லையைக் கடந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பியச் சிந்தனை ஊற்றாக அமையும் வகையில் கிரேக்க – ரோம் ஆகியன உருவாக்கி வளர்த்திருந்த அறிவியல் தேடல்களை மீட்டெடுக்க அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தனர். அந்தவகையில் மேற்கின் ஒவ்வொரு தேசமும் முற்றாகவே புதியன படைக்கும் ஆர்வத் தூண்டலுக்கு முன்னுரிமை வழங்கின.

அதே பார்வை வீச்சுடன் கூடவே எம்மீதான மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் பொருட்டும், தாம் காலனியப்படுத்திய எமது மண், பழைய சிந்தனை முறைமையில் தேங்கிப் போனதாகக் கற்பித்தனர். அவர்கள் முன்னெடுத்த முதலாளித்துவ நடைமுறையின் வீறுமிக்க விஞ்ஞான – தொழில்நுட்ப விருத்திகள் உலகைப் புரட்டிப் புதிதாய்ப் புனைந்த பின்னர் அவர்களது பரப்புரைகளை நம்பத் தொடங்கினோம்; எமக்கு பழைய எதுவுமே வலுவற்றனவாக இருந்ததான காலனித்துவ மனப்பாங்கு ஒரு நூற்றாண்டாக வளர்ந்த நிலையிலேயே இங்கு தேசிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டி இருந்தது. இவ்வகையில், எமக்கான தேசியப் புரட்சியின் அடிப்படையே ‘முன்னரிருந்த மேலான வாழ்வியல் – பண்பாட்டு வளம்’ உணரப்பட்டு, அவற்றை மீட்டுருவாக்க வகைசெய்வதன் வாயிலாக விடுதலை உணர்வை வளர்க்கத் தூண்டுவதாக அமையலாயிற்று. ஐரோப்பாவில் மத்தியகாலக் கிறிஸ்தவ மதம் அறிவியல் தேடலைத் தடை செய்திருந்தது. அதற்கு மாறாக ஆசிய மதங்களான இஸ்லாம், இந்து, பௌத்தம் ஆகிய மதங்கள் சமய நம்பிக்கைகளுக்குக் கட்டுப்பட்டபடி அறிவியல், தொழில்நுட்ப விருத்தியை மேற்கொள்வதற்குத் தடையற்ற நடைமுறையை மேற்கொண்டன. அந்த உணர்வுந்தலுடன் விவேகானந்தர், அநகாரிக தர்மபாலர், ஆறுமுக நாவலர் போன்றோர் ‘கிறிஸ்தவப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிராக’ எமக்கான பண்பாட்டுத் தேசிய விழிப்புணர்வை விதைத்தனர். ஆக, எமக்கான சமூக மாற்றம் என்பது நிலவிவந்த இருப்பை முற்றாகத் தகர்ப்பதாக அன்றிப் பழையன மாற்றிப் புதிதாய் வடிவமைத்து இணைந்ததான புதுமைப் புத்துருவாக்கமாக அமைந்தது!

மாற்றத்துக்கான உந்து சக்தியாக விடுதலைத் தேசியக் கோரிக்கை

பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தியத் தேசத்துக்கு உட்பட்ட பல இனத் தேசியங்களை ஒன்றுபடுத்துவதற்கு முன்னர் அதற்குரிய அடிப்படைகள் எதுவும் இல்லாமல் இல்லை. இந்து விடுதலை நெறிப் பிரயோகத்துடன் கங்கை முதல் கன்னியாகுமரி வரை பயணித்து, இந்தியாவினுள் மட்டுமன்றி உலகுக்கும் இந்துமதச் செய்தியைப் பரப்புரை செய்ய ஏற்றதாக இந்தியா இந்து மத அடிப்படையில் ஒன்றிணைந்த பண்பாட்டுத் தேசமாக விளங்கி இருந்தது. தமிழகத்தின் தூண்டுதலுடன் சிக்காக்கோவுக்குப் பயணித்து உலக மத மாநாட்டில் இந்து மத விளக்கத்தை வெளிப்படுத்திய போது விவேகானந்தருக்குச் சைவசித்தாந்தம் பற்றிய புரிதல் பெரிதாக இருந்ததில்லை. வெற்றியாளராக இலங்கை வழியாகத் தமிழகம் திரும்பிய போது (யாழ்ப்பாணம், தமிழகம் ஆகிய) இரு இடங்களிலும் சைவசித்தாந்த மகிமை குறித்து விவேகானந்தருக்கு விளக்கப்பட்டது. அதனை மதித்து ஏற்ற அதேவேளை தனது வேதாந்தத்துக்கும் சைவசித்தாந்தத்துக்கும் சமரசம் ஏற்படுத்தி இந்துத் தத்துவத்தின் இரு பரிமாணங்களாக அவற்றை வலியுறுத்துவதில் அவருக்குச் சிரமம் ஏதும் இருந்திருக்காது. ஏற்கனவே தமிழகத்தில் இரண்டினது இணைவுடன் சமரச சன்மார்க்க நெறிகள் உருவாகி இயங்கி வந்தன.

இந்து மதப் பண்பாட்டு ஒருமையின் இழையோட்டமாக இந்தியா முழுமைக்குமான ஒரே சமூக சக்தியான பிராமணர் எனும் திணை (முழுச் சமூக சக்தி) தமக்குள்ளான சமஸ்கிருதத்தைத் தேசிய ஒருங்கிணைப்பின் மொழி ஊடகமாகப் பயன்படுத்தி இந்தியாவை ஒன்றிணைத்து வைப்பதற்கு அடிகோலினர் (வணிக ஆற்றலுடன் திகழ்ந்த தமிழ் வர்த்தகத் திணை, இந்தியாவினுள்ளே மட்டுமன்றிக் கடல்கடந்த தேசங்களுடனும் தமிழினூடாக அன்றி சமஸ்கிருதத்தையே அன்றைய ‘உலக மொழியாக’ ஏற்றுப் பிறருடனான ஊடாட்டத்தை மேற்கொண்டிருந்தது என்பதை மனங்கொள்வது அவசியம்).

இந்திய சுதந்திரத்துக்கு என உதயமான காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிராமணர்கள் என்பது தற்செயலான ஒன்றல்ல. இவ்வகையில், பிராமணத் திணையின் மேலாதிக்கத்துடன் உருவான காங்கிரசில் நிலவிய பிராமணத் தேசிய நிலைப்பாடு நீடித்துத் தொடர்ந்திருப்பின் ஒரே தேசமாக இந்தியா விடுதலை பெறுவது கேள்விக்குறியாக ஆகியிருக்கும். முதல் தேசிய எழுச்சி 1906 – 1908 ஆம் ஆண்டுகளில் வீறுபெற்று எழுவதற்கு திலகர் தலைமையிலான பிராமணத் தேசிய முன்னெடுப்பே வழிகோலி இருந்தது. அதன் உத்வேகத்தில் விடுதலைப் போராட்ட அரங்குக்கு வந்த அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து, தொடர்ந்து வளர்த்து எடுப்பதில் பிராமணரல்லாத (வைசியரான) காந்தியின் ‘தாராளவாத அரைப் பிராமணத் தேசிய’ முன்னெடுப்பு உதவி நல்கியிருந்தது.

திலகர் தலைமையிலான முதலாவது தேசிய எழுச்சிக் காலத்தில் தமிழகத்தில் முதன்முதலாக மிகப்பெரும் மக்கள் எழுச்சியைத் தலைமை தாங்கி நடாத்துபவராகப் பிராதணரல்லாத காங்கிரஸ் தலைவர் வ.உ.சி. திகழ்ந்தார். அதன்பொருட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் கைது செய்யப்பட்டு மிக மிக அதிக காலச் சிறைத் தண்டனையைப் பெற்றவராக வ.உ. சிதம்பரனாரே இருந்துள்ளார். தமிழகத்தின் தூத்துக்குடி – திருநெல்வேலி எழுச்சிக்குப் பின்னர் வட இந்தியாவில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்துக்காகத் திலகர் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்ட செய்தியே உலகறிந்ததாக இருந்தது. அந்தத் தேசிய விடுதலைப் போராட்டம் லெனினது கவனத்துக்கும் வந்தது. இரண்டாவது தேசிய எழுச்சி (1919 – 1921) காந்தி தலைமையில் பேரலையாக அடிநிலை உழைக்கும் மக்களையும் வரலாற்றரங்குக்கு வெளிப்படுத்திய போது, அந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து இயங்குமாறு எம்.என் ராயிடம் லெனின் கேட்டிருந்தார்; ஒரு ‘இந்துப் பாசிஸவாதியாக’ காந்தியைக் கருதிய எம்.என். ராய் லெனினது கோரிக்கையை நிராகரித்து இருந்தார்.

ஆயினும் பாரதி, காந்தியின் வெகுஜனக் கிளர்ச்சி ஆற்றலைக் கண்டு குதூகலித்தார். உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து உள்ளமையால் காந்தியின் தலைமையில் ‘இந்திய விடுதலை கடிதில் கிட்டும்’ என்று கவியாத்து வாழ்த்தினார் பாரதி. முன்னதாக வ.உ.சி. தலைமையேற்று முன்னெடுத்த தமிழக எழுச்சியிலும் (ஒப்பீட்டு ரீதியில் வட இந்தியாவைக் காட்டிலும் அதிகளவான) உழைக்கும் மக்கள்  பங்கேற்றனர் என்ற ஆர்வத் தூண்டலுடன் வ.உ.சி.யையும் ‘வரப்போகும் சுதந்திரப் பாரதத்தையும்’ வாழ்த்திப் பாடியவர் பாரதி. அந்த முதல் எழுச்சியின் உந்துதலில் விடுதலை எட்டப்போவதைத் தீர்க்கதரிசனத்துடன் வெளிப்படுத்தும்போது மக்கள் விடுதலையின் பேறாக “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே” எனப் புதிய இந்தியச் சமுதாயம் அமைந்தாக வேண்டும் என்று கட்டியம் கூறினார்!

இந்தியத் தேசிய விடுதலை எட்டப்பட்டதாயினும் பூரண மக்கள் விடுதலை சாத்தியப்பட்டு இருக்கவில்லை என்பதை அறிவோம். சுதந்திரம் அறிவிக்கப்பட்டவுடன் அகில இந்திய வானொலி நாற்பது வருடங்களுக்கு முன்னரே பாரதி (எவரும் கற்பனை பண்ணியிருக்காத காலத்திலேயே) தீர்க்கதரிசனமாகப் பிரகடனப்படுத்தி இருந்த “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்ற பாடலை ஒலிபரப்பிய போது அந்தக் கவிதையின் இரண்டு அடிகளைக் கத்தரித்து இருந்தது. “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே” என்பது நிதர்சனத்தில் இல்லை என்பதால், அவ்விரு அடிகளும் நீக்கப்பட்டு இருந்தன. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கத்துடன் ஐரோப்பாவில் தேசிய விடுதலை எழுச்சி சாத்தியப்பட்டதாயினும் சுதந்திரமும் சமத்துவமும் முதலாளிகளுக்கும் அவர்களுக்கு இடையிலும் என்பதாகக் குறுகிப் போயிருந்தது. எனினும் தேசிய விடுதலை முழுமை பெறத்தக்க ‘விடுதலைத் தேசியமாக’ (சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி எனும், எதிர்பார்க்கப்பட்ட இலட்சியத் தேசியப் பண்புகளுடன்) சாத்தியமாகும் போது மக்களுக்கானதாக வந்தமையும்!

புராதனப் பொது உடமைக் கூறுகளுடன் திகழும் (ஆசிய உற்பத்தி முறைக்கு உரிய) இந்தியாவில் பூரண சமத்துவம் முதலில் கிட்டும் என்ற நம்பிக்கை பாரதியிடம் இருந்தது. வரலாறு தமது எதிர்பார்ப்புகளையும் பொய்ப்பித்துப் புரட்சி அலை கிழக்கு நோக்கி நகர்ந்த போது கார்ல் மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறை குறித்து மறு வாசிப்புக்கு முற்படலானார். மேற்கு ஐரோப்பாவில் சாத்தியமாகும் புரட்சி எழுச்சி, உலக நாடுகள் அனைத்தையும் பொதுவுடமை அமைப்புக்கு வழிப்படுத்திவிடும் என மார்க்சிய மூலவர்களான கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் கருதி இருந்தது போலன்றி ருஷ்யாவில் முன்னதாக சமூக மாற்றப் புரட்சி சாத்தியப்படவுள்ளதனைக் கவனம் கொண்டனர். ருஷ்யாவிலும் பிற நாடுகளிலும் நிலவிய பொதுவுடமைக் கூறுகள் அடங்கிய ஆசிய உற்பத்தி முறைமையை ஆராய்ந்த மார்க்ஸ் “வரலாற்றில் எதிர்பாரா நிகழ்ச்சிகள் நடப்பது குறித்து வர வர அதிகமாக உணர்வு விழிப்புற்றார்” என்பர் (மைக்கேல் லெபோவிட்ஸ், “ஒப்புரவு எனும் மாற்று: மெய்யான மாந்த மேம்பாடு”. தமிழில்: பரிதி, விடியல் பதிப்பகம், கோவை – 641015. பக். 130-131).

பொருந்தாத திறப்பு : மாற்று(ம்) வழி

வர்க்கங்களாகப் பிளவடைந்த ஐரோப்பியச் சமூக முறைமை குறித்தே கவனம் குவித்திருக்கும் வகையில் புரட்சி எழுச்சி மேற்கு ஐரோப்பாவில் நிலவிய காலத்தில் மார்க்சிய மூலவர்களின் ஆய்வுகள் இடம்பெற்று இருந்தன. வரலாற்றுச் செல்நெறியில் பாரிய மாற்றம் ஏற்படும் போது அவர்களது வாழ்வின் இறுதிக் கட்டமாகி இருந்தது. மாற்ற வேகத்துடன் மனதைச் செலுத்திய லெனின், ஏகாதிபத்திய அபகரிப்பில் திளைக்கும் மேற்கு ஐரோப்பாவில் முன்னதாகச் சமூக மாற்றப் புரட்சி வெடிக்கட்டுமெனக் காத்திராமல், தனியொரு நாடான ருஷ்யாவில் சோசலிச முன்னெடுப்பைத் தொடங்குவதற்கு இயலும் எனக் கண்டு காட்டினார். ருஷ்யப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் சோவியத் எனும் கூட்டமைப்புகள் அதிகாரம்பெற வழிகோலி இருந்தது. ஒடுக்கப்பட்ட தேசங்கள் தமக்கான விடுதலையின் ஊடாக நேரடியாகச் சோசலிசத்தைக் கட்டமைப்பதற்கான காலம் கனிந்துள்ளதை, சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உதயமாகி இரண்டு ஆண்டுகளின் பின்னர் ருஷ்யாவில் இடம்பெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் லெனின் பிரகடனம் செய்திருந்தார்.

லெனினிசத்தைத் தான் கையேற்கக் காரணமாக அமைந்தது அவர் முன்வைத்த அந்தப் பிரகடனத்தைச் சாத்தியமாக்க முற்பட இயலுமென உணர்ந்தமையாலே தான் என்று பின்னர் வியட்நாமின் விடுதலைத் தேசிய மார்க்சியப் பிரயோகப் புரட்சித் தலைவர் ஹோசிமின் கூறியிருந்தார். சீனப் புரட்சியிலும் அதன் பிரயோகம் மாஓ சேதுங் சிந்தனை என மார்க்சிஸம் – லெனினிஸத்தை வளர்த்தெடுக்க வழிகோலி இருந்தது.

ஆயினும், வரலாற்றுச் செல்நெறியில் அடியந்தமான மாற்றம் ஏற்பட்டமை குறித்துக் கவனம் குவிக்கப்படவில்லை. சோவியத் யூனியனது தகர்வுக்கு இந்தப் புரிதலின்மையே காரணம். இந்தப் பக்கம் உலக மார்க்சியர்களால் இன்னமும் கண்டுகொள்ளப்படாத காரணத்தால் இரண்டாம், மூன்றாம் பட்சக் காரணங்களைப் பிரதானமானதாக காணும்போக்கு வலுப்பெற்று உள்ளது. மார்க்சியத் திணை அரசியல் சிந்தனை நெறியைப் பிரயோகிக்கையில், ருஷ்ய ஒக்ரோபர் புரட்சியானது தனியே பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமன்றி ஒடுக்கப்பட்ட தேசங்களாலும் முன்னெடுக்கப்பட்டதெனக் காண்போம். பாட்டாளி வர்க்கம் வரலாறு படைக்கும் உந்துசக்தி என்பதாக, திணை அரசியல் செல்நெறிக்கு உரிய ஒடுக்கப்பட்ட திணையின் வரலாறு படைக்கும் ஆற்றலும் இணைவும் கண்ட சந்தியாக ருஷ்ய ஒக்ரோபர் புரட்சி அமைந்தது; முன்னர் பாட்டாளி வர்க்கமே சோசலிசம் படைக்கும் என்ற வரலாற்று வாய்ப்பு அற்றுப்போய், ஒடுக்கப்படும் தேசங்களின் வரலாறு படைக்கும் உந்துசக்தி அப்போது அரங்கேறியது. இலங்கையினதும் அதனுள்ளே பேரினவாதச் செயலொழுங்குகளுக்கு எதிராகப் போராடும் இனத் தேசியங்களும் இந்தப் புரிதலுடன் மார்க்சியச் சுயநிர்ணய உரிமைப் பிரயோகம் குறித்த கற்றலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்!

இந்த வரலாற்றுச் செல்நெறி மாற்றம் கவனங்கொள்ளப்படாமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரப் பிரயோகத்தை மேற்கொண்டதானாலே தான் சோவியத் யூனியன் தகர்ந்து போக நேர்ந்தது. ஏகாதிபத்தியம் நவகாலனித்துவச் செயலொழுங்கில் எம்மைச் சுரண்டுவதே அடிப்படை முரண்பாடு எனக் கண்டுகொள்ளாமல் வர்க்கவாத அணுகுமுறையில் எமது தேசங்களில் முன்னெடுத்த மார்க்சியப் பிரயோகங்களும் எதிர்நிலைப் பயன்பாட்டை ஏற்படுத்தின. எண்பதாம் ஆண்டுகளில் இருந்து இனத்தேசிய, தலித்தியவாத முன்னெடுப்புகள் வளர்வதற்கு மார்க்சியர்கள் வெறும் வர்க்கவாத முடக்கத்தில் இருந்தமையும் அடிப்படைக் காரணமாகும்.

இவை குறித்து, இந்தத் தொடரின் நிறைவுரையாக அமையவுள்ள அடுத்த சந்திப்பில் அலசுவோம்!


ஒலிவடிவில் கேட்க

2210 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்