மலரவனின் ‘போர் உலா’ (War Journey) 
Arts
10 நிமிட வாசிப்பு

மலரவனின் ‘போர் உலா’ (War Journey) 

January 22, 2025 | Ezhuna

ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. போர் ஒரு கொடுங்கனவாய் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிமித்தம் ஏற்பட்ட உடல்/உள வடுக்கள் இன்னும் இல்லாமல் போகவில்லை. இனங்களிடையே நல்லிணக்கம் மட்டுமில்லை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் கூட போரால் வெற்றி கொள்ளப்பட்ட அதிகாரத் தரப்பால் நிகழ்த்தப்படவில்லை. இன்னுமின்னும் இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு இனங்களும் துவிதங்களாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈழத்துப் போர்ச்சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட பனுவல்களை முன்வைத்து வாசிப்புச் செய்யப்படுகின்ற ஒரு தொடராக ‘இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்’ அமைகின்றது.

‘போர் உலா’ 1990 களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த மலரவன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல். ஆங்கிலத்தில் இது ‘War Journey’ என மொழியாக்கம் செய்யப்பட்டு பெங்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 1990 ஆம் ஆண்டு மாங்குளத்தில் இருந்த சிங்கள இராணுவ முகாமைத் தகர்ப்பதற்காய் மணலாற்றிலிருந்து செல்கின்ற போராளி அணியின் கதையைச் சொல்கின்றது.

மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் 2000 பீரங்கிப்படையில் முன்னணிப் படைவீரராக இருக்கிறார். இது இயக்கத்தின் உள்ளூர்த் தயாரிப்பு மோட்டார்களைக் கொண்டிருந்தது. யாழ் கோட்டையை அன்று இயக்கம் கைப்பற்றியதில் இந்தப் படையணியின் பங்கும் அளப்பரியது என்பதை அன்றைய காலத்தில் ஈழத்தில் இருந்த பலர் அறிவர். அந்த பீரங்கிப் படையணியில் ஒருவராக, மோட்டார்களை தளம் விட்டுத் தளம் நகர்த்துகின்றவராக மலரவன் அன்றைய காலங்களில் செயற்பட்டார்.

மணலாற்றில் இருந்து பீரங்கிகளையும் நகர்த்த வேண்டும். அதேசமயம் இலங்கை இராணுவத்தின் விமானங்களின் கண்களுக்கும் தெரியக்கூடாது. இதை நகர்த்தும்போது சாதாரண மக்களும் காணக்கூடாது. இல்லாவிட்டால் ஒரு தாக்குதல் நடக்கப்போகின்றது என்ற செய்தி பரவி, முழுத்தாக்குதலுமே தோல்வியில் முடியும் ஆபத்து இருக்கின்றது.

மலரவனும், அவரது தோழர்களும் மணலாற்றிலிருந்து மாங்குளம் நோக்கி ஐந்தாறு டிராக்டர்களில் பயணத்தைத் தொடங்குகின்றனர். காட்டுப் பாதையில் இரவில் நகர்கின்ற டிராக்டர்களை ஹெலி துரத்தித் சுடும்போது அவர்கள் தப்பினாலும், அருகிலிருந்த குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் இறக்கவும், காயமடையவும் நேருகிறது. அந்த இழப்பின் துயரத்தோடு அவர்கள் பயணத்தைத் தொடர்கின்றபோது, டிராக்டரின் ஸ்டிரியங் இடைநடுவில் உடைய, அவர்களோடு வந்த ஒரு தோழன் படுகாயமடைகின்றான். அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தபின்னர், பயணம் தொடர்கின்றது.

மலரவன், தனியே போர் சம்பந்தமான விடயங்களைக் கூறாமல் அவர்கள் வழியில் சந்திக்கும் மனிதர்களையும், அன்றைய வன்னியின் இயற்கை அழகையும் விரிவாக விபரித்துச் செல்கின்றார். ஒருவகையில் இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்பான வன்னிநிலப்பரப்பை நாம் இந்நூலினூடாகத் தரிசிக்கின்றோம். இவர்களுக்கு உணவில்லாதபோது அள்ளியள்ளி உணவளிக்கின்ற தாய்மார்களையும், அள்ளியணைக்கின்ற குழந்தைகளையும் பார்க்கின்றோம். அந்த மக்களுக்கு இலங்கை/ இந்திய இராணுவங்களால் தனிப்பட்ட இழப்புகள் நிகழ்ந்திருந்தாலும் போராட்டம் மீதும், போராளிகள் மீதும் அவ்வளவு பற்றுறுதியுள்ளவர்களாக இருப்பதைக் காண்கின்றோம்.

இவர்கள் அணியினர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தைத் தாண்டும்போது மலரவனுக்கு 1986 இல் நடந்த நிகழ்வுகள் மனதுக்குள் ஓடத் தொடங்குகின்றன. அந்த பொலிஸ் நிலையத்தில்தான் இராணுவம் இவரின் மூத்த சகோதரனைப் பிடித்து வைத்திருக்கின்றனர். தமையன் பிடிபட்ட நான்காம் நாள் விடிகாலையில் தாயும் மலரவனும் முகாமிற்குச் சென்றதை மலரவன் எழுதியிருப்பது, இப்போது வாசித்தாலும் வாதையை உண்டுபண்ணக் கூடியது. மலரவன் இவ்வாறு எழுதிச் செல்கின்றார்:

“எங்க அண்ணனைப் பிடிச்சுக் கொண்டு போய் நாலாம் நாள் விடிய ஒரு ஆறுமணியிருக்கும். முதலாவது பஸ்சில வந்திட்டம். விடிய சரியான பனி, மரமே நடுங்கும். வந்து சென்றியக் கேட்டுக்கொண்டு சும்மா நிற்க, நான் பார்த்தன். முள்ளுக் கம்பி இருக்கல்லே, அதை நிலத்துக்கு மேல அரையடி உயரத்தில அடித்துவிட்டு, முள்ளுக்கு மேல ஒரு பொடியன குப்புறக் கிடத்தி கட்டி வைத்திருந்தான்கள். பனியில் ஆடாமல் அசையாமல் கிடந்தான்.

கொஞ்சத்தால மச்சான், ஏழெட்டுப்பேர் வந்தான்கள். நடுவில் பெரியவன் ஒருவன் எருமை மாதிரி வந்தான். வந்தவன் ஏறி உழக்கினான். ‘ஐயோ’ என்று பொடியன் கத்தினான். மச்சான், யானை கூட இப்படி சத்தமாய் கத்தாது, அப்படி இருந்ததடா. முதுகில ஏறி நின்று பிடரி மயிரைப்பிடித்து மேல இழுத்து குதிரைச்சவாரி விட்டான். அவன் கத்தின சத்தம் கேட்கேலாது. மயிரை விட்டிட்டு நெத்தியில பிடிச்சு ஒரேயடியா இழுத்துவிட்டான். ‘அம்மா’ என்ற சத்தம் அரைகுறையாய் நிற்க கழுத்து முறிஞ்ச கோழி, சேவல் மாதிரி இழுத்துக்கொண்டான். பிறகு ஆடவேயில்லை. கம்பிக்கு கீழால ரத்தம் சொட்டுச் சொட்டாய் ஊத்திச்சு. அம்மா என்னையும் இழுத்துக்கொண்டு வெளியால ஓடினா.”

இப்போது இந்த ஒட்டுச்சுட்டான் முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்க்கப்பட்டிருக்கின்றது. மலரவன் அதை ஒரு விடுதலையாக உணர்ந்து பெருமூச்சு விட்டுக் கொள்கின்றார். கொஞ்ச நேரத்தில் அவர்கள் தாக்கவேண்டிய மாங்குளம் முகாமைச் சுற்றிய சூழலை இவர்களின் அணி நெருங்கி விடுகின்றது. மாங்குள முகாம் தகர்ப்பிற்கு முன்பான உளவு நகர்வுகளை இதில் மலரவன் விரிவாக எழுதிச் செல்கின்றார். அவரது நண்பர்கள் இந்த முகாமை கிட்டத்தட்ட 360 பாகை கோணத்தில் எல்லாப் பக்கமும் சுழன்று சுழன்று பார்க்கின்றனர். அவ்வாறு முன்னணிக் காவலரணில் நின்று உளவு பார்க்கும்போது அவர்களுக்கருகில் சிறுநீர் கழிக்க வருகின்ற இராணுவத்தைச் சுடுகின்றனர். அது ஒரு சிறு யுத்தமாக மாறுகின்றது. மனிதர்கள் இறக்கின்றனர். ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின்றன. யுத்தத்தில் நியாயம், அநியாயம் என்பவற்றுக்கு இடமில்லை. யார் முந்துகின்றார்களோ அவர்கள் மட்டுமே அடுத்த கணம் உயிர்தப்ப முடியும் எனும் போரின் கொடிய விதி இங்கு மீண்டும் நமக்கு இன்னொருமுறை நினைவூட்டப்படுகின்றது.

இராணுவ முகாமின் வரைபடம் விரிவாகத் தயாரிக்கப்பட்டு எங்கே எறிகணை செலுத்திகள் நிறுத்தப்பட வேண்டும், எப்போது எறிகணைகள் இராணுவ முகாமுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டு, மலரவன் குழுவினர் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்கின்றனர். 

ஏற்கனவே அதற்குச் சில மாதங்களுக்கு முன் மாங்குளம் முகாமைத் தகர்க்க முயற்சித்து புலிகள் தோல்வியைச் சந்தித்திருந்தனர். அத்தாக்குதலின்போது இராணுவம் காட்டுக்குள் மேலதிகத் துருப்புகளை உலங்குவானூர்த்தியினால் இறக்கி, மாங்குளம் முகாமிற்கு அனுப்பி வைத்திருந்தது. இப்போது முகாம் மேலும் பன்மடங்கு விஸ்தரிக்கப்பட்டும் இருக்கின்றது.

தாக்குதல் தொடங்கப்பட்டு இரண்டு தரப்பிலும் பெரும் இழப்புகள் நடக்கின்றன. இறுதியில் புலிகள் அந்த இராணுவ முகாமை வெற்றிகொள்கின்றனர்.

ஒரு தாக்குதலை புலிகள் எப்படிச் செய்திருக்கின்றனர் என்பதை மிக விரிவாக விபரித்து எழுதிய ஈழத்து நூல் இது எனலாம். இதை எழுதிய மலரவன் இதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் பலாலியில் நடந்த தாக்குதலில் இறந்துவிடுகின்றார். அப்போது அவர் விட்டுச்சென்ற உடமையைப் பார்க்கும்போதே, மலரவன் எழுதி வைத்திருந்த இந்த நூலைக் கண்டுபிடிக்கின்றனர். இந்த நூல் 1993 இல் தமிழில் வெளிவந்தது. அண்மையில் இது மாலதி என்பவரால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைக்கு, எது போரிலக்கியம் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. எவ்வித சந்தேகமுமின்றி போராளி ஒருவரால் போரைப் பற்றி எழுதப்பட்ட இந்த நூலை ஈழப்போராட்டம் பற்றி எழுதப்பட்ட முதலாவதும் முதன்மையானதுமான போரிலக்கிய நூலென நாம் சொல்ல முடியும்.

இருபது வயதுக்குள் உக்கிரமான சமர்க்களத்தில் களமாடியபடி மலரவன் ‘போர் உலா’ என்ற நூலை மட்டும் எழுதவில்லை. ‘புயல் பறவை’ என்ற நாவலையும், வேறு பல கவிதைகளையும் எழுதியிருக்கின்றார். அவரின் ஒன்றிரண்டு நாவல்கள் கிடைக்காமலே அழிந்து போயிருக்கின்றன எனச் சொல்லப்படுகின்றது. ‘போர் உலா’ நூலின் முடிவில், அவர் அடுத்து பங்குபற்றிய சிலாவத்துறை இராணுவமுகாம் தாக்குதல் பற்றி எழுதவிருப்பதான குறிப்பு ஒன்று உள்ளது. அதை எழுத முன்னர் மலரவன் காலமாகிவிட்டார் என்பது துயரமானது. அந்தச் சிலாவத்துறை சமரில் மலரவன் படுகாயமுற்று தனது சிறுநீரகம் ஒன்றையும் இழக்கின்றார்.

‘புயல் பறவை’ நூல், பின்னர் மலரவனின் தாயால் வெளியிடப்பட்டிருக்கின்றது. ‘புயல் பறவை’ நூலில் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து இயக்கத்துக்குப் போகின்றவர்கள் பற்றியும், இயக்கத்தில் பெண்களைச் சேர்ப்பது குறித்த உரையாடல்களும் பேசப்படுகின்றன.

மலரவன் சிலாவத்துறை சமரில் (சிறுநீரகம் இழந்தபோது) காயங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில், அவரின் தாயாரோடு இந்தப் பிரதிகளைப் பற்றிப் பேசி, திருத்தங்களைச் செய்திருக்கின்றார் என அவரது தாயான எழுத்தாளர் மலரன்னை ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

போர் என்பது எங்கு நடந்தாலும் அதற்கு எதிராகவே குரல் கொடுக்க வேண்டியிருக்கின்றது. அது எல்லோரையும் பாதிக்கின்றது. நமக்கு நெருக்கமான பலரைக் காவு கொள்கின்றது. ஆனால் எதற்காய் இந்தப் போர்கள் தொடங்கப்படுகின்றன என்பதற்கான காரணங்களை அறியாமல், போரை ஒழிப்பதென்பது மிகக் கடினமான காரியமே.

அன்றைய மாங்குள முகாம் தகர்ப்பில் புலிகள் தரப்பில் 60 இற்கு மேற்பட்டவர்களும், இராணுவத் தரப்பில் 100 இற்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்தார்கள். இன்று 30 ஆண்டுகளுக்குப் பின் இதையெழுதும் போதும் இதற்கான அர்த்தம் என்னவாக இருக்கின்றதென யோசித்தால், பெரும் வெறுமையே சூழகின்றது. இறந்தவர்கள் எந்தத் தரப்பாயினும் அவர்கள் மீண்டு வரவா போகின்றார்கள்? அன்று முகாமைத் தாக்கி வெற்றி கொண்டவர்கள் பின்னர் தோற்றுப் போயிருக்கின்றனர். அன்று தோற்றவர்கள் பிறகு வென்றிருக்கின்றனர் எனில், இந்த யுத்தங்கள் எதைத்தான் நமக்குக் கொண்டு வந்திருக்கின்றன? இழப்புகளையும், வெறுப்புகளையும், காலத்தால் ஆற்றமுடியா வடுக்களையும் அல்லவா நினைவுகளாக அவை விட்டுச் சென்றிருக்கின்றன.

மலரவனும் அவரது 20 ஆவது வயதில் களத்தில் மரணித்திருக்கிறார். இன்றைக்கு அவர் உயிரோடு இருந்தால் 50 வயதுகளைத் தாண்டியவராக இருந்திருப்பார். நம்மோடு பேசிக் கொண்டிருப்பவராக, இதைப் போன்ற அருமையான நூல்களை எழுதும் ஓர் ஆளுமையாக அவர் இருந்திக்கக்கூடும். ஆனால் அற்புதமான இப்படிப்பட்ட நூலை எழுதிய மலரவனையும் இந்தப் பாழாய்ப்போன யுத்தத்திற்குள் இழந்திருக்கின்றோம் என்பது எவ்வளவு அநியாயமானது!


ஒலிவடிவில் கேட்க

143 பார்வைகள்

About the Author

இளங்கோ

யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்திலிருந்து போரின் நிமித்தம் தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல் தவிர, 'டிசே தமிழன்' என்னும் பெயரில் கட்டுரைகளும், விமர்சனங்களும், பத்திகளும் பல்வேறு இதழ்களிலும், இணையத்தளங்களிலும் எழுதி வருகின்றார். நாடற்றவனின் குறிப்புகள் (கவிதைகள் - 2007), சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (சிறுகதைகள் -2012), பேயாய் உழலும் சிறுமனமே (கட்டுரைகள் - 2016), மெக்ஸிக்கோ (நாவல் - 2019), உதிரும் நினைவின் வர்ணங்கள் (திரைப்படக்கட்டுரைகள் - 2020), ப்யூகோவ்ஸ்கி கவிதைகள் (மொழிபெயர்ப்பு -2021), தாய்லாந்து (குறுநாவல் - 2023) ஆகியவை இதுவரையில் இவர் எழுதிய பனுவல்கள் ஆகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்