ஆங்கில மூலம் : கலன சேனரத்ன
1987 நவம்பர் 6 ஆம் திகதி இலங்கையின் உயர்நீதிமன்றின் 9 நீதிபதிகள் கொண்ட மன்று மாகாண சபைகளை உருவாக்குதல் தொடர்பான இரு மசோதாக்கள் பற்றி ஆராய்ந்து தீர்ப்பை வழங்கியது. நீதிமன்றின் முன்னர் வைக்கப்பட்ட மசோதாக்கள் பின்வருவன:
- இலங்கையின் அரசியல் யாப்பைத் திருத்துவதற்கான 13 ஆவது திருத்த மசோதா (Thirteenth Amendment to the Constitution)
- மாகாணசபைகள் மசோதா (Provincial Councils Bill)
1978 அரசியல் யாப்பின் உறுப்புரை 120 இன்படி அரசாங்கத்தால் இயற்றப்படவிருக்கும் மசோதாக்கள் அரசியல் யாப்புச் சட்டத்திற்கு முரணுடையனவாக உள்ளனவா, அல்லது முரண்படாதனவாகவும் இசைவானவையாகவும் உள்ளனவா என்பதை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் நியாயாதிக்கம் (Jurisdiction) உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது. உயர்நீதிமன்றின் 9 நீதிபதிகள் கொண்ட மன்று இம் மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பை அறிவித்தது. இத்தீர்ப்பு அறிக்கை முழுமையாக (1987) SRILR 312 சட்ட அறிக்கையிலும், லக்ஸ்மன் மாறசிங்க மற்றும் ஜயம்பதி விக்கிரமரட்ண தொகுத்துப் பதிப்பித்த ‘Judicial Pronouncements on the 13th Amendment’ என்னும் நூலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேற்படி நூலில் பக்கம் 1 – 128 வரையான 128 பக்கங்களில் அமைந்துள்ள இத்தீர்ப்பு அறிக்கையில் இருந்து மேற்கோள்களை எடுத்துக்காட்டி சில நுண்மையான விமர்சனக் கருத்துகளை கலன சேனரத்தின அவர்கள் முன்வைக்கிறார். கலன சேனரத்தின எடுத்துக் காட்டும் மேற்கோள் ஒன்று வருமாறு (கலன சேனரத்தினவின் கட்டுரை, பக். 250 – 251):
“Healthy democracy must develop and adapt itself to changing circumstances. The activities of the central government now include substantial powers and functions that should be exercised at a level closer to the people…..The bills envisage a handing over of responsibility for the domestic affairs of each province within the framework of united Sri Lanka. They give new scope for meeting the particular needs and desires of the people for each province decentralization is a useful means of ensuring that administration in the provinces is founded on an understanding of the needs and wishes of the respective provinces (Marasingha and Wickremaratne, 2010:20-21)”
மேற்குறித்த ஆங்கில மேற்கோளின் எளிமைப்படுத்தப்பட்ட தமிழாக்கம் வருமாறு:
- மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தகவமைத்து வளர்ச்சி பெறுவது, ஜனநாயகம் ஆரோக்கியமுடையதாக நிலைபெறுவதற்கு அவசியமானது.
- தற்போது இலங்கையில் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் (Activities) அதிகரித்துவிட்டன. இச்செயற்பாடுகள் மக்களுக்கு அருகில் உள்ள இடத்தில் இருந்து (Closer to the People) பிரயோகிக்கப்படுதல் நன்மை பயக்கக்கூடியது.
- இம்மசோதாக்கள் ஒவ்வொரு மாகாணத்தினதும் உள்விவகாரங்களை (Domestic Affairs) அந்தந்த மாகாணத்திற்குப் பொறுப்பாகக் கொடுப்பதையே எதிர்பார்க்கிறது. இதனை ஐக்கியப்பட்ட இலங்கை (United Sri Lanka) என்ற வரை-சட்டத்தினுள் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒவ்வொரு மாகாணமும் தத்தம் மாகாண மக்களின் விசேட தேவைகளையும் விருப்பங்களையும் (Needs and Desires) அறிந்து செயற்பாடுகளை வடிவமைக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது.
- சம்மந்தப்பட்ட மாகாணங்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பற்றிய புரிதலோடு மாகாணங்களின் நிருவாகத்தை இயக்குவதற்கு அதிகாரப் பரவலாக்கல் (Decentralisation) ஒரு சிறந்த வழிமுறையாகும்.
13 ஆவது திருத்தமும், மாகாண சபைகள் மசோதாவும் அரசியல் யாப்புச் சட்டத்திற்கு முரணற்றவை என்ற முடிவை வழங்கிய நீதிபதிகளுள் நால்வரான பிரதம நீதியரசர் சர்வானந்தா, நீதிபதி கொலின் தோம் (Colin – Thome) நீதிபதி அத்துக்கோறளை, நீதிபதி தம்பையா J.J. ஆகியோரின் அறிக்கையில் இருந்து பெறப்பட்ட மேற்படி மேற்கோள் சர்ச்சைக்குரியதான இரு மசோதாக்களின் நோக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.
அம்மசோதாக்கள் ஐக்கிய இலங்கை (United Sri Lanka) என்ற வரையறைக்குள் அதிகாரப் பரவலாக்கலைச் செய்வதைச் சாத்தியமாக்குகின்றன என்ற கருத்தையும் கௌரவ நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர். கலன சேனரத்தின அவர்களின் கூர்மையான அவதானிப்புகள், கௌரவ நீதிபதிகளின் கூற்றைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. அவரின் அவதானிப்புகளை எமது வார்த்தையில் கீழே தந்துள்ளோம்:
1. மாகாணங்களிற்கு அதிகாரங்களைப் பரவலாக்குவது ‘ஐக்கிய இலங்கை’ (United Sri Lanka) என்ற வரையறைக்குள் செயற்படுத்தப்படுவதை இம்மசோதாக்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிடும் கௌரவ நீதிபதிகள், பிறிதோரிடத்தில் ‘Devolution does not damage the basic unity of Sri Lanka’ எனவும் கூறுகின்றனர். ஒற்றையாட்சி முறைக்குப் பாதகமானதாக மசோதாக்களின் ஏற்பாடுகள் அமையவில்லை என்பதை நீதிபதிகள் அழுத்திக் கூறினர்.
பிறிதோரிடத்தில் நீதிபதிகள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்:
“In our considered view there is no foundation for the contention that the basic features of the constitution have been altered or destroyed by the proposed amendments“
“அரசியல் யாப்பின் அடிப்படை இயல்புகள் இத்திருத்தங்களால் மாற்றப்படவோ அழிக்கப்படவோ மாட்டா“ என்பது இதன் பொருளாகும். “ஒற்றையாட்சி முறை அரசு (Unitary State) சமஷ்டியாகவோ அரைகுறை சமஷ்டியாகவோ (Federal or Quasi Federal) மாற்றப்படுவதற்கும் இம்மசோதாக்கள் வழிவகுக்க மாட்டா” எனவும் நான்கு நீதிபதிகளும் கூறினர் என்பதைக் கலன சேனரத்ன மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
நான்கு நீதிபதிகளின் முடிவுகளிற்கு மாறாக கௌரவ நீதிபதி வணசுந்தரவின் கருத்துகள் அமைந்திருப்பதை கலன சேனரத்ன அவர்கள் எடுத்துக் காட்டுகிறார் (பக். 253). அவற்றை இங்கே விரித்துக் கூறுவதைத் தவிர்த்துள்ளோம். பெரும்பான்மை முடிவைக் கூறிய நீதிபதிகள் இலங்கை அரசியல் யாப்பின் ‘ஒற்றையாட்சி இயல்பு’ பாதிக்கப்பட மாட்டாது என்பதை வலியுறுத்தினர் என்பதே இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.
2. 13 ஆவது திருத்தத்திற்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய பெரும்பான்மைக்குழு (Majority Group) நீதிபதிகள் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு ‘டிவலூசன்’ (Devolution) என்ற சொல்லை உபயோகித்தனர். அக்காலத்தில் ‘டிவலூசன்’ என்ற கருத்துக்கு எதிரான உணர்வுகள் (Anti – Devolutionary Sentiments) தோற்றுவிக்கப்பட்டிருந்தன. நீதிபதிகள் அதிகாரத்தைப் பரவலாக்குதல் (Decentralisation) வேறு, அதிகாரப் பகிர்வு (Devolution) வேறு என்பதைப் பிரித்துக்காட்டி அதிகாரப்பகிர்வுத் தத்துவங்களை (Devolutionary Principles) விளக்கியுரைப்பதற்கு முன்வரவில்லை.
‘டிவலூசன்’, ‘டி சென்றலை சேசன்’ என்ற இரண்டும் ஒரே கருத்துள்ள சொற்கள் என்ற பொருள் தரும் வகையில், இச் சொற்களை மாறிமாறிப் பிரயோகிப்பதையும் காணமுடிகிறது. இலங்கையில் ‘அதிகாரத்தைப் பகிர்தல்’ என்ற விடயம் எல்லா இனக்குழுமங்களுக்கும் பொதுவான பொருத்தமுடையது (Equally relevant to all ethnic groups) என நீதிபதிகள் கருதினர் போலும். அதனால் அவர்கள் அதிகாரப் பகிர்வுக் கோரிக்கை தமிழ் மக்களின் கோரிக்கை என்ற விடயத்தை கவனிக்கத் தவறினர். (………….. Thereby ignoring the tamil specific character of the demand for devolution. Coomaraswamy, 1996:145) இனக்குழுமங்களின் மோதல், முரண்பாடு, தேவைகள் என்ற விடயங்களைக் கருத்தில் கொள்ளாத இந்த நோக்கினை ‘They were ethnic blind’ எனக் குறிப்பிடுவதன் மூலம் சுட்டிக்காட்டுகிறார் (பக். 253). நீதிமன்றின் இத்தகைய அணுகுமுறை அதிகாரப் பகிர்வின் தேவையையும், அது ஜனநாயக ஆளுகைக்கு (Democratic Governance) வழங்கக்கூடிய பங்களிப்பையும் விளக்கியுரைப்பதற்கு இடந்தரவில்லை.
3. 13 ஆவது திருத்த மசோதா அரசியல் யாப்பின் ‘ஒற்றையாட்சி’ எண்ணக்கருவை மீறுவதாகவோ, ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பாதிப்பதாகவோ அமையவில்லை எனப் பெரும்பான்மைக்குழு நீதிபதிகள் அழுத்திக் கூறினர். அது இலங்கையின் ஜனாதிபதி முறையை ஆதரிப்பதாகவும் காட்டியுள்ளனர். இவ்வாறு ஒற்றையாட்சி ஜனாதிபதி அரசாங்க முறையை (Unitary Presidential System) ஆதரிக்கும் திருத்தமாக காட்டியதன் மூலம், அத்திருத்தத்தின் ஜனநாயக முற்போக்கு அம்சங்களை நீதிபதிகளால் எடுத்துக்கூற முடியவில்லை. அரசியல் யாப்பில் அடிப்படையான மாற்றத்தைக் கருதிய சீர்திருத்தம், ஜனநாயகத்தை மேம்படுத்தும் சீர்திருத்தம், அதிகாரப் பகிர்வுடைய அரசாங்க முறையை ஏற்படுத்த முனையும் சீர்திருத்தம் (An amendment that radically promoted a reformed, democratic and devolved system of government) ஆகிய 13 ஆவது திருத்தத்தின் அம்சங்கள் எடுத்துக் கூறப்படவில்லை.
கலன சேனரத்தின அவர்கள் 248 முதல் 254 வரையான 6 பக்கங்களில் 13 ஆவது திருத்த மசோதா, மாகாணசபைகள் மசோதா என்ற இரண்டினைப் பற்றியும் நீதிமன்றம் கூறிய கருத்துகளை விமர்சன நோக்கில் ஆராய்ந்துள்ளார். அவரின் ஆய்வைப் புரிந்து கொள்வதற்கான வழிகாட்டிக் குறிப்புகள் எம்மால் மேலே தரப்பட்டன. வாசகர்கள் ஆங்கில மூலத்தையும் ஒப்பீடு செய்து இப்பகுதியை வாசித்தல் பயனுடையது.
17 ஆவது திருத்தம்
2001 ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் 17 ஆவது திருத்த மசோதாவை முன்மொழிந்தது. இம்மசோதா ஜனாதிபதியின் அதிகாரங்களில் முக்கியமான மாற்றங்களைச் செய்வதாக இருந்தது. 1978 இல் ஜே.ஆர். ஜயவர்த்தன பலம் வாய்ந்த ஜனாதிபதி முறையை உருவாக்கினார். இந்த முறைமையின் கீழ் ஜனாதிபதிக்கு உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதில் அளவற்ற அதிகாரங்கள் இருந்தன. உதாரணமாக பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பொலிஸ்மா அதிபர் (IGP), சட்ட அதிபதி நாயகம் (அட்டரணி ஜெனரல்) போன்ற பதவி நிலையினரை நியமனம் செய்வதில் முழுமையான அதிகாரத்தை (Absolute Power) ஜனாதிபதி கொண்டிருந்தார். அதாவது ஜனாதிபதி எவருடனும் இந்நியமனங்கள் பற்றி கலந்தாலோசிக்கும் கட்டாயம் இருக்கவில்லை. தம் விருப்பப்படி நியமனங்களைச் செய்யலாம். ஜனாதிபதிகள் அவ்விதமே இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்தனர். இப்பின்னணியில் 17 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் முக்கியம் வாய்ந்த திருத்தம் என கலன சேனரத்தின குறிப்பிடுகிறார் (பக். 255). இத்திருத்தத்தின் முக்கியம் வாய்ந்த இரு கூறுகள் பின்வருவன:
- இத்திருத்தம் சுதந்திரமான நிறுவனங்கள் என்ற எண்ணக்கருவை 1978 அரசியல் யாப்பில் புகுத்தியது (It sought to introduce the concept of independent institutions into the 1978 constitution). இவ்வாறான சுதந்திரமான நிறுவனங்களுக்கு உதாரணங்களாக பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
- 17 ஆவது திருத்தம் அரசியல் யாப்புச் சபை (Constitutional Council) எனப்படும் 10 உறுப்பினர்கள் கொண்ட சபையை உருவாக்கியது. இச்சபையின் தவிசாளராக பாராளுமன்ற சபாநாயகரும், அரசியல் கட்சிகள் எவற்றோடும் சார்புடையவர்கள் அல்லாத 6 பேர்களும் உள்ளடக்கப்பட்டனர். குறித்த 6 நபர்களையும் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருங்கிணைந்து நியமிப்பர். இச்சபை பல கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் சபை (Multi – Party Representative Body) எனக் குறிப்பிடலாம். ஜனாதிபதியால் பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களிற்கு நியமனம் செய்வதற்கென சிபாரிசு செய்யப்படுபவர்களின் நியமனத்தை அங்கீகரிக்கும் (Approving) அதிகாரத்தை இம்மசோதா மேற்குறித்த அரசியல் யாப்புச் சபைக்கு வழங்கியது. இதனைவிட இச்சபை பொருத்தமான நபர்களை சுயமாகவே மேற்படி நிறுவனங்களின் உறுப்பினர்களாக நியமிக்கும் அதிகாரத்தையும் கொண்டிருந்தது. இக்காரணங்களால் 17 ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களிற்குக் கடிவாளம் இடுவதாகவும், ஜனநாயக ஆளுகையை (Democratic Governance) மேம்படுத்துவதாகவும் அமைந்தது எனலாம். பிரதம நீதியரசர் சரத். என். சில்வா தலைமையிலான நீதிமன்று தனது முடிவை சுருக்கமாகத் தெரிவித்தது (S.C. Determination No.6/2001). நீதிமன்றின் முடிவைப் பற்றி கலன சேனரத்ன 256, 257, 258 ஆகிய மூன்று பக்கங்களில் நுணுக்கமாக ஆராய்கிறார். நீதிமன்று, இத்திருத்தம் சர்வசன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை; மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படக்கூடியது எனக் குறிப்பிட்டது. 2001 இல் நிறைவேற்றப்பட்ட இத்திருத்தங்களால் நடைமுறையில் நன்மைகள் கிடைக்கவில்லை. 9 ஆண்டுகள் கழித்து ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் 18 வது அரசியல் யாப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
18 ஆவது திருத்தம்
2009 மே மாதம் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் அரசியல் யாப்பிற்குப் புதிய திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் விரும்பியது. மகிந்த ராஜபக்ச போரில் வெற்றி வாகை சூடிய தலைவர் என்ற வகையில் சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றவராகக் கருதப்பட்டார். அரசாங்கம் ராஜபக்ச ஆட்சியை நிலைபேறுடையதாகவும், அதிகாரம் மிக்கதாகவும் ஆக்குவதென உறுதிபூண்டது. சுதந்திரமான நிறுவனங்கள் (Independent Institutions) என்ற எண்ணக்கருவை அரசியல் யாப்பில் இருந்து அகற்ற வேண்டும் என அரசாங்கம் முடிவு செய்தது. 18 ஆவது அரசியல் யாப்புத் திருத்த மசோதா மேற்படி நோக்கங்களோடு முன்வைக்கப்பட்டது.
18 ஆவது திருத்தம் அரசியல் யாப்பில் பின்வரும் இரண்டு முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது:
- 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின்படி ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து, 6 ஆண்டுகள் நிறைவடைந்தபின் முடிவுறும். ஒருவர் இரு தடவைகள் (Two terms) ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம். 18 ஆவது திருத்தம் இரு தடவைகள் பதவி வகிக்கலாம் என்பதை நீக்கியது.
- இரண்டாவதாக இத்திருத்தம் அரசியல் யாப்புச் சபையை (Constitutional Council) இல்லாது ஒழிப்பதை முன்மொழிந்தது. ஜனாதிபதியினால் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களிற்கு நியமனம் செய்வதற்கென சிபாரிசு செய்யப்பட்டவர்களை அங்கீகரிப்பதற்கும், நிராகரிப்பதற்கும் அதிகாரமுடையதாகவிருந்த இச்சபையை நீக்குவதென அரசாங்கம் முடிவு செய்தது. இச்சபைக்குப் பதிலாக ‘பாராளுமன்றச் சபை’ (Parliamentary Council) என்னும் சபையை உருவாக்குவதை 18 ஆவது திருத்தம் முன்மொழிந்தது.
இம்மசோதா முன்னைய 17 ஆவது திருத்தத்தால் ஜனாதிபதி இழந்த அதிகாரங்களை அவருக்கு மீளத் திருப்பிக் கொடுத்தது.
17 ஆவது திருத்தம் அரசியல் யாப்பில் சுதந்திரமான நிறுவனங்கள் என்ற எண்ணக்கருவை அறிமுகம் செய்தமை ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்பதில் ஐயமில்லை. சுதந்திர நிறுவனங்கள் என்ற எண்ணக்கருவை அரசியல் யாப்பில் இருந்து அகற்றிய 18 ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கும் பங்கேற்பு ஆளுகைக்கும் எதிரான தாக்குதலாகும். 18 ஆவது திருத்தம், ஜனாதிபதியின் பதவிக்காலத் தடையை நீக்கியமை மக்களின் ஜனநாயகச் சுதந்திரத்தினைப் பறிப்பதாக அமைந்தது. ஆட்சியதிகாரத்தைப் பிடித்து கொண்டபின் சர்வாதிகாரிகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து கொண்டு, மக்களின் சுதந்திரங்களை பறித்து எதேச்சதிகாரப் பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதற்கு பதவிக் காலத்தை எல்லையிடுதல் (The Term Limits) ஒரு தடையாக அமையும். ஜனநாயக நாடுகளில் இத்தகைய அரசியல் யாப்புத் தடைகள் விதிக்கப்படுவது வழமையாகும். 18 ஆவது திருத்தம் இவ்வகையில் ஒரு ஜனநாயக விரோதமான சட்டத்திருத்தமாகும்.
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க தலைமையிலான 5 நீதிபதிகள் மன்று 18 ஆவது திருத்த மசோதா பற்றி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பாக இரு விடயங்கள் பரிசீலனைக்குரியன:
- ஜனாதிபதிப் பதவிக்கு விதிக்கப்பட்டிருந்த பதவிக்கால எல்லையை நீக்கியமை மக்களின் இறைமையை மீறிய நடவடிக்கையாகும். அவ்வகையில் இத்திருத்தம் ஜனநாயக விரோதமான பிற்போக்கான அரசியல் யாப்புத் திருத்தமாகும்.
- சுதந்திரமான நிறுவனங்கள் என்ற எண்ணக்கருவை அரசியல் யாப்பில் இருந்து நீக்கியதும் பிற்போக்கானதொரு நடவடிக்கையாகும்.
17 ஆவது திருத்தம் பற்றிய உயர்நீதிமன்றின் முடிவு மிகச் சுருக்கமானதாக அமைந்ததென முன்னர் குறிப்பிட்டோம். 18 ஆவது திருத்தம் பற்றிய உயர்நீதிமன்றின் முடிவும் மிகச் சுருக்கமானதாகவே அமைந்தது. உயர்நீதிமன்றம் ஏகமனதாக 18 ஆவது திருத்தத்தை ஆதரிக்க முடிவு செய்தது.
தொடரும்.