இன்னமும்கூட தமிழ்ச் சமூகத்தில் பெண்கள், ஆண் அடிமைத்தனம் அல்லது ஆணாதிக்க வாதத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பதற்கு அவர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் இந்துமதமும் அதில் மிக தந்திரமாக நுணுக்கமான முறையில் பின்னப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் “பதிவிரதம்” என்ற மிகப் பிற்போக்கான எண்ணக்கருவும் காரணமாகும் என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். ஆணாகப் பிறப்பதும் பெண்ணாகப் பிறப்பதும் ஆணுக்குப் பெண் அடங்கி கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதும் நாம் பிறப்பால் பெற்று வந்த கர்மவினை என்றும் அவர்கள் மிகப் பலமாக நம்புகிறார்கள். இதனை மீறுவது தெய்வக்குற்றம் என்றும் பத்தாம் நூற்றாண்டு வரை “சதி பூஜை” என்ற உடன்கட்டை ஏறுதல் அல்லது தீக்குளித்தல் சடங்கு இந்தியாவில் தீவிரமாக பின்பற்றப்பட்டு வந்தது.
ஆணாதிக்க சமூகத்தை தக்கவைத்துக்கொள்ள பார்ப்பனர்களால் மெதுவாகத் திணிக்கப்பட்ட “பதிவிரதா தத்துவம்” மற்றும் “கர்ம வினைப்பயன்” ஆகியவற்றுடன் சேர்த்து தமிழரின் மற்றுமொரு பாரம்பரிய மடமை பண்பான “கற்புநெறியையும்” இணைத்து உலகமெங்கும் பஞ்சம் பிழைக்கச் சென்ற தமிழர்களை கொத்தடிமைகளாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் ஆக்கி அடக்கி வைத்தான் ஏகாதிபத்திய எஜமானன். கணவனை தனது “சுவாமி புருஷன்” என்று பயபக்தியுடன் கருதிய பெண்ணின் அடக்க ஒடுக்கத்தையும் கூட தன் வியாபார பெருக்கத்துக்கும் அதிக இலாபம் உழைப்பதற்கும் அவன் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான். இதனால் முதற்கட்டமாக கணவனையும் அதன்பின் ஆண் சாதியினரையும் தனது மேலதிகாரிகளான பெரிய துரை, சின்னத்துரை, கங்காணி, கணக்கப்பிள்ளை, கன்டாக்கு ஆகியவர்களின் கட்டுப்பாட்டுக்கு சவால் விடுக்க பெருந்தோட்ட துறை பெண்கள் ஒருபோதும் துணிந்ததில்லை.
பெருந்தோட்டத் துறையைப் பொறுத்தவரையில் இந்த நிலைமையே ஆண்களைவிட பெண்கள் அதிக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படவும் அதேசமயம் ஆண்களைவிட குறைந்த கூலி அவர்களுக்கு வழங்கப்பட்ட போது அதனை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளவும் அவர்களின் மனநிலையை தயார் செய்தது. அதேசமயம் கொழுந்து மலையில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் அவர்களின் பிரதான தொழிலைத் தவிர வீட்டிலும் பல்வேறு வேலைகளையும் அவர்களே கவனித்தனர். சமைத்தல், சுத்தம் செய்தல், பிள்ளைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, துணி துவைத்தல், வீட்டு வேலைக்கு நீர் பிடித்து வருதல், அடுப்பெரிக்க விறகு பொறுக்கிக் கொண்டு வருதல் போன்ற சகல வேலைகளையும் அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதற்கு காரணம் அதனை அவர்கள் இந்து தர்மத்தின்படி விதிக்கப்பட்ட விதி ஆகவும், தர்மமாகவும் ஏற்றுக் கொண்டதுதான். எனவே வீட்டில் கணவன்மார்கள் குடும்பத் தலைவர்களாக, எஜமானர்களாக அதிகாரம் செய்தனர். சமூகத்தில் இந்தப் பாகுபாடு இன்னமும் காணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
ஆரம்பத்தில் கோப்பி பெருந்தோட்ட செய்கைக் காலத்திலும், பின்னர் தேயிலைப் பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்ட போதும் பெண்களின் உழைப்பு தொடர்பான பாத்திரப்பங்களிப்பு ஏனைய துறைகளை விட மிக அதிக செறிவு கொண்டதாகவே இத்துறையில் இருந்தது. கோப்பிக் கொட்டை பறித்தல், தேயிலைக் கொழுந்து பறித்தல் ஆகிய தொழில்களில் பெண்கள் மிக சுறுசுறுப்பையும் திறமையையும் காட்டினர். ஆதலால் இந்த நடவடிக்கையில் ஆண்களை ஈடுபடுத்துதல் அதிக செலவை ஏற்படுத்தும் ஒரு காரியம் என 1893 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி அனுப்பப்பட்ட ஊவா தோட்ட முன்னேற்ற அறிக்கையில் ஸ்பிரிங்வெளி தோட்டத்துரையான ரெட்டி (Rettie) எனபவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரகாரம் துரைமார்கள் கொழுந்து மலையில் வேலை செய்வதற்காக அதிகமான பெண்களையும் சிறுமிகளையும் ஈடுபடுத்தினார்கள். அவர்களை வெற்றிகரமாக மேற்பார்வை செய்து வேலை வாங்குவதற்காக ஆண் கங்காணிகளை நியமித்தார்கள். தொழிலாளரின் எல்லா விவகாரங்களுக்கும் பொறுப்பான மேலதிகாரியாக பெரிய கங்காணி இருந்தான். அவன் தொழிலாளர் மத்தியில் ஒரு குறுநில மன்னனாகவே நடந்துகொண்டான். தோட்ட கோயில் நிர்வாகம், அரிசி, உணவு பொருள் விநியோகம், தொழிலாளர்களிடையே பிணக்கு ஏற்பட்டாலும் நிர்வாகத்துடன் ஏற்படுகின்ற முரண்பாடுகள் முதலானவற்றை தீர்த்து வைத்தல், திருமண விடயங்களின் போது, மற்றும் மரணம் சம்பவித்தல், லயம் மற்றும் வீட்டுப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைத்தல், ஏன், கூரை ஒழுகினால் கூட அதனை இவனிடம் தான் சொல்லி முறையிட வேண்டியிருந்தது. இந்த அதிகாரத்துவ செயற்பாடுகளுக்கு ஊடாக அவன் பல சுரண்டல் வேலைகளையும், ஆக்கிரமிப்பு செயல்களையும், ஏமாற்று, வஞ்சகம், சூழ்ச்சிகளையும் செய்தான். பல வழிகளில் களவாகவும், வஞ்சித்தும் பணம் சம்பாதித்து பண ரீதியாகவும் அதிகார அடிப்படையிலும் செல்வாக்குள்ள மனிதனாக இருந்தான். இந்தக் காரியங்கள் எல்லாவற்றின் போதும் இவன் சாதி அமைப்பையும் பால்நிலை வேறுபாட்டையும் மிக உச்சமாகப் பயன்படுத்திக் கொண்டான்.
தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்கள் கங்காணியின் ஆலோசனையின்பேரில் சாதியமைப்பின் பிரகாரம் உயர் சாதியில் இருந்து கீழ் சாதி என படிமுறையின்படி ஒதுக்கப்பட்டிருந்தன. குடியானவர்களும் மேட்டுக் குடியினரும் மேல் லயங்களிலும், சாதி குறைந்தவர்கள் கீழ் லயங்களிலும் அல்லது பணிய லயங்களிலும் குடியமர்த்தப்பட்டனர். காலனித்துவ காலம் முழுவதும் பிரித்தாளும் கொள்கையாக சாதிமுறை, இந்து தர்மத்தில் மிக ஆழமாக பதிந்து போய்விட்ட கர்மவினை, விதி, மற்றும் ஆண் பெண் பால்நிலை வேறுபாடுகள் என்பனவும் தீவிரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதனை ஆய்வாளர்கள் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது கூலித் தொழிலாளர்கள், அவர்கள் தமது சுய விருப்பத்தின் மீது சுதந்திரமாகவே தோட்டங்களில் வாழ்கிறார்கள் என்று ஒரு மாயத்தோற்றத்தை வெளியுலகத்துக்கு காட்டிய போதும் “அவர்கள் எல்லாவிதங்களிலும் கண்ணுக்குத் தெரியாத கயிறுகளாலும் சங்கிலிகளாலும் கட்டிப் போடப்பட்டு இருந்தனர்” என காலனித்துவ செயலாளர் எமர்சன் டெனன்ட ( Emerson Tenant – 1848 ) தெரிவிக்கின்றார். அவர்கள் எந்தக் காரணம் கொண்டும் தாம் வாழ்கின்ற தோட்ட எல்லைகளுக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு விதத்தில் சாதி, மதம், மற்றும் பால்நிலை வேறுபாடுகளை பயன்படுத்தி அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தபோதும் மேலும் பல பொருளாதாரக் கட்டுப்பாடுகள், அவர்கள் தோட்டம் வீட்டுத்தோட்டம் செல்வதை தடுக்கும் சட்டங்கள், அவர்கள் மீது சுமத்தப்பட்ட கடன்சுமை, காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் என அவர்கள் மீதான கெடுபிடிகள் எப்போதும் அவர்கள் கழுத்தை நெரித்துக் கொண்டே இருந்தன.
அவர்கள் தமது சொந்த ஊரில் இருந்து புறப்பட்ட போதே இவர்கள் மீது சுமத்தப்பட்ட கடன் சுமை, பின் காலக்கிரமத்தில் பல்கிப் பெருகி பெரும் பாறாங்கற்களாக அவர்களை நிமிர விடாமல் அழுத்திக்கொண்டே இருந்தது. ஊரில் வைத்து முன்பணமாக கொடுக்கப்பட்ட பணம் கண்டிச் சீமையை வந்து அடையும் வரை சாப்பாட்டுக்கும், கப்பலுக்கும், மேலும் வழிச் செலவுகளுக்கும் என செலவழிக்கப்பட்ட தொகை, ஆள் கட்டுவதற்காக கங்காணிக்கும் வழிகாட்டுபவனுக்கும் கொடுத்த தொகை என்பன இரண்டு மூன்று மடங்கு அதிகமாகவே படிப்பறிவில்லாத இவர்கள் தலையில் சுமத்தப்பட்டன. வேண்டுமென்று திட்டமிடப்பட்டு இவர்களின் சம்பளத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே கொடுத்தார்கள். இந்த மூன்று மாதங்களுக்கு செலவழிப்பதற்கு கைக்காசு கையிருப்பில் இல்லாத தொழிலாளர்கள் கங்காணியிடம் சொல்லி கடன் வாங்கி செலவழிப்பார்கள். மூன்று மாதங்களின் பின் வழங்கப்படும் சம்பளத்தில் போது இந்த கடன் தொகையை கழித்தபின் சொற்ப காசுகளே அவர்களுக்கு சம்பளமாக மிஞ்சும்.
அவர்களை காலாகாலத்துக்கும் கடனாளிகளாக, கொத்தடிமைகளாக வைப்பதற்கெனவே இவ்வித கடன் கொடுக்கும் நடைமுறையை திட்டமிட்டுபின்பற்றினார்கள். பிற்காலத்தில் இந்தக் கடன் கொடுக்கும் முறை தமக்கு வைக்கப்பட்ட பொறி என்பதனை தொழிலாளர்கள் புரிந்துகொண்டார்கள். இதில் இருந்து தப்புவதற்காக இரவோடிரவாக தொலைதூரத்திலிருந்த தோட்டங்களுக்கு தப்பி ஓடினார்கள். விரைவிலேயே இத்தகைய சம்பவங்கள் அதிகரித்தமையால் தோட்டத்துரைமார், கங்காணிமார்களுக்கும் இது ஒரு பெரும் பிரச்சினையாக தலை தூக்கியது. அதனைத் தொடர்ந்து இதனை தடுக்க “பத்து சீட்டு” (பற்றுச்சீட்டு) வழங்கும் முறையும் இவ்வாறு தோட்டத்தை விட்டு ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
தொடரும்.