பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எழுச்சியை நோக்கி : கூட்டுறவுகளின் மீள்-வருகையின் அவசியம்
Arts
15 நிமிட வாசிப்பு

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எழுச்சியை நோக்கி : கூட்டுறவுகளின் மீள்-வருகையின் அவசியம்

February 2, 2025 | Ezhuna

2009 இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, எம்மால் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்வும், சிதைவும் பிடுங்கி எறியப்பட்ட பூசணிக் கொடிகள் போல எங்கும் பரவிக் கிடக்கிறது. நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும், மிகவும் பாதிக்கப்பட்டதுமாக அமைவது கூட்டுறவு இயக்கமாகும்; கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்த கடனுதவுக் கூட்டுறவுச் சங்கங்களும் அதனோடு இணைந்தே அழிவுக்குள்ளாகின. இச் சிதைவுகளைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது. அதன் பொருட்டு, கூட்டுறவு இயக்கம் – கூட்டுறவின் கட்டமைப்புக்கள் மிக முக்கிய அசைவியக்கமாக மாற முடியுமா? போரின் பின்னரான மீள் கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்கும் கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் யாது? எங்கிருந்து தொடங்குவது? போரின் பின்னரான சிதைவுகள், அதன் விளைவாக விளைந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு அதனால் உதவ முடியுமா? ஆகிய வினாக்களை இத் தொடர் முன்வைத்து ஆராய்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கூட்டுறவுத் துறையினால் ஒரு வலுவான மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு சிறப்பாக உதவ முடியும். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி சார் விடயங்களை மையமிட்டு காத்திரமான விடயங்களை தர்க்கத்துடன் கலந்துரையாடி, சிந்தனைக்கான முன்மொழிவுகளை தரும் இத் தொடர் ‘கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்’ எனும் பெயரில் அமைகிறது.

1

இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணம் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புச் சீர்திருத்தங்களை நோக்கிச் செல்கிறது. அதே நேரத்தில், ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் தனியார்துறை முதலீட்டை அதிகரிக்க பெரிதும் கவனம் செலுத்தப்படுகிறது. பொருளாதாரப் பின்னடைவுக்குள்ளான அல்லது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வலையை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு, IMF திட்டம் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளின் ஆதரவும் அங்கீகாரமும் உள்ளன. குறிப்பாக, கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் சுமைகளைக் குறைப்பதற்காக கடன் வழங்குநர்களுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் முக்கியமானவை. இதில் கணிசமான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.

தற்போதைய நிலையைப் பொறுத்தவரை, இலங்கை நிலைப்படுத்தலின் நோக்கத்துக்கேற்ற திசையில் முன்னேறி வருகிறது எனலாம். நேர்மறையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), நடப்புக் கணக்கு உபரி போன்றன வளர்ந்து வருகின்றன. இவ்வாறு முன்னேற்றத்தின் அடையாளங்கள் தெளிவாகப் புலப்பட்டாலும், நிலையான மீட்சிக்காக சீர்திருத்த முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பது அவசியம். இதன் எதிர்காலப் பாதை, தற்போதைய வளர்ச்சித் திசையின் தொடர்ச்சி எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதிலேயே அதிகம் சார்ந்திருக்கும்.

ஆயினும், நீடித்த மீட்சிக்கான சீர்திருத்த முயற்சிகள் பல முக்கிய அம்சங்களை பரிசீலிக்காமல் முன்னேறி வருகின்றன. குறிப்பாக, இலங்கையின் மீள்கட்டமைப்பில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு பொருத்தமாக மதிப்பீடு செய்யப்படவில்லை. அவை பெரிதும் கவனக்குறைவுக்கு உள்ளாகியுள்ளன அல்லது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதார மீள்நிர்மாணம் தனியார் துறையின் பொறுப்பாக மட்டுமே இல்லாது, கூட்டுறவுத் துறையின் பங்களிப்பும் அதில் முக்கிய இடம் பெறவேண்டும். 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு திறந்த பொருளாதாரப் போக்கில் தனியார் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதோடு, கூட்டுறவு அமைப்புகள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தன என்பது வரலாற்றுச் சான்று. இந்த வரலாற்றுப் பாடங்களைக் கவனிக்காது மீட்டெடுக்கும் பொருளாதாரக் கோட்பாடு, நலிவடைந்த கூட்டுறவின் தாக்கத்தையும், அதன் வெளிப்பாடாக இன்று காணப்படும் பொருளாதார வீழ்ச்சியையும் நோக்கியே செல்லும். வளமான விவசாயத் துறையின் வீழ்ச்சிக்கும், கூட்டுறவு அமைப்புகள் காலப்போக்கில் பின்தங்கியதற்கும் நேரடித் தொடர்புடையதாகக் கருதப்பட வேண்டும். எனவே, நிலையான பொருளாதார மீட்சிக்காக, கூட்டுறவுத் துறையின் பங்கு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது மிக அவசியமாகும்.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கூட்டுறவு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்த துல்லியமான தரவுகள் உடனடியாகக் கிடைக்கவில்லை. இது கூட்டுறவுத் துறையின் வகிபாகம் பொருளாதாரக் கொள்கை மட்டத்தில் மதிப்பீடு செய்யப்படாத நிலையிலேயே உள்ளதன் விளைவாகும். இருப்பினும், கூட்டுறவுத் துறை, குறிப்பாக விவசாயம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. வரலாற்று ரீதியாக, குறிப்பாக திறந்த பொருளாதாரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், கூட்டுறவு அமைப்புகள் ஒரு முக்கிய பொருளாதாரச் சக்தியாக கருதப்பட்டன. அரசாங்க ஆதரவுக் காலங்களில் (Before the Open Economy Era), அவற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. 

இலங்கைப் பொருளாதாரத்தின் பன்முகத்தன்மை காரணமாக, கூட்டுறவு அமைப்புகளின் பங்கு மங்கியதாகத் தோன்றினாலும், அதன் பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாததாகவே உள்ளது. பொருளாதாரத்தினுள் அதன் தாக்கம் நேரடியாகக் காட்டப்படாததாலும், கொள்கை ரீதியாக அவை புறக்கணிக்கப்பட்டதாலும், அதன் முக்கியத்துவம் உரிய அளவில் வெளிப்படாமல் இருக்கிறது. எனவே, பொருளாதார வளர்ச்சி மற்றும் மீள்கட்டமைப்பில் கூட்டுறவுத் துறையின் பங்கை மீண்டும் மதிப்பீடு செய்து உரிய இடம் வழங்குவது அவசியமாகிறது.

இலங்கையில் கூட்டுறவு நிறுவனங்கள் பல்வேறு காரணிகளால் தொடர்ந்து நலிவடைந்துள்ளன. காலத்திற்கேற்ப புதுப்பிக்கப்படாத கூட்டுறவுச் சட்டம், மோசமான முகாமைத்துவ நடைமுறைகள், தொழில்முறை நிபுணத்துவம் இல்லாமை, அரசியல் தலையீடு, போதுமான அரசாங்க ஆதரவு இல்லாமை, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரச் சூழலில் தனியார் துறையின் கடுமையான போட்டி மற்றும் அவர்களின் ஆதிக்கம் ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. இதன் விளைவாக, உறுப்பினர்கள் கூட்டுறவுகளில் ஈடுபடாமல், அவை தொடர்ந்து பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, நிலையான மாற்றத்திற்காக சட்ட, முகாமைத்துவ, தொழில்முறை மற்றும் கொள்கை ரீதியாக கூட்டுறவுத் துறையில் உரிய புதுப்பிப்புகள் மேற்கொள்ளப்படுவது அத்தியாவசியமாகிறது.

கூட்டுறவு அமைப்புகள் நவீன சந்தைச் சூழலின் சவால்களை எதிர்கொள்ளும் போது, தங்களது உள்ளகக் கட்டமைப்பு ஆற்றலை மதிப்பீடு செய்யும் சரியான வழிமுறைகளை பின்பற்றாததே அவற்றின் தொடர்ச்சியான தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, கூட்டுறவுகளின் இயல்பூக்கம், கூட்டுறவுத் திணைக்களத்தின் செயற்திறனில் அதிகமாகச் சார்ந்துள்ளது. இதன் பொருட்டு, திறமையான அரச நிர்வாகத்தின் பற்றாக்குறை, கூட்டுறவுகளின் வீழ்ச்சிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக அமைந்துள்ளது. எனவே, இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மறுசீரமைப்பில், கூட்டுறவுத் திணைக்களத்தின் மறுசீரமைப்பு மற்றும் வலுவூட்டலும் முக்கிய இடம் பெறவேண்டும்.

இலங்கையில் கூட்டுறவு நிறுவனங்கள் தோல்வியடைவதற்கான காரணங்கள் பல உள்ளன. முதன்மையாக, தற்போதைய கூட்டுறவுச் சட்டம் காலத்திற்கேற்ப அமைக்கப்படவில்லை. அதனை புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றவேண்டிய அவசியம் உள்ளது. அதே நேரம், அரசின் அதிக கட்டுப்பாடுகளுடன் கூடிய கொள்கைகள், கூட்டுறவுகளுக்கு நிலையான முறையில் செயற்படுவதற்குச் சவால்களை ஏற்படுத்துகின்றன. மேலும், வணிக நடவடிக்கைகளில் நெகிழ்வுத்தன்மை மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் சூழ்நிலை இல்லாததால், கூட்டுறவுகள் புதிய வணிக முறைமைகள் அல்லது புதுமைகளைச் செயற்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. இதன் விளைவாக, புதிய சந்தைப் போக்குகளுக்கு ஏற்ப கூடுதல் மாற்றங்கள் செய்யப்படாததால், அவற்றின் போக்குகள் மாற்றப்படாமல் நிலைத்துக் கிடக்கின்றன. இது அவற்றின் செயற்திறனுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக அமைகின்றது.

அரசியல் தலையீடு, குறிப்பாக சில அரசியல் கட்சிகளின் செல்வாக்கு, ஊழல், பாரபட்சம் போன்றன தவறான நிர்வாகத்தை ஊக்குவிக்கின்றது. அரசாங்கத்தின் ஆதரவு பெரும்பாலும் கட்டமைக்கப்பட்ட நிலையில், சில கூட்டுறவு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே உதவி வழங்கப்படுகிறது. அவை போதுமான பயிற்சி, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதில்லை. இலங்கை பொருளாதாரம் தாராளமயமாக்கப்படுவதின் காரணமாக, கூட்டுறவுகள் பெரும்பாலும் பெரிய தனியார் துறையுடன் போட்டியிடுவதில் சிரமங்களைச் சந்திக்கின்றன. ஏனெனில் அவற்றின் அளவு மற்றும் சந்தைப்படுத்தல் திறன்கள் குறைவாக உள்ளன. குறைந்த உறுப்பினர் பங்கேற்பு, கூட்டுச் செயற்பாடுகள் மற்றும் முடிவெடுப்புகளுக்கு தேவையான தீவிர ஈடுபாட்டின்மையால் கூட்டுறவின் செயற்திறன் பாதிக்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தில் கூட்டுறவு அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. இவை 16,000 கூட்டுறவுச் சங்கங்களையும் 8.1 மில்லியன் உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. இது மக்கள் தொகையின் 38.15% ஆகும். குறிப்பாக, இந்த உறுப்பினர்களில் 65% பெண்கள் ஆவர். இந்தத் துறை சுமார் 65,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. நிதி ரீதியாக, கூட்டுறவுகள் மொத்தம் US$1.8 பில்லியன் மதிப்பிலான ஈர்க்கக்கூடிய சொத்துகளோடு US$1 பில்லியன் சேமிப்புகளையும் வைத்துள்ளன. இது அவற்றின் கணிசமான பொருளாதாரத் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது (ICA, 2020).

இலங்கையின் கூட்டுறவு நிறுவனங்கள், குறிப்பாக கிராமப்புற சமூகங்களில், குறிப்பாக விவசாயத் துறையில், அத்தியாவசிய பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. அவை வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மட்டுமல்லாது, விவசாயிகளுக்கான சந்தை அணுகலை மேம்படுத்துவதிலும், வறுமைக் குறைப்பில் உதவுவதிலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக கடன் வசதிகளை எளிதாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. விவசாயத்திற்குப் பிறகு, கூட்டுறவு நிறுவனங்கள் நுகர்வோர் சில்லறை விற்பனை, மீன்வளம், வங்கிச் சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் செயற்பட்டு, மக்கள்தொகையில் பெரும் பகுதியினருக்கு அத்தியாவசியச் சேவைகளை வழங்கி வருகின்றன.

  1. விவசாய மேம்பாடு: கூட்டுறவு நிறுவனங்கள் சிறு விவசாயிகளுக்கு ஆதரவு வழங்குகின்றன. அவை கூட்டாக விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதோடு, உரங்கள் மற்றும் விதைகள் போன்ற உள்ளீடுகளுக்கான அணுகலை வழங்கி, விவசாயிகளின் பேரம் பேசும் சக்தியை மேம்படுத்துகின்றன. இதன் மூலம், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப்படுகிறது.
  2. கிராமப்புற மேம்பாடு: கிராமப்புறங்களில் விரிவான இருப்பைக் கொண்ட கூட்டுறவு அமைப்புகள், சுகாதாரம், கல்வி மற்றும் நுண்நிதி போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கி, தொலைதூர சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  3. நிதி உள்ளடக்கம்: கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள், பாரம்பரிய வங்கிகளை அணுக முடியாத தனிநபர்களுக்கு கடன்கள் மற்றும் சேமிப்புக் கணக்குகளை வழங்கி, நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கின்றன.
  4. வேலைவாய்ப்பு உருவாக்கம்: கூட்டுறவு அமைப்புகள், குறிப்பாக கிராமப்புறங்களில், அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பங்களித்து, வேலையின்மையைக் குறைக்க உதவுகின்றன.
  5. சமூகத் தாக்கம்: பொருளாதாரப் பங்களிப்புகளுக்கு அப்பாற்பட்டவையாக, கூட்டுறவு நிறுவனங்கள், உறுப்பினர்களின் பங்கேற்பு மற்றும் ஜனநாயக முடிவெடுப்பை ஊக்குவித்து சமூக ஒற்றுமை மற்றும் அதிகாரமளிப்பை வளர்க்கின்றன.

கடந்த நூற்றாண்டுகளில், கூட்டுறவுகளை நிறுவிய சமூக முன்னோடிகள் தெளிவான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தனர். அவர்கள், பங்கேற்பு (Participation) எனும் ஒரு சிறந்த வழிமுறையை அறிந்திருந்தனர். கூட்டுறவுகளை நிறுவுவதற்கும், அவற்றின் செயற்திறனை மேம்படுத்துவதற்கும் ‘கூட்டுப்பங்காண்மை’ என்ற அடிப்படைத் தன்மையை அவசியமாகக் கண்டனர். அவர்களின் நம்பிக்கைப்படி, நீடித்த நிலையான சமூக, பொருளாதார, கலாசார வாழ்வின் அடித்தளமாக கூட்டுப்பங்காண்மை இருந்தது. இதற்காக, அவர்கள் தொடர்ந்தும் உழைத்து, கூட்டுறவு கட்டமைப்புகளை உலகம் முழுவதும் பரப்பினர். மேலும், சமூகத்தின் அடித்தள மக்களின் வாழ்வாதாரத்துக்கான ஒரு கூட்டுறவு அடையாளத்தை உருவாக்கினர். பெரும்பான்மையான மக்கள் சமூக, பொருளாதார விளிம்புநிலை நோக்கி செல்லும் உலகில், ஒரு மாற்றுப் பொருளாதார முறைமையை ‘கூட்டுறவு’ என உருவாக்கி, சமநிலை ஒழுங்கைப் பேணச் செய்தனர். இன்றைய கூட்டுறவு அமைப்புகளின் இயங்கு நிலையின் மூல ஊற்று, இத்தகைய அடிப்படை நம்பிக்கையிலும் தொடர்ந்த பணியிலுமே இருந்து வந்துள்ளது.

2

நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மிக முக்கியமான பங்கைக் வகிக்கின்றன, ஏனெனில் அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 50% இற்கும் அதிகமாகப் பங்களிக்கின்றன. இருப்பினும், சமீபத்திய சவால்கள் அவற்றின் செயற்பாடுகளை கணிசமாகப் பாதித்துள்ளன. இதற்குள், 2019 இல் நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல், COVID-19 தொற்றுநோய் மற்றும் 2022 இல் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு ஆகியன அடங்கும். இதன் விளைவாக, பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டன. இது சட்ட நடவடிக்கைகள் மற்றும் சொத்துப் பறிமுதல் அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்தது. ஏப்ரல் 1, 2019 முதல் செப்டம்பர் 30, 2024 வரை, மொத்தம் ரூ. 886 பில்லியன் மதிப்புள்ள சுமார் 494,000 கடன்கள் செயற்படாதவை என வகைப்படுத்தப்பட்டன. அவற்றில் 99% ரூ. 25 மில்லியனுக்கும் குறைவான தொகைகளைக் கொண்டுள்ளன. இந்தச் சவால்களை எதிர்கொள்ள, அரசாங்கம், இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) ஆகியவற்றுடன் இணைந்து, போராடும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு நிவாரணப் பொதியை உருவாக்கியுள்ளது. டிசம்பர் 19, 2024 அன்று, சமீபத்திய நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை குறிப்பிடும் ஒரு சுற்றறிக்கையை CBSL வெளியிட்டது. ஏப்ரல் 1, 2019 முதல் செயல்படாதவை என வகைப்படுத்தப்பட்ட கடன்கள் தொடர்பான உதவியைப் பெற, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மார்ச் 31, 2025 இற்குள் தங்கள் வங்கியின் வணிக மறுமலர்ச்சிப் பிரிவுகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

நிவாரண நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

a. திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிக மறுமலர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் கடன்களை மறுசீரமைத்தல்

b. ஜூன் 15, 2025 க்குள் மறுசீரமைக்கப்பட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்தல்.

c. டிசம்பர் 31, 2025 இற்குள் ரூ. 25 மில்லியனுக்கும் குறைவான நிலுவையில் உள்ள கடன்களை திருப்பிச் செலுத்தும் காலக்கெடு. ஜூன் 30, 2025 க்குள், ரூ. 25 மில்லியன் முதல் ரூ. 50 மில்லியன் வரை, மற்றும் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் காலக்கெடு.

d. ஏப்ரல் 1, 2019 முதல் டிசம்பர் 15, 2024 வரை தகுதியான கடன்களுக்கான செலுத்தப்படாத வட்டியை (மூலதன வட்டியைத் தவிர்த்து) தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு. 

இலங்கையின் பொருளாதார மீட்சியில், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை ஆதரிப்பதற்கும், உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் கூட்டுறவுகள் அத்தியாவசியமாக உள்ளன. இருப்பினும், அவற்றின் சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தை அதிகரிக்க தேவையான கூட்டுறவு உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. இந்தச் சவால்களை சமாளிக்க, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான இலங்கை மத்திய வங்கியின் நிவாரணப் பொதியில் கூட்டுறவு அமைப்புகளை உள்வாங்குவது அல்லது அதற்குரிய ஏதேனும் நிவாரணப் பொதிகளை உடனடியாக உருவாக்குவது அவசியமாகும். இதன் மூலம், கூட்டுறவுகளின் தாக்கத்தை விரிவாக்கி, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும்.

இலங்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனினும், உள்நாட்டுப் போர், COVID-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றின் கலவையால் இவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பல நிறுவனங்கள் மூடப்பட்டன. வங்கிகளின் கடன்களைத் திருப்பி செலுத்த முடியாமை, MSME உரிமையாளர்களுக்கு அவர்களது சொத்துகளை இழக்கும் நிலையை ஏற்படுத்தியது. நுண் வீதியோர வியாபாரிகள் கடன்களுக்கான வட்டியை தங்களது சொந்தச் சேமிப்புகளிலிருந்து கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மத்திய வங்கியின் நிவாரண பொதி என்பது பாதிக்கப்பட்ட கூட்டுறவுகளுக்கு ஒரு முக்கிய தீர்வாக அமையலாம். அரசு, குறிப்பாக மத்திய வங்கி, பாதிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்புகளுக்கு நிவாரண உதவியை வழங்குவதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளின் கண்காணிப்பும், மத்திய வங்கியின் கடமைகளில் முக்கியமானதாகும். இதன் மூலம் அவற்றின் நிலையை மறுசீரமைத்து, மீண்டும் வலுப்படுத்த உதவ முடியும். இந்த முன்முயற்சிகள் கூட்டுறவு அமைப்புகளின் செயற்திறனை மேம்படுத்துவதோடு, அதன் உறுப்பினர்களுக்கு தேவையான பொருளாதார ஆதரவை வழங்கி, குறைந்தபட்சம் அதன் தாக்கங்களை குறைக்க உதவும்.

பாதிக்கப்பட்ட கூட்டுறவுகளுக்கும் நிவாரணம் தேவை. குறிப்பாக பாதிக்கப்பட்ட நுண் வியாபாரிகளுக்கு ஆதரவளிக்கும் மையமாக உள்ளன. ஆகவே, கூட்டுறவின் வலுவான மீட்சிக்கான நிவாரணப் பொதி அவசியமாகும். அரசின் பொருளாதார அரவணைப்பில் கூட்டுறவுகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். கூட்டுறவு அமைப்புகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உண்டு; அவர்கள் தங்கள் கடந்த கால இழப்புகளுக்கு நிவாரணம் பெற முனைய வேண்டும். கதவுகளைத் தட்டினால் தான் வழி பிறக்கும்!


ஒலிவடிவில் கேட்க

2795 பார்வைகள்

About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்