கறவை மாடு வளர்ப்பு இலங்கையின் விவசாயப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான கூறாகும். இந்தத்துறை நாட்டு மக்களின் ஊட்டச்சத்துத் தேவையின் கணிசமான பகுதியை பாலின் மூலம் நிறைவு செய்வதோடு, ஆயிரக்கணக்கான பாற்பசுப் பண்ணையாளர்களுக்கு வேலைவாய்ப்பினையும் வழங்குகிறது. இதனால் கணிசமான வருமானத்தை உருவாக்கும் துறையாக இது விளங்குகிறது. எனினும் அண்மைக்காலத்தில் கறவை மாடு வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் இலங்கையின் ஏனைய துறைகளைப் போல் கடுமையான நிதி சார்ந்த நெருக்கடிகளைச் சந்திப்பதை அவதானிக்க முடிகிறது. அதிகரித்த உற்பத்திச் செலவு, பாலின் விலையின் தளம்பல், சந்தைப்படுத்தலின் இடர்பாடுகள், அரசாங்கத்தின் முற்றுமுழுதான அனுசரணை இல்லாமை போன்ற விடயங்களை இந்த நெருக்கடியின் முக்கிய காரணிகளாகக் குறிப்பிட முடியும்.
இலங்கையின் கறவை மாட்டுப் பண்ணைத் துறையில் அதிகளவில் சிறு பண்ணையாளர்களே (Small Scale Dairy Farmers) ஈடுபடும் நிலையில், நாட்டில் ஏற்படும் சிறிய பொருளாதார ரீதியான அதிர்ச்சியும் அவர்களின் மாடு வளர்ப்புச் செயன்முறையைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்தக் கட்டுரை அண்மைக்காலத்தில் இலங்கையின் கறவை மாட்டுப் பண்ணைத்துறை சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளை ஆராய்கிறது.
கறவை மாட்டுப் பண்ணையாளர்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகள்:
1. அதிக உற்பத்திச் செலவு
பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனத்தின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு: பெரும்பாலான அடர்வுத் தீவன (Concentrates) உற்பத்தி உள்ளீடுகள் (சோயா, சோளம், விற்றமின்கள்) வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதியாகின்றன. உலகச் சந்தையில் ஏற்படும் மேற்படி மூலப்பொருட்களின் விலைத் தளம்பல்கள், அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள இலங்கை ரூபாவின் வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டுப் பணக் கையிருப்பின் பற்றாக்குறை காரணமாக அவற்றின் இறக்குமதிகள் பாதிப்படைகின்றன. அத்துடன் உக்ரைன் யுத்தம் மற்றும் ஏனைய உலக அரசியல் சமமின்மை காரணமாக ஏற்பட்டுள்ள மூலப்பொருட்கள் விநியோகச் சங்கிலியின் (Supply Chain Disruption) பாதிப்புக் காரணமாகவும் இலங்கையின் கால்நடைத் தீவன மூலப்பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.
பசுந்தீவனத்தின் உற்பத்தியைப் பொறுத்தவரை, உற்பத்திக்குத் தேவையான உரத்தின் விலை அதிகரிப்பும், நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் புல்வெட்டும் இயந்திரம் போன்ற இயந்திர சாதனங்களின் விலை அதிகரிப்பும், மின்சாரக் கட்டண அதிகரிப்பும் கணிசமான பாதிப்பைத் தருகின்றன. மேலும் அதீத மழை, வறட்சி போன்ற சீரற்ற காலநிலை காரணமாகவும் பசுந்தீவன உற்பத்தி பாதிப்படைகின்ற அதேவேளை, அவற்றை உற்பத்தி செய்யும் செலவும் அதிகமாகின்றது (வறட்சியின் போது அதிக நீரை இயந்திரம் மூலம் இறைக்க வேண்டி ஏற்படுகிறது).
கால்நடை மருத்துவச் சேவை மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு: பெரும்பாலான கால்நடை மருந்துகள் ஏனைய மூலப்பொருட்களைப் போல இறக்குமதி செய்யப்படுவதால் கணிசமான விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறு கால்நடைப் பண்ணையாளர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். கணிசமான அளவு செலவு மருத்துவத் தேவைக்கே செல்கிறது.
ஏனைய கட்டுமான மற்றும் இயந்திர உபகரணகங்களின் விலை அதிகரிப்பு: கால்நடை இருப்பிடங்களை அமைப்பதற்கான செலவு அதிகரித்துள்ளதுடன் பால் கொள்கலன், கறவை இயந்திரம் போன்ற அவசியமான உபகரணங்களின் விலையும் அதிகரித்துள்ளது. பெறுமதி கூட்டும் உற்பத்திகளைச் செய்யும் இயந்திரங்களின் விலையும் அதிகரித்துள்ளதால், அவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.
2. தளம்பலான பால் விலை மற்றும் சரியான விலை கிடைக்காமை
பாலின் உற்பத்தி, காலநிலை மாற்றத்தின் போது மாற்றமடைகின்றது. மழைக்காலத்தின் போது பாலுற்பத்தி அதிகரிக்கும், அதேவேளை பாலின் விலை வீழ்ச்சியடையும். வறட்சிக் காலத்தில் பாலுற்பத்தி குறைவடைவதோடு, பாலின் விலை அதிகரிக்கிறது. எனினும் பாலின் உற்பத்திச் செலவும் அதிகரித்தே காணப்படுகிறது.
பண்ணையாளர்களின் பாலுக்குச் சரியான விலை கிடைக்காத நிலையே பல இடங்களில் காணப்படுகிறது. கணிசமான இடங்களில் இடைத்தரகர்கள் (Middle Man) பாலை மிகக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்வதால், பண்ணையாளர்களுக்குச் சரியான இலாபம் கிடைப்பதில்லை. பல இடங்களில் பால் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் பல காரணங்களைக்கூறி பாலின் அளவைக் கணிசமாகக் கழிப்பதைக் காணமுடிகிறது (சில இடங்களில் பாலின் தரமும் குறைவாக உள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும்).
3. நிதி வழிகளை அடைவதிலுள்ள இடர்பாடுகள்
சிறு மற்றும் நடுத்தரப் பண்ணையாளர்கள் அதிக முதலீட்டுடன் தமது பண்ணைகளை மேம்படுத்த முடியாதுள்ளனர். குறிப்பாக நல்லின மாடுகள் அதிக விலையாக உள்ளமை, இருப்பிடம் அமைக்கும் போது ஏற்படும் அதிகரித்த செலவு போன்ற காரணிகள் அவர்களின் பண்ணை நடவடிக்கைகளைப் பாதிக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தை அமுல்படுத்தும் போது, அது அதிக செலவுமிக்கதாக அமைவதால், பல பண்ணையாளர்கள் இன்னமும் பழைய பாரம்பரிய முறைகளிலேயே தமது பண்ணை நடவடிக்கைகளைச் செய்வதை அவதானிக்க முடிகிறது.
கால்நடைப் பண்ணையாளர்களால் பெறத்தக்க குறைந்த வட்டியுடன் கூடிய மிகப் பெருமளவு தொகையான கடன் வசதிகள் இலங்கையில் தற்போது இல்லாதநிலை அவதானிக்கப்படுகிறது. அத்துடன் தற்போது வழங்கப்படும் கடன் மற்றும் மானிய வசதிகளும் இறுக்கமான நடைமுறைகளுடனேயே வழங்கப்படுகின்றன (எனினும் சட்டத்திலுள்ள நெகிழ்வுத்தன்மையைப் பயன்படுத்தி பலர் போலியான கால்நடைக் கடன்களைப் பெறுவதைக் காணவும் முடிகிறது).
4. பால் சேமிப்பு மற்றும் பால் பதனிடலிலுள்ள குறைபாடுகள்
கிராமமட்டங்களில் முறையான பால் களஞ்சியப்படுத்தும் வசதிகள் இல்லாமையால் பண்ணையாளர்களின் பால் பழுதடைவதோடு, இடைத்தரகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. போதிய களஞ்சிய வசதியில்லாமையால், பெறப்படும் பாலுக்குச் சரியான விலையும் கிடைப்பதில்லை. அந்தப் பாலைக் கொண்டு பெறுமதிமிக்க பால் பொருட்களையும் செய்ய முடிவதில்லை. பால் பதனிடும் நிலையங்களும் இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் இல்லை என்பதால் பாலைச் சேகரித்து விநியோகிக்கும் போது, அது எளிதில் பழுதடைகிறது.
5. காலநிலை மாற்றமும் சூழல் பிரச்சினைகளும்
வறட்சி மற்றும் தேவையான மழைவீழ்ச்சி கிடைக்காமை காரணமாக பசுந்தீவன உற்பத்தி பாதிப்படைவதோடு மேய்ச்சல்முறை ஊட்டத்தில் தங்கியுள்ள மாடுகளும் உணவின்றிப் பாதிப்படைகின்றன. அதிகரித்த வெப்பநிலை பாலுற்பத்தியைக் குறைப்பதோடு மாடுகளின் இனப்பெருக்க ஆற்றலையும் பாதிக்கின்றது. இதனால், சினைப்பிடிக்காமை மற்றும் அதிகளவு கருச்சிதைவும் நிகழ்கிறது; அதிக பராமரிப்புச் செலவு ஏற்படுகிறது. மாடுகள் சினைப்படாமல், பாலுற்பத்தி கிடைக்காமல் இருக்கும் இந்தக் காலத்தில் வருமானம் கிடைப்பது குறைகிறது.
சாத்தியமான தீர்வுகள்:
1. கால்நடைத் தீவனத்துக்கான செலவைக் குறைத்தலும் பசுந்தீவன உற்பத்தியை மேம்படுத்தலும்
உள்ளூர்த் தீவன உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் அளவைக் குறைக்க முடியும். குறிப்பாக சோளம் மற்றும் சோயாவை அதிகளவில் பயிரிட ஊக்குவிக்கலாம். அதிக உற்பத்தித் திறனுடைய மேம்படுத்தப்பட்ட நேப்பியர் வகைப் புற்களையும் (CO4, CO5) தீவனச் சோள வகைகளையும் (Sugar Graze) அதிகளவில் பயிரிடுவதன் மூலம், அடர்வுத்தீவன அளவைக் குறைக்க முடியும். அதிகளவில் புற்கள் வளரும் காலத்தில், அவற்றைப் பதப்படுத்தி வறட்சிக் காலத்தில் வழங்கலாம். வினைத்திறனான புல் வளர்ப்பு, புல் பதனிடல் (Silage, Hay) மற்றும் TMR போன்ற ஊட்ட முறைக்குரிய முறையான நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகள், கள விஜயங்களை பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

அரசாங்கத்தின் மூலம் மானிய அடிப்படையில் புல் நறுக்கும் இயந்திரங்கள், பயிர்ச் செய்கைக்குரிய தண்ணீர்ப் பம்பிகள், சொட்டுநீர்ப் பாசன உபகரணங்கள், புல் விதைகள் – துண்டங்கள் போன்றவற்றை வழங்கவேண்டும் (ஏற்கனவே இந்த நடவடிக்கைகள் அரச கால்நடை வைத்திய அலுவலகங்கள் மூலம் இடம்பெறுகின்றன. ஆனாலும் இந்தச் செயன்முறை விரிவுபடுத்தப்பட வேண்டும்). இந்த விடயத்தில் பண்ணையாளர் – அரச மற்றும் தனியார் கூட்டிணைவு (Public, Private Combination Concept) வரவேற்கத்தக்கது. அரச சார்பற்ற அமைப்புகள், பால் சேகரிப்பு நிறுவனங்கள் இது தொடர்பாகக் கூடிய கவனமெடுக்க வேண்டும்.
வர்த்தக ரீதியான தீவனப் பயிர்ச் செய்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மானிய அடிப்படையில் இயந்திர உபகரண வசதிகளைச் செய்தல் வேண்டும் (இதற்குப் பாரிய முதலீடும், பாரிய உட்கட்டுமான வசதியும் அவசியம். இதற்காகப் பண்ணையாளர்களுக்கு மானியம் வழங்குவதோடு மட்டுமன்றி, இலகு கடன் வசதிகளுக்கும் ஏற்பாடுசெய்ய வேண்டும்). உள்ளூர் அடர் தீவன உற்பத்தியாளர்களுக்கும், மானிய அடிப்படையிலான உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு மற்றும் இயந்திர – உபகரணப் பொருத்துகைக்குரிய நிதி வசதிகளை மேற்கூறிய முறையில் செய்ய வேண்டும்.
மேய்ச்சலை நம்பிய கால்நடைகளுக்கு ஏற்றால் போல், மேய்ச்சல் ஒதுக்கீடுகளைச் செய்வதோடு, நவீன மேம்பட்ட ஊட்டச்சத்துள்ள மேய்ச்சல் புற்களை அறிமுகம் செய்து பராமரிக்க வேண்டும்.
2. பால் விலை தொடர்பான விடயங்களை முறையாகக் கையாளுதலும் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குதலும்
இடைத்தரகர்கள் உருவாகுவதை தடுக்கும் வகையில் பால் கூட்டுறவு அமைப்புகளுடன் இணைந்து பால் சேகரிப்பு நிலையங்களை ஸ்தாபித்தல் வேண்டும். குறிப்பாக கிராம மட்டங்களில் இது அவசியமாகிறது. இதனால் பண்ணையாளர்கள் நேரடியாக தகுந்த விலைக்குப் பாலை வழங்க முடியும். மாலைநேரப் பால் சேகரிப்புக்கு ஏற்ற வகையில் பண்ணையாளர்களுக்கு குளிர்சாதன வசதிகளை ஏற்படுத்தி பாலின் தரத்தைப் பேண வகைசெய்தல் வேண்டும். நெல் போன்றவற்றுக்குச் செய்வது போல, பொருத்தமான விலைக் கொள்கையை பாலுக்கும் (Government Price Stabilization) நிர்ணயம் செய்தல் வேண்டும்.

பெறுமதி சேர் உற்பத்திகளைச் செய்யும் விதமாக, பொருத்தமான இயந்திர வசதிகளை ஏற்படுத்தல், ஊக்குவித்தல், மானியம் வழங்குதல். இதன் மூலம் பால் விரயமாவதைத் தவிர்க்க முடியும். பெறுமதி சேர் பால் பொருட்கள் பண்ணையாளருக்கு மேலதிக வருமானத்தைத் தரும்.
3. பண்ணையாளர்கள் நிதி வசதிகளை இலகுவாக அடைய வகை செய்தல்
குறைந்த வட்டியுடனான இலகு கடன் வசதியை வங்கிகளினூடாக வழங்க வேண்டும். இதன் மூலம் தரமான மாடுகளை வாங்க முடியும்; உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். அரசாங்கத் தலையீட்டுடன் கூடிய காப்புறுதி வசதிகளை வழங்குவதன் மூலம் கால்நடைகளின் இழப்புகளினால் ஏற்படும் நட்டத்தைக் குறைக்க முடியும். வருடாந்தம் ஏற்படும் நோய் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பல கால்நடைகள் இறப்பதால் பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
4. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்
பால் சேகரிப்பு நிலையங்களை கிராம மட்டங்களில் உருவாக்க வேண்டும். போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி விநியோகக் கட்டமைப்பை ஸ்திரப்படுத்தலாம். பால் சேகரிப்பில் அதிகமாக தனியாரை ஊக்குவிக்க வேண்டும். பால் களஞ்சியப்படுத்தும் பால் பதனிடல் அமைப்புகள் அதிக தூரத்தில் இல்லாமல், அருகிலேயே அமைந்தால் பால் பழுதடைவதைக் குறைக்கலாம்.
5. காலநிலை மற்றும் சூழலுக்கு உகந்த கால்நடை வளர்ப்பை மேற்கொள்ளுதல்
வறட்சிக் காலத்தைத் தாங்கக்கூடிய பசுந்தீவனங்களைப் பயிரிட வேண்டும். பண்ணையாளர்களுக்கு அதற்குரிய பயிற்சியும், பசுந்தீவன உள்ளீடுகளும் வழங்கப்பட வேண்டும். தண்ணீரைச் சேமிக்கும் வழிகள் தொடர்பான பயிற்சிகளும் உள்ளீடுகளும் வழங்கப்பட வேண்டும். வெப்ப அயற்சியைத் தடுக்கும் வகையில் கொட்டகைகள், உட்கட்டமைப்பு வசதிகளை (காற்று விசிறிகள், சீராக்கிகள்) அமைக்க வசதி செய்யப்பட வேண்டும். காலநிலையைத் தாங்கக்கூடிய கால்நடைகளை வளர்க்கவே பரிந்துரை செய்ய வேண்டும்.
6. பண்ணையாளர் விரிவாக்கல் செயன்முறைகளை மேம்படுத்தல்
அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் பண்ணையாளர்களுக்கு நவீன மேம்படுத்தப்பட்ட கறவை மாடு வளர்ப்பு, நோய்ப் பராமரிப்பு, நிதி முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் அடிக்கடி வழங்கப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் மூலமாக கால்நடை ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
7. கால்நடை மருந்துகள் மற்றும் சிகிச்சைகள்
அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ள கால்நடை மருந்துகளின் விலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் மானிய ரீதியான திட்டங்கள் மூலம் பண்ணையாளருக்கு உதவ முடியும். இதற்கென விசேட அலகுகளை கால்நடை வைத்திய அலுவலகங்களில் நிறுவி, விசேட விலையில் தேவையான மருந்துகளை கால்நடை வைத்தியரின் மேற்பார்வையில் பண்ணையாளருக்கு வழங்கலாம்.
தற்போது இலங்கையில் கால்நடை மருத்துவர்கள், கால்நடைப் போதனாசிரியர்கள், சிற்றூழியர்கள், சாரதிகள் என்போருக்கு பாரிய பதவிநிலை வெற்றிடங்கள் நிலவுகின்றன. கால்நடைத்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் ஏனைய உட்கட்டுமான வசதிகள் குறைந்த தரத்திலேயே உள்ளன. இதனால் பண்ணையாளர்களுக்குச் சேவை செய்வதில் இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இந்தக் குறைபாடுகளின் விளைவாக பண்ணையாளர்கள் பாதிப்படைகின்றனர். அது பெரும்பாலும் நிதி சார்ந்தே நிகழ்கிறது. இதனால் பண்ணையாளர்கள் அதிகளவில் செலவழிக்க நேருகிறது. எனவே இந்தக் குறைபாடுகள் களையப்பட்டு, கால்நடை வைத்திய அலுவலகங்களின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

இப்படியாக, இலங்கையின் கறவை மாடு வளர்ப்பாளர்கள் நிதி மற்றும் பொருளாதாரம் சார்ந்து பல சவால்களைச் சந்திக்கின்றனர். இதன் இறுதி விளைவாக கறவை மாட்டுப் பண்ணைத் தொழிலை கைவிடும் நிலை ஏற்படுகிறது. இதனால் நாட்டின் பால் தேவையை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, இறக்குமதியில் தங்கியிருக்கும் நிலை தோன்றுகிறது. இது மொத்தப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இதனை தவிர்க்கும் விதமாக சாத்தியமான தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும். இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் செய்ய முடியாது. அரசாங்கம் – பண்ணையாளர்கள் – தனியார் அமைப்புகளின் கூட்டிணைவு இதற்கு அவசியமாகிறது. இக்கூட்டிணைவு சாத்தியமானால் நாட்டின் பொருளாதார விருத்தியில் கால்நடைத்துறையும் கணிசமான பங்களிப்பை வழங்கமுடியும்.