இலங்கையில் பாராளுமன்றத்தின் தோற்றமும் அதன் சுருக்கமான வரலாறும் – பகுதி 2
Arts
20 நிமிட வாசிப்பு

இலங்கையில் பாராளுமன்றத்தின் தோற்றமும் அதன் சுருக்கமான வரலாறும் – பகுதி 2

February 21, 2025 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல

1978 ஆம் ஆண்டு யாப்பு இலங்கையில் பாதி – ஜனாதிபதிமுறையை ஏற்படுத்தியது. பாதி ஜனாதிபதி முறையென்பதை ஆங்கிலத்தில் ‘Semi – Presidential System’ என அழைப்பர். இப்பாதி ஜனாதிபதிமுறை இரு உப பிரிவுகளைக் கொண்டது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுவர். அவையாவன:

  1. ஜனாதிபதி – பாராளுமன்றமுறை (President – Parliamentary)
  2. பிரதமர் – ஜனாதிபதிமுறை (Premier – Presidential)

முதலாவது உப வகையான ஜனாதிபதி – பாராளுமன்றமுறையில் பிரதமரும் மந்திரிசபையும் கூட்டாக ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்திற்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாய் இருப்பர். இரண்டாவது உப வகையான பிரதமர் – ஜனாதிபதி முறையில் பிரதமரும் மந்திரிசபையும் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பர். 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியல் யாப்புச் சீர்திருத்தம் இலங்கையில் ஒரு முக்கியமான அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1978 முதல் 2015 வரை ஜனாதிபதி – பாராளுமன்ற முறையாக (President – Parliamentary) இருந்துவந்த இலங்கையின் அரசுமுறை இத்திருத்தத்தின் பயனாய் பிரதமர் – ஜனாதிபதி முறையாக (Premier – Parliamentary) மாற்றமுற்றது. இந்த மாற்றத்தினால் இலங்கையின் நிருவாகத்துறையின் தலைவரான ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் மாற்றமுற்றன. பிரதமரைப் பதவியில் இருந்து நீக்குவதிலும், அவரைப் பதவியில் நியமிப்பதிலும் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் 19 ஆவது திருத்தத்தின் பயனால் நீக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவரிடத்தில் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்தார். அப்போது மைத்திரிபால சிறிசேன அவர்களின் நடவடிக்கை அரசியல் யாப்புச் சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு 19 ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தால் ஏற்பட்டிருந்த மாற்றத்தை விளக்குவதாக அமைந்தது.

1978 இல், ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள் ஜனாதிபதிமுறையினதும், பாராளுமன்றமுறையினதும் கலப்பான அரசுமுறையை இலங்கையில் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். இம்மாதிரி இலங்கைக்கு மிகவும் பொருத்தமான அரசியல் யாப்பு மாதிரி (Constitutional Model) என அவர் கருதினார். இம்மாதிரியான அரசுமுறை பலமான ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் நன்மைகளை இலங்கை பெற்றுக்கொள்ள உதவியது. வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற முறையின் ஜனநாயக மரபுகளையும், அதன் ஜனநாயகப் பொறுப்புக் கூறுதல் (Democratic Accountability) என்னும் பண்பைப் பேணுவதையும் இம்முறை உறுதி செய்தது. 1918 முதல் 2001 வரையான காலத்தில் பதவி வகித்தவர்களான ஜனாதிபதிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தனரோ பிரதமர்களும் அதே கட்சியைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். இதனால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்ற பிரதமர், ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் பலப்படுத்த உதவினார். ஆகையால் இக்கால அரசாங்கங்கள் ‘Consolidated Majority Government’ என அழைக்கப்பட்டன. 2001 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். ஜனாதிபதியின் கட்சியைச் சேராத ஒருவர் பிரதமர் பதவியை வகிக்கும் நிலை ஏற்பட்டது. 2001 முதல் 2004 வரை இந்நிலை நீடித்தது. இக்குறுகிய காலம் ‘Co-habitation Period’ (ஒற்றுமையாக உடனுறை காலம்) என அழைக்கப்பட்டது. இக்குறுகிய காலத்தில் ஜனாதிபதி – பிரதமர் உறவில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டதெனினும், 2015 வரை இலங்கையின் அரசியல் முறையில் ஜனாதிபதி மேலாதிக்கமுடைய செயலியாக (Dominant Actor) விளங்கினார். பாராளுமன்றத்தின் அனுமதியையோ அங்கீகாரத்தையோ பெறாமல் பிரதமரைப் பதவி நீக்கும், பதவி நியமிக்கும் அதிகாரமுடையவராக ஜனாதிபதி விளங்கினார். ஜனாதிபதியின் உதவியாளர் என்ற நிலையிலேயே பிரதமர் செயற்பட்டார்.

இலங்கையின் பாராளுமன்றம் 1978 அரசியல் யாப்பின்படி முன்னரை விடப் பலம் குறைந்த சட்ட ஆக்க நிறுவனமாக மாற்றப்பட்டிருந்தபோதும், அரசியல் யாப்பு பாராளுமன்றத்திற்கு முக்கிய வகிபாகத்தை வழங்கியிருந்தது. மக்களின் சட்டவாக்க இறைமையை (Legislative Sovereignty of the People) பிரயோகிக்கும் பிரதான நிறுவனமாகவும், அரசுக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாகவும் பாராளுமன்றம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இலங்கை அரசியல் யாப்பு (1978) பாராளுமன்றத்தை ஜனநாயகக் குடியரசின் (Democratic Republic) பாராளுமன்றம் எனவே வரையறை செய்துள்ளது. குடியரசுத் தத்துவங்களான மக்கள் இறைமை (Popular Sovereignty), சுதந்திரம் (Liberty), சட்டத்தின் ஆட்சி (Rule of Law) என்பனவற்றின் அடிப்படையில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பாராளுமன்றம் இருந்து வருகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

இலங்கையின் பாராளுமன்றம் ஒரு சபையைக் கொண்ட சட்ட ஆக்க மன்றம் (Uni-cameral Legislature) ஆகும். இம்மன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் விகிதாசாரமுறைப் பிரதிநிதித்துவம் (Proportional Representation) என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். 1931 முதல் 2019 வரையான இன்று வரை 88 ஆண்டுகளாக இச்சட்ட ஆக்க மன்றம் சர்வசன வாக்குரிமைப்படி தெரிவு செய்யப்படுகிறது. இந்நீண்ட காலத்தில், 1946 முதல் 1971 வரையான குறுகிய காலத்தில் மட்டும், இம்மன்றம் சனப் பிரதிநிதிகள் சபை (House of Representative), செனற் (Senate) என்று அழைக்கப்பட்ட இரு சபைகளைக் கொண்டதாய் அமைந்திருந்தது. செனற் சபை என்னும் மேற்சபை சோல்பரி அரசியல் யாப்பின் ஓர் அங்கமாக சோல்பரி ஆணைக்குழுவின் சிபாரிசின்படி அமைக்கப்பட்டது. இலங்கைத் தலைவர்கள் அவ்வாறான ஒரு சபை வேண்டுமெனக் கேட்டுப்பெறவில்லை. ஆயினும் பகிரப்பட்ட ஆட்சி (Shared Rule) என்ற அதிகாரப் பகிர்வுத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு மேற்சபை (Upper House) உபயோகமான நிறுவனமாக இருக்க முடியும் என சில அரசியல் சட்டவாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

1978 அரசியல் யாப்பு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்தது. இம்முறைப்படியான பாராளுமன்றத் தேர்தல் முதல் தடவையாக 1989 ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட்டது. அவ்வாண்டுக்கு முற்பட்ட காலத்தில் ஒற்றையங்கத்தவர் தொகுதி முறையிலான ‘First-Past-Post System’ மூலம் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 உறுப்பினர்கள் 22 தேர்தல் தொகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். எஞ்சிய 29 உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு (National List Seats) நியமிக்கப்படுகின்றனர்.

இலங்கையின் அரசியல், பண்பாட்டுப் பன்மைத்துவத்தினைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான அரசியல் யாப்புக் கருவியாக விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை விளங்குவதாகக் கருதப்படுகிறது. ஆயினும் இம்முறை நாட்டின் கட்சி அரசியல் கட்டமைப்பைச் (Party-Political Structure) சிதைத்துள்ளது எனவே கருதப்படுகிறது. அத்தோடு அரசியல் கலாசாரத்தில் (Political Culture) ஊழலுக்கும் வன்முறைக்கும் இது இடமளித்துள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.

1978 அரசியல் யாப்பின்படி பாராளுமன்றத்தின் அதிகாரங்கள்

நிருவாகத்துறை, நீதித்துறை, சட்ட ஆக்கத்துறை ஆகிய எல்லாத் துறைகளினதும், நிறுவனங்களினதும் அதிகாரங்களின் தோற்ற மூலமாக அரசியல் யாப்பே விளங்குகிறது. ஆகையால் பாராளுமன்றம் அரசியல் யாப்பினால் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சபை என்பது முக்கியமானது. இலங்கையின் அரசியல் யாப்பின்படி பாராளுமன்றம் விரிந்த அதிகாரங்களையுடைய சபையாகும். ஆயினும் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தின் இறைமை (Parliamentary Sovereignty) இலங்கையின் பாராளுமன்றத்திற்கும் உள்ளது என்று கருதுவது தவறு. இலங்கையின் அரசியல் யாப்பின் 3 ஆவது உறுப்புரை இலங்கைக் குடியரசின் இறைமை மக்களிடம் உள்ளது எனவும் அது பிரிக்கப்பட முடியாதது எனவும் (Sovereignty is in the people and  is inalienable) குறிப்பிடுகிறது. அரசியல் யாப்பின் 75, 76 என்னும் இரு உறுப்புரைகள் பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும், அவற்றின் நோக்கெல்லையையும், மட்டுப்பாடுகளையும் வரையறை செய்துள்ளன. பாராளுமன்றம் சட்டங்களை ஆக்கும் அதிகாரம் உடையது. இச்சட்டங்கள் பின்னோக்கிய செயற்பாடு (Retroactive Effect) உடையனவாகவும் இருக்கலாம். பாராளுமன்றத்தின் சட்ட  ஆக்க அதிகாரங்களில் அரசியல் யாப்பைத் திருத்தும் அதிகாரம் முக்கியமான ஒன்றாகும். அரசியல் யாப்பின் சில உறுப்புரைகளைத் திருத்துவதற்கு, சர்வசன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் சம்மதத்தைப் பெறுவதோடு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அத்திருத்தம் நிறைவேற்றப்படவும் வேண்டும். அரசியல் யாப்புத் திருத்தத்திற்கான அதிகாரத்தின் மீது ஓர் மட்டுப்பாடு உள்ளது. அரசியல் யாப்பின் ஒரு பகுதியையோ அல்லது அதனை முழுமையாகவோ நீக்குவதாயின், அவ்வாறு நீக்கப்படும் பகுதி அல்லது முழுமை, பதிலீடு (Replacement) செய்யப்படாவிட்டால் அத்தகைய சட்டம் செல்லுபடியாகாது. அவ்வாறே அரசியல் யாப்பினைப் பதிலீடு செய்யாமல் அதனை ரத்துச் செய்தலும் (Repeal) இயலாது. இன்னொரு முக்கியமான பொதுவிதி யாதெனில் பாராளுமன்றம் சட்ட ஆக்க அதிகாரமுடைய ஒரு நிறுவனத்தினையோ/ நபரையோ உருவாக்கி அதனிடம்/ அவரிடம் தனது அதிகாரங்களைப் பொறுப்பளித்தல் இயலாது (……..as a general principle parliament cannot abdicate or alienate its legislative power and can not set up a rival legislative authority).

இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம் பற்றிய மேற்குறித்த வரையறைகள் பின்வரும் நான்கு விதிவிலக்குகளைக் கருத்தில் கொண்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

1. சர்வசன வாக்கெடுப்பு: குறிப்பிட்ட சில விசேட சந்தர்ப்பங்களில் நேரடியாக சர்வசன வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கும் சட்டவாக்க இறைமையை மக்கள் தம்மிடம் வைத்திருக்கின்றனர்.

2. 1987 அதிகாரப் பகிர்வு: 1987 ஆம் ஆண்டில் மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்வு செய்யப்பட்ட போது (Introduction of Devolution in 1987) உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வு செய்த முறையானது, பாராளுமன்றத்தின் மேலாண்மையான அதிகாரத்தை (Overriding Power) பாதிப்பதாக, அதன் சட்ட ஆக்க அதிகாரத்தை மீறுவதாக அமையவில்லை எனக் குறிப்பிட்டது.

3. அவசரகால நிலைமை: நாட்டில் அவசரகால நிலைமை தோன்றும்போது ஜனாதிபதி சட்டங்களை ஆக்கும் அதிகாரத்தை (Legislative Powers) பிரயோகித்தல் முடியும்.

4. துணைநிலைச் சட்டவாக்கம்: பாராளுமன்றம் குறிப்பிட்ட சில தேவைகளுக்காக சில அரச நிறுவனங்களுக்கும் அதிகாரம் பெற்ற நபர்களுக்கும் துணைநிலைச் சட்டவாக்க அதிகாரத்தைக் கையளிக்கலாம் (Delegate Powers of Subordinate Legislation).

பாராளுமன்றத்திற்கு மேலும் மூன்று முக்கியமான அதிகாரங்கள் உள்ளன.

அ) பொதுநிதி மீதான கட்டுப்பாடு:

உறுப்புரை 148 பொதுநிதி (Public Finance) பற்றிய முழுமையான கட்டுப்பாட்டு அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டத்தினால் வழங்கப்பட்ட அனுமதி இல்லாமல் பொதுநிதியில் இருந்து பணம் எதனையும் செலவழிக்க முடியாது. அதே போன்று வரி முதலிய வருமானங்களைப் பெறவும் முடியாது. மாகாண சபைகளும், உள்ளூராட்சி சபைகளும் வரிகளையும் பலவித வருவாய்களையும் திரட்டுகின்றன. ஆயினும் அதற்கான அதிகாரத்தை அந்நிறுவனங்கள் அரசியல் யாப்பில் இருந்தும், உள்ளூராட்சிச் சட்டங்களில் இருந்தும் பெற்றுக் கொள்கின்றன. அரசாங்க வரவையும் செலவையும் (வரவுசெலவுத் திட்டம்) பாராளுமன்றமே கட்டுப்படுத்துகிறது என்பது உலகின் ஜனநாயக நாடுகள் அனைத்துக்கும் பொதுவான ஜனநாயகத் தத்துவமாகும். இத்தத்துவம் நடைமுறையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உள்ள கட்சியின்/ கட்சிகளின் கூட்டினால், வரவுசெலவுத் திட்டம் மூலம் கட்டுப்படுத்தப்படுவதைக் காணலாம். வரவுசெலவுத் திட்டத்தின் மீது சட்டவாக்கத்துறை கட்டுப்பாட்டைக் கொண்டிருத்தல் என்னும் கொள்கை இலங்கையில் காலனிய அரசாங்க காலத்திலேயே ஏற்பட்டிருந்தது.

அக்கொள்கை 1931 இல் டொனமூர் அரசியல் யாப்பின்படி முழுமையாக ஏற்புடமை பெற்று நடைமுறைக்கு வந்தது. வரவுசெலவுத் திட்டம் மீது பாராளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரமே அரசாங்கத்தினைப் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற (Accountable) வைப்பதாக அமைகிறது. வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தால் ஏற்கப்படாது தோற்கடிக்கப்பட்டால், அரசாங்கம் பதவியில் தொடர முடியாது; அது பதவி விலக வேண்டும் என்பது கட்டாயமானது.

ஆ) அவசரகால நிலைமை குறித்த பாராளுமன்றத்தின் கண்காணிப்பும் மேற்பார்வையும்:

உறுப்புரை 155 இன்படி அவசரகால நிலைமை தொடர்பான கண்காணிப்பு/ மேற்பார்வை (Oversight) அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனம் செய்தால் உடனடியாக அது பற்றிப் பாராளுமன்றத்திற்கு அவர் அறிவித்தல் வேண்டும். பாராளுமன்றம் அப்பிரகடனத்தை அங்கீகரிக்காவிடின் அது இரத்தாகும். அவசரகாலப் பிரகடனத்தை நீடிப்பதை ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றம் அங்கீகரித்தல் வேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டோ அல்லது அதன் அமர்வுகள் தள்ளி வைக்கப்பட்டோ (Prorogued) அல்லது ஒத்தி வைக்கப்பட்டோ (Adjourned) இருந்தால், அவசரகால நிலைமை நீடிப்புப் பற்றி முடிவு செய்வதற்காக மீளக்கூட்டப்பட வேண்டும். இவ்வாறாக அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்தல், அதனை நீடித்தல், அதனை முடிவுறுத்தல் என்பன பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தினுடனேயே நடைபெற வேண்டும். அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தமை பற்றித் தெரிவித்தல், பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுதல் என்பன, அரசியல் யாப்பின்படியான ஜனநாயக நாடுகளில் (Constitutional Democracies) பின்பற்றப்படும் அடிப்படை விதிமுறைகளாகும்.

இ) பாராளுமன்றத்தின் உள்ளக அலுவல்களைக் கட்டுப்படுத்தல்:

உறுப்புரைகள் 4, 67 என்பனவற்றின்படி பாராளுமன்றம் தனது உள்ளக அலுவல்களை (Internal Business) கட்டுப்படுத்தும் நீதி அதிகாரத்தைத் (Judicial Power) தன்னகத்தே கொண்டுள்ளது. பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகள், காப்புத்திறன் (Immunities), அதிகாரங்கள் என்பனவற்றை சட்டத்தின்படி ஒழுங்கமைக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. சமகால இலங்கையின் பாராளுமன்ற நடைமுறைகளில் வெஸ்ட்மினிஸ்டர் முறையின் தாக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. இங்கிலாந்தில் பாராளுமன்றத்தின் மேலாண்மை (Parliamentary Supremacy), முடிக்கும் (Crown) பாராளுமன்றத்திற்கும் இடையிலான முரண்பாடுகளின் ஊடாக வளர்ச்சி பெற்றது. நவீன பாராளுமன்ற நடைமுறைகளும் அவை பற்றிய விதிகளும், சனப்பிரதிநிதிகள் சபை (House of Commons) மீது முடி மன்னர் செலுத்தி வந்த தலையீடுகளை எதிர்த்து நடத்திய போராட்டத்தின் விளைவாக உருவானவை என்பது கவனிக்கத்தக்கது. இலங்கையின் பின்னணியில், இலங்கையின் ஜனாதிபதி பாராளுமன்றத்தின் மீது செலுத்தக்கூடிய தலையீடுகளையும் அத்து மீறல்களையும் (Intrusion) தடுத்து நிறுத்துதல் என இது பொருள்படும்.

19 ஆவது திருத்தத்தின் பின்னர் பாராளுமன்றமும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும்

1978 அரசியல் யாப்பு மேலாதிக்கமுடைய ஜனாதிபதியையும் அவருக்குக் கீழ்ப்பட்ட பாராளுமன்றத்தையும் உருவாக்கியது. இவ்வரசியல் யாப்பினை உருவாக்கியவரான ஜே.ஆர். ஜயவர்த்தன, நிர்வாகத்துறை (Executive) பாராளுமன்றத்திற்குப் பொறுக்கூற வேண்டியதாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவராகவே இருந்தார். பாராளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலம் ஜனாதிபதிக்கு மாறானதாக அமைந்து, பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடுகள் வலுத்தால், தாம் பிரதமர் அரசாங்க முறைக்கு (Prime Ministerial Government) இலங்கையின் அரசாங்க முறையை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் ஜே.ஆர். ஜயவர்த்தன ஒருமுறை குறிப்பிட்டார் எனக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவராகவே இருந்து வருகிறார் (இன்றைய உறுப்புரை 33 (A)). ஆனால் மந்திரிசபை (Cabinet) பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியதாகவும், பதில் கூற வேண்டியதாகவும் (Both  Responsible and Answerable) உள்ளது (உறுப்புரை 42 (2)). இத்தகைய ஒரு வேறுபாடு குறிப்பிடப்பட்டிருப்பதன் நியாயப்பாடு யாது என வெளிப்படையாகக் கூறப்படவில்லை. ஜனாதிபதியை மறைமுகமாகவன்றி நேரடியாகப் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வைப்பது சாத்தியமில்லை என்றே கூறலாம். மந்திரிகள் பாராளுமன்றத்திற்குப் பொறுக்கூற வேண்டியவர்கள். அவர்களின் பொறுப்புக்கூறல் ஊடாக ஜனாதிபதி மறைமுகமாகப் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவராகின்றார் எனலாம், அல்லது விதிவிலக்கான குற்றஞ்சாட்டல் (Impeachment) நடைமுறையின் போது அவர் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவராகிறார் எனலாம். 19 ஆவது யாப்புத்திருத்தம் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் ஒரு சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் இம்மாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். இத்திருத்தம் பிரதமரினதும், பாராளுமன்றத்தினதும் அதிகாரங்களைப் பலப்படுத்தியுள்ளது. இக்காரணத்தால் நிருவாகத்துறையின் மீதான பாராளுமன்றத்தின் கட்டுப்பாடு 19 ஆவது திருத்தத்தால் அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி நிருவாக அதிகாரமுடையவர், பிரதமர் பதவியும் மந்திரி சபையும் நிருவாக அதிகாரமுடையவை. நிருவாகத்துறையின் உள்ளே அமைந்திருக்கும் உறவுகளில் (Intra-Executive Relationship) 19 ஆவது திருத்தம் சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. இத்திருத்தத்தின் பயனால் ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதில் இருந்து 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனைவிட ஜனாதிபதி இரு தடவைக்கு மேல் பதவி வகித்தல் முடியாது என்ற மட்டுப்பாடும் (Two Term Limit) மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனநாயக ஜனாதிபதிமுறையின் அம்சங்களில் பதவிக்காலத்தை மட்டுப்படுத்தல் (Fixed Term Limit) முக்கியமானது என்பதை இவ்விடத்தில் குறிப்பிடலாம். மேலும் 19 ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களையும் குறைத்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரக்குறைப்பு இரு வகையானதாகும்.

  1. முன்னரைப் போல் ஜனாதிபதி தம் விருப்பப்படி பிரதமரை நியமித்தல், அவரைப் பதவியில் இருந்து நீக்கல் என்பனவற்றைச் செய்ய முடியாது. இவ்வாறு ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக இவ்விடயத்தில் இப்போது முடிவு எடுக்க முடியாது என்பதால், பிரதமருடைய அதிகாரமும் அந்தஸ்தும் உயர்ந்துள்ளன. 19 ஆவது திருத்தத்தின் பின்னர், பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரைத்தான் ஜனாதிபதி பிரதமர் பதவிக்கு நியமிக்கலாம்; பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பிரதமர் இழந்துவிடும் போதுதான் அவரைப் பதவியில் இருந்து நீக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. பிரதமரின் இறப்பு அல்லது பதவி விலகல் அல்லது அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழத்தல் என்பனவும் அவர் பதவியிழப்பதற்கான காரணமாகலாம். முன்னரைப் போல் ஜனாதிபதி தான்தோன்றித் தனமாக நடந்துகொள்ள முடியாது என்பது ‘ஜனாதிபதி – பிரதமர்’ அதிகார உறவுச் சமநிலையை உருவாக்கியுள்ளது என்பது தெளிவு.
  2. இரண்டாவதாக மந்திரிசபையையும் அதன் உறுப்பினர்களல்லாத ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கும் போதும், பதவி நீக்கும் போதும் ஜனாதிபதி பிரதமரின் சிபாரிசின்படி செயற்படுதல் வேண்டும் என்ற தேவை 19 ஆவது திருத்தத்தின் பயனாக ஏற்பட்டுள்ளது. ஆயினும் மந்திரிசபையின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதிலும், அமைச்சர்களுக்கு விடயங்களை ஒதுக்குதலிலும் (Assignment and Re-assignment of Subjects to Ministers) ஜனாதிபதி பிரதமருடன் கலந்தாலோசித்தல் (Consult) வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

19 வது அரசியல் யாப்புத் திருத்தத்தினை ஒரு அரசியல் யாப்புத் திருத்தங்களின் பொதி (Suite of Changes) எனக் கூறுவதே பொருத்தமானது. பல சீர்திருத்தங்களின் சேர்க்கையான இம்மாற்றங்கள் அரசியல் யாப்பில் புதிய இயல்புகளைத் தோற்றுவித்தன. இத்தகைய முக்கியமான மாற்றங்கள் நிருவாகத்துறையின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் கூட்டுவதற்கு உதவின. இம்மாற்றங்கள் மூன்று முக்கிய தத்துவங்களின் அடிப்படையில் அமைந்தன.

  1. முதலாவதான வரையறுக்கப்பட்ட பதவிக்காலம் என்னும் தத்துவம் (Fixed Term Principle), தெரிவு செய்யப்பட்டதில் இருந்து ஒரு ஆண்டு கழிந்தபின் பாராளுமன்றத்தை விரும்பியபடி எந்த நேரமும் கலைத்து விடலாம் என்ற நிலையை மாற்றியது. 19 ஆவது திருத்தத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். ஆனால் திருத்தத்தின் பின்னர் அதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆக்கப்பட்டது. ஆயினும் ஜனாதிபதி அப்பாராளுமன்றத்தை அது தெரிவு செய்யப்பட்ட திகதியில் இருந்து நாலரை ஆண்டுகள் கழிவதற்கு முன்னர் கலைக்க முடியாது. அக்கால எல்லைக்கு முன் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமாயின், பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஜனாதிபதியின் கலைக்கும் அதிகாரம் (Power of Dissolution) நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அதிகாரம் கூட்டப்படுவதற்கு உதவியது.
  2. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட வேண்டியது சம்மதம் என்னும் தத்துவம் (Consent Principle) ஆகும். அமைச்சர்களின் நியமனங்களை ஜனாதிபதி பிரதமரின் சிபாரிசின்படி செய்தல் வேண்டும்; தம் விருப்பப்படி செய்ய முடியாது என்பது முக்கியமான மாற்றமாகும். அடுத்ததாக அரசியல் யாப்பின்படியான உயர் பதவிகளுக்கு (உதாரணம்: தேர்தல் ஆணையாளர், கணக்காளர் அதிபதி நாயகம் என்பன), ஜனாதிபதி தம் விருப்பப்படி ஆட்களை நியமிக்கலாம் என்ற நிலை முன்னர் இருந்தது. இதுபோன்றே பிற சுதந்திர ஆணைக்குழுக்களின் நியமனங்களும் ஜனாதிபதியால் சுயவிருப்பப்படி செய்யக்கூடிய நிலை இருந்தது. பாராளுமன்றச் சபையின் (Parliamentary Council) ஆலோசனையைக் கேட்கலாம். ஆயினும் அச்சபையின் ஆலோசனைப்படி நியமனம் செய்யும் கட்டாயம் இருக்கவில்லை. 19 ஆவது திருத்தம் அரசியல் யாப்புச்சபை (Constitutional Council) என்னும் அதிகாரமுடைய அமைப்பை உருவாக்கியது. இச்சபையில் சிவில் சமூக உறுப்பினர்களான நிபுணர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முன்னைய பாராளுமன்றச் சபை (Parliamentary Council) பாராளுமன்ற உறுப்பினர்களையே பெரும்பான்மையாகக் கொண்ட சபையாகும். 19 ஆவது திருத்தம் அரசியல் யாப்புச் சபையை நிறுவியதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. நிர்வாகத்துறையை விட பாராளுமன்றம் கூடிய அதிகாரமுடையதாக ஆக்கப்பட்டது.
  3. மூன்றாவது முக்கிய மாற்றம், 19 ஆவது திருத்தத்தின் மூலம் ‘நம்பிக்கை என்னும் தத்துவம்’ (Confidence Principle) அரசியல் யாப்பினுள் புகுத்தப்பட்டமையாகும். 19 ஆவது திருத்தத்திற்கு முன், ஜனாதிபதி பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றவர் யார் எனக் கருதுகிறாரோ அவரைப் பிரதமராக நியமிக்கலாம் என்ற நிலை இருந்தது. அத்தோடு ஜனாதிபதி தாம் விரும்பியபடி பிரதமர்களைப் பதவி நீக்கம் செய்பவராகவும் இருந்தார். ஆனால் 19 ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி பிரதமரை நியமிப்பதாயின், உண்மையில் யார் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் என்ற யதார்த்த நிலையைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்ற தேவை உள்ளது. மேலும் பிரதமரை ஜனாதிபதி தம் விருப்பப்படி பதவிநீக்கம் செய்ய முடியாது. பிரதமர் மரணமடையும் போது, அல்லது தமது சுயவிருப்பின்படி இராஜினாமாச் செய்யும் போது அல்லது பாராளுமன்ற உத்தியோகத்தர் பதவியை இழப்பதன் காரணமாகப் பதவியை இழக்கலாம் அல்லது பாராளுமன்றம் பிரதமர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக முடிவு செய்தல் வேண்டும். அதாவது பாராளுமன்றம் நம்பிக்கையைத் திரும்பப் பெறுதல் (Confidence Withdrawal) மூலமே பிரதமரைப் பதவியிழக்கச் செய்தல் முடியும்.

சுருங்கக்கூறின் 19 ஆவது திருத்தப்படி பிரதமைரைப் பதவி நீக்குபவர் ஜனாதிபதி அல்லர்; பாராளுமன்றமே பிரதமரைப் பதவி நீக்கம் செய்யலாம் என்பது உறுதி செய்யப்பட்டது.

எதிர்காலச் சீர்திருத்தங்கள்

மூன்று அரசியல் யாப்பு அறிஞர்களால் எழுதப்பட்ட இந்நூல் 2019 இல் வெளியானது. இதை எழுதிய போது எதிர்காலத்தில் அரசியல் யாப்புத் திருத்தங்கள் மூலம் சர்வாதிகார முறையிலான ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட்டு இலங்கையில் பாராளுமன்றமுறை மீண்டும் கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்நூல் எழுதி வெளியிடப்பட்டு சில மாதங்கள் கழிந்தபின் கோத்தபாய ராஜபக்ச பெரும்பான்மைப் பலத்துடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவர் ஜனாதிபதியான பின்னர் அரசியல் யாப்புக்கான 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தம் 19 ஆவது திருத்தத்தின் பயன்கள் அனைத்தையும் இல்லாதொழித்தது. பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீண்டும் கூட்டப்பட்டன.

இலங்கைப் பாராளுமன்றத்தின் வரலாற்றைக் கூறும் இந்நூலின் இரண்டாவது அத்தியாயத்தின் இறுதியில் நூலாசிரியர்கள் ‘Further Reforms?’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்களில் (பக் 26-27) எழுதியுள்ளவற்றை கீழே சுருக்கமாகத் தந்துள்ளோம். இவை 20 ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு முன்னர் எழுதப்பட்டவை என்பதைக் கருத்தில் கொள்ளும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம்.

  1. ஜனாதிபதிமுறையை ஒழித்தல் (Abolition of Presidentialism) என்பதும், பாராளுமன்ற அரசாங்க முறையை (Parliamentary Form of Government) மீளக் கொண்டுவர வேண்டும் என்பதும் நீண்ட காலமாக விவாதத்திற்குரிய விடயமாக இருந்து வருகிறது.
  2. ஜனாதிபதிமுறை தேவையென வாதிப்போர் அம்முறை, நாட்டின் ஐக்கியத்தையும் உறுதி நிலையையும் (Unity and Stability) பேணுவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான பலமான  அரசாங்கத்தை (Strong Government) ஆட்சியிலமர்த்தவும் உதவுகிறது என வாதிடுகின்றனர்.
  3. ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என வாதிடுவோர், ஜனாதிபதிமுறையே சர்வாதிகாரத்தின் ஊற்றுக்கண் எனக் குறிப்பிடுகின்றனர். அதிகாரத் துஷ்பிரயோகம், ஜனநாயக அடிப்படைகளை வேரறுத்து அதனைப் பலவீனப்படுத்தல், சட்டத்தின் ஆட்சியைச் (Rule of Law) செயற்பாடற்றதாக்குதல், அடிப்படை உரிமைகள் மீறப்படுதல் ஆகியவற்றிற்கு ஜனாதிபதிமுறை மூலகாரணமாக அமைகிறது. ஆகவே அதனை ஒழிக்க வேண்டும்; அரசியல் அதிகாரத்தினை ஓரிடத்தில் குவித்தல் (Over Centralisation of Political Power) தடுக்கப்பட்டு அதிகாரம் அரசின் பிற அங்கங்களுக்கும் சட்ட ரீதியாகப் பகிரப்பட வேண்டும் ஆகிய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
  4. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை அமைதியையும் அரசியல் உறுதி நிலையையும் ஏற்படுத்தும் என்பது நடைமுறையில் பொய்யாகிவிட்டது. அதேபோன்று ஜனாதிபதி முறையினால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதும் பொய்யாகிவிட்டது என ஜனாதிபதி முறையின் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
  5. ஜனாதிபதி முறையில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்படுகிறது. இதனால் ஒரு நபர் சர்வாதிகார ஆட்சி (One Man rule) ஏற்படுத்தப்படுகிறது. ஜனாதிபதி முறைக்கு மாற்றீடான பாராளுமன்றமுறை பலரின் கூட்டு நிர்வாகமுறை ஆட்சியை (Collegiate Executive) உருவாக்குகிறது. ஜனாதிபதி என்ற தனிநபரின் சர்வாதிகாரத்தையும் தனிநபர் ஆட்சியையும் நீக்குவதற்குப் பாராளுமன்ற அரசாங்கமுறை அவசியமானது என வாதிடப்படுகிறது. 

2016 ஆம் ஆண்டில் புதிய அரசியல் யாப்பை வரைதல் பற்றி ஆராய்வதற்கான அரசியல் யாப்புச் சபை (Constituent Assembly) அமைக்கப்பட்டது. ஆயினும் இந்தச் செயல்முறையில் முன்னேற்றம் இல்லை; அது தோல்வியுற்றது என்றே கொள்ள வேண்டும். இப்பின்னணியில் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் பற்றிய விவாதம் எதிர்காலத்திலும் தொடரும் என்றே கூற வேண்டும்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனம், ‘Parliament: Law History and Practice’ என்னும் தலைப்பில் ஓர் உயர்தரமான ஆய்வுநூலை 2019 ஆம் ஆண்டில் வெளியிட்டது. பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல ஆகிய அரசியல் யாப்புச் சட்ட அறிஞர்கள் மூவரால் இணைந்து எழுதப்பட்ட இந்நூலில் அறிமுகம் உட்பட 9 அத்தியாயங்கள் உள்ளன. இவற்றுள் இரண்டாவது அத்தியாயமான ‘Parliament in its Historical and Constitutional Context’ என்னும் கட்டுரையின் தழுவலாக்கமாக இத்தமிழ்க் கட்டுரை அமைந்துள்ளது. மூலக்கட்டுரையின் கருத்துகளைத் தமிழில் எளிமைப்படுத்தியும் சுருக்கியும் கூறியுள்ளோம். புலமையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் ஆகிய பல தரத்தினருக்கும் பயன்தரக்கூடிய இந்நூல் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை https://www.cpalanka.org/wp-content/uploads/2022/01/Parliament-book-Tamil-Final-1.pdf என்னும் இணைப்பில் இணையத்தளத்திலும் வாசிக்கலாம்.


ஒலிவடிவில் கேட்க

1755 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்