அடையாள அரசியலும் இலங்கையும்
Arts
19 நிமிட வாசிப்பு

அடையாள அரசியலும் இலங்கையும்

July 9, 2022 | Ezhuna

இலங்கையில் அதிகாரத்துக்காகவும் அதனை தக்க வைப்பதற்காகவும் சிங்கள, தமிழ் தலைவர்களினால் அடையாள அரசியல் முன்னிலைப்படுத்தப்பட்டது. அது இனத்துவ அரசியலாக வளர்ச்சியடைந்து சிறுபான்மையினரின் உரிமைகளையும் அவர்களின் இருப்பையும் இல்லாதொழிக்கும் அரசியலாக உச்சம் பெற்றது.இதன் தொடர்ச்சி இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு எவ்வாறு வழிவகுத்தது என்ற அடிப்படை காரணிகளை உள்ளார்ந்த ரீதியில் ஆய்வுசெய்ய ‘இலங்கையில் அடையாள அரசியல் – சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப்புரிதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் எத்தனிக்கின்றது. இதன்படி, அடையாள அரசியல் என்றால் என்ன என்ற  கோட்பாட்டுப் புரிதலை உண்டாக்கி, இலங்கையினுடைய அடையாள அரசியலின் வரலாற்றுப் போக்கினையும், தமிழ் தலைவர்களின் அணுகுமுறைகளையும் விமர்சன நிலையில் நோக்குவதற்கு இத்தொடர் முனைகிறது.

தமிழர்கள் தங்களுடைய போராட்ட அரசியலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 70 வருடங்கள் எனலாம். இந்த எழுபது வருட காலத்தில் தமிழர்களின் அடிப்படைக் கொள்கையும் அதனை அடைவதற்கான போராட்ட வடிவங்களும் அணுகுமுறைகளும் பலவாறு மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. இருந்தபோதிலும் இவை தமிழர்களுடைய அடிப்படை அரசியல் இருப்பை, அதனூடான அரசியல் உரிமைகளை எந்தளவுக்கு தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்றொரு கணக்கெடுப்புக்கு வருவோமாயின் நிச்சயமாக மறை பெறுமானத்தில் தான் எமது விடை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றிய ஒரு கோட்பாட்டுப் புரிதலை நாம் இதுவரை செய்யாமல் நாம் தொடர்ந்து அதே வாய்ப்பாடுகளை கூறிக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் பழியைச் சுமத்திக் கொண்டு இன்னும் 100 வருட காலத்துக்கு இதே வகையான அரசியல் செய்வோமாக இருந்தால் எமக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்றொரு நிலையில் வந்து நிற்போம் என்பது புலனாகிறது. எமது அரசியல் தலைவர்கள் வரலாறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு அரசியல் செய்யாமல், தேர்தல் அரசியலையும் தங்களுக்கான சுயநல அரசியலையுமே செய்து வந்திருக்கிறார்கள்/ செய்து வருகிறார்கள்.


இவ்வாறான நிலையிலிருந்து எமது போராட்ட வரலாற்றையும் அதில் நாம் விட்ட தவறுகளையும் விமர்சன பூர்வமாக அறிந்து அவற்றிலிருந்து புதிய தத்துவார்த்த தளத்தை உருவாக்கி அதற்கான புதிய அணுகுமுறைகளை இன்றைய புத்திஜீவிகளும் அரசியல் தலைவர்களும் செய்யவேண்டியவர்களாக உள்ளோம். அந்த வகையில் அடையாள அரசியல் பற்றிய கோட்பாட்டுப் புரிதலில் இலங்கையினுடைய அடையாள அரசியலின் வரலாற்றுப் போக்கினையும் தமிழ் தலைவர்களின் அணுகுமுறைகளையும் விமர்சன நிலையில் நோக்குவதற்கு இக்கட்டுரை முனைகிறது.


அடையாள அரசியல் என்றால் என்ன என்பது பற்றி பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார். “நம்மைப் பொறுத்தமட்டில் நவீன காலத்தில், காலனிய மற்றும் பின்னையக் காலனிய காலச்சூழலில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தோன்றி வளர்ந்துள்ள ஒரு வகை அரசியலை அடையாள அரசியல் என்கிறோம். இந்நாடுகளில், மேலை உலகில் தோன்றியது போன்று தனிமனிதர்களை, அவர்களின் சுதந்திரம், நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அரசியலுக்குக் கொண்டுவரும் பூர்சுவா சனநாயக அரசியல் வலுப்படவில்லை. மார்க்சியர்கள் குறிப்பட்டபடி, இங்கு வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர அரசியலும் ஒருமுகமாக வெற்றிபெறவில்லை. மேற்குறிப்பிட்ட இருவகை அரசியல்களைவிட அதிக செல்வாக்குக் கொண்டதாக சாதி, மதம், மொழி, வாழ்நிலம், இனம், ஆகியவற்றை பொதுப் பண்பாகக் கொண்ட அரசியலே விளங்கி வந்திருக்கிறது. இவ்வகை அரசியலையே அடையாள அரசியல் என்கிறோம்.”


இலங்கையர்கள் ஜனநாயக அரசியலுக்கு வந்தவுடனயே இனத்துவ அரசியலைத்தான் கையிலெடுத்தார்களே தவிர ஜனநாயகத்தை அல்ல இது உடனடியாகத் திட்டமிட்ட ஒரு போக்கல்ல இலங்கையர்கள் யாவரிடமும் உள்ளூர இருந்த அடையாளம் குறித்த பிரக்ஞையின் வெளிப்பாடே இதுவாகும். இதனை நாம் இலங்கையின் வரலாற்றினூடாகக் கண்டு கொள்ளலாம்.
வரலாற்றில் சிங்கள தமிழ் இனங்களின் முரண்நிலையை 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில்தான் கண்டு கொள்ள முடிகின்றது. கி. பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கொள்ளப்படும் தீபவம்சத்தில் எல்லாளன் ஒரு சத்திரியனாக காட்டப்பட மகாவம்சம் அவனை தமிழனாகச் சித்தரிக்கின்றது. அதிகாரத்துக்காக நடந்த ஒரு போரை தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையிலான ஒரு போராகவும் தமிழ் – சிங்கள இனக் கருத்தியலை தோற்றுவித்து வளர்த்தெடுத்த முதல் நூலாகவும் மகாவம்சம் விளங்குகின்றது.

மகாவம்சம்


மகாவம்சம் இனத்துக்கு கருத்தியல் தளம் கொடுத்தது. சிங்கத்தின் புதல்வர்களாக சிங்கள மக்களை நிலைநிறுத்தியதும் “இளவரசன் கைமுனுவை வயிற்றில் சுமக்கையில் அரசி விகாரமகாதேவிக்கு உண்டான மூன்று ஆசைகள் பற்றிய கதையில் எதிரி இனங்காணப்பட்டுள்ளான் “எல்லாளனது தளபதியின் தலை கொய்த வாள் கழுவிய நீரை, அவன் தலையில் கால்மிதித்து நின்றபடி பருக அவள் ஆசைப்பட்டாள். அதை அரசி அரசனிடம் தெரிவித்தாள். அரசன் நிமித்திகர்களிடம் வினவினான். நிமித்திகர்களோ ‘இளவரசன் தமிழரை வெல்வான்’ என்றனர். (மகாவம்சம் பீடித்த மாந்தர், திராணி குணசேகர, மொழி – மணி வேலுப்பிள்ளை, காலச்சுவடு, இதழ் 161, மே 2013)


துட்டகைமுனு தொடர்பான ஒரு நிகழ்ச்சியை மகாவம்ச ஆசிரியர் பின்வருமாறு விபரிக்கின்றார். “கோபமும் துக்கமும் அடைந்த இளவரசன் கட்டிலில் கால்களை முடக்கிக் கொண்டு படுத்திருந்தபோது தாய் அவன் அவ்விதம் படுத்திருக்கும் காரணத்தைக் கேட்டாள். அதற்கு அவன் தனது கட்டிலை நாட்டிற்கு ஒப்பிட்டு, “அங்கே ஆற்றின் மறுகரையில் தமிழர் இருக்கின்றனர், இப்பகுதியில் கடல் இருக்கின்றது, எனவே எப்படி நான் என் உடலை நீட்டிப் படுக்க முடியும்?” என்று பதிலளிக்கிறான். இந்நிகழ்ச்சியினூடாக தமிழ் மக்கள் அடக்குமுறையாளர்கள் என்றும் அவர்களை அழித்தொழித்து விடுதலை பெறுவது சிங்கள மக்களின் கடமை என்கின்ற உபதேசமும் கொடுக்கப்படுகின்றது.


இந்தக் கருத்தியல் தளம் மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூஜாவலிய எனும் நூல் தமிழர்களுக்கெதிரான ஒட்டுமொத்த கருத்தியல் தளத்தைக் கொண்டதாக இருப்பதைக் காணலாம். எல்லாளனைப் பற்றிய நல்ல விடயங்கள் எதுவுமே பூஜாவலியில் இல்லாததோடு அவன் ஓர் அநீதியான அரசனாகவும் பௌத்த மதத்தையும் அதன் நிறுவனங்களான மடங்களையும் விகாரைகளையும் அழித்தவனாகவும் சித்திரிக்கப்படுகின்றான். ஒரு மில்லியன் முப்பத்திநான்காயிரம் தமிழரைக் கொன்றபின் துட்டகைமுனு முடி சூடியதாகவும் அரசனுக்குரிய பத்துக் குணாதிசயங்களுக்கும் ஏற்ப அவன் அரசாண்டதாகவும், இலங்கை பௌத்தர்களுக்கேயுரிய நாடென்றும் அவர்கள் ஆட்சியே நிலைபெறும் என்றும் பூஜாவலி கூறுகின்றது.


இந் நூலாசிரியர்கள், தமிழர்கள் ,சிங்களவர்களுக்கும் பௌத்த மதத்துக்கும் எதிரானவர்கள் அவர்கள் அழிக்கப்பட்டு சிங்கள பௌத்தம் இலங்கையில் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் சிந்தித்து வரலாற்றுச் சம்பவங்களை மாற்றி, திரிவுபடுத்தி தமது சிங்களப் பௌத்த கருத்தியல் தளத்தினை கட்டமைத்து வெற்றி பெற்றுள்ளார்கள்.

அடையாள அரசியலின் தமிழ்க் கருத்து நிலைத் தளம்

ஒரு சமூகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் தனது பெருமையினைப் பேசுவதற்கும் அந்தப் பெருமையுடன் வாழ்வதற்கும் அதன் வாழ்வுத் தொடர்ச்சிக்கும் அந்தச் சமூகம் கொண்டிருக்கின்ற கருத்துநிலைத் தளம் முக்கியமானதாகும். இந்தக் கருத்துநிலைத் தளம் வரலாற்று நிகழ்ச்சிச் சம்பவங்கள், தொன்மைச் சடங்குகள், படிமங்கள், ஐதீகங்கள், கருத்துக்கள், எண்ணக்கருத்துக்கள், வாய்மொழிக் கதைகள் என்பவற்றின் ஊடாக தனது தேவைக்கேற்ப அந்தச் சமூகம் உருவாக்கிக் கொள்கின்றது. இதனை வெகுசன மட்டத்தில் கொண்டு செல்வதற்கும் அவற்றை சமூகநிலைப்படுத்தி அந்தச் சமூக உறுப்பினர் ஒவ்வொருவருக்குள்ளும் உணர்வுநிலைப் படுத்துவதற்கும் ஏற்புடமையாக்குவதற்கும் அந்தச்சமூக நிறுவனங்களான குடும்பம், மதம், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அறிவுஜீவிகள், சமூகத் தலைவர்கள், ஊடகங்கள் என அனைத்தும் ஒருமித்துச் செயற்பட்டு இந்தக் கருத்து நிலைத்தளத்தை அந்தச் சமூகப் பண்பாட்டின் அடித்தளமாக ஆக்கிவிடுகின்றன.


தமிழர்களுக்கு எதிரான சிங்கள கருத்துநிலைத் தளம் என்பது எதேச்சையாக உருவாக்கப்பட்டது அல்ல. காலத்துக்குக் காலம் ஏற்பட்ட தென்னிந்தியப் படையெடுப்புக்கள், ஆக்கிரமிப்புக்கள் என்பவையே இதற்குக் காரணமாகும். இதனால் இந்தக் கருத்துநிலைத்தளம் சிங்களச் சமூகத்தின் வரலாற்று நிலைப்பட்ட இருப்புக்கும் அதன் தனித்துவத்திற்கும் முக்கியமானதாகின்றது. இருந்த போதிலும் காலனித்துவ காலம்வரை இது நிறுவனமயப்பட்டு ஒரு அரசியல் நடவடிக்கையாக உருவாகவில்லை .19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் காலனியத்துவத்துவத்தின் கருவிகளான கிறிஸ்தவத்துக்கும் ஆங்கில மொழிக்கும் எதிரான ஒரு நிறுவனமயப்பட்ட நடவடிக்கையாக இந்தக்கருத்து நிலைத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் அடையாள அரசியல் நடவடிக்கை மேற்கிளம்புவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்தவகையில் ஆறுமுகநாவலரே இதனை முதன்முதல் முன்னெடுத்தவராவார். “1848 இல் கார்ல் மார்க்சும் ஏங்கெல்லுசும் கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்ட அதே ஆண்டில் ஆறுமுகநாவலர் (1822 – 1879) யாழப்பாணம் வண்ணார்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையைத் தொடங்கினார் என்பது நம்மைப் பொறுத்தமட்டில் ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சியாகும். தமிழ் அடையாள வரலாற்றில் இந்தச் சம்பவம் ஒரு முதல் புள்ளியாக அமைகிறது” என்பார் பேராசிரியர் ந.முத்துமோகன். இங்கு பேராசிரியர் ந.முத்துமோகன் குறிப்பிடுகின்ற ‘தமிழ் அடையாள வரலாற்றில்’ எனும் விடயம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. அதாவது சிங்கள மக்களிடத்தில் சிங்கள பௌத்த கருத்துநிலைத் தளம் ஒன்று அடிப்படையாக இருக்கும் போது நாவலர் தமிழர்களுக்கான கருத்துநிலைத் தளமாக அவர்களின் வரலாற்று நிலைப்பட்ட இருப்புக்கும் தனித்துவத்திற்கும், ஒருமைப்பாட்டுக்குமான தமிழ் அடையாளத்தை முன்வைத்தாரா என்பதுவே அதுவாகும்.

ஆறுமுகநாவலர்

ஆறுமுகநாவலர் காலனிய ஆட்சிக்கெதிரான ஒன்றாகவோ அல்லது நேரடியாக சிங்கள பௌத்தத்திற்கு எதிரான ஒன்றாகவோ சைவப் பிரகாச வித்தியாசாலையை ஆரம்பிக்கவில்லை. அவர் காலனித்துவ ஆட்சியை ஏற்றுக்கொண்டார். ஆனால் காலனித்துவத்தினூடு வந்த கிறிஸ்தவமும் ஆங்கிலக் கல்வியும் யாழ்ப்பாண அதிகாரச் சமூகப்படிநிலைக் கட்டமைப்பை குலைப்பதையோ அல்லது அதில் சலனத்தை ஏற்படுத்தவதையோ அவர் விரும்பவில்லை. குறிப்பாக சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகள் குறைவதனையும் அதற்கூடாக யாழ். வெள்ளாளருடைய பிடி தளர்வதையும் அவர் விரும்பவில்லை. அவருடைய கல்விக் கொள்கையும் எல்லா மக்களுக்குமுரியதல்ல. இதனால் யாழ்ப்பாணச் சமூக அதிகாரப் படிநிலையினைக் கட்டிக்காக்கவும் பேணவும் வளர்த்தெடுக்கத் தக்கதுமான கருத்துநிலையை முன்வைக்கின்றார்.

அந்தவகையில் ஆறுமுகநாவலர் முன்வைத்த தமிழர்களுக்கான கருத்துநிலைத் தளமாக “சைவமும் தமிழும்” எனும் கருத்துநிலை முக்கியமானதாகும். இது பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், “சைவத் தமிழ்க் கருத்து நிலை என்பது யாழ்ப்பாணத்தின் பிரதான மதமரபினையும் மொழிப் பண்பாட்டையும் இணைந்து நோக்குகின்ற ஓர் ’உலக நோக்காகும்’. இதன்படிக்குச் சைவமும் தமிழும் ஒன்றிலிருந்து மற்றது நீக்கப்பட முடியாததாய், ஒன்று மற்றதில்லாமல் பூரணத்துவம் அடைய முடியாததாய் இருக்கும் ஒரு மதப் பண்பாட்டு இணைவு நிலையாகும். இந்த நோக்கு சைவத்தினதும், தமிழினதும் முழுவரலாற்றையும் உள்ளடக்கியதாகும். இந்நோக்கின் உள்ளார்த்தங்கள் மிக ஆழமானவை.


இதன்படிக்கு தமிழ் மனிதன், அவன் மொழி, அதன் பண்பாடு ஆகியவற்றின் உருவாக்கத்தில் வேறு எந்த மதத்துக்கும் இடமில்லை எனும் எண்ணத்துணிவு முன்வைக்கப்படுகின்றது. சமணம், ஆசீவகம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் தமிழ்சார் பங்களிப்புகளை இக்கருத்து நிலை முற்று முழுதாக மறுதலிக்கின்றது.(இந்த உட்கிடக்கையை “பல்வேறு மதத்தினரின் தமிழ்த் தொண்டு” எனப்பெறும் கருதுகோளிலே காணலாம். இதன்படிக்குச் சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம், ஆகியன தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றிப் பேசலாம். “சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு” என்று பேசப்படுவதில்லை.)” என அவர் குறிப்பிடுவதனை நாம் மிகக் கவனமாக நோக்குதல் வேண்டும்.


ஏற்கனவே குறிப்பிட்டது போன்று கருத்து நிலைத் தளம் என்பது அந்தச் சமூகத்தின் தேவைக்கேற்ப அச்சமூகம் உருவாக்கிக் கொள்வதாகும். ஒரு சமூகத்தின் கருத்துநிலைத் தளத்தினை அச் சமூகம் உருவாக்கிக் கொள்வதாக கூறப்பட்டாலும் உண்மையில் இதில் அந்தச் சமூகத்தின் எல்லா சமூகமட்ட மக்களின் கருத்தக்களின் வெளிப்பாடல்ல. மேலே பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுவது போன்று சைவத் தமிழ்க் கருத்து நிலை என்பது யாழ்ப்பாணத்தின் பிரதான மதமரபினையும் மொழிப் பண்பாட்டையும் இணைந்து நோக்குகின்ற ஓர் ‘உலக நோக்கு’ ஆகுமே தவிர அது ஈழத்து மக்களின் கருத்துநிலையல்ல ஆனால் ஈழத்துச் சமூகத்தின் மேலாண்மை பெற்ற குழுமத்தின் கருத்துநிலையாக அந்தக் கருத்துநிலை இருப்பதனால் அதனை அந்தச் சமூகம் தனது அதிகாரத்தினூடாக ஒட்டுமொத்தச் சமூகத்தினதும் கருத்துநிலையாகக் கட்டமைத்துவிட்டிருக்கின்றது.

இந்தக் கருத்துநிலை சைவத்திலும் ஆகமச்சைவத்தையே வலியுறுத்தி சாதாரண கிராம வழிபாடுகளையும் சடங்குகளையும் முறையற்றவை, மூடநம்பிக்கை வாய்ந்தவையென முத்திரைகுத்தி அப்புறப்படுத்தியது. கண்ணகி கோயில்களும் சடங்குகளும் இராஜஇராஜேஸ்வரி கோயில்களாக மாற்றப்பட்டு ஆகம மயப்படுத்தப்பட்டவற்றை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ளவேண்டும். இதற்குள் உள்வராத மற்றவைகளை தீண்டத்தகாததாக விளிம்புநிலைப்படுத்தி ஒதுக்கி யாழ்ப்பாண சமூக அதிகாரப்படிநிலையினை மேலும் இறுக்கமாக்கிப் பேணியது.
இதன் இன்னுமொரு விளைவு என்னவெனில் யாழ்ப்பாணத்துக்குள்ளேயும் வெளியேயும் பல பிரதேச சமூக வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்தியதாகும். அதாவது மொழிவழி தமிழர் ஒற்றுமையின்றி மதவழியினூடு அது பேணிய சற்சூத்திரக் கொள்கையின் காரணமாக பிரதேச வேறுபாடுகள் முக்கியமானதாக விளங்கின/ விளங்குகின்றன. உதாரணத்துக்கு தீவார், வடமராட்சியார், தென்மராட்சியார், வலிகாமத்தார், வன்னி, மட்டக்களப்பார் என்பவற்றைக் குறிப்பிட முடியும்.

இது தனியே ஒரு பிரதேச அடையாளம் சார்ந்ததோ அல்லது அந்தப் பிரதேச பண்பாடு சார்ந்ததான ஒரு நோக்குநிலையோ அல்ல. இதற்குள் அடிப்படையாக சாதிரீதியான அடையாளம் ஊடுபாய்ந்திருப்பதை கவனிக்கத் தவறக் கூடாது. சமூக அதிகாரப் படிநிலை உறவின் பேணுகையில் சமூகத்தின் உளவியல் இயங்கு தளமும் அதன் திருப்தியும் முக்கியமானதாகும். அதாவது தனக்குக் கீழ் உள்ளவனை விட தான் சிறந்தவன் என்பதும் தான் அதிகாரம் செலுத்துவதற்கும் தனக்கு கௌரவமும் மதிப்பும் வழங்குவதற்கும் தனக்குக்கீழ் குறிப்பிட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதும் ஒவ்வொருத்தருக்கும் அவர்களுடைய அடிமனம்வரை ஊடுபாய்ந்து நிற்கும் ஒரு உளவியல் யதார்த்தமாகும். இந்த உளவியல் நிலை காரணமாக ஒரே சாதியாக இருந்த போதிலும் மற்றைய பிரதேசத்து சாதிகளிலும் பார்க்க தான் உயர்ந்தவன் என நினைப்பதும் உருவாகின்றது. உதாரணத்துக்கு “தீவுப்பகுதியில் பஞ்சமர் தம்மை வடமராட்சிப் பகுதிப் பஞ்சமரிலும் பார்க்க அந்தஸ்து நிலை கூடியோராக நோக்குவது வழமை” என்பார் கா.சிவத்தம்பி. இது போன்றே இன்னொரு சுவாரஸ்யமும் இதற்குள் உண்டு. அதாவது மொத்த யாழ்ப்பாணமுமே மற்றப் பிரதேசங்களை விட அந்தஸ்து கூடியது என்ற நோக்கு நிலை. இதுவே பிரதேசவாத அடையாளமாக முன்னிறுத்தப்படுவதாகும்.

எனவே “சைவமும் தமிழும்” என்ற கருத்துநிலை தமிழர்களை மொழியால் ஒன்றிணைக்காமல் மதக் கோட்பாட்டினடியாக சாதி அடையாளங்களாகவும் பிரதேச அடையாளங்களாகவும் வேறுபடுத்தி சமூக அதிகாரப்படிநிலையை பேணுவதற்கான ஒன்றாகவே இருந்திருக்கிறது/இருந்துவருகிறது. அன்று இந்தக் கருத்து நிலையின் அரசியல் பிரதிநிதியாக சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் காணப்பட்டார். இதற்கு உதாரணமாக பின்வருவனவற்றை குறிப்பிட முடியும்.

  1. 1920 – 1930களில் பாடசாலைகளிற் சாதியமைப்பை ஊறு செய்யும் வகையில், பள்ளிப் பிள்ளைகளுக்குச் சமாசனம், சமபோசனம் வழங்கப்படுவதற்கு எதிரான இயக்கம் இருந்தது. கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் சேர்க்கப்பட்ட வெள்ளாளரல்லாத மாணவர்களுடன், வெள்ளாள மாணவர்களுக்கு சமபோசனம் வழங்குவதை எதிர்த்து 1930 இல் சேர்.பொன்.இராமநாதன் தேசாதிபதியைச் சந்தித்தார்.
  2. தேசவழமைப்படி உயர்ந்த சாதியினரின் இறுதிக் கிரியை முறைகளுக்குப் பாத்தியதையற்ற சாதியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் இறுதி ஊர்வலத்தைப் பறை முதலியவற்றுடன் கொண்டு சென்று, சடலத்தை எரிக்க முற்பட்ட பொழுது, அதனை எதிர்த்தவர்கள் “சட்ட விரோதமற்ற” வகையில் எதிர்த்தனர் என அவர்களுக்கெதிராகப் போடப் பெற்ற வழக்கில் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். வழக்கு மேன்முறையீட்டுக்குச் சென்ற பொழுது இராமநாதன் எதிரிகள் தேசவழமைப்படி அந்த மரண ஊர்வலத்தை நிறுத்த உரிமையுடையவர்கள் என்று வாதிட்டார்.
  3. சர்வஜன வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என இராமநாதன் கருதினார். இராமநாதனும் மற்றும் பல பழமைபேண் வாதிகளும் (செல்லத்துரை, சிறிபத்மநாதன், ஆர்.தம்பிமுத்து இதற்கு புறநடையானவர்கள்) வெள்ளாளரல்லாத சாதியினருக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பது கும்பலாட்சிக்கு (Mobrule) இடம் கொடுக்கும் ஒரு பாரிய பிழையென்று நம்பினர், வாதிட்டனர், சிறப்பாக இராமநாதனோ, அவ்வாறு வாக்குரிமை வழங்குவது இந்து வாழ்க்கை முறைக்குப் பழிகேடு விளைவிப்பது என்று கருதினார்.” (கா.சிவத்தம்பி)

எனவே இந்தச் “சைவமும் தமிழும்” என்ற கருத்துநிலையை முன்னெடுத்தவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஒட்டுமொத்தத் தமிழர்களின் அபிவிருத்தி ,சமூக முன்னேற்றம் என்றில்லாது மிகக்குறுகிய ஒரு சமூகக்குழுவை முன்னிலைப்படுத்தி இயங்கியுள்ளது/இயங்குகிறது.

இந்தச் “சைவமும் தமிழும்” என்ற கருத்து நிலைக்கு பேராசிரியர் சிவத்தம்பி கூறியது போன்றே “சிங்களப் பௌத்தம்” என்பதும் இலங்கையின் பிரதான மதமரபினையும் சிங்கள மொழிப் பண்பாட்டையும் இணைந்து நோக்குகின்ற ஒரு போக்காகும். இதன்படிக்குச் சிங்களமும் பௌத்தமும் ஒன்றிலிருந்து மற்றது நீக்கப்பட முடியாததாய், ஒன்று மற்றதில்லாமல் பூரணத்துவம் அடைய முடியாததாய் இருக்கும் ஒரு மதப் பண்பாட்டு இணைவு நிலையாகும். இந்த நோக்கு சிங்கள இனத்தினதும், பௌத்தத்தினதும் முழுவரலாற்றையும் உள்ளடக்கியதாகும் எனக் கூறலாம்.

அடையாள அரசியலின் சிங்களக் கருத்து நிலைத் தளம்

MIGETTUWATTE GUNANANDA THERA

எவ்வாறு ஆறுமுகநாவலர் சைவமும் தமிழும் என்பதை முன்னிலைப்படுத்தி இயங்கினாரோ அது போல் தென்னிலங்கையில் சிங்களப் பௌத்தக் கருத்துநிலையின் அடைப்படையில் மிகெட்டுவத்த குணானந்த தேரர் கிறிஸ்தவ எதிர்ப்பியக்கத்தில் இயங்கினார். இருவரும் காலனித்துவ ஆட்சியை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவத்தினையே எதிர்த்தனர். ஆறுமுகநாவலர் கிறிஸ்தவத்தினால் தமிழ்ச் சமூக அமைப்பு சிதையக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவத்தை எதிர்க்க, குணானந்த தேரர் கிறிஸ்தவர்களே இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார விடயங்களில் முன்னிலை பெறுவதனால் எதிர்த்தார். இங்கு பெரும்பாலான சிங்கள மக்களின் அரசியல், சமூக ,பொருளாதார முன்னேற்றம் என்ற ஒரு தோற்றப்பாடு அடிப்படையாக இருப்தைக் காணலாம். இதனால் பெருமக்கள் திரளுகை சிங்களப் பௌத்தக் கருத்தியலுக்குச் சாத்தியமாயிற்று.

சிங்களப் பௌத்தக் கருத்தியலின் முதலாவது வன்முறை கொட்டாஞ்சேனையில் 1883 ஆம் ஆண்டு பௌத்தருக்கும் கத்தோலிக்கருக்குமிடையில் ஏற்பட்டது. “புனித லூசியா தேவாலயத்துக்கு அருகே உள்ள பௌத்த கோயிலில் இருந்த தீவிரப் போக்குடைய மீகத்துவத்த குணானந்த என்ற பிக்கு ஈஸ்டர் பண்டிகை நாட்களில் நடைபெறக்கூடியதாகத் தன் கோயிலிலும் சில சடங்குகளை ஒழுங்கு செய்தார். இது தமக்கு எதிரான செயல் எனக் கிறிஸ்தவர்கள் நினைத்தனர். பெரும் கலவரம் ஒன்று நடந்தது.”(குமாரி ஜயவர்த்தன) இவருக்குப் பின் இக்கருத்தியலை தீவிரமாக முன்னெடுத்தச் சென்றவர் அநாகரிக தர்மபால ஆவார்.

கொட்டாஞ்சேனை கலவரம்

“சிங்களப் பௌத்தம்” என்பதை முதன் முதலில் பயன்படுத்தியவர் இவரே ஆவார். 1906 ஆம் ஆண்டில் ‘சிங்கள பௌத்தய’ (Sinhala Bauddhaya) என்றொரு பத்திரிகையை ஆரம்பித்தார். இதுவே சிங்களவர்களின் முதன்முதலான அடையாள அரசியல் நடவடிக்கையாகும். இது கிறிஸ்தவ மதத்துக்கு மாறாமல் எவ்வித சலுகைகளும் பெறாமல் வாழும் சிங்கள மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கி அவர்களின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் உழைப்பதற்கான மக்கள் திரளினை ஒன்று திரட்டுவதற்கான ஒன்றாக இருந்தது.

அநாகரிக தர்மபால “சிங்களவர்களே! விழிப்புறுங்கள்” என்ற தனது சுலோகத்திற்கு அமைய துட்டகைமுனுவின் வீரச் செயல்களை வர்ணித்தே தன்னைப் பின்பற்றியோருக்கு சிங்கள உணர்வை ஊட்டினார். “எமது நாட்டையும் இலக்கியத்தையும் இனத்தையும் மகிமையுள்ள மதத்தையும் பாதுகாக்கும் தேசபக்தர்களாவதற்கு தேசப்பற்றை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் இலக்கியங்களை நாம் படிக்க வேண்டும் எமது சமயத்தின் ஊற்றுக்களில் இருந்து எம் மூதாதையர் எழுபது தலைமுறைகளாகப் பெற்றுக் கொண்டமையாலேயே வீரமும் தேசபக்தியும் நீதியுமுள்ள அரசனுமாகிய துட்டகைமுனு தாயினதும் தேசபக்தியுள்ள ஆதரவாளர்களினதும் உதவியோடும் பிக்குகள் சங்கத்தின் ஆசீர்வாதத்துடனும் தேசத்தைப் புனருத்தாரணம் செய்த காலம் முதல் இற்றைவரை எதிரிகளுக்கு எதிராகப் போர் புரிவதற்கு தைரியம் பெற்றனர்.” என்று இலங்கையின் இளைஞருக்கு விடுத்த செய்தியில் கூறுகின்றார். அதே செய்தியில் “அரசன் துட்டகைமுனுவை ஆத்மீக ரீதியாக நீங்கள் தரிசித்து பௌத்தத்தையும் தேசிய வாதத்தையும் இருளில் இருந்து மீட்ட அம்மகா மன்னனின் சிந்தனைகளோடு உங்களை அடையாளம் காணுங்கள்” என்று இளைஞர்களை அவர் பணித்தார்”(டபிள்யு.ஐ.சிறிவீர)

அனாகரிக தர்மபால

இது போன்றே பல சிங்கள இலக்கியகாரர்கள் தங்களுடைய இலக்கியங்களுக்கான கருப்பொருளாக எல்லாளன்- துட்டகைமுனு யுத்தத்தை எடுத்துக் கொண்டு இலக்கியங்களைப் படைத்தனர். அந்த இலக்கியங்கள் எல்லாம் சிங்கள பௌத்தக் கருத்தியலை தாராளமாக முன்வைத்தன. அதுமட்டுமன்றி மாணவர்களின் மொழிப்பயிற்சிக்கும் பௌத்த வளர்ச்சிக்கும் வரலாற்று அறிவுக்கும் துட்டகைமுனு, எல்லாளன் யுத்தமே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இவற்றிலெல்லாம் எல்லாளன் சிங்களவர்களுக்கும் பௌத்தத்துக்கும் எதிரான ஒருவனாகவே சித்தரிக்கப்பட்டான். இச்சித்தரிப்புக்களில் எல்லாளன் தனியொரு அரசனாக அன்றி அவன் தமிழர்களின் பிரதிநிதியாகவே பார்க்கப்பட்டு தமிழர்களுக்கு எதிரான சிங்கள உணர்வு ஊட்டி வளர்க்கப்பட்டது.

இந்த சிங்கள பௌத்தக் கருத்தியலுக்குள் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் தமிழ் எதிர்ப்புணர்வை அது தனது மதத்துக்குள்ளால் கூறுவதாகும். இதனால் சாதி, பிரதேச வேறுபாடுகளைத் தாண்டி சிங்களவர்களை மொழிரீதியாகவும் மதரீதியாகவும் ஒன்றிணைத்து அவர்களுக்கு எதிரானவர்களாக தமிழர்களை முன்னிறுத்துவது இலகுவானதாக இருந்தது.

இங்கு எல்லாளன் அல்லது தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிரான ஒரு குறியீட்டுப் படிமமாகப் பார்க்கப்படுகின்றனர். சிங்களப் பௌத்த அதிகாரத்திலும் அதன் அபிவிருத்தியிலும் யார் குறுக்கிட்டாலும் அவர்கள் அகற்றப்படவேண்டியவர்கள் என்பதையே இது காட்டுகின்றது.

இந்தக் கருத்தியலின் இரண்டாவது வன்முறையே 1915 ஆம் ஆண்டு கண்டியில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரமாகும். இது அடிப்படையில் பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலவரமாகும். ஏனெனில் “1880இல் புறக்கோட்டை வர்த்தகத்தில் 86 செட்டியா கம்பனிகளும் 64 முஸ்லிம் கம்பனிகளும் முதன்மை பெற்றன. எச்.டொன்கரோலிஸ் (தளபாடங்கள்) என்.டொன்கரோலிஸ்(தளபாடங்கள்), என்.எஸ், பெர்னான்டோ(உபகரணங்கள்) போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிங்கள வியாபாரிகளே காணப்பட்டனர்.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ‘அந்நிய வர்த்தகர்கள்’ ‘மண்ணின் மைந்தர்களுக்கு’ எதிரிகள் என்ற கருத்துச் சிங்களப் பத்திரிகை உலகில் பிரபலமாக்கப்பட்டது. இக்கருத்தின் முக்கிய பிரசாரர்களில் ஒருவர் அநாகரிக தர்மபாலா.

இக்காலத்தில் தர்மபாலாவின் கண்டனங்கள் குறிப்பாக முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராகவே அமைந்தன. 1915 இல் அவர் எழுதினார் “ அந்நியரான முகமதியர் ஷைலொக்கிய வழிமுறைகளால் யூதர்கள் போன்று செல்வந்தராய் மாறினர். 2358 வருடங்களாக அந்நிய முற்றுகைகளில் இருந்து நாட்டைக் காப்பதற்காக இரத்தத்தை ஆறு போல் பெருக்கிய மூதாதையரைக் கொண்ட மண்ணின் மைந்தரான சிங்களவர் பிரித்தானியரின் கண்களில் நாடோடிகளாய்த் தெரிகின்றனர். தென்னிந்திய முகமதியன் இலங்கைக்கு வந்து வியாபாரத்தில் எத்தகைய அனுபவமுமற்ற, உதாசீனம் செய்யப்பட்ட கிராமவாசியைக் காண்கிறான். இதன் விளைவு முகமதியன் முன்னேறுகிறான் ‘மண்ணின் மைந்தன்’ பின்தள்ளப்படுகிறான்.” (குமாரி ஜயவர்த்தன)

எனவே ஒரு குறிப்பிட்ட வர்க்கம் சமூக அதிகாரத்தைப் பெறுவதற்கும் பொருளாதார நலன்களைப் பெறுவதற்கும் எவ்வாறு ‘சிங்கள பௌத்தம்’ எனும் கருத்தியலைப் பயன்படுத்தி அதைத் தன் அடையாளமாக்கி வந்துள்ளது என்பதை இவை தெளிவாகக் காட்டுகின்றன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

13052 பார்வைகள்

About the Author

சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்

கலாநிதி சு. சிவரெத்தினம் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலையில் இளமாணிப் பட்டத்தையும் முது தத்துவமாணிப்பட்டத்தையும் பெற்றவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் கலைவரலாற்றில் கலாநிதிப் பட்டம் பெற்று, தற்போது சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்புல தொழில்நுட்பக் கலைகள் துறையின் தலைவராகப் பணிபுரிகின்றார்.

கலைவரலாற்றில் மட்டுமன்றி நாடகம், இலக்கியம், அரசியல், சமூகவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)