வரலாறு மற்றும் இலக்கியப் பதிவுகளில் நாகநாடும் நாகர்களும் - பகுதி 1
Arts
22 நிமிட வாசிப்பு

வரலாறு மற்றும் இலக்கியப் பதிவுகளில் நாகநாடும் நாகர்களும் – பகுதி 1

April 4, 2025 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ எனும் இக்கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பவற்றின் பரந்த காட்சிப் பதிவாக விளங்கும்.

“நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம், நீள்புகழ் மன்னும் புகார்நகர்!”

-சிலப்பதிகாரம் I:21-22.

நாகநாடு

வரலாற்றுப் பதிவுகளில் நாகநாடு அன்றைய உலகின் செல்வச்செழிப்பும் சிறந்த வாழ்வும்கொண்ட ஒரு நாடாகக் கூறப்படுகிறது. அதனால்தான் சிலப்பதிகாரக் காவியத்தில் பூம்புகார் நகரின் பெருமையை விளக்கவந்த இளங்கோ அடிகள் “நாகர்களின் நெடிய நகரோடு விளங்கும் நாகநாட்டினோடு ஒப்பாக, போக வாழ்வு பரவிக் கிடக்கும் நீண்ட புகழ் நிறைந்த புகார்” எனக் கூறிச்சென்றிருக்கிறார்.

பண்டைய நாட்களில் இலங்கையின் வடபகுதி, மிகுதி இலங்கையிலிருந்து தனியான ஒரு நாடு என்ற பொருளில், ‘நாகநாடு அல்லது நாகதீப’ என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையை தமிழ் மொழியிலுள்ள புராதன இலக்கியங்களான சிலப்பதிகாரம் (21:29), மணிமேகலை (24: 54-57), வீரசோழியம் ஆகியவற்றில் காணலாம். இலங்கைநாடு நாகநாடு, இரத்தின துவீபம் ஆகிய இரு பகுதிகளாக ஆட்சி செய்யப்படுவதை மணிமேகலைக் காப்பியம் குறிப்பிட்டுக் கூறுகிறது. இப்பெயரில் இடம்பெறும் ‘நாடு’ என்ற சொற்பதம் தனியான ஒரு தேசத்தை – தனியான ஓர் ஆட்சிப்பரப்பைக் குறிப்பிடுகிறது. நாகநாட்டை வளைவாணன் என்ற அரசன் செல்வச்செழிப்புடனும், உயர்வான தமிழ் – பௌத்த பாரம்பரியத்துடனும் ஆட்சிபுரிந்து வருவதாக மணிமேகலை குறிப்பிடுகிறது (மணிமேகலை, அத். 14: 24). சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்கள் தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய நாடுகளை நிகர்த்த ஒரு நாகரிகம் வடஇலங்கையின் நாகநாட்டில் இருந்ததை எடுத்துரைக்கின்றன.

இலங்கையின் ஆறாம் நூற்றாண்டு பாளிமொழி இலக்கியமான மகாவம்சம் இந்தப் பகுதியை நாகதீப (நாகர்களின் தீவு) எனக் குறிப்பிடுகிறது. இந்த நாகதீபத்திற்கு கி.மு. ஆறாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் புத்த பகவான் வந்திருந்தார் எனப் பதிவு செய்திருக்கிறது (புத்த பகவான் வாழ்ந்த காலம் கி.மு. 563-480 எனக் கூறப்படுகிறது) (Mahavamsa, Ch. I). அநுராதபுரத்தில் கண்டெடுத்த கி.மு. முதலாம் நூற்றாண்டிற்குரிய ஒரு பிராமிக் கல்வெட்டில் காணப்பட்ட நாகநகர் என்ற தமிழ்ப்பெயர் நாகநாட்டின் தலைநகரைக் குறிக்கிறது (Epigraphia Zeylanica, VII: 82). கிரேக்க தேசத்து நிலவியலாளர் குளோடியஸ் தொலமி (கி.பி. 90-168) அவரது இலங்கையின் நிலவியல் படத்தில் இந்த நாட்டை ‘நாகடீபொய்’ எனப் பதிவு செய்திருக்கிறார். கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குரிய வல்லிபுரப் பொற்சாசனத்தில், இந்நாட்டின் பெயர் ‘நகதிவ’ என பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்டிருக்கிறது (Paranavitana, 1934-1941). யாழ்ப்பாணத்தில் உடுத்துறையில் கண்டெடுத்த ஒரு நாக நாணயத்தில் இந்நாட்டின் மாற்றுப் பெயராக ‘நாகபூமி’ என்ற பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது (Pushparatnam, P. 2002). குடுமியாமலைக் கல்வெட்டில் வரும் ‘நாகநாடு’ யாழ்ப்பாணம் உள்ளிட்ட  இலங்கையின் வடபிராந்தியத்தைக் குறிப்பிடுகிறது.

மணிபல்லவம்

தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத் தீவகத்தையே மணிபல்லவம் எனவும், மணிபல்லவத்தின் ஒரு பகுதியையே நாகநாடு எனவும் குறிப்பிடுகிறது. இதற்கு ஆதாரமாக மணிமேகலையில் இடம்பெறும் மணிபல்லவத்தின் “கீழ்நில மருங்கின் நாகநாடாளும்” (மணிமேகலை VIII:54) என்ற அடிகள் கவனிக்கப்பட வேண்டியவை. மணிபல்லவத்தின் கிழக்கே கடலுக்கு அப்பாலுள்ள நாகநாடு எனக்கூறாமல், மணிபல்லவத் தீவின் கிழக்கேயுள்ள நிலப்பகுதியிலுள்ள நாகநாடு எனக் கூறப்படுவதால், நாகநாடு அரசு மணிபல்லவத் தீவிலுள்ள ஓர் அரசு என்றே பொருள்கொள்ள வேண்டியுள்ளது. மணிபல்லவத்திற்கும் நாகநாட்டிற்குமுள்ள தொடர்பு இதைத்தவிர, மணிமேகலையில் வேறெந்த இடத்திலும் கூறப்படவில்லை. மணிபல்லவம், நாகநாடு என்ற இரண்டும் நாகதீபத்தினையே குறித்தன என வரலாற்றாசிரியரான ஞானப்பிரகாசர் கூறியதும் இங்கே கவனிக்கப்பட வேண்டியதாகும் (ஞானப்பிரகாசர் 1928: 23-36).

நாகதீபத்தில் கி.மு. ஆறாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் மகோதரன், சூளோதரன் என்ற இரு நாக அரசர்கள், இந்திரனால் வழங்கப்பட்ட இரத்தினமிழைத்த, அதில் உட்காருபவர்களின் முற்பிறப்பை எடுத்துரைக்கக்கூடிய சிங்காசனத்திற்காகப் போரிட்ட சமயம், புத்தபிரான் அங்கே தோன்றி அவர்களது போரை நிறுத்தி அவர்களைச் சமாதானப்படுத்தி, பௌத்த தர்மத்தைப் போதித்ததையும், அதைத் தொடர்ந்து நாக மக்கள் பலர் பௌத்த மதத்தைத் தழுவிய செய்தியையும் மகாவம்சம் எடுத்துரைக்கிறது (Mahavamsa – Chapter 1).

இந்தச் சம்பவம் மணிமேகலையிலும் கூறப்படுகிறது. இங்கே புத்தபிரான் வருகைதந்த இடம் மணிபல்லவம். மணிபல்லவத்தின்கீழ் நிலமருங்கில் நாகநாடு உள்ளது என இச்செய்யுளில் காணலாம்.

“இருங்கடல்
வாங்குதிரை யுடுத்த மணிபல் லவத்திடை
ஐயா வோவென் றழுவோன் முன்னர்
விரிந்திலங் கவிரொளி சிறந்துகதிர் பரப்பி
உரைபெறு மும்முழம் நிலமிசை யோங்கித்
திசைதொறு மொன்பான் முழநில மகன்று
விதிமா ணாடியின் வட்டங் குயின்று
பதும சதுர மீமிசை விளங்கி
அறவோற் கமைந்த வாசனமென்றே
நறுமல ரல்லாது பிறமரங் சொரியாது
பறவையு முதிர்சிறை பாங்குசென் றதிராது
தேவர்கோ னிட்ட மாமணிப் பீடிகை
பிறப்புவிளங் கவிரொளி யறத்தகை யாசனங்
கீழ்நில மருங்கி நாகநா டாளும்
இருவர் மன்னவர் ரொருவழித் தோன்றி
எமதி தென்றே யெடுக்க லாற்றார்”

(மணிமேகலை, காதை 8, வரி 1-2, 43-56)

கடந்த அரைநூற்றாண்டு காலமாகப் பல அறிஞர்கள் மணிபல்லவம் என்ற தீவகம் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மேற்கேயுள்ள கடற்பரப்பிலுள்ள நயினாதீவைக் குறிப்பதாகப் பேசியும் எழுதியும் வருகிறார்கள் என்பதை அறிவேன். இன்னும் சிலர் ‘நாகதீப’ என்ற பதம் நயினாதீவைக் குறிப்பதாக அர்த்தம் கொள்வர். நயினாதீவு நாகர்கள் வாழ்ந்த, பௌத்த மதம் பரவியிருந்த ஓர் இடமாக இருந்தபோதிலும், அது நாகநாட்டு அரசு அமைந்திருந்த நாடு என்பதற்கான தொல்லியல் ஆதாரங்களோ, வரலாற்று ஆதாரங்களோ ஏதுமில்லை. அங்கிருக்கும் நாகவிகாரை இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

‘திரையுடுத்த மணிபல்லவம்’ காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தென்திசையில் 30 யோசனை தூரத்தில் இருப்பதாக மணிமேகலையில் கூறப்படுவதனால் சிலர் அது நயினாதீவு எனக் கொள்வர். ஒரு யோசனை தூரம் என்பது நான்கு மைல் தொலைவு என்ற கணக்கின்படி, மணிபல்லவம் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து 120 மைல் தொலைவில் அமைந்திருக்கிறது. இத் தூரக்கணக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் பொருந்தும்.

“அந்தரம் ஆறா ஆறைந்து யோசனைத்
தென்திசை மருங்கில் சென்று, திரையுடுத்த
மணிபல்ல வத்திடை மணிமே கலாதெய்வம்
அணியிழை தன்னைவைத் தகன்றது தான் என”

(மணிமேகலை 6: 211-214)

தென்கிழக்காசிய நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வணிகர்கள் வங்க நாட்டிலிருந்தும், சோழ நாட்டிலிருந்தும் வரும்போதும், திரும்பிச் செல்லும்போதும் மணிபல்லவத் துறைகளில் தங்கிச்செல்வதை மணிமேகலை எடுத்துரைக்கிறது.

“கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்
இலங்கு நீர்ப்புணரி யெறிகரை எய்தி,
வங்க மேறினன் மணிபல்லவத்திடைத்
தங்காது அக்கலஞ் சென்றுசார்ந் திறுத்தலும்”

(மணிமேகலை 25: 124-127)

“வங்க மாக்களொடு மகிழ்வுட னேறிக்
கால்லிசை கடுக்கக் கடல்கலக் குறுதலின்
மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத்
தங்கிய தொருநாள்”.

(மணிமேகலை 24: 79-84)

தென்கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் நாகநாட்டின் சம்புகோவளம் (மகாவம்சம் கூறும் ‘ஜம்புகோல’), காயாத்துறை ஆகிய துறைகளில் தங்கிச்செல்வது வழக்கம். இப்படியான பெருந்துறைகள் ஏதும் நயினாதீவில் இல்லை. ‘தாம்ரலிப்தி’யிலிருந்து அசோக மன்னனின் மகளான சங்கமித்த, புனித அரசமரக் கிளையுடன் வந்திறங்கிய துறை ‘ஜம்புகோல’. புத்தகாயாவுக்குச் செல்லும் யாத்திரிகர்கள் கப்பலெடுத்துச் சென்ற துறை காயாத்துறை எனப் பெயர் பெற்றது. கி.மு. எட்டாம் நூற்றாண்டில் மாவிட்டபுரம் கந்தவேள் ஆலயத்திற்காக சோழ நாட்டிலிருந்து காங்கேயன் (கந்தவேள்) விக்கிரகங்கள் இத்துறையில் வந்திறங்கிய பின்னர் காயாத்துறை காங்கேயன்துறை ஆயிற்று.

நாகநகர் கந்தரோடை – கந்தமாதனம்

பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையும் யாழ்ப்பாணக் குடாநாடும், மிகுதி இலங்கை நிலப்பரப்பின் வடபகுதியும் சேர்ந்த பகுதி நாகநாடு என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நாட்டை ஓர் அரசன் ஆண்டு வந்திருக்கிறான் என்கிற தகவல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் புத்தகோசர் பாளிமொழியில் எழுதிய சம்மோஹவிநோதனி என்னும் நூலிலும் கூறப்படுகிறது. இந்த நூலில் நாகதீப அரசன் ‘தீபராஜா’ (நாகதீவின் அரசன்) எனக் குறிப்பிடப்படுகிறான் (Buddhaghosa: Sammohavinodani: 443).

கி.பி. பதின்நான்காம் நூற்றாண்டில் சிங்களமொழியில் எழுதப்பட்ட ‘சத்தம்மலங்காரய’ என்ற பௌத்த மத நூலில் கூறப்பட்டுள்ள ஓர் உபகதையில் இலங்கையின் தெற்குப் பகுதியான மகாகமத்திலிருந்து பறந்துவந்த ஓர் ஆண் காக்கைக்கும், வடபகுதியான ‘மணிநாக தீபத்திலிருந்து’ வந்த ஒரு பெண் காக்கைக்கும் ஏற்பட்ட காதலும், திருமண நிகழ்வும் கூறப்படுகிறது. ராஜாவலிய என்ற சிங்கள நூல், ‘மணிநாகதீப’ புராதன யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற பௌத்த மையம் எனச் சொல்கிறது (Gunasekara, B. 2015). இவற்றை ஆராய்ந்த கலாநிதி கொடகும்புர, ‘மணிநாகதீப’ என்ற நகரம் பண்டைய கந்தரோடையைக் குறிப்பதாகக் கூறியிருக்கிறார் (Godakumbura, C. 1968).

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சத்தை எழுதிய அநுராதபுரம் மகாவிகாரையின் தலைமைக் குருவான மகாநாமர் இலங்கையின் வடபகுதியை ‘நாகதீப’ என்றும், நாகதீப அரசர்களில் ஒருவரான சூளோதரன் ‘கந்தவதமான’ (Kannavaddhamana) குன்றிலிருந்து ஆட்சி புரிந்ததாகவும் கூறியிருக்கிறார். ‘கந்தவதமான’ என்ற பாளிப்பதம், ‘கந்தமாதனம்’ என்ற தமிழ்ப்பெயரின் பாளிமொழி வடிவம் என நம்ப இடமிருக்கிறது.

யாழ்ப்பாண வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் ‘யாழ்ப்பாண வைபவமாலை’, இந்த நாட்டின் பண்டைய தலைநகரமாக ‘கதிரமலை’யைக் குறிப்பிடுகிறது. கதிரமலை என்பது இன்று நாம் கந்தரோடை என அழைக்கும் கிராமத்தின் மற்றுமொரு பெயராகும். இன்றைக்கும் சுன்னாகம் சந்தைக்கும் கந்தரோடைக்கும் இடைப்பட்ட குன்றுப் பிராந்தியம் கதிரமலை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மேலும், சுன்னாகம் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சிவன்கோயில் ‘கதிரமலைச் சிவன்கோயில்’ என அழைக்கப்படுகிறது.

‘கந்தரோடை’ என்ற பெயரின் பூர்வீகத்தைச் சரியாக அறியமுடியவில்லை. மகாவம்சம் குறிப்பிடும் ‘கந்தமாதனம்’ என்ற பெயருக்கும், ‘கந்தரோடை’ என்ற பெயருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டும். ‘தமிழரும் இலங்கையும்’ என்ற நூலை எழுதிய வரலாற்றாசிரியர் சி.எஸ். நவரட்ணம் ஒருசமயம் ‘கந்தகோட்டம்’ என்ற பெயரே காலப்போக்கில் ‘கந்தரோடை’யாக மருவியிருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். ‘கந்தமாதனம்’ என்ற பெயரின் பின்னர் கந்தகோட்டம், கந்தகோட்டை, கந்தரோடை ஆகிய பெயர்கள் நீண்டகால வரலாற்றில், வெவ்வேறு காலங்களில் இந்த நடுவத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

உத்தரதேசம்

கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் பாளி ஏடுகள் அநுராதபுரத்தைத்தவிர, இலங்கையின் ஏனைய ஐந்து பிரதேசங்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன. இவை வரலாற்றேடுகளில் முன்பிருந்தே குறிப்பிடப்பட்டுவந்த ரோஹண (இலங்கையின் தென்பாகம்), மலய (இலங்கையின் நடுவேயுள்ள மலைப்பிரதேசம்), உத்தரதேச (வடநாடு), பசின தேச (கீழ்நாடு), தக்கிண தேச (தென்நாடு) என்பனவாகும். இவற்றின் எல்லைகளை எவ்விதத்திலும் அறிய முடியாதுள்ளது. இப்பிரதேசங்கள் அநுராதபுரத்தை மையமாகக்கொண்ட அரசின் நடுப்பகுதிக்கு வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் இருந்த பிரதேசங்கள் எனவும், திட்டவட்டமற்ற முறையில் வகுக்கப்பட்ட மாநிலங்கள் எனவும் கொள்வது தவறாகாது (இந்திரபாலா, கா. 2006: 230-31).

வடஇலங்கையின் ‘உத்தர தேசத்தைப்’ பற்றிய குறிப்புகளை ஆய்வு செய்தால் அப்பிரதேசம் ஏனைய பிரதேசங்களைவிட வேறுபட்டதாக இருந்தது என்பதை அறியலாம். அநுராதபுரத்து மன்னர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத ஒரு பிரதேசமாகப் பலமுறை அதனைக் காணலாம். அநுராதபுர ஆட்சியை எதிர்த்தோர் அங்கு ஆதரவு பெற்றதையும் காணலாம். முற்பட்ட நூற்றாண்டுகளைப்போல் அல்லாது, ஆறாம் நூற்றாண்டின்பின் தென்னிந்தியாவிலிருந்து வந்த படைகள் வடபகுதியில் (உத்தரதேசத்தில்) இறங்குவதையும் அவதானிக்க முடிகிறது. அப்படி வந்த படைகள் வடக்கில் தங்களை உறுதிப்படுத்தியபின் அநுராதபுரத்தை நோக்கி முன்னேறின. இவற்றை நோக்குமிடத்து அநுராதபுரத்து ஆட்சியாளருக்குச் சாதகமான சூழ்நிலை வடபகுதியில் நிலவவில்லை என்பது தெளிவு (இந்திரபாலா, கா. 2006: 231). 

இச்சந்தர்ப்பத்தில் எகிப்தின் அலெக்ஸ்ஸாந்திரியாவிலிருந்து ஆறாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த வர்த்தகரும் மதகுருவுமான கொஸ்மஸ் இன்டிகோபிளியுஸ்டிஸ் (Cosmas Indicopleustes) இலங்கையின் அன்றைய அரசியல்நிலை தொடர்பாகக் கூறிய கருத்தை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். அவரது கூற்றிலிருந்து இலங்கையில் இரு அரசுகள் இருந்தமையும், அவற்றுள் ஓர் அரசின் மன்னனிடம் செந்நிறமணிகள் காணப்படும் நிலப்பகுதியும், இன்னொரு மன்னனிடம் மிகப்பெரிய வணிகநகரத்தை உள்ளடக்கிய துறைமுகம் இருந்தமையும் தெரியவருகிறது. இதற்கு விளக்கமளித்த பேராசிரியர் பரணவிதான, செந்நிறமணிகள் காணப்படும் நிலப்பரப்பு தென்னிலங்கை அரசு எனவும், பெரிய வணிகநகரத்தை உள்ளடக்கிய துறைமுகம் மாதோட்டம் எனவும், அது அநுராதபுர அரசனால் ஆளப்பட்ட பகுதி என்றும் கூறுகிறார். தென்னிலங்கையில் இன்னொரு மன்னன் இருந்தமைக்கு, அதன் ஆட்சியாளன் அநுராதபுர அரசிற்கு கீழ்ப்படிய மறுத்ததே காரணம் என விளக்கம் கூறுகிறார் (Paranavithana, 1961: 184). ஆனால் முதலியார் இராசநாயகம், பெரிய வணிகநகரத்தை உள்ளடக்கிய மாதோட்டத்துறைமுகம் யாழ்ப்பாண அரசிற்கு உரியதெனக் கூறியிருக்கிறார் (Rasanayagam, C. 1926).

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பின்னர் நாகதீபத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே இருந்த அரசியல் உறவுகளை நோக்கும்போது தென்னிலங்கையைக் காட்டிலும் வடஇலங்கையே அநுராதபுர அரசின் மேலாண்மைக்குக் கீழ்ப்படியாதிருந்ததைக் காணமுடிகிறது. இதனால் கொஸ்மஸ் கூறும் பெரிய வணிகத்துறைமுகத்தைக் கொண்டிருந்த மன்னன் வடஇலங்கையில் ஆட்சிசெய்த மன்னர்களில் ஒருவனாகக் கருத இடமுண்டு (பத்மநாதன், 2014: 25).

கி.பி. 850 ஆம் ஆண்டளவில் இந்தியா, இலங்கை (Sarandib), சீனா ஆகிய நாடுகளுக்குப் பிரயாணம் செய்த ஈரானிய மொகம்மதிய யாத்திரிகர்களான சுலைமான் அல்-தாஜிர், அபு செயத் ஆகியவர்களும், இலங்கைத்தீவை இரு அரசர்கள் ஆட்சிபுரிவதாகக் கூறியிருக்கிறார்கள்:

“This Sarandib Island, which is of great extent, has two kings; and here you may have wood-aloes, gold, precious stones, and Pearls, which are fished on the coast; also, a kind of large shells, which they use instead of trumpets, and which they much value” (Sulayman al-Tajir & Abu Zaid, 1733, page. 3)”

“பெரியளவிலான இந்த ஸரன்திப் தீவில் இரு அரசர்கள் ஆட்சி புரிகிறார்கள். இங்கே அகில் மரம், தங்கம், மதிப்புமிக்க கற்கள், கடற்கரைப்பகுதியிலிருந்தே பெறப்படும் முத்துகள், மிக மதிப்புள்ள, ஊதுகொம்பாய் உபயோகப்படுத்தப்படும் பெரிய கடற்சிப்பிகள் (சங்குகள்) என்பன கிடைக்கும்.” 

கடலில் முத்துக் குளிப்பதும், சங்குகள் எடுப்பதும் பாரம்பரியமாக வடஇலங்கை அரசர்களால் இலங்கையின் வடமேற்குக் கடலில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளாகும்.

நாகர்கள்

நாகர்கள் புராதனகாலத்தில் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த பூர்வகுடி மக்களாவார். இம்மக்கள் நாகபாம்பை தங்களது குலச்சின்னமாகக் கொண்டு (Clan totem), நாகத்தை வணங்கி வந்தபடியினால் ‘நாகர்கள்’ என அழைக்கப்பட்டார்கள் என்பது ஆனந்தா குமாரசாமி போன்ற சில ஆய்வாளர்களின் முடிவு. இந்நாகர்களைப் பற்றிய விவரங்கள் சங்கத்தமிழ் இலக்கியங்களிலும், வியாசர் மகாபாரதத்தின் ஆரம்ப அத்தியாயங்களிலும் காணப்படுகின்றன.

ஆதிகால நாகர், அகில இந்தியப் பரிமாணமுடையவர்கள். இந்தியக் குடியரசின் வடக்கிலே நாகலாந்து என்னும் மாநிலமுள்ளது. முற்காலங்களில் நாக வம்சத்தவர், கங்கைச் சமவெளியின் தென்பால் அரசு புரிந்தனர். குப்தப் பேரரசனான சமுத்திரகுப்தன், அவர்களில் சிலரின் இராச்சியங்களைக் கைப்பற்றினான். அவனது இரண்டாவது மகன் சந்திரகுப்தனின் தேவியரில் ஒருத்தி நாக நங்கையான குபேரநாகை ஆவாள் (பத்மநாதன், சி. 2013: XIV).

இந்தியாவின் பல நாடுகளையும், நகரங்களையும் நாக மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். மௌரிய அரசை ஆரம்பித்துவைத்து ஆட்சிபுரிந்த பிம்பிசாரன், அஜாத்சத்ரு, நாகதாசகன், சுசுநாகன் ஆகியோர் நாக அரசர்களே. சமுத்திரகுப்தனின் அலகபாத் கல்வெட்டில் நாகதத்தன், நாகசேனன் ஆகிய நாக அரசர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. பொ.யு. மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளில் நாகபுரியின் நாக மன்னர்கள் சத்வாகனர்களுடனும், பல்லவர்களுடனும் கலப்பு மணம் புரிந்திருக்கிறார்கள். கி.பி. பதினொராம் நூற்றாண்டுவரை மத்திய இந்தியாவின் சுக்ரகுத்தா, போகவதி ஆகிய நகரங்களை, நாக பாம்பை அரச இலச்சினையாகக்கொண்ட நாக அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் (தியாகராஜா, சி. 2023: 95).

நாகர்கள் எக்காலத்தில் வடக்கிலிருந்து தென்புலம் வந்தனர் என்பது பூர்வீக இந்திய-இலங்கை வரலாற்றில் இன்னும் தெளிவுபடுத்தப்படாத விடயம். இலங்கையின் பாளி ஏடான மகாவம்சம், கி.மு. ஆறாம்-ஐந்தாம் நூற்றாண்டில், புத்த பெருமான் வாழ்ந்த காலத்தில் வடஇலங்கையின் நாகதீபத்தின் அரசுரிமைக்காக மகோதரன், சூளோதரன் என்ற இரு நாக அரசர்கள் போட்டியிட்ட சம்பவத்தைக் குறிப்பிடுகிறது. பொ.யு.மு. ஆறாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் நாகநாட்டில் ஓர் இராசதானி இருந்ததை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது (Mahavamsa I: 63).

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை நாகர்கள் வாழும் இடங்களாக யாழ்ப்பாணம், ஜாவா, நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறது. மணிமேகலை இவ்விடங்களில் வாழும் பூர்வகுடிகளை எல்லாம் ‘நாகர்’ என்ற பொதுப்பெயரால் அழைப்பதுபோலத் தெரிகிறது. நாகநாடு எனப்படும் பண்டைய யாழ்ப்பாணத்து நாகர்கள், காவிரிப்பூம்பட்டினத்தை நிகர்த்த உயர்வான ஒரு நாகரிகத்தைக் கொண்டவர்களாகவும், இங்கே சிறப்பான ஓர் அரசை ஓர் அரசன் கொண்டுநடத்துவதாகவும், இங்குள்ள மக்கள் செல்வச்செழிப்பான ஒரு வாழ்க்கை நடத்துவதாகவும் இந்நூல் விவரிக்கிறது (மணிமேகலை அத். 14:24, அத். 54:71).

ஜாவா தேசத்து நாகர்களும் உயர்வானதொரு நாகரிகத்தைப் பேணி, ஓர் அரசனால் ஆளப்படுகிறார்கள். அவர்களது நாடும் செல்வச்செழிப்பு மிகுந்த நாடாகக் கூறப்படுகிறது. அவர்களது நாட்டின் தலைநகரம் நாகபுரம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது (மணிமேகலை அத். 24: 169-170).

நிக்கோபார் தீவின் நாகர்கள் கறுப்பு நிறத்தவர் எனவும், நாடோடி வாழ்க்கை வாழ்பவர் எனவும், மனித மாமிசம் புசிப்பவர் எனவும் கூறப்படுகின்றன. அவனது கப்பல் அத்தீவில் கரைதட்டியபோது அங்கே சென்ற ஒரு வர்த்தகன், அத்தீவின் தலையாரி நாகன் அவனது மனைவியோடு அமர்ந்திருப்பதைக்கண்டு ‘அவர்களைப் பார்க்க, ஒரு கரடி தனது பெண் ஜோடியோடு உட்கார்ந்திருப்பது போலக் காட்சியளித்தது’ என்று கூறியதாக மணிமேகலை பதிவு செய்திருக்கிறது (மணிமேகலை அத். 15: 16, அத். 16: 66-69).

இக்காட்சியைப் பார்க்குமிடத்து இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து தென்கிழக்கு ஆசியாவரை இடம்பெயர்ந்து சென்ற ஆதி ஆஸ்திரலோயிட்டு மக்களின் நேரடி வம்சாவளியினர்களாக இருக்கலாமெனவும், இந்த ஆதிவாசிகளில் சற்று நாகரிகமடைந்து நாக வணக்கத்தை மேற்கொண்ட மக்கள் ‘நாகர்’ எனப் பெயர் பெற்றதாகவும், காட்டில் வேட்டையாடி உணவு உண்ட மக்கள் ‘வேடர்’களாகத் தொடர்ந்ததாகவும் அறிஞர் ஆனந்தா குமாரசாமி கருதுகிறார்.

தென்ஆசியாவின் ஆதி ஆஸ்திரலோயிட் மக்களினதும், ‘கோக்கஸோயிட்’ மக்களினதும் சேர்க்கையால் தென்னாசிய நாகர்கள் பிறந்தனர்; ஆஸ்திரலோயிட் மக்களினதும், ‘மொங்கலோயிட்’ மக்களினதும் சேர்க்கையால் தென்கிழக்கு ஆசிய நாகர்கள் தோன்றினர்; இவர்களின் வம்சாவளியினரே 7 முதல் 16 ஆம் நூற்றாண்டுவரை கம்போடியாவை ஆட்சிபுரிந்த கமர் அரசர்கள் (Khmer kings); இவர்கள் பசிபிக் தீவுகள், ஈஸ்டர் தீவுகள், மடகஸ்கார் தீவு ஆகிய இடங்களுக்குச் சென்று ‘ஆஸ்திரோ-மெலனேசியர்கள்’ (Austro-Melanesians) என அழைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது (Chandler, D.P. 1983).

இலங்கையின் தலையாய தொல்லியலாளர்களுள் ஒருவரான சிரான் தெரனியகல, இலங்கையின் வரலாற்றுதயகால இரும்புக்கால மனிதர்களே நாகர்கள் என்றும், இவர்கள் அதற்குமுன்னர் இங்கிருந்த இடைக்கற்காலத்து வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்ந்துவந்த மனிதர்களை இலங்கையின் வடபகுதியிலிருந்தும், தென்பகுதியிலிருந்தும் பொ.யு.மு. 1000 ஆண்டளவில் நீக்கிவிட்டு, அவ்விடங்களில் இனப்பெருக்கம் அடைந்ததாகக் கூறியிருக்கிறார் (Deraniyagala, S.U. 1992: 735, 363). 

இச்சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாண நாகர்கள், தென்னிந்தியாவிலிருந்து இரும்புக்காலத்தில் பெருங்கற் பண்பாட்டை இங்கே கொண்டுவந்தவர்களா? அல்லது அப்பண்பாடு இங்கே கசிந்துவந்த காலத்தில், அதைப் பின்பற்றிய இலங்கை மக்களா? என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் பொ.யு.மு. 65,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆபிரிக்காவிலிருந்து பல அலைகளாக இங்குவந்த மக்களின் சந்ததியினராக இருப்பின், 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்த நுண்கற்கால மக்களின் வம்சாவளியினரின் ஒரு பகுதியினராகவே இருப்பர்.

இன்றைய மரபணுவியல் ஆய்வுகள், இலங்கையில் இன்றிருக்கும் மக்களில் 90% இற்றைக்கு 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாட்டிலிருந்த இடைக்கற்கால, நுண்கற்கால மக்களின் நேரடி வம்சாவளியினரே என எடுத்துக்காட்டுகிறது (Thiagarajah, Siva. 2011). கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வடஇந்தியாவிலிருந்து விஜயனும் அவனது சகாக்களும் இங்கே வந்திறங்கிய சமயம், இந்த நாட்டில் நாகர்கள் வாழ்ந்ததை இலங்கையின் பாளி நூல்கள் எடுத்துரைக்கின்றன. இவற்றையெல்லாம் நோக்குமிடத்து நாகர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்ந்த புராதன மனிதர்களின் ஒரு பிரிவினர் என எண்ணவேண்டியுள்ளது. இலங்கையின் பாளி நூல்கள் எந்த இடத்திலும் விஜயனையும் அவனது சகாக்களையும் ‘இந்திய-ஆரியர்’ என அழைக்கவில்லை.

நாகர்களைப் பற்றிய குறிப்புகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. சில இடங்களில் நாக(ர்) என்பது ஓர் இனக்குழுவின் பெயராக வருகின்றது. வேறு சிலவற்றில் அது ஒரு குலப்பெயர் என்று கொள்ளும் வகையிலே காணப்படுகிறது. இன்னும் சில இடங்களில் அது ஒருவரின் தனிப்பெயராக அமைந்துவிடுகிறது. பிரதானமாக சாசனக்குறிப்புகளில் இந்த வேறுபாட்டைக் காணலாம் (பத்மநாதன், சி. 2011: 48).

நாகர்கள் வடஇலங்கையில் நாகதீபம் (யாழ்ப்பாணம்), பூநகர் (பூநகரி), மாதோட்டம் (மாந்தை), பல்லவாங்கம் (பதவியா), திரிகூடம் (திருக்கோணமலை) ஆகிய இடங்களிலும், அப்பால் கரையோரப்பகுதிகளான புத்தளம், சிலாபம், கல்யாணி (களனி), தேவேந்திரமுனை (தேவிநுவர), நாகதுமை (மகாகம்), திருக்கோவில், நன்னிகிரி ஆகிய இடங்களிலும் வாழ்ந்திருந்தார்கள் என்பதை இலக்கிய ஆதாரங்கள், தொலமியின் வரைபடம் என்பன எடுத்துக்காட்டுகின்றன.

மகாவம்சம், புத்தபகவான் வாழ்ந்த காலத்தில் (பொ.யு.மு. ஆறாம்-ஐந்தாம் நூற்றாண்டில்) இலங்கையில் நாகதீபத்திலும், கல்யாணியிலும் இரு நாக அரசுகள் இருந்ததை எடுத்துரைக்கிறது (Mahavamsa Ch.1).

மகாவம்சத்தைப்போல, இயக்கரையும் நாகரையும் இலங்கையின் பூர்வகுடிகளாகக் கொள்ளுகின்ற ‘மட்டக்களப்பு பூர்வசரித்திரம்’ அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கலப்பினைப்பற்றி பின்வருமாறு வர்ணிக்கின்றது:

“கலிகடந் தெண்ணூறாண்டில் கருதிய இலங்கை தன்னில்
வலியவ ரியக்கரோடு கலந்தவர் மரபென்றாகி
நலிவில்லா நிருபஞ்செய்து நகரெலா மிறைகளென்ன
ஒலிவள ருகந்தமென்னும் நகரத்திலுறைநந்தார் நாகர்”.

(மட்டக்களப்பு பூர்வசரித்திரம், பக். 3)

இப்பாடல், ஆதிகாலத்தில் நாகர் உகந்தையில் இராச்சியம் அமைத்து அங்கே வாழ்ந்தனர் என்பதைக் குறிக்கின்றது. இலங்கையில் ஏற்பட்ட அரச உருவாக்கம், நாகருடன் தொடங்கியது என்ற வரலாற்றை அது பிரதிபலிக்கிறது. அரசின் தோற்றம் பற்றிய ஆய்வில் இக்கதை சிறப்பிடம் பெறக்கூடியது (பத்மநாதன், சி. 2011: 49).

மிகவும் புராதனமான காலத்தில், இலங்கையின் கிழக்குக் கரையோரப்பகுதியில், உகந்தையைத்தவிர நாகர் ஆதிக்கம் பெற்றிருந்த வேறு சிற்றரசுகள் இருந்ததைப் பற்றியும் இந்நூலின் மூலம் அறிகின்றோம். தேசத்துக்கோயில் எனப் பிற்காலத்திலே பராட்டப்பெற்ற திருக்கோயில் அமைந்தபகுதி நாகர்முனை என்ற பெயரால் வழங்கியது என்றும், அது ‘உன்னரசகிரி’ என்னும் இராச்சியத்தில் அடங்கிய பகுதி என்றும் இந்நூலில் கூறப்படுகிறது. மேலும், திருகோணமலை, கொட்டியாரப்பற்று என்பனவும் நாகர் பிரதானிகளை அதிபர்களாகக்கொண்ட ஆதிகாலக் குறுநிலப்பிரிவுகள் என்பதும் இந்நூலின் மூலம் அறியக்கிடக்கின்றது (மட்டக்களப்பு பூர்வசரித்திரம், பக்.16).

இலக்கியச் சான்றுகளைத்தவிர, சமீபகாலங்களில் பேராசிரியர் சி. பத்மநாதன் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில், நாகர்களின் பல சிற்றரசுகள் இருந்ததை அவ்விடங்களிலுள்ள பிராமிக்கல்வெட்டுகள் மூலமாகவும் எடுத்துக்காட்டியிருக்கிறார் (பத்மநாதன், சி. 2016).

இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் உருவாகிவிட்டது என்றும், தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ்மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கிவிட்டனர் என்றும் சொல்லக்கூடிய காலம் வந்துள்ளது. நாகர் தமிழ்மொழி பேசியவர்கள் என்பதாலும், ஆதிஇரும்புக்காலப் பண்பாட்டைப் பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் என்பதாலும், கி.மு. ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சுவழக்கு மொழியாக நிலைபெற்றுள்ளமை உய்த்துணரப்படுகின்றது. இங்கு கிடைக்கின்ற தமிழ்ப் பிராமிக்கல்வெட்டுகளின் அடிப்படையில் இலங்கையில் தமிழ்மொழியின் தொன்மை பற்றி அறியமுடிகிறது (பத்மநாதன், சி. 2016: xiv).

இலங்கையின் பழங்குடி மக்களான நாகர்கள் திராவிடர்களே என்பதை ஆங்கில வரலாற்றாசிரியர்களான ஸேர். எமர்ஸன் ரெனன்ற் (Emerson Tennent: Ceylon), ஹென்றி பார்க்கர் (H. Parker: Ancient Ceylon) ஆகியோர்களும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இலங்கையில் வாழ்ந்த நாகர்கள் தமிழ்மொழியைப் பேசிய தமிழர்கள் என்பது அவர்கள் விட்டுச்சென்ற கல்வெட்டுகளில் காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்துகள் மூலம் அறியப்படுகிறது. புளியங்குளம் – முல்லைத்தீவு பாதையில் உள்ள கட்டுக்கரைப் பாறையில் ‘வேள் நாகன்’ என்ற தமிழ்ப்பிராமிப் பொறிப்பு காணப்படுகிறது. ‘வேள்’ என்ற பதம் பண்டைய தமிழகத்தில் இருந்ததைப்போல ஒரு சிற்றரசனைக் குறிக்கும். தென்னிலங்கையில் மகாகமையில் கண்டுபிடிக்கப்பட்ட பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குரிய நாணயம் ஒன்றில் ‘திசபுரசடநாகராசன்’ என்னும் தமிழ்ப்பிராமி வாசகம் காணப்படுகிறது. இது ‘திசபுரம்’ என்னும் இடத்திலிருந்து ஆட்சிபுரிந்த ஒரு நாக அரசன் வெளியிட்ட நாணயமாகக் கொள்ளப்படுகிறது (Bopearachchi, O. & Wickramasinghe, R.M. 1999).

இலங்கையில் அநுராதபுரத்திலிருந்து ஆட்சிபுரிந்த பல நாக அரசர்களைப் பற்றி மகாவம்சம் எடுத்துரைக்கிறது: கல்லாட நாகன் (கி.மு. 50-43), சோரநாகன் (கி.மு. 3–பொ.யு. 9), மகாதத்திக மகாநாகன் (கி.பி. 66-78), ஈழநாகன் (கி.பி. 95-101), மாகல்ல நாகன் (பொ.யு. 195-199), குச்சநாகன் (பொ.யு. 241-243), குஞ்சநாகன் (கி.பி. 243-244), ஸ்ரீநாகன் (கி.பி. 244-263), அபயநாகன் (கி.பி. 285-293), இரண்டாம் ஸ்ரீநாகன் (கி.பி. 293-295) (Mahavamsa: 1960, Introduction). இந்த அரசர்களை அவர்களின் பெயர்களிலிருந்தே நாகர்களாக இனங்கண்டு கொள்ளலாம்.

அநுராதபுரத்திலிருந்து ஆட்சிபுரிந்த ‘லம்பகர்ண’ அரசர்கள், வடஈழ நாகர்களுக்கும் பாண்டிய அரச குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட உறவினால் வந்த வம்சாவளி அரசர்களாவர். பெரிய காதணிகளை அணிந்ததனால், பெரிய காதுகளைப் பெற்றிருந்த இவர்கள் லம்பகர்ணர்கள் என அழைக்கப்பட்டார்கள். வீரபாண்டியன், மதுரையில் முடிசூடிக் கொண்டபோது இவ்விழாவில் அநுராதபுர லம்பகர்ணர்கள் பங்குபற்றித் தமது கடமைகளைப் புரிந்தார்கள் என சூளவம்சம் கூறுகிறது.

அநுராதபுரத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேவநம்பியதிஸ்ஸனால் ஆரம்பித்துவைக்கப்பட்ட மௌரிய ஆட்சி முடிவடைய, அரசன் வசபனுடன் (கி.பி. 124-168) லம்பகர்ணர்களின் ஆட்சி ஆரம்பமாகி, மகாநாமன் வரை நீடித்தது. இவர்களில் புகழ்பெற்ற லம்பகர்ண அரசனான கஜபாகு (கி.பி. 171-193) ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்திய பெருமகனாவார் (தியாகராஜா 2023: 96).

அநுராதபுர அரசனான தேவநம்பியதிஸ்ஸன் நாகர் குலத்தவனே. இவனது தந்தையின் பெயர் மூத்தசிவன். இவனது பெயர் குறிப்பிடுவதுபோல இவன் சிவபக்தனாக இருந்திருக்கலாம். இவர்களைத்தவிர ‘திஸ்ஸ’ என்ற பெயரைக்கொண்ட அநுராதபுர அரசர்கள் நாகர்குல அரசர்களாவர். சூரத் திஸ்ஸன், சுத்த திஸ்ஸன், லஞ்ச திஸ்ஸன், மகா திஸ்ஸன், குட்டகண்ண திஸ்ஸன், கனிராஜனு திஸ்ஸன், யகலாலக திஸ்ஸன், வங்கநாசிக திஸ்ஸன் ஆகிய அரசர்களின் பெயர்கள் மகாவம்சத்தில் இடம்பெறுகின்றன. இன்றும் வடஈழத் தமிழர்களிடையே காணப்புடும் திஸவீரசிங்கம், திஸ்ஸநாயகம், திசைகொண்டான் ஆகிய பெயர்கள் இப்புராதன நாகப் பெயர்களின் எச்சங்களே.

சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் புலவர்களில், பல நாகர்கள் இடம்பெறுகிறார்கள். முதற்சங்கத்தில் முக்கியத்துவம்பெற்ற முரஞ்சியூர் முடிநாகராயர், ஈழத்திலிருந்து சென்று எழிற்றமிழ் புனைந்த பூதந்தேவனார், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியை இயற்றிய நாகதத்தர், பரிபாடலில் இடம்பெறும் பல பாடல்களை இயற்றிய நாகநன்னாகனார், கலித்தொகையில் மருதக்கவி பாடிய மருதிள நாகர் அனைவரும், ‘தேன் பிலிற்றும்’ செய்யுட்கள் வரைந்த தீந்தமிழ் நாகர்களே! இவர்கள் மட்டுமா? சயங்கொண்ட சோழனின் வேண்டுகோளுக்கிணங்க நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவரும் நாகஞானியான பவணந்தி முனிவரே!

பண்டைக்கால நாகநாட்டில் இந்து – பௌத்த மதங்கள்

கந்தரோடை அகழ்வுகளில் காணப்பட்ட முக்கியமான ஓர் அம்சம் தாய்த்தெய்வ வழிபாட்டைக் குறிப்பிடும் உலோகவில்லைகளாகும் (Plaques). 1917-1919 இல் அங்கே அகழ்வை மேற்கொண்ட போல்பீரிஸ் நூற்றுக்கணக்கான இந்த வில்லைகளைக் கண்டெடுத்தார். நிற்கும்நிலையில் வலதுகையில் தாமரை மலரையோ அல்லது ஒரு தண்டத்தையோ பிடித்துக்கொண்டிருக்கும் இந்த உருவங்களைக்கொண்ட வில்லைகளுக்கு ‘லக்க்ஷ்மி வில்லைகள்’ எனப் பெயர் கொடுத்தார். இந்த வில்லைகள் நாணயங்களாகப் பாவிக்கப்பட்டன எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த லக்க்ஷ்மி வில்லைகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவரை 600 ஆண்டுகாலமாக புழக்கத்தில் இருந்துவந்தன (Pieris, P. 1919: 52-53).

இவை தவிர யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் புக்ஷ்பரட்ணம் கண்டெடுத்த இரு செப்புத்தகடுகள் முக்கியமானவை. இவற்றிலொன்றில் வலதுகையில் தாமரை மலரைப் பிடித்துக்கொண்டு, தலைவிரி கோலமாக, லலிதாசன நிலையில் உட்கார்ந்திருக்கும் பெண் தெய்வம் கொற்றவை ஆகும். இச்செப்புப் பட்டயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குரியது (Pushparatnam, P. 2002: 183).

அடுத்தது, யோகநிலையில் உட்கார்ந்த ஆண் உருவம் கொண்ட செப்புப் பட்டயம். இதன் தலைப்பகுதியில் உச்சிமுடி காணப்படவில்லை. இந்தச் செப்புப்பட்டயம் சிவனுடைய முற்காலத்தைய உருவமாகக் கருதப்படுகிறது. இந்த உருவத்திற்கும் மொகஞ்சதாரோவில் ஜோன் மார்க்ஷல் கண்டெடுத்த சிவனின் உருவத்திற்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறது (Pushparatnam, P. 2002: 183).

இவற்றைத்தவிர வெண்கலத்தினாலும், செப்பினாலும் செய்யப்பட்ட திரிசூலங்களும், வேல்களும் கந்தரோடையிலும், யாழ்ப்பாணத்தின் பிற இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

கி.மு. ஆறாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் நாகநாட்டிற்கு பௌத்தமதம் அறிமுகமாகிய பொழுதில் மகோதரன், சூளோதரன் ஆகிய நாக அரசர்களும், அந்நாட்டில் வாழ்ந்த பல மக்களும் அம்மதத்தைத் தழுவிய செய்தி ஏற்கனவே கூறப்பட்டது. இந்நாக மக்கள் சிவவணக்கத்துடன் பௌத்தமதக் கொள்கைகளையும் சேர்த்தே அனுசரித்து வந்தார்கள் என ஊகிக்கமுடிகிறது. கந்தரோடை அகழ்வுகளிலும், யாழ்ப்பாணத்தின் பிற இடங்களிலும் கிடைத்த லக்க்ஷ்மி வில்லைகளும், தாய்த்தெய்வ சுடுமண் உருவங்களும், அவற்றோடு அதே அகழ்வு மட்டங்களில் இடம்பெறும் பௌத்தமதக் கருவூலப் பொருட்களும் இம்மக்கள் ஒரே சமயத்தில் இந்து-பௌத்த மத வணக்கங்களை மேற்கொண்டவர்கள் என்ற கருத்திற்கு ஆதரவு தருவதாய் அமைந்திருக்கிறது.

இவற்றை நோக்குமிடத்து நாக நாடான பண்டைய யாழ்ப்பாணத்தை இந்து, பௌத்தம் ஆகிய இரு மதங்களையும் பேணிய மக்கள் சுமுகமாக வாழ்ந்த ஒரு பொதுவுடமை சமூகத்திற்குரிய (Cosmopolitan Society) நாடாகக் கொள்ளலாம்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க


About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்