பிள்ளைப்பிறப்பு தொடர்பாக பல்வேறு சமூகங்களிடையே பலவிதமான வழக்காறுகள் காணப்படுகின்றன. புராதன எகிப்து தொடக்கம் இச்சம்பிரதாயங்கள் காணப்பட்டுள்ளன. பிள்ளை தரிப்பதும், பிள்ளை பெறுவதும் ஒரு பெண்ணிற்கான சமூக அத்தஸ்தை உயர்த்துவதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. தமது குலத்தையும் இனத்தையும் விருத்திசெய்யும் பெண்கள், அதிக பிள்ளைபெறும் பெண்கள் நன்கு மதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிள்ளைகளைச் செல்வங்களில் ஒன்றாகக் கருதி வந்துள்ளனர். பிள்ளைப்பேறு தொடர்பான தனித்துவமான வழக்காறுகள் கிழக்கிலங்கை முஸ்லிம்களிடமும் காணப்படுகின்றன:
- இசாக்கால நடைமுறைகள்
- குடாமண் ரொட்டி
- தலைப்பிள்ளைச்செப்பு
- பிள்ளைப்பேறு
- முதலாவது அதான் சொல்லுதல்
- மருத்துவிச்சி வாழ்த்து
- இனிப்புப் பகிர்தல்
- ஏழாம் நாள் முடி இறக்குதல்
- பெயர்சூட்டுதல்
- அகீகா விருந்து
- நாற்பதாம் நாள் கொண்டாட்டம்
- தொட்டில் கட்டுதல்
- மாமநூல் போடுதல்
- பல்லுக்கொழுக்கட்டை
நேர்ச்சை யாத்திரைகள்:
பிள்ளைப்பேறு இல்லாதவர்களும், தீராநோயுள்ளவர்களும் அவ்லியாக்கள் எனப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் கராமத்துகள்மூலம் நிவர்த்தி பெறவேண்டி, அவர்களின் கப்றுகளை (அடக்கத்தலங்களை) ஸியாரத் செய்வது, அவர்கள்மூலமாக வஸீலாத் தேடுவது, நேர்ச்சைகள் செய்வது, தொட்டில், பண முடிச்சுகள் கட்டுவது போன்றவற்றைச் செய்துவந்தனர். சம்மாந்துறையில் காட்டவுலியா, வீரையடியப்பா, கலந்தரப்பா, குருந்தையடியப்பா, கோஸப்பா, சீலக்கரை மஸ்தார், மஸ்தார் வாப்பா, பூசிரங்கன்னி நாச்சியார், கண்கத்தியப்பா போன்ற இறைநேசர்களாக மதிக்கப்பட்டவர்களின் ஸியாரங்கள் இருந்திருக்கின்றன. இன்று அவற்றுள் சிலதே எஞ்சியுள்ளன. சிலர் பாவா ஆதம் மலை, தப்தர் ஜெயிலானி, கதிர்காமம், இறக்காமம் சேகு ஒலியுல்லா ஸியாரம், கல்முனைக்குடி, நாகூர் போன்ற தூரஇடங்களுக்கு யாத்திரைகளும் செய்துவந்துள்ளனர். அதேநேரம் காளிகோயில், கோரக்கர் கோயில் தீ மிதிப்புகள், திருவிழாக்களுக்கும் செல்லும் சிலர் அக்காலத்தில் கோழிகளையும், கால்நடைகளையும் நேர்ச்சையாகக் கொடுக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.
இசாக்கால நடைமுறைகள்
மாதவிடாய்க்காலம் தாமதித்த பெண்கள், கர்ப்பமுற்றிருப்பதை அறிவதற்காக குடும்பப்பரிகாரி, மருத்துவிச்சி ஆகியோரிடம் நாடிபிடித்துப் பார்க்கச் செல்வார்கள். பாரம்பரிய வைத்தியர்களான இவர்கள் நாடித்துடிப்பு, ஏனைய குணங்குறிகளைக் கொண்டு கர்ப்பம் தரித்ததை உறுதிப்படுத்துவார்கள்.
பெண்களின் கர்ப்பகாலத்தை இசாக்காலம், எசாக்காலம் (Pregnancy cravings) என்று அழைப்பார்கள். இக்காலத்தில் புளி, சாம்பல், போன்றவற்றை பெண்கள் விரும்பி உண்பார்கள். உப்புக்கொச்சிக்காய் துவையலும் இவர்களுக்கு மதினிமார்களால் அரைத்துக் கொடுக்கப்படுவதுண்டு. உப்பு, பச்சைக் கொச்சிக்காய், புளி, மாங்காய், கருவாடு, வெங்காயம் போன்றவற்றைத் தணலில் சுட்டு அம்மியில் அரைத்து திரளையாகக் கொடுப்பார்கள்.
பெண்கள் தங்களின் கர்ப்பகாலத்தில் தங்களை மிகுந்த கரிசனையோடு கவனித்துக்கொள்வார்கள். இக்காலத்தில் கிணற்றில் நீர் அள்ளுதல் போன்ற பாரமான வேலைகளைத் தவிர்த்துவிடுவார்கள். அன்றையகால திருமண நடைமுறைகளினால் பெண்கள் பதின்மூன்று, பதினான்கு வயதிலேயே முதல்பிள்ளையைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாகக் காணப்பட்டுள்ளனர். இந்நடைமுறை எண்பதுகளின் இறுதிவரை அதிகம் காணப்பட்டுள்ளது. தற்காலத்தில் இவ்வாறான திருமணங்களும், இளவயதுக் கர்ப்பம் தரித்தல்களும் மிக அரிதாகவே நிகழ்கின்றன.
சூரிய, சந்திர கிரகணக்காலங்களில் பெண்கள் வீட்டுக்கு வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். கிரகணம் முடியும்வரை வீட்டில் எதையும் சமைப்பதையும் தவிர்த்து வந்துள்ளனர். கிரகண நாட்களில் மீன் அறுப்பது போன்ற காரியங்களையும் செய்யாமல் இருப்பார்கள். கிரகணத்தின் பின்னர் குளித்துவிட்டு உணவு உண்பார்கள். ஆற்றிலே மூழ்கிக் குளிக்கமாட்டார்கள். மருதாணி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யமாட்டார்கள்.
பகட்டுச் சிகப்பு, பச்சை உள்ளிட்ட நிறங்களில் ஆடை அணிவதைத் தவிர்ப்பார்கள். அதேபோல உடலழற்சியை ஏற்படுத்தக்கூடிய சிலவகை கடல் மீன்கள், தக்காளி, கத்தரி, போன்ற உணவுகளையும், பப்பாசி, பாலா, அன்னாசி போன்றவற்றையும் சிறிதுகாலம் தவிர்த்துவருவார்கள்.
அதேபோல பூனைக்கு அடித்தல், பூனையைக் கொல்லுதல் போன்றவை அங்கவீனமான பிள்ளைப்பேற்றிற்கு வழிவகுக்கும் என்றும் நம்பினார்கள். இரவு நேரங்களிலும், மதியவேளைகளிலும் பிரயாணம் செய்வதைத் தவிர்ப்பார்கள்.
குடாமண் ரொட்டி
கிழக்கிலங்கை முஸ்லிம் கிராமமான சம்மாந்துறையில் குடாமண் ரொட்டி எனப்படும் மண்ரொட்டி கர்ப்பிணித்தாய்மாரினால் உண்ணப்பட்டு வந்துள்ளது. இது அங்குள்ள குடாவட்டை எனப்படும் வயற்பிரதேசத்தில் இருந்து பெறப்படும் ஒருவகை வெண்களிமண்ணால் (மாலாமண்) செய்யப்படுவதாகும். இம்மண்ணைத் திரட்டி அள்ளிக்கொண்டு வருவார்கள் அம்மண்ணை நீரூற்றிக் கழுவி சல்லடைகளை நீக்குவார்கள். பின்னர் தரையில் ஒரு பெரிய சீலையை விரித்து அதில் வட்டவட்டமான தட்டைகளாகக் கழுவிய களிமண்ணை ஊற்றி ரொட்டி போன்று வெயிலில் உலர்த்தி எடுப்பார்கள்.

பின்னர் இதனைச் சிறுசிறு துண்டுகளாக உடைத்துச் சாப்பிடுவார்கள். சிலர் இதனை நெருப்புத்தணலில் வாட்டி அதனை உட்கொள்வார்கள். இப்பழக்கம் இக்காலத்தில் மிகவும் அருகிவிட்டது எனினும், கடந்த பத்தாண்டுகள்வரை இப்பழக்கம் கிராமங்களில் பயிலப்பட்டு வந்துள்ளது.
இது, இரும்புச்சத்துக் குறைபாட்டை உண்டாக்கக்கூடிய தொற்றுகளை ஏற்படுத்தக்கூடியது என்ற விழிப்புணர்வின் பின்னர் இவ்வழக்கம் நீங்கியுள்ளது. இதேபோன்ற மண் உண்ணும் வழக்கம், பல ஆபிரிக்க நாடுகளிலும் தற்காலத்தில் புழக்கத்தில் இருக்கின்றது. அவர்கள் மண்ணுடன் கொழுப்பு மற்றும் உப்புச் சேர்த்து இதனைத் தயாரிக்கின்றனர்.
தலைப்பிள்ளைச் செப்பு
திருமணமான பெண் முதலாவது கர்ப்பம் தரித்து ஆறு மாதங்களின் பின்னர், அவருக்கு மாப்பிள்ளையின் வீட்டிலிருந்து சீர்களைக் கொண்டுசெல்வார்கள் இது ‘தலைப்பிள்ளைச் செப்பு’ என்று அழைக்கப்படுகின்றது.
இதற்காகக் கொழுக்கட்டை (Dumpling), லவரி, முதலிய ஆவியில் வெந்த பண்டங்களை எடுத்துச் செல்வார்கள். சீர்களில், கர்ப்பிணிக்கு விருப்பமான உணவுப்பண்டங்களுடன் பழங்களும் காணப்படும். இவற்றில் ‘பிள்ளைக்கொழுக்கட்டை’ என ஒரு கொழுக்கட்டையும் எடுத்துச் செல்லப்படும். அது ஒரு பெரிய கொழுக்கட்டையினுள், இன்னுமொரு சிறிய கொழுக்கட்டையை வைத்து, அவித்துச் செய்யப்பட்டிருக்கும். இதன்போது ஒற்றைப்படையான எண்ணிக்கையைப் பேணிக்கொள்வார்கள். பண்டங்கள், பழங்கள், செப்புப் பெட்டிகள் அனைத்தும் ஒற்றைப்படையாகக் காணப்படும்.
பிள்ளைப்பேறு
மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்திற்கு முன்னர், பிள்ளைப்பேறு வீடுகளிலேயே நடைபெற்றது. அனுபவம்மிக்க பரம்பரைபரம்பரையாகப் பயிற்றுவிக்கப்பட்ட பெண்களே பிரசவம் பார்த்தனர். 1980களின் இறுதிப்பகுதிவரை இந்நடைமுறை முஸ்லிம் கிராமங்களில் பயிலப்பட்டே வந்துள்ளது. மருத்துவிச்சிமார் பிள்ளைப்பேறு, பிரசவம் பார்த்தல், காது குத்துதல், ஏழாம்நாள் மற்றும் நாற்பதாம்நாள் முடியிறக்குதல் போன்ற பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரத்தியேகமான தேவைகளை நிறைவேற்றினர். இதற்காக அவர்களுக்குக் காணிக்கைகளும் வழங்கப்படுவதுண்டு. இவர்களை பண்டைய மகப்பேற்று நிபுணர்களாகக் குறிப்பிடுவதில் எந்தக்குறையும் இருக்காது. இவர்களின் பங்கு சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்டது. பெரும்பாலும் மருத்துவிச்சிகளாக, பரிச்சயம்பெற்ற மூதாட்டிகளே காணப்பட்டனர்.
அயலிலுள்ள பெண்களும், சொந்தக்காரப் பெண்களும் அழைக்கப்படுவார்கள். பிரசவிக்கும் பெண்ணைச்சுற்றி திரைச்சீலை கட்டப்படும். கர்ப்பிணித்தாய்மார்களின் பிள்ளைப்பேற்றைத் தூண்டுவதற்காகக் குளுமக்காயம் என்றழைக்கப்பட்ட மருந்துக்கலவையிலான கவளம், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஊட்டப்பட்டது. வேர்க்கொம்பு, வசம்பு, கடுகு, வெள்ளைப்பூடு, முருங்கைப்பட்டை, பெருங்காயம் ஆகிய பதார்த்தங்களைக் காயவைத்து, இடித்து, வேலிப்பருத்திச்சாற்றோடு அம்மியில் அரைத்து, உருட்டி உலர்த்தப்பட்டு, இக்கவளம் தயாரிக்கப்பட்டது. இது குமட்டலை ஏற்படுத்தக்கூடியது (Shamsedene A.T. 1888:18) என்பதோடு, தொப்புள்கொடி இலகுவாகக் கர்ப்பப்பையிலிருந்து கழன்றுவருவதற்கு உதவக்கூடியது. மருத்துவிச்சிகள் தொப்புள்கொடியை அறுத்துவிடும் பொழுது ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறில்லை) என்று உச்சரிப்பார்கள். பிறந்த குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் ஏழு முறையும், பெண்குழந்தையாக இருந்தால் ஒன்பது முறையும் உச்சரிப்பார்கள். இவ்வேளையில் வீட்டில் கூடியிருக்கும் உறவினர்கள் ஒரு தட்டத்தில் நாணயங்களையும் பணமுடிச்சுகளையும் போடுவார்கள். இதனை மருத்துவிச்சிக்கு அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.
பிரசவம் முடிந்தபின்னர் தாயின் தலையில் ஒரு கட்டும், இடுப்பில் ஒரு கட்டும் போடுவார்கள். கெட்டசக்திகள் பிள்ளையையும் தாயையும் அண்டாமல் இருக்கவேண்டும் என்பதற்காகப் படுக்கையைச்சூழ லாடம், பாக்குவெட்டி, ஆணிகள் போன்ற இரும்புப்பொருட்களையும் தும்புத்தடி, செருப்புப் போன்றவற்றையும் வைப்பார்கள். நாற்பதுநாட்கள் வரும்வரையும் இதைக்கடைப்பிடிப்பார்கள்.
பிள்ளை பிறந்ததும் மருத்துவிச்சிகள் பிள்ளையைத் துடைத்து தகப்பனின் கையில் கொடுப்பார்கள். தகப்பனார் பிள்ளையின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தபின் வலது காதில் அரபியில் அதான் (பாங்கு) சொல்வார்:
“அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
ஹய்ய அலஸ்ஸலாஹ் ஹய்ய அலஸ்ஸலாஹ்
ஹய்ய அலல்ஃபலாஹ் ஹய்ய அலல்ஃபலாஹ்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
லா இலாஹ அல்லாஹு”
“அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன் – 2
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன் – 2
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி பகர்கிறேன் – 2
தொழுகையின்பால் வாருங்கள் – 2
வெற்றியின்பால் வாருங்கள் – 2
அல்லாஹ் மிகப் பெரியவன் – 2
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை”
பின்னர் இடது காதில் இகாமத் சொல்வார்:
“அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லல்லாஹ்
ஹய்ய அலஸ்ஸலாஹ் ஹய்ய அலல் பலாஹ்
கத் காமதிஸ் ஸலாஹ் கத் காமதிஸ் ஸலாஹ்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
லாஇலாஹ இல்லல்லாஹ்”
பாங்கு மற்றும் இகாமத் சொல்வதை குழந்தையின் தந்தை அல்லது குடும்பப் பெரியவர் ஒருவர் சொல்வார். இதன்பின்னர் மருத்துவிச்சி கவிவாழ்த்தைப் பாடி அன்பளிப்பைப் பெற்றுச் செல்வார். வீட்டுவாசலில் பத்திரக்கொத்துக் கட்டப்படும்.
தஹ்னீக்
குழந்தைக்கு முதலாவது பாலூட்டுவதற்கு முன்னர், மெல்லப்பட்ட பேரீச்சம்பழத்தின் சிறிதளவை மேலண்ணத்தில் தடவி விடுவார்கள் அது கிடைக்காதபட்சத்தில் தேன் ஒரு துளி வைக்கப்படும். இதனைக் குடும்பத்தில் மதிப்புமிக்க ஒரு பெரியவர் செய்வார். இதன்மூலம் அவரின் நற்குணங்கள் குழந்தையை அடையும் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.
குழந்தை பிறந்ததும் உறவினர்களுக்கு அறிவிக்கும்பொருட்டு குழந்தையின் தகப்பனும், மைத்துனரும் கற்கண்டு, உலர்ந்த திராட்சை, இனிப்புகள் அடங்கிய சிறிய பொதிகளை வீடுவீடாக வழங்கி வருவார்கள். இந்நடைமுறை தற்காலத்தில் வெகுவாக அருகி வருகின்றது.
கண்ணூறு கழித்தல்
குழந்தைகளிலிருந்து தீயபார்வைகளை விலக்க, அரிசி மையினால் கறுப்புப் புள்ளியொன்று கன்னத்தில் இடப்படும். அல்லது கறுப்புநிற நூல் ஒன்று கைகளில் அல்லது கழுத்தில் கட்டிவிடப்படும். கெட்டசக்திகள், கண்ணூறு என்பவற்றின் விளைவைத்தடுக்க தாய்மாமனால் பின்னப்பட்ட ஏழு நிற நூல்களைக் குழந்தைக்கு அணிவிப்பார்கள். இது மாமநூல் என அழைக்கப்பட்டது. சிலர் அச்சிரம் ஓதி ஈடுப்பில் அரைஞாண்கொடி கட்டுவார்கள். இதில் கறுப்புநிற நாடவும், மெழுகுசீலையில் ஓதி எழுதப்பட்ட அட்சரங்களும் காணப்படும்.
பத்தியம்
பிரசவத்தின் பின்னர், பிரசவவலியைக் குறைக்க கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திராட்சை ரசம் அல்லது வெள்ளைச்சாராயம் அருந்தக்கொடுக்கும் வழக்கமும் காணப்பட்டு வந்துள்ளது. பிள்ளைபெற்ற தாய்மாருக்கு, கோழிக்குஞ்சு அல்லது நாட்டுக்கோழியை வாசனைத்திரவியங்கள் சேர்த்து அவித்தெடுத்த பானமும் வழங்கப்படும். இதனை விறாத்து (Broth) என்பார்கள்.
பெண்கள் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்படுவார்கள். அவர்கள் சிலநாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியில் செல்லமாட்டார்கள். முதல் மூன்று நாட்களுக்கு மென்மையான உணவுகள் பரிமாறப்படும். வெள்ளைப்பூண்டு, கருவாடு, வெந்தயம் சேர்த்து மிளகாணம் காய்ச்சிக் கொடுக்கப்படும். இது கிழக்கில் பிரபல்யமான பத்திய உணவாகும். இதற்காக விரால், கணையான், சுங்கான் போன்ற நன்னீர்மீன்களின் கருவாடுகள் பயன்படும்.
பிரசவத்தின் பின்னர் தாய்ப்பால் சுரப்பதற்காக பாலாணம் கொண்ட கறிகளும், பொன்னாங்கன்னி உள்ளிட்ட இலைக்கறிவகைகளும், கடல்மீன்களில் பாற்சுறா, பத்தியமீன் என்பனவும் சமைக்கப்படுவதுண்டு. பாலூட்டும்காலம் முடிவடையும்வரை பிள்ளைக்கு அஜீரணம் ஏற்படுத்தக்கூடிய உணவுகளைத் தாய் தவிர்த்துவரப் பணிக்கப்படுவதுண்டு. பலாப்பழம், பாலைப்பழம், பப்பாசிக்காய் போன்றவற்றைத் தவிர்த்து வருவார்கள்.
ஏழாம் நாள் முடி இறக்குதல்
குழந்தை பிறந்து ஏழாவது நாள் ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும் தலைமுடி முற்றாக மழிக்கப்படும். இதற்காக குடும்ப மருத்துவிச்சிகள் அழைக்கப்பட்டு, அவர்களே குழந்தைகளுக்கு முடி இறக்கி, பக்குவமாக நீராட்டிப் புத்தாடை அணிவித்து, தாயிடம் கொடுப்பார்கள். மருத்துவிச்சிக்கு அன்பளிப்பாகப் புதிய ஆடையும் பணமும் கொடுப்பார்கள்.
குழந்தையின் மழிக்கப்பட்ட முடியைச் சேகரித்து, அதனை நிறுத்து, அதன் நிறைக்குச் சமனான தங்கத்தை அல்லது அதன் பெறுமதியை ஏழைகளுக்குக் கொடுப்பார்கள். அதன்பின்னர் குழந்தைக்குப் பெயர் சூட்டுவார்கள். மழிக்கப்பட்ட முடியினை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி ஆறு அல்லது ஓடும்நீரில் போட்டுவிடுவார்கள்.
பெயர்சூட்டுதல்
குடும்பப் பெரியவர் ஒருவர் அல்லது ஆலீம் ஒருவரால் பெயரின் பொருளும், பெயரும் சபையில் கூறப்பட்டு பிள்ளையின் வலதுகாதில் சலாம் சொல்லப்பட்டு, பெயர் மூன்றுமுறை உச்சரிக்கப்படும். அதன்பின்னர் உறவினர்கள் குழந்தையைப் பெயர்சொல்லி அழைக்கத்தொடங்குவார்கள்.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் ஆட்பெயர்கள் தொடர்பாக மக்கட்பெயராய்வு என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
அகீகா விருந்து
குழந்தை பிறந்ததும், அக்குழந்தையின் பெயரால் ஏழாம் நாள் ஆடு அறுத்துக் கொடுப்பது வழக்கமாக இருக்கின்றது. ஆண் குழந்தை என்றால் ஒரு வயது பூர்த்தியான இரண்டு ஆண் ஆடுகளும், பெண் பிள்ளையாக இருந்தால் ஒரு வயது பூர்த்தியான ஒரு ஆண் ஆடும் அறுத்துக் கொடுக்கப்படும். ஏழாம் நாள் கொடுக்கமுடியாவிட்டால் 14, 21 ஆம் நாட்களிலும் அல்லது பராயமடைவதற்கு முன்னர் ஒரு நாளிலும் கொடுக்கலாம். இதற்காகத் தெரிவுசெய்யப்படும் ஆடுகள் நோயற்றவையாகவும், அங்கவீனமற்றவையாகவும் இருக்கவேண்டும். அவற்றின் உடலில் காயங்கள், தழும்புகள், குறிகள் என்பவை இருக்கக்கூடாது. அறுக்கப்பட்ட ஆட்டின்தோல் நீக்கப்பட்டு இறைச்சி வெட்டி எடுக்கப்படும். இதன்போது என்புகள் உடையதாவண்ணம் இறைச்சியைப் பிரித்தெடுக்க வேண்டும் என்றும் சொல்வதுண்டு.
அகீகாவாக அறுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை உற்றார், உறவினர்களுடன் பகிர்வார்கள். அல்லது அவ்விறைச்சியைப் பிரியாணியாகச் சமைத்து, அவர்களை அழைத்து விருந்து வைப்பார்கள். இரண்டுநடைமுறைகளும் வழக்கத்தில் உள்ளன.
நாற்பதாம் நாள் முடி இறக்குதல்
பிள்ளை பிறந்து நாற்பதாம் நாள் முடி இறக்குதல் ஒரு வைபவமாகவே நடைபெறும். தாய் புதிய ஆடைகள் அணிந்து கொள்வார். பிள்ளைக்கு மருத்துவிச்சியினால் முடி இறக்கி, உடல் கழுவி, புத்தாடைகள் அணிவிக்கப்படும். கழன்று விழுந்த தொப்புள்கொடி மற்றும் முடி என்பன புதைக்கப்படும். இத்தினத்தில் மாமியார், மதினிமார்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்படும்.
பெண்பிள்ளைகளாக இருந்தால் காது குத்துவதும், ஆண்பிள்ளைகளாக இருந்தால் சுன்னத் செய்வதும் இதேநாளில் இடம்பெறும். ஆரம்பகாலங்களில் ஆண்பிள்ளைகளுக்கு 6 – 8 வயதில் சுன்னத் செய்யப்படுவதுண்டு. அது ஒரு திருமண விழாபோலக் கொண்டாடப்படும். காதுகுத்தலை மருத்துவிச்சிகளே செய்வார்கள். தற்காலத்தில் வைத்தியர்களிடம் செல்வதுண்டு. பிள்ளையும் தாயும் நாற்பதுநாள் முடியும்வரை வீட்டைவிட்டு வெளியேறாமல் இருக்கச் சொல்வார்கள்.
அன்றையகாலங்களில் நாற்பதாம்நாள் நெருங்கிய உறவினர்கள் அழைக்கப்பட்டு விருந்து பரிமாறப்படும். அன்று மாலை நிய்யத் சோறு சமைக்கப்பட்டு பள்ளிவாசல் லெப்பை முஅத்தின் ஆகியோரை அழைத்து தலைப்பாத்திஹா ஓதுவார்கள். அதன்பின்னர் ஆலிம், பிள்ளையின் பெயரைச்சொல்லி அழைத்து மீண்டும் காதில் அதானும் இகாமத்தும் சொல்வார். அதன்பின்னர் உறவினர்கள் அனைவரும் பிள்ளைக்குத் தங்க ஆபரணங்கள், பணம், பொருட்களை அன்பளிப்பாக வழங்குவார்கள். பெண்பிள்ளைகளுக்கு தங்கத்தினாலான அரைமூடியுடன் அறுநாக்கயிறும், ஆண்பிள்ளைகளுக்கு வெள்ளி அறுநாக்கயிறுடன் தம்பித்துணையன் – குஞ்சுபிடி மாங்காயும் அணிவிக்கப்படும்.


பிள்ளைக்கு முதலாவது உணவு ஊட்டுதல் ஆறுமாதத்தில் இடம்பெறும். முதலாவதாக ஸம் ஸம் தண்ணீரும், பின்னர் பாலில் மசிக்கப்பட்ட சிறுதளவு சோறும் ஊட்டப்படும். பின்னர் பழச்சாறும், கஞ்சி வடித்த நீரும் ஊட்டப்படும்.
பிள்ளைக்குப் பல் முளைத்ததும் அடுத்த வைபவமாக பல்லுக்கொழுக்கொட்டை சொரிதல் நடைபெறும். உறவினர்கள், அயலவர்களின் சிறிய பிள்ளைகள் இவ்வைபவத்திற்கு அழைக்கப்படுவார்கள். இது முற்றிலும் சிறுவர்களுக்கான வைபவமாகவே நடாத்தப்படும்.
பல்முளைத்த குழந்தை உண்ணுவதற்கு ஏற்றவகையில் சிறியசிறிய கொழுக்கட்டைகள் அரிசி மாவினால் பல வண்ணங்களில் அவித்தெடுக்கப்படும். பல்லிமிட்டாய், கற்கண்டு, உலர்ந்த திராட்சைகள், இனிப்புகள் போன்றவை தயார் செய்யப்படும். அவற்றோடு அரிசிமா ரொட்டியும் சுட்டெடுப்பார்கள்.

மாலைவேளைகளிலேயே இது நடைபெறும் சிறுவர்கள் அனைவரையும் ஒரு பாயில் வட்டமாக அமரவைப்பார்கள். நடுவில் வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு அதில் முதற்பல் முளைத்த குழந்தை உட்காரவைக்கப்படும். பின்னர் இன்னமொரு வெள்ளைத்துணியால் பிள்ளையை மூடி பிள்ளையின் தலையின்மீது ஒவ்வொரு பண்டமாக தாய், தந்தை, உறவினர்கள் ஆகியோர் ஒவ்வொருவராகச் சொரிவார்கள். இறுதியாகச் சில்லறை நாணயக்குற்றிகளையும் சொரிவார்கள். சூழ அமர்ந்திருக்கும் சிறுவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு நாணயங்களையும், இனிப்புகளையும் இரு கைகள் நிறையும்மட்டும் சேகரித்துக்கொள்வார்கள்.

இதன்பின்னர் எஞ்சிய கொழுக்கட்டைகள் அனைவருக்கும் பரிமாறப்படும். அரிசிமா ரொட்டியைக் கைகளினால் உடைத்து வெள்ளைச்சீலை விரிக்கப்பட்ட சுளகில் வைத்து அதனை பிள்ளையின் தலையை மூன்றுமுறை சுற்றி, வாயிலுக்கு வந்து அனைவருக்கும் பகிர்வார்கள். இந்நடைமுறை தற்காலத்தில் இன்னும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
இவ்வாறு கீழைக்கரை முஸ்லிம்களின் பிள்ளைப்பேறு, குழந்தைகள்சார் பண்பாட்டசைவுகள் தனித்துவமானவையாக, பிரதேசச் சிறப்பியல்புகளுடன் காணப்படுகின்றன. இவற்றை இன்னும் மீ-நுணுக்கமாகப் பதிவுசெய்து, பகுப்பாய்வு செய்யவேண்டியுள்ளது.