இந்தியா – இலங்கை ஒப்பந்தம்: தோல்வியடைந்த ஒப்பந்தமும் கற்றுக்கொள்ளாத பாடமும்
slide-1
slide-2
slide-3
previous arrow
next arrow
Arts
29 நிமிட வாசிப்பு

இந்தியா – இலங்கை ஒப்பந்தம்: தோல்வியடைந்த ஒப்பந்தமும் கற்றுக்கொள்ளாத பாடமும்

April 17, 2025 | Ezhuna

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.  நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூலங்களைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றுள் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில், ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள நூல்களையும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நூல்களையும் மதிப்பிடுவதன் மூலம் நடேசய்யரின் பங்களிப்புகளையும், அவர் காலத்து சமூக, அரசியல் அசைவையும் கண்டுகொள்ளவும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் நிலவும் இடைவெளியை நிரப்பவும் எதிர்கால ஆய்வுகளுக்கான திசைகாட்டல்களை வழங்கவும் ‘கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை’ எனும் இத் தொடர் எழுதப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியலின் வெளிநாட்டு உறவில் இந்தியா தலையான இடத்தினை வகித்துள்ளது. இலங்கையில் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் குடியேறியிருந்த இந்தியரின் அந்தஸ்து மற்றும் உரிமைகள் தொடர்பான உரையாடல்கள் அதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தன. இலங்கையின் பெருந்தோட்டங்களிலும் அரச மற்றும் தனியார் துறைகளிலும் 19 ஆம் நூற்றாண்டு முதல் தொழில்புரிந்து வந்த இந்தியரின் சனத்தொகைப் பெருக்கமும் அரசியல் பங்குபற்றலும் சுதேசிய ஆட்சியாளர்களிடையே அதிருப்திகளைத் தோற்றுவித்தன. அதனால் அவ்வாறு குடியேறியவர்களை அந்நியராக அடையாளப்படுத்திய அவர்கள், அம்மக்களை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளையும், புதிதாக இலங்கைக்கு வருபவர்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளையும் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கத் தொடங்கினர். அம்முன்னெடுப்புகள் இலங்கை – இந்திய அரசியலை நேரடியாகப் பிணைத்தன.

இலங்கை அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் இலங்கைவாழ் இந்தியர் தொடர்பிலான உரையாடல்கள் மிகுந்த கவனத்துக்கு உரியதாக விளங்கிவந்துள்ளன. இந்திய அரசுக்கு இலங்கைவாழ் இந்தியர் பிரச்சினையானது, இலங்கையுடன் மட்டும் மட்டுப்பட்ட விடயமாக அமையவில்லை. மலேயா, தென்னாபிரிக்கா, பீஜி, கயானா முதலான பல நாடுகளுக்கும் குடிபெயர்ந்த இந்தியருடன் தொடர்புடையதாக அப்பிரச்சினை விளங்கியுள்ளது. அதனால் இலங்கையில் வாழும் இந்தியர் தொடர்பில் இந்தியா உருவாக்கும் கொள்கைகளும் சட்டங்களும் இந்தியர் வாழும் ஏனைய நாடுகளையும் கவனத்தில் கொண்டவையாக அமைந்தன.

பெருந்தொகையான இந்தியர் இலங்கையில் குடியேறியமை இலங்கையின் குடித்தொகை கட்டமைவிலும், அரசியல் நடைமுறைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. “இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் இந்தியத் தொழிலாளரின் இலங்கை வருகையைப் போல வேறு எந்த நிகழ்வுகளும் நாட்டின் அரசியலில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை” (Jayasinghe, 2006, The Indo – Ceylon Problem: The Politics of Immigrant Labour: 03) எனக் கணிப்பிடும் அளவுக்கு அவர்களின் குடிவருகை தாக்கம் செலுத்தியுள்ளது. இலங்கையில் இந்தியர் குடியேறிய தொடக்ககாலத்தில் இரு நாட்டு அரசுகளுக்கு இடையே அரசியல் நெருக்கடிகள் தோற்றம்பெறவில்லை. நீண்டகாலமாக இலங்கைவாழ் இந்தியர் எவ்வித அரசியல் உரிமைகளுமற்ற நிலையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். பெருந்தொகையான இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டிருந்த பெருந்தோட்டங்கள் சிங்களக் கிராமங்களுடன் தொடர்பற்றவகையில், சிங்களவர்களது சமூக, அரசியல் வாழ்வுடன் சம்பந்தப்படாத வகையில் இயங்கியுள்ளன. நாட்டின் அரசியலில் சுதேசியரின் ஆதிக்கம், பங்கேற்பு முதலியன குறைந்த மட்டத்திலேயே இருந்துள்ளன. அதனால் இந்தியர் குடியேற்றம் இரு நாடுகளுக்கு இடையே அரசியற் சிக்கல்களை ஏற்படுத்தவில்லை. தோட்டத்தொழிலாளர்கள் மிகமோசமாகச் சுரண்டப்பட்டு, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்ததால் இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தது. அந்த அழுத்தம் காலனிய அரசுக்கும், தோட்ட உடமையாளருக்குமானதாகும். ஆனால், 1920களில் காட்சிகள் மாறத்தொடங்கின. அக்காலம்முதல் சுதேசியரின் அரசியல் ஆதிக்கம் பெருகத் தொடங்கியது; இலங்கைவாழ் இந்தியருக்கும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டன. அக்காலத்திலேயே, 1920களில், இந்திய – இலங்கை உறவு அரசியல் பிரச்சினையாக முகிழ்க்கத் தொடங்கியுள்ளது. டொனமூர் அரசியல் சீர்திருத்தம் (1931), சுதேசியருக்கு ஆட்சியதிகாரத்தில் மிகுதியான பங்கினை வழங்கியபோது, சுதேசிய ஆட்சியாளர்களிடம் இந்தியர் எதிர்ப்பு மிகுதியாக வெளிப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுவரும் இந்தியரை இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டவர்களாகக் கருதுவதா, அவர்களை இலங்கையில் தற்காலிகமாகக் குடியேறியவர்கள் எனக்கொண்டு இந்தியப் பிரஜைகளாகக் கருதுவதா என்பதே இந்திய – இலங்கை அரசியல் உறவின் மையமான பிரச்சினையாக விளங்கியுள்ளது. இலங்கையின் சுதேசிய ஆட்சியாளர்கள், இந்தியர் இலங்கையில் தற்காலிகமாகக் குடியேறியவர்கள் என்ற நிலைப்பாட்டையும் இந்திய அரசினர், இலங்கையில் குடியேறிய இந்தியரை இலங்கையராகக் கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்துள்ளனர். அதனால், அப்பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக இருநாட்டு அரசியல் தலைவர்களுக்கு இடையேயும் இருநாட்டுப் பிரதிநிதிகளுக்கு இடையேயும் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு 1941 ஆம் ஆண்டு இந்திய, இலங்கைப் பிரதிநிதிகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் பற்றியதாக நடேசய்யரின் ‘இந்தியா – இலங்கை ஒப்பந்தம்’ என்ற நூல் அமைந்துள்ளது.

Indo – Ceylon Agreement: with Comments என்ற ஆங்கில உபதலைப்புடன் வெளிவந்துள்ள இச் சிறுநூல், ஹற்றன் கணேஷ் பிரஸினால் 1941 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. நூலின் ஒரு பிரதியினுடைய விலை 25 சதமென நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்நூலை பெ. சரவணகுமார் 2022 ஆம் ஆண்டு மறுபதிப்பாகக் கொண்டுவந்துள்ளார்.

நடேசய்யர் நேரடி அரசியலில் ஈடுபடத்தொடங்கிய காலத்தில் மெல்ல மெல்ல முளைவிடத் தொடங்கிய இந்திய எதிர்ப்பானது, பின்னர் மிகுந்த வளர்ச்சிபெறத் தொடங்கியது. அவர் நேரடி அரசியலில் ஈடுபட்ட கால்நூற்றாண்டு காலத்தில் (1924 – 1947) இந்திய எதிர்ப்பானது, சுதேசிய ஆட்சியாளர்களால் வலுவான சக்தியாகக் கட்டியெழுப்பப்பட்டது. அதனால் நடேசய்யரின் அரசியல் இயக்கம் இந்திய – இலங்கை உறவு, அது தொடர்பிலான சட்டங்கள், ஒப்பந்தங்கள் முதலானவற்றில் மிகுந்த அக்கறைகாட்டி வந்துள்ளது. அந்த அக்கறையின் ஒரு வெளிப்பாடாக இந்நூலைக் கொள்ளலாம்.

இலங்கைவாழ் இந்தியத் தொழிலாளர்களின் எதிர்காலம் இருநாட்டுப் பிரதிநிதிகளால் செய்துகொள்ளப்பட்ட மேற்படி ஒப்பந்தத்தினால் தீர்மானிக்கப்படயிருப்பதால் இலங்கையில் வாழும் இந்தியர் ஒவ்வொருவருக்கும் இந்த ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவமுடையதாக விளங்கியுள்ளது. இலங்கைவாழ் இந்தியரைப் பாரபட்சமாக நடத்துவதிலும், அவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதிலும், புதிதாக இலங்கை வரவிருக்கும் இந்தியரைக் கட்டுப்படுத்துவதிலும் சுதேசிய சிங்கள ஆட்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால், இலங்கைவாழ் இந்தியர் தம் இருப்பை வலுவாக நிலைநிறுத்துவதற்கு இந்த ஒப்பந்த விதிகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதும் அவ்விதிகளுக்கு அமைய செயற்படுவதும் அவசியமானதாக இருந்துள்ளன. அதனைக் கருத்திற்கொண்டே நடேசய்யர், ஒப்பந்தம் தொடர்பான விழிப்புணர்வை இந்நூல்வழி மேற்கொள்ள முனைந்துள்ளார்.

இச்சிறு நூலானது கூட்டு ஒப்பந்த அறிக்கை, வியாக்கியானம் என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. கூட்டு ஒப்பந்த அறிக்கை என அமைந்துள்ள முதற்பாகம், இருநாட்டுப் பிரதிதிகளுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளது. இப்பகுதி இலங்கைக்குள் முதன்முறை வருவதும் திரும்ப வருவதும், கோட்டாக்கள், வாக்குரிமை, பதிவுசெய்தல், அந்தஸ்து, பொதுவிதிகள் எனும் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. வியாக்கியானம் என அமைந்துள்ள இரண்டாம் பகுதி, ஒப்பந்தத்தின் மூலக்கொள்கைகள், இலங்கையர் யார்?, இலங்கை இந்தியர் – புதுப்பேர்வழிகள், பழைய இந்தியர், சில முக்கிய விஷயங்கள் எனும் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இந்த இரண்டாம் பகுதியில் கூட்டு ஒப்பந்த அறிக்கையின் விதிகள் குறித்த வியாக்கியானங்களையும் விமர்சனங்களையும் நடேசய்யர் முன்வைத்துள்ளார்.

இலங்கைவாழ் இந்தியரின் அந்தஸ்து, அவர்களின் அரசியல் – பொருளாதார உரிமைகள் தொடர்பில், இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய தேவை 1930களின் இறுதியில் ஏற்பட்டது எனலாம். இலங்கைவாழ் இந்தியருக்கு எதிரான நிலைப்பாட்டைச் சுதேசிய சிங்கள் ஆட்சியாளர்கள் 1920கள் முதலே வெவ்வேறு தளங்களில் முன்னெடுக்கத் தொடங்கினர். இந்தியரின் சனத்தொகைப் பெருக்கம், அரசு மற்றும் தனியார்துறைகளில் அவர்கள் வகித்துவந்த தொழில்கள் ஆகியன சுதேசிய சிங்கள ஆட்சியாளர்களின் வெளிப்படையான குரோதத்துக்குக் காரணமாக அமைந்தன. 1920களின் பிற்பகுதியிலிருந்து அதிகரிக்கத் தொடங்கிய இலங்கைமயமாக்கல் செயற்பாடு, உலகப் பொருளாதாரப் பெருமந்தம், உலகமகா யுத்தம் முதலானவை சுதேசிய சிங்கள ஆட்சியாளர்களின் இந்தியர் எதிர்ப்பை மேலும் மிகுவித்தன.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலப்பகுதி வரையான இந்திய – இலங்கை உறவுகளை ஆழமாக ஆராய்ந்துள்ள எஸ்.யு. கொடிகார (S.U. Kodikara), இந்திய – இலங்கை உறவு சிக்கலுக்குரியதாக மாறியதில், இலங்கையில் 1931 இல் புதிய அரசியல் சீர்திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்குக் காலனிய அரசு எடுத்த முடிவிலிருந்து எழுந்த பிரச்சினைகள், 1930களின் தொடக்கத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பெருமந்தத்திலிருந்து எழுந்த பிரச்சினைகள் ஆகியனவும், இந்தியக் குடியேற்றம் தொடர்பிலான இலங்கையரின் மனப்பான்மையில் அவை ஏற்படுத்திய தாக்கமும் காரணமாக அமைந்தன என்பார் (Indo – Ceylon Relations Since Independence, 1965: 74). இவற்றினை அரசியல் தளத்தில்நின்றும், பொருளியல் தளத்தில்நின்றும் கொடிகார விரிவாக ஆராய்ந்துள்ளபோதிலும் சில விடயங்களை வெளிப்படையாக விவாதிப்பதில் அவர் தயக்கம் காட்டியுள்ளதை – தவிர்த்துள்ளதைக் கண்டுகொள்ள முடிகிறது. அவ்வாறு அவர் தவிர்த்த விடயங்களை நடேசய்யர் வெளிப்படையாகப் போட்டுடைத்திருக்கிறார். சான்றாக,

“அரசியல் அதிகாரம் சிங்களச் சகோதரர்களுக்குக் கிடைத்த உடனே, அவ்வதிகாரத்தைத் தங்களுக்குச் சாதகமாய் உபயோகித்துக்கொள்ள முற்பட்டார்கள். வியாபாரமெல்லாம் அந்நியர் கையில் இருப்பதைக் கண்டார்கள். காணிகளில் பெரும்பாகம் அந்நியர் கையில் இருக்கக் கண்டார்கள். வியாபாரத்திலும் இதர தொழில்களிலும் வேலை செய்பவர்கள் இந்தியர்கள் என்பதைக் கண்டார்கள். இந்தியர்கள் இந்நாட்டில் இல்லாவிட்டால் தங்களிடமே எல்லாக் காணிகளும் வியாபாரங்களும் தொழில்களும் இருக்கும் எனக் கருதினார்கள்… இக்கிளர்ச்சியால் தங்களுக்கு அரசியல் அதிகாரம் நிரந்தரமாயிருக்கும் என்பதைக் கண்டார்கள். ஆகவே, இந்தியர்களுக்கு விரோதமான கிளர்ச்சி 10 – 12 வருஷங்களுக்கு முன்தான் கிளம்பியது. இந்தியத் துவேஷத்தைப் பரப்பப் பலர் முன்வந்தார்கள். இந்தப்போக்கை கவனித்து மந்திரிகளும் இலங்கையர்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் கற்பிக்கத் தலைப்பட்டார்கள்”

என்ற விபரிப்பு, இலங்கை – இந்திய உறவில் நெருக்கடிகளைத் தோற்றுவித்த காரணிகளைச் சுருக்கமாகவும் செறிவாகவும் எடுத்துரைத்துள்ளதைக் காணலாம். கொடிகார இலங்கையர் தளத்தில்நின்று இந்திய – இலங்கை உறவை ஆராய்ந்துள்ளமையால் அவரின் முடிவுகளில் இலங்கைச்சார்பு உள்ளுறைந்திருப்பதைக் கண்டுகொள்ள முடிகிறது. இதனை இன்னொரு சான்றின் மூலமும் நிரூபிக்கலாம். தொடக்ககாலத்தில் இலங்கையில் குடியேறிய இந்தியர்களைப் போல அண்மைக்காலத்தில் (காலனியக் காலம்) குடியேறியவர்கள் நாட்டின் நிரந்தரப் பிரஜைகளுடன் ஒருங்கிணையவில்லை எனக்கூறும் அவர், அதற்கான காரணங்களாகப் பின்வரும் மூன்றினைக் குறிப்பிட்டுள்ளார்:

  1. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெருந்தோட்ட எல்லைக்குள் சிங்களக் கிராமங்களின் தொடர்பற்றும், இலங்கையின் அரசியல், சமூக வாழ்வில் பங்குபற்றாமலும் தனித்து வாழ்கின்றமை.
  2. தொடக்ககாலம் முதலே தோட்டங்களுக்குத் தேவையான அளவு தொழிலாளர்களே தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டனர். வேலை குறைவான காலங்களில் அத்தொழிலாளர்கள் தம் கிராமங்களுக்குத் திரும்பச் செல்வதற்கு ஊக்குவிக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் தம் இந்தியக் கிராமங்களுடன் தொடர்புகளைப் பேணினர்.
  3. இந்துக் கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் பழக்கவழக்கங்களின் காரணமாக, இந்தியர் இந்தியாவிலுள்ள குடும்பத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனர். சொத்துப் பற்றிய கொள்கையால், மையக் குடும்பத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர். அதனால் வெளிநாட்டில் தங்குவது அவர்களுக்கு ஒரு தற்காலிக நிகழ்வாகும் (1965: 73,74).

இம்மூன்று காரணிகளையும் ஆராய்ந்து பார்க்கின்றபோது, முதலாவது காரணி மட்டுமே இலங்கை மக்களுடன் ஒருங்கிணைவை ஏற்படுத்துவதில் எதிர்நிலையான தாக்கத்தை மிகுதியாக ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, இலங்கையில் நிலையாக வாழ்ந்துவரும் இந்தியரின் எண்ணிக்கை காலத்துக்குக்காலம் அதிகரித்துச் சென்றமையும், இலங்கையில் குடியேறிய தோட்டத்தொழிலாளர்களுள் அநேகர் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலிருந்தமையும், ஏனைய இரு காரணிகளும் தாக்ககரமான பாதிப்பினைச் செலுத்தியுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு இட்டுச் செல்கின்றன. கொடிகார இலங்கைவாழ் இந்தியர் இலங்கையில் நிலைகுடியாக வாழவில்லை என்பதை நியாயப்படுத்துவதற்கு மேற்படி காரணிகளை வலிந்து திணித்துள்ளார் என எண்ணத் தோன்றுகிறது.

இலங்கையில் இந்தியர் எதிர்ப்பு வளர்ச்சிபெற்ற பின்னணியை வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, டி.எஸ். சேனாநாயக்க 1926 ஆம் ஆண்டிலேயே, “சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஆட்சேர்ப்பு முகவர்களுக்குக் குறைந்தளவிலான ஊக்கத்தொகைகள் வழங்கப்படாவிட்டால், இலங்கை விரைவில் தொழில்திறனற்ற இந்தியத் தொழிலாளர்களால் முழ்கடிக்கப்பட்டுவிடும். கட்டுப்பாடற்ற வகையில் இந்தியாவிலிருந்து குடிவருகின்றமையானது சம்பள விகிதங்கள், சுதேசியரின் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மட்டுமல்ல, தேவையான புலம்பெயர் தொழிலாளர்களையும்கூட மோசமாகப் பாதிக்கும்” (மேற்கோள்: மேலது: 201) எனத் தன் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இடதுசாரி அரசியலை முன்னெடுத்த ஏ.இ. குணசிங்க, துறைமுகத் தொழிலாளர் இயக்கத்தின் மூலம், துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணிகளில் இருபத்தைந்து விகிதத்தை இலங்கையருக்கு ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை 1928 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். 1929 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புகையிரத விதிகள் மாற்றத்தின்படி, ரயில்நிலையத் தொழில்களில், தேவையான இலங்கையர் இல்லாத பட்சத்திலேயே பிறருக்கு (இந்தியருக்கு) தொழில் வழங்கலாம் என்ற விதி கொண்டுவரப்படுகிறது. சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டபோது (1931) இலங்கைவாழ் இந்தியருக்குச் சிறப்பு விதிகள் உருவாக்கப்பட்டு, கட்டுப்பாடற்ற வகையில் அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தவிர்க்கப்பட்டது. 1933 ஆம் ஆண்டுக்குரிய அரசாங்க சேவைச் சுற்றறிக்கையொன்று, அரசாங்கச் சேவைப் பணிகளில் இலங்கையர் கிடைக்கின்ற பட்சத்தில், இலங்கையரல்லாதவரைப் பணியிலமர்த்தக்கூடாது என்ற விதியைப் பிறப்பித்தது.

1935 ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்தச் சட்டம், இலங்கைவாழ் இந்தியர் நிலம் வாங்குவதில் தடையை ஏற்படுத்தியது. கிராம சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி (1937) தோட்டத்தொழிலாளருக்குக் கிராம சபைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இத்தகைய பாரபட்சத்தின் உச்சமாக 1939 ஆம் ஆண்டு நாட்சம்பளத்துக்கு அரசாங்கத்துறைகளில் பணியாற்றிய 4000 இந்தியர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். அத்துடன் இலங்கையரல்லாத நாட்சம்பள அரசாங்க ஊழியருக்கான ஓய்வூதியத் திட்டம் (1939) கொண்டுவரப்பட்டது. அதனால் இந்தியர் பலர் (ஏறக்குறைய 2500 பேர்) ஓய்வூதியம் பெற்றுப் பணியிலிருந்து நீங்கியுள்ளனர். இத்தகைய பாரபட்சங்களுக்கான – இந்திய எதிர்ப்புச் செயற்பாடுகளுக்கான எதிர்வினையாக, தொழில்திறனற்றோர் இலங்கைக்குக் குடிபெயர்வதை இந்திய அரசு தடை செய்ததுடன், இலங்கையுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான முன்னைய இந்திய வாய்ப்பைத் திரும்பப் பெற்றது. இருந்தபோதிலும் இந்தியருக்கு எதிரான செயற்பாடுகளைச் சுதேசிய சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கலாயினர்.

1940 இல் கொணடுவரப்பட்ட மீன்பிடிச் சட்டம் இலங்கையரல்லாதவர் மீன் பிடிப்பதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது. அதனால் நீண்ட காலமாக இலங்கையில் மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு வந்த இந்தியர் பாதிப்புற்றனர். வாக்காளர் பதிவிலும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவந்தனர். இலங்கைவாழ் இந்தியரை வாக்காளர் பட்டியலில் பதிவதற்கு ஆவணங்கள் மட்டும்போதாது அவர்களை நேரடியாக அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என்ற நடைமுறையை 1940 ஆம் ஆண்டு கொண்டுவந்தனர். அதனால் 1939 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட இலங்கைவாழ் இந்தியர் வாக்காளர் தொகை, 1941 ஆம் ஆண்டு கணிசமாகக் குறைந்தது.

“சிங்களத் தலைவர்கள் இந்தியாவிலிருந்து சுதந்திரமாகக் குடியேறியதால்தான் இலங்கையில் வேலையின்மை ஏற்பட்டதாக உறுதியாக நம்பினர். அதனால் முப்பதுகள் முழுதும் தொழிலாளர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்க சபையில் தொடர்ச்சியாக அழுத்தத்தைப் பிரயோகித்தனர்” (மேலது: 86). அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இலங்கைமயமாக்கம் என்பது இந்தியரை அந்நியப்படுத்தல் என்பதையே மையமிட்டிருந்தது. அதனாலேயே இந்தியர் அதிகமாகப் பணிபுரிந்த அரசாங்கத்துறைகளிலிருந்து அவர்களை வெளியேற்றும் முயற்சிகளைச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொண்டனர். அவர்களின் செயற்பாடுகளால் இந்தியர் ஆதிக்கம் அரசதுறைகளில் கணிசமாகக் குறைந்தது. அரச சேவையில் 1936 ஆம் ஆண்டு 26 விகித இந்தியர் பணியாற்றியுள்ளனர். இத்தொகை 1941 ஆம் ஆண்டு 12 விகிதத்துக்குக் குறைந்துள்ளது. அத்துடன் சுதந்திரமாகக் குடிவருதலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சுதேசிய சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்த வந்தனர். ஆனால், தோட்ட உடைமையாளர் குடிவருகையைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்துக்கு ஆதரவு நல்கவில்லை. இந்நிலையால் கட்டுப்பாடற்ற குடியேற்றத்தால் இலங்கையின் நிரந்தரக்குடிகள் வேலையின்மை அல்லது பிற பொருளாதார இழப்புக்கு உள்ளாகிறார்களா? என்பதை ஆராய்வதற்கு ஜக்சன் என்பார் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை, கட்டுப்பாடற்ற குடியேற்றத்துக்கும் (இந்தியரின்) சுதேசியரின் பொருளாதார இழப்புக்கும் காரணமில்லை என்பதைக் கண்டறிந்ததுடன், தோட்டங்களுக்கு அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தியது. இருந்தபோதிலும் சிங்கள ஆட்சியாளர்கள் தம் இந்தியர் எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. அதனாலேயே இலங்கையரல்லாதவர் இலங்கைக்குக் குடிவருவதைக் கட்டுப்படுத்தும் குடிவரவு மசோதா (1941), இலங்கையர் அல்லாதவர்களைப் பதிவு செய்யும் மசோதா (1941) ஆகியவற்றைக் கொண்டுவந்தனர்.

1939 ஆம் ஆண்டு நாட்சம்பளத்துக்குப் பணியாற்றிய இந்தியரைப் பணியிலிருந்து நீக்கிய பின்னர், நேரு அவர்கள் இந்தியக் காங்கிரஸ் பிரதிநிதியாக இலங்கை வந்து பேச்சுவார்த்தைகளை நிகழ்த்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, இலங்கைவாழ் இந்திய மக்களின் அந்தஸ்து, பொருளாதார – அரசியல் உரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கான மாநாடொன்று 1940 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதுடில்லியில் இலங்கை – இந்திய பிரதிநிதிகளுக்கு இடையே இடம்பெற்றது. இலங்கைவாழ் இந்தியர் தொடர்பில், இருநாடுகளுக்கும் பொதுவான அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஒரு திருப்திகரமான முடிவினை, முறையான பேச்சுவார்த்தையின்மூலம் தீர்த்துக்கொள்வதை இலக்காகக்கொண்டு இந்த மாநாடு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அம்மாநாடு எவ்வித தீர்க்கமான முடிவினையும் அடைவதற்கு வழிசமைக்கவில்லை. இலங்கைப் பிரதிநிதிகள், “இலங்கையின் அன்றைய பொருளாதார நிலைமையின் பின்னணியில் அதிகரித்து வரும் மக்கள்தொகை, வேலையின்மையின் அதிகரிப்பு, வாழ்க்கைத்தர வீழ்ச்சி மற்றும் உலகமா யுத்தத்திற்குப் பின்னரான பொருளாதார மந்தம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கைவாழ் இந்தியர் பிரச்சினைக்கான முடிவுகளை முன்வைக்க முனைந்தனர்” (மேலது: 93). அதன்படி, இலங்கையில் வாழும் சகல இந்தியருக்கும் அரசியல் – பொருளாதார உரிமைகளை வழங்க முடியாது, இலங்கைமீது நிரந்தர அக்கறையுடைய இந்தியருக்கு மட்டும் அவ்வுரிமைகளை வழங்கலாம் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியப் பிரதிநிதிகளோ, “பிரிட்டிஷ் அரசாங்கத்தின்கீழ் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பல ஆண்டுகளாக வாழும் இந்தியர்கள், அந்நாட்டின் பூர்வீக மக்களுடன் சமத்துவத்தைப் பெறுகிறார்கள். சம உரிமைகளைப் பெறுகிறார்கள்” (மேலது: 94) என்ற வாதத்தின் மூலம், இலங்கைவாழ் இந்தியர், இலங்கையருக்கு உரிய சகல உரிமைகளுக்கும் உரித்துடையவர் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். அத்துடன் இலங்கையில் வாழும் இந்தியருக்கான இலங்கைக்குடியுரிமை இலகுவான நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதையும் இந்தியப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இந்த இருதுருவ நிலைப்பாட்டால், அம்மாநாடு தோல்வியில் நிறைவடைந்தது. அதன்பின்னர் 1941 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை இலங்கையில் இடம்பெற்றது. அப்பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளே இந்தியா – இலங்கை கூட்டு அறிக்கை என வெளியிடப்பட்டது.

இந்தியாவில் தோல்விகண்ட பேச்சுவார்த்தை இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணங்களை நடேசய்யர் பின்வருமாறு விளக்கியுரைத்துள்ளார்:

“இந்தியா ஏற்படுத்திய தொழிலாளர் போக்குவரத்துத் தடையை எடுத்துவிடவேண்டி தோட்டத்துரைமார்கள் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பலமான வேலை செய்தார்கள். போதாக்குறைக்கு காங்கிரஸ்காரர்களுடைய நிர்வாகம் இந்தியாவில் மறைந்தது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் வியாபார விஷயத்தில் ஒப்பந்தம் ஏற்படவேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டது. ஏனெனில், இலங்கைக்குப் பிறநாடுகளினின்றும் சாமான்கள்வரத் தடைப்பட்டபடியால் இந்தியாவின் நல்லெண்ணத்தை நாடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆகவே, சமாதானப்பேச்சுக்கள் நடத்தி இலங்கை இந்தியர் விஷயத்தில் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று இலங்கை அரசினர் எழுத, இதுதான் சமயம் என்று ஏகாதிபத்தியத்தின் நன்மையைக்கருதி நிற்கும் இந்தியா கவர்ன்மெண்டாரும் ஒப்புக்கொண்டார்கள்.”

ஆகவே, இலங்கைவாழ் இந்தியர் நன்மை என்பதைவிட, அக்காலப் பூகோள அரசியல் நகர்வுகள் இணக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான சூழலைத் தோற்றுவித்தன எனலாம்.

1941 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேச்சுவார்த்தை, இலங்கை அரசாங்கம் வரைந்த குடிவரவு மசோதாவை அடியொட்டியதாக அமைந்தது. இந்தியாவிலிருந்து இலங்கை வருபவர்களுக்குப் பிரயாண அனுமதிச்சீட்டு (Passport) வழங்கும் முறையைக் கொண்டுவருதல், குடிவரவு தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க இந்தியப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குடிவரவுச்சபை ஒன்றை உருவாக்குதல், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை உள்வாங்குவதிலோ இலங்கைக்குள் வேலைக்கு அமர்த்திக்கொள்வதிலோ யாதாயினும் கோட்டா சட்டங்களை உருவாக்குவதாக இருந்தால் அவற்றின் நகல்களைக் குடிவரவுச்சபையின் அபிப்பிராயங்களுடன், இந்திய அரசின் அபிப்பிராயத்தை அறிவதற்கு அனுப்புதல் முதலான முக்கியமான அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று வருபவர்கள் தொடர்பில், “பிறப்பால் இலங்கையில் நிரந்தரவாசியானவர்களும், விருப்பால் நிரந்தரவாசியென்ற உரிமை பெற்றவர்களும் நீங்கலாகப் பிறர், இலங்கையைவிட்டு 12 மாதகாலம் தொடர்ந்து வெளியே தங்கிவிடுவார்களானால் அவர்கள் பிறகு தங்குதடையில்லாமல் இலங்கைக்குள் வரும் உரிமையை இழந்தவர்களாவர்” என்ற விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனைப்போல பிற்காலத்தில் இலங்கைவாழ் இந்தியர் தொடர்பில் உருவாக்கப்படக்கூடிய கோட்டா சட்டங்களில் யார், யாருக்கு விலக்கு உண்டு என்பதைனையும் இக்கூட்டு அறிக்கை தெளிவாக வரையறுத்துள்ளது. பிறப்பால் இலங்கையில் நிரந்தரவாசியான இந்தியர்களும் விருப்பால் நிரந்தரவாசியென்ற உரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசியென்ற அத்தாட்சிப்பத்திரம் வைத்திருப்பவர்களும், இக்கூட்டு அறிக்கை நிறைவேற்றப்படும் காலத்தில் 07 வருட காலத்திற்கு அதிகமாய் இலங்கையில் வாழ்பவர்களும் புதிதாக உருவாக்கப்படும் கோட்டா சட்டங்களுக்கு உள்ளடங்கமாட்டார்கள். அதேவேளை, இலங்கையில் மூன்று வருடங்களுக்குக் குறைவான காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் புதிதாக உருவாக்கப்படும் கோட்டா சட்டவிதிகளுக்குக் கட்டுப்பட்டவராவார்கள் என்ற விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குரிமை தொடர்பான விடயத்தில், புதிதாக இலங்கை வருபவர் கல்வி அறிவும் சொத்தும் உடையவர் என்ற முறையில், ஐந்து வருடம் இலங்கையில் தங்கியிருந்து, விருப்பால் நிரந்தரவாசி என்ற உரிமைபெற்றால், அவர் வாக்குரிமை பெறலாம்; விருப்பால் இலங்கையின் நிரந்தரவாசியானவர்களும், நிரந்தரவாசியென்ற அத்தாட்சிப்பத்திரம் வைத்திருப்பவர்களும் வாக்குரிமைக்குத் தகுதியுடையோராவர். மேலும், நிரந்தரவாசியென்ற அத்தாட்சிப் பத்திரத்தைப் பெறுவதற்கான நிபந்தனைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. பதிவுசெய்தல் என்ற பகுதியில் இலங்கைவாழ் இந்தியரைப் பதிவு செய்தல் தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள விதிகள், இலங்கையிலுள்ள எல்லா மக்களுக்கும் பொருத்தமானதாக இருக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்தஸ்துத் தொடர்பான பகுதியில் இலங்கையில் பிறப்பால் நிரந்தரவாசியானவர், விருப்பால் நிரந்தரவாசியானவர், நிரந்தரவாசியென்ற அத்தாட்சிப்பத்திரம் வைத்திருப்பவர் ஆகியோருக்கும், இலங்கையருக்கும் உரிமைகள் தொடர்பில் வித்தியாசம் காட்டக்கூடாது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பிறப்பால் இலங்கைவாசியான இந்தியர்களைத் தவிர ஏனைய இந்தியர், அரசசேவைப் பணிகளைப் பெற்றுக்கொள்ளவும் நில அபிவிருத்திச் சட்டத்தின் நன்மைகளைப் பெறவும் முடியாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்விக்குட்டுத்தும் நடேசய்யர், “கவர்ன்மெண்ட் உத்தியோகங்களில் இந்தியர்களுக்கு இடமில்லை, கிராமநிலங்கள் இந்தியர்களுக்கில்லை, மீன்பிடிச்சட்டத்தின் பிரகாரம் இந்திய மீன்பிடிக்காரர்கள் இலங்கையில் மீன்பிடிக்கலாகாது, சிவில் சர்வீஸ் வேலை கிடையாது. இவைதான் கூட்டு அறிக்கையின் வெளிப்படையான வித்தியாசங்கள். இவ்வளவு சமத்துவமான நிலைமையை விட்டுகொடுத்துச் சமாதானம் ஏன்? உள்ள உரிமையையும் விட்டுக்கொடுப்பானேன் என்ற கேள்வி ஏற்படுகிறது” என இலங்கையில் இந்தியர் அனுபவித்துவரும் சுதந்திரங்கள், கூட்டு அறிக்கையில் இழக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கூட்டு அறிக்கை, இலங்கைவாழ்  இந்தியர் தொடர்பில் முற்காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள், ஏற்படுத்தப்பட்ட விதிகள் யாதொன்றையும் கருத்தில்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ள நடேசய்யர், “பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குடிகள் நாங்கள், எங்களுக்கு கவர்னர் முதலியவர்களின் வாக்குறுதிகள் இருக்கின்றனவென்று இலங்கைவாழ் இந்திய மக்கள் எண்ணிக்கொண்டிருந்தால் அது வீண் கனவாகும்” என்பதை எடுத்துக்காட்டி, இலங்கைவாழ் இந்தியர் தாம் ஒன்றுபடுவதன் மூலமே தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த குடிவரவு மசோதாவை அடிப்படையாகக்கொண்டே இக்கூட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்திய அரசு, இலங்கைவாழ் இந்தியரின் அரசியல், பொருளாதார உரிமைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் இலங்கைக்கு உண்டு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது எனப் பொருள்கொண்டுள்ள நடேசய்யர், “இலங்கைவாழ் இந்தியர்கள், இந்தியா கவர்ன்மெண்டாரும் இந்தியத் தலைவர்களும் தங்களைத் தாங்குவார்கள் என்ற தைரியத்தைக் கைவிடவேண்டிய அவசியத்தை” எடுத்துக்காட்டியுள்ளார். இதனையே நூலின் முன்னுரையில், “இலங்கைவாழ் இந்தியர்களை முன்னேற்ற இந்தியாவிலிருந்து ஆட்கள் வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டு காலந்தள்ளுவது முட்டாள்கள் செய்யும் காரியம். தங்களைத் தாங்களே முன்னேற்றிக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

கூட்டு ஒப்பந்த அறிக்கையில் இலங்கைமீது நிரந்தர அக்கறையுள்ள, இலங்கையராக வாழ்கின்ற இந்தியர், இலங்கையருக்கு உரிய சகல உரிமைகளையும் பெறுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையால், இலங்கைவாழ் இந்தியர் இலங்கையராகப் பதிவுசெய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை நடேசய்யர் விரிவாக எடுத்துக்காட்டியுள்ளார். அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிறப்பின் அடிப்படையில் நிரந்தரவாசி, விருப்பின் அடிப்படையில் நிரந்தரவாசி, நிரந்தரவாசி என்ற அத்தாட்சிப் பத்திரம் பெறுதல் ஆகியவற்றின் அடிப்படைகளையும் அவற்றினால் விளைகின்ற நன்மைகளையும் பாதிப்புகளையும் விளக்கியுள்ள அவர், இந்தியத் தொழிலாளரை விருப்பின் அடிப்படையில் நிரந்தரவாசியாகுமாறு வலியுறுத்தியுள்ளார். விருப்பின் அடிப்படையில் நிரந்தரவாசியாகிறவர்களுக்கு ஒப்பந்தப்படி, அரசாங்க உத்தியோகம், நில அபிவிருத்திச் சட்டப்பிரகாரம் ஏற்படும் உரிமைகள், மீன்பிடிச்சட்டத்தின் கீழுள்ள உரிமைகள் தவிர ஏனைய உரிமைகள்தான் கிடைக்கப்பெற்றாலும், அவர்களின் குழந்தைகளுக்கு முழு உரிமையும் கிடைக்கும் வாய்ப்புள்ளதால் நடேசய்யர், “விருப்பால் நிரந்தரவாசி என்ற தத்துவத்தில் சிறிதளவு உரிமைகள் குறைவாகவுள்ளது என்ற காரணத்தால் அதை விட்டுவிட வேண்டாம். இவர்களின் பிள்ளைகளின் நன்மை கருதியாவது விருப்பால் நிரந்தரவாசி என்பதைப் பெறவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைவாசி என்ற அந்தஸ்தைப் பெறாது இலங்கையில் வசிக்கும் இந்தியர் எதிர்காலத்தில் இந்தியாவுக்குச் சென்று திரும்ப வருதல், புதிதாக உருவாக்கப்படக்கூடிய கோட்டா சட்டங்கள், வாக்குரிமை பெறுதல், அந்தஸ்து முதலானவற்றில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள நடேசய்யர், “இலங்கைவாழ் இந்தியத் தொழிலாளர்களில் ஒவ்வொருவரும் நிரந்தரவாசியாக வேண்டும். ‘விருப்பால் நிரந்தரவாசி’ என்ற தத்துவம் பெற்றபிறகே இந்தியா போவதென்ற கங்கணங்கட்டிக் கொள்ளட்டும். இந்தியாவிற்கும் இந்தியருக்கும் மரியாதையும் பலமும் ஏற்படவேண்டுமானால் 6 ½ லட்சம் தொழிலாளர்களுள் 6 லட்சம் பேராவது நிரந்தரவாசிகளாகி வாக்குரிமை பெறவேண்டும்” என இலங்கைப் பிரஜையாகப் பதிவுசெய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.

நிரந்தரவாசி என்ற அத்தாட்சிப்பத்திரம் பெற்று இந்தியாவுக்குச் சென்று ஒரு வருட காலத்திற்குப் பின்னர் திரும்பி வருபவர்களும், அரசநிதியில் இந்தியாவுக்குச் சென்று மீண்டும் திரும்ப வருபவர்களும் புதிதாக இலங்கை வருகின்ற இந்தியருக்கு ஒப்பானவர்களென இந்த ஒப்பந்தம் குறிப்பிட்டுள்ளது. புதிய சட்ட மசோதாவுக்கு அமைய அத்தகையோர் இலங்கையின் அரசியல் உரிமைகளுக்கு உரித்தற்றவர்களாவர். அவர்களை ‘அடிமைகளாகக் குறைந்த கூலிக்கு வேலைக்கு வருவோர்’ என அடையாளப்படுத்தும் நடேசய்யர், இந்திய அரசு இலங்கைக்கு அடிமைகளை அனுப்பத் தயாரா? என்ற வினாவை எழுப்பி, இந்த ஒப்பந்தத்தின் பலவீனத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்தியா – இலங்கைப் பிரதிநிதிகளால் இலங்கைவாழ் இந்தியர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையை, இலங்கைவாழ் இந்தியர் தளத்தில்நின்று அணுகியுள்ள நடேசய்யர், இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ள குடிவரவு மசோதா சட்டமாக்கப்பட்டால், இந்தக் கூட்டு அறிக்கையே இலங்கைவாழ் இந்தியரின் இருப்பைத் தீர்மானிக்கும் விதிகளாக இருக்கும் என்பதை அறிந்தும், அவ்விதிகளை இலங்கைவாழ் இந்தியர் நன்கு அறிந்துகொள்வதும், அவற்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் செயற்படுவதும் அவசியம் என்பதை உணர்ந்தும், அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியை இந்நூலில் மேற்கொண்டுள்ளார். அவ்விழிப்புணர்வில் இலங்கையில் வாழ்கின்ற இந்தியர், இலங்கையராக வாழ்வதற்குரிய – இலங்கையராகச் சட்டப்படி பதிவுசெய்து கொள்வதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும், புதிதாக இலங்கைக்கு வரவிருக்கும் இந்தியரை, இலங்கைக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதும் பிரதானமானதாக இடம்பெற்றிருக்கின்றன. 1920களின் பிற்பகுதி முதல் சுதேசிய சிங்கள ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் நடேசய்யரின் அம்முடிவுகளுக்குக் காரணமாக விளங்கியுள்ளன.

இலங்கைவாழ் இந்தியரின் எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்கும் அறிக்கை என்பதால் நடேசய்யர் மிகுந்த முயற்சியுடன் உடனடியாக, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே இந்நூலாக்கத்தை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் உலகமகா யுத்ததத்தின் தாக்கத்தினால் காலனிய அரசு, குடிவரவு மசோதாவையும், இலங்கையரல்லாதோரைப் பதிவுசெய்யும் மசோதாவையும் நிராகரித்தது. அதனால் இக்கூட்டு அறிக்கையும் நடைமுறைக்கு வரவில்லை. இந்திய அரசும் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை. சுதேசிய சிங்கள ஆட்சியாளர்களோ தொடர்ந்தும் இந்தியர் எதிர்ப்புச் செயற்பாடுகளை வெவ்வேறு தளங்களில் முன்னெடுக்கலாயினர். மீண்டும் இலங்கை – இந்திய அரச மட்டங்களில் இலங்கைவாழ் இந்தியர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

நேருவுக்கும் சேனாநாயக்கவுக்கும் இடையில் 1947 ஆம் ஆண்டு நேரடியாகவும், கடிதங்கள் மூலமும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அப்பேச்சுவார்த்தைகளிலும் இரண்டு நாட்டுத் தலைவர்களும் இருதுருவ நிலையில்நின்று பிரச்சினைகளை அணுகியுள்ளனர். அதனால் அப்பேச்சுவார்த்தைகளால் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால், இலங்கை சுதந்திரமடைந்ததும் டி.எஸ். சேனாநாயக்க தலைமையிலான அரசாங்கம், பிரஜாவுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து பெருந்தொகை இந்தியரை நாடற்றவராக்கியது. அதன்பின்பான இலங்கை – இந்திய உறவில் இந்த நாடற்ற மக்களின் பிரச்சினை மையமாக விளங்கியுள்ளது. டட்லி சேனாநாயக்க – நேரு ஒப்பந்தம், நேரு – கொத்தலாவல ஒப்பந்தங்கள், சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தம், சிறீமா – இந்திரா ஒப்பந்தம் எனப் பல உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் விளைவால் ஒருதொகை இலங்கைவாழ் இந்தியருக்கு இந்தியப் பிரஜாவுரிமையும், ஒரு தொகையோருக்கு இலங்கைப் பிரஜாவுரிமையும் வழங்கப்பட்டு, அரச மட்டத்தில் பிரச்சினை தீர்க்கப்பட்டது. ஆனால், இந்த முடிவு இலங்கைவாழ் இந்திய மக்களின் பிரச்சினைகளுக்கான நியாமான – பொருத்தமான தீர்வாக அமையவில்லை. அம்முடிவு தந்த துயரினதும் பலவீனத்தினதும் வடுக்கள் இன்றும் அச்சமூக அசைவில் பிரதிபலித்துவருகின்றன.

1920கள் முதல் மெல்ல மெல்ல பெருகத் தொடங்கிய இந்தியர் எதிர்ப்பும், சுதேசியர்களின் இந்தியருக்கு எதிரான பாரபட்சமான செயற்பாடுகளும் இலங்கைவாழ் இந்தியர் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியை தேவையை வெளிப்படுத்தின. பிரச்சினைகளை இணக்கமாகத் தீர்த்துக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் – உடன்படிக்கைகள் தோல்வியில் முடிந்தன. சுதேசிய சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கைவாழ் இந்தியரை அந்நியர் என வரையறுப்பதிலும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதிலும் தீவிரம் காட்டியுள்ளனர் என்பதை அவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன. இலங்கைவாழ் இந்தியர் தளத்தில்நின்று அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் வலுவான சமூக, அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாததோடு இந்திய அரசும் தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. அதன்விளைவாகவே, இலங்கை சுதந்திரமடைந்ததும் இலங்கைவாழ் இந்தியரில் பெருந்தொகையானோர் நாடற்றவர்களாக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் வாழ்ந்த மக்களுள் ஒரு தொகையினர் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இத்தகைய பாதிப்பு இலங்கைவாழ் இந்தியருக்கு ஏற்படக்கூடும் என்பதை நடேசய்யர் அனுமானித்துள்ளார். அதனாலேயே, இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தில், “இந்திய மக்கள், சென்ற 100 வருஷ காலமாய்த் தூங்கிக்கொண்டிருந்தது போல் இனியும் தூங்கிக்கொண்டிருப்பார்களேயானால், இந்த ஒப்பந்தம் இவர்களை முன்னேற்றாது. நாளடைவில் இவர்களை வெளியேற்றும், அல்லது நிரந்தர கூலிகளாக்கும். அப்படியில்லாமல், உணர்ச்சியுடனும் ஊக்கத்துடனும் உழைத்தால், இந்தியன் இலங்கையில் மரியாதையுடன் வாழ இடமிருக்கிறது. அவ்வித நிலைமையைத் தேடிக் கொள்ளவேண்டியது இந்தியன் கடமை” என அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைவாழ் இந்தியரிடம் முதன்மைபெற்றுள்ள இந்திய அடையாள அரசியலினாலோ, இந்திய அரசினாலோ இலங்கையில் இந்தியர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தீர்க்கப்படபோவதில்லை என்பதை அனுமானித்த நடேசய்யர், இலங்கைவாழ் இந்தியர் இலங்கையின் முழுப் பிரஜைகளாக வாழ்வதற்கு இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தைப் பெறுவதும், இலங்கைவாழ் ஒட்டுமொத்தத் தமிழரும் ஐக்கியப்படுவதும் அவசியம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதனால், இலங்கைவாழ் இந்தியரை இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துக்குள் உள்ளடக்கும் முயற்சியை அவர் பின்நாளில் மேற்கொண்டுள்ளார். “இலங்கைத் தமிழர்கள் என்று கூறக்கூடியவர்களுள் தோட்டத்தொழிலாளர்கள் உள்ளடங்குவார்கள் என்பதை இலங்கைத் தமிழர் மறக்கலாகாது” ” (சுதந்திரன் – 13.06.1947) எனக்கூறியுள்ள அவர், தமிழ்க் காங்கிரஸ் தோட்டத்தொழிலாளர்களுக்கான காரியங்களை வெளிப்படையாகச் செய்ய முன்வரவேண்டும் எனக் கோரிக்கையை விடுத்துள்ளதுடன் இலங்கைத் தமிழரின் ஐக்கியமே பலம் என்று பகிரங்கமாக வெளிப்படுத்தி, இந்திய அடையாளத்தை வலியுறுத்தும் இலங்கை – இந்தியக் காங்கிரஸை நிராகரித்துள்ளார். இருப்பினும் நடேசய்யர் எதிர்பார்த்த ஒருங்கிணைப்பு மேற்படி இரு சமூகத்தாருக்கும் இடையே நிகழவில்லை. நாடு சுதந்திரம் பெற்றதும் இலங்கைவாழ் இந்தியருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு (1948) தமிழ்க் காங்கிரஸின் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆதரவு தெரிவித்தமையால், இலங்கைத் தமிழருடனான இலங்கைவாழ் இந்தியத் தமிழரின் அரசியல் உறவு பெருங்கேள்விக்கு உள்ளாகியது. அப்போது தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்த செல்வநாயகம் உள்ளிட்டோர் தமிழரசுக்கட்சியைத் தோற்றுவித்ததோடு பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட இந்தியவம்சாவளித் தமிழருக்குப் பிரஜாவுரிமை பெற்றுக்கொடுப்பதைத் தமது நோக்கங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தினர். ஆனால், அப்பிரகடனத்தை நிறைவேற்றும் வகையில் காத்திரமான முயற்சிகள் எவற்றையும் அக்கட்சியினர் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவருவதற்கு முன்னரே நடேசய்யர் உயிர்துறந்தமையால் (07.11.1947) அக்காலத்து அரசியற் சூழலை அவர் எவ்வாறு அணுகியிருப்பார் என்பதையறிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.


ஒலிவடிவில் கேட்க


About the Author

எம். எம். ஜெயசீலன்

எம்.எம். ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியப் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (தஞ்சாவூர்) கலாநிதிப் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார். கல்வெட்டியல், பண்பாட்டு வரலாறு, இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுள்ள இவர், அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து வருவதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்