1833 - 1921 வரையான காலகட்டம் : தமிழ்த் தலைவர்களும் இலங்கை தேசிய காங்கிரசும்
slide-1
slide-2
slide-3
previous arrow
next arrow
Arts
12 நிமிட வாசிப்பு

1833 – 1921 வரையான காலகட்டம்: தமிழ்த் தலைவர்களும் இலங்கை தேசிய காங்கிரசும்

April 18, 2025 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

உதவி : ஜீவராசா டிலக்ஷனா

இலங்கையில் ஒரு பொதுவான நிர்வாக முறையையும், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியையும், தாராண்மை ஜனநாயக அரசாங்க முறையையும் நிலைநிறுத்துவதற்காக கோல்புறூக்கமரன் குழுவினர் 1829 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி இலங்கை வந்தனர். இவர்களில் கோல்புறூக் குழுவினர் அரசியல் சீர்திருத்தத்தையும், கமரன் குழுவினர் நீதிச் சீர்திருத்தத்தையும் சிபாரிசு செய்தனர். 1831 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி கோல்புறூக் குழுவினர் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தனர். தமது அறிக்கையைச் சமர்ப்பிக்க பல்வேறு வழிகளில் பொருளாதார, சமூக, நிர்வாகம் பற்றிய தகவல்களைப் பெற்றனர். அரச ஊழியர்களிடம் கேள்விக்கொத்துகளை வழங்கி தகவல்களைப் பெற்றதுடன், பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மக்கள், மதகுருமார்களுடன் கலந்துரையாடியும் தகவல்களைப் பெற்றனர். இவர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் 1833 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்களாக:

  1. சட்டசபை அறிமுகம் செய்யப்பட்டமை.
  2. சட்ட நிர்வாக சபை அறிமுகம் செய்யப்பட்டமை.
  3. மாகாணங்கள் ஐந்தாகக் குறைக்கப்பட்டமை.
  4. ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமை.
  5. இராஜகாரியமுறை நீக்கப்பட்டமை.
  6. கட்டற்ற வர்த்தகம் அறிமுகம் செய்யப்பட்டமை.
  7. இலங்கை முழுவதும் ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டமை.
  8. தேசாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டமை.
  9. அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை.
  10. கிராமசபை அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை.  

என்பவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழர்கள் உட்பட ஏனைய சமூகங்கள் அரச அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியே தூக்கி வீசப்பட்டனர். அவர்கள், வரலாறு வழியாக கட்டங்கட்டமாகத் தூக்கிவீசப்பட்ட ஒரு செயற்பாடு நடைமுறையில் நிகழ்ந்திருக்கின்றது. இதற்கு எதிரான போராட்டமே தமிழர்களின் விடுதலைப் போராட்டம்.

இலங்கையில் பிரித்தானியர்களின் கைகளில் இருந்த ஆட்சி அதிகாரங்கள் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் ஊடாகவே இலங்கையர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது. 1833 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கைமாற்றம் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பு அறிமுகத்துடன் முடிவுக்கு வந்தது. இதிலிருந்து, இலங்கையர்களின் அரசியல் யாப்பு வரலாறு என்பது தமிழ் மக்களை ஆட்சி அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தூக்கிவீசிய வரலாறாக இருக்கின்றது. 1833 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கைமாற்றம் 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புடன் அரைப்பொறுப்பாட்சியை வழங்குவதாகவும், 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்புடன் முழுப்பொறுப்பாட்சியை வழங்குவதாகவும், 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்புடன் பேரளவு அதிகாரங்களைக்கூட கைவிடுவதாகவும் அமைந்திருந்தது.

முதலாவது காலகட்டத்தில் தமிழர்கள் ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் பாரதூரமான விளைவுகளைப் புரிந்திருக்கவில்லை. ஆட்சி அதிகாரங்கள் ஆங்கிலேயரின் கைகளில் இருந்தமையினால் ஒடுக்குமுறைகளைத் தொட்டுணரக்கூடிய சூழலும் இருக்கவில்லை. இதனால் முதலாவது காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் என்பது அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தையும், பண்பாட்டுத்தளத்தில் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் பேணுவதாக இருந்தது.

அன்று தமிழர்களின் தலைவர்களாக இருந்தவர்களும், தமிழர்களுக்கு மட்டும் தலைவர்களாக இருக்கவில்லை, முழு இலங்கைக்கும் தலைவர்களாக இருந்தனர். குறிப்பாக அதில் மூன்று பேர் முக்கியமானவர்கள். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதில் முதலாவது நபர் சேர். முத்துக்குமாரசாமி. இவர் சேர். பொன்னம்பலம் இராமநாதனின் தாய் மாமன் ஆவர். இவர்தான் முதன்முதலாக ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துக் கருத்துகளைக் கூறியவர். இவரிடம் ஆசிய தேசியவாதம் காணப்பட்டது. இவருடைய மகன்தான் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி. அவர் பண்பாட்டுத்தளத்தில் ஆசிய அடையாளத்தை நிலைநிறுத்திய ஒருவராக விளங்கினார். இரண்டாமவர் சேர். பொன்னம்பலம் இராமநாதன்.  மூன்றாமவர் சேர். பொன் அருணாசலம். இவர் சேர். பொன் இராமநாதனின் இளைய சகோதரனாவார்.

கோல்புறூக் சட்டசபை

கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்மூலம் இலங்கையில் முதன்முதலாக சட்டசபை உருவாக்கப்பட்டது. இதில் 15 பேர் அங்கம் வகித்தனர். இவர்களில் 9 பேர் உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களாகவும், 6 பேர் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாகவும் விளங்கினர். உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்கள் அந்தந்த உத்தியோகங்களை வகிப்பதன் ஊடாக சட்டசபையில் அங்கம் வகித்தனர். உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக விளங்கினர்.

  • ஐரோப்பியர்  – 3       
  • சிங்களவர் – 1         
  • தமிழர் – 1        
  • பறங்கியர் – 1

என்றவகையில் இப்பிரதிநிதித்துவம் அமைந்திருந்தது. தமிழர் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி ஆவார். இவர் சேர். பொன் இராமநாதனின் தாயின் தந்தை ஆவார். தேசாதிபதியின் மொழிபெயர்ப்பாளராக இருந்த இவரை இராஜினாமாச் செய்யவைத்த தேசாதிபதி, மக்கள் பிரதிநிதியாக நியமித்தார். உத்தியோகப்பற்ற அங்கத்தவர்கள் அனைவரையும் தேசாதிபதியே நியமித்தார்.

கோல்புறூக் குழுவினர் இலங்கையின் பன்முகச் சமூகத்தன்மையை அடையாளம் கண்டனர். இதனாலேயே பல இனத்தைச் சேர்ந்தவர்களும் சமமான வகையில் பிரதிநிதித்துவத்தைப் பெறும்வகையில் இனவாரிப் பிரதிநிதித்துவமுறையை அறிமுகம் செய்தனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இனவாரிப்பிரதிநிதித்துவ முறையை முன்வைத்தனர் எனலாம்.

உண்மையில் இதனை அடுத்த கட்டத்திற்கு வளர்த்திருக்க வேண்டும். அந்த அடுத்த கட்டம் என்பது மரபுரீதியாக தனித்தன்மைவாய்ந்த இனங்கள் அதிகாரக் கட்டமைப்பில் தங்களது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய வகையில் பங்குபெறுவதாக இருந்திருக்க வேண்டும். 1889 வரை தமிழர்களையும் முஸ்லிம்களையும் தமிழ்ப்பிரதிநிதியே பிரதிநிதித்துவப்படுத்தினார். தங்களை தமிழ்ப்பிரதிநிதி பிரதிநிதித்துவப்படுத்துவதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1889 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு என தனியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் ‘காசிம் அப்துல் ரகுமான்’ தேசாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி

ஆ. குமாரசுவாமி பருத்தித்துறைக்கு அண்மையில் உள்ள கெருடாவில் கிராமத்தில் 1783 ஆம் ஆண்டு பிறந்தார். கொழும்புக்கு அவர் வந்தபோது இவரது பண்புமிக்க நடத்தை, திறமை, வியாபார நுண்ணறிவு என்பனவற்றினால் நகரத்தின் முன்னணித் தமிழர்களின் நன்மதிப்பை விரைவில் சம்பாதித்துக்கொண்டார். 1808 இல், முதலில் இவர் தேசாதிபதி தோமஸ் மெயிட்லண்ட்க்கு மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் 1810 இல் ஒரு தமிழரினால் வகிக்கப்படக்கூடிய அதி உயர்ந்த பதவியாகிய தேசாதிபதியின் ‘பிரதம தமிழ் மொழிபெயர்ப்பாளர்’ பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

குருமக்கலம் அரசியல் திருத்தம் – 1912

1912 ஆம் ஆண்டு குருமக்கலம் அரசியல் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்கீழ் தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு நான்கு பிரதிநிதிகள் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். ஐரோப்பியர் இரண்டு, பறங்கியர் ஒன்று, படித்த இலங்கையர் ஒன்று எனத் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இத்தேர்தலில் கல்வியறிவு உடையோரும், சொத்துடையோரும் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் இடம்பெற்றபோது முழு இலங்கையிலும் படித்த இலங்கையர் சார்பில் சேர். பொன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். ஓய்விற்காக தமிழ்நாடு, கொடைக்கானல் விடுதியில் தங்கியிருந்த இராமநாதனை வேட்பாளராக நிறுத்த, சிங்கள அரசியல் தலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தந்தை ஹெக்டர் ஜெயவர்த்தனா அங்கே சென்று, அவரைச் சம்மதிக்க வைத்து, அங்கேயே வேட்புமனு விண்ணப்பத்தின் மீது கையொப்பமும் வாங்கிவந்தார் எனக் கூறப்படுகின்றது. இத்தேர்தலில் மார்க்கஸ் பெர்னாண்டோ என்கின்ற சிங்கள மருத்துவரோடு போட்டியிட்டு, இராமநாதன் வெற்றிபெற்றார். மார்க்கஸ் பெர்னாண்டோ மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த கரவா சாதியினராக இருந்தமையினால், சிங்கள உயர் சாதியினர் இராமநாதனையே ஆதரித்தனர். தொடர்ந்து 1916 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் டி.எஸ். ஜெயவர்த்தனா என்பவரோடு போட்டியிட்டு இராமநாதனே வெற்றிபெற்றார்.

இக்காலத்தின் அரசியல் விவகாரத்தைப் பொறுத்தவரை இராமநாதன் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தார் எனக் கூறமுடியாது. அவர் இலங்கை மக்களுக்காக, குறிப்பாகச் சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒருவராக விளங்கினார். வெசாக்தினத்தை விடுமுறை தினமாக்கியதில் இவரது பங்கு அதிகமாக இருந்தது. சிங்களமொழியைப் போதனா மொழியாக்குவதற்கு இவர் கடுமையாகக் குரல் கொடுத்தார்.

சிங்கள – முஸ்லிம் கலவரம் (1915)

1915 ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் கலவரம் இடம்பெற்றது. கலவரம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து குறுகிய காலத்திலேயே இலங்கை முழுவதும் பரவியது. இது, முதலாம் உலக மகா யுத்த காலத்தில் இடம்பெற்றமையினால், ஜேர்மனியின் உளவாளிகள் சிங்கள மக்களிடையே இருந்து செயற்படுகின்றார்கள் என ஆங்கிலேயர்கள் கருதினர். ஆகவே இதனை மிகமோசமாக நசுக்கத் தொடங்கினர். குறிப்பாக மது ஒழிப்பு இயக்கத்தில் பங்குபற்றிய பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்காவும் ஒருவராவார். பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இது விடயத்தில் ஆட்சியாளர்களின் மிக மோசமான அடக்குமுறையைக் கண்டித்து சேர். பொன் இராமநாதன் சட்டசபையில் நீண்ட நேரம் உரையாற்றியது மட்டுமல்லாமல், நோய்வாய்ப்பட்ட நிலையிலும் முதலாம் உலக மகா யுத்த நெருக்கடிக் காலத்தினையும் கவனத்தில் கொள்ளாது, கப்பல்மூலம் லண்டன் சென்று அங்கு பிரதமர், குடியேற்ற நாட்டுச் செயலாளர் என்பவர்களுடன் பேசி, கலவரத்தை உடனே நிறுத்தினார். கைது செய்யப்பட்ட சிங்கள அரசியல் தலைவர்களையும் விடுவித்தார். லண்டனிலிருந்து கப்பலில் இராமநாதன் நாடு திரும்பியதும், துறைமுகத்தில் இறங்கி தனது குதிரை வண்டியில் வீடு செல்லத் தயாரானபோது, சிங்கள அரசியல் தலைவர்கள் குதிரையைக் கழற்றி தாங்களே அவரை வீடுவரை இழுத்துச் சென்றனர்.

சேர். பொன் அருணாசலத்தின் வகிபங்கு

1. சேரிப்புற மக்கள் மத்தியில் பணிபுரிதல்

சேர். பொன் அருணாசலம், சேர். பொன் இராமநாதனின் இளைய சகோதரன் ஆவார். பதிவாளர் நாயகமாக இருந்த இவர், 1913 ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்று நேரடியாக அரசியலுக்கு வந்தார். அரசியலில் அவர் முதல் தெரிவுசெய்த மக்கள் கூட்டம், கொழும்பின் சேரிப்புறங்களில் வாழும் அடிநிலை மக்கள்தான். இம்மக்களின் நலன்களைப் பேண தொழிலாளர் நலன்புரிச் சங்கத்தை உருவாக்கினார். சேரிப்புற மக்களின் நலன்களை விஞ்ஞானபூர்வமாக மேம்படுத்தும் பொருட்டு, லண்டன் சென்ற அவர், லண்டன் மாநகரசபை எவ்வாறு சேரிப்புற மக்களின் நலன்களைப் பேணுகிறது என்பதை ஆராய்ந்தறிந்து, அதனை இங்கு நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.

2. மலையக மக்கள் மீதான அக்கறை

சேர். பொன் அருணாசலம் சேரிப்புற மக்களுக்கு அடுத்ததாக, அக்காலத்தில் மிகுந்த ஒடுக்குமுறைக்கு உள்ளான மலையக மக்களின் நலன்களில் அக்கறை கொண்டார். மலையக வம்சாவளியினரான பெரிசுந்தரத்துடன் இணைந்து தோட்டத் தொழிலாளர் நலன்புரி அமைப்பை உருவாக்கினார். இவ் அமைப்பின் தலைவராக அருணாசலமும் செயலாளராக பெரிசுந்தரமும் விளங்கினார்கள். மலையகத்தில் நிலவிய மோசமான ஒடுக்குமுறையான துண்டுமுறையை இல்லாது ஒழிப்பதில் இவரது பங்கு முக்கியமாகக் காணப்பட்டது. துண்டுமுறை என்பது ‘ஒருவர் தோட்டத்திலிருந்து திருமணம் காரணமாகவோ அல்லது வேறு விடயங்களின் காரணமாகவோ இன்னொரு தோட்டத்திற்குச் செல்லவேண்டி ஏற்பட்டால், முன்னர் கடமையாற்றிய தோட்ட நிர்வாகம் குறித்த நபர் நன்னடத்தை உடையவர் என்றும், இவருக்கு கடன் எதுவும் இல்லை என்றும், ஒரு கடிதத்தை எழுத்தில் வழங்க வேண்டும்.’ கடிதம் இருந்தால் மட்டுமே மற்றைய தோட்டம் குறித்த நபரை ஏற்றுக்கொள்ளும்.

இலங்கையில் வாழும் அடிநிலை மக்களின் நலன்களில் அக்கறைகொண்ட காரணத்தினாலேயே இவரை ‘இலங்கையின் சமூக மாற்ற அரசியலின் தந்தை’ என அழைக்கின்றனர். ஏ.ஈ. குணசிங்க போன்ற தொழிற்சங்க தலைவர்கள் இவரது கருத்தியலினால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்தனர். ஏ.ஈ. குணசிங்க தன்னுடைய அரசியல் குரு அருணாசலம்தான் என்பதைக் கூறுவதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை.

3. இலங்கை தேசிய காங்கிரஸ் தோற்றம் – (1919 டிசம்பர் 11)

சிங்கள – முஸ்லிம் கலவரம் போன்று இன்னொரு கலவரம் வரக்கூடாது என்பதற்காகவும், இலங்கை மக்களுக்கு உள்ளூர் நிர்வாக சுயாட்சி அதிகாரத்தைக் கோருவதற்காகவும் 1919 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் சேர். பொன் அருணாசலம் முதன்மையாகச் செயற்பட்டமையினால், இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராக அருணாசலமே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கத்தின்போது இலங்கையில் உள்ள பல்வேறு இனங்களையும் ஐக்கியபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சிங்களத் தலைவர்கள், தமிழ்த் தலைவர்களிடையே சேர். பொன் அருணாசலம் தலைமையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. சிங்கள மக்கள்சார்பாக இலங்கை தேசிய சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீரிசும், இலங்கை அரசியல் சீர்திருத்தக்கழகத்தைச் சேர்ந்த ஈ.ஜே. சமரவிக்கிரமவும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள்சார்பாக யாழ்ப்பாணச் சங்கத்தைச் சேர்ந்தோர்; அம்பலவாணர் கனகசபை தலைமையில் கலந்துகொண்டனர். 1906 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் யாழ்ப்பாணச் சங்கம் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணச் சங்கம் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாகப் புதிய அரசியல் சீர்திருத்தத்தின்போது, தமிழர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், கொழும்பில் வாழும் தமிழர்களுக்கு என ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் இரு கோரிக்கைகளை முன்வைத்தது. இரு கோரிக்கைகளையும் ஏற்று, சிங்களத் தலைவர்கள் உத்தரவாதத்தை வழங்கினர். இதுவே தமிழ்த்தரப்பிற்கு சிங்களத்தரப்பு வழங்கிய முதலாவது எழுத்து மூல உத்தரவாதமாகும்.

மனிங் அரசியல் சீர்திருத்தம் – 1921

1921 ஆம் ஆண்டு மனிங் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இது முதன்முதலாக இலங்கையில் பிரதேசவாரி பிரதிநிதித்துவமுறையை அறிமுகம் செய்தது. இதன்படி இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில், மேல் மாகாணம் தவிர, ஏனைய மாகாணங்களுக்கு தலா ஒவ்வொரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. மேல் மாகாணம் சனத்தொகை கூடிய மாகாணமாக இருந்ததால் 3 பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இந்த மூன்று பிரதிநிதித்துவத்தினுள் ஒரு பிரதிநிதித்துவம், முன்னரே உத்தரவாதம் அளிக்கப்பட்டதன்படி தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த்தரப்பு ஒரு கோரிக்கையை முன்வைத்தது. இதைச் சிங்களத் தலைவர்கள் நிராகரித்தனர். இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக முன்னர் வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கு இலங்கை தேசிய காங்கிரஸே பொறுப்பாகாது எனக் கூறப்பட்டது.

ஏ.ஈ. குணசிங்க போன்ற சில தலைவர்கள் இதில் சமரசத்தில் ஈடுபட்டு, தமிழ்த்தரப்பிற்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற உடன்பாட்டைக் கொண்டுவந்தனர். இதை நம்பி சேர். பொன்னம்பலம் அருணாசலம் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அரசாங்கச் செயலகத்திற்கு சென்றார். அவர் செல்ல முன்னரே, மூன்று வேட்பு மனுத்தாக்கல்களும் செய்யப்பட்டு இருந்தன. இதனால் அருணாசலம் மிகவும் அதிருப்தி அடைந்தார். “பிரமாணம் பிரமாணமாக இருக்க வேண்டும். சிங்களத் தலைவர்கள் அதை மீறிவிட்டனர். எனவே இவர்களுடன் ஒன்றாகப் பயணிக்க முடியாது” எனக்கூறிவிட்டு, இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறினார். இந்த வெளியேற்றத்துடன் தமிழரசியல் வரலாற்றின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்துவிட்டது எனலாம்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்