சென்ற காலத்தின் மீதான நாட்டமும் தேடலும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
21 நிமிட வாசிப்பு

சென்ற காலத்தின் மீதான நாட்டமும் தேடலும்

April 19, 2025 | Ezhuna

இன்றைய இருப்பில் இயங்கும் சமூக சக்திகள் தத்தமக்கான நலன்களின் நோக்கில் கடந்த காலத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன. மேலாதிக்கத் தமிழ்த் தேசியம், தலித்தியம், விடுதலைத் தேசியம் என்பவற்றின் கருத்தியல் தளங்களை அடிப்படையாக உடைய சமூக சக்திகள் இன்றைய இயக்கங்களாகச் செயற்படுகின்றன. எமக்கான நவீன வரலாற்றைக் கட்டமைத்த ஆளுமையாகிய ஆறுமுக நாவலர் குறித்து இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய கண்ணோட்டத்தில் மறுவாசிப்பை மேற்கொள்கின்றன; இதன்வழியாக, கடந்தகாலச் சமூக சக்திகள் வழிவகுத்துவிட்டிருந்த இயங்குமுறை அமைந்த அடித்தளங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. இதேபோன்ற பின்னணிக்குரிய ஏனைய சமூகங்களில் இயங்கிய ஆளுமைகளுடன் எமது இயங்கு தளத்துக்குரிய ஆளுமைகளை ஒப்பிடுவதன் வாயிலாக செய்யப்பட்டவற்றையும், செய்திருக்கத்தக்கன எவை என்பதையும் மதிப்பீடு செய்வது அவசியமானது. இவற்றின் பெறுபேறுகள் எமக்கான எதிர்கால மார்க்கத்தை வடிவமைப்பதற்கு மிகமிக முக்கியமானவை ஆகும். “சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்” எனும் இத்தொடரானது நாவலரின் பங்களிப்புக் குறித்த மதிப்பீட்டின் வழியாக சமகால இயங்குமுறையைக் கணிப்பிட்டு, சுயவிமரிசனங்களுடன் புதிய பாதையையும், அதற்குரிய சரியான மார்க்கத்தையும் கண்டடையும் நோக்கில் எழுதப்படுகிறது.

ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர்கூட ஒரு விரலசைப்பில் உலக நாடுகளை வழிக்குக்கொண்டுவர இயலுமாக இருந்த ஐக்கிய அமெரிக்காவுக்கு என்ன நேர்ந்துவிட்டது? கறாரான வரிவிதிப்பின் ஊடாகப் பிறதேசங்களை அடங்கி ஒடுங்கிப்போக வைத்துவிடலாம் என்று நினைத்தால் சொந்த நாட்டு மக்களே கிளர்ந்தெழுந்து முட்டுக்கட்டை போட்டுவிடுகிறார்களே? புதிதாய்த் தலைமையேற்ற புதுத் தும்புத்தடியாக வேகம் காட்டுகிற ஜனாதிபதியிடம் வெளிப்படும் தடுமாற்றங்களா இவை? ஐக்கிய அமெரிக்க ஆளும் அதிகாரசக்தியின் நிலைதடுமாறுகிற தளம்பல் இன்றைய அரசியல் தலைமை வாயிலாக வெளிப்படுகிறதா?

வரலாறு ஒருபோதும் நேர்க்கோட்டு வளர்ச்சியில் எந்தத் தேசத்தையும் தூக்கிச்சென்று கொடுமுடியில் நிரந்தரமாக வைத்துவிடாது. ஐரோப்பாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் உலகத்தையே வென்றமாதிரி என்ற நினைப்பில் நெப்போலியன் தலைமையேற்ற வரையில், பிரான்சின் இராணுவ வல்லமை அனைத்தையும் ஐரோப்பாவினுள் பிரான்ஸ் முடக்கியபோது, பிரித்தானியா உலகெங்கும் பரந்து ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ கட்டியெழுப்பியது. உலகின் முதல்நிலைப் பண்பட்ட நாடெனப் பிரான்ஸ் மேற்பிளம்புவதற்கு முன்னர், முதலில் முதலாளித்துவம் உருவான தொட்டிலாகத் திகழ்ந்த இத்தாலி உயரந்தஸ்துடன் ஒருகாலத்தில் இருந்துள்ளது. போர்த்துக்கல், ஒல்லாந்து, ஸ்பெயின் எனத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக மேலாதிக்கம் பெறமுனைந்து ஒவ்வொன்றும் பின்னடைய, இறுதியில் பிரித்தானியா ஏகாதிபத்தியத்துக்கான அதியுயர் பீடத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்கூறில் பெற்றுக்கொண்டது. உலக ஆதிக்கவரிசையில் அந்தநாடுகள் ஒவ்வொன்றாகப் பின்னடைந்த போதிலும், ஐரோப்பிய நாடுகள் ஏனைய கண்டங்களைத் தமக்குள் பங்குபோட்டதனால், உலகனைத்தும் ஐரோப்பியக்கண்டத்தின் குடியேற்றப் பிராந்தியமாகி இருந்தது.

ஐரோப்பியத் தாயகத்தில் இருந்து குடியேறிய பின்னர் அமெரிக்க நாடுகளின் நிரந்தரப் பிரசைகளாகிவிட்ட வெள்ளை இன அமெரிக்கர்கள், தத்தமது தாயகத்துடன் மோதிச் சுதந்திரக் குடியரசுகளாக வேண்டியிருந்தது. முன்னதாக, ஐக்கிய அமெரிக்காவுக்கு உட்பட்டிருந்த பல அரசுகளில் நிரந்தரக் குடிகளாக வாழும் தமக்கான வளங்கள் அபகரிக்கப்பட்டு பிரித்தானியாவுக்குக் கப்பலேற்றப்படுவதனைத் தடுக்கும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்ததன் பேரில், ஐம்பது அரசுகள் ஒன்றிணைந்து உருவான ஒரு தேசம் தான் ‘அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் ஒன்றியம்’ (United States of America- USA, ஐக்கிய அமெரிக்கா). விடுதலைவீரர் வாசிங்டன் தலைமையில் 1776 ஆம் ஆண்டு சாதிக்கப்பட்ட அந்த முதல் தேசிய விடுதலைப்போர் உலக நாடுகளின் தேசிய எழுச்சிக்கு வித்திட்ட பெருமை உடையது. பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னர், பிரான்சியப் புரட்சி (1789) உலகில் முதல் தேசியப் புரட்சியெனக் கொண்டாடப்பட்டபோதிலும் தமக்கு உத்வேகமூட்டிய ஐக்கிய அமெரிக்காவுக்கு பிரான்ஸ் வழங்கிய சுதந்திரச்சிலை இன்றுவரை நியூயோர்க்கில் ஐக்கிய அமெரிக்காவை அடையாளப்படுத்தும் சின்னமாகத் திகழ்கிறது எனும் அம்சம் கவனிப்புக்குரியது!

சுதந்திர உத்வேகத்தைத் தொடர்ந்து உலகெங்கும் எடுத்துச்செல்லும் இலட்சிய உணர்வுடன் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பயணப்பட்ட கிறிஸ்தவப் போதகர்கள் பலரும் கல்வி வழிப்புணர்வுடன் இணைந்ததாக மதப்பரப்புரையை ஐரோப்பியக் காலனிகளாக விளங்கிய நாடுகளில் மேற்கொண்டனர். பல்கலைக்கழகக் கற்கைக்குரிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியுடன், பெண்கள் தங்கிப்படிக்கும் முதல் பாடசாலை எனப் பெருமை படைத்த உடுவில் மகளிர் கல்லூரி என்பன, ஆசிய நாடுகளில் முதல் வரிசையில் தொடங்கப்பட்டன எனும் பெருமைகளைப் பெற்றன; மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விரு பாடசாலைகளுடன் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியும் இருநூறு வருடங்களின் நிறைவினைக் கொண்டாடி இருந்தன. நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் உடற்கூற்றியல், இரசாயனம், பௌதிகம் ஆகிய துறைகளுக்கான தமிழின் முதல் நூல்களைத் தமது மாணவர்களுடன் இணைந்து அமெரிக்க மிசனரியினராகிய Dr. கிறீன் உருவாக்கினார். தமிழைத் தாம் ஆழமாகக் கற்றதுடன் தனது மாணவர்களை ஆங்கிலத்தில் துறைபோகக் கற்க வழிப்படுத்தி இருந்தமையால் இவ்வாறு நவீன விஞ்ஞானநூல்கள் முதன்முதலில் இங்கே வெளிப்பட்டன. இதன்பேறாக ‘மானிப்பாய் அகராதி’ எனும் முதல் ஆங்கில – தமிழ் அகராதியும் (இப்போது ‘யாழ்ப்பாண அகராதி’ என அறியப்படுவது) வெளிப்படலாயிற்று!

பேர்சிவல் பாதிரியாரும் அதுபோன்ற கல்விச்சேவையை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாயிலாக ஆற்றியபோது, அவரது மாணவராக ஆறுமுகம் கல்வி கற்று, அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றினார். தனது ஆசிரியருடன் இணைந்து பைபிளை இனிய தமிழில் மொழிபெயர்த்த இளைஞனுக்குள் ஏற்பட்ட விழிப்புணர்வே ஆறுமுகமாக இருந்தவரை நாவலராகப் பரிணமிக்க வைத்தது எனும் வரலாற்றை அனைவரும் அறிவோம். கிறிஸ்தவப் பரப்புரையாளர்களான பாதிரிமார்களில் பலரும் அர்ப்பணிப்பும் தியாக சிந்தையும் கொண்டு சுதேச மக்களது மனங்களை வென்றெடுக்கக்கூடிய நல்லவர்களாகவும் திகழ்ந்தனர். கடந்த யுத்தகாலத்திலும் எமது பிரதேசங்களில் இயங்கிய படையினர்களில் மக்களைக் கவரும் வகையில் நல்லுள்ளத்துடன் இயங்கிய படையினர் குறிவைத்துக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. யுத்தத்தின்போது மேற்கொள்ளக்கூடிய இந்த நடைமுறையை இயல்பான வாழ்வுக் காலத்தில் மேற்கொண்டிருக்க இயலாது. 

நட்புணர்வுடன் இறை பணியாற்றுகின்ற தனது ஆசிரியருக்கு மக்களால் போற்றப்படும் ஜேசுவின் போதனைகளைத் தமிழாக்கம் செய்வதற்கு உதவிய பின்னர், ஆறுமுகம் என்ற இளைஞருக்கு அச்ச உணர்வு ஏற்பட்டமை எமது வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எமது சொந்தப்பண்பாட்டை உருவாக்கி வளர்த்த சைவத்தை நீங்கிக் கிறிஸ்தவத்தின்பால் பலரும் நாட்டம் கொள்வாராயின் எமக்கான வரலாறு முற்றுப்பெற்றதாக ஆகுமென்ற ஆறுமுகநாவலரின் அச்சம், கல்விப்பணியைச் சைவப் பாடசாலைகள் வாயிலாக முன்னெடுக்க உந்தித் தள்ளியது. இவ்வாறு சைவப்பாடசாலை ஒன்றை வண்ணார்பண்ணையில் தொடங்கும் நோக்குடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொண்டு வந்த ஆசிரியப்பணியைத் துறந்து வெளியேறி இருந்தார்; இவ்வாறு நீங்கியமைக்கான உடனடிக் காரணமாக வேறோர் சம்பவம் இடம்பெற்றிருந்தது எனும் கருத்தும் புறக்கணிக்கத்தக்கதல்ல. 

மத்திய கல்லூரியில் ஒடுக்கப்பட்ட மாணவர் சேர்க்கப்பட்டமையை எதிர்த்தே ஆறுமுகநாவலர் அவ்வாறு வெளியேறினார் எனக் கூறப்படுகிறது; இதனை முன்வைப்பவர்கள், காலனிய எதிர்ப்பைவிடவும் சாதியபிமானத்தைப் பேணுதலே அவரது முதன்மை அக்கறையாக இருந்தது என்பர். எமது பண்பாட்டின் பேரால் விதிக்கப்பட்ட கட்டாய ஊழியத்தை ஒவ்வொரு சாதியினரும் நிறைவேற்ற வழிவகுப்பதாகவே சாதி ஒடுக்குமுறை நீடித்து நிலைபெற வைக்கப்படுகிறது என்பதில் சந்தேகமிருக்க இடமில்லை. சாதியாசாரங்கள் உள்ளவாறே பின்பற்றப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக வற்புறுத்துகிறவராக நாவலர் இயங்கினார் என்பதும் உண்மை. தமிழீழப் போராட்டம் முனைப்பாக இருந்தபோது சாதிப்பிரச்சினையின் தீர்வுக்கான புதிய கோரிக்கைகள் எழுப்பப்படக்கூடாது, அதன் நடைமுறைப்பிரயோகம் அதுவரை எவ்வகையில் இடம்பெற்றவாறு இருந்ததோ, அந்தச் செயலொழுங்கு அவ்வாறே ஒவ்வோரிடத்திலும் பின்பற்றப்பட வேண்டும் என்பது, விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாக இருந்தது; சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையை முறியடிப்பது முதன்மைத் தேவையாக இருக்கும் காலகட்டத்தில், “சாதி பேதம் பாராட்டுவதை ஒழிக்கும் பணியை முன்னெடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைப்பது கைவிடப்பட வேண்டும்; ஈழம் வென்றெடுக்கப்பட்ட பின்னர் சாதிப்பிரச்சினைத் தீர்வுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற இயலும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது. 

சிங்களப் பேரினவாதத்தை முறியடிக்கும் இலட்சியம் இருந்த அளவுக்கு சாதி ஒடுக்குமுறையைத் தகர்த்தாக வேண்டும் எனும் அக்கறை விடுதலைப்புலிகளிடம் இல்லாமல் இருக்கலாம். அதன்பொருட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் மீது புறக்கணிப்புகள் தொடரப்பட வேண்டும் என்ற கருத்து அவர்களிடம் காணப்பட்டது எனக்கூறிவிட இயலாது. சாதி வெறியர்கள் அத்தகைய எண்ணத்துடன் அந்தப் போராட்டத்தை ஆதரித்தார்கள் என்பது மெய்; ஈழம் கிடைத்த பின்னர் தமது ஒடுக்குமுறையைச் சுதந்திரமாக மேற்கொள்ள இயலும் என்ற கருத்தோடு இருந்தவர்கள், அந்தக் குறிக்கோள் நிறைவேறாதபோதிலும் தங்களது சாதிய வக்கிரத்தை மூர்க்கத்தனமாக இப்போது வெளிப்படுத்தியவாறுதான் உள்ளார்கள். மாறாக, தமக்கான விடுதலையும் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தில் இணைந்திருந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பல்லாயிரம் பேர் இருந்தனர் எனும் உண்மையைக் கவனங்கொள்ளாமல் இருக்கவியலாது! 

அவ்வாறேதான், காலனியப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிராக எமது பண்பாட்டைப் பேணிக்காத்தல் எனும் நாவலரிடம் காணப்பட்ட ‘சாதியாசாரங்கள் இதுவரை இருந்து வந்ததைப்போல அப்படியே பின்பற்றப்பட வேண்டும்’ எனும் நிலைப்பாட்டில் தவறுண்டு; காலனியத் தகர்ப்புடன் இணைத்து நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையும் தகர்க்கப்பட வேண்டும் என்பதை ஏற்கத்தவறியபோது, முழுமைப்பட்ட மக்கள் விடுதலை நாவலரால் மனங்கொள்ளப்பட்டு இருக்கவில்லை என்பது தெளிவு. அதன்பொருட்டு, எமக்கான வாழ்வியலின் விருத்திக்கு அவசியமான ஓரம்சமான பண்பாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்வகையில் அந்நிய நுகத்தடியைத் தகர்க்கும் அக்கறை நாவலரிடம் முனைப்புடன் இருந்தது எனும் உண்மையைப் புறந்தள்ளிவிட இயலாது. காலனிய மனப்பாங்கில் எமது பண்பாட்டுப் பலத்தை இழந்து போனதன் பலாபலன் இன்றுவரை தொடர்வதன் காரணமாக, மக்கள் விடுதலைக்கு விரோதமான சக்திகள் எமது பாதையை வகுப்பவர்களாகத் தொடரும்நிலை நீடிக்கக் காண்கிறோம். இன்று மக்கள் விடுதலை தூரப்பட்டு இருப்பது இந்தக் காலனிய உறவைத் தொடர்ந்தவாறு, ஏகாதிபத்திய அணிக்குள் ஈழத்தமிழர் நலன் பிணைக்கப்பட்டு இருப்பதனால்தான் என்ற நிதர்சனம் கவனிப்புக்கு உரியது. ஏற்கனவே வகுக்கப்பட்ட வழக்காறுகளை ஒடுக்கப்பட்ட பிரிவினர் பின்பற்ற வேண்டும் என நாவலர் வலியுறுத்தியதிலுள்ள அம்சங்களை முனைப்பாக்கிப் பேசுகிறவர்கள், வெள்ளாளர்கள் சாதியாசாரங்கெட்டு ஆங்கிலேயரது வாழ்முறையைப் பின்பற்றுதல், நவநாகரிக வாழ்வெனும் மயக்கத்துடன், மட்டுமரியாதையற்ற உணவுப்பழக்கத்திற்கும் குடிபோதைக்கும் அடிமையாகுதல் என்பவற்றை அவர் மிக வன்மையாகக் கண்டிப்பதனைக் கண்டுகொள்வதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களை நிராகரித்து உயர் சாதியினருக்கான பாடசாலைகளை நாவலர் உருவாக்கினார் என்றால், அன்றைய வாழ்வியலில் கல்வி – வேலைவாய்ப்பு என்பவற்றுக்காகக் கிறிஸ்தவராகும் வாய்ப்புடன் இருந்த அந்தச் சமூகத்தளத்தைத் தடுத்தாட்கொள்ளும் வரலாற்று அவசியம் அவரை உந்தித்தள்ளி இருந்தது எனும் உண்மை மனங்கொள்ளப்பட வேண்டும். காலனிய ஊடுருவலை முறியடிக்கும் அடிப்படையான சமூகக் கடமையை முன்னிறுத்தியதன் பேரில் நாவலருக்கான மதிப்பளிப்பை நல்கிய இலங்கை முற்போக்கு இலக்கிய இயக்கம், தனது காலத்து வரலாற்றுப்பொறுப்பு எனும் வகையில் சாதியத் தகர்ப்பு இலக்கிய ஆளுமைகளான கே. டானியல், டொமினிக் ஜீவா உட்பட்ட பலரது பங்களிப்புகளூடாக சாதியத்துக்கு எதிரான பண்பாட்டு எழுச்சியையும் சமூகத் தளத்திலான பல வெகுஜனப் பங்கேற்புக்கான போராட்டங்களையும் செயலுருப்படுத்தி இருந்தது.

‘சாதியின் காவலர் நாவலர்’ என்ற கண்டன முழக்கங்கள் மிகக் கடும் தொனியில் ஒலித்த போதிலும், சாதியத் தகர்ப்புக்காகப் போராடியவர்கள், நாவலரின் வரலாற்றுப் பாத்திரத்தில் மதிப்புணர்வுக்கு உரிய உள்ளடக்கங்களைக் கொண்ட பக்கங்களும் இருந்தன எனக் கணித்துச் செயற்பட்டமையை எவ்வாறு புரிந்துகொள்வது? அதற்குரிய வரலாற்றுப் பின்னணியை இங்கு விளங்கிக்கொள்வது அவசியமாகின்றது!

ஆண்டபரம்பரை

நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் உலக நாடுகள் அனைத்தும் ஐரோப்பியக் காலனித்துவப் பிடிக்குள் இருந்து சுதந்திரம் பெற்று ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என ஐக்கிய அமெரிக்கக் கிறிஸ்தவப் பரப்புரையாளர்கள் அர்ப்பணிப்புடன் புறப்பட்டு அரும்பணி ஆற்றியிருந்தனர். அவ்வாறு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தவர்களும் எமக்கான கல்வி விருத்திக்குக் காரணமாக அமைந்து மிக நீண்ட காலம் உலகப் பரப்பெங்கும் உயர் உத்தியோகங்கள் புரிய வழிசமைத்துத் தந்தனர். அவர்களது ஜனநாயக அக்கறை முதல் எழுபத்தைந்து ஆண்டுகள் அப்பழுக்கற்றதாகவே இருந்தது. எமது தேசங்கள் விடுதலை பெறுவதனை முழு அளவில் அப்போது ஆதரித்தார்கள். சுதந்திரம் பெற்ற பின்னர் எமது நாடுகளை நவகாலனித்துவப் பிடிக்குள் ஆட்படுத்தித் தமது டொலர் மேலாதிக்கம் வாயிலாக உலகனைத்தையும் கொள்ளையடிப்போராக அதே ஐக்கிய அமெரிக்கா மாற்றம் பெற்றிருந்தது!

ஐரோப்பியக் கண்டத்து நாடுகளின் நேரடிக் காலனித்துவம் நிலவியவரை அவர்களை மீறித் தமது சுரண்டல் மோலோங்க இயலாது என்பதனால் அங்குள்ள அதிகாரத் தரப்பினர், சேவை மனப்பாங்குடன் உழைக்க முன்வந்த ஜனநாயக சக்திகளுக்கு உதவி நல்கி எமது மனங்களை வெற்றி கொண்டனர்; நேரடிக் காலனித்துவம் தகர்ந்த பின்னர் சுரண்டல் கும்பலின் கோரமுகம் வெளிப்பட்டுக் கொள்ளையடிப்பது முனைப்படையலாயிற்று. இதன்பொருட்டு முந்திய சேவையாளர்களை நான்கு தசாப்தங்களின் முன்னர் ஊடுருவிய உலகமயமாதல் கொள்ளைக் கூட்டத்துக்குரிய அரசசார்பற்ற நிறுவனத்தார்போலக் கருதிவிட இயலாது; அவர்களது நல்லெண்ணங்களைக் கொச்சைப்படுத்த முனைவது வரலாற்றுப் புரிதலற்ற கபடத்தனமாக இருக்கும். அதேநேரம் அவர்களை ஆதரித்து இயக்கியவர்களின் பின்னால் ஊடாடியவர்களது கொள்ளை லாப வேட்டை மனப்பாங்கையும் எண்ணத்தையும் காணத்தவறக்கூடாது. காலம் பார்த்திருந்த அந்நச் சுரண்டல் கும்பல், ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்  முக்கால் நூற்றாண்டு (1950 – 2025) உலக மேலாதிக்க வெளிப்பாட்டின் ஊடாக அதன் வல்லாதிக்கக் கொடூர முகத்தைக் காண்பித்துள்ளது. 

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக உலகின் முதல்நிலைக்குரிய பொருளாதார உச்சத்துடன் திகழ்ந்த ஐக்கிய அமெரிக்கா இன்று இரண்டாம் நிலைக்குச் சரிந்துள்ளது. நாற்பது வருடங்களாக இன, மத, சாதிப் பிளவாக்கக் குழு மோதல்களை எம்மத்தியில் தூண்டிய அவர்களால், தொடர்ந்தும் அந்த அடையாள அரசியலுக்குத் தூபம்போடும் டொலர்களை வாரியிறைக்க இயலாது. தொண்டு நிறுவனங்கள் பலவற்றுக்கு ஊட்டமளித்த அவர்களது பிரதான நிறுவனம், ஐக்கிய அமெரிகாவின் இன்றைய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஆயினும் அவர்களது பலிக்கடாவாகப் யுத்தத்தை முன்னெடுத்த இனப்பிளவாக்கக் கொடூரத்தில் இருந்து மீள இயலாத வடுக்களுடன் இலங்கையும் யாழ்ப்பாணமும் அல்லாடியபடி உள்ள நிலையில் இருந்து முற்றாக நீங்க இயலாத நிலை இன்னமும் தொடர்கிறது. 

இருநூறு வருடங்களுக்கு முன்னர் எமது நாடுகளை நோக்கிவரத் தொடங்கிய ஐக்கிய அமெரிக்க கிறிஸ்தவ நிறுவனங்கள் முன்னதாகத் தமிழகத்தில் தமது பணியை விரிவாக்கத் திட்டமிட்டன. அப்போது இந்தியா முழுமையும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆளுகைக்குள் இருந்தது; இலங்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலாக நேரடியான பிரித்தானிய முடியாட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டு இருந்தது. ஐக்கிய அமெரிக்கப் பாதிரிகளின் கல்வி நடவடிக்கைகள் இந்தியாவைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பாதக விளைவை ஏற்படுத்தலாம் எனக் கருதிய கம்பனி ஆட்சியாளர்கள் இலங்கையை நோக்கிக் கைகாட்டி இருந்தனர். இங்கும் சிங்கள மக்களைக் ‘கெடுத்துவிட’ வேண்டாம் எனக் கருதி யாழ்ப்பாணம் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. மன்னர் ஆட்சிக்காலம் முதலாக வணிக எழுச்சியுடன் இணைந்த (வர்த்தக ஊடாட்டத்துக்கு அவசியமான) பன்மொழிக் கற்றல் நாட்டமும் அதற்கான வாய்ப்பு வசதிகளும் யாழ்ப்பாணத்தில் இருந்துவந்தது பற்றிப் பொருளியல் பேராசிரியர் வி. நித்தியானந்தம் எடுத்துக்காட்டி உள்ளார். அந்தவளம் ஆங்கிலக்கல்விப் புலத்தாலும் விரிவுபட்டது. இலங்கையில் நீண்டகாலத்துக்கு நீடிக்கக்கூடியதாக ஏகாதிபத்திய நலன் பேணப்பட வேண்டும் என்ற காரணத்தால் யாழ்ப்பாணத்தவர்க்கு அதிகளவில் கல்வி வழங்கும் நடவடிக்கையைப் பிரித்தானிய அரசு மேற்கொண்டது. சுதந்திரம் பெற்ற பின்னரும் இலங்கை முழுவதிலும் உயர் பதவிகளை யாழ்ப்பாணத்தவரே கையகப்படுத்தி இருந்த சூழலை, உரிய வகையில் கையாள இயலாத முடக்கம் சிங்கள ஆட்சியாளரிடம் நிலவியது. யாழ்ப்பாணத்தில் இருந்து உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தப்படும் வகையில் தரப்படுத்தலை மேற்கொண்டு ஏனைய மாவட்டங்களில் இருந்தும் உயர் பதவிகளைப்பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டபோது பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் இளம் தலைமுறையினர் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர். 

சிங்களப் பிரதேசங்களுக்கு உத்தியோகவாய்ப்பு இவ்வகையில் பறிபோன பின்னர், மாற்றுவழி எதையும் நாடாமல் பிரிவினை நாட்டம் கொண்டு யுத்த முனைப்புக்கு ஆட்படும் உந்துதல் எப்படி ஏற்பட்டது? நானூறு ஆண்டுகளின் முன்னர் போர்த்துக்கீசரிடம் ஆட்சி உரிமையை இழந்த யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய உத்வேகம் தான் ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை’ எனக் கோசமிட வைத்ததா?

தரப்படுத்தலில் யாழ்ப்பாணத்தவரது பல்கலைக்கழகப் பிரவேசம் மட்டுப்படுத்தப்படுவதற்கு முன்னர்வரை எமது கல்விப்புலத்தில் இலங்கை இலக்கியம் குறித்த ஆர்வத்தூண்டலுக்கான எந்தவொரு அடிப்படையும் இருந்ததில்லை. ஈழத்தில் இலக்கிய ஆர்வமின்றித் தமிழக இலக்கியத்துக்குள் மூழ்கித் திளைத்தபோது யாழ்ப்பாண இராச்சிய வீறாப்பு எங்கிருந்து வரும்? தரப்படுத்தலின் சமகாலத்தில் (1972 ஆம் ஆண்டையடுத்து) இலங்கை முற்போக்கு இலக்கிய இயக்கம் எமக்கான கலை – இலக்கிய விருத்தியை ஏற்படுத்துவதன் பொருட்டு, தமிழகத்தின் கலை – இலக்கியப் படைப்புகளது இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும்படி கோரியிருந்தது; அதன்பேரில் அவசியமான நல்ல படைப்புகளைத் தவிர்ந்த ஏனைய வேண்டாத குப்பைகளெனக் கணிக்கத்தக்கன இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டபோது ஈழத்து இலக்கியம், சஞ்சிகை வெளியீடுகள், நூலாக்கங்கள், ஈழத்தமிழ் சினிமா எனப் பல்துறை வளர்ச்சிகள் இங்கே சாத்தியப்பட்டன. அப்போதுதான் எமது கல்விப்புலத்திலும் ஈழத்தமிழ் இலக்கிய வரலாறு, ஈழத்துப் படைப்புகள் குறித்த ஆய்வுகள் என்பன இடம்பிடிக்கத் தொடங்கின. 

எமது படைப்புலகம் விரிவடைய முன்னர் தமிழக ஆக்கங்களின் வாசகர்களாக இருந்ததைப்போன்றே, தமிழிலக்கிய வரலாறு எனில் தமிழகப் படைப்புச் செல்நெறியைப் (அதனூடாகத் தமிழக அரசியல் வரலாற்றைப்) படித்து வந்தநிலை எழுபதாம் ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. அந்தவகையில் இளைஞர்களை ஆயுதமேந்தத் தூண்டிய ‘ஆண்ட பரம்பரைக்’ கனவு முற்றுமுழுதாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களை முன்னிறுத்தியதாகவே தொடங்கப்பட்டது. காலப்போக்கில் சங்கிலியன், பண்டாரவன்னியன் போன்றோர் அரங்குக்கு வரலாயினர் (வரலாற்று உணர்வுடன் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களால் ஏற்கனவே எழுதப்பட்ட ‘சங்கிலியன்’ நாடகம் பின்னர் கவனிப்பைப் பெற்றமைக்கு இக்காலப்பின்புலம் அடிப்படையாக அமைந்தது; இன முரண்பாடு கூர்மையடையத் தொடங்கியபோது ‘பண்டாரவன்னியன்’ நாடகத்தை எழுதியிருந்த முல்லைமணி அவர்கள் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ உல்டாபண்ணப்பட்டு தம்மால் எழுதப்பட்டது என்பதனைக்கூறி, பின்னர் பண்டாரவன்னியன் குறித்த தேடலை முனைப்பாக்கி உண்மைத் தன்மைகளை ஆய்வுக்கட்டுரைகளாக வெளிப்படுத்தி இருந்தார்). 

பேரினவாதம் மேற்கொண்ட திட்டமிட்ட புறக்கணிப்புகளுக்கு எதிராக ‘விடுதலை உணர்வை’ இளைஞர்கள் இடையே தீவிரமாகத் தூண்டி வளர்த்த தமிழ்த் தலைமையானது அதனை தமக்கான தேர்தல் வெற்றிக்கு உரிய அளவில் கையாள விரும்பினர். உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டதனால் (ஏனைய தரப்பினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது நியாயமாக இருந்தபோதிலும், வரலாற்றுரீதியாகக் கல்வியினூடகவே தமது வாழ்க்கைக்கான அடிப்படைகளைத் தேடிவந்த சமூகம் ஒன்றுக்கு மாற்று நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்; அதனைச் செய்யத்தவறியமை ‘புறக்கணிப்பு’ என்பதன் பாற்பட்டதே. எண்பதாம் ஆண்டுகளில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட பின்னரே இன ஒடுக்குமுறை எனும் வடிவம் தொடக்கம் பெற்றது.) அரசியல் எழுச்சிக்கு ஆட்பட்ட இளைஞர்கள் தலைவர்களது, எல்லைகளை மீறி மார்க்சியத் தேடலில் இறங்கினர். ஆயினும், முன்னதாகத் தீர்மானிக்கப்பட்ட தனித்தமிழீழம் என்ற வரையறைக்குள் அவர்கள் முடங்கி இருந்த காரணத்தால், இத்தகைய இளைஞர் நாட்டம் முளையில் கருக்கப்பட்டு, ஈழப்போராட்டத்தை பேச்சளவில் தொடக்கிவைத்து வளர்த்துவந்த ஏகாதிபத்திய நலன்பேணும் அணி, தமக்கானதாகத் தமிழீழ அரசியல் தொடரப்படுவதற்கு ஏற்ற வாய்ப்பைப் பெற்றுக்கொண்டனர். பிரச்சினைகளின் தீர்வுக்கான வழிமுறைகளை நாடுவதைவிட “அடைந்தால் தமிழீழம், இல்லையேல் வீர மரணம்” என்ற மூடியபாதையின் வழியில் ஆற்றுப்படுத்தப்பட்ட வரலாறு, சொந்த மண்ணில் பாரிய இழப்புகளைச் சந்தித்து முடக்கப்பட்டது. ஆயினும் அந்தத் திசைவழியைத் தேர்ந்தெடுத்த மேலாதிக்கத் தமிழ்த்தேசியம் புகலிட ஏகாதிபத்தியக்களத்தில் தமக்கான வாழ்வாதாரத்தை ‘வென்றெடுத்து’ தொடர்ந்தும் ஏகாதிபத்திய ஊடுருவலுக்கான வெளியை இங்கே செயலுருப்படுத்தி வருகின்ற ‘சாதனையை’ நிலைநாட்டி உள்ளமை கவனிப்புக்கு உரியது!

இவ்வகையான மேலாதிக்கவாத நாட்டத்துடன் தமிழ்த்தேசியத்தை மடைமாற்றி விடுதலைத் தேடலுடன் இருந்த ஏனைய அணிகளைக் களத்தைவிட்டு அப்புறப்படுத்திய விடுதலைப் புலிகள் தமக்கானதாக சோழப்பேரரசின் புலிக்கொடியை ஏந்தினார்கள் என்பது தற்செயலான ஒன்றல்ல. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், அன்றைய உலகில் அதுவரை எங்குமே இல்லாதிருந்த மிகப்பெரும் கடற்படையுடன் உலகில் முதல் தடவையாகப் பல ஆயிரம் கிலோமீற்றர்கள் கடந்து தொலைதூரத்திலுள்ள பேரரசொன்றை (இன்றைய மலேசியா, வியட்னாம், இந்தோனேசியா பகுதிகளை உள்ளடக்கியிருந்தது) வென்றடக்கிய ஆக்கிரமிப்புச் சோழப்பேரரசுப் படையின் வழித்தோன்றல்களாகத் தம்மை உணர்ந்த மேலாதிக்கத் தமிழ்த்தேசியம் சமகாலத்து ஏகாதிபத்திய அணியுடன் இணைந்து கொள்வதில் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை!

ஒடுக்குமுறையை நகர்த்தல்

அன்றைய உலகின் அதியுச்ச மேலாதிக்கச் சக்தியாகத் திகழ்ந்த தமிழகம், அத்தகைய ஆற்றலைப்பெற இயலுமாக இருந்தமைக்கு, அடிப்படைச் சாதி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் ஒன்றுபடுத்தி வைத்திருந்தமையே காரணம் ஆகும். உலக நாடுகள் அனைத்தில் இருந்தும் வேறுபட்டதாகத் தமிழகத்தில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பெருநகர்க் கட்டுமானமும் கைத்தொழில் விருத்திக்கான தொழிற்பட்டறைகளும் உருப்பெறுவதற்கு அடிமைகளின் உழைப்புப் பயன்படுத்தப்பட்டு இருக்கவில்லை. ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு பிறர் உழைப்பை அபகரிக்கும் விவசாயப் பெருக்கம் (அதனூடாகப் பெரும்படைக்கு உணவளித்து ஆக்கிரமிப்புச்) சாத்தியப்பட்ட பின்னரே வேறெந்தவொரு சமூகத்திலும் இதுபோன்ற நகர்க்கட்டுமானமோ பண்பாட்டு எழுச்சியோ உருவாகி இருந்தமை பொதுவழக்கு. இந்தத்தனித்துவ அம்சம் இன்னமும் ஆய்வுலகின் கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழகத்தில் இயற்கை விளைபொருட்கள் (ஏலம், கறுவா, கராம்பு, மிளகு, மாணிக்கம், வைரம், முத்து) வர்த்தகப் பெறுமதிக்கு உரியனவாக அமைந்து உருவான வணிகப் பெருக்கம் குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய திணைகளில் வேளிர் எனும் இனமரபுக்குழுத் தலைமை ஆட்சியுடன் பண்பாட்டு விருத்தியைச் சாதிக்க வழிகோலி இருந்தது. பிறரை ஆக்கிரமிக்கும் அவசியமின்றி தமக்குள்ளும் திணைகள் ஒவ்வொன்றின் இடையேயும் சமத்துவத்தைப் பேணியவாறு மூன்று நூற்றாண்டுகளுக்கு அன்றைய உலகின் மேலான நாகரிகச் செழுமையுடன் இலக்கியங்கள் படைக்கத் தமிழுக்கு வாய்த்திருந்தது. விவசாய எழுச்சி முன்னதாக ஏற்பட்ட பின்னர், பண்பாட்டு எழுச்சியைப் பெற்றிருந்த ஏனைய சமூகங்களில், புவியமைப்பு வேறுபாடுகளைத் திணையாகக் கவனங்கொண்டு இலக்கிய, இலக்கணத்தை வகுக்க இயலாதிருக்கவும்; தமிழுக்கு திணைக்கோட்பாடு சாத்தியப்பட்டதற்கும் இதுவே அடிப்படை!

அத்தகைய சமத்துவம், மூன்று நூற்றாண்டுகளின் பின்னர், கி.மு 3 ஆம் நூற்றாண்டில் மருதத்திணை மேலாதிக்கம் ஏனைய திணைகளை வென்றடக்கி சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளை உருவாக்கிய பின்னர் அற்றுப்போனது. அதன்நீடிப்பு நான்கு நூற்றண்டுகள் நிலவிய பின்னர் மூவேந்தர் ஆட்சிப்பரப்புகள் தகர்க்கப்பட்டு பலநூறு சிற்றரசுகளைச் சாத்தியப்படுத்திய களப்பிரர் ஆட்சிக்காலம் அரங்கேறியபோது, விவசாய மேலாண்மை ஒழிக்கப்பட்டு வணிக மேலாதிக்கம் நிதர்சனமாகியது. இந்தச் சமூகமாற்றச் சந்தியில் தோன்றிய திருக்குறள், வணிகம் – விவசாயம் எனக்கூறுபட்ட இரு சமூகசக்திகளில் எந்தவொன்றையும் சாராமல் (எத்தகைய மேலாதிக்கத்தையும் நிராகரித்து, வரலாற்றுத் தொடக்கம் முதல் மூன்று நூற்றாண்டுகளாய் வழக்காறாக நிலவிய சமத்துவ நோக்குடன்) அனைத்துத் தொழில்களையும் சம அளவில் போற்றுவது எனும், உலக இலக்கியப்பரப்பில் தனித்துவமிக்க பண்புத்திறத்தை வெளிப்படுத்தியது!

சாதி பேதங்களைக் கண்டித்து அனைவரும் ஒப்பானவர்கள் என முழங்கிய திருக்குறளை வெளிப்படுத்திய தமிழ்ப்பண்பாட்டுத் தனித்துவம், சோழப்பேரரசர் காலம்வரை (சாதிய வாழ்வியல் ஏற்பட்டிருந்தபோதிலும்) அனைவரும் ஒன்றுபட்டுப் போராடி அன்றைய ‘உலகை’ மேலாதிக்கம் புரிய வழிப்படுத்தி இருந்தது. இந்த வெற்றியின் மமதை, பிறர் உழைப்பை அபகரித்து வந்து, தமிழகத்தைச் சொர்க்கபுரியாக ஆக்குவதற்கு இட்டுச்சென்றது. போர்க்குணத்துடன் வரலாறு படைப்பதற்குத் தலைமை தாங்கிய மருதத்திணையின் மேலாதிக்கத்தரப்பு வேளாண்மை புரிந்து வேளாளர் என ஆகிக்கொண்டு, தம்மை ஆதிக்கசாதி எனக் கருத்தியல் கட்டமைப்புச் செய்யும் பிராமணர்களுக்கு நிலதானம் செய்து அரவணைத்துக் கொண்டது. சாதியச் சழக்குகள் பெருகவும், சமூக ஒற்றுமை குலையத் தொடங்கியது. தலைமைச் சக்தியான வேளாளர் தமக்கான போர்த்திறனை வற்றடிக்கும் ஆதிக்கசாதி மேட்டிமைப் பண்புகளை வளர்த்தனர். 

ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் நீடித்த சோழப்பேரரசு பல சாதனைகளைப் படைத்திருந்தது; பிரதானமாக இந்திய வரலாற்றிலேயே நீண்டகாலத்துக்கு நீடித்து நிலவிய பேரரசு, இந்தியாவில் நிலவிய வேறெந்தப் பேரரசைக் காட்டிலும் மிகப்பெரும் விஸ்தீரணத்தை வென்றடக்கி இருந்ததோடு, இந்தியாவில் கப்பல் படையைக் கொண்டிருந்த ஒரேயொரு பேரரசு எனும் சாதனைகள் வரலாற்றாசிரியர்களால் விதந்துரைக்கப்படுவன. அத்தகைய ஆளுமையைத் தமிழகம் கைநழுவிப் போய்விடுமாறு இருந்துவிட, சாதிபேதப் பிளவாக்கத்துக்கு ஆட்பட்டமை முதன்மைக் காரணம் எனலாம். ஆந்திராவில் உருவாகி விரிவாக்கம் பெற்ற விஜயநகரப் பேரரசர் ஆட்சியின் கீழ் சோழநாடு வென்றடக்கப்பட்ட பின்னர், பிராமணர்கள் தம்மைப் புனிதச் சாதியெனச் சொல்வதற்காக, அவர்களுக்கு அதீதப் புனிதம் கற்பித்த தமது தவறினை வெள்ளாளர்கள் உணர்ந்து கொண்டனர். பிராமணரது வந்த-வேதாந்த-பிரம்ம சூத்திரங்களைவிடத் தமது தத்துவமேன்மை அதி உயர்ந்தது எனக்காட்டும் சைவசித்தாந்தத்தை 13 ஆம் நூற்றாண்டில் வெள்ளாளர் மடங்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.

அதேநூற்றாண்டு தென்தமிழகத்தில் ஏற்பட்ட ஒரு முரண்பாட்டின் காரணமாக வெள்ளார்கள் பதினெட்டுச் சாதிகளுடன் வந்து யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துக்கொண்டனர். அவர்களால் கட்டமைக்கப்பட்ட புதிய யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர் பரம்பரை ‘ஆரியச் சக்கரவர்த்திகள்’ என அடையாளப்படுத்தப்படனர்; தொண்டூழியம் செய்யவெனக் கொண்டுவரப்பட்ட பதினெட்டுச் சாதிகளைப் பரிவாரமாக இணைத்தவாறு, இங்கு ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்களில் குடியிருப்பதற்கு வெள்ளாளர்களுக்குச் சாதியம் அவசியப்பட்டது. தலைமையாக ஆரிய நாமமும் தேவையாக இருந்தது. கோயில் தொண்டூழியம் புரிந்து தம்மைச் சற்சூத்திரரென மேன்மைப்படுத்தும் பிராமணர்களையும் கொண்டுவந்தனர்; ஒரு நூற்றாண்டுக்கு முன்னராகத் தமது ஆட்சி உச்ச நிலையில் நிலவியவரை, எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றம் பற்றிய புரிதலின்மையால் இழைத்துவிட்ட தவறினைப்போல, இங்கே பிராமணரை நிலச்சொந்தக்காரராக்கும் தவறினை நிகழ்த்தாமல் பார்த்துக்கொண்டனர்.

தமிழகத்தில் தெரியாத்தனமாகச் சரியாசனத்தைப் பிராமணருக்கு வழங்கியபோது சூரிய-சந்திரர் உள்ளவரை தமது அரசியல் மேலாதிக்கம் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்ற கற்பிதம் வெள்ளாளரிடம் இருந்தது. ஆட்சியதிகாரம் பிறமொழி பேசுகின்ற மன்னரிடம் இழக்கப்பட்ட பின்னர் ‘வேதங்களின் நாடு பாரதம்’ என்பதற்குள் அடங்கும் பகுதியாகத் தமிழ்கூறு நல்லுலகம் ஆகிவிட்ட அனுபவத்தில், யாழ்ப்பாணத்தைச் சைவசித்தாந்த மேலாதிக்கத்துக்கு உரியதாகவும், ஈழமண்டலம் முழுமையையும் சிவபூமியாகவும் வடிவப்படுத்திக் கொண்டனர். ஐரோப்பியர் ஆட்சிக்கு ஆட்பட்ட காலத்திலும் சைவசித்தாந்த ஆயுதத்தை வலிமையுடன் பேணிவந்ததன் பேறு, நாவலர் அதனைக் கையேற்க வழிவகுத்தது. முன்னதாகப் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலங்களில் சட்டபூர்வமாகக் கிறிஸ்தவர்களாகப் பதிவுசெய்து கொண்டு, மனதளவில் சைவத்தை வரித்துக்கொண்டு வாழ்ந்தனர். ஆங்கிலேயர் ஆட்சி, மதச் சுதந்திரத்தை வழங்கியபோது பலரும் தமக்கான கிறிஸ்தவ மேற்போர்வையை நீக்கினர். அதேவேளை உயர்படிப்பு, பட்டம், பதவி என்பன கிறிஸ்தவர்களுக்கே எனும் ஆங்கில ஆட்சியாளரின் நிலைப்பாடு காரணமாக, சமூக ஆதிக்க நாட்டம்மிக்கோர் மனச்சாட்சியையும் கிறிஸ்தவத்திடம் ஒப்புவிக்கும்நிலை வந்தபோது காலனித்துவத்துக்கு எதிரான போராயுதமாக நாவலர் சைவசித்தாந்தத்தை முன்னிறுத்தினார். அதனிடமுள்ள மேலாதிக்கப்பண்பு எத்தனை வலியதோ, அதேயளவுக்குக் காலனித்துவ அடிமைத்தளைக்கு எதிரான போராயுதமாகும் வரலாற்றுப் பாத்திரமும் அதற்கு வந்தமைந்தது. அதனைக் கையாண்ட ஆறுமுக நாவலர் குறித்த மறுவாசிப்புகள் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்!


ஒலிவடிவில் கேட்க


About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்