வடக்கு - கிழக்கு மாகாணங்களின் பொதுவசதிச் சேவைகளில் குடிநீர் வழங்கற் சேவை
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
10 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொதுவசதிச் சேவைகளில் குடிநீர் வழங்கல் சேவை

April 22, 2025 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

தெற்காசியாவில், சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகள், பொது இடங்கள், பெரிய தனிமைப்படுத்தப்பட்ட அலுவலக வளாகங்கள், பாதுகாப்பு நிறுவனங்களான காவல் நிலையங்கள், படை முகாம்கள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களிலும், நகர்ப்புறக் குடியிருப்புப் பகுதிகளிலும் முறையான நீர் வழங்கல் சேவையானது அவசியமும் அவசரமுமான விடயமாக உள்ளது. இந்தவகையில் நிலத்தடி நீரின் பாதுகாப்பும், முறையான மனிதக் கழிவகற்றல் பொறிமுறையும் அதீத கரிசனைக்குரிய விடயங்களாக உயர்ந்துள்ளன. மனிதக் கழிவுகளை பொறுப்பற்றமுறையில் கண்மூடித்தனமாகக் கொட்டுவதன்மூலம் நீரோட்டங்களும் நிலத்தடி நீரும் மாசுபடுத்தப்படுவதால், சுற்றாடல் சீர்கேடு ஏற்படுகிறது. இந்த மாசடைவினால் சுத்தமான குடிநீருக்கான தேவையைப் பூர்த்தி செய்யவும், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும், அரச வருவாயிலிருந்து பெருந்தொகை நிதியைச் செலவிட வேண்டியநிலை உருவாகியுள்ளது.

இலங்கையில் சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர்ச் சேவைகளை வழங்கும் பொறுப்பு உள்ளூராட்சி சபைகளான மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, கிராமிய நீர் வழங்கல் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தவகையில், இலங்கையில் 93.6% முன்னேற்றகரமான சுகாதார வசதிகள் வழங்கப்படுகின்றன; இதில் 1.4% ஓரளவு வசதியளிப்புடையதாகவும், 4% முன்னேற்றமற்றதாகவும், 1% திறந்த அணுகலற்றதாகவும் காணப்படுகிறது. 2020 ஆம் ஆண்டின் நிலவரப்படி மக்கள்தொகையில் 11% தங்கள் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றமுடியாதவர்களாக உள்ளனர்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, 2030 இல், குழாய்க் கழிவுநீர் வடிகால் வசதிகளை 2.1% இலிருந்து 4.4% ஆக உயர்த்த முடியும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின்கீழ் அனைவருக்கும் அடிப்படைச் சுகாதாரம், திறந்தவெளியில் மலம் கழிப்பதை முடிவுக்கு கொண்டுவருதல், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியீட்டின் விகிதத்தைப் பாதியாகக் குறைத்தல், மீள்சுழற்சி மற்றும் பாதுகாப்பான மறுபயன்பாட்டை மேம்படுத்தல் என்பவை 2030 இற்குள் அடையவேண்டிய இலக்குகளாக அமைந்துள்ளன. சுகாதாரமான குடிநீர் தொடர்பான சவால்கள் உலகளாவிய மட்டத்தில் காணப்படுகின்றன. மனிதகுலத்தின் வாழ்வில் நீர் ஒரு தவிர்க்க முடியாத வளமாகும். பூமியில் புதுப்பிக்கத்தக்க நன்னீர் வெறும் 0.3% மட்டுமே காணப்படுகிறது. மேற்பரப்பு நீர், நதியோட்டம், நிலத்தடி நீர் மற்றும் உறைந்த நீர் ஆகியவையே நீர் விநியோக ஆதாரங்களாக அமைகின்றன. நீர்ப்பற்றாக்குறை, நீர்மாசடைவு, நீருடன் தொடர்புடைய மோதல்கள், காலநிலை மாற்றம் ஆகியவை நீர் வளங்களை அச்சுறுத்தும் காரணிகளாக உள்ளன. புதுப்பிக்கத்தக்க நீர் வளங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலில், இலங்கை 90 ஆவது இடத்தில் காணப்படுகிறது. 

வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நகர்ப்புறப் பகுதிகளும் பருத்தித்துறைப் பகுதியும் நீர் மாசடைவால் மிக அதிகமாகப் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளன; ஏனைய மாவட்டங்களும், யாழ்ப்பாண மாவட்டத்தின் பிற பகுதிகளும் மிகக் குறைந்த பாதிப்புடைய பகுதிகளாகக் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் கரையோரப்பகுதிகள் உயர் மாசடைவால் பாதிக்கப்பட்டுள்ளன; ஏனைய பகுதிகள் மிகக் குறைவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2030 இற்கான எதிர்வுகூறல் ஆய்வின் அடிப்படையில், இந்தப் பாதிப்புகள் இப்பகுதிகளில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் காட்டப்படுகிறது. பாதுகாப்பற்ற முறையில் நிர்வகிக்கப்படும் மனித மலக்கழிவுகள், பாதுகாப்பான சாக்கடைக்குழிகள் இல்லாமை, கழிவுகளை பொறுப்பற்றமுறையில் அகற்றுதல் போன்றவை, நீர் சுத்திகரிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படும் பகுதிகளில் அதிக ஈ.கோலை மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இதனைக் கட்டுப்படுத்த எந்தச் சரியான நடவடிக்கைகளும் எடுக்கப்படாதநிலையில் பேரழிவு ஏற்படும் சிக்கலும் உருவாகி வருகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்க் குளத்தில் பாசிகள் கண்டுபிடிக்கப்பட்டமை, இந்த நிலைமைகள் அந்தப்பகுதிகளிலும் ஏற்பட்டதைக் காட்டுகிறது. இலங்கையின் பெரும்பான்மை மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். மொத்தச் சனத்தொகையில் 77.4% மக்கள் கிராமப்புறங்களிலும், 18.2% மக்கள் நகர்ப்புறங்களிலும், 4.4% மக்கள் தோட்டப்புறங்களிலும் வசிக்கின்றனர். இதில் நகர்ப்புற மக்களிலிருந்து 80% மக்களும், கிராமப்புற மக்களிலிருந்து 20% மக்களும் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட தூயநீரைப் பெறும் வசதியுடன் உள்ளனர்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் நீரைச் சுத்திகரித்து வழங்கும் பாரிய சுத்திகரிப்பு நிலையங்கள் காணப்படுகின்றன. திருகோணமலையில் 4 உம், மட்டக்களப்பில் 6 உம், அம்பாறையில் 14 உம் என மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 24 சிறியளவிலானா நீர்ச் சுத்திகரிப்பு நிலையங்களும், திருகோணமலையில் 12 உம், மட்டக்களப்பில் 13 உம், அம்பாறையில் 14 உம் என மொத்தமாக 39 கிராமிய நீர் வழங்கல் திட்டங்களும் காணப்படுகின்றன. கிராமிய நீர் வழங்கல் திட்டங்களில் 8 திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் செயற்படாமல் உள்ளன. ஆனால், கிழக்கு மாகாணம் பல்வேறு நீர் வழங்கல் மூலங்களின் மூலம் 9,903 மில்லியன் கன மீட்டர் சுத்தமான நீரை வழங்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. மேலும், இம்மாகாணத்தில் 10,110 நீர் இணைப்புகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.

யாழ்நகர நீர் வழங்கல் திட்டம், மூதூர்நகர நீர் வழங்கல் திட்டம், ஓட்டமாவடிச்சோலை நீர் வழங்கல் திட்டம் என்பன 2021 – 2025 இற்குள் பூர்த்திசெய்யப்படுவதற்காகச் செயற்படுத்தப்படும் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத் திட்டங்களாக உள்ளன. 2020 – 2030 இற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பருத்தித்துறை நீர் வழங்கல் திட்டம், திருகோணமலை நீர் வழங்கல் திட்டம், தாழங்குடா நீர் வழங்கல் திட்டம் ஆகியன முடிவுறுத்தப்படும்போது, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 11 பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் செயற்படக்கூடியதாக இருக்கும். இதனுடன் இணைந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி பாரிய நீர்வழங்கல் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள கடல்நீர்ச் சுத்திகரிப்புத் திட்டங்கள், நீர் வழங்கல் முறையில் பாரிய முன்னேற்றம் ஒன்றை எடுத்துவரவுள்ளது. இத்துடன் முன்னுரிமைப்படுத்தப்பட்ட, திட்டமிடப்பட்ட நகரச்சாக்கடைத் திட்டங்களாக இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 20 திட்டங்களில் 4 திட்டங்கள், வடக்கு – கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியுள்ளன. 13,300 மீற்றர் கியூப் நீரை நாள் ஒன்றுக்குச் சுத்திகரிக்கக்கூடிய யாழ்ப்பாணநகர கழிவுநீர்த் திட்டமானது 80,000 மக்களின் நலனை மேம்படுத்தும் திட்டமாகக் காணப்படுகிறது. காத்தான்குடி நகரத்தில் அமைக்கப்படும் சாக்கடைக் கழிவுநீர்த் திட்டம், நாளொன்றுக்கு 10,500 கன மீற்றர் கொள்ளளவைக் கொண்டதாகும்; இது 53,232 குடும்பங்களுக்கு நன்மைதரக்கூடிய திட்டமாகும். இத்திட்டம் ஏற்கனவே செயற்படுத்தப்படுவதற்கான கொள்கைத் தீர்மானத்தைப் பெற்றுள்ளது. இத்தோடு, திருகோணமலை நகரம் மற்றும் மட்டக்களப்பு நகரம் ஆகிய இடங்களில் இரண்டு திட்டங்களும் தயார்ப்படுத்தப்பட்டு, நிதி பெறுவதற்காகக் காத்திருக்கின்றது. 

கழிவுநீர்ச் சாக்கடைத் திட்டங்களின்மூலம் மீட்டெடுக்கப்படும் நீரை, தொழிற்சாலைச் செயன்முறை, சுற்றாடல் மறுசீரமைப்பு, விவசாயம் மற்றும் நீர்ப்பாசன மறுபயன்பாடு போன்ற பொருளாதார நன்மை பயக்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். குடிக்க முடியாத நோக்கத்துக்காக மீட்டெடுக்கப்படும் நீரைப் பயன்படுத்துவது, தற்போதுள்ள குடிநீர் விநியாகத்திலுள்ள அழுத்தத்தைக் குறைக்கின்றது. நீர்ப்பாதுகாப்பு நிலைத்தன்மை மற்றும் ‘மீள்சுழற்சிக்கு உள்ளாகக்கூடிய கழிவு ஒரு வளம்’ என்ற கருத்தியலை அடிப்படையாகக்கொண்ட சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் மறுபயன்பாடு ஆகியவை, கழிவுநீர் முகாமைத்துவத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளடக்கப்படுகின்றன.

நீர் தொடர்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகள்

அ) தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாததால், உள்ளூராட்சி நிர்வாகத்தின் கீழுள்ள பெரும்பாலான சாக்கடைகள், பரிகரிப்பு நிலையங்களின், இயக்கமும் பராமரிப்பும் மோசமடைந்துள்ளன. இதனைத் தரமுயர்த்துவதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை பழுதுபார்த்தல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.

ஆ) இலங்கையிலுள்ள மருத்துவமனைகளின் பெரும்பாலான கழிவுநீர் பரிகரிப்பு அமைப்புகள் (Devats), அதன் மோசமான பராமரிப்புக் காரணமாக செவ்வனே செயற்படாதுள்ளது. குறிப்பாக தனியார் வைத்தியசாலைகளிலுள்ள கழிவுநீர் பரிகரிப்பு அமைப்புகளையும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை கண்காணிக்க வேண்டும்.

இ) ஒவ்வொரு பாடசாலையிலும் போதுமான மற்றும் தரப்படுத்தப்பட்ட கழிவறைகள், சுகாதாரவசதிகள் இருக்க வேண்டும். குறிப்பாக, மகளிர் பாடசாலைகள் மாதவிடாய் தேவைக்கான வசதிகளுடன், அவற்றை அகற்றும் உகந்த வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும். இதில் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்.

ஈ) பொதுமக்களின் சாக்கடைத் தாங்கிகள் காலி செய்யப்படும்போது, அவை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படல் வேண்டும். இதில் உள்ளூராட்சி சபைகள் மிகுந்த அக்கறையுடன் செயற்படுதல் வேண்டும்.

உ) மருத்துவமனைகள், பாடசாலை மற்றும் தனியார் கல்விநிலையங்கள், சிறைச்சாலைகள், வீட்டுத்திட்ட தொடர்மாடிக் குடியிருப்புகள், தொழில் பேட்டைகள், சாக்கடை அமைப்புகள், கழிவுநீர் நிலையங்கள் என்பனவற்றின் முகாமைத்துவத்தைத் திட்டமிடும்போது, கழிவுநீர் பரிகரிப்புப் பற்றிய தெளிவான திட்டமொன்றைத் தயார்ப்படுத்த வேண்டும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மலக்குழிகள் இல்லாமை, பாதுகாப்பாக மலக்கழிவை அகற்ற வசதியான மூடிய குழிகள் இல்லாமை என்பன பிரதான பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் 13,405 குடும்பங்களும், மன்னாரில் 3,879 குடும்பங்களும், வவுனியாவில் 6,226 குடும்பங்களும், முல்லைத்தீவில் 8,033 குடும்பங்களும், கிளிநொச்சியில் 8,756 குடும்பங்களும் பாதுகாப்பான மலசலகூட வசதியற்ற குடும்பங்களாகத் தற்போதும் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் 22,102 குடும்பங்களும், அம்பாறையில் 16,897 குடும்பங்களும், திருகோணமலையில் 10,648 குடும்பங்களும் பாதுகாப்பான மலசலகூட வசதியற்ற குடும்பங்களாகக் காணப்படுகின்றன. 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 61,855 குடும்பங்களும், மன்னாரில் 10,574 குடும்பங்களும், வவுனியாவில் 18,482 குடும்பங்களும், முல்லைத்தீவில் 10,980 குடும்பங்களும் கிளிநொச்சியில் 12,511 குடும்பங்களும் கழிவுத்தொட்டிகள் மேம்படுத்தப்பட வேண்டிய குடும்பங்களாக இனங்காணப்பட்டுள்ளன. இதேபோல, மட்டக்களப்பு மாவட்டத்தில் 59,523 குடும்பங்களும், அம்பாறை மாவட்டத்தில் 42,757 குடும்பங்களும் இந்த மேம்பாட்டின் அவசியமுடைய குடும்பங்களாக இனங்காணப்பட்டுள்ளன. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புசபை, இதற்குத் தேவையான நிதி மதிப்பீட்டை மேற்கொண்டு, 2021 – 2030 இற்கான அவர்களின் பாரிய சுகாதாரத் திட்டத்தினுள் அதனை உள்ளடக்கியிருந்தாலும், இதுவரை இதற்குரிய நிதியீட்டம் பெறப்படவில்லை.

நீர் வழங்கல் தொடர்பில் அதிக பிரச்சினை காணப்படும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளூராட்சி சபைகளும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணைந்து 29 சிறியளவிலான நீர் வழங்கல் திட்டங்களைச் செயற்படுத்தி, நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்கள் என்ற அடிப்படையில் மக்களுக்கு குடிநீர் வழங்கலை மேற்கொண்டு வருகின்றன. இது பெரும்பாலும் வீதியோரப் பொதுக்குழாய்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றது. இங்கு 7,000 வரையிலான வீட்டு நீரிணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நெடுந்தீவிலும், நயினாதீவிலும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 650 நீரிணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

குழாய்வழி நீரிணைப்பை 4 சதவீதம் மட்டுமே பெற்றுக்கொண்டு, நீர் நெருக்கடியுடன் வாழும் யாழ்ப்பாணப் பிரதேசத்துக்கு, நாள் ஒன்றுக்கு 50,000 கன மீற்றர் நீர் தேவைப்படுகிறது. 2028 இன் சனத்தொகைத் தேவைப்பாட்டின்படி, இது 88,500 கன மீற்றராக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தாழையடியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீர்ச் சுத்திகரிப்புத் திட்டத்தினூடாக, நாள் ஒன்றுக்கு 24,000 கன மீற்றர் நீரை நன்னீராக்கி வழங்கும் திட்டமும், மன்னார் மாவட்டத்திலிருந்து பாலியாறு கருத்திட்டத்தின்மூலம், அருவியாற்றிலிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு, குழாய்வழி மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வழங்கும் கருத்திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 50,000 மீற்றர் கியூப் கொள்ளளவு கொண்ட இத்திட்டத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளின் குடிநீர்த் தேவைக்காக பாரிய குடிநீர்த் திட்டமொன்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் நாள் ஒன்றுக்கு 23,257 மீற்றர் கியூப் நீர் சுத்திகரித்து வழங்கப்படவுள்ளது. இதனூடாக 35,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான நீர்வசதி உறுதி செய்யப்படவுள்ளது.

இந்தவகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் குடிநீர்ச் நலச்சேவைகளை ஆராயும்போது, தேசிய அளவில் 55 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான குடிநீரைப் பெறுகின்ற நிலையில், இம்மாகாணங்களில் 20 முதல் 25 சதவீதத்திற்கும் குறைவான மக்களே பாதுகாப்பான குடிநீரைப் பெறுகின்றனர். இது இவ்விரு மாகாணங்களினதும் குடிநீர் வசதிப்படுத்தலில் இன்னமும் பாரிய முதலீடுகள் செய்யப்பட வேண்டுமென்பதனையே காட்டுகிறது. உள்ளக வளங்களாக பல குடிநீர் மூலங்கள் காணப்படும்போதும், அவை அபிவிருத்தி செய்யப்படாதுள்ளன. இன்னமும் மக்கள் திறந்த கிணறுகளையே, ‘நல்ல தண்ணிக் கிணறுகள்’ என்று அழைத்து வருகின்றனர். அந்த நீரே ‘நல்ல தண்ணி’யாக மக்களால் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. 


ஒலிவடிவில் கேட்க


About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஸ்ட வளவாளராகவும் பயிற்றுநராகவும் செயற்படும் அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சியை சொந்த இடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களையும், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் திட்டமிடலில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றவர். இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் II அதிகாரியாக, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளராகப் பணியாற்றும் இவர், தேசிய பெண்கள் செயலகத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். 2012 இல் ‘திட்டமிடல் மூலதத்துவங்கள்’ என்ற நூலினையும் 2024 இல் ‘மண்’ என்ற கவிதை நூலினையும் வெளியீடு செய்துள்ளார். இவர் சிறந்த விமர்சகரும் ஆய்வாளருமாவார். வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் உப தலைவராகவும், இலங்கை தேசிய கூட்டுறவுச் சபையின் உபதலைவராகவும், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபையின் தலைவராகவும் செயற்பட்டு வரும் ஒரு மூத்த கூட்டுறவாளருமாவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்