தொடக்கக் குறிப்புகள்
சமகால இலங்கையின் கல்வியானது ஒரு நெருக்கடியான புள்ளியில் நிற்கிறது. பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையான எமது கல்வியும், கல்விமுறையும், அதுசார் நிறுவனங்களும் பொருத்தமானவையா, பயனுள்ளவையா, வினைத்திறனானவையா போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். குறிப்பாக, எமது பல்கலைக்கழகக் கல்வி மிகுந்த சவாலுக்குள்ளாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடியும் இலங்கையின் கல்வித்துறையை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முழுமையாகக் கல்வி தடைப்பட்டுள்ளது. இது மாணவர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பெரியது. இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தவல்லது.
கல்வியமைச்சரான பிரதமர், ஹரிணி அமரசூரிய பாடசாலைகளில் 40,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாகவும், இவற்றில் 2650 வெற்றிடங்கள் தேசிய பாடசாலைகளில் இருப்பதாகவும் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். இது பாடசாலைக் கல்வியின் நெருக்கடிக்கான ஒரு சான்றாகும். இதேவேளை இலங்கையின் ‘டியூசன் கலாசாரம்’ இன்று இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வாக நோக்கப்படுகிறது. இன்று இது ஒரு முக்கிய வணிகத்துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வினடிப்படையில் ஆண்டுதோறும் தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் 210 பில்லியன் இலங்கை ரூபாய்களை வருமானமாகப் பெறுகிறார்கள். இந்தத் தரவு சொல்கிற செய்தி மிகவும் வலியது. ஒருபுறம் கல்வியின் பெயரால் மிகப்பெரிய வர்த்தகம் உருவாகியிருக்கிறது. இன்னொருபுறம், பாடசாலைக் கல்வியில் நம்பிக்கையற்ற ஒரு சமூகம் வளர்ச்சியடைந்து வருகிறது. இது இலங்கையின் பாடசாலைக் கல்வியின் எதிர்காலம் குறித்து மிகவும் பாரதூரமான சிக்கல்களைக் கோடுகாட்டுகிறது.
கடந்த நான்கு தசாப்தங்களாக உயர்கல்விக் கொள்கை மற்றும் திட்டமிடலில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கேள்வி என்னவென்றால், அரச பல்கலைக்கழகங்கள் வேலைவாய்ப்புக்கு தகுதியான மாணவர்களை உருவாக்குகின்றனவா என்பதுதான். 1990களில் இளைஞர்களின் வேலையின்மை குறித்த கவலை, முதலில் தொடர்ந்த இன மோதல் மற்றும் இரண்டாவதான ஜே.வி.பி கிளர்ச்சி (1987-1989) ஆகியவற்றிற்குக் காரணமாக இருந்தது. இது 1990களின் பிற்பகுதியில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு குறித்த ஒரு விவாதத்திற்கு வித்திட்டது. ஒருபுறம் பல்கலைக்கழகங்கள் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளை உருவாக்குவதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும், மறுபுறம் இளைஞர்களின் வேலையின்மையை அதிகரிக்கும், தீங்கு விளைவிக்கும் பிற காரணிகளையும் நோக்க வேண்டியுள்ளது. மந்தமான பொருளாதார வளர்ச்சி, இதில் கவனிப்புக்குள்ளாக வேண்டிய மிக முக்கியமான காரணியாகும். அரசியல் தலைவர்களின் திட்டமிடப்படாத மற்றும் தற்காலிகக் கொள்கை மாற்றங்களாலும், பெண்கள் அல்லது கிராமப்புற இளைஞர்கள் எந்த வகையான வேலைவாய்ப்புகளில் ஈடுபட வேண்டும் என்பது பற்றிய தவறான ஒரே மாதிரியான நம்பிக்கைகளாலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் தடுக்கப்படுகிறது.

அரசியல் ஆதரவு (political patronage), கொண்டோர் – கொடுத்தோர் உறவு (clientelism) சிறுபான்மையினருக்கு எதிரான இனப்பாகுபாடு மற்றும் முறையான செயல்முறைகளைத் தவிர்ப்பது ஆகியவை வேலையில் சேருவதற்கான கட்டமைப்புத் தடைகளாக இருந்து வருகின்றன. ஒருமொழி பேசும், நகர்ப்புறம் அல்லாத, சிங்களம் மற்றும் தமிழ் பேசும் இளைஞர்கள் ஏற்கனவே சமூக வர்க்கம் மற்றும் பிராந்தியவாதத்தின் அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டிருப்பதால், அரசியல் உயரடுக்குகளை அணுக முடியாமல் போகலாம் என்பதால் இது குறிப்பாக வெறுப்பூட்டுகிறது. இதே குழுக்களுக்கு, ஆங்கில மொழிப்புலமை இல்லாதது தனியார்துறை வேலைவாய்ப்புக்கு ஒரு தடையாக உள்ளது. கவனிப்புக்குரியது யாதெனில், வேலைவாய்ப்பு தொடர்பான கருத்துகளை வரையறுப்பதற்கும் அளவிடுவதற்கும் உறுதியான அளவுகோல்கள் இல்லை. இருப்பினும் அது நீண்டகாலப் பிரச்சினையாக உள்ளது. பட்டதாரிகளின் வேலையின்மைக்கான காரணம், தனியார்துறை வேலையைப் பெற இயலாமை என்று பரவலாகக் கருதப்படுகிறது; பொருத்தமான திறன்கள் இல்லாததால் என்று கூறப்படுகிறது. ஆனால் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வி குறித்த ஆழமான விரிவான ஆய்வுகள் மிகக் குறைவு.
இலங்கையில் பட்டதாரி வேலைவாய்ப்புத் திறன் குறித்த மதிப்பாய்வில், இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வோர், குடும்பம் மற்றும் சமூகக் காரணிகளைப் புறக்கணித்துள்ளனர். இது இலங்கையில் வேலைவாய்ப்புத் திறன் குறித்த ஆய்வுமுறைகளைக் குறைபாடுடையதாக ஆக்குகிறது. பல்கலைக்கழகங்களில் பயில்வோரின் குடும்ப, சமூகக் காரணிகள் அவர்களின் வேலைவாய்புகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஆனால் இலங்கையின் உயர்கல்வி தொடர்பான கொள்கைவகுப்புகள் இதனைக் கணிப்பில் எடுப்பதில்லை. வேலைவாய்ப்புத் திறன் பற்றிய கூற்றுகளை நெருக்கமாகப் பகுப்பாய்வு செய்வதற்கு அல்லது அதன் விமர்சனங்களைக் கருத்தில் கொள்வதற்குப் பதிலாக, கொள்கை வகுப்பாளர்கள் “அரச பல்கலைக்கழக அமைப்பு மறுகட்டமைக்கப்பட வேண்டும், தரம் மற்றும் பொருத்தத்தில் அக்கறை கொள்ள வேண்டும், மேலும் வேலைசார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்” என்ற வாதங்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றனர். இது தவறானது மட்டுமன்றி, ஆபத்தானதும் கூட.
இப்பின்புலத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் வரன்முறையான சரிவை நோக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்த அனுபங்களின் அடிப்படையிலான சில நிகழ்வுகளையும் கருத்தியல் போக்குகளையும் இக்கட்டுரையின்வழி பதிவு செய்ய முனைகிறேன். அத்தோடு நின்றுவிடாமல் பல்கலைக்கழகக் கல்விக்கு அடிப்படையாக அமைகின்ற பாடசாலைக் கல்வி தொடர்பாக கடந்த ஒரு தசாப்தகாலமாக, பாடசாலை மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் பெற்றோருடனும் மேற்கொண்ட ஆய்வு அனுபங்களைப் பகிர்வதன் முக்கியத்துவத்தையும் உணர்கிறேன். ஏனெனில் இன்று பெற்றோரும் பிள்ளைகளும் கல்வி குறித்து எவ்வகைப்பட்ட எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். இலங்கையின் வடக்கில் உள்ள பாடசாலைகளும், கொழும்பில் உள்ள தமிழ்பேசும் பாடசாலைகளும் இவ்வாய்வின் களங்களாகும்.
பாடசாலைக் கல்வி: கற்பிதங்களைத் தகர்த்தல்
இலங்கையின் முழுக் கல்வி முறையுடன், பாலர் பாடசாலை, ஆரம்பப் பாடசாலை, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிலைகளும், பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இந்த நெருக்கடிகளின் சில அம்சங்களை நிவர்த்தி செய்ய சமீபத்திய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஓரளவு மட்டுமே வெற்றி பெற்றுள்ளன அல்லது முற்றிலும் தோல்வியடைந்துள்ளன.
பாடசாலை, உயர்நிலை மற்றும் உயர்கல்விக்கான அதிகரித்து வரும் சமூகத் தேவை இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. விரிவாக்கம், நவீனமயமாக்கல், தர மேம்பாடு மற்றும் சமூக அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் கடுமையான இயலாமையால் அரசு நடத்தும் கல்விமுறை பாதிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தற்காலிக மற்றும் அவசரமாக வடிவமைக்கப்பட்ட பதில்களால் அரசுத்துறையில் அனைத்து மட்டங்களிலும் வழங்கப்படும் கல்வியின் தரம் மற்றும் தரங்களின் படிப்படியான சரிவு மேலும் துரிதப்படுத்தப்படுகிறது. விரிவாக்கத்திற்கும் தரத்திற்கும் இடையிலான வளர்ந்து வரும் பொருத்தமின்மை பாடசாலை, தொழிற்கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியில் காணப்படுகிறது.
சேவை வழங்குநர்களை அங்கீகரிப்பதற்கான எந்தக் கொள்கையும் இல்லாமல், ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியை வழங்கும் முன்பள்ளிகள் (நேர்சரிகள் என்று நாம் அழைப்பது), கல்வியின் ஒரு முறைசாரா மற்றும் தற்காலிகக் கிளையாகவே தொடர்கிறது. தரம், தரநிலைகள், கல்வியின் வகை, வசதிகள், நடைமுறையில் உள்ள சுகாதார நிலைமைகள், குழந்தைப் பாதுகாப்பு, நடைமுறையில் உள்ள சேவைகள் மற்றும் ஆசிரியர்களின் தொழில்முறை ஆகியவற்றைக் கண்காணிப்பதில் கல்வி அமைச்சின் தீவிரமான மற்றும் வலுவான ஈடுபாடு இல்லை. இதன் விளைவாக, இந்தத் துறை ஒரு பெரிய, ஆனால் ஒழுங்கமைக்கப்படாத கல்வித் துறையாக மாறியுள்ளது. தரமான கல்வி வழங்கப்படும் சந்தர்ப்பங்களில், கட்டணம் அதிகமாகவும் பெரும்பாலான பெற்றோருக்குக் கட்டுப்படியாகாததாகவும் உள்ளது. இந்த நேர்சரிகள் குறித்து பல்வகைப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

முன்பள்ளிகள் ஏற்படுத்தும் சமூகத் தாக்கங்கள் குறித்து முல்லைத்தீவில் உள்ள கல்வியியலாளர் இவ்வாறு தெரிவித்தார்:
“பிள்ளைகளை நல்ல நேர்சரிக்கு அனுப்புவது, இப்போது கட்டாயமானதாக மாற்றப்பட்டுள்ளது. இது பெற்றோருக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது. பொருளாதாரரீதியிலும், உளவியல்ரீதியிலும். இலங்கையில் இதுவரை நேர்சரிகள் முறையாக ஒழுங்குபடுத்தப்படவில்லை. தனியார் நேர்சரிகளே பெரும்பாலானவை. இவற்றில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. நேர்சரிகள் ஒருவகையில் ஒரு சமூக அந்தஸ்ததை வழங்குவனவாக உள்ளன. நல்ல நேர்சரிக்கு அனுப்பினால்தான் ஊர் மதிக்கும் என்ற தப்பபிப்பிராயம் மக்களிடம் உள்ளது.”
நேர்சரிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் தாய்மாரின் குரல்கள் சில முக்கியமான செய்திகளை – குறிப்பாக போரின் பின்னரான சமூகத்தின் – சொல்கின்றன. இக்குரல்கள் கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் இருந்து பதிவுசெய்யப்பட்டவை.
“நாங்கள் எல்லாத்தையும் இழந்திட்டம். படிப்பு மட்டும்தான் மிச்சம். பிள்ளையளை எப்படியாச்சும் படிப்பிக்க வேணும். அதுதான் நல்ல நேர்சரியில பிள்ளையைச் சேர்த்தனான். அவருக்கு விருப்பமில்லை. எங்கட வருமானத்துக்கு இது கூட. ஆனா படிப்பெல்லோ”
“நல்ல நேர்சரியில சேர்க்காட்டி ஆக்கள் மதிக்க மாட்டினம். நல்ல நேர்சரியில தான் இங்கிலீசும் படிப்பிக்கினம். அதுதான் என்ர பிள்ளையளைச் சேர்த்தனான். கடன் வாங்கித்தான் நேர்சரிக் காசு கட்டிறன். என்ர பிள்ளையளும் சமூகத்தில மரியாதையோட இருக்க வேணும் தானே”
“நல்ல நேர்சரிக்குப் போகாட்டி நல்ல பள்ளிக்கூடம் கிடைக்காது எண்டு சொன்னவ. அதுதான் காசு கூட எண்டாலும் கொண்டுபோய் சேர்த்தன். பிள்ளையள் எப்படியாச்சும் படிச்சு வந்திடட்டும். செலவு கூடத்தான், ஆனா என்ன செய்யிறது?”
இந்தக் குரல்கள் முன்பள்ளிகள் குறித்த போருக்குப் பிந்தைய சமூகங்களில் வாழும் சாதாரண மக்களின் பார்வையை வெளிப்படுத்தி நிற்கின்றன. அவர்களது புரிதல், கல்வி குறித்த அக்கறை, இயலாமை என எல்லாம் இக்குரல்களில் தொனிக்கின்றன. இவை இலங்கையின் கல்வி குறித்த பதிலளிக்கப்படாத பல வினாக்களை எழுப்புகின்றன.
பாடசாலைக் கல்வியானது, ஏராளமான நெருக்கடிகளைத் தன்னுள் உட்பொதித்து வைத்திருக்கிறது. ஆனால் அவை பேசப்படுவதில்லை. பாடசாலைக் குழந்தைகளிடையே மோசமான ஊட்டச்சத்து நிலைமைகள் – குறிப்பாக குறைந்த வருமானம் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் அனுபவிக்கும் அதிகரித்து வரும் பொருளாதார சிரமங்கள் காரணமாக – மறக்கப்பட்ட கொள்கைப் பிரச்சினையாகும். பல்கலைக்கழகங்கள் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களில் உள்ள குறைந்த வருமான சமூகப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கும்கூட மோசமான ஊட்டச்சத்துப் பிரச்சினை உள்ளது.
பெரும்பாலான பாடசாலை ஆசிரியர்களிடையே கற்பித்தல், பயிற்சி, மதிப்பீடு மற்றும் வழிகாட்டுதல் திறன்களில் தொழில்முறையில் தேக்கநிலை இருப்பதால் பாடசாலைக் கல்வியின் முன்னேற்றங்கள் கடுமையாகத் தடுக்கப்படுகின்றன. பெரும்பாலான ஆசிரியர்கள் ஒரே ஒரு, நிச்சயமாக தவறான கற்பித்தல் முறையை மட்டுமே கடைப்பிடிக்கின்றனர். இது (அ) மாணவர்களுக்கு குறிப்புகளை எழுதச் சொல்வது, (ஆ) மாணவர்களை மாதிரிப் பதில்களை மனப்பாடம் செய்து தேர்வுகளில் அவற்றை மீண்டும் சொல்லச் சொல்வது, மற்றும் (இ) இலக்குக் கேள்விகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கு மட்டுமே தயாராகும்படி மாணவர்களை வற்புறுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியது. பொதுவாக பாடசாலை ஆசிரியர்கள் தங்கள் பாட அறிவைப் புதுப்பிக்கவோ அல்லது புதிய திறன்களைப் பெறவோ வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் மாணவர்களைப் படைப்பாற்றலுக்காக ஊக்குவிக்கத் தவறிவிடுகிறார்கள்.
பாடசாலைகள் குறித்த பெற்றோரின் நிலைப்பாடுகள், அனுபங்கள் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுகின்றன. கொழும்பில் உள்ள தமிழ்பேசும் பிள்ளைகளின் பெற்றோர் கீழ்வருமாறு நினைக்கிறார்கள்:
“நல்ல தனியார் பள்ளிக்கூடத்தில என்ர பிள்ளையை சேர்த்திருக்கிறன். அது வேதப் பள்ளிக்கூடம், ஆங்கிலத்தில படிப்பிக்கினம். யுனிவர்சிட்டி கிடைக்காட்டியும் பள்ளிக்கூடத்தைக் காட்டி வேலை எடுக்கிறது ஈசி. புள்ளை டியூசனிற்குப் போகேக்க இந்தப் பள்ளிக்கூடத்தில படிக்கிறது என்று சொன்னா மதிப்புத்தானே.”
“பிள்ளையள் நல்ல தனியார் பள்ளிக்கூடத்தில தான் படிக்கினம். படிப்புச் சரியில்ல. அதுக்கு டியூசன் இருக்குத் தானே. பெரிய பள்ளிக்கூடத்தில படிச்சினம் என்டது, பாங்க் மாதிரி இடங்களில வேலை எடுக்க சுகந்தானே. இங்கிலீசும் எல்லோ நல்லாக் கதைக்கப் பழகுவினம்.”
வடக்கில் உள்ள பெற்றோர் வெவ்வேறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். போருக்குப் பிந்தைய சூழலில் தரமான பாடசாலைகள், அடிப்படை வசதிகள் ஆகியன அவர்களின் பிரதான கவலைகளாக இருந்தன. அதேபோல தரமான கல்வியை வழங்கும் ஆசிரியர்களின் பற்றாக்குறை, டியூசன் நிலையங்களில் அதிகளவான நம்பிக்கை என்பன பாடசாலை குறித்த ஐயங்களை எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்கள். எடுத்துக்காட்டாக சில மேற்கோள்கள் வருமாறு:
“நாங்கள் மீளக்குடியேறி பத்து வருடத்துக்கு மேலாகிவிட்டது. இன்னும் பாடசாலைகளுக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. நல்ல கழிப்பிடம் இல்லை. இது பெண் பிள்ளைகளுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. வறுமைக்கோட்டுக்குட்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களைக் கவனிக்க எந்தவொரு திட்டமும் இல்லை.”
“இங்க ஒரு பெரிய அசமத்துவம் நடக்கிது. பெரிய பள்ளிக்கூடங்களுக்கு நிறைய நிதி வருகுது. பழைய மாணவர்களும் வெளிநாடுகளில இருந்து காசு அனுப்பினம். ஆனால் கிராமப் பள்ளிக்கூடங்கள், ஊர்ப்பள்ளிக்கூடங்கள் இன்னும் அபிவிருத்தி அடையேல்ல. இப்பவும் எல்லாம் நகரப் பள்ளிக்கூடங்களுக்குத் தான் செல்ல விரும்பீனம். ஏங்கட ஊர் பள்ளிக்கூடங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்குது.”
“பெரிய பள்ளிக்கூடங்களுக்குப் போனாலும் அங்கேயும் ஏற்றத்தாழ்வு இருக்குது. பெரிய ஆக்களின்ட பிள்ளையளை தான் எல்லாத்துக்கும் முன்னுக்கு விடுவினம். எங்கட பிள்ளையளின்ட பாடு கஷ்டம். நீங்கள் கொஞ்சம் குறைஞ்ச ஆக்கள் எண்டா வாய்ப்பு குடுக்க மாட்டினம். 30 வருசம் போராடினது நாங்கள் தான். ஆனால் எங்களிட்ட சமத்துவம் இல்லை. மனிசனை மதிக்கிற பழக்கமில்லை. இங்க கல்வி எல்லாருக்கும் பொது இல்ல.”

இந்தக் கூற்றுகள் போருக்குப் பிந்தைய எமது சமூகத்தின் பிரதிபலிப்புகள். இவை எமது அக முரண்பாடுகள் குறித்து தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பிய வண்ணமேயுள்ளன. இவ்வினாக்கள் ஆராயப்படாமல், தீர்வு நோக்கி நகராமல் விடுதலைக்காகக் போராடிய சமூகம் நாங்கள் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை.
இலங்கையின் பாடசாலைக் கல்வியின் சிதைவில் தனியார் துறை முக்கிய பங்காற்றியுள்ளது. இணைக்கல்வி வாய்ப்புகளை வழங்குவதில் தனியார் துறையின் ஈடுபாடு, கல்வியின் குறிக்கோள்கள் மற்றும் நன்மைகள் குறித்து பல சிதைவுகளுக்கும் எதிர்மறையான விளைவுகளுக்கும் வழிவகுத்துள்ளது. நிர்வகிக்கப்படாத கல்வித்துறையின் நுழைவு காரணமாக அதிகரித்து வரும் கல்விச் செலவு, இலவசக் கல்வி என்ற கருத்தையே கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. இது பாடசாலைக்கல்வியில் ஓர் அராஜக நிலையை உருவாக்கியுள்ளது.
எந்த ஒழுங்குமுறைக் கட்டமைப்பும் இல்லாமல், இலாபம் தேடும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற பெருக்கம், தனியார்துறை தலைமையிலான கல்விக்கான அணுகல் என்பன புதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்துள்ளன. தற்போது, இந்த நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வி மற்றும் பயிற்சியில், தரம் மற்றும் தரநிலைகளை உறுதி செய்வதற்கான எந்த அரசாங்க வழிமுறைகளும் இல்லை; மதிப்பீடுகள் மற்றும் தேர்வுகளும் இல்லை. இதனால், ஒரு நாகரிகவளமாக கல்வியின் சமூக நோக்கத்தை அவர்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். அரச மற்றும் அரசுசாரா துறைகள் இரண்டிலும் தொழில்துறையின் இயலாமை, பொருளாதார மந்தம் ஆகியன அனைத்து மட்டங்களிலும் படித்த இளைஞர்களுக்குப் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளன. தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் பெருக்கம் முதன்மையாக சமூகத்தின் மிகக்குறைந்த பிரிவுகளுக்கு மட்டுமே உதவுகிறது. இந்த நிலைமை அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு அணுகலில் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கூர்மைப்படுத்தியுள்ளது.
பாடசாலைக் கல்வியில் ஏற்பட்டுள்ள சிதைவுகள் உயர்கல்வியிலும் பிரதிபலிக்கின்றன. உலகளாவிய பொருளாதார மற்றும் தொழிலாளர் சந்தை போக்குகளில் அவ்வப்போது ஏற்படும் அழுத்தங்களுக்கு, பல தற்காலிக மற்றும் விலையுயர்ந்த பதில்கள் உள்ளன. பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியில் செயற்படுத்தப்படும் இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகள், நாட்டின் கல்வியின் நிலையான மறுகட்டமைப்பிற்கான உள்ளுர்ரீதியாக உருவாக்கப்பட்ட தொலைநோக்குகள் மற்றும் முன்னோக்குகளை புறக்கணித்துள்ளன. உள்ளுர் அறிவுஜீவிகளிடமிருந்து ஆக்கபூர்வமான உள்ளீடுகளைப் புறக்கணிப்பதும், கல்வித்துறையில் ஏற்படும் மாற்றத்திற்கான அவர்களின் அக்கறையின்மையும் சமூகங்களின் நேரடிப் பங்குதாரர்களின் பங்கேற்பு இல்லாமைக்கு வழிவகுத்தன.

இலங்கை தனது மூன்றாம்நிலை மற்றும் தொழிற்பயிற்சிக் கல்வித்துறையை ஒரு வலுவான மற்றும் முன்னோக்கிய கல்விப்பிரிவாக வளர்த்து ஆதரிப்பதில் இன்னும் வெற்றிபெறவில்லை. பதினாறு வயதுக்குட்பட்ட இளம் பாடசாலைப் படிப்பை முடித்தவர்களின் வேலைவாய்ப்பு விருப்பங்களை இது பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், போதுமான எண்ணிக்கையில் அவர்களை ஈர்க்கத் தவறிவிட்டது. (அ) புதிய தலைமுறை இளைஞர்களுக்கு இது வழங்கும் படிப்புகள் மற்றும் பயிற்சியின் கவர்ச்சியற்ற தன்மை, (ஆ) மாணவர்களுக்குப் போதுமான நிதி ஆதரவு இல்லாதது, (இ) பெண் மாணவர்களின் தேவைகள் மற்றும் தொழில்சார் விருப்பங்களை பூர்த்தி செய்யத் தவறியது, மற்றும் (ஈ) தொழில்துறைப் புரட்சியின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இன்னும் பதிலளிக்கத் தயாராக இல்லாத ஒட்டுமொத்த கல்விக் கண்ணோட்டத்தின் பழமைவாதத் தன்மை என்பன இதற்கான காரணங்களாகும்.
போருக்குப் பிந்தைய சூழலில் இலங்கையின் வடக்கில் உள்ள 5 மாவட்டங்களில் உள்ள 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பைப் பெறாத மாணவர்களின் ஒரு தொகுதியினரிடம் இரண்டாண்டுகால ஆய்வை மேற்கொண்டோம். அவ்வாய்வின்படி பெரும்பான்மையானோர், தொழிற்பயிற்சிகளை விரும்புவதில்லை. அதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இல்லை. அவ்வேலைகள் கடினமானவை என்பது பொதுக்கருத்தாக இருக்கிறது. சிலர், புகைப்படக்கலை, தகவல்தொழில்நுட்பம் போன்ற கற்கைநெறிகளைக் கற்கிறார்கள். அவர்களுக்கு அது கவர்ச்சிகரமாக இருக்கிறது. பலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வது பற்றிய எண்ணத்திலேயே இருக்கிறார்கள். இன்னும் சிலர் அரசியல்வாதிகளின் தயவில் ஒரு அரசாங்க வேலையைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்தார்கள். இவை, போருக்குப் பிந்தைய சமூகம் என்ற வகையில் கவனிக்க உகந்த இளையோர் மனப்பாங்குகளாகும்.
பல்கலைக்கழகக் கல்வி: நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் கடந்த இரண்டு தசாப்தகாலமாக சரிவைச் சந்தித்து வருக்கின்றன. போருக்குப் பிந்தைய சூழலில் நாட்டின் வடக்குக் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களும் அதன் வளாகங்களும் மிகுந்த வினைத்திறனுடன் மீள் எழும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவ்வாறு நிகழவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்போக்கான தன்மையுடையனவாக இப்பல்கலைக்கழகங்கள் மாறியுள்ளன. இப்பல்கலைக்கழகங்களின் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், இப்பல்கலைக்கழகங்களின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து தொடர்ச்சியாகக் கவலை வெளியிட்டு வந்துள்ளனர். இப்பல்கலைக்கழகம் ஒன்றின் கவுன்சிலில் சிலகாலம் உறுப்பினராக இருந்த, நன்கறியப்பட்ட ஆய்வாளரான ஒரு சிங்களப் பேராசிரியர் என்னிடம் இவ்வாறு குறிப்பிட்டார்:
“பல்கலைக்கழகத்தில் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தகுதியில்லாதோருக்கெல்லாம் பதவி உயர்வும், ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயற்பட்டு தவறான விடயங்களை முன்னெடுப்பதும், கல்வி குறித்தும் கற்பித்தல் குறித்தும் மிகக் குறைந்த அக்கறையும் என பல்கலைக்கழகம் முன்னேறவியலாதளவு சீரழிந்துள்ளது. நான் இவ்வாறு சொல்வதற்கு மன்னிக்கவும், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பல்கலைக்கழகத்தைத் திருத்த இயலாது. மிகவும் சீரழிந்த, பிற்போக்கான மனநிலை இதன் மையமாக உள்ளது. அதை மாற்றமால் இந்தப் பல்கலைக்கழகத்தால் பயனுறுதி வாய்ந்த பங்களிப்பை கல்விப்புலத்திற்கோ, சமூகத்திற்கோ ஆற்றவியலாது”.
இலங்கை பொதுப் பல்கலைக்கழகங்களில் ராகிங் (தமிழில், பகடிவதை) ஒரு மிகப்பாரிய பிரச்சினையாகும். பகடிவதைக்கு உட்படும் புதுமுக மாணவர்கள், தாம் இரண்டாம் மூன்றாமாண்டு மாணவர்களாக மாறும்போது பகடிவதையை நிகழ்த்துபவர்களாக மாறுகிறார்கள். தமிழில் பகடிவதை என்பது சரியான சொல்லல்ல. ஏனெனில் நிகழ்வது வன்முறையும் கொடுமையுமே. இங்கே பகடி என்ற ஒன்றே இல்லை. சில ஆய்வுகள் விரிவுரையாளர்களும் இந்த ராகிங்கில் ஈடுபவதைச் சுட்டிக்காட்டுகிறது. உண்மை யாதெனில் பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் விரிவுரையாளர்களதும் ஆதரவு இன்றி ராகிங் சாத்தியமில்லை. ராகிங்கில் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையோடு புகார் அளிப்பதற்கான வாயில்கள் எதுவுமில்லை. ராகிங் கொடுமைக்கு புகாரளித்த மாணவர்கள் விரிவுரையாளர்களால் பழிவாங்கப்பட்ட நிகழ்வுகள் போருக்குப் பின்னரான சூழலில் நாட்டின் வடக்குக் கிழக்கில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் நிகழ்ந்துள்ளன.
ராகிங் என்பது ஒரு சிக்கலான சமூக கலாசார நிகழ்வு. இது பரந்த இலங்கைச் சமூகத்தில் படிநிலை மற்றும் வன்முறையின் பிரதிபலிப்பாகும். பொறுப்புள்ள பல்கலைக்கழக நிர்வாகிகளின் செயலற்ற தன்மையால் இது அதிகரிக்கிறது. ராகிங் மூலம் ஒரு பல்கலைக்கழக மாணவன் இறந்த பிறகு, 1998 இல் இயற்றப்பட்ட ராகிங் எதிர்ப்புச் சட்டம் இருந்தாலும், ராகிங்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிகவும் உறுதியான, பன்முக அணுகுமுறை இதுவரை இல்லை. பல்கலைக்கழகங்கள் அதிகாரபூர்வமாக ராகிங்கைத் தடை செய்கின்றன. ஆனால் அதை முற்றிலுமாக ஒழிப்பதில் அர்ப்பணிப்பைக் காட்டவில்லை. தொடர்ச்சியான துன்புறுத்தலின் மன அழுத்தம் மற்றும் அவர்களின் கல்வி நடைமுறைகள் மீதான அதன் தடைகள் காரணமாக ராகிங் மாணவர்களின் கல்விச் செயற்றிறனைப் பாதிக்கிறது.
பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது யாரும் பேசவிரும்பாத ஆனால் பலரும் நன்கறிந்த ஒரு விடயமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு தனது அறிக்கையில் இதனைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஓரளவு விரிவாகப் பேசியுள்ளது. குறைந்தபட்சம், பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்கின்றன; பாலியல் குற்றவாளிகளாக பல்கலைக்கழக ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறது. அதேவேளை, குறித்த விடயத்தைக் கையாள்வதை பல்கலைக்கழக நிர்வாகங்கள் தவிர்க்கின்றன என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
பல்வேறு வகையான வன்முறைகள் காரணமாகவும், வளங்கள் குறைவாக உள்ள சூழலிலும், கற்றலின் பொதுவான மன அழுத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், பல்கலைக்கழகங்களில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிக அளவிலான மனநலப் பிரச்சினைகள் இருப்பது ஆச்சரியமல்ல. வன்முறையை இயல்பாக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிறுவன ஆதரவையும் வழங்காத ஒரு கலாசாரம், வினைத்திறனற்ற நோயுற்ற மனிதர்களையே வெளித்தள்ளுகின்றன.
இந்தப் பின்புலத்தில் போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் நாட்டின் வடக்குக் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்விகற்ற – கற்கும் மாணவர்கள் இது குறித்துத் தெரிவித்த கருத்துகள் மேற்சொன்னவற்றுக்கு வலுச்சேர்க்கின்றன.
“இங்க நல்லா வாளி வைக்கோணும், அப்பதான் நல்ல மாக்ஸ் கிடைக்கும். வாளி வைக்காட்டிப் பாஸ் பண்ணிறது கஸ்டம். நல்லா வாளி வைக்கிற ஆக்களுக்குத்தான் நல்ல கிளாஸ் கிடைக்கும். அல்லாட்டு பாஸ் பண்ணிக்கொண்டு போக வேண்டியதுதான். பர்ஸ்ட் கிளாஸ், செக்கண்ட் அப்பர் எல்லாம் கிடைக்காது.”
“இங்க நீங்கள் லெட்சரரா வர வேணுமெண்டா, நிறையச் செய்ய வேணும். ஏல்லாருக்கும் பந்தம் பிடிக்க வேணும். அவையளுக்குப் பிடித்த ஆளாய் இருக்க வேண்டும். படிக்கத் தேவையில்லை, அவர்களின் கீழான ஆளாக இருக்கிறதுதான் முக்கிய தகுதி. இங்க லெக்சரரா வேலை செய்யிற ஆக்கள் முக்கால்வாசிப்பேர் அப்படி வந்த ஆக்கள் தான்.”
“தாற நோட்டைப் பாடமாக்கி எழுதத் தெரிஞ்சாத்தான் நல்ல கிரேட் வரும். புதிதாக வாசிச்சு எழுதினா மோசமான கிரேட் தான். இங்க நாங்கள் யோசிக்கிறதோ, கேள்வி கேட்கிறதோ படிப்பிக்கிற ஆக்களுக்குப் பிடிக்காது. டிகிரியை வாங்கிக் கொண்டு ஓடுவம் என்றதுதான் இங்க புத்திசாலி ஆக்களின்ட மனநிலையாக் கிடக்குது.”
“இந்த குப்பை சிஸ்டத்தைப் பார்த்தபிறகு லெக்சரரா வாற ஆசையே போட்டுது. நான் பர்ஸ்ட் கிளாஸ் எடுத்தாலும் எனக்கு வேலை தராயினம். தப்பித்தவறி தந்தாலும் இந்தச் சீரழிந்த சிஸ்டத்தைத்தான் பின்பற்றோனும். இதில என்ன பிரயோசம்.”
“இப்ப பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங்கள் மாதிரி, டியூசன் சென்டர் மாதிரி வந்திட்டுது. இவையள், படிப்பிக்கிறது மட்டும் தான் பல்கலைக்கழகங்களின் வேலை எண்டு நினைத்துக் கொண்டிருக்கினம். ஆய்வு என்றவொரு விசயமே இங்க இல்லை. அரசாங்க உத்தியோகத்துக்கு ஆக்களை ரெடி பண்ணுறதுதான் இவையளின்ர வேலை என்றது முடிஞ்ச முடிவு. படிக்கிற பிள்ளையளும் எப்படியாவது டிகிரியை வைத்துக்கொண்டு பாங்கிலயோ, அரசாங்கத்திலயோ ஒரு வேலை எடுக்கோணும் எண்டு நினைக்கினம்.”
பல்கலைக்கழகத் கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களுக்கான கொள்கை – சிந்தனை, பல்வேறு வகையான சுயநலவாதிகளால் குறுகிய அரசியல்மயமாக்கப்பட்ட எதிர்வினைகளால் தடுக்கப்படுகிறது. அவற்றில் முக்கியமானவை: சுதந்திரத்திற்குப் பிந்தைய பல்வேறு அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மாணவர் சங்கங்கள். இதேபோல், கல்விச் சமூகங்களும் அவற்றின் தொழில்முறைச் சங்கங்களும் ஆராய்ச்சி அடிப்படையிலான மாற்றுக் கொள்கை விருப்பங்களை வழங்குவதில் தொடர்ந்து தோல்வியடைந்ததால், கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பொதுவிவாதம் மோசமாகிவிட்டது. இதனால் பல்கலைக்கழகங்கள் பயனற்ற நிறுவனங்களாக மாறிவருகின்றன. இது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதேவேளை தனியார் பல்கலைக்கழகங்கள் பட்டங்களை விற்பனை செய்யும் கடைகளாக மாற்றமடைந்துள்ளமை துயரமே.
இந்தநிலைக்கு நாம் ஏன் வந்தடைந்தோம் என்று சிந்திக்கும்போது, பல்கலைக்கழகக் கல்வி என்பது அதன் காலாவதியான இலக்குகள், நிறுவன அமைப்பு மற்றும் நிறுவன கலாசாரத்திலிருந்து மாறுவதற்கான எந்தவொரு பெரிய சீர்திருத்தத்தையும் எதிர்த்ததுறையாகும். மாணவர் சேர்க்கை முதல் கற்பித்தல் திட்டங்கள் மற்றும் உரிமையை பன்முகப்படுத்துதல் வரை பல்கலைக்கழகத்துறையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் உண்மையான சீர்திருத்தங்கள், அரசியல் அமைதியின்மைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பிற்கும் வழிவகுத்துள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் குறைந்துள்ளமைக்குப் பல காரணங்கள் பங்களித்துள்ளன. இவை பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் நிர்வாக அம்சங்களுடன் பின்னிப்பிணைந்துள்ளன.
1. நிதி நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சவால்கள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, குறிப்பாக 2000களின் பிற்பகுதியில் இருந்து, பல்கலைக்கழகங்களின் நிதி ஒதுக்கீட்டைக் கணிசமாகப் பாதித்துள்ளது. இலவசக் கல்வி முறைமையை தொடர்ந்து பராமரிக்க அரசாங்கத்திற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கழகங்களுக்கு போதிய நிதி வழங்கப்படவில்லை. இது பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தியது:
1.1 உட்கட்டமைப்புப் பற்றாக்குறை: பல்கலைக்கழகங்களில் நவீன ஆய்வகங்கள், நூலகங்கள், மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி இல்லாததால், மாணவர்களுக்குத் தரமான கற்றல் சூழல் கிடைப்பது குறைந்தது.
1.2. பணியாளர் பற்றாக்குறை: தரமான ஆசிரியர்களை தக்கவைப்பதற்கு போதிய ஊதியம் இல்லாததால், பல திறமையான கல்வியாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இது ஆசிரியர் – மாணவர் விகிதத்தைப் பாதித்து, கற்பித்தல் தரத்தைக் குறைத்தது.
1.3 ஆய்வு மற்றும் மேம்பாடு: பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்படாததால், புதிய அறிவு உருவாக்கம் இல்லாமை மற்றும் உலகளாவிய தரவரிசைகளில் மிகவும் பின்தங்கிய நிலை ஆகியவற்றிற்கு இலங்கைப் பல்கலைக்கழகங்கள் தள்ளப்பட்டன.
2. அரசியல் தலையீடு மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள்
பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இது பல வழிகளில் கல்வித்தரத்தைப் பாதித்துள்ளது:
2.1 நியமனங்களில் தலையீடு: தகுதியற்ற நபர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதால், திறமையான நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவது குறைந்தது.
2.2 மாணவர் அரசியல்: மாணவர் இயக்கங்களின் அரசியல் செல்வாக்கு, பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளை அடிக்கடி தடை செய்தது. இதனால், கல்வி நாட்கள் இழக்கப்பட்டன.
2.3 கொள்கைத் தொடர்ச்சியின்மை: அரசாங்கங்களின் மாற்றத்துடன் கல்விக் கொள்கைகளும் மாறியதால், நீண்டகால திட்டமிடல் மற்றும் மேம்பாடு என்பன பாதிக்கப்பட்டன.
3. பாடத்திட்டத்தின் காலாவதி மற்றும் தொழில்சார் தேவைகளுடன் பொருந்தாமை
பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் பெரும்பாலும் உலகளாவிய தொழில்சார் தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படவில்லை. இது மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனைக் குறைத்தது:
3.1 தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒத்திசைவு இன்மை: தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மற்றும் பிற புதிய துறைகளில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படவில்லை. இதனால், பட்டதாரிகள் உலகளாவிய போட்டியில் பின்தங்கினர்.
3.2 நடைமுறைப் பயிற்சிக் குறைபாடு: பல பாடநெறிகள் கோட்பாட்டு அறிவை மட்டுமே வழங்கின, ஆனால் நடைமுறைத் திறன்களை வளர்ப்பதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை.
3.3 மென்திறன் பற்றாக்குறை: தலைமைத்துவம், தொடர்பாடல், மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறன்களை வளர்க்கும் கல்விமுறைகள் இல்லாததால், பட்டதாரிகள் தொழில்சார் உலகில் போராடினர்.
4. மாணவர் திறன் மற்றும் உந்துதல் குறைவு
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படும் முறையில் உள்ள குறைபாடுகள், திறமையான மாணவர்களை மட்டும் உள்வாங்குவதைத் தடுத்தன. மேலும், பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக அழுத்தங்கள் மாணவர்களின் கல்வி உந்துதலைப் பாதித்தன:
4.1 மாணவர் தெரிவு முறை: உயர்தரப் பரீட்சை முடிவுகளை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதால், அவர்களின் ஒட்டுமொத்தத் திறன்கள் மதிப்பிடப்படவில்லை.
4.2 பொருளாதார அழுத்தங்கள்: பல மாணவர்கள் கல்வியுடன் பகுதிநேர வேலைகளைச் செய்ய வேண்டியநிலை இருந்ததால், அவர்களின் கவனம் மற்றும் கல்விச் செயற்பாடு குறைந்தது.
5. உலகளாவிய தரவரிசைகளில் பின்னடைவு
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் உலகளாவிய தரவரிசைகளில் முன்னேறவில்லை. இதற்கு முக்கிய காரணங்களாக பின்வருவன அடையாளம் காணப்படுகின்றன:
5.1 ஆய்வு வெளியீடுகள் குறைவு: உலகளாவிய தரவரிசைகள், ஆய்வு வெளியீடுகள் மற்றும் மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டவை. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடவடிக்கைகள் குறைவாக இருப்பதால், அவை தரவரிசைகளில் பின்தங்கின.
5.2 பன்னாட்டு ஒத்துழைப்பு இன்மை: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனான கூட்டு ஆய்வுகள் மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் குறைவாக இருந்தன, இது உலகளாவிய அங்கீகாரத்தைக் குறைத்தது.
5.3 மொழித்தடைகள்: ஆங்கிலமொழியில் கற்பித்தல் மற்றும் ஆய்வு வெளியீடுகளை உருவாக்குவதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே போதிய திறன் இல்லாதது, உலகளாவிய அறிவுப் பரிமாற்றத்தில் இலங்கையைப் பின்னுக்குத் தள்ளியது.
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் நெருக்கடியை எதிர்கொள்ள, பல்கலைக்கழகங்களுக்கு போதிய நிதி ஒதுக்குதல், நிர்வாக சுதந்திரம், பாடத்திட்ட மேம்பாடு, ஆய்வு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பை ஊக்குவித்தல் என்பன அவசியம். இவைமூலம், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மீண்டும் உலகளாவிய தரத்தில் ஒளிர முடியும். இலங்கைப் பல்கலைக்கழகங்கள் பழைய பாடத்திட்டங்களைப் பின்பற்றுவதற்கும், ஆய்வை ஊக்குவிக்காமல் இருப்பதற்கும் நிதிப் பற்றாக்குறை, நிர்வாக மந்தநிலை, பழமைவாதக் கல்வி அணுகுமுறை மற்றும் உலகளாவிய தொடர்பின்மை என்பன முக்கிய காரணங்கள் ஆகும். இந்தச் சவால்களை எதிர்கொள்ள, பல்கலைக்கழகங்களுக்குப் போதிய நிதி, நிர்வாகச் சுதந்திரம், தொழிற்துறை ஒத்துழைப்பு ஆய்வுக் கலாசாரத்தை வளர்க்கும் முயற்சிகள் தேவை.
நிறைவுக் குறிப்புகள்
ஆசிய நாடுகளிடையே எழுத்தறிவிலும் பாடசாலைக் கல்வியிலும் ஒரு காலம் முன்னிலை வகித்த இலங்கையில், ஆரம்பக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் பல தசாப்தங்கள் நீண்ட கரிசனையற்ற புறக்கணிப்பால் நெருக்கடியிலுள்ளன. இந்த மோசமானநிலைக்கு நாம் ஏன் வந்தடைந்தோம் என்பதை இப்போதாவது சிந்திப்பது சிறப்பு. கல்வி என்பது அனைவரின் அடிப்படை உரிமை. அனைத்துக் குடிமக்களும் கல்வியை மட்டுமல்ல, எந்த அடிப்படையிலும் பாகுபாடு அல்லது பற்றாக்குறை இல்லாமல் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வது அரசின் கடமை ஆகும்.
அதேவேளை பொதுமக்களின் மனநிலையிலும் மாற்றம் தேவைப்படுகிறது. பெயர்பெற்ற பாடசாலைகளில் இடம் பிடிக்கவும் அந்தஸ்துமிக்க பல்கலைக்கழகப் படிப்புக்கு அனுமதி பெறவும் போட்டியிடுதற்கே முதன்மை தரப்படுகிறது. வசதியுடையோர் தமது பிள்ளைகள் பெறும் படிப்பின் தன்மை பற்றிச் சொற்ப விளக்கமுமின்றி அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றனர், அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் உள்நாட்டுக் ‘கிளைகளிற்’ சேர்க்கின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையைப் பெற்றோர் பலர் மலிவான ஒரு மாற்றுவழியாகக் காண்கின்றனர். கல்வி நெருக்கடியின் வேர்கள், கல்வியின் நோக்கத்தைப் பெற்றோரும் பிள்ளைகளும் விளங்கியுள்ள விதத்திலும், பயனுள்ள தொழிற்துறைகள் பற்றிய கற்பனையான மனேபாவத்திலும் உள்ளன. இது மாற்றமடைய வேண்டும்.
எமது பாடசாலைக் கல்விமுறைமை குறைபாடானது. அதன் அழுத்தம் பல்கலைக்கழகம் புகக்கூடிய 5 சதவீதமானோர் மீதுள்ளது. பாடசாலையும் சமூகமும் 95 சதவீதமானோரைத் ‘தோற்றோராகவே’ கருதுகின்றன. இது மிகவும் தவறானது. எல்லாவற்றிலும் மேலாக, சமூகத்தின் பகுதியினராகத் தம்மை உணரும் சமூக ஈடுபாடுடைய பொறுப்புணர்வுள்ள பிரசைகளை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என ஆசிரியர்களதும் மாணவர்களதும் பெற்றோரதும் மனங்களில் பதிப்பது பிரதானமானது.
பலர் மாணவரின் ஆங்கில அறிவு போதாமையைப் பாரிய பிரச்சினையாக முன்னிறுத்துகின்றனர். முன்னேறிய அறிவின் ஒரே வாசல் ஆங்கிலம் என்ற தவறான பார்வையின் விளைவே இந்த நிலைப்பாடு. இது தவறானது. இத்தகைய கொலனிய மனச்சிறையினின்று நாம் விடுபடுவது முக்கியம். அதன் பொருள், பயனுள்ள ஒரு மொழியெனும் வகையில், ஆங்கிலத்தை மறுப்பதல்ல. நவீனத்துவத்தின் வளரும் தேவைகட்கு முகங்கொடுக்குமாறு தேசியமொழிகளின் பாவனையைத் தரமுயர்த்த வேண்டும். ஏனெனில், பாடசாலைகளில் ஆங்கிலமூலக் கல்வி என்பது எதிர்பார்த்த பயனைத்தரத் தவறியுள்ளது என்பதையும் நோக்க வேண்டும். உலகத் தொழிற்சந்தையில் வேலைபெறக்கூடியோரை உற்பத்தி செய்வதே கல்வியின் நோக்கம் எனும் வெகுதவறான புரிதலும் இதில் உள்ளது. இவை மாற்றமடைய வேண்டும். எமது சிந்தனை விரிய வேண்டும்.
சமூக மாற்றம், சமூக சமத்துவம், சமூக இயக்கம், ஜனநாயகக் குடியுரிமை, பன்முகத்தன்மைகொண்ட தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தனிநபர் மற்றும் சமூக அபிலாஷைகளை உணர்ந்து கொள்வதற்கு கல்வி ஒரு முக்கிய வழிமுறையாகும். எனவே, கல்வியின்திறன் மற்றும் பங்கைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் ஆகியவை, நேர்மறையான சமூக மாற்றத்திற்கும் தனிநபர் மற்றும் சமூக மேம்பாட்டிற்கும் உந்துசக்தியாக, அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் இடையிலான சமூகத் தொடர்புடன் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும். கல்வியின் அனைத்து மட்டங்களிலும் சமத்துவம் முக்கியமானது என்பதில் கொள்கை வகுப்பாளர்களின் தெளிவான உறுதிப்பாட்டை இது கோருகிறது. இதைச் சாத்தியமாக்க பரந்துபட்ட மக்களின் பங்குபற்றுகை அவசியமாகின்றது. பொதுசன மட்டத்தில் கல்வி பற்றி ஆரோக்கியமானதொரு அணுகுமுறையும், கல்விக் கொள்கையிலும் நடைமுறையிலும் கூடியளவில் பொதுமக்களின் பங்குபற்றலும் அவசரமானதும் அவசியமானதுமான தேவையாகும்.