யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் - திரிகடுகம்
Arts
8 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் – திரிகடுகம்

August 6, 2022 | Ezhuna

ஈழத்தில் தோன்றிய வைத்தியம் தொடர்பான நூல்களில் ஒன்று செகராசசேகரம். கி.பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் குடிமக்களுக்காக இந்தியாவில் இருந்து பண்டிதர்களை வரவழைத்து செகராசசேகரம் என்னும் வைத்தியநூலை ஆக்குவித்தான். இதில் பல பகுதிகள் தற்போது அழிந்துள்ளன. தற்போது  கிடைக்கும் செகராசேகரம் நூலில் உள்ள ‘இரசவர்க்கம்’ என்ற பகுதியில் சொல்லப்பட்டுள்ள, பாரம்பரிய வைத்திய முறைமைகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள், நோய்களுக்கான சிகிச்சைகள் பற்றி தெளிவுபடுத்துவதாக ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகிறது.

அறிமுகம்

சிங்கைச் செகராஜசேகரன் என்ற பெயருடன் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னன் ஒருவன் தனது குடிமக்களுள் பெரும்பாலான தமிழ்மக்களின் நலன் கருதி வைத்தியம் மற்றும் சோதிடம் தொடர்பான நூல்களைத் தமிழ்மொழியில் ஆக்கும்படி இந்தியாவில் இருந்து தான் வரவழைத்த பண்டிதர்களைக் கேட்டுக் கொண்டான். இப்பொழுது எமக்குக் கிடைக்கும் செகராசசேகரமாலை என்னும் சோதிடநூலும் செகராசசேகரம் என்னும் வைத்தியநூலும் இம்மன்னன் காலத்தில் ஆக்கப்பெற்றனவே. கி. பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் ஒருவனே மேற்படி நூல்கள் தோன்றக் காரணமாயிருந்தான் என்பதற்கான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன.

செகராசசேகரம் என்னும் மருத்துவ நூலின் ஒரு சில பாகங்களே அச்சில் வெளிவந்துள்ளன. செகராசசேகர வைத்தியத் திறவுகோல் என்னும் பெயரில் இலங்கை ஆயுள்வேதத்திணைக்களத்தின் வெளியீடாக மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ள இந்நூலுக்கு உரை எழுதியுள்ள வைத்தியகலாநிதி நாகரத்தினம் கணேசலிங்கநாதன் தனது முகவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“செகராசசேகரத்தின் சிலபகுதிகள் நூல் உருப்பெறவில்லை. இரசவர்க்கம், பாலர்நோய் மருத்துவம், மனநிலை பிறழ்வு மருத்துவம் போன்றவை இதில் அடங்கும். இவை ஏட்டுப்பிரதிகளில் பாரம்பரிய மருத்துவர்களிடம் இருக்கலாம் அல்லது சிதைந்து இருக்கலாம்.”

‘அதிர்ஷ்டவசமாக கணேசலிங்கநாதன் குறிப்பிட்டுள்ள ‘செகராசசேகரத்துக்குரிய இரசவர்க்கம்’ என்னும் பகுதியைக் கொண்ட ஏட்டுப்பிரதி பாரம்பரிய மருத்துவர்களான எமது மூதாதையரிடம் இருந்து எமக்கு வந்துசேர்ந்துள்ளது. இதனை முதன்முதலாக அச்சில் வெளிக்கொண்டுவரும் வாய்ப்பு எமக்குக் கிடைத்திருப்பதையிட்டு நாம் பெருமகிழ்வு அடைகிறோம் .

உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் மருந்துப்பொருள்களின் குணங்களை எடுத்துரைக்கும் இந்தப்பகுதி வெண்பாக்களால் ஆனது. இப்பாடல்கள் ஒவ்வொன்றினதும் விளக்கத்தையும் மருந்துப்பொருள் பற்றிய மேலதிக விபரங்களையும் தந்துள்ளோம்.

நூற்றி எட்டுப்பாடல்கள் மாத்திரமே எமக்குக் கிடைத்த ஏட்டுச்சுவடிகளில் காணப்படுகின்றன. இந்தப்பாடல்களில் ஒருசில இந்தியாவில் 1932 இல் அச்சிட்டுவெளியிடப்பட்ட ’பதார்த்தகுண சிந்தாமணி’ என்னும் நூலில்  சிற்சில மாறுதல்களுடன் இடம்பெற்றுள்ளன. அவற்றையும் பாடபேதமாகக் குறிப்பிட்டுள்ளோம்.

திரிகடுகம்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றின் பெயர் திரிகடுகம்.  சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மூலிகைகளை உள்ளடக்கியது திரிகடுகம் என்னும் ஆயுள்வேத மருந்து. திரிகடுகம் என்னும் நூலின் ஒவ்வொரு பாடலிலும் மூன்று விடயங்கள் பேசப்படுவதால் நூலாசிரியர் தமது நூலுக்குத் திரிகடுகம் என்னும் பெயரைத் தந்துள்ளார் எனக்கருதலாம்.

’அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து’

சிறந்த ஒழுக்கமுடைய மனைவி, மிகநீண்ட பரம்பரையின் வாரிசாக இருத்தல், தவறு செய்ய முற்படும் வேளைகளில் தக்க அறிவுரை கூறித் திருத்துவோரின் நட்பு இம்மூன்றும் திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலத்துக்கு உதவுவது போல் வாழ்க்கைக்கு உதவுவன என்று கூறுகின்றது இப்பாடல்.

திரிகடுகுநல்ல திரிபலையும் கொண்டால்
பிறகிடுமேநோய்களெல்லாம் பின்னும்-கிறுகிடுமே
திரிதோஷமெல்லாம்சிதறிடுமே நின்று
அறிவால் இதையறிந்து ஓது.

ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே திரிகடுகம் என்னும் மருந்து தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான ஒன்றாக இருந்துள்ளது என்பதை ஊகிக்கமுடிகின்றது.

இதன்பொருள்: சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்த திரிகடுகமும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மூன்றும் சேர்ந்த திரிபலையும் எடுத்துக் கொள்பவர்களை நோய்கள் அண்டாது. வாதம், பித்தம், கபம் என்று சொல்லப்படுகிற முத்தோஷங்களும் விலகிப்போம்.

திரிகடுகம்

மேலதிகவிபரம்: சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றினது தூளையும் சம அளவில் கலந்து பெறப்படுவதே திரிகடுகம் ஆகும். கிறைன்டரில் அரைப்பதன்மூலம் நல்ல தூளைப் பெறலாம். இதனைத் தயாரித்து காற்றுப் போக முடியாத ஒரு போத்தலில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம்.

பெரியவர்களுக்கு இத்தூளில் 3 கிராம் வெந்நீருடன் அல்லது தேனுடன் ஒருநாளைக்கு மூன்றுதடவைகள் கொடுக்கலாம். சிறார்களுக்கு வயதுக்குத் தகுந்தபடி 125 மில்லிகிராம் முதல் 500 மில்லிகிராம் வரை கொடுக்கலாம். குறிப்பிட்ட அளவு திரிகடுகத்தூளை ஒரு கோப்பை பாலில் கலந்து சிலநிமிடங்கள் கொதிக்க வைத்து ஆறியவுடன் இளஞ்சூட்டோடு குடிக்கவும் கொடுக்கலாம்.

தேனுடன்சேர்த்து எடுக்கும்போது திரிகடுகம் தடுமல், இருமல், முட்டு, ஆஸ்த்மா உடற்பருமன் போன்ற பலவியாதிகளுக்கு மருந்தாக உள்ளதுடன் சமிபாட்டுச் சக்தியையும் ஊக்குவிக்கின்றது. திரிகடுகம் உள்ளடக்கிய சுக்கு மிளகு திற்பலி என்பவற்றுக்கும் தனித்தனியே விசேட குணங்கள் உண்டு. அவற்றை அடுத்து நோக்குவோம்.

 சுக்கு (வேர்க்கொம்பு)

சுக்குக்குநெஞ்செரிப்புத் தொண்டுவழலையறும்
கக்குஇருமல் தனைச்சாடுமே-மொக்குமென்
மூக்குநீர்ப்பாய்ச்சல்போம் மூலக்கிராணியறும்
போக்குமே கண்குளிரும் போது

இதன் பொருள்: சுக்கு நெஞ்செரிவு, தொண்டை நோவு என்பவற்றைச் சுகப்படுத்தும். இருமல், மூக்கால் நீர்வடிதல், மூலக்கிறாணி என்பவற்றுக்கும் சுக்கு மருந்தாகும்.

  இந்தியமருத்துவத்தில் சுக்குக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனை மிஞ்சிய கடவுளும் இல்லை’ என்பது ஒரு பழமொழி. 

 சுக்கு (வேர்க்கொம்பு)

சுக்கும் கற்கண்டும் சம அளவில் எடுத்துத் தூளாக்கவும். இந்தக்கலவையில் ஒரு மேசைக்கரண்டி தூளை இளநீரில் கரைத்துக்குடிக்க நெஞ்செரிவு குறையும். இதையே பசையாக்கித் தொண்டையில் பூச தொண்டை நோவு குணமாகும். சுக்குத்தூளைக் கருப்பஞ்சாற்றில் கலந்து தினமும் காலையில் குடிப்பதன்மூலம் வயிற்றில் எரிவு போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம். சுக்கைத்தேனீருடன் சேர்த்தும் பருகலாம்.

இருமல், காய்ச்சல் என்பவற்றுக்கும் சுக்குக்குடிநீர் நிவாரணம் தரும். வியர்வையை உண்டாக்குவதன்மூலம் இது உடல்வெப்பத்தைக் குறைக்கிறது. செமியாக்குணம், வாய்வு என்பற்றுக்கும் சுக்கு மருந்தாகும். சுக்கில் உள்ள ஜிஞ்ஜெறோல் (gingerols) என்னும் பொருள் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தவிர்க்கவும் மேலும் பரவாமல் தடுக்கவும் உதவுகிறது.

மூட்டுக்கள், தசைநார்கள் என்பவற்றில் நோவு, வீக்கம், இறுக்கம் என்பவற்றுக்குக் சுக்கு கைகண்ட மருந்தாகும். சுக்கில் உள்ள ஜிஞ்ஜெறோல் என்னும் இரசாயன உள்ளடக்கம் வலியை ஏற்படுத்தும் ஹோர்மோன்கள் உருவாவதைத் தடுத்துவிடுகின்றது. நாள்தோறும் உணவில்குறைந்தது  ஒரு தேக்கரண்டி சுக்குத்தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வீக்கம் காணப்படும் மூட்டுக்களில் அல்லது முழங்காளில் சுக்குப்பசையைப் பூசுவதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கலாம்.

சுக்குத்தூளைக் காற்றுப் புகமுடியாத குப்பிகளில் அடைத்து வைத்துப் பயன்படுத்த வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

பித்தக்கல் (gall stones) பாதிப்பு உடையவர்கள் சுக்கைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். Dried Ginger என்பது இதன் ஆங்கிலப்பெயர். Zingiber officinale ROSC என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயராகும்.

மிளகு

சோகை கபதோஷம்போம் சூலைசுரங்களறும்
தாகமறும் மந்தமதைப்போக்கும்-மேகம்
சிரங்குகிருமியுடன் சில்விஷங்கள் நாசம்
பொருந்து மிளகருந்தும் போது

இதன் பொருள்: காமாலை (anaemia) மற்றும் இருமல், தடுமல், மூக்குநீர்ப்பாய்ச்சல் போன்ற கபம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். வயிற்றுவலி, சுரம், தாகம், மந்தம் என்பவற்றைப் போக்கும். மிளகு அருந்துவதனால் தோல்வியாதிகள்,சிரங்கு கிருமித் தொல்லை, சிறுவிஷங்கள் என்பனவும் தீரும்.

மிளகு

  ‘பத்துமிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’ என்பது மருத்துவப்பழமொழி. உணவுடன் வயிற்றுள்சென்று சேரக்கூடிய பல்வேறு வகையான நச்சுக்கிருமிகளை அழிப்பதுடன் சமிபாட்டையும் ஊக்குவிக்கும் மிளகு மேற்குலக மக்களின் உணவில் தவிர்க்கமுடியாத கறிச்சுவையூட்டியாக (spice) இடம் பெற்றுவிட்டது. போர்த்துக்கேயர் மிளகாயை இலங்கை ,இந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டுத் தாம் மிளகைத் தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்ள வழிவகுத்துக் கொண்டார்கள்.

வயிற்றில் புரதச் சமிபாட்டுக்குத் தேவையான ஹைட்றோக் குளோறிக்  அமிலத்தின் (hydrochloric acid) சுரப்பை ஊக்குவித்து இறைச்சி, மீன், முட்டை போன்ற புரத உணவுகள் துரிதமாகச் சமிபாடு அடைய மிளகு உதவுகிறது.

திப்பிலி

அய்யமுடன்வாத மணுகாது அம்புவியில்
நய்யாமல் திற்பலியை நன்னுவார்-வெய்யச்
சுரமும்திரிதோஷமும் துரத்தும்தலைவலியும்
பொருமும்வாய்வு பலவும் போம்

இதன் பொருள்: இருமல் ஆஸ்த்மா நெஞ்சுச்சளி போன்ற சுவாசக்குழாய் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குத் திப்பிலி மருந்தாகப்பயன்படும். முத்தோஷங்களையும் போக்கும். தலைவலி, வாய்வு என்பவற்றையும் குணமாக்கும்.

நெஞ்சுச்சளியுடன் கூடிய இருமலுக்கு திப்பிலித்தூள் 125 மில்லிகிராம் முதல் 250 மில்லிகிராம் வரை தேனுடன் அல்லது இளஞ்சூடான நீருடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சிறுவர்களுக்குக் கொடுக்கலாம். பெரியவர்களுக்கு இத்தூளின் அளவு 1 கிராம் தொடக்கம் 3 கிராம் வரை இருக்கலாம்.

திப்பிலி

சளி இல்லாத வரட்டு இருமலாயின் தேனுக்குப்பதில் வெல்லம் அல்லது அதிமதுரம் சேர்க்கலாம். இம்மருந்தைச் சாப்பிட்டவுடன் சிறிதளவு சூடான வெந்நீர் அருந்தவேண்டும். திப்பிலித்தூளைத் தேன் அல்லது வெந்நீர் சேர்க்காமல் அருந்தக்கூடாது.

திப்பிலிவேர் தலைவலிக்குச் சிறந்த மருந்து என்பது ஆயுர்வேத மருத்துவர்களின் ஒருமித்த கருத்தாகும். கூடவே இருமல், தடுமல், சளிக்கட்டு என்பவற்றுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது.

திப்பிலிவேர்த்தூள் சிறுவர்களுக்கு 250 மில்லிகிராம் தொடக்கம் 500 மில்லிகிராம் என்ற அளவிலும் பெரியவர்களுக்கு 2 தொடக்கம் 3 கிராம் என்ற அளவிலும் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் கொடுக்கவேண்டும். திப்பிலித்தூளை 3 தொடக்கம் 5 கிராம் அளவிலான நெய், பட்டர் அல்லது தேனுடன் சேர்த்துஅருந்திவிட்டு உடனே  வெந்நீர் அல்லது பாலைக் குடிக்கவேண்டும். இம்மருந்தை வெறும்வயிற்றில் எடுப்பது நல்லது. கர்ப்பிணிப்பெண்கள் இம்மருந்தை எடுத்தல்கூடாது.

 தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12870 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)