அதிகார வெறியும் ஆடம்பர ஆர்ப்பாட்டங்களும் ஆர்ப்பரித்து இருந்த ஒரு காலகட்டத்தில் மாபெரும் மனிதக் கூட்டங்கள் மந்தைகள் என மண்ணில் வீசப்பட்டிருந்தன. 17 ஆம்,18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய ஆக்கிரமிப்பு வெறியர்கள் ஏகாதிபத்தியங்களாக எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் தம் காலடியில் போட்டு மிதித்து விடவேண்டும் என்று வேட்கை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ்காரன் என்ற மகா பாதகன் ஆப்பிரிக்கக் கண்டத்தை சின்னா பின்னப்படுத்திய பின்னர் ஆசியாவை நோக்கி படை திரட்டிக்கொண்டு வந்தான். அதற்கென கிழக்கிந்திய வர்த்தக கம்பெனி என்று ஒரு பாரிய நிறுவனத்தை பெரும் செலவில் தோற்றுவித்தான். அதனால் ஏற்பட்ட பெரும் பணச்செலவை அவர்கள் ஆக்கிரமித்த அந்தந்த நாட்டு மக்களையே அடித்து உதைத்து துவம்சம் செய்து வசூலித்து கொண்டான்.
பிரிட்டிஷார் தாம் அடிமைப்படுத்திய மக்களிடையே அறிமுகப்படுத்திய மதுப் பழக்கத்திலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் ஏன் ஏனைய மக்களும் கூட இன்றுவரை மீளமுடியாதுள்ளனர். மதுவின் மூலக்கூறுகள் தொழிலாளர்களின் மரபணுக்களில் (DNA) இரண்டறக் கலந்து விட்டதாலோ என்னவோ மது மீதான தாகம் மிகப் பரவலாக மக்கள் மத்தியில் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது தொடர்ந்தும் இம் மக்களை வறியவர்களாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது . அதுவே இந்த மக்கள் எழுச்சி பெற முடியாமைக்கு பிரதான தடையாகவும் காணப்படுகின்றது.
17 ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் அடிமைகளைப் பயன்படுத்தி பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டபோது தென்னாபிரிக்காவின் மேற்கு கேப் (Western cap) பிரதேசத்தில் அடிமைகளை கட்டுப்படுத்தி வைப்பதற்கு மாலையானதும் மதுவை பங்கீட்டு முறையில் இலவசமாக வழங்கினார்கள். அப்போது அது நெதர்லாந்தின் டச்சு காலனித்துவ நாடாக இருந்தது. இந்த முறைமையால் தொழிலாளர்களை போதைக்கு அடிமையாக்கி குறித்த பண்ணையில் இருந்து வெளியேறிச் செல்லாமல் சங்கிலி இல்லாமலே அவர்களை வெற்றிகரமாகக் கட்டிப்போட்டு வைத்திருந்தனர். இவ்விதம் அவர்களைக் கட்டுப்படுத்தும் அடிமைமுறை பயிற்செய்கை காலம் முழுவதும் தொடர்ந்ததுடன், அதன் பின்னரும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அவர்கள் பின்னர் திராட்சை ரச வைன் தயாரித்து முடிந்ததும் வீசப்படும் சக்கையிலிருந்து மிக மட்டரகமான மதுவை உற்பத்தி செய்து குறைந்த விலையில் இவர்களுக்கு வழங்கினார்கள்.
இது தொடர்பில் தனது நூலான நவீன அடிமை முறைமை (1974) (New System of slavery by Hugh Tinker) என்ற நூலில் ஹியூ டிங்கர்பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார். “உலகெங்கும் அழைத்துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவழி தமிழர்களுக்கு இந்த மதுவை போதுமான அளவு வழங்கி அவர்களை எல்லாத் துன்பங்களையும் மறக்க வைக்கும் ஒரு மங்கியதான மாலைப்பொழுதுக்கு இட்டுச் சென்று விடும் நிலையை ஏற்படுத்தினர்” என்று குறிப்பிடுகின்றார். இவர்களுக்கு வழங்கியது “இந்திய மது” (Indian Drink) என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கூடுமானவரை சாராயத் தவறணைகளையும் கோவில்களையும் அமைக்க உற்சாகப்படுத்தினார்கள். தொழிலாளர்கள் இந்த மது, மதம் இரண்டு விதமான போதைகளிலும் மூழ்கி இருக்கும்போது நம்மை ஏறி மிதிக்கும் எஜமானருக்கு எதிராக அவர்கள் அணிதிரள மாட்டார்கள் என்பதனை முதலாளி வர்க்கம் நன்கு தெரிந்து வைத்திருந்தது.
எனினும் தோட்டத்துரைமார்கள், தொழிலாளர்கள் மது அருந்தும் போது தனியாக சந்தித்து தமது அன்றாட பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள், தம்மீதான சுரண்டல்கள் போன்றவை பற்றி பேசி கலந்துரையாடி தமக்கு எதிராக செல்வதை அனுமதிக்காமல் அவர்கள் பொது இடங்களில் வைத்து மது அருந்துவதையே விரும்பினார்கள். இதன் காரணமாக தொழிலாளர்கள் நன்கு குடித்து விட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு அடித்துக் கொள்வதும் அடுத்த நாள் வேலைக்கு செல்லாமல் இருக்கும் சம்பவங்கள் அதிகரித்தமையையும் கூட அவர்கள் பொறுத்துக் கொண்டனர். இலங்கைப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் ஆரம்ப காலகட்டமான 1830 களில் இருந்து தொழிலாளர்களின் வதிவிட எல்லைப்புறங்களில் சாராயம் மற்றும் கள்ளுத்தவறணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. 1873 ஆம் ஆண்டு கவர்னர் வில்லியம் ஹென்ரி கிரகரி (William Henry Gregory) அவர்களுக்கு தோட்டத்துரைமார் சங்கம் எழுதிய கடிதத்தில் இப்போது இருக்கும் சாராயத் தவறணைகளின் எண்ணிக்கை போதாது என்றும் அதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்ததை அறியமுடிகின்றது. அதன்மூலம் சாராய தவறணைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் (Tavern Permit) அதிகரிக்கப்பட்டதுடன் உள்ளூர் சிங்களவர்களும் கள்ளுத் தவறணைகளை ஆரம்பிக்க உற்சாகப்படுத்தப்பட்டனர்.
அரசாங்கம் சாராயத் தவறணைகளை ஆரம்பித்தவுடனேயே கள்ளச்சாராய விற்பனையும், எரிசாராய உற்பத்தியும் பெருந்தோட்ட பகுதிகளில் பல்கிப் பெருகின. அரசாங்க அனுமதி பெற்ற சாராயக் கடைகளில் கிடைத்த சாராயத்தை விட மலிவு விலையில் கிடைத்தமையே இவற்றின் பெருக்கத்துக்கு காரணமாக இருந்தது. 1897ஆம் ஆண்டளவில் தோட்டங்களை அண்டிய பிரதான பாதைகளின் இரு மருங்குகளிலும் சாராயத் தவறணைகள் அமைக்கப்பட்டிருந்தன என்றும் மேலும் பல தோட்டங்களில், லயங்களிலும் கூட ஒரு காம்ரா ஒதுக்கப்பட்டு மது களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டது என்று குடியேற்ற செயலாளருக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மிகப் பாதகமான மற்றுமொரு விளைவு என்னவென்றால் தோட்டத்து கூலிகள் ஒவ்வொரு கிளாஸ் அல்லது சிரட்டையில் ஊற்றி சிறிது சிறிதாக மது குடித்த போது அவர்கள் அந்த மதுக்கோப்பை ஒவ்வொன்றுக்கும் கொடுத்த பணமானது பணக்காரர்கள் ஒரு போத்தல் குடித்ததிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகமானதென 1896ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எழுதிய அறிக்கையில் அப்போது மேற்கு மாகாண அரச அதிபராக கடமையாற்றிய எல்லீஸ் (T.Ellies) அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இவரது கூற்றுப்படி ஒரு தனவந்தர் ஒரு கலன் சாராயத்தை ரூபா 4.48 சதத்துக்கு வாங்கிக் குடித்த போது அதே அளவு சாராயத்தை கூலித்தொழிலாளி சிறுகச் சிறுக குடித்தபோது ரூபா 7.48 செலுத்துகிறான் என்று தெரிவித்துள்ளார்.
தெரிந்தோ தெரியாமலோ மது அருந்துதல் என்பது மக்களின் வாழ்வில் அங்கமாகி போய்விட்டது. ஆனால் அண்மைக்காலம் வரை மது அருந்துதல் ஒரு பெரும் செலவு மிக்க காரியமாக இருக்கவில்லை. ஆனால் இன்று அது மிக செலவு மிகுந்த ஆடம்பரமானதொன்றாகப் போய்விட்டது. ஆதலால் கள்ளச் சாராயத்தையும் அல்லது எரிசாராயத்தை களவாகக் குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. 1980ஆம் ஆண்டு வரை தொடர்ந்து தேயிலை சிறு உரிமையாளர்களின் தொகை அதிகரித்தபோது சிங்கள நாட்டுப்புறத்திலிருந்து இத்தகைய சாராயம் காய்ச்சப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. காலி மத்துகம பிரதேசத்தில் சில காலத்திற்கு முன்பு வரை “கரிஞ்ஞா” என்ற பெயரில் கள்ளசாராயத்தினை தேயிலை சிறு உடமையாளர்கள், மாலையானதும் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கும் போது கால் போத்தல், அரை போத்தல் சாராயத்தையும் சேர்த்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்று தெரியவந்துள்ளது. இதற்கான விலையை அவர்கள் சம்பளத்திலிருந்து கழித்துக் கொண்டனர் என்றும் இந்த பழக்கம் இப்போதும் சில இடங்களில் வழக்கத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
தொழிலாளர் என்ற மந்தைக் கூட்டத்தில் எந்தவிதமான எழுச்சிகரமான சிந்தனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் நீண்டகாலமாக மதுபோதை அடிமைத்தனத்தினை ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதற்கு ஏனைய காரணிகளான ஆணாதிக்க சமூக அமைப்பு, சாதி அமைப்பில் மேல் சாதி கீழ் சாதி என பிரிந்து முரண்பட்டு காணப்படுகின்றமை, பிற்போக்கான மடத்தனமான மதக் கட்டுப்பாடுகள் போன்றன இவர்களை அதிகாரத்தால் அழுத்தி மிதித்து வைத்திருக்க பேருதவி புரிந்துள்ளன. இன்றைய விஞ்ஞான யுகத்திலும் கூட ஆசிய மக்களிடையே புரட்சிகரமான விஞ்ஞான சிந்தனைகள் தோன்றாமல் இருப்பதற்கு அவர்கள் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் மூட நம்பிக்கைகள் மிகுந்த மத சிந்தனைகள் ஒரு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இப்படியாக இரண்டு நூற்றாண்டு காலமாக நீடித்து வரும் இந்த மது அடிமை பழக்கமும் முன்சொன்ன ஏனைய காரணிகளும் சேர்ந்து இன்றும்கூட இந்தச் சமூகத்தை ஒரு எழுச்சி பெறமுடியாத சமூகமாக முடக்கி வைத்திருக்கின்றனவோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றது. எனினும் இன்று இந்த பெருந்தோட்டக் கைத்தொழில் துறை என்ற வறுமையின் கிடுக்கிப் பிடியில் இருந்து இவர்கள் வெளியேறி பல்வேறு தொழில் துறைகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு மலையகத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளித் தமிழர் என்ற வரையறைக்குள் தம்மை இணைத்துக் கொண்டு விட்டனர். இன்று வெறுமனே ஒரு லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் அல்லது சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே கூலித் தொழிலாளர்களாக உள்ளனர் என ஒரு கணக்கீடு தெரிவிக்கின்றது. இனிமேலும் இவர்களை தேயிலைத் தோட்டங்களுக்குள் கட்டிப்போடும் சக்தியை தேயிலை பெருந்தோட்டப் பொருளாதாரம் படிப்படியாக இழந்து வருகின்றது.
தொடரும்.