அறிமுகம்
இலங்கையின் விவசாயப் பாரம்பரியம் ஆரியர் வருகைக்கு முன்னர் இருந்தே ஆரம்பிக்கிறது. இதற்குச் சான்றாக இலங்கையில் சுற்றுச்சூழல் தொல்லியல் துறையில் முன்னோடியான டாக்டர். ரத்னசிறி பிரேமதிலக மேற்கொண்ட சமீபத்திய ஆராய்ச்சி, நமது நீண்டகால நம்பிக்கைகளில் பலவற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இவ்வளவு காலமும் நாம் நம்பிக்கொண்டிருப்பது மகா வம்சமும், தீபவம்சமும் சொல்லுகின்ற ஐந்நூறு ஆண்டுகால வரலாற்றை மட்டுமே. ஆனால் உண்மையில் இந்த நாட்டின் கற்கால மனிதர்கள், பழங்குடியின வேடர்களின் மூதாதையர்கள் தான் நமது நாட்டின் ஆதிக்குடிகள் என்றும், அவர்கள் தான் முதல் விவசாயிகளாக இருக்கலாம் என்றும் சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சி கூறுகிறது. அதற்குச் சான்றாக கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, இலங்கைக்கே உரித்தான நெல்லின மாதிரிகளை அவிசாவளைப் பிரதேசத்தில் இருந்து கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமன்றி, இலங்கைக்கே உரித்தான கிட்டத்தட்ட ஆயிரம் வரையிலான நெல் வர்க்கங்கள் இலங்கையில் காணப்படுவதானது, இலங்கையின் பல ஆயிரம் ஆண்டுகால விவசாய வரலாற்றைப் பறைசாற்றி நிற்கிறது.
இலங்கையின் விவசாயப் பாரம்பரியத்தை ஆழமாக உற்றுநோக்கினால், கி.மு 800 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இருந்தே மனிதன் சிறு சிறு குழுக்களாக நதிக்கரைகளை அண்டி வாழ ஆரம்பித்ததில் இருந்து, இலங்கையில் நெல் சாகுபடி சிறிதளவில் இருந்ததாகவும் பின்னர் கி.மு 390 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பெரியளவில் நெற்சாகுபடி செய்வதற்காக நீர்ப்பாசன கட்டமைப்புகள், நீர்த்தேக்கங்கள், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கால்வாய்கள் அமைக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆவணச் சான்றுகள் கூறுகின்றன. புராதன காலத்தில் இருந்தே இலங்கை, உலகின் கிழக்கு நெற்தானியக் களஞ்சியம் எனப் பெயருடன் பிரபலமடைந்திருந்ததுடன் மற்ற நாடுகளுக்கு 2000 ற்கும் மேற்பட்ட உள்நாட்டு அரிசி ரகங்களையும் வழங்கியது. இலங்கையின் அரிசிச் சாகுபடியானது தூயதாகவும், நல்லதாகவும் கருதப்பட்டது. அரிசி சாகுபடி செயன்முறையும் அதன் தூய இயல்பும் இலங்கையின் பாரம்பரிய அரிசிச் சாகுபடியை நிலையானதாக்கியது. இவ்வாறு நெற் செய்கையோடு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் விவசாயப் பாரம்பரியம், நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, சூழலுக்கு இசைவான வகையில், விவசாயத்தோடு இணைந்த வாழ்க்கை முறையினூடாக, உணவுத் தேவையை நிறைவு செய்வதற்கான முறையில் பல் பயிர் செய்கையினூடு தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பும் நோக்கோடு பரிணமிக்க ஆரம்பித்தது.
நீர்ப்பாசனக் கட்டமைப்பும் இயற்கை விவசாயத்தின் ஆரம்பமும்
ஆரம்பத்தில் இலங்கையின் நதிக்கரை ஓரப் பகுதிகளின் ஆற்றுப் படுக்கைகளை அண்டிய பகுதியிலேயே எமது இயற்கை விவசாயம் ஆரம்பமானது. இலங்கை மக்களின் பிரதான உணவு அரிசிச் சோறு என்பதனால் எமது நாடு அக்காலத்தில் இருந்து நெற் செய்கையிலேயே பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றது. காலத்துக்கு காலம் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் மற்றும் வறட்சியினால் விவசாயத்துக்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், விவசாய மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அக்காலத்து மன்னர் தலைமையில் பல்வேறு குளக்கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையின் நீர்வள நாகரிகத்தை எடுத்துக் கொள்வோமானால்,அந்தக்கால மன்னர்கள் நெற்செய்கைக்கு முன்னுரிமை அளித்த உண்மையை நன்கு அறிந்து கொள்ளலாம். இதன்போது தரைத்தோற்ற அம்சங்கள் கருத்தில் எடுக்கப்பட்டு நில உயர வேறுபாடுகளுக்கேற்ப ஆறுகளும், நதிகளும் மற்றும் குளங்களும் கால்வாய்களினூடு இணைக்கப்பட்டு நிலைபேறான விவசாயத்திற்கான நீர்ப்பாசனக் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டன. (அட்டவணை 1).
நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களின் அபரிமிதமான வளர்ச்சியினால், இலங்கை முன்னொரு காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங்கியது. புராதன மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் போது இலங்கையில் இருந்து நட்பு நாடுகள் சிலவற்றுக்கு நெல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக எமது வரலாற்று இலக்கிய ஆதாரங்களில் கூறப்பட்டிருக்கிறது. அதேசமயம் வட இந்தியாவின் சில பகுதிகளை ஆட்சி செய்த அன்றைய மன்னர்கள், நீர்ப்பாசனக் குளங்களை அங்கு அமைத்துக் கொள்வதற்காக இலங்கையிடமிருந்து தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதாக வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கும் நெற்செய்கைக்கும் இவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்ததன் காரணமாகவே இலங்கையில் எக்காலமும் பஞ்சம் தலைவிரித்தாடியதில்லை. பண்டைய காலத்தில் விவசாயத்தை மேம்படுத்த அரசர்கள் “நிலத்தில் விழும் ஒரு துளிநீரையேனும் வீணாக கடலில் செல்ல இடமளியேன்” எனப் பாடுபட்டார்கள். சங்க காலத்தில் பொ.ச.மு. 500 – பொ.ச. 300 விவசாயம் தமிழர்களின் முக்கிய தொழிலாக இருந்தது. இது வாழ்க்கையின் அவசியமானதென்றபடியால், எல்லாத் தொழில்களிலும் முதன்மையானது விவசாயமே என்று கருதப்பட்டது. விவசாயிகள் அல்லது உழவர் சமூக வகைப்பாட்டின் உச்சியில் வைக்கப்பட்டனர். அவர்கள் உணவு தானியங்களைத் தயாரிப்பவர்களாக இருந்ததால் அவர்கள் சுய மரியாதையுடன் வாழ்ந்தார்கள். சங்க காலத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நீர்ப்பாசனம், உழவு, உரம், சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றின் மேம்பாடுகளுடன் இது படிப்படியாக வளர்ச்சியடைந்தது. பண்டைய தமிழர்கள் பல்வேறு வகையான மண் வகைகள் அவற்றில் பயிரிடக்கூடிய பயிர்கள் மற்றும் பிராந்திய வேறுபாடுகளுக்கு ஏற்ற பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து அறிந்திருந்தனர்.
நீர்ப்பாசனக் கட்டமைப்புக்கள் திறம்பட அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்ட போது ஆண்டு முழுவதும் குள நீர்ப்பாசனத்தினூடு பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல், சிறுதானியங்கள் மற்றும் மரக்கறிப் பயிர்ச்செய்கைகள் தன்னிறைவைக் கண்டன.
இவ்வாறு அனுராதபுர காலத்தில் இருந்து எழுச்சி பெற்று வந்த நீர்ப்பாசனக் கட்டமைப்புக்கள் கி. பி 13 ஆம் நூற்றாண்டில் இருந்து மெது மெதுவாகக் கைவிடப்பட்டு அழிவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. இதற்குக் காரணம் காலநிலையாகும். விவசாயத்தில் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக உணவுத் தட்டுப்பாடு, அந்நியர்களின் தொடர்ச்சியான படை எடுப்புகள், மற்றும் மலேரியா நோயின் தாக்கம் போன்றவற்றால் மக்கள் இலங்கையின் தென்மேற்கு நோக்கி இடம் பெயர்ந்தமையே ஆகும்.
பண்டைய விவசாயப் பழக்கங்களும் விழுமியங்களும்
எமது பண்டைய விவசாய முறைகளும் பழக்க வழக்கங்களும் எமது வாழ்வியலுடனும் கலாசார விழுமியங்களுடனும் பின்னிப் பிணைந்தவை. தமிழர்களினுடைய விவசாயப் பழக்க வழக்கங்களை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு வருடத்தினுடைய தை மாதத்தின் 1 ஆம் திகதியன்று, புதிய அறுவடையில் இருந்து கிடைக்கும் நெல்லைக் கொண்டு பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைத்து சூரிய வழிபாடு செய்வதில் இருந்து ஆரம்பிக்கும். விவசாயிகள் சூரியனையே இந்த இயற்கை அசைவின் கடவுளாகவும் தங்கள் விவசாயத்தின் காப்பானாகவும் நினைத்து சூரியனை மகிழ்வித்து விவசாயக் கடமைகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். பின்னர் இதர செயற்பாடுகளாக தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் விவசாயத்தின் உயிர்த் தோழனாக விளங்குகின்ற கால்நடைகளை மதித்து பட்டிப் பொங்கல், தைப் பூசத்திலே புதிர் எடுத்தல், சித்திரைத் திருநாளிலே குப்பை எருக்கொட்டுதல், ஆடியிலே தேடித் தேடி கோடை உழவு செய்தல், வளர் பிறையிலே விதை நாள் செய்தல் போன்ற சடங்குகள் மற்றும் விஜய தசமியிலே ஆயுத பூசை செய்தல், அறுவடைக்கு முன்னர் வயலுக்கு காய்ச்சிப் படைத்தல் போன்றன இடம்பெறும். இவை முக்கிய சமய நாட்களுடன் பின்னி பிணைக்கப்பட்டிருக்கின்றமையையும் நாங்கள் பார்க்கலாம்.
பண்டைய விவசாய முறைகள் மற்றும் செயற்பாடுகள்
பாரம்பரிய விவசாய முறைகள் ஒரு தொடரான வட்டச் செயற்பாடாக காலநிலையைக் கருத்தில் கொண்டு நடைபெற்றன. இதனைச் செய்வதற்காக இலங்கையினுடைய பயிர்ச்செய்கை காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். அவையாவன காலபோகம் (Maha season): மாரி காலத்தில் கிடைக்கும் பெரிய அளவிலான மழையை நம்பிச் செய்யும் பயிர்ச்செய்கை முறை; மற்றும் சிறுபோகம் (Yala season) கோடையில் கிடைக்கும் சிறிதளவிலான மழை வீழ்ச்சியையும் மற்றும் குளத்தில் இருக்கும் நீரையும் பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறையாகும். இதற்காக மரபுவழியாக அனுபவ (எழுதாப்) பயிர்ச் செய்கை நாட்காட்டியை (non-written Cropping Calendar) பயன்படுத்தினார்கள்.
1. குப்பை, எரு இடல்/கொட்டல்: உழுவதற்கு முன்னர் வீடுகளில் சேகரிக்கப்பட்ட உக்கக் கூடிய இலை குழைகள், கால்நடைக் கழிவுப் பொருட்கள் வயலில் பரவப்பட்டன. பரவப்பட்ட கழிவுகள் உழும்போது மண்ணுடன் கலக்கப்பட்டு மண்ணுக்கு உரம் ஊட்டப்பட்டது. செயற்கை உரம் என்ற ஒன்றே இருக்கவில்லை, அனைத்துமே இயற்கை உரங்கள். இதனால் மண்ணின் வளம் மற்றும் கட்டமைப்பு வலுப்பெற்றதுடன் பீடை மற்றும் நோய்த்தாக்கங்கள் பெரிதளவில் இருக்கவில்லை. மண்ணின் நைதரசன் வளத்தை அதிகரிப்பதற்காக பயிர் செய்வதற்கு முன்னர் நைதரசனை அதிகளவில் பாதிக்கும் அவரைக் (Fabaceae) குடும்ப தாவரங்களான சணல் மற்றும் காவிளாய் போன்றவற்றை வளர்த்து அவற்றை அப்படியே உழுதார்கள். அது மட்டுமன்றி, பனை ஓலை, பசுந்தாள் பசளைகளான கிளிரிசிடியா, பன்னை, பூவரசு போன்ற இலைகளையும் மண்ணில் இட்டு உழுவதன் மூலம் மண் வளம் மெருகூட்டப்பட்டது. இதற்கு மேலதிகமாக பட்டி கட்டுதல் / அடைத்தல் மூலமும் நேரடியாக மாட்டினுடைய சாணம் மற்றும் கோசலம் போன்ற மண்ணுக்கு உரமூட்டக்கூடிய கழிவுகள் வயல்களுக்கு கிடைத்தன. பட்டி அடைத்தல் என்றால் 50க்கும் மேற்பட்ட மாடுகளை அவற்றை வளர்ப்பவர்களிடம் இருந்து, வாடகைக்குப் பெற்று தமது பயிர் நிலங்களில் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கும் காலத்துக்கு முன்னராக இரண்டு, மூன்று நாட்கள் அடைத்துவைத்து, அதன் கழிவுகளைப் பெறும் முறையாகும்.
2. நிலப் பண்பாடு: பண்டைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத போது பொறிமுறைச் சக்தி மூலம் கையாளக் கூடிய உபகரணங்களே பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக வயல் உழுவதற்கும் மற்றும் நிலத்தைப் பண்படுத்தவும் காளை மாடுகள் பூட்டி இழுக்கப்படும் கலப்பைகளே பயன்படுத்தப்பட்டன. இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் காளை மாடுகள் வளர்க்கப்பட்டன. விவசாயத் தேவைக்காக பாரம்பரியக் கருவிகளான ஏர், கலப்பை, முள்ளுக் கலப்பை, நுகம், கத்தி, அரிவாள், தோட்ட மண்வெட்டி, கிண்டி, கடப்பாரை, குப்பை வாரி மற்றும் உளவாரை போன்றன தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டன.
3. விதை விதைப்பு: பண்படுத்தப்பட்ட மண்ணில் பாரம்பரிய விதைகள் விதைக்கப்பட்டன. நெற் செய்கைக்காக மானாவாரிப் பயிர் செய்யும் இடங்களில் விசிறல் மூலம் நெல் விதைகள் விதைக்கப்பட்டன. குளம் அல்லது கால்வாய் மூலம் நீர் நன்றாக கிடைக்கக் கூடிய இடங்களில் சேறடித்து நாற்று நாடல் நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. சேறடித்தல் என்றால் நீர் நிரப்பப்பட்ட வாயில்களில் எருமை மாடுகள் மற்றும் காளை மாடுகள் இறக்கி விடப்பட்டு வயல்கள் சேறாக நுதப்பப்படும். பின்னர் கால்நடைகள் அகற்றப்பட்டு, நீர் வடிக்கப்பட்டு, பலகைகள் கொண்டு மட்டம் அடிக்கப்படும். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட, வயல்களில் நாற்றுக்கள் நடப்படும். சேறடித்து நாற்று நடப்பட்ட வயல்களில் நெல்லினுடைய மட்டம் அதிகம் வெடிப்பதினால், விளைச்சல் அதிகமாகக் கிடைத்தது .
4. நீர்ப்பாசனம்: வயல்களுக்கு நீர்பாசனம் செய்வதற்காக கிணறு, கேணி, துரவு மற்றும் குளம் என்பன பயன்படுத்தப்பட்டது. நீர்ப் பம்பிகள் இல்லாத காலத்தில் சமவுயரக் கோட்டுத் தத்துவத்தைப் பயன்படுத்தி வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு நீர் பாய்ச்சப்பட்டது. கிணற்றில் இருந்து நீரை தொடர்ச்சியாக வாய்க்கால்கள் வழியே பாய்ச்சுவதற்காக துலா மிதித்தல் மற்றும் சூத்திரக் கிணறு சுற்றுதல் போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. கேணி மற்றும் துரவுகளில் இருந்து நீரைப் பெறுவதற்காக பனை ஓலையால் பின்னப்பட்ட துலாக் கூடை மற்றும் பட்டை என்பன பயன்படுத்தப்பட்டன.
5. பயிர் பாதுகாப்பு: இரவு நேரங்களில் பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக வயற்கரைகளில் பரண் அமைத்து இரவு பகலாக ஒருவர் பயிரைப் பாதுகாப்பார். பயிர்களை பறவைகளில் இருந்து பாதுகாப்பதற்காக வெருளிப் பொம்மைகளை (சோளக் காட்டுப் பொம்மை) வயலின் நடுவே ஆங்காங்கே நிறுத்தினார்கள் மற்றும் பாரிய ஒலிகளை தகரத்தில் தட்டி எழுப்பி விலங்குகள் மற்றும் பறவைகளை விரட்டினார்கள். பீடைகளை அழிப்பதற்காக வயலில் இருக்கும் பிட்டிகளில் இரவில் நெருப்புக்கள் மூட்டப்பட்டன. இதனால் ஒளிக்கு கவரப்படும் பூச்சிகள் தீயில் எரிந்து அழிந்தன. கார்த்திகை விளக்கீட்டின்போது சொக்கப்பானை கொளுத்தும் சடங்கு இதற்காகவே செய்யப்படுவதாக விஞ்ஞானவிளக்கம் அளிக்கப்படுகிறது. பீடை பூச்சிகளில் இருந்து பயிர்களைக் காக்கும் இரைகவ்விப் பறவைகளை கவர்ந்தது இழுப்பதற்காக, பறவைகளின் கூடுகளை அமைத்து வயல்களின் அருகே இருக்கும் மரங்களில் வைத்தார்கள்.
6. களை எடுப்பு: களைகளைப் பற்றி நம் முன்னோர் நன்றாகவே அறிந்திருந்தனர். இதனாலேயே, களைகளைக் கட்டுப்படுத்தலை நிலப்பண்படுத்தலுடன் ஆரம்பிக்கின்றனர். முன்னைய பயிர்ச் செய்கையில் களைகள் அதிகமாகக் காணப்பட்ட வயல் நிலங்களில் உமியைக் கொட்டி எரித்தனர். இதனால் பெருமளவான களைகளின் விதைகள் மற்றும் முளைக்கும் பருவங்கள் அழிக்கப்படுகின்றன. வயல்களைப் பண்படுத்தும்போது வரம்புகளை புதிதாக அமைத்தல் மற்றும் நீரைத் தேக்கி களைகளை அழுகப் பண்ணுதல், பயிர்கள் நாட்டப்பட்ட பின்னர் இரண்டு கிழமைக்கு ஒருதடவை பெண் தொழிலாளர்களைப் பயன்படுத்தி களை எடுத்தல், நெல் அல்லாத பயிர்களுக்கு இடையில் களைகள் வளராதவாறு ஊடுபயிர் செய்தல் போன்ற தந்திரோபாயங்களை காலம்காலமாகப் பயன்படுத்தினர்.
7. மேற்கட்டுப் பசளையிடல்: பயிர்கள் பூக்கும் பருவத்தை அடையும்போது மேற்கட்டுப் பசளையாக கூட்டெரு, தொழு உரம் மற்றும் உக்கிய சாணம் என்பன பயன்படுத்தப்பட்டன. பண்டைய காலத்தில் முற்று முழுவதுமாக நாட்டினங்கள் பயன்படுத்தப்பட்டதால் மேற்கட்டுப் பசளையின் தேவை அதிகம் நெல்லுக்கு இருக்கவில்லை. ஆறுகள் மூலம் குளத்தை அடைந்த நீரில் அதிகளவான கனியுப்புக்கள் நிறைத்திருந்ததால் இவற்றை பயிர்கள் அகத்துறிஞ்சின. மற்றைய மரக்கறிப் பயிர்களுக்கே மேற்கட்டுப் பசளைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன.
8. அறுவடையும் சேமிப்பும்: நெற்பயிர்கள் நன்கு முற்றியவுடன், நெல் அறுவடைத் திருவிழா ஆரம்பமாகும். இதன்போது வயலைக் காத்த நாயன்மார்கள் மற்றும் கன்னிகளுக்கு அறுசுவை உண்டிகள் சமைத்து படைக்கப்படும். பின்னர், நெல் அறுவடைக்கு அதிகளவான பெண் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். அரிவாள்கள் மூலம் அறுவடை செய்யப்பட்ட அரிவிகள் கட்டுகளாகக் கட்டப்பட்டு தலையிலே சுமந்து சூடடிக்கும் மேட்டு நிலங்களுக்கு (களம்) கொண்டு செல்லப்பட்டது. களப் பாய்களிலே அரிவிக்கட்டுகள் அடுக்கப்பட்டு ஓரிரு நாட்களுக்கு சூடு வைக்கப்படும். சூடு வைக்கும் போது அனைத்து நெல்மணிகளும் நன்றாகப் பழுத்து, சூடடிக்கும் போது இலகுவாகக் கொட்டுண்டும். சூடு அடிப்பதற்காக இரண்டு முறைகள் பயன்படுத்தப்பட்டன;
- கையால் சூடடித்தல்: நெல்மணிகள் நிறைந்த அரிவிகள் பெரிய கல்லின் மீது அல்லது மரக்கட்டையின் மீது அடிக்கப்படும், இதனால் நெல்மணிகள் வைக்கோலில் இருந்து இலகுவாகப் பிரியும். இந்த முறைக்கு நேரம் அதிகம் தேவைப்படும் ஆனால் நெல் மணிகள் சேதமடையாது.
- காளை மாடுகள் அல்லது எருமை மாடுகளைக் கொண்டு சூட்டை மிதித்தல்: இதன்போது நேரம் மிச்சப்படுத்தப்படும், செலவு குறைவு ஆனால் சேதம் அதிகம்.
சூடு மிதித்து முடிந்தவுடன், பெரிய தூசிகள் மற்றும் கூழங்கள் அகற்றப்பட்டு, காற்றின் உதவியுடன் குல்லம் (சுளகு) கொண்டு, சப்பி மற்றும் சாவட்டை (அறைவயிற்றன்) நெல்மணிகள் தூற்றப்படும். இம்முறை மூலம், நாக்கு முற்றிய சேதமடையாத நெல்மணிகள் மாத்திரம் வேறாக பிரிக்கப்பட்டு சாக்குகளில் கட்டப்படும். நெல்லை அளப்பதற்காக படி, கொத்து, சேர் மற்றும் பறை என்ற பல அளவு முறைகளைப் பயன்படுத்தினர்.
துப்புரவாக்கப்பட்ட நெல் மூடைகள் மாட்டு வண்டிகளில் ஏற்றப்பட்டு நெற்களஞ்சியங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. களஞ்சியங்களில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கொள்கலன்களில் சேமிப்பதற்கு முன்னர் நன்கு உலர்த்தப்பட்டன. அதேபோல் வைக்கோலும் மாட்டுவண்டிகளில் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கோல் போராக குவியப்பட்டு மாடுகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்டது.
இவ்வாறாக எமது பாரம்பரிய விவசாயம் இயற்கையுடன் முரண்படாமல் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணும் அளவுக்கு சிறப்பாக நடை பெற்றது. ஒவ்வொரு வீட்டிலும் நெல் இருந்தது, கால்நடைகள் இருந்தன, பஞ்சம் என்ற சொல்லுக்கே இடம் இருக்கவில்லை. பாரம்பரிய விவசாயம் விற்பனை நோக்கத்திற்கு முன்னுரிமை அளிக்காததால், வேறு நாடுகளுடன் விற்பனைப் போட்டி இருக்கவில்லை.
எமது பாரம்பரிய விவசாயத்துக்கு, பதினாறாம் நூற்றாண்டில் இருந்து மேலைத்தேயர்களின் படையெடுப்புடன், அழிவு ஆரம்பமானது. குறிப்பாக இலங்கை பிரித்தானியர்களின் காலனித்துவத்துக்கு உட்பட்ட காலத்தில் இருந்து வர்த்தகப் பயிர்ச்செய்கைக்கு (தேயிலை, கோப்பி, வாசனைத் திரவியங்கள்) அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டமையால், பிரதான நெல் மற்றும் சிறுதானியப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்ததோடு பல்வேறு பிரச்சினைகளும் அதனூடாகத் தோற்றம் பெற்றன.
உசாத்துணை
- “From wild grass to golden grain”. www.sundaytimes.lk.
- http://kazhuhu-blogspot.com
தொடரும்.