பண்பாட்டுத் திணிப்பும் பால்நிலைச் சமத்துவம் நோக்கிய நகர்வும்
Arts
10 நிமிட வாசிப்பு

பண்பாட்டுத் திணிப்பும் பால்நிலைச் சமத்துவம் நோக்கிய நகர்வும்

September 10, 2022 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதில் கலாசாரம் – சமயம் அல்லது மதக் கட்டமைப்புகளின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புகள், கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட  மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அது சார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றிப் பேசவிழைகின்றது.

அறிமுகம்

‘இயற்கை’, ‘இயல்பு’ என்ற வரையறைக்குள் அடங்காதவைகளை சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இயற்கையானது மற்றும் இயல்பானது என்பவைகளை யார் தீர்மானிக்கிறார்கள்? எதிர்ப்பால் காதலைக் கொண்டாடுகின்ற இந்தச் சமூகம், குயர் மக்களின் காதலையும் அழகியலையும் இயல்பாகவாவது பார்க்கப் பக்குவப்படவேண்டும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் இன்றைய காலகட்டத்தில் பால்நிலை சார்ந்த மாற்றுச் சிந்தனைகளின் அவசியம் உணரப்பட்டிருக்கிறது. இலங்கை போன்ற தந்தை ஆதிக்கக் கருத்தியல் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு நாட்டில் பால்நிலை சார்ந்த விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுதல் காலத்தின் தேவையாகவுள்ளது. ஏனெனில் தந்தையாதிக்கக் கருத்தியல்கள் குயர் மக்களையும் பெண்களையும் அதிகம் பாதிக்கின்றன. குறிப்பாக அவர்களது குடும்பம், சமூகம் மற்றும் தொழில் வாழ்க்கையில் அதிகம் சிக்கல்களை உருவாக்குகின்ற அதேவேளை ஒருபாலீர்ப்பு வெறுப்பாளர்கள் உருவாகுதலும் இந்தக் கருத்தியலின் இன்னொரு பரிணாமம் ஆகும்.

LGBTQ FLAG

பால்நிலை என்ற விடயம் குறிப்பாக இலங்கையின் வடபுல தமிழ்ச் சமூகப் பின்புலத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியவை. பால்நிலை ரீதியான பண்பாட்டுத் தாக்கங்கள் இங்கு அதிகம். பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கள் கூட்டம் அல்லது சமூகம் தனது சமூக வளர்ச்சியினூடாகத் தோற்றுவித்துக்கொண்ட மக்களின் வாழ்நிலை, வாழ்வியல் நடைமுறைகள், கருத்துக்கள், பழக்கவழக்கங்கள், வாழ்வியல் போக்குகள் ஆகியவற்றின் தொகுதியாகும். இது மாற்றமடையக் கூடியதாகும். காலங்காலமாக மனிதன் வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறான். காலவோட்டத்தில் ஒவ்வொரு சமூகமும் ஏனைய சமூகத்தின் பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் தனதாக்கியே நகர்ந்திருக்கிறது. எனவே பண்பாட்டின் பெயரால் மனிதர்களைப் பாகுபாட்டிற்கு உட்படுத்தல் இல்லாதொழிக்கப்படல் வேண்டும். அதேபோல் மத நடைமுறைகளும் பால்நிலைச் சமமின்மைக்கு மிக முக்கிய காரணம் எனலாம். பெரும்பாலான மதங்கள் குயர் மக்கள் தொடர்பில் மீள்வருவார்ப்புக்களை(stereotype) உருவாக்குவதுடன் மோசமாகச் சித்திரிக்கின்றமையையும் அவதானிக்க முடிகிறது. மீள்வருவார்ப்புக்கள்(stereotype) எப்போதும் பால்நிலை ரீதியில் மோசமான தாக்கங்களையே சமூகத்தில் உருவாக்கக்கூடியனவாக இருக்கின்றன.

இவ்வாறான சமத்துவமின்மைக்கு எதிராகவே இன்றைய காலகட்டத்தில் போராடவேண்டியுள்ளது. அந்தவகையில் பெண்ணியம் அனைத்துப் பெண்களுக்கும் சம உரிமையை வலியுறுத்துகின்ற அதேவேளை, பெண்களுக்கான சமூக, பொருளாதார, அரசியல், மத மற்றும் ஏனைய சுதந்திரங்களையும் உரிமைகளையும் பேசுகின்றது. ஆண் மேலாதிக்கத்தினால் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவே பெண்ணியம் தோற்றம் பெற்றது எனலாம். அதேபோல குயர்னஸ்(Queerness) என்பது சமூகத்தில் இருக்கக்கூடிய எல்லாவிதமான சமத்துவமின்மையையும் கேள்விக்குட்படுத்துகிறது. குயர் செயற்பாட்டாளர்கள் பால்நிலை, சாதியம், வர்க்க வேறுபாடு, இன, மத வேறுபாடு எனச் சமூகத்தின் அனைத்து விடயங்களிலும் சமத்துவம் அவசியம் என்பதனை வலியுறுத்துகின்றனர். மேலும் குயர் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் சமூக ஏற்புக்காகவும் பல்வேறுபட்ட போராட்ட வடிவங்களை கையாள்கின்றனர்.

LGBTIQA+ என்பது பொதுவாகக் குயர் மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. LGBTIQA+ என்பதுடன் 2S அதாவது Two Spirit என்பது இன்று கனடாவில் சில பழங்குடியினரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது சில பழங்குடியினருடைய வேறுபட்ட பால்நிலை அடையாளங்களைக் குறிக்கப் பயன்படுகிறது. அத்துடன் ஆண்மைத்துவ மற்றும் பெண்மைத்துவ வெளிப்பாடுகளையும் இது குறித்து நிற்கிறது. இதனால் 2SLGBTIQA+ என்ற பதம் குயர் மக்களைக் குறிக்க கனடாவில் பயன்படுத்தப்படுகிறது.

குயர் மக்கள் காலங்காலமாக ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர். எல்லாப் பால்நிலையினரையும் பாரபட்சமற்று நோக்குகின்ற பால்நிலை ரீதியான பன்மைத்துவம் என்பது சமூகத்தில் அவசியமானதாகும். ஒடுக்கப்படும் சமூகங்கள் ஒன்றிணைந்து சமத்துவத்துக்கான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யமுடியும். அப்போதுதான் குயர் சமூகத்தினர் மட்டுமல்லாது, ஒடுக்கப்படுகின்ற அனைவரும் இந்த சமூகத்தில் சுயாதீனமாக இயங்க முடியும். ‘ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பயிலப்படும் சகலவிதமான நம்பிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்குவதனூடாக பன்மைத்துவம் ஏற்படுகின்றது’ என்று பன்மைத்துவ சமய கற்கைக்கான தளம் குறிப்பிடுகின்றது.

எனவே ஜனநாயக நாடொன்றில் மாறுபட்ட கருத்துக்கள் ,சிந்தனைகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் கொண்ட சூழல் அவசியமானதாகும். இலங்கையில் பல் இனங்களையும் மதங்களையும் மற்றும் பல்வேறு பண்பாடுகளையும் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கின்றார்கள். அத்துடன் முப்பத்தைந்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் சிறியளவிலான சமூகங்கள் வாழ்கின்றனர். இலங்கை மக்களால் வேறுபட்ட கலைகள், பழக்கவழக்கங்கள், உடை, மொழி, பண்பாடுகள், சடங்குகள், வழிபாடுகள், பண்டிகைகள் போன்றன பின்பற்றப்படுகின்றன. மனிதர்கள் ஒவ்வொருவரும் சமத்துவத்துடன் வாழ்கின்ற வாழ்வே அனைவரதும் தேவையாகும்.

அதேவேளை பாலியல் வாழ்க்கையையும் பாலீர்ப்பையும் தாண்டி மற்றவர்களைப் போல குயர் மக்களுக்கும் ஒரு வாழ்விருக்கிறது. நட்பு, குடும்பம், உறவுகள் என அவர்களும் இந்தச் சமூகக் கட்டமைப்பின் அங்கங்களே. குயர் மக்கள் அனைவருக்குள்ளும் உங்கள் ஒவ்வொருவரைப் போலவும் இலட்சியங்களும் கனவுகளும் இருக்கின்றன. பால்நிலை மற்றும் பாலியல் ரீதியான தெளிவின்மையும் கூட இந்த சமூகம் குயர் மக்களை சக மனிதர்களாக மதிக்கத் தவறிவிடுவதற்கு ஒரு காரணம் எனலாம்.

அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் குயர் மக்களின் எழுச்சி என்பது மிகப்பெரும் சாதனையாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. யாழ் குயர் விழா இதற்கு ஒரு உதாரணம் எனலாம். ஏனெனில் யாழ்ப்பாணம் ஏனைய பிரதேசங்களைப் போன்றதல்ல. இது முற்றிலும் வேறுபட்ட பண்பாட்டுக் கட்டமைப்பையும் மிக இறுக்கமான சூழலையும் கொண்டிருக்கிறது. ஆண், பெண் என்ற பால்நிலைகளையும் எதிர்ப்பால் ஈர்ப்பையும் மட்டுமே இயற்கையாகவும் இயல்பாகவும் கருதும் இந்த மக்கள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மற்றெல்லாப் பால்நிலைகளைப் பற்றியும் உணர்வுத்தளத்தில் நின்று சிந்திக்கத் தவறிவிட்டனர். பால்நிலைச் சமமின்மை என்பது வடபகுதிச் சமூகத்தில் குயர் மக்களுக்கு எதிரானதாக மட்டுமல்லாமல், அது பெண்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. அதிலும் குயர் மக்கள் கிராமப்புறங்களில் இருக்கின்றபோதிலும் கிராமப்புற மக்களுக்கு குயர் மக்கள் பற்றிய விடயங்கள் அந்நியப்படுத்தப்பட்டிருக்கின்றன.

Jaffna pride

சமூகத்தில் குயர் மக்கள் மீதான வன்முறையானது, அவர்களுக்கு மனஅழுத்தம், வலி மற்றும் சவால்களைப் பரிசளித்திருக்கின்றது. குயர் வெறுப்பு சமூகத்தில் புரையோடிப்போயுள்ளமையால் அது குடும்ப உறுப்பினர்களால் குயர் மக்கள் வெறுக்கப்படக் காரணமாகின்றது. பெரும்பாலான பெற்றோர் தமது குழந்தைகள் குயர் என்பதை அறிந்து தோள் கொடுப்பவர்களாக இல்லை. மிகச் சிலரே தமது குழந்தைகள் குயர் என்பதை அறிந்து ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள்.

இனிவரும் காலத்திலாவது பால்நிலை தொடர்பில் சமூகம் அடிப்படை விடயங்களையாவது தெரிந்து வைத்திருத்தல் அல்லது தெரிந்து கொள்ள முயற்சித்தல் அவசியமானது. பெரும்பாலான புலமையாளர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கூட எமது சமூக அமைப்பில் பால்நிலை சார்ந்து சிந்திக்கத் தயாராக இல்லை. பால்நிலையானது சமூகத்திற்குச் சமூகம், எல்லை அடிப்படையில், இன, மத மற்றும் அவர்கள் பின்பற்றும் பண்பாட்டின் அடிப்படையிலும் கூட மாற்றமடைய முடியும். பால்நிலை ரீதியான சமூகப் பாத்திரங்கள் சில சமூகங்களில் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. அதற்கு உதாரணமாக கேள்விக்குட்படுத்தப்படாமல் இருக்கின்ற பிற்போக்கான சில யாழ்ப்பாணப் பண்பாட்டின் கூறுகளைக் குறிப்பிடமுடியும்.

பால்நிலைசார் அடிப்படை அறிவானது சமூகத்தின் எல்லாமட்டங்களிலும் அவசியமானது. இன்றைய எண்ணிம (Digital) காலத்தில் இணைய வெளியில் நிகழும் வன்முறைகளும் குற்றங்களும்கூடப் பால்நிலையின் ஒரு பரிணாமத்தையே கொண்டுள்ளன. எனவே இந்தச் சமூகம் தனிமனித சுதந்திரம் பற்றிச் சிந்திக்கவேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானதாகும்.

ஐரோப்பிய நாடுகளை எடுத்துக்கொண்டால் பல்வேறு தரப்பில் இருந்தும் குயர் அரசியல் பற்றிய குரல்கள் ஓங்கி ஒலிப்பதை அவதானிக்க முடியும். அத்துடன் குயர் மக்கள் தொடர்பான ஏராளமான இலக்கியங்களும் தோன்றியுள்ளன. ஆனால் தமிழில் குயர் இலக்கியங்கள் மிக அரிதாகவே உள்ளன. அவற்றிலும் சில இலக்கியங்கள் எதிர்மறை உணர்வுகளை உருவாக்குபவையாகவும் இருக்கின்றன. பெரும்பாலும் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளிலேயே ஒரேபாலீர்ப்பு சட்டவிரோதமாக உள்ளது. அதிலும் இலங்கையைப் பொறுத்தமட்டில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றன. வடபுலத்தில் குயர் மக்கள் தொடர்பான முன்னெடுப்புக்களையும் அவர்கள் பல்வேறு தளங்களிலும் எதிர்கொள்ளும் வாய்ப்புக்களையும் சவால்களையும் ஆய்வுக்குட்படுத்தலும் பேசுதலும் அவசியம். குயர் மக்களுடைய வாழ்க்கை, இந்த சமூகத்தின் மத்தியில் இலகுவானதாக இல்லை என்பதே யதார்த்தம். அவர்கள் பல தடைகளைத் தாண்டியே தமது நாளாந்த வாழ்வைக் கடக்கின்றனர். பெரும்பாலும் குயர் மக்கள் அனைவரும் சவால்களைச் சந்திக்கின்றார்கள். இந்த சவால்கள் அவர்களை ஒரு சமூகமாக இணைத்திருக்கின்றமையைக் காணமுடிகின்றது.

Jaffna pride

யாழ்ப்பாணத்தில் அதிகமான திருநங்கைகளும் குறைந்தளவிலான திருநம்பிகளும் இருக்கிறார்கள். இங்கு தன்பாலீர்ப்பாளர்களான பெண்கள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகிறது. அவரவர் பாதையையும் பயணத்தையும் தீர்மானிப்பது தனிமனித சுதந்திரம் ஆகும். ஆனால் பெரும்பாலானவர்கள் இந்தச் சமூகத்தின் வன்முறைகளுக்குப் பயந்து தமது பால்நிலையைக் கூட வெளிப்படுத்தத் தயங்குபவர்களாக வெளிப்படையான சமூக வாழ்வை வாழமுடியாதவர்களாக இருக்கிறார்கள். புறக்கணிப்புக்களால் தமது திறமைகளைக்கூட வெளிப்படுத்தாமல் பொதுவெளியில் இயங்கமுடியாதவர்களாகப் பலர் இருக்கிறார்கள்.

பண்பாடு மற்றும் மதநம்பிக்கைகள் போன்றவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள் இந்த சமூகத்தில் அதிகம். மனிதநேயத்தை விட மதத்தையும் பண்பாட்டையும் பெரிதாகக் கருதும் மனோபாவம் தான் அதிகமானோருக்கு வாய்த்திருக்கிறது. மாற்றுக் கருத்தியல்களை ஏற்பதென்பது வடபகுதிச் சமூகத்தில் மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. இந்நிலையில் வடபகுதிச் சமூகத்தில் குயர் மக்களை, அவர்களும் தங்களில் ஒருவர் தான் என்ற மனோபாவத்துடன் ஏற்றுக்கொள்கின்ற ஒரு சமூகம் சிறுக உருவாகி வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. இதனை ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றமாகப் பார்க்க முடியும்.

தினம் தினம் வெறுப்பை, பாரபட்சத்தை, நிராகரிப்பை அடிப்படை மனிதம் அற்ற மனிதர்களிடம் இருந்து, குயர் மக்கள் எதிர்கொள்கிறார்கள். மனிதர்களை சக மனிதர்களாக நடத்த வேண்டியது அடிப்படை மனித உரிமையாகும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள் ஆவர். எனவே மனிதர்கள் என்ற ரீதியில் அனைவருக்கும் இந்த நாட்டில் சுதந்திரமாகப் பாரபட்சமற்று வாழும் உரிமை இருக்கிறது. இங்கு சமூக நீதி நிலைநாட்டப்படல் அவசியமானதாகும். குயர் மக்களுக்கான சமூக நீதி என்பது உண்மையையும் சமத்துவத்தையும் வலியுறுத்துகின்ற அதேவேளை சமத்துவமின்மையையும் பாரபட்சத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றது. குயர் மக்கள் மீதான புரிதல், அவர்களது இயல்புத்தன்மையை ஏற்றல், முற்போக்கான கருத்தியல் மற்றும் அடிப்படை அணுகுமுறை சார்ந்த புரிதலை வரையறுத்தல் என்பன வடபுல குயர் அரசியல் தளத்தில் முக்கியமானவையாக அமையும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

14586 பார்வைகள்

About the Author

அனுதர்சி கபிலன்

அனுதர்சி கபிலன் அவர்கள் தனது இளமாணிப் பட்டத்தைத் திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இதழியலில் “டிப்ளோமா“ பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரியும் அனுதர்சி முதுமாணிப் பட்டப்படிப்பைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தில் வெகுஜன ஊடகவியலில் தொடர்கின்றார்.

'இலங்கை அரசியல் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் 2015 இல் அவரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நேர்காணல்கள் 2017 இல் நூல்வடிவில் வெளியிடப்பட்டது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்