இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழும் தமிழரும்
இலங்கையில் கல்மேல் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றில் முதலாவதாக எழுதப்பட்டவை பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கல்வெட்டு ஆய்வாளர்கள் முற்காலப் பிராமி, பிற்கால பிராமி என இரு வகையாக பிரித்துள்ளனர்.
இலங்கை முழுவதிலும் சுமார் 2500 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கல்வெட்டுக்கள் தெற்காசியாவில் இலங்கையைத் தவிர வேறெந்த பிரதேசங்களிலும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை இங்குள்ள இயற்கையான கற்குகைகளிலும், கற்பாறைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1500 கல்வெட்டுக்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 1000 கல்வெட்டுக்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இவற்றில் தமிழர் மற்றும் இந்து சமயம் தொடர்பான கல்வெட்டுகள் பல உள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 1500 கல்வெட்டுக்களில் தமிழர் பற்றிய 5 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. மேலும் இந்து தெய்வங்கள் சம்பந்தமான 300 கல்வெட்டுக்களும் உள்ளன. இவற்றைத்தவிர முனிவர்கள் அல்லது சித்தர்களின் பெயர்கள் பொறிக் கப்பட்ட சுமார் 250 பிராமிக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. தமிழர் என்ற பெயரைத் தவிர இலங்கையில் வாழும் ஏனைய இனங் களின் பெயர் பொறிக்கப்பட்ட எந்த ஒரு பிராமிக் கல்வெட்டேனும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமெத” (தமிழ்) எனப் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள்
இலங்கையில் கிடைக்கப் பெற்ற பிராமிக் கல்வெட்டுக்களில் 5 கல்வெட்டுக்களில் “தமெத” எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் என்பதன் பிராகிருத வடிவமாகும்.
இவற்றில் வட மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்தில் 2 கல்வெட்டுக்களும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் 1 கல்வெட்டும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு சான்றுகள் மூலம் 2000 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கும், தமிழ் மொழி பேசப்பட்டுள்ளது என்பதற்கும் இக்கல்வெட்டுக்கள் முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன. இது பற்றி இலங்கையின் மூத்த வரலாற்று பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்கள் சில முக்கிய குறிப்புக்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு.
“கி. மு. மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையிலே தமிழ் ஒரு பேச்சு மொழியாக வழங்கியமைக்கு ஆதாரமாய் அமைகின்ற பிராமிச் சாசனங்கள் தமிழர் பற்றியும் தமிழர் சமுதாயப் பிரிவுகளைப் பற்றியும் குறிப் பிடுகின்றன. அவற்றிலே பல இனங்களைச் சேர்ந்த சமூகங்களின் பெயர்களும், சமுதாயப் பிரிவுகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. தமிழர், நாகர், முருண்டி, காபோஜி என்னும் இனப் பெயர்கள் அவற் றில் உண்டு. பரதர், பதர், பிராமணர் என்போர் பற்றியும் அவற்றிலே குறிப்புகள் உண்டு. இரண்டாயிரத்துக்கும் மேலான பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றிலே சிங்களர் பற்றிய குறிப் பெதுவும் காணப்படவில்லை. “சிங்களர்” எனும் இனம் பிராமிச் சாசனங்கள் எழுதப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கவில்லை என்று கருத வேண்டியுள்ளது. சிங்க உருவம் பொறித்த மிகப் புராதனமான நாணயமும் நாகராசன் ஒருவனின் பெயரையே குறிப்பிடுகிறது.” என பேராசிரியர் எஸ். பத்மநாதன் தனது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழரின் குடியிருப்புகளும், சமுதாயமும் பிராமிச் சாசனங்களின் காலம் முதலாக உற்பத்தியானவை என்று கொள்ள முடிகிறது” எனக் கூறியுள்ளார்.
தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் இந்திரபாலா பின்வருமாறு கூறியுள்ளார். “இலங்கையில் வாழ்ந்த தமிழ் இனக்குழு பிராமிக் கல்வெட்டுக்களில் தமெட என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கல்வெட்டுக்கள் அநுராதபுரத்தில் மட்டுமன்றி, அப்பால் இன்று தமிழர் வாழும் இடங்களாகிய வவுனியா மாவட்டம் (பெரிய புளியங்குளம்), மட்டக்களப்பு மாவட்டம் (ஸேருவில)மற்றும் அம்பாறை மாவட்டம் (குடிவில்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.”
“இலங்கையில் தமிழ் மக்கள் பற்றிக் கிடைக்கும் மிகப்பழைய எழுத்து மூலாதாரங்கள் பொ. ஆ. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுக்களாம். எனினும் அதற்கு முன் அவர்கள் இலங்கையில் இருந்திருக்கக்கூடும் என்று கொள்ளத் தொல்லியல் சான்றுகள் உள்ளன. அத்துடன் பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே, தமிழ் பேசுவோர் பரவலாகத் தமிழ் நாட்டிலும் மற்றும் அயல் இடங்களிலும் இருந்தனர் என்று கொள்ள இடமுண்டு எனக் கொண்டால் இலங்கைக்கும் அதே காலமளவில் அவர்கள் வந்திருக்கலாம் என்று கூறலாம். தமிழ் பேசுவோர் மட்டுமன்றி வேறு திராவிட மொழிகளைப் பேசுவோரும் அங்கு இருந்திருக்கலாம்”. இவ்வாறு பேராசிரியர் இந்திர பாலா தனது “இலங்கைத் தமிழர்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் சில முக்கிய விடயங்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு, “தென்னாசியாவில் பெளத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் அம்மத மொழியான பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தபோது இலங்கையில் தான் பிராகிருத மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு கூடுதலாகக் காணப்படுகிறது. இதில் அவதானிக்கக் கூடிய சிறப்பம்சம் ஆரம்பகாலக் கல்வெட்டுக்களில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராகிதம் மற்றும் தமிழ் மொழிக்குரிய பெயர்கள், சொற்கள் காலப்போக்கில் தமிழ் மயப்படுத்தப்பட்ட நிலையில் எழுதப்பட்டிருப்பதாகும்.”
“இந்த மாற்றத்திற்கு இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த மக்கள் புதிதாக பெளத்த மதத்துடன் அறிமுகமான பிராகிருத மொழியை அம்மொழிக்குரிய வடபிராமி எழுத்தில் எழுதிய போதும், காலப்போக்கில் தமக்குப் பரிச்சயமான தமிழ் பிராமியிலும் பிராகிருத மொழியை எழுத முற்பட்டமை காரணம் எனலாம்”. இவ்வாறு பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்னம் தனது இன்னுமோர் நூலில் கூறியுள்ள சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு: “இக்கல்வெட்டுக்கள் பெளத்த சங்கத்திற்கு அக்கால சமூகத்தின் பல தரப்பட்ட மக்கள் அளித்த நிலம், குளம், கால்வாய், குகை, கற்படுக்கை, பணம், உணவு போன்ற தானங்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றில் பலவற்றில் தானமளித்தவர் பெயரோடு அவரின் வம்சம், பட்டம், பதவி, தொழில், மதம், இனம் போன்ற தரவுகளும், அவர்கள் வாழ்ந்த இடம், ஊர், நாடு போன்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இதனால் இக்கல்வெட்டுகள் இலங்கையின் குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய மொழி, எழுத்து, மதம், பண்பாடு, சமூகம், இடப்பெயர் என்பவற்றை அறிந்துக்கொள்ளவும், சமகாலப் பாளி இலக்கியங்கள் கூறும் வரலாற்றின் நம்பகத் தன்மையை மதிப்பிடவும் உதவுகின்றன.”
தொடரும்.
குறிப்பு : B.C.E- (Before Common Era) பொ.ஆ.மு=பொது ஆண்டுக்கு முன்-கி.மு C.E-(Common Era)- பொ.ஆ- பொது ஆண்டு- கி.பி