தமிழ் வணிகன் பற்றிக் கூறும் பெரிய புளியங்குளம் கல்வெட்டுக்கள்
Arts
3 நிமிட வாசிப்பு

தமிழ் வணிகன் பற்றிக் கூறும் பெரிய புளியங்குளம் கல்வெட்டுக்கள்

November 7, 2022 | Ezhuna

இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. பண்டைய இலங்கைத் தமிழர் பற்றி இதுவரை பலரும் அறிந்திராத, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, அரிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இலங்கையில் ‘பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்’ எனும் இவ்வாய்வு அமைகிறது. இலங்கையில் வாழ்ந்த தமிழர் பற்றிய முக்கிய சான்றாக விளங்குவது 2300 ஆண்டுகளுக்கு முன்பு கற்குகைகளில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களாகும். இவ்வாறான ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுக்களில் தமிழர்கள் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட விடயங்களை இக்கட்டுரைத்தொடர் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வேலைத் திட்டத்தில், இலங்கையில் காணப்படும், 1500 பிராமிக் கல்வெட்டுகளை மீள்வாசிப்பு செய்ததன் பயனாக வெளிக்கொணரப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்துவதாகவும் இத்தொடர் அமைகிறது. இவ் ஆய்வில் தமிழர் பற்றி கூறும் மேலும் பல பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 600 சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விபரங்கள் பற்றியும் இத்தொடர் கட்டுரை கூறுகிறது.

குடும்பத் தலைவன் விசாகன் பற்றிய முதலாவது கல்வெட்டு

வவுனியா நகரின் வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் உள்ள பெரிய புளியங்குளம் எனும் இடத்தில் உள்ள குளத்தின் அருகில் ஒரு உயரமான கற்பாறைத் தொகுதி காணப்படுகிறது. சுமார் 100 அடி உயரமான ஒரு நீண்ட பாறையின் மீது மூன்று பெரிய கற்பாறைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய கற்பாறைகளும் தூக்கி வைத்தாற்போல் இயற்கையாகவே அமைந்துள்ளன.

இவற்றிலே பெரிய பாறை ஒன்று முதலையின் வடிவில் காணப்படுகிறது. இதனால் இது முதலைப்பாறை (சிங்கள மொழியில் கிம்பு லாகல) என அழைக்கப்படுகிறது. இப்பாறைத் தொகுதியில் இயற்கையான பல கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றின் மேற்பகுதியில் கற்புருவங்கள் வெட்டப்பட்டு அதன் கீழே கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தமாக 38 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

மேற்குறிப்பிட்டுள்ள 38 கல்வெட்டுக்களில் 2 கல்வெட்டுக்கள்  தமிழர் பற்றிக் கூறுகின்றன. இதில் தமிழர் எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் “தமெத வனிஜ கபதி விசகஹ லேன” என பொறிக்கப்பட்டுள்ளது. இதை பேராசிரியர் பரணவிதான “The cave of the householder Visakha, the Tamil Merchant” என மொழிபெயர்த்துள்ளார். இது தமிழ் வணிகனான குடும்பத் தலைவன் விசாகனின் குகை எனப் பொருள்படும். இக்கல்வெட்டு Inscriptions of Ceylon-Volum 1 எனும் நூலில் 356 ஆவது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவன் விசாகன் பற்றிய இரண்டாவது கல்வெட்டு

குடும்பத் தலைவன் விசாகன் பற்றிய இரண்டாவது கல்வெட்டு

பெரிய புளியங்குளத்தில் காணப்படும் இரண்டாவது கல்வெட்டில் “தமெத வனிஜ கபதி விசகஹ செனி கெமே” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதை “The work of the flight of steps is of the householder Visakha, the Tamil Merchant” என பேராசிரியர் பரணவிதான மொழி பெயர்த்துள்ளார்.

இது “தமிழ் வணிகனான குடும்பத் தலைவன் விசாகனால் படிகளில் செய்யப்பட்ட வேலை” எனப் பொருள்படுகிறது. இக்கல் வெட்டு Inscriptions of Ceylon-Volum 1 எனும் நூலில் 357 ஆவது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரிய புளியங்குளம் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ள பாறைத் தொகுதி
இக்கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் மூலம் வவுனியா பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதுடன் வணிகர்களாகவும் விளங்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இங்குள்ள கல்வெட்டுக்களில் பெரும்பாலானவற்றில் கூறப்பட்டுள்ள செய்தியானது இங்கிருந்த பிரமுகர்கள் தமது கற்குகைகளை பெளத்த சங்கத்திற்கு தானமாக வழங்கியுள்ளனர் என்பதுதான். ஆனால் இந்த இரண்டு கல்வெட்டுக்களிலும் கூறப்பட்டுள்ள தமிழ் வணிகன் விசாகன் தனது குகைகளை பெளத்த சங்கத்திற்கு தானம் வழங்கவில்லை என்பதும் தெரிகிறது.  
முதலையின் வடிவில் அமைந்துள்ள கிம்புலாகல எனும் முதலைப் பாறை – பெரிய புளியங்குளம் கல்வெட்டுக்கள்

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்