கசக்கிப் பிழிந்து, அடக்கி ஆண்டு, வன்முறையின் பிடியில் வைத்திருந்து, தொழிலாளரிடமிருந்து உழைப்பை உச்ச அளவில் பெற்றுக் கொள்கின்ற பாங்கு பெருந்தோட்ட வரலாற்றின் முழுப்பக்கங்களிலும் ஒரு கறைபடிந்த காரணியாக இருந்தது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதற்கென பல்வேறு வழிமுறைகளை துரைமார்கள் தேர்ந்தெடுத்து கடைப்பிடித்துள்ளனர் என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன. அதிகம் படிக்காத முரட்டு சுபாவமும் சண்டித்தனமும் மிக்கவர்களை துரையாகத் தேர்ந்தெடுத்தல், (எனது கண்டிச் சீமையிலே என்ற நூலில் “உலகெங்கும் இருந்து கழிசடைகளே துரைகளாக வந்தனர்” என்ற அத்தியாயத்தை பார்க்கவும்) சாதி அடிப்படையில் உயர் சாதியை வைத்து கீழ் சாதிக்காரனை அடக்கி வைக்கின்றமை, கடும்போக்குள்ள கங்காணி ஒருவனின் கீழ் தொழிலாளர்களை கூலிப் பட்டாளங்களாக (Gangs) பிரித்து அடக்கி வைப்பது, பங்களாவுக்கு வேலைக்கு வரச் சொல்லி அடித்து உதைப்பது போன்றன இவர்கள் அடக்குமுறைக்கு பயன்படுத்திய வழிமுறைகளில் சிலவாகும்.
இத்தகைய கடுமையான அடக்குமுறைகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை தொடர்ந்தன. பிற்காலத்தில் இடதுசாரி கட்சிகளின் தலைமையில் உருவான தொழிற்சங்க போராட்டங்களை ஒடுக்க, குண்டர்களை ஏவி தொழிற்சங்க போராளிகள் மீது தாக்குதல் நடத்தும் வழிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. 1930 களில் மற்றும் 1940 களில் இலங்கை சமசமாஜக் கட்சியின் தலைமையிலான ‘அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் யூனியன்’ தோட்டத்துரைமாரின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்தது. இவற்றை அடக்குவதற்கு துரைமார்கள் பொலிசாரையும் குண்டர்களையும் ஏவிவிட்டு வேடிக்கை பார்த்தனர்.
இவர்கள் தொழிலாளர் போராட்டங்கள் மீது குண்டர்களை ஏவி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். தொழிலாளர் போராட்டங்களுக்கு இப்படித்தான் பதிலளிக்க வேண்டும் என்பதனை அவர்கள் கொள்கையாகக் கொண்டிருந்தார்கள். குறித்த போராட்டங்களின் போது அந்த நடவடிக்கைகளில் யார் தலைமை தாங்கி நடத்திச் சென்றார்கள் என்று அறிந்து கொண்டு அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினார்கள். 1940 ஆம் ஆண்டு ஊவா பிரதேசத்தில் இருந்த வெல்லஸ்ஸ தோட்டத்தில் இடம்பெற்ற வேலை நிறுத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த தோட்டத்துரை ஒருவர் “இவர்கள் எந்தப் பாஷையில் பேசினாலும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். இவர்களை இழுத்துச் சென்று நையப்புடைப்பதன் மூலம் தான் இவர்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1930 களிலும் 1940 களிலும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்கள் தொழிலாளர்களின் பல உரிமைகளை வென்றெடுக்க கூடியதாகவும், அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான வெற்றிகரமான நடவடிக்கைகளாகவும் அமைந்தன. தோட்டங்களுக்குள் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள் செல்வது அத்துமீறிய பிரவேசம் (Trespass) என்று குற்றவியல் தண்டனைக் கோவையில் குற்றமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தத் தோட்டத்தில் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தோட்டக் கமிட்டியை அவர்கள் வெற்றிகரமாக அமைக்கக்கூடியதாக இருந்தது.
இந்தப் போராட்டத்தின்போது தோட்ட நிர்வாகத்தினர் பொலிசாரை அழைத்து வன்முறையைத் தூண்டினார்கள். பொலிசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் நேரடிச் சண்டை நிகழ்ந்தது. இதன் விளைவாக தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெரிய கங்காணியைத் தாக்கி காயப்படுத்தினார்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
எனினும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட போது இருதரப்பினருக்கிடையிலும் நீதிமன்றம் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியது. அதன் பிரகாரம் நிர்வாகத்துக்கு உரிய முறையாக அறிவித்தல் கொடுத்ததின் பேரில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தோட்டத்துக்குள் பிரவேசிக்க முடியும் என அனுமதி வழங்கப்பட்டது. பெரிய கங்காணி 30 நாட்களுக்கு வேலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார். கணக்குப்பிள்ளை பதவி நீக்கம் செய்யப்பட்டார். தோட்டத்தின் கோயில் நிர்வாகம் தொழிலாளர் கமிட்டிக்கு ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் பெரிய கங்காணியால் நடத்தப்பட்டு வந்த ரேஷன் கடை மூடப்பட்டு, ரேஷன் பொருட்களும் அரிசி விநியோகமும் யூனியன் கமிட்டி நிர்வாகத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது தொழிற்சங்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாக கருதப்பட்டது.
இதே காலப்பகுதியில் பதுளை அட்டாம்பிட்டி தோட்டத்திலும் தோட்ட நிர்வாகம், கணக்குப்பிள்ளை, கங்காணிமார் ஆகியோரின் கெடுபிடிகள், சுரண்டல், ஏமாற்று என்பவற்றுக்கு எதிராக வேலை நிறுத்தம் ஒன்று இலங்கை தோட்டத்தொழிலாளர் யூனியனால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தோட்ட நிர்வாகத்துக்கும் யூனியன் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களுக்கு சாதகமான இணக்கப்பாடு எட்டப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி என். எம். பெரேரா, தோழர் பி. வேலுச்சாமி ஆகியோர் உட்பட பல பிரதிநிதிகள் பங்குபற்றினர். இந்தப்பேச்சுவார்த்தையில் தோட்டத்தில் தொழிற்சங்கம் இயங்குவது அங்கீகரிக்கப்பட்டது. நிர்வாகத்தின் கீழ் இருந்த தோட்ட கோயில் நிர்வாகம் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது. ரேசன் அரிசி விநியோகம் கணக்குப் பிள்ளையின் கட்டுப்பாட்டில் இருந்து பறிக்கப்பட்டு சின்னத்துரையின் மேற்பார்வையின் கீழ் தொழிலாளரின் கமிட்டிக்கு வழங்கப்பட்டது.
மலையக தொழிற்சங்க வரலாற்றில் இத்தகைய பல எழுச்சிப் போராட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற போதும் மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களிலும் தொழிலாளர் மீதான சுரண்டல், அடக்குமுறை மற்றும் வன்முறைக்கு எதிராக கிடைத்த மேலான வெற்றியாக இவை பதியப்பட்டுள்ளன. எனினும் நிர்வாகத்துக்கு எதிராக எப்போதெல்லாம் குரல் எழுந்ததோ அப்போதெல்லாம் அவ்விதம் குரல் கொடுத்தவரின் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது என்பதனை வரலாற்றைக் கூர்ந்து அவதானித்தால் புரிந்து கொள்ள முடியும்.
எவ்வாறு கங்காணிகளுக்கூடாக தொழிலாளர்களை காலம் பூராவும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது மிக நுணுக்கமான ஓர் உபாய முறையாக இருந்து வந்துள்ளது. அதன் பொருட்டு ஒரு பெரிய கங்காணியின் தலைமையின் கீழ் பல சிறிய கங்காணிகள் அல்லது சில்லறைக் கங்காணிகளை நியமித்தார்கள். இந்த சில்லறைக் கங்காணிகளின் நிர்வாகத்தின் கீழ் கூலித் தொழிலாளர்களை கூலிப்பட்டாளங்களாக (Coolly Gangs) பிரித்தார்கள். ஒவ்வொரு கூட்டமும் ஒழுங்காகவும், விடுமுறை எடுக்காமலும் அதிக உழைப்பை பெற்றுக்கொள்வதற்கும் சில்லறைக் கங்காணி பொறுப்பாக இருந்தார். அதன் பொருட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், பயமுறுத்தியும், வன்முறையைப் பயன்படுத்தியும் சில்லறைக் கங்காணி அவர்களிடம் அதிக உழைப்பை உறிஞ்சக்கூடியதாக இருந்தது. சில்லறைக் கங்காணி தொழிலாளர்களுடன் தானும் வேலை செய்ததுடன் அதற்கான சம்பளமும், அதற்கு மேலதிகமாக அவனுடைய கூலிப் பட்டாளத்தில் எத்தனைபேர் இருந்தார்களோ அவர்களின் ஒவ்வொரு தலைக்கும் பெறக்கூடிய “தலைக்குரிய கொடுப்பனவு” என்ற “பென்ஸ்மணி” (Pence Money) யும் பெற்றுக் கொண்டார்.
அதேபோல், தனக்கும் கீழ் எத்தனை கூலிப் பட்டாளங்கள் வேலை செய்கிறார்கள் என்ற கணக்கு பெரிய கங்காணிக்கு காட்டப்பட்டு, அவருக்கான தலைக்குரிய பணமும் செலுத்தப்பட்டது. மேற்படி கங்காணிகள் உயர் சாதிக்காரர்களாக இருந்தபடியால் தொழிலாளர்கள் இயல்பாகவே அவர்களுக்கு கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடந்து கொண்டனர். தமது பென்ஸ்மணி குறைந்து போய் விடக்கூடாது என்பதற்காக எல்லா தொழிலாளரும் எல்லா நாளும் வேலைக்கு வர வேண்டியதை சில்லறைக் கங்காணி கவனமுடன் உறுதி செய்தார். அதனையே தோட்டத்துரை மாரும் அவரிடம் எதிர்பார்த்தனர். இதற்காகவே தனக்குப் பென்ஸ்மணி வழங்கப்படுகின்றது என்பதை மிகத் தெளிவாக புரிந்துகொண்ட கங்காணி அதனை நிறைவேற்றும் பொருட்டு துரைக்கு மிக விசுவாசம் உள்ளவராகச் செயற்பட்டார்.
தோட்டங்களில் தொழிலாளர்கள் மீது உச்ச உழைப்பை சுரண்டி பெற்றுக்கொள்வதற்காக தொழிலாளர்களின் ஆண் / பெண் பால் வேறுபாட்டையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. “பெண்களின் விரல்கள் ஜீவனுள்ள சுறுசுறுப்பான விரல்கள் என்பதனை” அவர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே அவர்கள் தேயிலைக் கொழுந்து கிள்ளுவதற்கு பெண்களின் தளிர்க் கரங்களை தேர்ந்தெடுத்து முழுநாளும் கொழுந்து பறிக்க வைத்தார்கள். இதற்கு பெண்களின் இயல்பான பொறுமை காக்கும் குணமும் சாதகமாகப் பயன் தந்தது என்று கூறலாம். ஆண்களுக்கு இலக்கு வைத்து வேலை செய்யும் வேலைகளை கொடுத்தார்கள். அவர்கள் தமது இலக்கு முடிந்ததும் மலையிலிருந்து போய்விடுவார்கள். உதாரணமாக கவ்வாத்து வெட்டும் போது இத்தனை தேயிலைச் செடிகளை வெட்ட வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டது. இந்த இலக்கு முடிந்தவுடன் அவர்களின் வேலையும் முடிந்து விடும்.
தொடரும்.