கோல்புரூக் – கமரூன் அரசியல் சீர்திருத்தம்
Arts
13 நிமிட வாசிப்பு

கோல்புரூக் – கமரூன் அரசியல் சீர்திருத்தம்

November 14, 2022 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

பிரித்தானியர் இலங்கையின் மன்னராட்சி முறைமையினை ஒழித்து, ழுழு நாட்டையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்ததுடன், அவர்களின் ஏகபோக நலனுக்காக பல்வேறு மாற்றங்களை செய்திருந்தமையினை முன்னைய கட்டுரையில் அவதானித்திருந்தோம். அதன்தொடர்ச்சியினை இனி பார்க்கலாம். 1830 களின் முற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட பூர்த்திசெய்துவிட்டனர். ஐரோப்பாவிலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு பெரிய சவால்கள் இருக்கவில்லை. எனவே தீவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பொருளாதார இலாபத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஜெர்மி பெந்தம் (Jeremy Bentham) மற்றும் ஜேம்ஸ் மில் (James Mill) ஆகியோரால் அப்போது முன்வைக்கப்பட்ட சீர்திருத்தவாத அரசியல் சித்தாந்தத்தின் தாக்கத்தால் ஒரு புதிய சிந்தனை அலை உருவாகியிருந்தது. இது பயன்பாட்டுவாதம் (utilitarianism) என்று அறியப்பட்டது. இது ஜனநாயகம் மற்றும் தனிநபர் சுதந்திரம் பற்றிய கருத்தை ஊக்குவிப்பதாக அமைந்தாலும் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட காலனிகளின் வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு இலாபம் ஈட்டுதல் வேண்டும், அவற்றின் நிர்வாகத்துக்கும் பாதுகாப்புக்குமான செலவீனங்களை அந்தந்த காலனிகளே பொறுப்பேற்கவேண்டும். பிரித்தானியாவிலும் அதன் ஏனைய காலனிகளிலும் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி நுகரும் சந்தையாகவும், அவற்றுக்கு தேவையான மூலவளங்களை நல்கும் நாடுகளாகவும் காலனிகள் மாற்றப்படவேண்டும் என்பதே அதன் சாராம்சமாகும். அப்போது காலனிகளை லண்டனில் இருந்து நேரடியாக நிர்வகிக்கக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து தொலைத் தொடர்பு போக்குவரத்து வசதிகள் அதிகரித்திருந்தன. அவற்றின் அன்றைய வளர்ச்சிக்கேற்ப காலனிகளில் தமக்கு சார்பான ஒரு படித்த அணியையும் அரசியல் வர்க்கத்தையும் உருவாக்கி நிர்வாகத்திலும் அரசாங்கத்திலும்  இணைத்துக்கொண்டு, அமைதியான முறையில் காலனிகளை ஆட்சி செய்துகொண்டு வர்த்தகத்தின் மூலம் இலாபமீட்டுவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

இலங்கைக்கு வந்த சேர். வில்லியம் கோல்புரூக் மற்றும் சார்ல்ஸ் கமரூன் (Sir William Colebrook and Charles Cameron) தலைமையிலான குழுவினர் தமது ஆய்வின் பின்னர் 1832இல் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அது இலங்கைக் காலனியை ஆளுவதற்கு ஒரு புதிய வடிவத்தை உருவாக்கியது. கோல்புரூக் சீர்திருத்தம், கட்டாய உழைப்பு (இராஜகாரிய) மற்றும் அரசாங்க ஏகபோகங்களுக்கு முடிவுகட்ட வேண்டுமெனவும், சிவில் சேவையானது இனம் அல்லது சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி வழங்கப்படவேண்டும்  எனவும், நீதித்துறை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றும், நீதிமன்றங்களில் சட்டம் ஐரோப்பியர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் சமனாக இருக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

அனைத்துக்கும் மேலாக இலங்கையில் ஆளுநர்கள் பொருளாதாரத் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் பாதைகள் அமைப்பதிலும் அடைந்த வெற்றி குறித்து லண்டன் காலனியல் அலுவலகம்  திருப்தி கண்ட போதிலும், ஆளுநர் நிர்வாகம் நடத்தும் விதம் குறித்து திருப்தி காணவில்லை. சட்டமன்றம் மற்றும் நிர்வாக அதிகாரம் அனைத்தும் ஆளுநரிடம் குவிந்திருந்தன. அவர் ஒரு ஆலோசனைக் குழுவை வைத்திருந்தார் – அக்குழு அவரால் நியமிக்கப்பட்ட ஒன்று – ஆனால் அதன் ஆலோசனையைப் பெறவோ அதற்கு கட்டுப்படவோ அவர் கடமைப்பட்டிருக்கவில்லை. அத்துடன் கண்டி இராச்சியம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் முழு நாட்டுக்குமான நிர்வாக முறை ஒன்று தேவைப்பட்டது. அத்தேவையை இவ் ஆணைக்குழு நிறைவேற்றியது. முதற் தடவையாக அதுவரை தனி மாகாணமாக நிர்வகிக்கப்பட்ட பழைய யாழ்ப்பாண இராச்சிய பிரதேசம் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆளுநரால் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்பட்டு, நேரடியாக லண்டனில் உள்ள வெளியுறவுத்துறை செயலருக்கு அனுப்பக்கூடிய சட்டமியற்றும் குழுவை அவர் பரிந்துரைத்தார், வரலாற்றாசிரியர் ஜி.சி. மென்டிஸ் கோல்புரூக் – கமரூன் சீர்திருத்தங்களை இலங்கையின் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான பிளவுக் கோடு (dividing line) என்று குறிப்பிடுகிறார்.

அதுவரை கீழ்நாட்டு சிங்களப் பகுதிகள், கண்டிய சிங்களப் பகுதிகள், தமிழ்ப் பகுதிகள் என இன மற்றும் கலாசார அடிப்படையில் நாட்டின் மூன்று நிர்வாகப் பிரிவுகள் காணப்பட்டன. இந்த நிலை   முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு முழுத் தீவும் ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரே நிர்வாக முறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று  கோல்புரூக் – கமரூன் ஆணைக்குழு முன்மொழிந்தது.

இலங்கை சிவில் சேவையை இலங்கையர்களுக்காக திறப்பதற்கு ஆங்கிலக் கல்விக்கு புதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய நிலைமையை இந்த ஆணைக்குழு கட்டாயப்படுத்தியது. அதுவரை போர்த்துகேய மொழியே இலங்கையில் பிரபலமான ஐரோப்பிய மொழியாக இருந்தது. காலப்போக்கில், ஆங்கிலக்கல்வி மேற்கத்தேய மயமாக்கப்பட்ட ஓர் உயரடுக்கின் உருவாக்கத்திற்கு பங்களித்தது. கோல்புரூக்-கமரூன் கமிஷன் கல்வி பாடத்திட்டத்தின் தரப்படுத்தலை வலியுறுத்தியது.  உள்ளூர் மொழிகளுக்கு பதிலாக ஆங்கிலத்தை மாற்றுவதை ஆதரித்தது. அதனைத்தொடர்ந்து உள்ளூர் ஆங்கிலப் பள்ளிகள் நிறுவப்பட்டன. முன்பு சுதேச மொழியில் கற்பித்த மிஷனரிப் பள்ளிகளும் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டன. ஆயினும் பிரிவெனா பாடசாலைகளும் சுதேச மொழிப் பாடசாலைகளும் தம் நிலை மாறாமல் தொடர்ந்தன.

காலனிகளைக் கொண்டிருப்பது பிரிட்டனுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் காலனிகளில் இருந்து நன்மைகளைப் பெறுவதற்கு, காலனிகள் பொருளாதார ரீதியில் வளர்ச்சி  அடைய வேண்டியது அவசியமாக இருந்தது. அதே நேரத்தில் இங்கிலாந்தில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரும் விதத்தில் காலனிகளின் வளர்ச்சி அதற்குத் துணையாகவும் பிரித்தானியாவில் தங்கியிருப்பதாகவும் இருக்க வேண்டும், அதற்குப் போட்டியாக வளர்ந்து விடக்கூடாது. இதைத்தான் இவர்கள் அறிமுகப்படுத்திய அரசியல்யாப்பும் செய்தது.

பெருந்தோட்டதுறைக்கு சார்பான கோல்புரூக் – கமரூன் ஆணைக்குழுவின் அரசியல், நிருவாக, நீதித்துறை சீர்திருத்தங்கள் பெருந்தோட்டத்துறையின் அபிவிருத்திக்கான கட்டுமானத்தை உருவாக்கிக் கொடுத்ததுடன் இத்துறையின் வளர்ச்சிக்கான பல சலுகைகளையும் வழங்கியது. உதாரணமாக சிவில் சேவை ஊழியர்களின் அதீத சம்பளமும் ஓய்வூதியமும் குறைக்கப்பட்டு அதனை ஈடுசெய்யும் விதத்தில் வர்த்தகப் பயிர்ச்செய்கையில் அவர்கள் ஈடுபடுவதற்கு ஏதுவாக அதுவரை இருந்த பொருளார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடை நீக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் சிவில்சேவையில் உயர்பதவிகளை வகித்தோர் பிரித்தானியரே. அவர்கள் பெருந்தோட்டங்களை நிறுவுவதில் முண்டியடித்தனர். இதனால் சிவில் சேவையில் அவர்களது கவனம் குறைவதாக காலனியல் செயலகம் கவலைகொண்ட சந்தர்ப்பமும் உண்டு.

“கோப்பி  மேனியா”

(Robert Boyd Tytler)

முன்னர் கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தங்கம் தேடி அலையும் வேட்கை (Gold Rushes) போன்று ஒரு “கோப்பி மேனியா” (Coffee Mania) சிறிது காலத்திற்குள் இலங்கையில் தொடங்கியது. கே. எம். டி சில்வாவின் கூற்றுப்படி, பிரித்தானிய பவுண்ட் 5 மில்லியன் முதலீட்டிளவிலான கோப்பி இலங்கையில் கொட்டப்பட்டது. 1848களில், சுமார் 600 தோட்டங்களில் 50,000 ஏக்கர் (20,000 ஹெக்டேயர்) நிலம் கோப்பிப்பயிர்செய்கைக்குட்பட்டிருந்தது. கோப்பிச் செய்கைக்கான பரப்பு தொடர்ந்தும் அதிகரித்து வந்தது.

கோப்பிப்பயிர்ச்செய்கையிலே முதலில் அரசாங்க ஊழியர்களும் பின்னர் தொழில்முனைவோரும் (entrepreneurs) ஈடுபட்டனர். கோப்பிப்பயிர்ச் செய்கைக்கு தேவையான நிலம் மலிவாகவும் தாராளமாகவும் கிடைத்தபோது அதற்கு அதிக மூலதனம் தேவைப்படவில்லை. ஆதலால் உள்ளூர்வாசிகளும் அதில் ஈடுபடமுடிந்தது. கோப்பிக்காலம் முழுவதும் உள்ளூர்வாசிகளின் சிறியதும் பெரியதுமான கோப்பித்தோட்டங்கள் மொத்த பெருந்தோட்டத்தின் மூன்றில் ஒரு பங்கினை வகித்தன.

The Coffee Planter of Saint Domingo

ஆக்லாண்ட், பாய்ட் & கம்பெனி (Ackland, Boyd & Company) கோப்பித் தோட்டங்களை உருவாக்கத்  தொடங்கியது. எனினும் சரியான விஞ்ஞான முறை பயன்படுத்தப்படாத காரணத்தால் கோப்பி பெருந்தோட்டம் இரண்டு தசாப்தங்கள் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. இந்த நிலைமையை மாற்றிய பெருமை ராபர்ட் பாய்ட் டைட்லர்  (Robert Boyd Tytler) என்ற ஸ்காட்லாந்துகாரரையே சாரும். ஜமேக்கா கோப்பி பெருந்தோட்டங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ள இவரை ஆக்லாண்ட், பாய்ட் & கம்பெனி 1937இல் சேவையில் அமர்த்தியது. இவர் இலங்கையில் மேற்கிந்திய உற்பத்தி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், “இலங்கை தோட்டத்துரைமார்களின்  தந்தை” என்று கருதப்பட்டார். இவர் வரும்போது தன்னுடன் பீரி ஜோசப் லபோறி (Pierre – Joseph Laborie) எழுதிய ‘சென் டொமிங்கோவிலுள்ள கோப்பித் துரை’ (The Coffee Planter of Saint Domingo) என்ற நூலின் பிரதி ஒன்றைக் கொண்டு வந்தார். இதில் ஹைட்டி நாட்டில் இருந்த கோப்பி பெருந்தோட்டங்களில் அடிமை – தொழிலாளரை பயன்படுத்தப்படும் முறை பற்றிய ஆசிரியரின் அனுபவம் விளக்கப்பட்டிருந்தது.  அடிப்படையில், இந்தப் புத்தகம் இலங்கையின் பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களை நவீன அடிமைகளாக  எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தோட்டத் துரைமாருக்கு போதிக்கும் பைபிளாக மாறியது. அதே சமயம்  அப்போதைய வளர்ச்சிபெற்ற தொழில்நுட்பங்களான உரியமுறையில் பயிர் நடுதல், உரமிடுதல், கத்தரித்தல், அறுவடை ஆகியவற்றை கற்றுத்தந்து முறைப்படுத்தியது.

1848 இல் கோப்பி சந்தித்த முதலாவது நெருக்கடி

Female labourers peeling coffee using traditional methods

1846 தொடக்கம் 1948 வரை நிலவிய பொருளாதார நெருக்கடி கோப்பிப்பெருந்தோட்டத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கி பீதியை ஏற்படுத்தியது. சுமார் பத்தில் ஒரு கோப்பித்தோட்டங்கள் நட்டத்தால் கைவிடப்பட்டன. 1843இல் பத்தாயிரம் பவுணுக்கு விற்கப்பட்ட தோட்டங்களின் விலை 1847இல் வெறுமனே 440 பவுண்களாகக் குறைந்தன. போக்குவரத்துப்பாதைகள் போடப்படுவது நிறுத்தப்பட்டது. தாம் ஒருமித்து செயற்படுவதற்காகவும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த சட்டநிருபணசபைக்கு தமது பிரதிநிதிகளை அனுப்புவதற்கும் 1842 இல் ஏற்கனவே அமைந்திருந்த முதலாவது தோட்டத்துரைமார் அமைப்பான இலங்கை விவசாய சமூகம் (Ceylon Agricultural Society) செயலிழந்து போனது. அது மீண்டும் 17 பெப்ரவரி 1854 ஆம் ஆண்டு இலங்கை தோட்டத் துரைமார் சம்மேளனமாக மறு அவதாரம் எடுத்தது. பீதியடைந்த தோட்ட உரிமையாளர் மாற்றுப்பயிர்களைத்தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இருப்பினும், கோப்பி பயிர்ச்செய்கை பற்றிய விஞ்ஞானபூர்வமான அறிவு சிலருக்கே இருந்தது. ஒரு ஆதாரத்தின்படி, 95% தோட்டத்துரைமார் ஸ்கொட்லாந்துக்காரர்கள், அவர்களில் பாதி பேர் அபெர்டீனைச் (Aberdeen) சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலும் தொழில்சார் தகைமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படாமல் தனிப்பட்ட அறிமுகத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் 1837இற்கு முன் அமைக்கப்பட்ட அனைத்து கோப்பித் தோட்டங்களும், அதன்பின் சிலவும் தோல்வியடைந்தன.

ஆயினும் எதிர்பார்த்ததைவிட துரிதமாகவும் புதுவீரியத்தோடும் கோப்பிப்பெருந்தோட்டம் தன்னைச் சுதாகரித்துக்கொண்டது. உண்மையில் 1848 வரை கோப்பிப்பெருந்தோட்டம் இலாபகரமான துறையாக இயங்கவில்லை. அது ஆரம்ப பரீட்சார்த்த காலமாக குழப்பநிலையிலே இருந்தது. 1848இன் பின்னரே அதன் தன்மை மாற்றம் பெற்றது. விரைவாக இலாபமீட்ட விரும்பிய கத்துக்குட்டிகளுக்கு பதிலாக அனுபவமும் துறைசார் நிபுணத்துவமும் உடையவர்களால் தோட்டங்கள் நிர்வகிக்கப்படும் போக்கு அதன் பின்னரே உருவானது. பெரும் முகவர் நிறுவனமான ஆக்லண்ட் போய்ட் அன் கொம்பெனியின் உதவியுடன் முகாமைத்துவம் முறைப்படுத்தப்பட்டது.

ஏறக்குறைய 1850கள் வரை, அரசின் அனைத்து ஐரோப்பிய அதிகாரிகளும் கோப்பி தோட்ட உரிமையாளர்களாகவே இருந்தனர். அதேபோல ஒரேயொரு கரையோரச் சிங்களவரைத்தவிர அனைத்து கோப்பி பெருந்தோட்ட உரிமையாளர்களும் ஆங்கிலேயர்களாகவே இருந்தனர்.

1848 வரை அனைத்து கோப்பித்தோட்டங்களும் பெரதெனியவைச் சுற்றி 30 மைல்களுக்குள் சிங்கள கிராமங்களுக்கும் சேனைகளுக்கும் அண்மையில் அமைந்திருந்தன. 1700 அடிக்கு மேற்பட்ட பிரதேசங்களில் கோப்பி செழிப்பாக வளர்வது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கோப்பித்தோட்டங்கள் 1850களில் உயர்மலைப்பிரதேசத்தின் சிவனொளிபாதமலை அடிவாரத்தின் டிம்புள்ள பகுதிக்கும், ஊவா பிரதேசத்திலுள்ள அப்புத்தளை பகுதிகளுக்கும் சப்பரகமுவ பகுதிகளுக்கும் நகர்ந்தன. 1860களில் தென்பகுதியின் மொறவக்க பகுதிக்கும் கோப்பி பரவியது. இதற்கு ரயில்வேயின் வளர்ச்சி பெரிதும் காரணமாயிருந்தது.

ரயில்வே அபிவிருத்தி

ரயில்வே பாதைகளை அமைக்கும் பணிக்கு முன்

இராணுவத் தேவைக்காக அவசரமாகப் போடப்பட்ட கண்டியை கொழும்போடு இணைக்கும் குதிரைவண்டிப் பாதை, இங்கு உற்பத்தியான கோப்பியை கொழும்பு துறைமுகத்திற்கு மாட்டுவண்டியில் கொண்டு செல்லக் கூடியவிதத்தில் மத்திய மலைநாட்டின் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு அது இலங்கையில் அறிமுகமான பின்னர் இப்பாதைகள் தார் இடப்பட்டு செப்பனிடப்பட்டன. மாட்டுவண்டிச் சொந்தக்காரர்கள் அறவிட்ட கட்டணம் அதிகமாக இருந்தது. கண்டியிலிருந்து கொழும்புக்கு மாட்டுவண்டி மூலம் கோப்பியை கொண்டு செல்வதற்காகும் செலவு கொழும்பிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பல் மூலம் அதனை அனுப்பிவைப்பதற்காகும் செலவைவிட அதிகமாக இருந்தது. ஆள்பதி சேர். ஹென்றி வார்ட்டின் கூற்றின்படி  அவரின் காலத்தில் (1855-60) வருடாந்தம் 30,000 மாட்டுவண்டிகள் கண்டிக்கும் கொழும்புக்குமிடையே பிரயாணம் செய்தன. அவற்றின் இரும்புச் சக்கரங்களால் பாதைகள் விரைவில் பழுதடைந்தன. மழை காலங்களில் நிலைமை மேலும் மோசமடைந்தது.  இந்நிலையை மாற்றுவதற்காக ரயில்வே பாதைகளை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதற்கான நிதிக்கு அரசு தடுமாறியபோது தம்மிடம் வரிவிதிக்குமாறு தோட்டதுரைமார் 1856 இல் ஆள்பதி சேர். ஹென்றி வார்ட்டிடம் தாமாகவே வேண்டுகோள் விடுத்தமை ரயில்வேயின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இவ்வாறு தோட்டத்துரைமார் 2 வீத வரியை சுயமாக செலுத்தியதன் மூலமாக அடுத்த 11 வருடங்களில் பாதையமைப்பதற்கான செலவில் சுமார் நான்கில் ஒருபங்கான 450,000 ஸ்டேர்லிங் பவுணை செலுத்தினர்.

ஆனால் பாதையமைப்பதற்காக பொதுமக்களின் உழைப்பு இலவசமாகவே கவரப்பட்டது. 1848 இல் நிறைவேற்றப்பட்ட பாதைகள் சட்டம் (Road Ordinance of 1848) தோட்டத் தொழிலாளர் அல்லாத 18 – 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண்களும் வருடத்திற்கு தலா ஆறுநாள் இலவச உழைப்பை அல்லது  அதற்கு ஈடாக 3 சிலிங் காசை கொடுக்க வேண்டும் என விதித்தது. 1867 ஆம் ஆண்டு கண்டியில் இருந்து கொழும்புக்கு கோப்பி கொண்டு செல்வதற்காக ரயில் பாதை அமைக்கப்பட்டது. இது  இயந்திரக் கைத்தொழில் புரட்சிக்கு முன்னர் சாத்தியமற்ற விடயமாகும்.

உச்சம் தொட்ட கோப்பிக்கு நேர்ந்த அனர்த்தம்

Hemileia Vastatrix

1870களில் கோப்பிப் பெருந்தோட்டம் தனது சுபீட்சத்தின் உச்சத்தைத் தொட்டது. 1871-1872இல் 196,000 ஏக்கராக இருந்த கோப்பிப் பெருந்தோட்டம் 1878இல் 273,000 ஏக்கராக உயர்ந்தது. முதற் தடவையாக 1868 இல் கோப்பி ஏற்றுமதி 10 லட்சம் குவாட்டை தாண்டியது. அதற்கேற்ப விலையும் அதிகரித்து பெருத்த இலாபம் கிடைத்தது. ஆனால் அந்த சுபீட்சம் நீடிக்கவில்லை. அதன் அழிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஹெமிலியா வெஸ்ட்ராட்ரிக்ஸ் [Hemileia Vastatrix]  என்ற இலைச்சுருட்டிநோய் கோப்பிச்செடிகளைத் தாக்கத் தொடங்கிவிட்டது. முதலில் இந்நோய் மடுல்சீமையிலுள்ள கல்லூல தோட்டத்தில் 1869இல் இனங்காணப்பட்டது. 1880களில் அதன் வேகம் தீவிரமடைந்தது. பேராதனை தாவரவியல் பூங்காவின் ஆராய்ச்சிகள் பயன்தரவில்லை. 1890களில் அதன் மரணம் நிச்சயமாகிவிட்டது. ஏக்கமும் அவலமும் பீதியும் அலைமோதிய இக்காலத்தில் தொழிலாளர்கள் மாத்திரமல்ல தோட்டத்துரைமாரும் வேலையிழந்து தவித்தனர். முதற்தடவையாக தோட்டத் துரைமார் சம்மேளனம் அப்போது தொழிலாளர்களுக்கு சேவைசெய்து கொண்டிருந்த ‘கண்டி ஆபத்தில் உதவும் நண்பர்கள் அமைப்பிடம்’ (Friends in need) உதவிகேட்டு கையேந்தியது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

25194 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்