யாழ். போதனா மருத்துவமனையின் தாபகர் சேர். பேர்சிவல் ஒக்லண்ட் டைக் (Sir Percival Acland Dyke)
சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். டைக் 01.10.1829 அன்று யாழ்ப்பாணத்தின் கலெக்டராகப் பதவியேற்றார். கோல்புறூக் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய கலெக்டர் பதவி அரசாங்க அதிபர் பதவி எனப் பெயர் மாற்றப்பட்டது. கலெக்டராகப் பதவி வகித்த டைக் 01.10.1833 அன்று யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகப் பதவியேற்றார்.
டைக் அவர்களது மனதில் யாழ்ப்பாணத்திலே ஒரு பொது மருத்துவமனையை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இருந்ததாக சேர் வில்லியம் துவைனம் குறிப்பிடுகிறார் (Some account of the work done by the American Mission Medical School: By Sir William Twynam). துவைனம், டைக்கின் மறைவையடுத்து யாழ். அரச அதிபராகக் கடமையாற்றியவர்.
அமெரிக்க மிஷனரி மருத்துவர் கிறீன் மானிப்பாயில் ஆற்றிவரும் மருத்துவப் பணியை நன்கு அறிந்து கொண்ட பேர்சிவல் ஒக்லண்ட் டைக் யாழ். நகரிலே மருத்துவமனையை ஆரம்பிக்க விரும்பி கிறீனது உதவியை நாடினார்.
யாழ்ப்பாண ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகம்
யாழ்ப்பாண ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகம் (Jaffna Friend-In-Need-Society) 1841 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மக்களுக்கு உதவும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கழகத்தின் முதலாவது பொதுக் கூட்டம் 1841 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி நீதிமன்ற வளாகத்தில் கப்டன் கோச்சேரன் தலைமையில் நடைபெற்றது. வண. பீற்றர் பேர்சிவல் பாதிரியார், கிறீனியர் ஆகியோர் இதன் நோக்கம் செயற்பாடுகள் பற்றி உரையாற்றினர். அங்கத்தவர்களிடம் மாதாந்தம் 8 ஸ்ரேர்லிங் பவுண் அறவிடுவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அரச அதிபர் டைக், யாழ்ப்பாண ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் உதவியுடன் 700 பவுண் ஸ்ரேர்லிங் நிதியை யாழ். நகரில் பொது மருத்துவமனையை நிறுவுவதற்காகத் திரட்டினார்.
பேர்சிவல் ஒக்லண்ட் டைக் அவர்கள், உவெஸ்லியன் மிஷனரியைச் சேர்ந்த வண. பீற்றர் பேர்சிவல் பாதிரியார், மருத்துவர் கோல்டன் மற்றும் அமெரிக்க மிசனரி மருத்துவர் கிறீன் ஆகியோரது உதவியுடன் 1850 ஆம் ஆண்டு யாழ். நகரத்தில் மருத்துவமனையை நிறுவினார். இன்று 1300 க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன் 2000 க்கும் அதிமான அரச உத்தியோத்தர்கள் பணியாற்றும் யாழ். போதனா மருத்துவமனையானது 1850 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் ஆதரவில் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டதாலும் இந்தக்கழகமே ஆரம்பத்தில் மருத்துவமனையை நிர்வகித்து வந்ததாலும் இந்த மருத்துவமனையானது ‘ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தினது மருத்துவமனை’ என்று அழைக்கப்பட்டது.
டைக் ஏறத்தாழ 38 வருடங்கள் யாழ்ப்பாணத்தின் (வடமாகாண) நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றியவர். யாழ்ப்பாண ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனைக்கு தனது சம்பளத்தின் பெரும்பகுதியைக் கொடுத்துதவியவர். முற்றவௌியில் உலாவிய தீவட்டிக் கள்வர்களைக் கட்டுப்படுத்தி யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணியவர். டைக்கின் ஆட்சியில் யாழ்ப்பாண மக்கள் அச்சமற்று வாழ்ந்தார்கள்.
1852 இல் யாழ்ப்பாணத்தில் ஆங்கில மருத்துவ சேவை
“ஆதுலர்க்குச் சாலை, அறுசமயத்தவர்க்கு உணவு, ஓதுவார்க்கு உண்டி….”
முதலான 32 அறங்களை தமிழ்க் கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி பட்டியல் இட்டுள்ளது. (ஆதுலர் – நோயுற்றோர்) பேர்சிவல் ஒக்லண்ட் டைக், யாழ். நகரிலே மரங்களை நடுகைசெய்து, வனத்தை உருவாக்கியும் மருத்துவமனையை நிறுவியும் அறம் வளர்த்தார். யாழ்ப்பாணம் ஆபத்துக்குதவி மருத்துவமனை 1850 இல் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடபகுதியில் ஏழ்மையில் வாழ்ந்த மக்கள் ஆங்கில மருத்துவத்தின் நன்மையை இலகுவாகப் பெறக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
நோயுற்ற ஒருவர் ஆபத்துக்கு உதவி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக அங்கத்தவரிடம் அல்லது மருத்துவமனைக்குச் சந்தா செலுத்தும் அங்கத்தவர் ஒருவரிடம் விண்ணப்பித்து பற்றுச் சீட்டு ஒன்றைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். காலை 8.00 மணிக்கு மருத்துவமனைக்குச் சமூகமளித்து மருத்துவரிடம் சிட்டையைக் கையளித்து சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையே ஆரம்பத்தில் இருந்தது.
தொலைவிலிருந்து நடந்தும், மாட்டு வண்டிலிலும் மானிப்பாய் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றவர்கள் யாழ். நகரிலே ஆரம்பிக்கப்பட்ட ஆபத்துக்கு உதவி மருத்துவமனையில் சிகிச்சைபெறத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலும் மானிப்பாயிலும் ஐரோப்பிய மருத்துவம் பொதுமக்களிடையே பரவலடைந்து வளர்வது கிறீனுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
1852 ஆம் ஆண்டு முழுவதும் யாழ்ப்பாணம் ஆபத்துக்குதவி மருத்துவமனையில் 3000 பேருக்கும் மானிப்பாயிலிருந்த கிறீனது மருத்துவமனையில் 2500 பேருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் கிறீனும் அவரது உதவி மருத்துவர்களும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரமுடியாத நிலையிலிருந்த 500 பேர்களது வீடுகளுக்குச் சென்றும் சிகிச்சை அளித்தனர். யாழ்ப்பாணத்தில் ஓராண்டு காலத்தில் மொத்தமாக 6000 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்தின்(வடபகுதி) சனத்தொகை 3 இலட்சம் மட்டுமே.
இன்று (2022) வடபகுதியில் வசிக்கும் 1.2 மில்லியனுக்கும் அதிகமானவர்களது பிரதான மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரேயோரு மூன்றாம் நிலை மருத்துவமனையாக விளங்கும் (Tertiary Care Hospital) யாழ். போதனா மருத்துவமனையில் மாத்திரம் நாளாந்தம் 5000 க்கும் அதிகமானவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது. இவர்களில் 1200 க்கும் அதிகமானவர்கள் உள்ளக விடுதிகளில் சிகிச்சை பெறுகின்றனர். 2000 இக்கும் அதிகமானவர்கள் தினசரி கிளினிக்குகளில் சிகிச்சை பெறுகின்றனர். அதேவேளை 1000 க்கும் மேற்பட்டவர்கள் நாளாந்தம் வெளிநோயாளர் பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். (தகவல்: மருத்துவர் த. சத்தியமூர்த்தி, பணிப்பாளர், போதனா மருத்துவமனை யாழ்ப்பாணம்)
மருத்துவர் கிறீன் யாழ்.போதனா மருத்துவமனைக்கு வழங்கிய தலைமைத்துவம்
அரச அதிபர் டைக் மருத்துவர் கிறீனை ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனையின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டார். கிறீன் அமெரிக்க மிஷனரிகளுடன் ஆலோசித்த பின்னர் 1863 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 3 மாதங்கள் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்குச் சம்மதித்தார். பின்னர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனையின் நிர்வாகியாகப் பொறுப்பேற்று மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாகச் செயற்பட்டார். கிறீன் 1873 இல் அமெரிக்காவுக்கு நிரந்தரமாகத் திரும்பும் வரை இம் மருத்துவமனையின் வருகை சத்திர சிகிச்சை நிபுணராக ஆரம்பம் முதல் பணியாற்றினார்.
பேர்சிவல் ஒக்லண்ட் டைக்கின் மறைவும் யாழ். போதனா மருத்துவமனை தாபகர் தினமும்
கோப்பாயில் வசித்துவந்த ஒக்லண்ட் டைக் 1867 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 09 ஆம் திகதி அன்று இயற்கை எய்தியபோது யாழ்ப்பாணத்தில் 5 நாள்கள் அரச அலுவலகங்கள் பூட்டப்பட்டு பொதுமக்கள் துக்கம் அனுட்டித்தனர். 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் சமூகப் பெரியார் ஒருவரது மறைவின் போதுகூட இதுபோன்று நீண்டநாள் துக்கம் அனுட்டித்ததில்லை. 1985 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31 ஆம் திகதி பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, மெய்ப்பாதுகாவலர்களால் சுடப்பட்டு உயிர்நீத்த போது இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் பெருந்துயருற்று துக்கம் அனுட்டித்தனர்.
சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக் மறைந்த ஒக்ரோபர் 9ஆம் திகதி யாழ். போதனா மருத்துவமனையின் தாபகர் தினமாக நினைவு கூரப்பட்டது.
மருத்துவக் கல்வியைத் தொடராது இடைவிலகிய கிறீனது மாணவர்கள்
கிறீனது மருத்துவக் கல்லூரியில் 2 ஆவது அணியில் (1851- 1853) பயின்ற மாணவர்களில் ஜோசப் எச் ரவுண் (பூபாலசிங்கம்) யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவி மருத்துவமனையில் அரச சேவையில் (நிர்வாக, எழுதுவினைஞர்) இணைந்து கொள்வற்காகவும் சாமுவேல் மில்லர் (வேலுப்பிள்ளை) அரச நிர்வாக நடைமுறைகளைக் கற்பதற்காகவும் மருத்துக்கல்வியை இடையிலே கைவிட்டுச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை செமினரியில் பயின்று பட்டம் பெற்றவர்களுக்கு அரச சேவையில் உயர் பதவியும் அதிக சம்பளமும் கிடைத்தது. கிறீனது 2 ஆவது வகுப்பில் பயின்ற 5 மாணவர்களில் மேற்குறிப்பிட்ட இருவரும் அதிக வருமானமும் அந்தஸ்தும் மிக்க அரசசேவையில் இணைவதற்காக மருத்துவக்கல்வியைக் கைவிட்டு விலகி இருக்கலாம்.
தொடரும்.