தமிழில் ஆங்கில மருத்துவம் கற்பித்த அமெரிக்கர்
Arts
10 நிமிட வாசிப்பு

தமிழில் ஆங்கில மருத்துவம் கற்பித்த அமெரிக்கர்

December 6, 2022 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

Kamil-Veith-Zvelebil

தமிழிலக்கியம் பற்றி செக்கோஸ்சிலவக்கிய (செக் குடியரசு) நாட்டு அறிஞர் கமில் சுவலபில் – Kamil Zvelebil அவர்கள் The Smile of Murugan: On Tamil Literature of South India என்ற நூலில் எழுதியது போல் வேறு எவருமே எந்த மொழியிலும் தமிழ்மொழியின், தமிழிலக்கியத்தின் சிறப்பைப் பற்றி எழுதவில்லை.” – பேராசிரியர் பத்மநாதன்


முருகனின் புன்னகையில் தவழ்கின்ற தமிழ்

The Smile of Murugan: முருகனின் புன்னகையில் 9 ஆவது அத்தியாயத்தில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட தமிழின் முதனிலை இலக்கிய, இலக்கண நூலாக விளங்கும் தொல்காப்பியத்தைப் பற்றி கமில் சுவலபில் பின்வருமாறு எழுதுகின்றார்.


“தொல்காப்பியம், மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலையை எய்தக்கூடும் என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று ……(“…It is not only one of the finest monuments of human intelligence and intellect preserved in the Indian tradition….” – K.V. Zvelebil , Page.133 – The Smile of Murugan)
தமிழை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்ற ரோபட் டீ நோபிலி – Robert de Nobili (1577 -1656), சீகன்பால்க்- Ziegenbalg (1682 -1719), கொன்ச்டன்டைன் ஜோசப் பெஸ்கி – C. G. Beshchi எனும் வீரமாமுனிவர் (1680 – 1747), ரொபட் கால்ட்வெல் – Robert Caldwell (1814 – 1891), ஜி. யு. போப் – George Uglow Pope (1820- 1908), கமில் சுவலபில்-Kamil Zvelebil (17.11. 1927 – 17.1.2009), ஜோர்ஜ் எல். கார்ட் – George L. Hart முதலான மேனாட்டு அறிஞர்கள் வரிசையில் வைத்துப் போற்றுதற்குரியவர் மருத்துவர் கிறீன் .

Roberto-de-Nobili
george-l-hart-1

மருத்துவர் கிறீன், தமிழில் விஞ்ஞானம் அறிமுகமாகாத காலத்தில் ஆங்கில மருத்துவத்தைத் தமிழிற் கற்பித்தவர்; தமிழில் விஞ்ஞானந் தந்த தந்தை; மருத்துவத் தமிழ் முன்னோடி; தமிழ்க் கலைச்சொல்லாக்க முன்னோடி என்று தமிழறிஞர்களால் விதந்துரைக்கப்படுகிறார்.

விஞ்ஞானத் தொண்டுசெய்த வீரகிறீன்; எஞ்ஞான்றும் வாழச்செய்த அம்பிகைபாகன்

“தமிழில் விஞ்ஞானம் கற்பிக்க முடியுமா? என்ற ஐயம் தமிழர்களுக்கு இருந்தது. தமிழர்களுக்கு தமிழ்மொழி மீதிருந்த நம்பிக்கையிலும் பார்க்க அமெரிக்க நாட்டவரான மருத்துவர் கிறீனுக்கு அந்தக் காலத்திலேயே தமிழில் விஞ்ஞானம் கற்பிக்க முடியும் என்ற கூடிய நம்பிக்கை இருந்ததைக் கண்டு எமது சமுதாயம் வெட்கப்படல் வேண்டும்” என்று அம்பிகைபாகன் தெரிவிக்கின்றார்.


யாழ்ப்பாணத்தில் நாவற்குழி என்னும் கிராமத்தில் 1929 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27 ஆம் திகதி பிறந்த அம்பிகைபாகன் சர்வதேச புகழ்பெற்ற கவிஞரும் கல்வியியலாளருமாவார். இவர் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியராக இலங்கையின் பல பாகங்களிலும் கடமையாற்றியுள்ளதுடன் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ்ப் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்காவுக்கு இரு தடவைகள் செல்லும் வாய்ப்புக் கிடைத்த போது கிறீனது பேரன் தோமஸ் டி. கிறீனை சந்தித்ததுடன் கிறீனது கல்லறைக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தி, மருத்துவர் கிறீன் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய அருந் தொண்டை நினைவு கூர்ந்த பெருமகனார்.

கிறீனின் அடிச்சுவடு, மருத்துவத் தமிழ் முன்னோடி, Scientific Tamil Pioneer: Dr. Samuel Fisk Green முதலான பல நூல்களை எழுதியுள்ள அம்பி, தமிழுக்குச் செய்த அளப்பரிய சேவைகளில் மருத்துவர் கிறீன் அவர்களைத் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியமை, 1998 இல் கிறீன் ஞாபகார்த்த முத்திரையை இலங்கை அரசு வெளியிடக் காரணமாக இருந்தமையைக் குறிப்பிடலாம்.

அம்பியின் நுண்மாண் நுழைபுலச் சிறப்பை இரசிகமணி கனக. செந்திநாதன் பின்வருமாறு கவிதையாக்கியுள்ளார்.

“ஏரார் தமிழ்த்தாய்க்கு ஏற்றம் பலகொடுக்கக்
பேரார்வத் தோடுவந்த பெட்பாளன் – ஆராமை
கொண்டுபல விஞ்ஞானக் கோட்பாடு பற்றிநல்ல
திண்மைபெறு கட்டுரைகள் தீட்டியவன் – முன்னாளில்
விஞ்ஞானத் தொண்டுசெய்த வீரகிறீன் பாதிரியார்
எஞ்ஞான்றும் வாழ எழுதியவன் – விஞ்சுபுகழ்
பாலர் விரும்பிப் படித்துக்கும் மாளமிட
ஏலவே பாடல் இயற்றியவன் – கோலமிகு
நற்சபையில் பற்பலவாம் நாகரீ கப்பொருளிற்
கற்றவர்கள் ஏற்றக் கவிதைகளை – அற்புதமாய்
வாசிக்கும் நண்பன் வளரம்பி கைபாகன்”

மருத்துவர் கிறீனது மொழிபெயர்ப்பு முயற்சி

கிறீன் 1850 ஆம் ஆண்டு மருத்துவ நூல்களது மொழிபெயர்ப்புப் பணியை ஆரம்பித்த போது தமது உள்ளக் கிடக்கையைப் பற்றிக் கூறியது நினைவு கூரத்தக்கது. “நான் மேற்கொண்டுள்ள இம்முயற்சியானது தமிழில் மேனாட்டு மருத்துவம் பரவ ஓர் அத்திபாரமாகவும் ஆரம்பமாகவும் அமைதல் வேண்டுமென விரும்புகின்றேன்.”


மருத்துவர் கிறீன் தம்மிடம் மருத்துவம் கற்றவர்களில் திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் உள்ள மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடுத்தினார். தாமும் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார். கிறீன் முதன்முதலில் மொழிபெயர்ப்புக்கு எனத் தேர்ந்தெடுத்த நூல் கல்வின் கட்டர் எழுதிய அங்காதிபாதம் ஆகும். இப்பணி 1851 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. ஆறு மாத காலத்துக்குள் மொழிபெயர்ப்புப் பணி பூர்த்தியாகியது. 1852 இல் அங்காதிபாத நூல் அச்சிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கட்டரின் அங்காதிபாதம் தமிழில் அச்சிடப்பட்டு வெளிவந்த செய்தியை அறிந்து திருநெல்வேலியிருந்து வந்த கோரிக்கையைஅடுத்து 134 பிரதிகள் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டன.

கிறீனது மாணவர்கள் 1855 ஆம் ஆண்டு பாடவேளையில் தமிழிற் குறிப்புக்களை எடுக்க ஆரம்பித்தனர். கிறீன் இக்காலப் பகுதியில் மருத்துவக் கல்விக்கு அவசியமான கலைச் சொல் அகராதியொன்றையும் ஆங்கில மொழி அகராதியொன்றையும் தயாரித்தார்.
கிறீன் 1856 இல் கட்டரின் அங்காதிபாத நூலின் திருத்திய பதிப்பொன்றை வெளியிட விரும்பினார். அதிக பக்கங்களும் 84 படங்களும் கொண்ட நூலை அரசாங்கத்தின் செலவில் அச்சிட எண்ணி நிதியுதவி செய்யக் கேட்டு இலங்கையை ஆட்சிசெய்த பிரித்தானிய தேசாதிபதிக்குக் கடிதம் வரைந்தார். பிரித்தானிய ஆட்சியாளர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.
மனந்தளராத கிறீன் , ஹன்ற் என்பவரது உதவியுடன் சென்னையில் கல்வின் கட்டரின் அங்காதிபாத சுகரணவாத உற்பாலன நூலை அச்சிடுவித்தார். சென்னையிலிருந்த தென்னிந்தியக் கிறிஸ்தவ பாடசாலைப் புத்தகச் சங்கம் 3000 பிரதிகளைப் பணங்கொடுத்து வாங்கி கிறீனது முயற்சிக்கு உதவியது. அமெரிக்க இலங்கை மிசன் 1000 பிரதிகளை வாங்கி உதவியது.

அங்காதிபாதம்: 1852 இல் வெளிவந்த முதல் மொழிபெயர்ப்பு!

உலகில் ஆங்கில மருத்துவ நூல் ஒன்று தமிழில் முதன்முதல் மொழிபெயர்க்கப்பட்டது யாழ்ப்பாணத்தில் மருத்துவத் தொண்டாற்றிய அமெரிக்க மிசனரி மருத்துவர் கிறீனாலேயே. இது யாழ்ப்பாணத்தில் 1852 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இந்நூலின் 1852 ஆண்டுப் பதிப்பின் மின்னணுப் பிரதிகூட எமக்குக் கிடைக்கவில்லை. இந்நூலின் 2 ஆவது பதிப்பு 1857 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இந்திய அமெரிக்க மிசனுக்காக சென்னையில் அச்சிடப்பட்டது.
ஒருநாள், கிறீனுக்கு பிரித்தானிய இலங்கைத் தேசாதிபதியிடமிருந்து வந்த கடிதத்தில், “அமெரிக்க மிசன் நடைமுறையிற் கொண்டிருக்கும் ஆங்கிலம் தவிர்க்கும் கொள்கை, பேராபத்தானதும் தற்கொலைக்கு ஒப்பானதும் ஆகும்” என்றும் “தமிழில் நூல்வெளியிடுவதற்கு எவ்வித உதவியும் வழங்கப்பட மாட்டாது” என்றும் இருந்தது.

மருத்துவ-வைத்தியம்-Midwifery-1
அங்காதிபாத-சுகரணவாத-உற்பாலனம்


அரசாங்க உதவியோ, வரவேற்போ கிடைக்காத போதிலும் தமிழில் மருத்துவ நூல்களை வெளியிடும் முயற்சியை கிறீன் கைவிடவில்லை. The Duplin Practice of Midwifery என்ற பிரசவ மருத்துவ நூலை 1856 இல் மொழிபெயர்த்தார். இது யாழ்ப்பாணத்திலுள்ள இறிப்பிலி, ஸ்றோங்கு என்பவர்களது அச்சகத்தில் 1857 இல் அச்சிடப்பட்டு ’பிரசவ மருத்துவம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.


கிறீன் தமிழில் வெளியிட்ட ஆங்கில மருத்துவ நூல்களை சுதேச மருத்துவர்களும் வாங்கிப் படித்துப் பயனடைந்தனர். கிறீனது பிரசவ மருத்துவ நூல் மகப்பேறு தொடர்பிலான விஞ்ஞான அறிவைத் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11869 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)